Tag Archives: சிறுகதை

சாமர்செட் மாம்

பால்யம் னா என்ன என்றாள்.

ரொம்ப வயசானவங்க தங்களோட நினைவுகளை பகிர்ந்து கொள்வது… நினைத்து கொள்வது…

ஓ…

சில நிமிட அமைதி.

எனக்கு என் தாத்தா நினைவு வருது. அவர்கிட்ட பேசும்போது இப்படிப்பட்ட சொற்கள் எல்லாம் கேட்க கிடைக்கும்.  இப்போ ரியலா அப்படி இல்லை. நாம பேசற பாஷை ஒண்ணு வன்மமா குரூரமா இருக்கு. இல்லாட்டி, மொத்தமா அசடு வழியிற மாதிரி இருக்கு என்றாள்.

அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே வந்த கடிதத்தை பிரித்து பார்த்தேன்.

“தமிழவன் பயிச்சு இருக்கியா… இன்னா கோட்பாட்டில் நீ எய்தினு இருக்கே… வொம்மாள…” என்று நீண்ட அந்த கடிதத்தை நான்காக மடித்து வார்ஸாவில் ஒரு கடவுள் புத்தகத்துக்கு அடியில் வைத்தேன். அது தமிழவன் எழுதிய நாவல்.

அடேன்….

என்ன என்பதுபோல் நான் அவள் முகத்தை ……..

சாமர்செட் மாம் மாதிரி ஒரு கதை எழுத முடியுமா… ஜஸ்ட் தழுவல் மாதிரி இருந்தாலும் ஓகே. ஒண்ணே ஒண்ணு… என்று கண்களை அழுத்தி மூடி திறந்தாள்.

அந்த அழுத்தம் என்னை அமர விடவில்லை. எழுந்து சென்று தோடு அணியாத காது மடலில் இன்னும் எளிய பகுதிக்கு சென்று முதலில் நாவு நுனியால் எச்சிலின் ஈரம் பரவ வருடிவிட்டு பின் இதழ் நுனியால் லேசாக கவ்வி அதில் தேர்ந்தெடுத்த இடத்தில் மீண்டும் வைரக்கல்லை பட்டுத்துணி கொண்டு துடைப்பது போல் நாவின் நுனி கொண்டு உராய்ந்தேன்.

அவள் கிளர்ந்தாள்.

கிளர்ச்சி மிகும் நேரத்தில் வயிற்றில் அழுத்தமாக அங்கங்கே சில பிடிகள் இறுக்கி ‘மஸாஜி’ விட்டு கையை சில அங்குலம் ஏற்றுவேன்.

காத்திருக்கும் முயல்களுக்கு என் கை தடுக்கி விழுந்து, புரண்டு, அலைபோல் தாவித்தாவி என்னவெல்லாம் செய்து மின்சாரம் மூட்டும் என்பது அவளுக்கு தெரியும்.

அப்போது கூச்சம் இழந்து அவள் முனகும் சின்னச்சின்ன சிணுங்கல் நட்சத்திரம் போல் ஒளிரும்.

அந்த தாக்குதலை தாங்க முடியாது அவள் கை தானாக கீழிறங்கி… தேடி… பற்றி… இழுத்து… இறுக்கி…

நினைவுகள் சிதறின அவள் என்னை தொட்டபோது… காதருகில் வந்து சத்தமாக

மாம்… மாம்… என்றாள்.

யோசிக்க வேண்டிய விஷயம் என்றேன்.

என்ன யோசனை?

மாம் கதைகள் நீ படிச்சதுதானே?

அவருடைய கதையின் தலைப்பு மிக நன்றாக இருக்கும்.

அப்போ எழுது என்றாள்.

எனக்கு எழுத மனம் குவியவில்லை. படித்தால் வாந்தி எடுக்கும்படி எழுத மனம் எழுதும் எழுத்தில் ஒன்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. போகிறபோக்கில் எழுதி விடலாம்.

ஆனால்…

எனக்காக எழுதும்போது
என்னை புரிந்துகொள்ள எழுதும்போது
என் அகச்சிக்கலை ஊடுருவி பார்க்க விரும்பி எழுதும்போது
நான் படித்ததை எப்படி ஜீரணித்து இருக்கிறேன் என்பதை அறிந்துகொள்ள எழுதும்போது…

என்னையே இழந்துதான் எழுத வேண்டும் என்று முடிவு செய்திருப்பவன் நான் என்று…  ‘பிரேத மனிதனின் பகல் கனா’ நாவலை எழுதிய மாயவரத்துக்காரர் சொன்னது நினைவுக்கு வந்தது.

அவளிடம் இதை எப்படி சொல்ல?

சாமார்செட் மாம் பிடிக்குமா?

என் தாத்தா சொல்லி இருக்கார். அவர் படிச்சு இருக்கார்.

அதான் உனக்கும் பிடிக்குமா?

எது?

மாம் ஸ்டோரீஸ்…

அப்படி எல்லாம் இல்ல…

பின்னே…

இப்போ இந்த செகண்ட் நான் என் தாத்தாவை ரொம்ப மிஸ் பண்றேன். அது ஏன்னு எனக்கு தெரியலை.

விழியோரம் கசிந்தாள்.

தி ரேசர்ஸ் எட்ஜ் நாவலை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

யுத்தம்

இந்த வீட்டில் அறை என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால், ஏழோ எட்டோ அறைகள் உள்ள வீடுதான்.

ஒவ்வொரு அறைக்குள்ளும் மெதுவாக நடந்து வீடை ஒருமுறை சுற்றி வருவதற்கு இருபது நிமிடங்கள் ஆகும்.

துள்ளலாய் ஓடினாலும் சிறிது நேரம் பிடிக்கும். அழகான வீடு என்று சொல்ல முடியாது. எல்லாம் சிதறி இருக்கும்.

இதுபோக தோட்டம் என்பதும் தனியே இருக்கிறது. செடி கொடிகள் தவிர ஓரிரு அரளி மரங்களும் இருக்கிறது. இந்த மரம் வீட்டில் வளர என்ன தேவை என்பது எனக்கு தெரியவில்லை.

வாசனை என்று எதுவும் வீட்டில் இல்லை. அதேசமயம் நாற்றம் இல்லை. ஒன்றுமே இல்லாத இந்த வீட்டில் இருக்கிறேன். நான் மட்டும் அல்ல, என்னோடு பிறந்த, நான் பெற்ற பிள்ளைகள், உடன் பிறந்தோர் பெற்ற பிள்ளைகள்… சொல்லி கொண்டே போகலாம்.

சொல்லக்கேட்டால் அவர்களின் பெயர் நிறம் முடி நிறம், கால்களின் வளர்த்தி என சொல்லிக்கொண்டே போகலாம்.

யாருக்கும் மருத்துவ தேவை என்பது ஏற்பட்டதே இல்லை. இதனால் மாத்திரை டானிக் சப்ளிமெண்ட் வில்லைகள் என்று ஒன்றும் வாங்குவது இல்லை.

உணவு உண்டது போக விளையாட்டு. கும்மாளம். அக்கம்பக்கத்து வீடுகளுக்கு ஒரு நடை என்று வாழ்க்கை அதுவாக போய் கொண்டேதான் இருக்கிறது.

யாரையும் குற்றம் சொல்லவோ பொறாமை கொள்ளவோ நேரம் இருப்பது இல்லை.

ஆனால் அன்றாட உணவு என்பது சிக்கல் கொண்டது என்பதை மறுக்க முடியாது. கிடப்பதை பொறுக்கி தின்னும் வாழ்க்கைதான். பகிர்ந்து உண்போம் என்பது குருதியில் கூட இல்லை.

அவரவர் உணவுக்கு நாங்கள் அவரவர் முயற்சியை மட்டுமே நம்பி இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் கருணை காட்டுவதும் இல்லை. அப்படியே இது எங்களுக்கு பழகி விட்டது.

மழைக்காலம் வந்தால் சற்று சிக்கல். அப்போது பெரும்பாலும் நிறைய நேரம் தூங்கி விடுவோம். விழிக்கும்போது பசித்தால் கிடைக்கும் மாமிசமும் கூட உணவாகி விடலாம்.

உணவுதான் வாழ்க்கையா என்று நீங்கள் முனகுவது கேட்கிறது. ஒருவேளை உணவுக்காக போராடும் வாழ்வில் வேறெந்த அதிகமான பாவம் செய்ய வாய்ப்புகள் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

மனம் எல்லாம் கிடைக்கப்போகிற உணவுக்கு மட்டுமே கவனத்தோடு இருக்கும்போது, கிடைக்க வேண்டிய உணவு என்று யோசிப்பது ஒருவிதத்தில் அதிகார மனோபாவம் அல்லவா?

அதற்கு எல்லாம் செல்வம் வேண்டுமே…

இந்த வீட்டில் இரவு ஒரு மாதிரியாகவும், பகல் ஒரு மாதிரியாகவும் இருக்கும். இரவு இரவாகவே இருப்பது இல்லை. யாரேனும் எழுந்திரிப்பது தண்ணி குடிப்பது என்று இருந்தால், அதேபோல் ஒருவர் சிறுநீர் கழிக்க எழுந்து செல்வது என விளக்கு எரிவதும் அணைவதுமாக இருக்கும்.

இரவை இரவாக கடந்துபோவது என்பது சூழ்ச்சியும் திறமையான அறிவும் கொண்ட ஜீவன்களுக்கு சாத்தியம் இல்லை.

நான் இதை எல்லாம் பொருட்படுத்துவது இல்லை. எனக்கு வேலைகள் என்றும் பெரிதாக இல்லை. தரையில் ஏதேனும் துணியோ காகிதமோ இருந்தால் அதை கிழித்து விடுவேன். பின்ன என்ன… ஒரு ஒழுங்கு வேண்டாமா…

இதனால் என் மீது கோபம் கூட வரலாம். பழக்கத்தை மாற்ற முடியவில்லை.

வாழ்க்கை நன்றாகத்தான் போகிறது. அதை குறை சொல்ல தொடங்கினால் பின் நிம்மதி என்பதே இல்லாமல் போய் விடும். வாழ்க்கை என்ன என்பதை நாம் நம் மனதுக்கு கற்றுத்தரவே கூடாது. அது ஓரளவுக்கு புரிந்து விட்டால் பின் நம்மை நிம்மதியாக இருக்க விடாது.

இந்த நாள் இந்த நிமிடம் இதைத்தாண்டி ஒரு மயிரும் இல்லை என்று என் மனம் அடிக்கடி எனக்கு சொல்லும்போது வரும் சிரிப்பை கூட அடக்க முடியாது.

காலையில் பச்சை நிற கேக் சாப்பிட்டேன். மெழுகு போல் அது வாயில் இருந்து வயிற்றுக்கு போனது சுகமாக இருந்தது. அதன் பின்பு வேறு சாப்பிட பிடிக்கவில்லை.

சும்மா இருப்பானேன் என்று தோட்டம் பக்கம் போனேன். காலை வெயில் நல்ல இதம். லேசாய் வயிற்றை கலக்கியது.

சரி குடல் விளக்கம் செய்வோம் என்று அந்த காரியத்தை முடித்துவிட்டு வீடு உள்ளே வந்தேன்.

ஏறக்குறைய எல்லோரும் இன்னும் தூங்கி கொண்டே இருக்க, என்ன எழவு இது என்று முனகி கொண்டே மாடிக்கு சென்று விட்டேன்.

நான் நினைத்ததுபோல் ஜிவ்வென்று தாவி துள்ளி எல்லாம் போக முடியவில்லை. தலை சுற்றியது. இந்த கிறுகிறுப்பு எல்லாம் வந்ததே இல்லை. என் மனைவிக்கு கூட இப்படி வந்தது இல்லை. கேக்கில் ஏதேனும் இருந்து இருக்குமா என யோசனை வந்தது.

இருக்கலாம். இருட்டில் சாப்பிட்டு விட்டேன். அதனால் ஏதேனும் அதில் இருக்குமோ என்ற பயம் வந்தது.

சுந்தரி என்று கூப்பிட அவள் வந்து மட்டும் என்ன செய்ய போகிறாள்… என் வேதனை எனக்கு மட்டும் போதும் என சொல்லிக்கொண்டு முன்பு படித்ததை நினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்தேன்.

மருத்துவத்துறை இந்த திடீர் சுழற்சிக்கு என்ன பெயர் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. குமட்டியது. வாய் ஓரம் எச்சில் வடிந்தது. காது மடல்கள் கண்கள் எல்லாம் எரிய ஆரம்பித்தன. காய்ச்சல் என்று தெரிந்ததும் மனது சமாதானம் அடைந்தது. இதற்கு இப்படி பயந்து இருக்க வேண்டாம்.

சுந்தரி என்னை நின்று ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்த அறைக்கு சென்று விட்டாள். குழந்தைக்கு பால் கொடுக்க போகலாம்.

போனவள் திரும்பி வரும்போது நான் விஷயத்தை சொல்லிவிட வேண்டும். காய்ச்சல் போல் தெரியவில்லை. காது ஓரத்தில் துளி ரத்தம் வந்து விட்டது.

நான் கத்தி எல்லோரையும் எழுப்பி விடலாம். வேறு வழி இல்லை.

சுந்தரி, ராமு, ஆதிகேசவா என்று மாற்றி மாற்றி கத்தினாலும் யாரும் வரவில்லை.

எப்படி வருவார்கள்? நான் மயக்கத்தில் மனதுக்குள்தானே கத்துகிறேன். அது எப்படி அவர்களுக்கு கேட்கும்…

எழுந்து நிற்க வேண்டும் போல் ஒரு வைராக்கியம் இருந்தாலும் கால்கள் தொய்ந்து விட்டது.

இது என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். கண் மூடி இருந்தாலும் சொக்கி விடவில்லை என்பதால் அப்படியே எனக்கு உள்ளே நடக்கும் மாற்றங்களை கண்டறிய விரும்பினேன்.

கால்கள் உணர்ச்சி இல்லாமல் இருக்க, உடலில் சூடு கூட ஆரம்பித்தது. நாக்கில் புதிதாக கசப்பு பரவியது. இப்போது காதை தவிர மூக்கின் நுனியிலும் சின்ன ரத்தத்துளி இருந்தது. ஒடுங்கி போக ஆரம்பித்து இருந்தேன்.

எல்லோ பாஸ்பரஸ்தான் என்று மனம் கூவியது. ஆஹா… இந்த கெமிக்கல் ஆளை விடாதே என்று தோன்றியது.

வயிற்றுக்குள் காற்று கர் புர் என்று ஓடியது. அப்படி என்றால் தாலியம் இருக்க வாய்ப்புகள் அதிகம். இது நரம்பு மண்டலத்தில் ஓங்கி அடித்து விடலாம் என்று தோன்றியது.

அடித்திருக்கும்… அதான் அசைய முடியாமல் படுத்து இருக்கிறேன். சுந்தரி இன்னுமா பால் கொடுக்கிறாள். இல்லை, கொடுத்தபடியே அவளும் தூங்கி விட்டாளா என்று யோசித்தேன்.

நேரம் போகப்போக வாயில் நுரை வர மஞ்சள் காமாலைக்கு உரிய எல்லா அறிகுறிகளும் வந்து விட்டது.

மூத்திரம் வருவது போல் நுனி எரிய ஆரம்பிக்க ஒன்று இரண்டு சொட்டுக்கள் விழுந்து இருக்கும். தொட்டு முகர்ந்து பார்த்தால் தெரிந்து விடும். காரமான வாடையுடன் இருந்தால் சோடியம் மோனோஃப்ளோரோ அசிடேட் கலந்து இருக்கலாம்.

கலந்திருந்தால் கிட்னி ஃபெயிலியர். சுந்தரி இன்றைக்கு பொட்டை அழிக்க வேண்டியதுதான்…

ஐயோ என்று மனதுக்குள் கவலையும் பயமும் வந்து விட்டது.

கால்கள் வெடவெடவென்று நடுங்கின.

சிங்க் அலுமினியம் பாஸ்பேட்?

உடம்பு வேகமாக குளிர்ந்தது.

ஆர்சனிக்?

வாய் உலர்ந்து உடம்பின் நீர்ச்சத்து வற்றி காய்ந்து கொண்டே இருந்தது. தாகம்… தாகம்… தண்ணி…தண்ணி…

பேரியம் கார்போனைட்?

நேரே கோமாவை நோக்கி போனேன்.

மூளையில் வலி குத்தி எடுப்பது எனக்கு தெரிந்தது. பின்னி இழுத்து கொண்டு இருந்த கால்கள் மெல்ல தளர்ச்சி அடைந்து கட்டுப்பாட்டை விட்டு விலகி போனது.

அம்புட்டுதேன் என்று ஒரு குரல் சொல்ல இல்லை என்று நான் கத்த உடல் ஒரு தரம் விலுக்கென்று துள்ளி விழுந்தது.

ஆதிகேசவன் என் வாலை பிடித்து தலைகீழாய் குப்பை தொட்டியில் தூக்கி வீசும்போது சுந்தரி பாவம்டா பச்சை உடம்புக்காரி என்று சொன்னேன்.

அவனுக்கு கேட்டு இருக்காது. நீங்களாவது சொல்லுங்கள். ப்ளீஸ்…

உணவை தவிர வேறு ஒன்றுக்கும் ஆசைப்படாத ஜீவன் சார் நாங்க…

எலி

ஐந்தா?

இல்லை அது இருபதுக்கும் மேல் இருக்கும்.

இல்லை இல்லை… ஐந்நூறு, ஆயிரம் கூட இருக்கலாம்.

கால்கள் காற்றுக்குள் ஓங்கி உதைத்து கொண்டிருந்ததே தவிர தப்பி ஓட முடியவில்லை.

ஓடினால், பிழைத்து கொள்ளலாம்.

பிழைத்து விடுவதால் என்ன செய்ய போகிறோம்?

ஆனாலும், அவைகள் கடித்து குதறி விடும். சதை துணுக்கல்களை தின்று விடும்.

எலிகள்.

எலிகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறி ஏறி குவிந்து குன்று போல் நிற்கும்போது…

அவற்றின் ஜோடி கண்கள் என்னை இல்லையில்லை என் உடலை ஆங்காரத்துடன் குறி வைத்தன.

நான் சாகப்போகிறேன் என்று நினைக்கவும் விழிப்பு வந்தது.

கனவு.

ஆயிரம் இல்லை என்றாலும் ஏழோ (அ) பதினைந்தோ எலிகள் கண்டிப்பாக இந்த வீட்டில் இருக்கிறது.

அவைகள் குட்டி போடும்.

குட்டிகளும் குட்டிகள் போடும்.

வந்தனா எனக்கு எலிக்குஞ்சு என்று பட்டப்பெயர் வைத்திருந்தாள், நாங்கள் அப்போது ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்தோம். ட்ரையம்ப் மிடில் ஸ்கூல்…

எனக்கு அவளோடு காதல் அரும்பிய வயது அது.

அந்த வயதில் ஒரு பிள்ளைக்கு காதல் வருமா?

எனக்கு வந்தது.

அது காதல்தான் என இன்றளவும் நான் நம்புகிறேன்.

மெய்ஞ்ஞானமும், அறிவியலும் இந்த காதலை எப்படியெல்லாமோ வர்ணித்தும் வகைப்பாடும் செய்து வைத்தாலும் எனக்கென்னவோ அதுதான் காதல் என்று தோன்றுகிறது.

வகுப்பறையில் அவளுக்கு முத்தமிட்டு இருக்கிறேன், கன்னத்தில் கிள்ளி…

அவள் ஒருபோதும் அதை மறுத்ததும் இல்லை. புகார் செய்யவும் இல்லை. திருப்பி கொடுத்ததும் இல்லை.

காலப்போக்கில் யாருடனோ திருமணம் ஆகி சென்று விட்டாள்.

எனக்கு இன்னும் ஆகவில்லை. இனி ஆகப்போவதும் இல்லை.

கொல்லைப்புறம் செல்லும்போது கிச்சன் மேடையில் காதுகளை உயர்த்தி கொண்டு பெரிய எலி தாவி ஓடியது.

நான் பார்க்கிறேன் என்று தெரிந்ததும் தன்னை மாயமாக மறைத்து வைத்து கொள்வதைப்போல் வேகமாக ஓடியது.

அந்த வேகத்தில் மறைந்தது எலி அல்ல.

நிகழ்காலம் மட்டுமே.

என் கண்களில் நீர் திரையிட்டது.

எலிக்குஞ்சு என்று ஒருமுறை எனக்குள் சொல்லி பார்த்துக்கொண்டேன்.

வந்தனா எதற்காக எனக்கு பட்டப்பெயர் வைத்தாள்?

கீச்சுக்குரலில் பேசுவதால்தானோ?

அச்சிறு வயதில் எனக்கு பொஸஸிவ் குணம் அதிகம்.

அவமானத்தில் என் முகம் கறுத்து போகும். சிவந்த நிறம் கூட இல்லை. அவள் நல்ல சிவந்த நிறம்.

பட்டப்பெயரை என் காதுபட அவள் சொன்னது இல்லை. அவள் தோழிகள் மாலதி, ரேவதி, மாங்கனி மூலமே எனக்கு தெரிய வந்தது.

அதன்பின், இந்த மூவரையும் சில நாட்கள் காதலித்தேன். ஆனால் மனம் என்னவோ வந்தனாவை மட்டுமே நினைத்தது.

மீண்டும் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தனாவை காதலிக்க தொடங்கினேன்.

ஏழாம் வகுப்புக்கு வந்ததும் செக்க்ஷன் பிரித்து விட்டார்கள்.

துக்கம் நெஞ்சை பிழிந்தது.

அடுப்பறை மேடையில் எலிகள் பிளாஸ்டிக் குடுவைகளை கருவி இருந்தன.

இந்த எலிகளை எப்படி வீட்டை விட்டு துரத்தலாம் என்று யோசித்தேன்.

தாத்தா வைத்திருந்த எலிக்கூண்டு பரண் மூலையில் இருக்கிறது. துரு பிடித்த கூண்டு.

அதில் மசால்வடை வைத்தால் சிக்கும்.

முன்பு எல்லாம் எலிகளை உயிருடன் பிடித்து பள்ளிவாசல் சந்துக்கு பின்னே கொண்டு விட்டு விடுவது எங்கள் தெரு பழக்கம்.

ஆனால், இந்த எலிகள் எப்படியோ அதில் நிபுணத்துவம் பெற்று மசால் வடையை தின்றுவிட்டு லாகவமாக தப்பி செல்ல கற்றுக்கொண்டு விட்டன.

கூண்டுகள் துருப்பிடிக்க தொடங்கியது.

இடுப்பு உயரத்துக்கு ஒரு மூங்கில் கம்பை வைத்து குறிபார்த்து எலியின் மூக்கில் ஓங்கி அடித்து அதில் குருதி கசியும் வரை திரும்ப திரும்ப அடித்தே கொல்லும் வழக்கம் எங்கள் அக்ரஹாரத்தில் மெல்ல பரவியது.

மாமிகள் கட்டில் மீது ஏறி நின்று டிராபிக் கான்ஸ்டபிள் போல் கைகளை சுழற்றி தோ பாருங்கோண்ணா வாசப்பக்கமா ஓடறது, அடிங்கோ அடிங்கோ என்று கூச்சலிட மாமாக்கள் எகிறி ஓடும் காட்சிகள்…..

இந்த வீர விளையாட்டு எனக்கும் பிடிக்கும். நாளடைவில் எலி அடிப்பதில் விற்பன்னன் ஆனேன்.

நாட்டு எலி, சுண்டெலி, பெருச்சாளி, வயல் எலி என்றெல்லாம் பார்த்த பார்வையில் அதன் ஜாதியை கண்டுபிடிக்க தெரிந்து போனது.

மூஞ்சூறு மட்டும் பிள்ளையார் வாகனம் என்பதால் தப்பித்தது.

பெருச்சாளி முதுகு திண்ணென்று இருக்கும். அடி வாங்கிக்கொண்டு ஓடும்.

பயத்தில் கை நடுங்கினாலும், அதை நான் தாறுமாறாக அடிப்பேன்.

தொம் தொம்மென்று சப்தம் வரும்.

எப்படியோ தப்பித்து விடும்.

ஒவ்வொரு எலியும் என் கையால் சாகும்போது எனக்கு வந்தனாவின் நினைவு வரும்.

அவளிடம் என் காதலை சொல்ல வேண்டும்.

ஆறாம் வகுப்பில் ஒரு அந்தி மாலையில் மழை மேகம் சூழ வான் மேகங்களே அல்லது அழகிய விழிகளில் அறுபது கலைகளும் பாடல் ஒலிக்கும்போது நான் அவள் கரம் பற்றி ஐ லவ் யூ என ஆங்கிலத்தில் சொல்ல நாள் பார்த்து காத்திருந்தேன்.

ஆனால்…

எல்லா அந்தி மாலை நேரத்திலும் நான் என் சித்தி வீட்டில் டியூசன் படிக்க போக வேண்டியிருந்தது.

மழை வரும்போது வச்ச பார்வை தீராதடி பாட்டுதான் கேட்டது.

ஒருநாள்….

மழை வந்தது.
டியூசன் இல்லை.
அந்தி நேரம்.
வந்தனா வீட்டில்தான் இருந்தேன்.
தைரியம் மட்டும் வரவில்லை.
என் மனதுக்குள் ஆயிரம் முறைக்கு ஐ லவ் யூ மட்டும் சொன்னேன். அவளுக்கு எப்படி அது கேட்கும்?

வாய்ப்பு பறிபோனது.

வந்தனா எட்டாம் வகுப்புக்கு எங்கள் ஊர் ஹைஸ்கூலில் சேர்ந்தாள்.

இரவெல்லாம் அவளை மனதுக்குள் நினைத்துக்கொண்டு சிவனிடமும் காளி தேவியிடமும் மனமுருக பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தேன்.

பரணில் எலி திடுதிடுவென ஓடும் சப்தம் கேட்டது. ஓட்டத்தை வைத்து பார்க்க அறுநூறு கிராம் எடை இருக்கும்.

நன்கு புடைத்த காதுகள். நீளமான கருப்பு வால். ஆளை அசத்தும் மிளகு கண்கள். இளம் முடி. வழு வழு அடி வயிறு. லேசான நாற்றம்.

விலங்குகளை ஹிம்சையாக கொல்வதில் விருப்பம் இல்லாது போனது.

காரணம், பிரியமாக நாய்க்குட்டி வாங்கி பிரியமாக வளர்த்து பிரியம் இல்லாமல் சாக கொடுத்ததுதான் என்று இப்போது நினைக்கிறேன்.

ரோஸி இருந்தவரை வீட்டில் எலிகளின் தொல்லை என்பது அறவே இல்லை.

எனக்கு எலி அடிக்கும் பழக்கமும் மறந்து விட்டது, சில நேரங்களில் ஒரு எலிகுஞ்சு கிடைத்தால் அதை தூக்கி கொஞ்சலாம் என்றும் தோன்றியது.

எலி வளர்ப்பு பிராணி ஆக முடியாது.

அறிவியல் எலிகளுக்கு பாஷாணம் என்று விஷத்தை தயாரித்தது.

அறிவியல் வஞ்சகம் இல்லாதது. ஆகவே மனிதருக்கும் உதவும்படி தயாரித்தது.

நான் சிறுவனாக இருந்தபோது…

எலி மருந்தை என் மாமா ஹிரோஷிமா அணுகுண்டை கையாள்வதுபோல் செயல்திட்டம் வகுத்து பயன்படுத்துவார்.

எலிகளின் நடமாட்டம், இனத்தொகை, அதன் பழைய புதிய பொந்துகளின் இருப்பிடம் என்றெல்லாம் கணக்கீடு செய்து நெல்லிக்காய் அளவு உருட்டி வைப்பார்.

அதன்பின் அவர் நிமிர்ந்து நிற்கும் ஆறடி பூனையாக மாறி விடுவார்.

அந்த விஷம் கொஞ்சம் பவர் கம்மி என்று தெரிந்துதான் வாங்குவார்.

எங்கள் குடும்பத்திலும் கஷ்டம் உண்டே.

பூனையாக மாறியவர் தினந்தோறும் செத்து விழும் எலிகளை வாசலில் தூக்கி எறிய எறிய எலிக்குடும்பத்தில் காலன் தன் கோர விளையாட்டை நிறுத்தும்வரை மனிதராக மாறவே மாட்டார்.

இவையெல்லாம் ரோஸி என்ற எங்கள் நாய்க்குட்டி வரும்வரை வரை நடந்தது. அது வந்ததும் எலிகள் இல்லை.

நான் கல்லூரி முடித்துவிட்டேன்.

கல்லூரிக்கு போய் கொண்டிருந்த காலத்தில் வந்தனாவை பார்த்தேன்.

அவள் பெண்கள் கல்லூரியிலும் நான் வெளியூரில் ஒரு கல்லூரியிலும் ஒரு ஆழாக்கு பிரயோஜனம் இல்லாத கோர்ஸை படித்து கொண்டிருந்தோம்.

அற்புதமிக்க மீசையும் வளர்ந்து விட்டது, எனக்குத்தான்…

அவள் மூன்று நிமிடங்கள் நடக்கும் ஒரு ஆள் அரவமற்ற சந்துக்குள் நேரம் பார்த்து அவள் கையை பிடித்து ஐ லவ் யூ என்று சொன்னேன்.

புன்னகைத்தாள்.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பேரின்பம் வசீகரமாக தீண்டிவிட்டு போகும் தினம் என்று ஒன்று உண்டு.

அதுதான் அன்று எனக்கு.

அவள் கடந்து போனதும் மளமளவென்று காரியங்கள் மனதுக்குள் நடந்தேறின.

பேச்சு வார்த்தைகள் நடந்து, முட்டல் மோதல்கள் கடந்து,கல்யாண பந்தல் நட்டு, தாலி கட்டி, முதல் பிள்ளைக்கு (பெண்) கணக்கு நோட்டு வாங்க கடைவீதிக்கு நடந்து போகும் நான்….

கனவு.

இதுவும் கனவு.

வந்தனா அன்று எனக்கு எதிர்ப்பும் சொல்லவில்லை, கேட்டதற்கு மறுப்பும் சொல்லவில்லை.

திடீர்ன்னு இப்படி சொன்னா….

எலிக்குஞ்சு என்று முடிப்பாளோ என எதிர்பார்த்தேன்.

என்ன சொல்வேன் ஸ்ரீ என்று முடித்தாள்.

போய் விட்டாள்.

அந்த சந்தில் அப்படி அடிக்கடி பேச முடியாது.

வந்தனா கிடைக்கவிட்டால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.

பகலில் அமைதி.

இரவில் குடைச்சல் சப்தம்.

கடந்த ஐந்து நாட்களாக பார்க்கும்போது இந்த வீட்டில் எட்டு எலிகளாவது இருக்கும் என்று மனக்கணக்கு தெரிவித்தது.

வீட்டில் நான் மட்டுமே இருக்கிறேன்.

சலிப்பும் தனிமையும் மட்டுமே துணை. இந்த எலிகள் இருந்துவிட்டு போகட்டுமே என்று தோன்றியது.

ஆனால்,

பாத்திரங்களை உருட்டுவதும் இரவில் உருவாக்கும் குடைவு சப்தங்களை கேட்கும்போதும் பதற்றம் வந்தது. பயம் வந்தது.

வந்தனாவின் பிள்ளைகள் இப்போது கல்லூரிக்கு படிக்க சென்று இருக்கலாம்.

அவளை கட்டி கொடுத்த இடம் மதுரை மதுரை திருச்சி என்றெல்லாம் சொன்னார்கள்.

போகவும், கேட்கவும் பயம் வந்தது. பயத்தை விடவும் தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருந்தது.

ஐ லவ் யூ சொன்னபோது புன்னகை பூத்த வந்தனா எனக்கு துரோகம் செய்ய மாட்டாள் என்றே தோன்றியது.

அவளை மிரட்டி திருமணம் செய்து வைத்து இருப்பார்கள் என்று எனக்கு ஆறுதல் சொல்லி கொண்டேன்.

நியாயமாக நான் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்.

செய்யாமல் போனதற்கு காரணமும் அதே பயம்தான்.

காலம் என்னை தனிமையில் விட்டு விட்டது.

சுற்றம் நட்பு எல்லாம் இருந்தும் எனக்கு அவை அனைத்தும் சுமை என்றே தோன்றியது.

ஏராளமான புத்தகங்கள் வாங்கி வீட்டை கிடங்காக மாற்றி இருந்தேன்.

எலிகள் அதை கடித்து பதம் பார்த்தால்?

அந்த எலிகளை இனி விட்டு வைக்க கூடாது என்று முடிவு செய்தேன்.

ஜெபமணி நாடார் கடையில் சென்று ஒரு எலி மருந்து பாக்கெட் என்றேன்.

நாடார் எடுத்து அதன் விலையை தன் கண்களை குறுக்கி நோட்டம் விடும்போது….

நல்லா ஸ்ட்ராங்கா இருக்குமா? உடனே வேலை செய்யுமா என்று அப்பாவியாய் நான் கேட்க…

நாடார் என்ன நினைத்தாரோ….

அதை மீண்டும் ரேக் உள்ளே வைத்துவிட்டு வீட்ல வேற யாரையாச்சும் வரச்சொல்லி வாங்கிக்கிடுங்க. நீங்க நம்மளை தப்பா நினைக்க கூடாது என்று அடுத்த ஆளை கவனிக்க போய் விட்டார்.

அவமானமாக இருந்தது. அதை விடவும் துக்கமாக இருந்தது.

என் வீட்டில் என் வந்தனா இல்லை.

மனதுக்குள் அவள் குறித்த ஏதோ சில சிதிலமான நினைவுகள் உண்டு.

அந்த நினைவுகளை பாலீஷ் போடும் சில இளையராஜா பாடல்கள் நிரம்பிய பென் ட்ரைவ் ஒன்றும் ஸ்பீக்கர் மீது தொற்றிக்கொண்டு இருக்கிறது.

இவற்றை விட்டால் எலிகள்.

அந்த எலிகளை விட்டே எலிகளுக்கு மரணமருந்து வாங்க முடியுமா?

வீட்டுக்கு வந்து விட்டேன்.

ரேழியில் தாய் எலி முன்னே செல்ல மூன்று குட்டி எலிகள் கூடவே ஓடின.

குடும்பத்தை பெருக்கி விட்டன.

கட்டு பிரிக்காமல் இருந்த புத்தகங்களை பார்க்க பார்க்க கிலி கூடியது.

இதே போன்ற அடி வயிற்று கிலியை முன்பு அனுபவித்ததும் உண்டு.

தெற்கு அக்ரஹாரத்தில் வசித்த வந்த வந்தனா ஆச்சாரமான சௌராஷ்டிர குடும்பத்தில் பிறந்தவள்.

அவா என்ன ஜாதிம்மா என்று கேட்டபோது அவாளும் நம்மளை மாதிரிதான்… என்ன, அவா பாஷை கடுகடுன்னு இருக்கும் என்று பால் வார்த்தாள் என் அம்மா.

ஜாதி பிரச்னை வராது என்று நம்பிக்கை வந்தது.

எல்லாம் அலைகள் ஓய்வதில்லை படம் பார்த்து வந்த குழப்பம்தான் இது.

இல்லையென்றால் ஜாதி பற்றி எல்லாம் யோசிக்கும் வயதா அது?

லட்சுமணனுக்கு போன் செய்து நாடார் சொன்னதை சொல்லி எலி மருந்து பாக்கெட் வாங்கி வர கேட்டு கொண்டேன்.

சொன்னதும், சில பாக்கெட்ஸ் கொண்டு வந்து கொடுத்தான்.

டேய், இப்பவும் சொல்றேன், ஒரு கல்யாணத்தை கெட்டிட்டு நிம்மதியா இருக்க பார்றா… இந்த எழவு எடுத்த புஸ்தகத்தை எல்லாம் தூக்கி அடிச்சிட்டு சந்தோஷமா இருக்க பாரு என்று சிகரெட்டை பற்ற வைத்து கொண்டு கிளம்பினான்.

என் மாமாவை நினைத்துக்கொண்டு நெஞ்சில் துயரம் முட்ட நான் ஒரு பாக்கெட்டை பிரித்தேன்.

ஜாதி ஒரு பிரச்னை இல்லை. ஆனால் பதினைந்து வயதுதான் பிரச்சனை.

மேலும், வந்தனா வீட்டில் வந்தனாவுக்கு மேலும் கீழுமாக பெண்கள் பெண்களாக இருந்தனர். ஆண் வாரிசுகளே இல்லை.

சம்பாதித்தல் என்ற சொல்லே அறியாத வயது. சாலரி என்ற சொல்லே இருபது வயதில்தான் தெரியும்.

இருபது வயதில் வந்தனாவை மணமுடித்து அனுப்பி விட்டனர்.

வீட்டில் பத்திரிகை கொடுத்தும் அதை மறைத்து விட்டனர்.

ஒரு சௌராஷ்டிர தோழன் விஷயத்தை சொன்னபோது கல்யாணம் முடிந்து ஒரு வாரம் ஆகி இருந்தது.

எனக்கும் திருமண வயது வந்துவிட்டது என்பதை நான் உணர்ந்தபோது பெருமிதமாக இருந்தது.

அதனால் ஒரு உபயோகமும் இல்லை.

வாக்கிங் போய்விட்டு வந்தபோது தாழ்வாரத்தில் ஒரு பெரிய எலி மயங்கி கிடந்தது.

கிட்டே போனால் வால் துடித்தது.

அமைதியாக மரணத்தை தழுவட்டும் என்று கதவை மூடி வைத்து விட்டு உள்ளே வந்தேன்.

கொல்லையில் காகங்கள் கரையும் சப்தம் கேட்டது.

இரண்டு நாட்களில் வேகமாக எலிகள் குறைய தொடங்கின.

ஆனால் எங்கேயோ சென்று அவைகள் தம் மரணத்தை ஏற்றுக்கொண்டன. நான் இறந்த எலிகளை பார்க்கவில்லை

தாய் மட்டும் இறந்தால் குட்டிகளின் கதி?

என் வீட்டில் அடுத்த வேளை பாலுக்கோ உணவுக்கோ அனாதையாக சுற்றுமே?

என் வீட்டில் நானே அனாதைதானே?

எலிகளுக்கு அது புரியுமா?

பூமியில் விலங்குகள் அனைத்தும் அனாதைகள்தாம். ஆனால் எதுவுமே அனாதைகள் இல்லை.

ஆனால், மனிதர்கள்?

எனக்கு தலை சுற்றியது. சமீபத்தில் வந்தனாவின் நினைவுகள் நிறைய வர துவங்கி விட்டன.

சென்று பார்த்தால் என்ன? யாரிடம் எப்படி விசாரிப்பது?

அவள் திருமணம் முடிந்ததும் பக்கத்து வீட்டு அலக்ஸ்சாண்டருக்கு தங்கள் வீட்டை விற்றுவிட்டு சென்று விட்டார்கள்.

மதுரையில் சௌராஷ்டிர மக்கள் அதிகம் என்பதால் எங்கள் ஊரில் இருந்து மினி மைக்ரேட் ஆகி அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

எனக்கு மட்டுமே அழகாக இருந்த என் காதல் கதை என் தெருவில் அப்படி பார்க்கப்படவில்லை என்பது புரியாத வயதில் வந்த காதல் அது.

புரிந்தபோதும் அதில் குற்றமாக என்ன இருந்தது என்பதும் புரியவில்லை.

வந்தனாவுக்கும் புரிந்திருக்காது.

என்னை பழி வாங்கும் எலிகள் வந்த கனவிலிருந்து விழித்து கொண்டதும் உடல் வலித்தது.

எலிகள் இனத்தையே ஒழித்து விட்ட பாவத்தை செய்தது போல் உணர்ந்தேன்.

கட்டில் அடியில், மேசையில், அலமாரியில், ரேக்கில் இருந்த அத்தனை புத்தகங்களையும் சுற்றி சுற்றி பரிசோதித்து எலிக்கடி வாங்கவில்லை என்று உறுதி செய்தேன்.

தலை வலித்தது.

காஃபி….

கிச்சனில் நுழைந்தபோது ஒரு சிறு எலி துடித்து கொண்டிருந்தது.

பாத்திரங்களை நான் நகர்த்த நகர்த்த ஒவ்வொரு ஓசைக்கும் சப்தத்துக்கும் நடுவில் சிக்கிய அந்த சிறிய உடலை மரணபயம் தூக்கித்தூக்கிப்போட்டு நடுநடுங்க வைத்தது.

சே….

கதவை மூடிக்கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தேன்.

தாழ்வு மனப்பான்மை என் நெஞ்சை பிளந்தது.

எனக்கு முரட்டுத்தனம் இருக்கிறதே தவிர தைரியம் இல்லை.

பயம் இருக்கிறதே தவிர அன்பும் ஈவும் இல்லை.

எனக்கு வந்தனாவிடம் இருந்தது உண்மையில் காதல்தானா என்று கேட்டுக்கொண்டேன்.

அங்கிருக்க பிடிக்காமல் வாசலை பூட்டிக்கொண்டு வெளியேறினேன்.

பஸ் ஏறினேன்.

குமாருக்கு பேசினேன்.

போடியில்தான் இருக்கேன் வா. மதியம் இங்கேயே சாப்பிட்டு சாயந்திரம் உன் வீட்டுக்கு போய்க்க, இல்லாட்டி தங்கிட்டு நாலுநாள் கழிச்சி போய்க்க.

போனை வைத்து விட்டான்.

போடி நகரம்.

எலி செத்து இருக்குமா?

இன்னும் எவ்வளவு நேரம் துடிக்கும்?

வயிறு வீங்குமா?

தாகம் எடுத்து குடல் வரை எரியும் என்று சொன்னார்களே?

அடித்தே கொன்றிருக்கலாமோ?

போடி, மூன்றாந்தலில் இருந்து கால் போன போக்கில் நடந்துவிட்டு மதியம் குமாரை பார்த்தேன்.

நல்லவேளை… வந்துட்டே, வா தாசில்தார் ஆபிஸ் வரைக்கும் போய்ட்டு வரலாம்.

பைக் பின்னால் அமர்ந்தேன்.

தாசில்தார் அலுவலகத்தில் கூட்டம் இல்லை.

தாசில்தார் ஒரு பெண். ஓடிசலான ஆனால் மஞ்சள் நிறத்தில் இருந்தாள்.

என் வயதுதான் இருக்கும்.

என்னை பார்த்தவள் என் பெயரை சொல்லி அழைத்தாள்.

நீங்க?

மாங்கனி. நினைவு இருக்கா?

பேசிட்டு இருங்க. இப்போ வரேன் என்று இங்கிதமாக குமார் கிளம்பினான்.

ஆங்… இருக்கு. உன்னை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு மாங்கனி.

பேசி கொண்டிருந்தோம்.

வந்தனாவை பற்றி கேட்க ஆவலாக இருந்தது.

போன மாசம் மதுரைக்கு போய் இருந்தேன்.

ம்ம்ம்.

இன்மையில் நன்மை தருவார் கோவிலுக்கு வேண்டுதல் இருந்தது. அங்கே வந்தனாவை பார்த்தேன்.

நான் நிமிர்ந்து பார்த்தேன்.

எப்படி இருக்காங்க மாங்கனி?

எலிக்குஞ்சு பார்த்தியான்னு கேட்டுச்சு.

மனதை விஷமூட்டப்பட்ட எலிகள் ஒன்று கூடி பிறாண்டி கிழிக்கும் வலி வந்தது.

காட்டிக்கொள்ளாமல் சிரித்தேன்.

சிரிக்காதே… நீ அவளுக்கு மகாபலிபுரத்தில் இருந்து போன் செஞ்சு பேசினியா என்று கேட்டாள் மாங்கனி.

மகாபலிபுரம்?

நான் சென்னையில் பத்திரிகை மாத இதழில் வேலை செய்து வந்தேன்.

தினகரன் அழைப்பின்பேரில் வியாழன் அன்று மகாபலிக்கு போனேன்.

அந்த கடற்கரையில் குளிர்ந்த இரவில் மது இறங்கியதும் முதலில் நினைவுக்கு வந்தது வந்தனா. தொடர்ந்து வந்தது அழுகை.

எல்லாவற்றையும் தினகரன் கேட்டான்.

தோஸ்து… ஒருநாள் வாழ்ந்தால் கூடியும் போதும். எவளை நினைக்கிறோமோ அவ கூட வாழ்ந்துடனும். கிளம்பு.

எங்கே?

போன் பூத் போய்ட்டு கால் பண்ணுவோம். அவகிட்ட நேரே பேசிடு. எல்லாம் பேசிடு.

போன் செய்தேன்.

முதலில் எடுத்தது அவள் அப்பா.

பின் அவள் அம்மா.

இருவரிடமும் ஒன்றுதான் சொன்னேன்.

வந்தனாகிட்டே போனை கொடுங்க.

கொடுக்கிறேன். நீங்க யார்னு சொல்லுங்க.

தினகரன் முகத்தை பார்த்தேன்.

அவன் என் தோள்பற்றி எச்சரித்தான்.

நீ யார்னு சொல்லாதே. அவள்கிட்டே பேசணும் அவளுக்கு தெரியும்னு திருப்பி திருப்பி சொல்லு.

அப்படியே சொன்னேன்.

போன் வைக்கப்பட்டது.

அதன்பின் எப்போதும் அவளுக்கு செய்ய மனதில் தைரியம் வரவில்லை.

மாங்கனி முகத்தை ஏறிட்டு பார்த்தேன்.

ஒருதரம் பேசினேன் மாங்கனி, அன்னிக்கு என்ன ஆச்சுன்னா…

அதை நீ நேரில் பேசி இருக்கலாமே? ஏன் நேரில் வந்து வந்தனா முகத்தை பார்த்து பேசலை நீ?

பேசினா பெருசா என்ன ஆகியிருக்கும்?

நீ இங்கே இப்போ தனியா வந்து இருக்க மாட்டே. வந்தனா கூட வந்து இருப்பே. உன் ரெண்டு பிள்ளைகளும் காலேஜில் படிச்சிட்டு இருக்கும்… அப்புறம்….

நான் வெளியில் வந்து விட்டேன்.

கால்கள் தள்ளாடின.

மனசுக்குள் விஷம் தின்ற எலிக்குஞ்சு துள்ளி துள்ளி விழுந்தது.

தண்ணீர் குடிக்க குடிக்க தாகம் எடுத்தது.

அலுவலகத்தை விட்டும் வெளியில் வந்தேன்.

கண்கள் இருட்டியது.

பொட்டிக்கடையில் சிகரெட் வாங்கி பற்ற வைத்தேன்.

எதிரில் இருந்த முனிசிபல் சாக்கடைக்கு வெளியே காகங்கள் சூழ்ந்து ஒரு இறந்த பெருச்சாளியை ஆழமாக கொத்தி இழுத்து கொண்டிருந்தன.

அன்று இரவே குமாரிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தபோது மணி இரவு ஒன்று.

இன்று வீட்டின் தனிமை பேய் நகங்கள் போல் இருக்கும் என தோன்றியது.

தலையில் மீண்டும் வெறி ஏறியது.

பெண்டாட்டி பிள்ளைகளுடன் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்ட தினகரன் மீது வெறி வந்தது.

காலையில் உயிருக்கு துடித்து கொண்டிருந்த சுண்டெலி மீதும் வெறி வந்தது.

அதையாவது நசுக்கி கொல்லலாம்.

ஷுவை கழற்றாமல் கதவுகளை திறந்து எலி இருக்குமிடம் நோக்கி போனேன்.

எலி அங்கே இல்லை.

அது எங்கேயும் இல்லை.

எது இருந்தது என்றால்…

தனிமை.

மிச்சமான எலி மருந்து பொட்டலங்கள்.

கண்ணாடி

நான் கீழிருந்து இன்னும் சில படிகள் ஏறிச்செல்ல வளைந்து முடியும் ஓரத்தில் அங்கிருக்கும் விரும்பத்தகாத அறைகளை பார்க்க முடிகிறது.

மனம் ஏற்றுக்கொள்ள தயங்கும் எதிரெதிர் அடுக்குகளில் அந்த அறைகள் விளக்கின் மஞ்சள் ஒளியால் சூழ்ந்து இருந்தன. அது பார்க்க இருட்டை இன்னும் இருட்டாக்குவது போலவே தோன்றியது.

மைய அறைக்கு முன்பாக அந்தக்கால தகர சேர்கள் ஒரு ஆறும் இந்தக்கால பிளாஸ்டிக் சேர்கள் ஒரு எட்டும் இருந்தன. அதில் அமர்ந்து இருந்த மனிதர்கள் அவரவருடன் தனியே இருந்தனர்.

ரபேசன்.

இந்த நகரின் பிரபலமான மனநோய் மருத்துவர்.

இவர் நண்பர் எனது முதலாளி. அந்த முதலாளி இந்த டாக்டருக்கு கொடுத்த விட்ட ஏதோ ஒரு செய்தியை கொண்டிருக்கும் கவரை கொடுக்க வந்திருக்கும் தூதுவன்.
எனக்கு சம்பளம் உண்டு. பி.எஃப் இல்லை. கொடுத்து விட்டு கிளம்பி விடுவேன். டாக்டர் ஐயாவை நேரே பார்த்து கொடு என்பது உத்தரவு. நான் உத்தரவுக்கு பணிவேன்.

டாக்டர் வரும்வரை காத்திருக்க எனக்கு சம்மதம். காத்திருக்கும் அந்த நேரத்து மன உளைச்சலை எல்லாம் இந்த டோக்கன் கொடுப்பவளின் வளைந்த செவ்விய இடை வலியின்றி போக்கிவிடும். என்ன ஒரு வளைவு.

கண்களை அங்கிருந்து ஐம்பத்தி சொச்சம் டிகிரியில் வளைக்க ஆஹா… ஊட்டி ஊட்டி வளர்த்திருக்கிறான் அவளின் அப்பன். எவனுக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ என்னும் நடுத்தர வர்க்க பொச்சாவாமையை
நானாக போக்கி கொண்டிருக்கும்போதே
உக்காருங்க… சற்று கிசுகிசுப்பான அந்த கட்டளைக்கு உரிய மரியாதையுடன் அந்த ஆள் அருகில் அமர்ந்து கொண்டேன்.

அந்த ‘இடை’ தன் கண்களால் மொத்த கூட்டத்தையும் ஒருமுறை அளந்துவிட்டு எல்லோர் கையிலும் ஒரு டோக்கனை கொடுத்தது.

எனக்கும் வந்தபோது நான் விஷயத்தை சொன்னதும் அந்த ‘இடை’ டாக்டர் வரட்டும் சொல்கிறேன் என்றபடி போய் விட்டது. தப்பு… டோக்கன் வாங்கும் சாக்கில்  ஒருமுறை அந்த இடையழகியின் கையை சுடச்சுட தடவி பார்த்திருக்கலாம்…

அந்த கூட்டத்தில் ஒரு பதினைந்து பேர் இருக்கலாம். அதில் ஏறத்தாழ பாதி நபர்கள் மனநோய்காரர்கள்.

அந்த நோய் என்ன? என்ன செய்யும்? எப்படி வந்தது? தெரியாது. அதன் பெயர் கூட தெரியாது. அவர்களுக்கும் அதன் பின்னணி பூர்வீகம்  இப்படி எதுவும் சொல்லப்படாது.

நோயின் உக்கிரத்துக்கும் வேகத்துக்கு ஏற்ப கரண்ட் முதல் வண்ண வண்ண மாத்திரைகள் வரை தரப்படும். ஆண்டுக்கணக்கில் சாப்பிட்டு அரைத்தூக்கத்தில் வாழ்ந்து மூளையின் கெமிக்கல்கள் சமனப்படும் வரை வந்து செல்ல வேண்டும்.

இறுதியில் அவர்கள் தங்களுக்குள் தாங்கள் நிம்மதியாய் இருந்த அழகான அந்த உலகம் சின்னாபின்னமாய் அழிக்கப்பட்டு மீண்டும் இந்த யதார்த்த உலகுக்கு அழைத்து வரப்படுவர். சம்பாதிக்கவோ விட்ட இடத்திலிருந்து புணரவோ போகலாம்..

என்னை பக்கத்தில் அமர சொன்ன ஆள் கொஞ்சம் விவரமான ஆள் போல்தான் இருந்தார்.

வெள்ளை சட்டை. நீல நிறத்தில் பேண்ட். இடது மணிக்கட்டில் பழைய டைட்டன் வாட்ச். அதில் நேருவின் உருவம் போல் ஒரு படம் தெரிந்தது.

கையில் ஒரு நீயூயோர்க்கர் மாகசின் இருந்தது. என் வாசிப்பு அறிவை காட்டவும், நானொன்றும் பைத்தியம் இல்லையாக்கும் என்று நிறுவவும் கழுத்தை ஒட்டகம் போல் ஒடுக்கி அந்த இதழை உற்றுப்பார்க்கும் ஒரு முயற்சியை செய்யும் பொழுதில் அவர் புன்னகையுடன் என்னிடம் காட்டினார்.

பழைய நீயூயோர்க்கர் இதழ் அது. ரொம்ப பழையதாக கூட இருக்கலாம். இது மரை கழண்ட கேஸ் இல்லை என்று நேரம் கடத்த என் பேச்சு துணைக்கு வைத்துக்கொள்ள முடிவு செய்தேன். அதே நேரத்தில் பாண்ட்ஸ் பவுடர் வாசனையுடன் ‘இடை’ வருவதும் போவதுமாய் இருந்தது எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

“இந்த மாகசினை நான்  கடந்த இருபது வருடமாக கீழே எங்கும் வைக்காமல்  இந்த கைகளில் மட்டும் வைத்திருக்கிறேன் என்றால் உங்களால் அதை நம்பமுடியுமா” என்று புன்னகைத்தார்.

எனக்கு ‘திக்’கென்று இருந்தது.

பார்க்க நன்றாகத்தானே இருக்கிறார்? பின் என்னவாக இருக்கும் என்று யோசித்தபடியே சார் பெயரென்னவோ என்றேன் அவரிடம்.

புதுப்பூனை புது எஜமானனை வாலை உயர்த்தி நோட்டமிடுவது போல் என்னை பார்த்தார். பின் செருமிவிட்டு மூக்கு கண்ணாடியை ஏற்றி விட்டார். தலையை தாழ்த்தி பேச ஆரம்பித்தார்.

“பெயரை விடுங்கள்… எனக்கொரு டிஃபரெண்ட் ப்ராபளம்” என்றார்.

பேசும்போதே பாய்ந்து மேலே விழுந்து பிடுங்கும் லட்சணம் அவரிடம் தெரியவில்லை என்றாலும் பிரச்சனை வந்தால் வாசல் பக்கம் விழுந்தடித்து ஓட ஏதுவான இடத்தில்தான் நாம்  வாகாய் அமர்ந்துள்ளோம் என்னும் ரெட்டை தைரியத்தில் அவரோடு நான் தொடர்ந்து பேச முடிவெடுத்தேன்.

உங்கள் பிரச்சினை என்ன? என்றேன்.

நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி முன் உங்களை நீங்கள் பார்க்கும்போது தெரியும் உங்கள் உருவத்தை பிம்பம் என்றுதானே சொல்வீர்கள்?

ஆம். உண்மையும் அறிவியலும் அதே.

அந்த பிம்பம் அல்லது அந்த பிரதிதான் உண்மையான நீங்கள். ஆனால் கண்ணாடியில் தெரியும் உங்கள் பிம்பமோ யதார்த்த உலகில் இருப்பது போல் உங்களை நம்ப வைக்கிறது. இப்படி ஒரு வலைப்பின்னலில் நீங்கள் சிக்கி இருப்பது உங்களுக்கு தெரியாதவண்ணம் உங்கள் மனம் படைக்கப்பட்ட பின்னப்பட்ட ஒன்று என்றார் அந்த நீயூயோர்க்கர்.

ஓ.. அதற்குதான் டாக்டரிடம் வந்தீர்கள் போலும் என்றேன் அப்பாவியாய்.

அது மெல்ல ஒரு புன்னகையை தருவித்து என்னை உற்று பார்த்தது.

ஆம்… அதற்குதான்… ஆனால் என்னுடைய இந்த பிரச்னைக்கு டாக்டரை சந்திக்க போவது நான் இல்லை…

பின், வேறு யார்? என்றேன் நான்.

நீங்கள்… என்று அதிர வைத்தார் அவர்.

நானா…? ஆனால் நான் இங்கே வந்திருக்கும் விஷயம் வேறு ஒன்றுக்கு. எஜமானனின் கட்டளைக்கு பணிந்து வந்திருக்கிறேன். இன்னும் விவரமாக என் நோக்கம் ஒரு செய்தி தொடர்பான ஒன்று. நான் ஒருவரின் தூதுவன் என்று கித்தாப்பாக முடித்தேன்.

ஆம்… நாம் தூதுவர்கள் மட்டுமே. ஏனெனில் இங்கு உண்மையான நிலையான ஒரே ஒரு விஷயம் மட்டுமே உண்டு. அது நீங்கள் என்பது நான் மட்டுமே அதுபோல் நான் என்பதும் நீங்கள்தான் என்றார்.

இது ஒரு வினோதமான ஆள். அவர் மனம் நோகாது அன்பாய் பேசிவிடலாம். இன்னும் ஒரு மணி நேரத்தில் கூட டாக்டர் வரலாமே… நீயூயோர்க்கர் பையில் பச்சை கலர் டோக்கன் அட்டை இருந்தது.

எப்படி சார் என்று அவரிடம் அப்பாவியை போல் கேட்டேன். இடை எதிர்த்த சேரில் அமர்ந்து இடது கையை தூக்கியபடி குமுதம் படிக்க என் உடம்பில் ரத்தம் பாய்ந்தது. 32?

காரணங்கள் என்பது ஒரே நிலையாய் இருப்பது உண்டா? இது நீயூயோர்க்கர்.

இல்லை. இது நான்.

தத்துவம், சிந்தனை, கொள்கை, கோட்பாடுகள், தர்மங்கள், ஒழுக்கம், நாகரீகம் இப்படி எதுவும் மனிதர்களுக்கு நிலையானது அல்ல மேலும் இடத்துக்கு இடம் காலந்தோறும் மாறும். சரியா?

ஆம் என்றேன். வாசலை பார்த்தபடி.

அதுபோல் தங்கள் வாழ்நாளில் ஒரு குறுகிய நேரத்தில் மனிதர்கள் தங்களை அறியாமல் ஒருவருக்கொருவர் மாற்றி கொண்டு விடுவார்கள்.

அதன்படி இப்போது நீங்கள் என்பது நான் என்று அவர் சொல்லி முடித்தபோது இதை இப்படியே விடக்கூடாது என்று முடிவு செய்தேன்.

உங்களால் இதற்கு ஆதாரம் தர முடியுமா?

இன்று நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோம் என்று உங்களால் ஆதாரம் தர முடியுமா என்றார் நீயூயோர்க்கர்.

நாம் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாது வாக்களிக்கிறோம்.

போதுமா?

வேறு?

உங்களுக்கு ஏற்படும் அல்லது உருவாக்கப்படும் நியாயமான சிக்கலை, தொந்தரவை சீர் செய்ய எத்தனை விதமான அலைச்சல்களில் உயிர் விட வேண்டி இருக்கிறது? எத்தனை மன்னர்களை பணத்தை கொண்டும் பல்ளிளிப்பை காட்டியும் யோனியால் உபசரித்தும் நாம் வணங்க வேண்டிய நிலை?

அப்போது எனக்கு நீயூயோர்க்கர் கொஞ்சம் விஷயமுள்ள ஆள்தான் என்று பட்டது.

அந்த ஆள் ஒருவேளை நீ நான் என்று குழப்பிவிட்டு மெஸ்மரைஸ் செய்து ஆதார் உள்பட அனைத்தும் கேட்டு விடுவாரோ என்ற பயம் வந்தது. நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

இதனால் என்ன செய்யலாம்? என்னதான் செய்ய முடியும்? என்றேன்.

ஒன்றும் இல்லை. ஒரு தகவல் மட்டுமே இது சொன்னேன் என்று பெருமூச்சு விட்டார்.

நாம் யாரையெல்லாம் சந்திக்கின்றோமோ அவர்கள்தான் நாம். நாம் உண்மையில் அடுத்தவருக்கு மட்டுமே வாழ்கிறோம். இதை சொல்லி புரிய வைப்பதற்கு முன்பே என்னை பலவந்தமாக இங்கே கொண்டு வந்து சேர்த்து விட்டனர் என்றார்.

அதுவும் நல்லதுதானே என்று சொல்லவும் அவர் முகம் சற்று மாறி விட்டது.

டாக்டரிடம் நீங்கள் என்ன விசயமாக வந்து உள்ளீர் என்றார் நீயூயோர்க்கர்.

மீண்டும் வந்த விஷயத்தை சொன்னேன்.

நீங்கள் அப்போது உங்கள் எஜமானன் வடிவில் வந்து உள்ளீர்கள்… ஆனால் நீங்கள் வரவில்லை என்பது ஒரு தர்க்கத்தில் சரியா என்றார்.

ஓரளவு சரியாய் பட்டது. அது சரிதான்.

இப்போது முதல் நீங்கள் என்பது நான் என்று மாறி விட்டீர்கள். ஏனெனில் இங்கே இத்தனை நபர்களை தாண்டி என்னிடம் மட்டும் நீங்கள் வரக்காரணம் அதுதான். இனி நான் முதலில் டாக்டரை சந்தித்தால் அவர் நான் ஆகி விடலாம். அல்லது நான் டாக்டராகி விடலாம்… என்றார்.

நான் வாயை இறுக்க மூடிக்கொண்டேன்.

இனி பேசினால் நீயூயோர்க்கர் என்னை எந்த முடிவுக்கும் கொண்டு செல்ல முடியும் என்பதால் அவர் என்னை பார்க்கும் போது அவர் எதை சொன்னாலும் நான் அதை அப்படியே மறுப்பு இன்றி அனைத்தையும் ஏற்றுக்கொள்வது போன்ற பாவனையை வைத்துக்கொண்டேன். வேறு இடத்துக்கு இருக்கை மாறி போவதும் நாகரீகமான ஒன்றாய் இல்லை.

விட்டத்து பேன், பல்லி என்று பார்வையை மாற்றி கொண்டேன். ஆனால் அவர் என் காதுமடல் பக்கம் மட்டுமே உற்று பார்ப்பது போன்ற குறுகுறு. குறு குறு. குறு குறு.

நீயூயோர்க்கர் சொன்னதில் என்னவோ அர்த்தம் இருப்பது போல்தான் என் மனம் தனியே யோசிக்க ஆரம்பித்தது. அவரின் ஒவ்வொரு வார்த்தையையும் பிய்த்து ஒட்டி கொண்டது என் மனம்.  எனக்கும் பொழுதும் போக வேண்டுமே?

மனதை அதன் போக்கில் போகும்படி விட்டுவிட்டு இடை தன் கையை தூக்குமா என்று ஒரு கண்ணிலும் நீயூயோர்க்கரை ஒரு கண்ணிலும் வைத்துக்கொண்டேன்.

அப்போது டாக்டர் உள்ளே வந்து லேசாய் நோட்டமிட்டபடி அறைக்குள் செல்லவும் இடையும் பின் தொடர்ந்து உள்ளே புகுந்தது. என்ன ஒரு பின்னழகு. பத்து நிமிடங்களை என் வாழ்வில் இழந்தேன்.

முதலில் என்னை இடை அழைக்க நான் நீயூயோர்க்கரிடம் சிநேகமாய் அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு உள்ளே சென்றேன். அவர் என்னை பார்த்து விசித்திரமாக ஒருமுறை கண்ணடித்தது என்னவோ போல் இருந்தது.

அந்த அறை பார்வைக்கும் மனதுக்கும் வேறு வேறு போல் தெரிந்தது. மூச்சு முட்டும்
ஃபென்தடால் மணம் அறையில் கமழ்ந்து ஒரு கணம் தீவிரமாக தலைசுற்றி நின்றது.

டாக்டர் அவரின் தெய்வீக புன்னகையை உலவ விட்டார். தொடர்ந்து ப்ளீஸ் ஸிடவுன் என்றார். நொடிகளில் சில ஒடிந்தன.

டாக்டர் புதுப்பூனை புது எஜமானனை வாலை உயர்த்தி நோட்டமிடுவது போல் என்னை பார்த்தார். பின் செருமிவிட்டு மூக்கு கண்ணாடியை ஏற்றி விட்டார். தலையை தாழ்த்தி பேச ஆரம்பித்தார்.

உங்கள் எம் டி எனக்கு மதியமே போன் பண்ணி சொல்லிட்டார். லெட்டர் கொண்டு வந்து இருக்கீங்க ரைட்? என்று சிரித்துவிட்டு உங்க பேர் கூட சொன்னார் மறந்து போச்சு சாரி… உங்க பேர் என்ன?

“பெயரை விடுங்கள் டாக்டர்… எனக்கொரு டிஃபரெண்ட் ப்ராபளம்” என்றேன்.

நான் அவள் வாட்ஸாப்

திஸ் இஸ் மாய் வாட்ஸாப் நம்பர் பேபி என்று மிலா குல்கர்னி கொஞ்சலாய் என்னிடம் சொன்னபோது…
எனக்கும் அது ஒரு நிலாக்காலம்.

தொழில் முறை சார்ந்து தொலைபேசியில் முகம் காணும் தேவைகள் அற்று தொழிலோடு நட்பும் பாராட்டி தகவல்கள் பகிர்ந்த காலம். பேசி களித்த காலம்.

அவள் சொன்ன வாட்ஸாப் ஆப் என்பது முதலில் என்னவென்றே எனக்கு தெரியாது.

கம்ப்யூட்டரில் ஜிமெயில் ஓரத்தில் தக்குனூண்டு ஸ்க்ரீனில் சாட் செய்யும் பொன்னான நாட்கள் அவை.

அந்த சாட்டில் போட்டோ வீடியோ என்று ஒலியும் ஒளியும் அனுப்பவோ ,கேட்கவோ முடியாது. ஆனால், ஆகையால் வாயுள்ள பிள்ளை பிழைத்து கொண்டிருந்தார்கள்.

என் நண்பன் காமாட்சியிடம் இந்த வாட்ஸாப் பற்றி கேட்டதும் துல்லியமாக சொல்ல ஆரம்பித்தான். ஆரம்பிக்கும் முன் இப்ப அது எதுக்கு உனக்கு என்று மறக்காது கேட்டான்.

குல்கர்னி பற்றி சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு நானும் அவ உன் தங்கை மாதிரிடா என்பதை நாசூக்காக பவ்யமாக சுருக்கென்று அவன் மனதில் குத்தும்படி சொன்னேன் அவன் புகை அரும்பும் சின்ன காதுக்குள்.

உனக்கு இங்கே இருக்கிற வடமதுரைக்கு போக வழி தெரியாது உனக்கு இவள் எப்படிடா பழக்கம் என்று ஆரம்பித்து பிராண்ட ஆரம்பித்தான்.

ஒரு நாள் மாலையில் எல்லாவற்றையும் அவனிடம் உடைத்து சொல்லி விட்டு எப்படியும் எனக்கு அவளை கல்யாணம் பண்ணிட்டா போதும் என்று முடித்தேன்.

அப்ப ஒரு ஸ்மார்ட் போன் வாங்கிறுவோம் என்று அவன் கூறியதும் வயிற்றில் லேசாய் புளி கரைத்தது.

விண்டோஸில் புலியாகவும் லினக்ஸில் கழுதைப்புலியாகவும் வலம் வந்த எனக்கு அண்டிராய்டு என்ற சொல்லே புதிது.

கூடவே அப்ளிகேஷன், ப்ளேஸ்டோர் என்றெல்லாம் சொல்ல… இரு முதலில் போன் எவ்ளோ என்றதும் அது ஆவும் 12000 ரூவா வரைக்கும் அப்படியே நெட் போட்டோம்னு வச்சுக்க எல்லாத்தையும் இழுத்து போட்டு பாத்துடலாம் என்றான்.
இழுத்துப்போட்டு என்று சொல்லும்போதே அவனுக்கு எச்சில் தெறித்தது.

இரவில் தூங்கும்போது எனக்கு இது ஏதோ வினையில் முடியக்கூடும் என்ற பயம் மிரட்டி கொண்டே இருந்தது.

குல்கர்னியின் அந்த தேன் குரல் காதில் கேட்டுக்கொண்டே இருக்க முடிவில் போன் வாங்க முடிவெடுத்து விட்டேன்.

நான் ஒரு கல்லூரியில் லேப் அசிஸ்டெண்ட். கல்லூரியில் வேலையே பார்க்காது இருந்தாலும் சம்பளம் வந்துவிடும். மூக்கால் அழுதுகொண்டே ஏழாயிரம் ரூபாயை அந்த சைனா போனுக்கு தாரை வார்த்தேன்.

அதில் என்னவெல்லாமோ டவுன்லோட் செய்து இறுதியில் வாட்சப் அப்ளிகேசனை ஐகான் மூலம் முன் திரையில் கொண்டு வந்து நிறுத்தினான்.

சூப்பர்டா மாப்பிளே.. இனி அசத்தல்தான். இப்ப நீ அவளுக்கு ஒரு ஹாய் சொல்லு… என்ன போன் னு கேட்டா ஆப்பிள் னு சொல்லு என்றான்.

ஆப்பிள் னா?

அது ஒரு ஸ்மார்ட் போன். அது வாங்கற காசுக்கு உன் தாத்தா மூணு சென்ட் நிலம் வாங்கிடும்… பொத்திட்டு நான் சொல்ற மாதிரி அவளுக்கு மெசேஜ் அனுப்பு.

குல்கர்னி….

அவளோடு பேசிக் போனில் பேசியது உண்டு. ஹிந்தி தாய் மொழி. எப்படியும் அவள் அரைகுறை ஆங்கிலத்தில் பேசி விடுவாள். இரவில் பாட்டு பாடுவாள்.

ஹிந்திப்பெண்கள் அனைவரும் பாடி விடுகிறார்கள். இனிய குரல். எனக்கோ இளையராஜாவை விட்டால் வேறு ஒன்றும் தெரியாது. எங்கள் ஊர் டீக்கடை, தியேட்டர் எங்கும் தமிழ்ப்பாட்டுதான்.

குர்பானி, மேரே நாம் ஜோக்கர், ஷான்,டிஸ்கோ டான்ஸர் இப்படிப்பட்ட வெகு சில படங்கள் மட்டுமே நான் பார்த்தது உண்டு. தியேட்டரில் மூன்று மணி நேரத்தில் இரண்டு தடவை மூச்சா வந்து விடும். அதுவும் ரிலீஸ் ஆகி பெரியகுளம் வருவதற்குள் பாவம் ரீல் பெட்டிக்கு மூச்சு திணறி விடும்.

இந்த ஷாருக்கான், சல்மான்கான் வந்ததும் கொஞ்சம் பரவாயில்லை.

அவள் ஒருநாள் இரவு ஏதோ ஒரு பாட்டை பாடிக்கொண்டிருக்கும் போது சற்றும் அர்த்தம் புரியாமல் போனை காதில் வைத்து எரிச்சலை அடக்கிகொண்டு கேட்டேன்.

அவள் பாடி முடித்ததும் ஹௌ இஸ் ஸ்ரீ? என்றாள்.

வாவ்…சூப்பர்ப்…

(இந்த வார்த்தையை காமாட்சி சொல்லி கொடுத்து இருந்தான். அப்பப்ப இதை சொல்லிட்டே இரு. பிக்கப் பண்ணும் போது இதுவெல்லாம் முக்கியம். மார்வலஸ், பெண்டாஸ்டிக் கூட நடுவில் போட்டுக்கோ)

தேங்யூ டார்லிங்…

டார்லிங்… டார்லிங்… இந்த வார்த்தையை அவள் சொல்லிக்கேட்க என்ன நான் இன்னும் என்ன வேண்டுமானலும் செய்யலாம்.

உங்களுக்கு பிடிச்ச பாட்டு சொல்லு ஸ்ரீ.
பாடறேன் என்று (இங்கிலிஷ்) கேட்டதும்
வாய் உளறி பால்ய நினைவில் மெஹபூபா மெஹபூபா தெரியுமா என்று கேட்டதும்தான் நாக்கை கடித்து கொண்டேன்.

அவளும் ஓ…நைஸ் சாங் என்று என்னவோ ஒரு மெஹபூபா பாடினாள்.
வாழ்க ஹிந்தி பாடல்கள்.

வாட்ஸாப்.

எண்கள். தகவல்கள். படங்கள்.குரல்கள்.
ஒழுங்காய் தலை கத்தரித்து டை அடித்து விட்டு சில பல போட்டோக்கள் அனுப்பினேன். பரிமாறி கொண்டோம்.

ஒருநாள் அவளிடம் என் காதலையும் சொல்லி நாங்கள் திருமணம் வரை சென்றோம்.

பின்னர் பெண்களுக்கே உரிய சில பிகுவை அவள் செய்து முடித்து கொண்டதும் முடிவில் ஏற்று கொண்டாள். நாளொரு வண்ணம் பொழுதொரு போனுமாய் ரியல் தம்பதி போலவே வாழ ஆரம்பித்தோம்.

அவள் அனுப்பிய செல்ஃபி படங்களில் நான் மெய் சிலிர்த்து காமாட்சிக்கும் அனுப்பினேன். பொறாமையில் வெந்து சாகட்டும் என்ற எண்ணத்துடனே…

உன் அண்ணி எப்படிடா? அந்த முகத்தை பாரு. அப்படியே சின்ட்ரெல்லா மாதிரி.

நீ சின்ட்ரெல்லாவை நேரில் பார்த்து இருக்கியா?

இல்லை…

இருக்கட்டும். அவளும் நீயும் இங்கிலிஷ் அரைகுறை… எப்படிடா மிச்ச காலத்தை ஓட்டுவே.. பே பே னு எப்படி பேசவே?

இந்த இடத்தில் என் விஞ்ஞான மூளையை பயன்படுத்தி சில ட்ரிக்ஸ் கண்டுபிடித்து இருந்தேன். அவளிடமும் அது பற்றி பேசி இருந்தேன். அதுவெல்லாம் நண்பனிடம் சொன்னபோது அசந்து விட்டான்.

6 மாசம் போதும்டா… அப்பறம் எந்த மொழியும் பேச முடியும்.

குல்கர்னி போனில் வந்த போதெல்லாம் பேபி, டியர்,டார்லிங், ஸ்வீட்ஹார்ட்,மேரே ஜான்… இன்னும் என்னென்னவோ சொல்லி என்னை அழைப்பாள்.

கடைசிவரை என் பெயர் என்பது அவள் வாயில் வரவேயில்லை. ஒருமுறை மிகவும் துன்புறுத்தி அவளை சொல்ல வைக்கும்போது அவள் சொன்னது… சரி அது வேண்டாம் இப்போது.

அவள் தன் உணவு, உடை, கலாச்சாரம் என்று பலவும் பேசுவாள். நானும் என் பங்குக்கு நெட்டில் கிடைக்கும் சகல ஜாதி விஷயங்களையும் போர்வேர்ட் செய்து விடுவேன். தமிழன் லேசான ஆள் இல்ல.

வாட்ஸாப்பில் பேசும் பாவனைகள் என்பது மிகவும் முக்கியம்.

நாம் டிவியில் வடிவேலு ஜோக்கை பார்த்து ஸோன்பப்டி சாப்பிட்டு கொண்டு இருந்தாலும்… வாட்ஸாப்பில் எதிர்முனை நபர் அழுது புலம்பி மூக்கு சிந்தினால் நாமும் சிந்த வேண்டும். முடிந்தால் பலமாய் சிந்த வேண்டும். இன்னும் முடிந்தால் இதற்கிடையில் சில கார்டுகள் அனுப்ப வேண்டும். அதுவும் வேலை வெட்டி இல்லாத பலர் விதம் விதமாக வரைந்து வைத்து உள்ளனர். நெட்டில் கிடைக்கும் அதை அள்ளி விட வேண்டும்.

இந்த எமோஜி என்னும் பொம்மை போட தெரிந்தால் போதும். அதுக்கு மார்க்கெட்டிங் லெவல் வேறு. பெண்களை ஆண்களும் ஆண்களை பெண்களும் இப்படி சென்டிமென்டில் தாக்கி வறுத்து எடுக்க யூட்டுப்பில் பல ரகத்தில் யோசனை சொல்பவரும் உண்டு.

பலவீனமான நேரத்தில் நேக்காய் நழுவி ஓடவும் வேண்டும். அதற்கும் பல உத்தேசமான பொய்கள் இருக்கிறது.

நாங்கள் தம்பதியை போல் பேசும்போது அவளிடம் நச்சரிக்கஆரம்பித்தேன்.
எப்போ புனே வரட்டும் என்று கேட்க ஆரம்பித்ததும் அவள் கிட்டத்தட்ட ஒரு ஏழு மாதம் கால அவகாசம் கேட்டாள்.

அதற்கென்ன… அதுவரை நாம் இப்படி பேசுவோம் என்று சொல்லிவிட்டு நான் பேசிக்கொண்டு இருந்தேன். இருந்தாள்.

நான் அப்போதே சுதாரித்து இருக்க வேண்டும். விதி. விட்டு விட்டேன்.

கதை முடிந்தது.

இந்த கதையும்தான்.

வழக்கம்போல் என் அண்ணன் தெய்வம். மறுக்க முடியவில்லை என்று ஒரு சேட் பையனுடன் நடந்த நிச்சயதார்த்த போட்டோவை அதே வாட்ஸாப்பில் எனக்கு அனுப்பி இருந்தாள்.

வாழ்க வளமுடன்.

எங்கிருந்தாலும் வாழ்க. குயிலை பிடிச்சு கூண்டில் அடைச்சு… பாடி முடித்தேன். எத்தனை பேருக்கு பாடி இருக்கிறேன். பழகின ஒன்றுதானே இதுவெல்லாம்.

கல்யாணம் ஆகி அவளும் என்னை மறக்காமல் ப்ளாக் செய்து விட்டு போய்விட்டாள். இரண்டு வருடம் ஓடி விட்டது.

நேற்று நான் என் போனை ரீசெட் செய்து பின் வாட்ஸப் அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் புதுப்பித்தபோது ஆஹா… மிலா குல்கர்னி. கள்ளி… அவளும் செய்திருப்பாள் போலும்.

அவள் முகம் மட்டுமே பார்த்த எனக்கு அதிர்ச்சி. கொஞ்சம் உப்பி. மேடுகள் திசை மாறி. கையில் ஒரு குழந்தையுடன்.

என் நண்பனுக்கு அந்த படத்தை அனுப்பி கேட்டேன். எப்படிடா இவ இப்படி மாறிட்டா?
நான் இன்னும் அப்படியேதானே இருக்கேன். இவ முகம் கூட கொஞ்சம் கருப்பா அடையாளமே மாறி இருக்கா? எனக்கு அனுப்பின அந்த பழைய போட்டோவில் இப்படி இருக்க மாட்டாளே?

விடுடா. அப்போ அவ தன் போட்டோவை கொஞ்சம் மாத்தி அனுப்பி வச்சு இருப்பா.
அதுக்கும் இப்ப நிறைய அப்ளிகேஷன் இருக்கு. அது வச்சு மாத்தி இருக்கலாம்.

டேய் காமாட்சி….

சொல்றா…

தப்பிச்டேண்டா நான்.



             🎃🎃🎃🎃🎃

கருப்பு கடல்

                            (🔞)

டச்சு குப்பத்தில் அன்று காலை எப்போதும் போல் இல்லாது கடல் காற்றில் கவிச்சி வாடை ஈரத்தை மினுமினுக்க வைத்தது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கே செல்லும் ரோட்டில் இருந்து நீளமான மண் பாதையில் அன்ன நடை போட்டாலும் அங்கு போகமுடியும்.

இசக்கியின் படகுக்கு பின்னால் கொஞ்ச நஞ்ச பாகத்துடன் அந்த பிணம் கிடந்தது.

இறந்தது உள்ளூர் ஆள் இல்லை என்றதும் வெளியில் இருந்து கொண்டு இரவில் வந்து போட்டிருக்கலாம் என்று பேசிக்கொண்டார்கள்.

போலீஸ் வரும்வரை சுற்றி சுற்றி வரும் நாய்களை விரட்டி கொண்டிருந்தான் சாலமன்.

          🐳🐳🐳🐳🐳

அவன் ஹோட்டல்களுக்கு நாய்கறியும் பூனைக்கறியும் சப்ளை செய்து வருபவன்.
சட்ட விரோதம்தான். ஆனால் அதில்தான் சாலமனுக்கு நல்ல வரும்படி.

அவனை இன்னாசி பார்க்கும் போது கண்களில் நீர் கொட்டுவார்.

“ஏலே மூதி… நாலு பாப்பாக்களை வச்சு நாறத்தொழில் பண்றது பத்தாதுன்னு இப்படி சீவிக்கிரதை போட்டும் இந்த இம்ச படுத்துதியலே நீ வெளங்குவியாலே” என்பார்.

சாலமன் பச்சை கலர் ப்ளஸ் வடிவ டாலரை வாயில் கவ்வியபடி தலை கவிழ்ந்து நிற்பான்.

இன்னாசியிடம் அவனுக்கு மரியாதை உண்டு. அல்லது அப்படி காட்டி கொள்வான்.

போலீஸ் டச்சு குப்பத்துக்குள் மோப்பம் பிடித்து இவனை நெருங்கும் போது இன்னாசிதான் தோள் கொடுப்பார்.

அவர் அதை விரும்பி செய்யாது போயினும் முன்வினை என்று சொல்வார்.

சாலமனின் அப்பா மண்டைக்காடு திங்கள் சந்தையில் பெண்களை பிடித்து மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டில் தொழில் பார்த்து வந்தவர். இசக்கியின் ஒன்று விட்ட அண்ணன்தான் சாலமன் அப்பா.

சாலமன் தாயும் இந்த தொழிலோடு வருமானத்துக்கு அதே தொழிலையும் சேர்த்து பார்த்து வந்தாள். ஒன்று சேர்ந்து
இரவை அவர்கள் பகலாக்கினார்கள்.

தமிழக கேரள எல்லையில் அந்த குடும்பத்தின் இந்த தொழில் அரசியல் பலத்தால் இரு மாநில காவலர்களையும் அண்ட விடாமல் அணுக விடாமல் திணற அடித்தது.

இசக்கிதான் இதற்கெல்லாம் மூளை.

சாலமன் அவரிடம் இந்த தொழில் கற்றபோது வாகாய் அவன் தெருவில் இருந்த பெண்கள் தவிர கூடவே அவன் தங்கையையும் இணைத்து கொண்டான்.

சினிமாவில் வருவது போல் அவனை மாமா என்று எல்லாம் சொல்ல முடியாது. மிராண்டா காலிங் என்ற தொலைபேசி பாஷைக்குள் சென்றால் மட்டுமே அவனை தொடர்பு கொள்ள முடியும்.

நெய்யாட்டின்கரா லாட்ஜில் ஒரு கேரளா எம்.எல்.ஏ வுக்கு தன் தங்கையை அனுப்பி வைத்தான். பின்னர் அவள் ஆடூருக்கு அந்த எம்.எல்.ஏ கூடவே சென்று விட்டதும் சாலமனுக்கு தொழில் கிட்டத்தட்ட படுத்தே விட்டது.

பூதப்பாண்டி கேரளாவில் அடிமாடு அடித்து கொண்டிருந்தான். அவனுக்கு சாலமன் நண்பன்தான். அவன்தான் இரவில் நாய் பூனைகள் வேட்டையாடி அதை கறியாக்கி ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யும் வித்தையை கற்று கொடுத்தான்.

ஒரு நாய் அடித்தாலும் முன்னூறு ரூபாய் கிடைத்து விடும். ரோட்டோர சிக்கன் கடைக்கு பூனையை கொடுத்து விடுவான்.

கடைக்காரர்கள் பக்குவமாய் கோழியுடன் கலந்து போடுவார்கள்.

ஆனாலும் சாலமன் பெண்களை வைத்து தொழில் செய்யவே விரும்பினான்.

“களியக்காவிளை இடுக்கன் தோப்பில் கிராக்கி இருக்குதாவே. சாரிச்சு போனியனா வள்ளிசு ரேட்லே பெண் குட்டி பிடிக்கலாமே. அத்தினியும் கிளி கெணக்கா கிட்டும். ஒன்னுமில்லாதுக்கு ஒரு சோலியாச்சுள்ளே. போய் பார்த்து பேசி யாவரத்தை ஆரம்பியேன். ஒன்னோட பழைய ஆளுங்க அல்லாம் கிளவியா போச்சு. அதுங்களை கஞ்சா விக்க அனுப்பிக்கலாமுள்ள” என்று இசக்கி சொன்னது சாலமனுக்கு புது தெம்பை கொடுத்தது.

சாலமன் களியக்காவிளை போனதும் இடுக்கன் குடிக்கு சென்றான். வழியில் டாஸ்மாக்கில் இரண்டு ஹாஃப் வாங்கி தினத்தந்தி பேப்பருக்குள் சுற்றி மஞ்சள் பை ஒன்றில் வைத்து கொண்டான்.

யாரிடமும் சென்று வழி கேட்காது இசக்கி சொன்ன இடக்குறிகளை மனதால் முகர்ந்து தடம் கண்டு விரைந்தான் சாலமன்.

ஒரு டீக்கடையோடு அந்த ரோடு முடிந்து செம்மண் பாதை அடர்ந்து விரிந்தது. டீக்கடையில் நுழைந்து கஸ்டமர் போல் பேச்சு கொடுக்கவும் பின் விஷயங்களை கறக்கவும் ஆரம்பித்தான் சாலமன்.

பருவொட்டி நாயர் பேருக்குத்தான் டீக்கடை போட்டிருந்தான் என்பதை புரிந்து கொண்டதும் பையில் இருந்த ஒரு பாட்டிலை எடுத்து வெளியில் வைத்து நாயரின் விழிகளை விரிய வைத்தான்.

சாலமன் கேட்காமலே இப்போது எல்லா விஷயங்களும் வந்து விழுந்தன. இசக்கி சொன்னது போலவே காண்ட்ராக்ட்டில் பேசி முடித்தபோது ஆறு பெண்கள் அவனுக்கு கிடைத்திருந்தனர்.

பின் இருவரும் மரங்களை இலைகளை தாண்டி தாண்டி நிழலும் இருளுமாய் விரைந்து பழைய ஓட்டு வீட்டுக்குள் போன போது அவள் இருந்தாள்.

வடிவாய் உயரமாக இருந்தாள். அவள் கையில் ஏதோ ஒரு புத்தகம் இருந்தது. சாலமன் ஆர்வத்தோடு அதை பார்த்தான்.
‘உப்பு நாய்கள்’ என்று மட்டும் தெரிந்தது.

வேய்… படிக்கிர பிள்ளைமாட்டு தெரிதுலே. வம்பாக்கிட போறியலே. நாயரோ… இந்த தொளிலுக்கு ஞான் பழைய ஆளுதானேவே என்றான் சாலமன் நாயரிடம்.

அட…கெழுதை இவோ என்னமோ கத புக் வாசிக்குறா.வெளம்பனம் பண்ணுதியலே. செத்த விரும். வாறேன்…

நாயர் புழையோடும் பகுதிக்கு தட்டியை விலக்கி அவளை இழுத்து சென்றார்.

இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

சாலமன் கையில் அந்த புத்தகத்தை எடுத்து பார்த்தான்.

அட்டையில் உப்பு நாய்கள். லக்ஷ்மி சரவணக்குமார். என்று இருந்தது.

படிக்க விரும்பி நடுவில் ஒரு பக்கத்தை விரித்தான்.

மனதுக்குள் வாசிக்க ஆரம்பித்தான்.

வரிகள் ஓடின. கதை ஒன்றும் புரியவில்லை. இவாஞ்சலின் என்னும் கன்னியாஸ்திரியை சம்பத் விடுதிக்கு அருகில் வைத்து என்னமோ செய்து கொண்டு இருக்கிறான் என்பதை ஓரளவு புரிந்து கொண்டான்.

நிழல் மோதும் போது சாலமன் முகத்துக்கு அருகில் நாயர் சத்தமாய் காற்று பிரித்தான். வசந்தி நீ அண்ணாள் கூட போய்க்கோ என்றான்.

சாலமன் புத்தகத்தை மூடி விட்டு அவளை பார்த்தான். உன் பேர் வசந்தியா என்றான்.
இல்ல என்றாள். யாரும் இங்கே ஊரும் பேரும் சொல்ல மாட்டார்கள்.

அவள் உடுப்புகளை அள்ளி திணித்து கொண்டாள். அவன் கையில் இருந்த புத்தகத்தோடு இன்னும் சில புத்தகங்களை எடுத்து திணித்து கொண்டாள்.

சாலமனுக்கு என்னவோ போல் இருந்தது. தூத்துக்குடி தாண்டி மதுரை தாண்டி அவன் எங்கும் போனது இல்லை. இந்த வேலை செய்யும் தொழிலாளி புத்தகம் படிப்பது வேதனையாக இருந்தது.

நாயர் பக்கம் திரும்பினான். இன்னொரு பாட்டிலை எடுத்து கொடுத்தான்.

நாயர் அவன் நம்பரை வாங்கி கொண்டு காலையில் தக்கலை பஸ் ஸ்டாண்டுக்கு மிச்ச பார்ட்டிகளை அனுப்பி விடுவதாக கூறினான்.

இருவரும் செம்மண் பாதையில் வெயிலில் கிறுகிறுத்து நடந்தனர்.

நம்மட வீட்ல தங்கிகிரியா புள்ளே…

செரி… ஆரூ இருக்காக அவடே.

அம்மை.

அவுக தொழில் பாத்தாவுளா.

பரம்பரை தொழில்….

பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர்.

நீ இப்ப படிக்கிரியா புள்ள. இல்ல ஸ்கோலில் போய் படிச்சிருக்கியா… கொஞ்சம் நெருக்கம் அவர்களுக்குள் வந்து இருந்தது.

கதே படிப்பேன். அப்பேன் அம்மே எல்லாம் மூணாறு டீ எஸ்டேட்ல சோலி பாத்தாக. அங்கேனே பாரிசாதம் னு ஒரு பேரெண்டு. அதுதேன் படிக்க காட்டி சொல்லிச்சு.

சம்பத் சாலமனின் மனதுக்குள் சுற்றி கொண்டு இருந்தான். இந்த புத்தகம் எனக்கு படிக்க தரியாலே?

நீ படிப்பியா?

இல்ல…மாட்டேன். ஆனா இது படிக்க நெல்லா இருந்துச்சு…

வூட்ல வந்து தாறேன்.

கையை சுழற்றி கம்பிக்கு மேல் போட்டு கொண்டான். அவள் கழுத்தை கை உரசியது. அவள் வியர்வையில் இருந்து அணைந்து போன ஊதுபத்தியின் வாசனை வந்தது. பஸ் விரைந்தது.

வீடு வந்த மதியம்.

சாலமன் அம்மா கோழி அடித்து சமைத்து இருந்தாள். இருவரும் அவசரமாக சாப்பிட்டு முடித்து அங்கேயே பக்கத்தில் படுத்து தூங்கினர்.

சற்று நேரம் கழித்து சாலமன் அவள் மீது காலை போட்டதும் சாலமனின் அம்மா சிரித்து கொண்டே வெளியேறினாள்.

🐋🐋🐋🐋🐋

இசக்கியின் வீட்டுக்கு போனபோது அவர் மூங்கிலில் பலூன் சொருகி பீப்பி செய்து கொண்டு இருந்தார்.

கோவிலில் பங்குனி கோடை திருவிழா வரும்போது அதில் பணம் பிரிக்க முடியும் என்று கணக்கிட்டு அவசர அவசரமாய் வேலையில் ஆழ்ந்திருந்தார்.

மோனே, போய்ட்டு சாதிச்சியாலே…

ஆச்சு பெருமை….

காரியத்தில் கண்ணா இருந்துக்க. மின்னாடி மாதிரி இல்ல பொழப்பு…

சரிதான் பெருமை….

இரவு மணக்க ஆரம்பித்தது.

வசந்தியோடு பேச வேண்டும் போல் அவனுக்கு ஆசையாக இருந்தது.

தேவுனு அக்காவிடம் ஒரு சிரட்டையில் ரம் வாங்கி குடித்து விட்டு வசந்திக்கும் ஒரு பாலிதீன் பையில் வாங்கி கொண்டு வீடு நோக்கி நடந்தான்.

🐬🐬🐬🐬🐬

அன்று…

செம்பிரியான் டச்சு குப்பத்துக்கு வந்து விட்டான் என்ற செய்தியை கடல் காற்று வீட்டுக்கு வீடு ஊதிக்கொண்டு இருந்தது.

சாலமன் திகைத்து நின்றான்.

முற்றும் ஒழிந்த பகை அது என்று அவன் நினைத்து இருந்தான். இனி அப்படி அல்ல என்று அவனை கடந்த நிழல்கள் கதறின.

அடியாள்களை சப்ளை செய்வதும் சிங்கப்பூருக்கும் வளைகுடாவுக்கும் குருவிகள் அனுப்புவதும் செம்பிரியான் வேலை.

ஒருமுறை சாலமன் போட்டியாக அதில் தலை கொடுத்த போது வசமாய் சிக்கி கொண்டான். போலீஸ் செம்பிரியானை சேர்த்து கொத்தி கொண்டு போனது.

இப்போது எல்லாம் முடிந்து இப்படி வருவான் என்று நினைக்கவில்லை.

இசக்கி பின் வாசல் வழியாக ஓடி வந்து சாலமன் கையில் பணத்தை திணித்து உடனே ஆரல்வாய்மொழிக்கு ஓடி விட சொன்னதும் சாலமனுக்கு புரிந்து போனது, இனி சிக்கினால் அவன் உயிர் அவனுடையது இல்லை.

பயம் தெறிக்க ஊளையிடும் நாய்கள் சாலையில் மிரள அவன் ஓடினான்.

பஸ் பிடித்து நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டில் இறங்கி ஒரு திட்டில் அமர்ந்தான்.

நள்ளிரவில் மனம் பதைக்க ஒரு யோசனையும் புரியாது நின்றான்.

வசந்தியின் நினைவு வந்தது. வசந்தியின் நினைவு பிடரியில் அறைந்தது.

வயிற்றில் பயமும் காமமும் பின்னிக்கொண்டு சூறாவளியாகி சுற்றி கொண்டே இருந்தது.

ஆனது ஆகட்டும் என்று விடிகாலையில் முதல் பஸ் பிடித்து மண்டைக்காடு போனபோது அடுத்த மினி பஸ் வரும் வரை காத்திருக்க நேர்ந்தது.

வராது என்றார்கள்.

இனி காத்திருக்க ஒன்றும் இல்லை என்று நடக்க ஆரம்பித்தான்.

வசந்தியின் நினைவு அவனை படுத்தி எடுத்தது. ஆற்றாமை பொங்கியது.

மனம் சப்திக்க மறுத்து ஒடுங்கி கிடந்தது. சாலமனுக்கு அன்று முதன் முதலாக ஒன்று புரிய ஆரம்பித்தது.

நிச்சயமாக அந்த புரிதல் முன்பு போல் இல்லாமல் வேறொன்றாய் இருந்தது.

சாலமனுக்கு தன் தங்கையின் நினைவு வந்தது. உன் தங்கை இப்போது ஒரு ரொட்டி போல் இருப்பதாக அவனுக்குள் யாரோ சொன்னார்கள்.

அவன் வேகமாய் நடந்தான்.

🐬🐬🐬🐬🐬

டச்சு குப்பம்.

இசக்கியின் படகுக்கு பின்னால் கொஞ்ச நஞ்ச பாகத்துடன் அந்த பிணம் கிடந்தது.

உள்ளூர் ஆள் இல்லை என்றதும் வெளியில் இருந்து கொண்டு இரவில் வந்து போட்டிருக்கலாம் என்று பேசிக்கொண்டார்கள்.

🐟🐟🐟🐟🐟

ப்ரா

சீ…போடா…

அப்படியொன்றும் இது குற்றமான கேள்வி அல்ல என்பதுதான் என் எண்ணம்.

சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அது அன்றும் சரி நினைத்துப்பார்க்கும்போது இன்றும் சரி கண்ணியமான உடைதான்.

பார்க்க பனியன் போலவே இருக்கும் அந்த வெள்ளை நிற அகலமான முண்டா பாடியை விசாலம் பாட்டி கொடியில் உலர்த்தி இருப்பாள்.

குளிக்கும் முன்பு ஒரு குச்சியில் புடவை ரவிக்கையோடு இதுவும் சர்வ மடியாய் குளியலறைக்கு செல்லும்.

ஸ்வீதாவிடம் எனக்கு கொஞ்சம் அதீத உரிமை உண்டு. அசடுக்கு அதற்கு மேல் நகரத்தெரியாது என்றும் என்னை அவள் செய்து வைத்திருந்த முடிவுக்கு பங்கம் வராமல்தான் நானும் நடந்து கொள்வேன்.

நாம் நிற்கும் இடத்துக்கு மேல் சரியாய் தலைக்கு உச்சியில் உயரமான இடத்தில் யாரேனும் கருவியுடன் வேலை செய்து கொண்டிருந்தால் உருவாகும் ஒரு மன அவஸ்தையை அடைந்தது உண்டா?

எனக்கு உண்டு. அதுதான் இந்த ப்ராவின் நிறம். அதன் நிறம் பற்றிய என் மனதில் எப்போதும் இருக்கும் தடுக்கல்.

பொதுவான வெண்மை நிறம் எனக்கு சற்றும் ஆகாது. சிகப்பு நிறம் பெரும் அச்சத்தை மனதுக்குள் உருவாக்கும். அது காளி தேவியை நினைவுறுத்தும்.

இப்போது என்னென்னவோ நிறங்கள் வந்துவிட்டன. பெயிண்ட் கடைக்காரர்கள் போல்… அதிலும் வினோதமான வடிவங்கள், விகற்பமில்லாத சௌகர்யங்கள்… அறிவியல் வாழ்க.

ஸ்வீதாவிடம் அதிகமாய் ஒன்றும் கேட்கவில்லை. தினமும் கேட்பது போலவே இன்னிக்கு என்ன கலர் ப்ராடி நீ? என்று கேட்டவுடன் சிக்கும் இடத்தில் ஒரு சின்ன அறையோ கிள்ளி வைப்பதோ நிகழ்ந்து சட்டென்று அம்மா இங்கே பாருங்க என்று அடுக்களை பார்த்து கத்துவாள்.

எனக்குள் அமைதி சூழ்ந்துவிடும்.

போடா..ஃபெட்டிஸ்ட் கடங்காரா என்பாள்.

நான் சிரிப்பேன். அவள் சிவப்பாள்.

செல்ஃபி எடுப்பியாடி…டிக் டாக் போட்டுக்கறையே அது என்ன ? நார்ஸீசம் இல்லையா என்றேன் நண்பர் கவினை நினைத்துக்கொண்டு…

சனியனே அதை டெலெண்டா பாக்கணும். நீ இந்த பாடி பிரான்னு…என்று என்னவோ சொல்ல வந்தும் அவள் தனக்குள் சிவந்து போவாள்.

முகத்தில் மூளும் நாணத்தின் சிகப்பை பார்க்க பார்க்க நான் எந்த நாட்டையும் சமர்ப்பிக்க தயார்.

நேத்தே உன்கிட்ட கேட்டேன்….

என்ன ஸ்வீதா…?

எனக்கொரு Pen name வேணும்.

எதுக்கு அது? இப்பவே உன் பெயரே ரொம்ப அழகா இருக்கே.

இல்ல…கொஞ்சம் ரெவல்யூசனா எழுதணும். அதுக்குத்தான்.

புனைபெயருக்கு எங்கே போவேன்? எல்லா தலைவர்களின் பெயர்களையும் புள்ளிங்கோத்தனமாக இன்றைய சினிமா ஆக்கி விட்டது.

இரண்டு தலைமுறைக்கு முன்னரே புரட்சி என்ற சொல்லுடன் எல்லா வினை சொல்லையும் இணைத்து சூடிக்கொண்டு விட்டார்கள். போயும் சேர்ந்தார்கள்.

பழகுதமிழ் கைவிட்டு செந்தமிழில் ஆராய்ந்து எடுக்க விரும்பினால் நாக்கு சுளுக்கி கொள்கிறது.

ஏதேனும் மன்னர் பெயரை போட்டு கொண்டால் சுற்றி வளைத்து ஜாதியை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

ரோபோ, நானோ, டைட்டன், மியூட்டன் என்றெல்லாம் வைத்துக்கொள்ள அந்த அறிவியல் இன்னும் பரவவும் இல்லை. காப்பிரைட் சார்ந்த அவஸ்தைகள் வேறு.

ஸ்வீதா… உனக்கு எந்த மாதிரி பெயர் வைக்கலாம்?

நீயே சொல்லேன்…

ஆங் சென்…

வேண்டாம். அந்த அம்மா இப்போ பிரச்சனையில் இருக்கா…

அம்மாவா…? பெருமூச்சு விட்டேன்.

முன்பு மிக அழகான அரசியல் பெண் தலைவர்கள் யார் யார் என்ற போட்டியில் மியன்மர் ஆங் சான் சூகியும் பங்களாதேஷ் கலேதா ஜியா சிலோன் சந்திரிக்கா குமாரதுங்க பாகிஸ்தான் பெனாசிர் ஆகியோர் ஆசிய அளவில் கடும் போட்டியில் இருந்தார்கள்.

போட்டி என்றால்… அது அந்த காலத்தில் எனக்கும் காமாட்சிக்கும் இடையில் மட்டும்தான்.

வேற எப்படி எதிர்பார்க்கிறே? மெல்ல அவள் தொடையில் கையை வைத்தேன். “இவ்ளோ கனமாவாக பெட்டிகோட் போடுவே..இப்படி போட்டா”…

பேச்சை மாத்தாதே சனியனே…கையை சுண்டி விட்டாள். நல்ல பலசாலி.

கடுப்புடன் என்ன மாதிரி பேர் என்றேன்.

பெயரில் ஒரு கரிஷ்மா வேணும்.

அப்போ காந்த கண்ணழகி னு வச்சுக்க. இப்படித்தான் டிக் டாக் ல ஒருத்தி நேத்து ஒரு பாட்டுக்கு தன்னோட ரெண்டு…

வேண்டாம். அந்த பேர் பிடிக்கலை.

சரி…உன் அப்பா அண்ணா தாத்தா பேர் எல்லாம் ஒண்ணா கலக்கி அதில் நாலே நாலு எழுத்தை அதில் உருவி ஒன்றை உருவாக்கி விடலாம் என்ற யோசனையை உடனே நிராகரித்தாள்…காரணம் அதில் நியூமராலஜி இல்லையாம். இது வேறு.

அப்போ ஆண் பெயர் வைக்கலாமா? சொல்லும்போது ஒலியில் சங்கீதம் மிளிர ஒன்று இருக்கிறது என்றேன்.

என்ன பேர்..?

அழகான மலையாள பெயர் குஞ்சுண்ணி. பிடிச்சிருக்கா? பெரிய கவிஞரும் கூட.

அர்த்தம் என்ன என்றாள் முறைத்தபடி.

சரி வேற முயற்சி செய்யலாம். ஏதாச்சும் நதி, ராகம் இப்படி முயற்சி பண்ணுவோம்.
கங்கைமறத்தி, காவிரிகொண்டாள்…

புடிக்கலை.

புனைபெயர் வைப்பதன் மூலம் வரும் பல சிக்கல்களை அவளுக்கு சொல்ல ஆரம்பித்தேன்.

ஒரு பெயருக்குள் நாம் நுழைந்து அல்லது ஒளிந்து கொள்ளும் போது அதன் மூலமாகவே , அல்லது அதற்காகவே சிந்திக்க வேண்டும். அதாவது அந்த பெயருக்கு சிக்கல், துயரம் என்று எதுவும் வராத வண்ணம். பங்கம் வராதவண்ணம்.

பெண்டாட்டிக்கும் எலிக்கும் பயந்து சாகிறவன் அரசர் பெயரில் நீண்ட நாள் ஒளிந்து கொள்ள முடியாது. புனைபெயர் சிலருக்கு அமைந்து விடும். சிலருக்கு சுமை. உனக்கு அது சுமை என்றேன்.

நீ மட்டும் புனைபெயரில் இருக்க?

புழக்கத்தில் எங்கோ அந்த பெயரை இன்று சந்திக்க முடிகிறது. ஸ்வீதா என்பது உண்மையில் மிக அழகான பெயர் என்றாள்.

அவள் எழுந்து கொண்டாள். ஒரு திருப்தி அவளிடம் இருந்தது.

சரி… நீ என்ன எழுதி இருக்க ஸ்வீதா?

ஒரு சிறுகதை.

முடிச்சிட்டியா…

நாளைக்கு கொண்டு வந்து தரேன்.

சென்றுவிட்டாள்.

மறுநாள்…

***********

ஒரு பத்திரிகையில் வெளி வந்திருந்த கேள்வி பதில் படித்து கொண்டிருந்தேன். நாள் தவறாது எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் சிலரை உன்னிப்பாக கவனித்து அவர்களின் மனநிலை குறித்து கவனமாக ஆராய வேண்டும்.

முக்கியமாக பாஸு, மச்சான், மாப்பு, குருவே என்றெல்லாம் கேள்வி கேட்பவர் நோக்கி இடுகுறி வைப்பார் மனதில் தேங்கி நிற்கும் அவநம்பிக்கை, வழிபாட்டு புத்தி, அடிமைத்தனம், தோல்வி உணர்வுகளை சிந்திக்கவே வினோதமாக இருக்கும்.

அதை நான் படித்து கொண்டிருந்த போது ஸ்வீதா வந்தாள்.

எழுதிட்டேன். இந்தா கதை…

இன்னிக்காவது சொல்லேன். என்ன கலர்?

இதை படி முதலில்… கதை கொடைக்கானலில் நடக்குது.

“மலையின் மீது ஆங்காங்கே பனி போர்த்தி இருந்தது”.

நல்ல ஆரம்பம்டி. கதைக்கு என்ன தலைப்பு வச்சிருக்கே. சொல்லேன்…

கறுப்பு ப்ரா.

மலர் மேகங்கள்

போதும். நாம் பிரிந்து விடலாம்.

கீதா இப்படி சொன்னபோது இன்னும் அதிக அமைதியோடு இருந்தேன். அவளும் அதிக ஆழத்துடன் இருந்தாள்.

நான் காரணங்களை கேட்கவில்லை. அவள் கூர்த்த நுட்பம் கொண்டவள்.
அவள் வாழ்க்கையை கேள்விகளில் இருந்து பிரித்து அதன் வெளியே வாழ்பவள்.

நீங்கள் இன்னும் பேசவில்லை ஸ்ரீ.

கீதுவின் விருப்பம் போல செய்யலாம்.

காரணங்கள் கூட வேண்டாமா?

நாம் நமது மனதையும் ஆசைகளையும் ஆராய்ந்து காதலிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

உண்மைதான் ஸ்ரீ. என் பதற்றங்கள் உங்களை விலக்கி விட வேண்டும் என்னும்போது மனம் மட்டும் தவிக்கிறது.

அவள் பொருளாதாரம் கனவுகள் என்பது பற்றி எல்லாம் பேசக்கூடியவள் அல்ல. அது வாழ்க்கை அல்ல என்பதை புத்தருக்கு முன்பே தெரிந்துகொண்டது போல்தான் நடப்பாள்.

ஏதோ ஒரு தினத்தில் சாயங்கால வேளையில் நான் அவளை பார்த்தபோது அவளிடம் சொன்னது இதுதான்.

உன்னை பிடித்திருக்கிறது.

உங்களையும். எனக்கும்….

இன்று வரை அந்த நிகழ்வை நாங்கள்
விரித்து பேசியதில்லை.

திருப்பி உலர்த்தப்பட்ட மனமாய் இருந்தது இந்த அந்தி. மீண்டும் அமைதியாக இருந்தேன். அவள் எதிரே மட்டும் பார்த்து கொண்டே இருந்தாள்.

ஒவ்வொரு முறையும் நாங்கள் சந்திக்கும் போது அதிக பேச்சின்றி அமைதி மட்டும் அதிகமாய் நிரம்பி இருக்கும். அது எங்களிடையே ஒரு நாய்குட்டியை போல் படுத்திருக்கும்.

பேசிக்கொள்வதை விடவும் ஒருவருக்கொருவர் சுட்டி காட்டிக்கொண்ட காட்சிகள் மிக அதிகம்.

கொதிப்பின்றி மறையும் சூரியனின் விளிம்பின் நேர்த்திகளில் அவள் லயித்திருப்பாள். அவளை நான் பார்த்துக்கொண்டிருப்பேன்.

“அத்தனை பெரிய கோளத்தில் எந்த ஒலியும் இல்லை ஸ்ரீ”.

அது நம்மிடம் பெற்றுக்கொள்ள யாசிக்க நிரூபிக்க எதுவும் கிடையாது கீதா…

சில சமயங்களில் அவளாக என்னிடம் கேட்பது ஒன்றுதான்.

நாம் காதலிக்கிறோமா? அல்லது பொறுப்பை பகிர்கிறோமா?

காதல் என்ற வார்த்தையில் இருந்த அர்த்தங்களில் அனைத்து பொருள் தவறிய சொற்களையும் நாங்கள் நீக்கிக்கொண்டே வந்தோம். பாசப்புலம்பல், பிரிவின் வாட்டம், உருகி தவித்தல் என்பதெல்லாம் எங்களுக்கு கனவிலும் நிறைவேறியது அல்ல.

பரஸ்பரம் தூளியில் படுத்துக்கொண்டு லட்டு ஊட்டி அம்புலி பார்த்து அரவணைத்து கொள்ளும் காதல் பற்றி அவள் ஒருநாள் சிரிப்பாய் சிரித்து கொண்டிருந்தாள்.

“அந்த காட்சியை வடித்து எழுதியவருக்கு நான் கோவை சரளாவின் பெயரில் விருது இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு வழங்கி விடுவேன் ஸ்ரீ”. சிரித்தாள்.


அவளாகவே சொல்லி கொள்வாள்…
நாம் நம்புகிறோம். நம்மிடம் பொறாமை அழுத்தவில்லை. நாம் தவறி விழுந்தால் உடைந்து போகும் ஆசைகளோடு பயணிக்கவில்லை.

தனியான பாதைகள்தான் நம்முடையது. அதில் பளு மிக்க கடமைகள் உண்டு. இவை அனைத்திலும் நாம் நம்மை மட்டும் உணர்கிறோம். காதல் அல்ல அதன் பெயர்.

அவள் இன்றும் அந்தியின் அஸ்தமனம்
பார்த்துக்கொண்டிருந்தாள்.

நாம் பிரிவதில் உங்களுக்கு வருத்தமா ஸ்ரீ

அப்படி எதுவும் இல்லை. ஆனால் ஆளுக்கொரு பதிலுடன் பிரிவதில் எனக்கு உடன்பாடில்லை.

பதில்களும் கேள்விகளும் காதலுக்குள் ஊற்றைப்போல் பெருகுகிறது. வெகுதொலைவில் ஆகாயம் கடலை குடிப்பது போல் மனதை குடிக்கும் காதல் நமக்குள் செத்து போக வேண்டும் ஸ்ரீ.
நாம் எல்லா பெருமைகளுக்கும் இந்த காதலை காரணமாகவோ க்ரீடமாகவோ காட்டிக்கொள்ள கூடாது.

நான் வழக்கத்தை விடவும் அமைதியாக இருந்தேன். கீதாவை நான் சந்தித்து பழகி இரண்டு வருடங்கள் கூட இருக்கும்.

நாம் திருமணம் செய்துதான் சேர்ந்தும் வாழ வேண்டுமா என்றுதான் கேட்டுக்கொண்டிருப்பாள்.
சில சட்ட ப்ரச்னைகளை சொன்னவுடன் புரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.

பிரிவு என்பது வெறுக்கிறோம் என்று ஆகாது அல்லவா?

நம் காதலில் கூட அன்பு என்பது வெறும் சொல்தான். நாம் எந்த தவிப்பிலும் இளகிய உணர்வுடன் வாழவில்லை.

நாம் பிரிந்த பின் நம்மை முழுக்க நிறைப்பது எதுவாக இருக்கும் ஸ்ரீ?

அன்புதான்.

அப்படியா…

நாம் முழு மனிதர்களையும் நேசிக்க முடியாது. அது சாத்தியமும் அல்ல. ஆனால் பிரிவுக்கு அப்பால் எதுவும் அற்ற மனதில் அன்பை காண முடியும். அதற்காகவே அது அங்கு தோன்றுவது போல் நமக்கும் புரிய ஆரம்பிக்கும்.

நாம் பிரிதல் என்பதன் மூலம் நமக்கான கடமைகளில் எப்போதும் நாம் நாமாக இல்லை என்பதை மட்டும் தீவிரமான மனதில் நம்ப செய்கிறோம். அது வலி அல்ல. வெகுதொலைவில் இருப்பதை மனக்கண்ணால் உருப்பெருக்கி பார்ப்பது மட்டும்தான்.

அப்படி காண்பதால் ஸ்ரீ?

காண்பதில் சிந்தனை இல்லை. சிந்தனை இல்லாததுதான் அன்பும் கூட.

கீதா என் கைகளை பற்றிக்கொண்டாள்.

நாங்கள் எழுந்தோம்.





ஒரேயொரு ஜென்மம்

முன்குறிப்பு: இந்த கதை இரவு 1.27 க்கு முடிந்து விடும்.
***÷÷÷÷******

பேருந்து நிறுத்தம்.

இப்போது மணி இரவு ஒன்பது.

எனக்கு வந்த அந்த அலைபேசி அழைப்பில் மெல்லிய தாய்மைக்கலப்பு இருந்தது. நாம் சந்திக்க வேண்டும். வரமுடியுமா? என்று கேட்கும்போது அதை மறுக்க முடியாமல் பேசியவரிடம் முகவரி வாங்கி கொண்டேன்.

இப்போது அங்குதான் போகிறேன்.

சிலர் என்னை நேரே சந்திக்க வருவர். சிலரது வேண்டுகோள்கள் அவர்களை நானே சென்று பார்க்கும்படி தூண்டி விடும். ஆகவே அங்கு செல்லலானேன்.

அப்போது எந்தப்பேருந்தும் வரவில்லை.

காத்திருந்தேன். திருந்தேன். ந்தேன்.

ஒரு எரிச்சல் மனதில் பரவிய அதே நேரத்தில் எந்த சம்பந்தமும் இல்லாது வயிற்றை பிரட்டி குமட்டிக்கொண்டு வந்தது. வாந்தி வருவது போல் சட்டென ஆரம்பித்து சட்டென்று நின்றது. சில சமயம் கடையில் சாப்பிடும் நாட்களில் இப்படித்தான் ஆகிவிடும் எனக்கு.

எதிரில் ஒரு சிறு பையன். பார்க்க குழந்தை மாதிரி இருந்தான். அவன் இரண்டு கைகளையும் பற்றி இறுக்கி வைத்துக்கொண்டு கடந்து சென்றான்.
பா வடிவத்தில் மடங்கிய கையில் இருந்த அந்த வாத்து தெரிந்தது. அது என்னை பார்த்து சிரிப்பது போல் இருந்தது.

ஒரு விநாடியில் நான் அவனை நெருங்கினேன்.

வாத்தை பறித்து தரையில் வைத்து மிக சரியாய் அதன் தலையில் ஷு காலால் நசுக்க ஆரம்பித்தேன்.

அந்த வாத்தின் றெக்கைகள் பட படவென காற்றில் துடித்தன. ரத்தம் வராமல் கிறாக் கிறாக் கென்று கதற அதன் மரணம் விரிசல் விரிசலாய் சிறுவன் முகத்தில் பொறிய ஆரம்பித்தது. அவன் கண்களில் பயம் ஒழுகியது. பின் அந்த சிறுவனின் தலையையும்…

சே… என்ன இப்படி யோசிக்கிறேன்?

************
தெருவில் யாரும் இல்லை. மீண்டும் குமட்டல் வயிற்றுக்குள் உருண்டது. எங்கிருந்தோ மிக மோசமான நாற்றம் நெஞ்சை அடைத்தது. அடுத்த கணம் என்னிடமிருந்தே அதே நாற்றம் வந்தது.

போதும். அந்த இடத்துக்கு நாளை போய் கொள்ளலாம் என்று முடிவு செய்து நடையில் இறங்கவும் அந்த ஆட்டோ வந்து நின்றது.

சார் வாங்க… கடைசி சவாரி…

அந்த ட்ரைவரை பார்த்தவுடன் பிடித்து போனது. அவன் குடிக்கவில்லை. மிக அன்பாய் அழைத்தான். அமர்ந்தேன்.

போகும் இடத்தை சொன்னவுடன் புரிந்து கொண்டான். அந்த சீன டாக்டர் ரொம்ப கைராசிக்காரர்ங்க… என்றான்.

பாதி தொலைவு சென்ற பின் அதே மக்கிய உர வாடை குமட்டி கொண்டு வந்தது. என்னிடம்தான் வந்தது.

என்னப்பா இப்படி ஸ்மெல் என்றேன்.

எங்கே சார்…ஒன்றும் இல்லையே என்று சொல்லும்போதுதான் ஆட்டோ நின்றது.

ஒரு நிமிஷம் சார்… பாத்துடறேன்… இப்போ என்று பின்னால் ஓடினான். நேரம் கடந்து கொண்டே சென்றது.

மெல்ல இறங்கி பின்னால் சென்றேன். சிகரெட் பிடித்து கொண்டு அவன் யாருக்கோ காத்திருப்பது போல நின்று கொண்டிருந்தான். அவன் கண்களில் இருந்து தூசி பறப்பது போல நெருப்பு பொறி பறந்தது. அரவமின்றி நான் அவனை நெருங்கினேன்.

இருள் மட்டுமே ஒரே மிச்சமாய் இருந்த அந்த தெருவில் ஒரு லேம்ப் போஸ்ட் தன் சுவிட்ச் போர்டு வயிற்றை திறந்து வைத்துக்கொண்டு பசியோடு இருந்தது.

அவன் சட்டையை கொத்தாய் கழுத்தோடு இறுக்க பிடித்து மிக வேகமாக இழுத்துக்கொண்டு போய் போஸ்டில் அவன் தலையை முட்டி மோதினேன்.

ஒரே மோதலில் ப்ளக்கென்று ஓடு பிரிந்து ரத்தமும் மூளையும் கொழகொழத்து எனது கையில் வழிந்தது. இன்னொரு முறை செய்து பார்க்க ஆசையிருந்தும் தலை என்று ஒன்றும் அவனிடம் இல்லை.

சார்…

ம்

சார்ர்…

என்ன…

இதான் சார் வீடு. இறங்கிக்கங்க.

பணத்தை வாங்கி கொண்டு திரும்பி செல்ல ஆட்டோவோடு வளைந்தான்.

தம்பி என்று நான் உரக்க கத்தியது அவனை தவிர எல்லோருக்கும் கேட்டது.

இன்று வேண்டாம் என்று நினைத்து கொண்டே அந்த சாலையில் நின்றேன்.

************

இப்போது எனக்கு குமட்டல் பெருகி வாந்தியாகி வந்தது. கன்னங்கரேல் நிறத்தில் வெறும் வெள்ளை நிறத்தில் தலை முடியாய் வாயில் இருந்து பீறிட்டது. நுரை நுரையாய் கக்க ஆரம்பிக்க யாரோ என் தலையை பிடித்து அழுத்தி கொண்டிருந்தனர்.

ஒன்னும் இல்ல சார். பித்தம். வாங்க..
வைத்தியர் உள்ளாறத்தான் இருக்காரு.

உள்ளே…

நேரத்தை பார்த்தேன்.

மொபைலில் மணி பத்து என்று காட்டியது. உடனே பத்து.முப்பது…. உடனே பதினொன்று நாற்பது… உடனே…
மொபைல் போனில் சீக்கிரம் பேட்டரி மாற்றவேண்டும் என நினைத்தேன்.

ஜிங் பௌன் என் பெயர் என்றார்.

வணக்கம். நான்…

நாம் நேற்றே பேசி விட்டோம். உங்களுக்காக காத்திருக்கிறேன் நான்.

சொல்லுங்கள் என்ன விஷயம் என்றேன்.
வரும் வழியில் தோன்றியதெல்லாம் அவரிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

அவரும் நானும் இருந்த அறை மிக சுத்தமாய் வாசனையாய் இருந்தது. ஒரு கிளினிக் தோற்றம் அங்கு இல்லை.
இதமாக காற்று வீசியது.

அங்கேயே இருக்க வேண்டும் என்று தோன்றியதை அவரிடம் மறைக்காது கூறினேன்.

அவர் சிரித்தார். வயோதிகத்தின் உச்சம்.
புருவங்கள் வெண்பழுப்பில் தொங்கி சிறு தாடியுடன் ஒடுங்கி இருந்தார்.

அவரிடம் மீண்டும் கேட்டேன்.

என்ன விஷயமாக அழைத்தீர்கள்?

வாருங்கள். உங்களுக்கு நேரே அவரை அறிமுகம் செய்கிறேன். அப்போது புரியும் என்று அழைத்து கொண்டு போனார்.

வளைந்து வளைந்து பல மாடிப்படிகள் கடந்தோம். இத்தனை படிகளா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

இன்னும் செல்ல வேண்டுமா?

ஆம்…

படிகள் வளர்ந்து கொண்டே இருந்தது. வியர்க்க ஆரம்பித்தது. குமட்டல் வந்தது.

நாம் வேண்டுமானால் பிறகொரு நாள் மீண்டும் சந்திக்க…சொல்லும்போதே
அந்த அறையின் முன் நின்றோம்.

தாழ் விலக்கினார்.

உள்ளே உற்று பார்க்கும்படி இருள்.

சில பலகைகளை யாரோ தூக்கி நிறுத்தும் படியும் மீண்டும் வீசி எறியும் படியான ஓசையும் சத்தமும் காதை அடைத்தது. வயிறு வலித்தது.

இப்போது பளிச்சென்று வெளிச்சம் வந்தது.

கரி பிடித்த சுவர். கரி என்றால் நாள் பட்ட கரி. சுவரெல்லாம் கரிந்து போய் இருந்த குருதி. நான் வெளிறி ஓட நினைத்தேன்.

ஏறி வந்த படிகள் இப்போது ஒன்று கூட இல்லை.

அறைக்குள் யாரோ ஒருவர்.

முழு துணிச்சலும் திரட்டி வைத்தியரிடம் கேட்டேன்.

அது…?

அவள்.

அவள் உங்கள் நாடா? என்றேன்.

இல்லை. தான்செனியா.

என் ரத்தம் உறைந்தது.

நான் முழுக்க புரிந்து கொண்டேன்.

முன்பு நான் எழுதிய கதை நினைவுக்கு வந்தது.

அதில் முடிவில் நான் குற்றம் செய்ததால் சிறைக்கு செல்வதாக கூறி முடித்து இருந்தேன். பொய். நான் எந்த சிறைக்கும் செல்லவில்லை. யாரும் என்னை கைதும் செய்யவில்லை.

கதையில் மட்டும் அல்ல நிஜத்திலும் நியாய தர்மங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த இரண்டும் வணிகத்தின் இரண்டு செல்லாத பக்கங்கள். அறிவுக்கும் மனதுக்கும் நடுவில் தூக்கமின்றி அலைந்து கொண்டிருக்கும் போதை. கடவுளின் காமம் அவைகள்.

அந்த தான்செனிய பெண்ணை நான்தான் கொன்றேன். காரணம் அவளை கொல்ல வேண்டும் என்பது போல இருந்தது. கொன்றேன்.

இப்போது எதற்கு என்னை அழைத்து வந்தீர்கள்? அவள் பெயர் என்ன.?
டேய் யார்ரா நீ என்று அலறினேன்.

என் மூக்கில் சிறிது ரத்தம் ஒழுகியது.
இரண்டு காலுக்கு நடுவில் ஒரு வாத்து விருட்டென்று பறந்தது.

அருகில் இருந்த நாற்காலியில் சரிந்தேன்.

அவள் முகம் நன்றாக தெரிந்தது.

என்னை பார்த்தாள்.

எங்கோ கடும் குரலில் ஒரு பூனையின் கேவல் கிளம்பி என்னை போர்த்தியது. அது மலைப்பூனையின் கேவல் ஒலி.
வயிற்றில் யாரோ பிராண்டிய வலி.

கிழவன் சற்று தடிமனான இரண்டு ஊதுபத்திகள் கொளுத்தினான். இப்போது அதே குமட்டல் வாடை அறையெங்கும் பரவி மூச்சு நெறித்தது.

அவள் வந்தாள் அருகில்.

மிதந்துதான் வந்தாள். உடலில் எந்த ஆடையும் இல்லை. உடலில் மா மரங்கள் முளைத்து முளைத்து மறைந்தன.

அவள் வாயை திறந்து மூடும்போது குவிந்து மேல் உயரும் சுடுகாட்டின் புகை மண்டி கிடந்தது. கரிய மாம்பா வாய் அது.


“சாயனோர வதாக்ஷி நோஅய்”

இதை அவள் சொன்னதும் என் உடலுக்குள் ஆயிரமாயிரம் கத்திகள் மின்னல் வேகத்துடன் மேலும் கீழும் வலமும் இடமும் மின்னலாய் பாய்ந்து பாய்ந்து செருக ஆரம்பித்தன.

என் இரண்டு கண்களும் இறுக்கம் தாளாது வெடித்து சிதறி வெளியேறிய பின் எதிரில் இருந்த கடிகாரத்தில் மோதி ஒரு கணம் வெறித்து விழுந்தன.

அப்போது மணி ஒன்று இருபத்தியேழு.

முகம்

அவர் இன்று மாலை வருவதாக மெசேஜ் அனுப்பி இருந்தார். அவர் வருவதை என் சித்தப்பா உறுதி செய்திருந்தார். சித்தப்பாதான் இந்த ஏற்பாடை முன்னின்று தீவிரமாக்கி வைத்தார்.

நகை விற்ற பணத்தில் கொஞ்சம் முதலீடு செய்ய வேண்டும். வருபவர் முதலீட்டு ஆலோசகர். வரட்டும். சித்தப்பா இந்த மாதிரி விஷயங்களில் கில்லாடி. முதலீட்டு துறையில் ஆர்வம் அதிகம். அனுபவமும்.

சாயந்திரம் அவர் வரலாண்டே…நாலு தபா பேசிட்டேன். நான் நிலக்கோட்டை வரைக்கும் போறேன். நீ அவர் காட்டற எடத்துல கையெழுத்து போட்டுடு. மீதி வேலையை அவர் முடிச்சுக்குவார். எல்லாத்துக்கும் செராக்ஸ் எடுத்து வச்சுக்க. புரியுதா?

சித்தப்பா வெற்றிலையை குதப்பியவாறு திண்ணையில் நழுவிக்கிடந்த செருப்புகளை கவனமாய் போட்டுக்கொண்டு வெளியேறினார்.


சித்தப்பா செல்வது நிலக்கோட்டை அல்ல. அது பக்கத்தில் ஒரு கிராமம். அதில் இருந்து சற்று எகிறி குதித்தால் இன்னொரு கிராமம். அந்த கிராமத்தின் பெயருக்கு முன்னால் கூட G என்ற இனிசியல் கூட இருக்கும்.

அங்கு ஏன் போகிறார் என்று அவரிடம் கேக்க மாட்டேன். சித்தியிடம் அதை விவரமாக கேட்டால் விக்கி விக்கி அழுவாள். என் அப்பா இந்த மாதிரி விஷயங்களை சித்தன் போக்காய் பார்ப்பார். நான் சிவன் போக்காய்.

சாயந்திரம் ஒரு மத்திய ஊரின் மத்திய வயதுள்ள மனிதன் மத்திய சிந்தனைகளுடன் என்ன செய்வானோ அதை செய்து கொண்டிருந்தேன்.

விட்டேத்தியாய் வாசல் படியில் அமர்ந்து இருந்தேன். எதிரில் இருந்த ரேஷன் கடைக்காரர்களும் தராசுக்கு முன்னால் விட்டேத்தியாய் இருந்தார்கள். வணிக கடைகள் நிறைந்த பகுதி. பெண்கள் ஆண்கள் வருவதும் போவதுமான சாலை.

பார்த்து கொண்டிருக்கும்போதே ஒரு ஹெல்மெட் நபர் பைக்கில் இருந்து இறங்கினார். சற்று தொப்பையான தேகம். முழுக்கை சட்டை ஒளிரியது.
காலையில் போட்டிருந்த செட்வெட் கடும்
அலைச்சலுக்கு பின் வியர்வையோடு வேதிவினையாகி பழைய மோர் வாடை ஹெல்மெட்டிடம் இருந்து வந்தது.

ஹெல்மெட்டின் வாய் பகுதியில் இருந்த சின்ன பிளவில் இருந்து என் பெயர் சொன்னதும் கை கூப்பி வீட்டுக்குள் அழைத்தேன்.

கை குலுக்கும் பழக்கம் அப்போதே என்னிடம் இல்லை. வலுக்கட்டாயமாக சிலர் அப்படி செய்யும்போது எரிச்சல் மூளும். ஹெல்மெட் செய்யவில்லை.

முன் ரேழியில் ஒரு கட்டிலில் அமர சொன்னேன். ஆசுவாசமாய் அவர் ஹெல்மெட் கழற்றியதும் சற்று அல்ல முழுக்க அதிர்ந்தேன்.

அவர் முகம் அப்படியே என் முகம் போல் இருந்தது. அதே முகம். அதே மீசை வெட்டு.
அதே மூன்று நாள் தாடி. அதே. அதே.

என் வாய் சற்று பிளந்து இருந்தது. என்னை விட சற்று தாட்டியான உடல். ஆனால் முகம் மட்டும் அப்படியே அசல்.

தன்னிடம் இருந்த பிஸ்னெஸ் பேக்கில் இருந்து நிறைய காகிதமும் புத்தகமும் வெளியே எடுத்தார்.

நான் அவர் பற்றி அறிய ஆவல் கொண்டேன். அறிந்தும் ஆக வேண்டும்.

சார்… உங்க பேரு…

காதில் விழாதது போல் சிரித்தான். தம்பியின் தோற்றம் அல்ல அவர் ஆகவே சிரித்தார்.

உங்கள் சித்தப்பா சொல்லியிருப்பார் அல்லவா…

ஆம்… அசடு வழிந்து முடித்தேன்.

சித்தப்பா இவரின் இந்த முகத்தை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஏன் சொல்லவில்லை. இருந்தும் அவர் ஏன் நிலக்கோட்டை அவசரமாக போக வேண்டும்?
இப்படி ஒரு முகம் அவருக்கு வியப்பை மலைப்பை கொடுக்கவில்லையா அல்லது வேறு எதுவும் இருக்க கூடுமா?

வண்ண வண்ண காகிதங்கள் சர சர வென உருவி கூடவே வழுக்கும் புத்தகங்கள் சேர்த்து கையில் கொடுத்தார்.

இப்போ மியூட்சுவல் பண்ட் ஷேர்ல கொஞ்சம் போடுவோம். அப்பறம் எல்ளை சி. கொஞ்சம் ரெக்கரிங் எப்ஃடி டெபாசிட்ல போட்டுடலாம்.

நாமினி மிசஸ் பேர்ல போட்டுடுவோம். குழந்தைங்க பேர் கூட சேர்த்துருவோம்

சரிங்க சார்…

சைன் பண்ணுணங்க…அவங்க கிட்டையும் சைன் வாங்கித்தாங்க. பிள்ளைகள் மைனர் ஏஜ்ஜா…

எப்படி இந்த முகம் என்னை போலவே இருக்கிறது? அல்லது அந்த முகம் போல் நான் இருக்கிறேன். இதை நேரடியாக கேட்பது அத்தனை நாகரீகமான விஷயமும் அல்ல. எதைக்கேட்டாலும் சித்தப்பா என்று சொல்வதை பார்த்தால் கொஞ்சம் சந்தேகம் வந்தது.

மடக்கி கேட்க வேண்டும்.

மெதுவாக அவரிடம் கேட்டேன். ஏன் சார்…என் சித்தப்பாவை ரொம்ப நாளா தெரியுமா உங்களுக்கு? எத்தனை வக்கிரம் எனக்கு.

நோ. இப்போ ரீசெண்ட் ஆ பார்த்தேன். கார்வி ஆபிஸில்… அப்போ உங்க அட்ரஸ் கொடுத்தார். அப்படியே அங்கே ஒரு சைன் பண்ணிடுங்க.

தன் காரியத்தில் கண்ணாக இருந்தார். எல்லா ஒப்பமும் போட்டபின் அத்தாட்சிகள் பெற்றுக்கொண்டு பிசினஸ் பேக்கில் வண்ணகாகிதங்கள் சரசரவென வந்த வேகத்தில் உள்ளே புகுந்தன.

ஒரு காஃபி சாப்பிடுங்க…

இல்ல சார் இன்னும் ரெண்டு கிளைன்ட் பாக்கணும். அடுத்த தடவை…அப்போது ஒரு புன்னகை. அதுவும் என்னை போல்.

எழுந்தபோது நான் உடைந்து போனேன்.
என் முகத்தில் யாரோ ஒருவர். என் மனைவி கூட இது பற்றி ஒன்றும் கேட்காது தலை குனிந்து உள்ளே போய் விட்டாள்.

ஒருவேளை உலகத்தில் இருக்கும் அந்த ஏழு பேரில் ஒருவரா? இதை முகத்தில் அறைந்தாற் போன்றும் கேட்க முடியாதே…

இன்னும் பத்து நாளில் டிமேட் அக்கோண்ட்
ஓபன் ஆகிடும். அப்போ கால் பண்ணுங்க.
இன்வெஸ்ட் பண்ணிடலாம். நான் கிளம்பறேன் சார். ஹெல்மெட் பூட்டிக்கொண்டார்.

இனி தாமதம் செய்வதற்கு இல்லை.
அவரோடு படி இறங்கியபடி மெள்ள கேட்டேன்.

ஏன் சார்…நம்ம ரெண்டு பேர் முகமும் கிட்டத்தட்ட ஒரே அச்சா அப்படியே இருக்கு நீங்கள் கவனித்தீர்களா? அல்லது நான் கேட்பது தவறென்றால் மன்னியுங்கள்.

ஹெல்மெட்டின் உள்ளே உதடுகள் மெல்ல அசைந்தது. என்னவோ சொன்னார்.
ஹாரன் ஒலிகளில் தெளிவு இல்லை.
பைக்கை முடுக்க நான் ஒதுங்கினேன்.

அடுத்த முறை கேட்டே ஆக வேண்டும்.
செல்வதை பார்த்துக்கொண்டே இருந்தேன். என்ன ஒரு விந்தை இது.

வேகமெடுத்த அந்த பைக் இப்போது தெரு முனையில் திரும்பும்போது வெகு வேகமாய் திரும்பிய லாரியின் கீழே கூழாய் மாறியது.