ஒரேயொரு ஜென்மம்


முன்குறிப்பு: இந்த கதை இரவு 1.27 க்கு முடிந்து விடும்.
***÷÷÷÷******

பேருந்து நிறுத்தம்.

இப்போது மணி இரவு ஒன்பது.

எனக்கு வந்த அந்த அலைபேசி அழைப்பில் மெல்லிய தாய்மைக்கலப்பு இருந்தது. நாம் சந்திக்க வேண்டும். வரமுடியுமா? என்று கேட்கும்போது அதை மறுக்க முடியாமல் பேசியவரிடம் முகவரி வாங்கி கொண்டேன்.

இப்போது அங்குதான் போகிறேன்.

சிலர் என்னை நேரே சந்திக்க வருவர். சிலரது வேண்டுகோள்கள் அவர்களை நானே சென்று பார்க்கும்படி தூண்டி விடும். ஆகவே அங்கு செல்லலானேன்.

அப்போது எந்தப்பேருந்தும் வரவில்லை.

காத்திருந்தேன். திருந்தேன். ந்தேன்.

ஒரு எரிச்சல் மனதில் பரவிய அதே நேரத்தில் எந்த சம்பந்தமும் இல்லாது வயிற்றை பிரட்டி குமட்டிக்கொண்டு வந்தது. வாந்தி வருவது போல் சட்டென ஆரம்பித்து சட்டென்று நின்றது. சில சமயம் கடையில் சாப்பிடும் நாட்களில் இப்படித்தான் ஆகிவிடும் எனக்கு.

எதிரில் ஒரு சிறு பையன். பார்க்க குழந்தை மாதிரி இருந்தான். அவன் இரண்டு கைகளையும் பற்றி இறுக்கி வைத்துக்கொண்டு கடந்து சென்றான்.
பா வடிவத்தில் மடங்கிய கையில் இருந்த அந்த வாத்து தெரிந்தது. அது என்னை பார்த்து சிரிப்பது போல் இருந்தது.

ஒரு விநாடியில் நான் அவனை நெருங்கினேன்.

வாத்தை பறித்து தரையில் வைத்து மிக சரியாய் அதன் தலையில் ஷு காலால் நசுக்க ஆரம்பித்தேன்.

அந்த வாத்தின் றெக்கைகள் பட படவென காற்றில் துடித்தன. ரத்தம் வராமல் கிறாக் கிறாக் கென்று கதற அதன் மரணம் விரிசல் விரிசலாய் சிறுவன் முகத்தில் பொறிய ஆரம்பித்தது. அவன் கண்களில் பயம் ஒழுகியது. பின் அந்த சிறுவனின் தலையையும்…

சே… என்ன இப்படி யோசிக்கிறேன்?

************
தெருவில் யாரும் இல்லை. மீண்டும் குமட்டல் வயிற்றுக்குள் உருண்டது. எங்கிருந்தோ மிக மோசமான நாற்றம் நெஞ்சை அடைத்தது. அடுத்த கணம் என்னிடமிருந்தே அதே நாற்றம் வந்தது.

போதும். அந்த இடத்துக்கு நாளை போய் கொள்ளலாம் என்று முடிவு செய்து நடையில் இறங்கவும் அந்த ஆட்டோ வந்து நின்றது.

சார் வாங்க… கடைசி சவாரி…

அந்த ட்ரைவரை பார்த்தவுடன் பிடித்து போனது. அவன் குடிக்கவில்லை. மிக அன்பாய் அழைத்தான். அமர்ந்தேன்.

போகும் இடத்தை சொன்னவுடன் புரிந்து கொண்டான். அந்த சீன டாக்டர் ரொம்ப கைராசிக்காரர்ங்க… என்றான்.

பாதி தொலைவு சென்ற பின் அதே மக்கிய உர வாடை குமட்டி கொண்டு வந்தது. என்னிடம்தான் வந்தது.

என்னப்பா இப்படி ஸ்மெல் என்றேன்.

எங்கே சார்…ஒன்றும் இல்லையே என்று சொல்லும்போதுதான் ஆட்டோ நின்றது.

ஒரு நிமிஷம் சார்… பாத்துடறேன்… இப்போ என்று பின்னால் ஓடினான். நேரம் கடந்து கொண்டே சென்றது.

மெல்ல இறங்கி பின்னால் சென்றேன். சிகரெட் பிடித்து கொண்டு அவன் யாருக்கோ காத்திருப்பது போல நின்று கொண்டிருந்தான். அவன் கண்களில் இருந்து தூசி பறப்பது போல நெருப்பு பொறி பறந்தது. அரவமின்றி நான் அவனை நெருங்கினேன்.

இருள் மட்டுமே ஒரே மிச்சமாய் இருந்த அந்த தெருவில் ஒரு லேம்ப் போஸ்ட் தன் சுவிட்ச் போர்டு வயிற்றை திறந்து வைத்துக்கொண்டு பசியோடு இருந்தது.

அவன் சட்டையை கொத்தாய் கழுத்தோடு இறுக்க பிடித்து மிக வேகமாக இழுத்துக்கொண்டு போய் போஸ்டில் அவன் தலையை முட்டி மோதினேன்.

ஒரே மோதலில் ப்ளக்கென்று ஓடு பிரிந்து ரத்தமும் மூளையும் கொழகொழத்து எனது கையில் வழிந்தது. இன்னொரு முறை செய்து பார்க்க ஆசையிருந்தும் தலை என்று ஒன்றும் அவனிடம் இல்லை.

சார்…

ம்

சார்ர்…

என்ன…

இதான் சார் வீடு. இறங்கிக்கங்க.

பணத்தை வாங்கி கொண்டு திரும்பி செல்ல ஆட்டோவோடு வளைந்தான்.

தம்பி என்று நான் உரக்க கத்தியது அவனை தவிர எல்லோருக்கும் கேட்டது.

இன்று வேண்டாம் என்று நினைத்து கொண்டே அந்த சாலையில் நின்றேன்.

************

இப்போது எனக்கு குமட்டல் பெருகி வாந்தியாகி வந்தது. கன்னங்கரேல் நிறத்தில் வெறும் வெள்ளை நிறத்தில் தலை முடியாய் வாயில் இருந்து பீறிட்டது. நுரை நுரையாய் கக்க ஆரம்பிக்க யாரோ என் தலையை பிடித்து அழுத்தி கொண்டிருந்தனர்.

ஒன்னும் இல்ல சார். பித்தம். வாங்க..
வைத்தியர் உள்ளாறத்தான் இருக்காரு.

உள்ளே…

நேரத்தை பார்த்தேன்.

மொபைலில் மணி பத்து என்று காட்டியது. உடனே பத்து.முப்பது…. உடனே பதினொன்று நாற்பது… உடனே…
மொபைல் போனில் சீக்கிரம் பேட்டரி மாற்றவேண்டும் என நினைத்தேன்.

ஜிங் பௌன் என் பெயர் என்றார்.

வணக்கம். நான்…

நாம் நேற்றே பேசி விட்டோம். உங்களுக்காக காத்திருக்கிறேன் நான்.

சொல்லுங்கள் என்ன விஷயம் என்றேன்.
வரும் வழியில் தோன்றியதெல்லாம் அவரிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

அவரும் நானும் இருந்த அறை மிக சுத்தமாய் வாசனையாய் இருந்தது. ஒரு கிளினிக் தோற்றம் அங்கு இல்லை.
இதமாக காற்று வீசியது.

அங்கேயே இருக்க வேண்டும் என்று தோன்றியதை அவரிடம் மறைக்காது கூறினேன்.

அவர் சிரித்தார். வயோதிகத்தின் உச்சம்.
புருவங்கள் வெண்பழுப்பில் தொங்கி சிறு தாடியுடன் ஒடுங்கி இருந்தார்.

அவரிடம் மீண்டும் கேட்டேன்.

என்ன விஷயமாக அழைத்தீர்கள்?

வாருங்கள். உங்களுக்கு நேரே அவரை அறிமுகம் செய்கிறேன். அப்போது புரியும் என்று அழைத்து கொண்டு போனார்.

வளைந்து வளைந்து பல மாடிப்படிகள் கடந்தோம். இத்தனை படிகளா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

இன்னும் செல்ல வேண்டுமா?

ஆம்…

படிகள் வளர்ந்து கொண்டே இருந்தது. வியர்க்க ஆரம்பித்தது. குமட்டல் வந்தது.

நாம் வேண்டுமானால் பிறகொரு நாள் மீண்டும் சந்திக்க…சொல்லும்போதே
அந்த அறையின் முன் நின்றோம்.

தாழ் விலக்கினார்.

உள்ளே உற்று பார்க்கும்படி இருள்.

சில பலகைகளை யாரோ தூக்கி நிறுத்தும் படியும் மீண்டும் வீசி எறியும் படியான ஓசையும் சத்தமும் காதை அடைத்தது. வயிறு வலித்தது.

இப்போது பளிச்சென்று வெளிச்சம் வந்தது.

கரி பிடித்த சுவர். கரி என்றால் நாள் பட்ட கரி. சுவரெல்லாம் கரிந்து போய் இருந்த குருதி. நான் வெளிறி ஓட நினைத்தேன்.

ஏறி வந்த படிகள் இப்போது ஒன்று கூட இல்லை.

அறைக்குள் யாரோ ஒருவர்.

முழு துணிச்சலும் திரட்டி வைத்தியரிடம் கேட்டேன்.

அது…?

அவள்.

அவள் உங்கள் நாடா? என்றேன்.

இல்லை. தான்செனியா.

என் ரத்தம் உறைந்தது.

நான் முழுக்க புரிந்து கொண்டேன்.

முன்பு நான் எழுதிய கதை நினைவுக்கு வந்தது.

அதில் முடிவில் நான் குற்றம் செய்ததால் சிறைக்கு செல்வதாக கூறி முடித்து இருந்தேன். பொய். நான் எந்த சிறைக்கும் செல்லவில்லை. யாரும் என்னை கைதும் செய்யவில்லை.

கதையில் மட்டும் அல்ல நிஜத்திலும் நியாய தர்மங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த இரண்டும் வணிகத்தின் இரண்டு செல்லாத பக்கங்கள். அறிவுக்கும் மனதுக்கும் நடுவில் தூக்கமின்றி அலைந்து கொண்டிருக்கும் போதை. கடவுளின் காமம் அவைகள்.

அந்த தான்செனிய பெண்ணை நான்தான் கொன்றேன். காரணம் அவளை கொல்ல வேண்டும் என்பது போல இருந்தது. கொன்றேன்.

இப்போது எதற்கு என்னை அழைத்து வந்தீர்கள்? அவள் பெயர் என்ன.?
டேய் யார்ரா நீ என்று அலறினேன்.

என் மூக்கில் சிறிது ரத்தம் ஒழுகியது.
இரண்டு காலுக்கு நடுவில் ஒரு வாத்து விருட்டென்று பறந்தது.

அருகில் இருந்த நாற்காலியில் சரிந்தேன்.

அவள் முகம் நன்றாக தெரிந்தது.

என்னை பார்த்தாள்.

எங்கோ கடும் குரலில் ஒரு பூனையின் கேவல் கிளம்பி என்னை போர்த்தியது. அது மலைப்பூனையின் கேவல் ஒலி.
வயிற்றில் யாரோ பிராண்டிய வலி.

கிழவன் சற்று தடிமனான இரண்டு ஊதுபத்திகள் கொளுத்தினான். இப்போது அதே குமட்டல் வாடை அறையெங்கும் பரவி மூச்சு நெறித்தது.

அவள் வந்தாள் அருகில்.

மிதந்துதான் வந்தாள். உடலில் எந்த ஆடையும் இல்லை. உடலில் மா மரங்கள் முளைத்து முளைத்து மறைந்தன.

அவள் வாயை திறந்து மூடும்போது குவிந்து மேல் உயரும் சுடுகாட்டின் புகை மண்டி கிடந்தது. கரிய மாம்பா வாய் அது.


“சாயனோர வதாக்ஷி நோஅய்”

இதை அவள் சொன்னதும் என் உடலுக்குள் ஆயிரமாயிரம் கத்திகள் மின்னல் வேகத்துடன் மேலும் கீழும் வலமும் இடமும் மின்னலாய் பாய்ந்து பாய்ந்து செருக ஆரம்பித்தன.

என் இரண்டு கண்களும் இறுக்கம் தாளாது வெடித்து சிதறி வெளியேறிய பின் எதிரில் இருந்த கடிகாரத்தில் மோதி ஒரு கணம் வெறித்து விழுந்தன.

அப்போது மணி ஒன்று இருபத்தியேழு.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.