கண்ணாடி

கீழிருந்து சில படிகள் ஏறிச்செல்ல முடிவில் அந்த விரும்பத்தகாத அறைகளை பார்க்க முடிகிறது. மனம் ஏற்றுக்கொள்ள தயங்கும் எதிரெதிர் அடுக்குகளில் அந்த அறைகள் விளக்கின் மஞ்சள் ஒளி சூழ்ந்து இருந்தன.

மைய அறைக்கு முன்பாக அந்தக்கால தகர சேர்களும் இந்தக்கால பிளாஸ்டிக் சேர்களும் இருந்தன. அதில் மனிதர்கள் அவரவருடன் இருந்தனர்.

ரபேசன். நகரின் பிரபலமான மனநோய் மருத்துவர்.

இவர் நண்பர் என் முதலாளி. முதலாளி டாக்டருக்கு கொடுத்த விட்ட ஒரு கவருக்கு நான் தூதுவன். கொடுத்து விட்டு கிளம்பி விடுவேன். நேரே பார்த்து கொடு என்பது உத்தரவு. நான் உத்தரவுக்கு பணிவேன்.

அவருக்கு காத்திருக்க எனக்கு சம்மதம். காத்திருந்தாலும் அந்த நேர உளைச்சலை எல்லாம் இந்த டோக்கன் கொடுப்பவள் செவ்விய இடை போக்கிவிடும்.

உக்காருங்க… சற்று கிசுகிசுப்பான அந்த கட்டளைக்கு உரிய மரியாதையுடன் அந்த ஆள் அருகில் அமர்ந்து கொண்டேன்.

அந்த ‘இடை’ கண்களால் மொத்த கூட்டத்தையும் அளந்து எல்லோர் கையிலும் ஒரு எண்ணை கொடுத்தது.

எனக்கும் வந்தபோது நான் வந்த விஷயத்தை சொன்னதும் ‘இடை’ டாக்டர் வரட்டும் என்றபடி போய் விட்டது.

அந்த கூட்டத்தில் ஒரு பதினைந்து பேர் இருக்கலாம்.
அதில் ஏறத்தாழ பாதி மனநோய்காரர்கள். அந்த நோய் பெயர் கூட தெரியாது. அவர்களுக்கு அப்படி எதுவும் சொல்லப்படாது.

நோயின் உக்கிரத்துக்கு ஏற்ப கரண்ட் முதல் மாத்திரை வரை தரப்பட்டு அவர்கள் தங்களுக்குள் நிம்மதியாய் இருந்த அழகான உலகம் சின்னாபின்னமாய் அழிக்கப்பட்டு மீண்டும் இந்த யதார்த்த உலகுக்கு அழைத்து வரப்படுவர்.

பின் அவர்களும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி கொள்ள முடியும். சொத்து பத்திரத்தில் ஒப்பமிடவும் முடியும்.

என்னை பக்கத்தில் அமர சொன்ன ஆள் கொஞ்சம் விவரமான ஆள் போல் இருந்தார். கையில் ஒரு நீயூயோர்க்கர் மாகசின் இருந்தது. என் வாசிப்பு அறிவை காட்ட கழுத்தை ஒட்டகம் போல் ஒடுக்கி அதை உற்றுப்பார்க்கும் முயற்சி செய்ய… அவர் புன்னகையுடன் காட்டினார்.

பழைய நீயூயோர்க்கர்… ரொம்ப பழயதாய் கூட இருக்கலாம். இது மரை கழண்ட கேஸ் இல்லை என்று நேரம் கடத்த என் பேச்சு துணைக்கு வைத்துக்கொள்ள முடிவு செய்தேன். ‘இடை’ வருவதும் போவதுமாய் காட்டி கொண்டு இருந்தது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

“இந்த மாகசின் கடந்த இருபது வருடமாக கீழே வைக்காமல் இந்த கைகளில் மட்டும் வைத்திருக்கிறேன் என்றால் உங்களால் நம்பமுடியாது” என்று புன்னகைத்தார். எனக்கு ‘திக்’கென்று இருந்தது.

பார்க்க நன்றாகத்தானே இருக்கிறார்… அப்பறம் என்னவாக இருக்கும். என்று யோசித்தபடியே சார் பெயரென்னவோ என்றேன்.

புதுப்பூனை புது எஜமானனை வாலை உயர்த்தி நோட்டமிடுவது போல் என்னை பார்த்துவிட்டு “பெயரை விடுங்கள்… எனக்கொரு டிஃபரெண்ட் ப்ராபளம்” என்றார்.

பேசும் போதே மேலே விழுந்து பிடுங்கும் லட்சணம் தெரியவில்லை என்றாலும் வாசல் பக்கம் விழுந்து ஓட ஏதுவான இடத்தில் வாகாய் அமர்ந்துள்ளோம் என்னும் ரெட்டை தைரியத்தில் அவரோடு நான் பேச முடிவெடுத்தேன்.

உங்கள் பிரச்சினை என்ன?

நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி முன் பார்க்கும் உங்கள் உருவத்தை பிம்பம் என்றுதானே சொல்வீர்கள்?

ஆம். உண்மையும் அறிவியலும் அதே.

அந்த பிம்பம்தான் உண்மையான நீங்கள். ஆனால் உங்கள் பிம்பமோ யதார்த்த உலகில் இருப்பது போல் உங்களை நம்ப வைக்கிறது.

நீங்கள் அதில் சிக்கி இருப்பது உங்களுக்கு தெரியாதவண்ணம் உங்கள் மனம் படைக்கப்பட்ட பின்னப்பட்ட ஒன்று என்றது நீயூயோர்க்கர்.

ஓ.. அதற்குதான் டாக்டரிடம் வந்தீர்கள் போலும் என்றேன் அப்பாவியாய்.

அது மெல்ல ஒரு புன்னகையை தருவித்து என்னை உற்று பார்த்தது.

ஆம்… அதற்குதான்… ஆனால் இந்த ப்ரசனைக்கு டாக்டரை பார்க்கப்போவது நான் இல்லை…

பின்?

நீங்கள்…

நானா…? நான் இங்கு வந்த விஷயம் வேறு என்றேன் புன்னகையுடன். என் நோக்கம் ஒரு செய்தி தொடர்பான ஒன்று. நான் ஒருவரின் தூதுவன்.

ஆம்… நாம் தூதுவர்கள் மட்டுமே. ஏனெனில் இங்கு உண்மையான நிலையான ஒரே ஒரு விஷயம் மட்டுமே உண்டு. அது நீங்கள் என்பது நான் மட்டுமே. என்றார்.

சரி… இது ஒரு வினோதமான நபர். அவர் மனம் நோகாது அன்பாய் பேசிவிடலாம். ஒரு மணி நேரத்தில் கூட டாக்டர் வரலாமே… நீயூயோர்க்கர் பையில் பச்சை கலர் டோக்கன் அட்டை இருந்தது.

எப்படி சார் என்றேன் அவரிடம்…

காரணங்கள் நிலையாய் இருப்பது உண்டா?

இல்லை.

தத்துவம், சிந்தனை, கொள்கை, கோட்பாடுகள், தர்மங்கள், ஒழுக்கம், நாகரீகம் இப்படி எதுவும் மனிதர்களுக்கு நிலை அல்ல சரியா?

ஆம் என்றேன். வாசலை பார்த்தபடி.

அதுபோல் ஒரு குறுகிய நேரத்தில் மனிதர்கள் தங்களை அறியாமல் ஒருவருக்கொருவர் மாற்றி கொண்டு விடுவார்கள்.

அதன்படி இப்போது நீங்கள் என்பது நான் என்று அவர் சொல்லி முடித்தபோது இதை இப்படியே விடக்கூடாது என்று முடிவு செய்தேன்.

உங்களால் இதற்கு ஆதாரம் தர முடியுமா?

இன்று நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்று உங்களால் ஆதாரம் தர முடியுமா என்றார் நீயூயோர்க்கர்.

நாம் தவறாது வாக்களிக்கிறோம்.

போதுமா?

வேறு?

உங்கள் ஒர் நியாயமான தொந்தரவை சீர் செய்ய எத்தனை அலைச்சல்களில் உயிர் விட வேண்டி இருக்கிறது? எத்தனை மன்னர்களை வணங்க வேண்டிய நிலை?

நீயூயோர்க்கர் கொஞ்சம் விஷயமுள்ள ஆள்தான் என்று பட்டது. நீ நான் என்று குழப்பிவிட்டு மெஸ்மரைஸ் செய்து ஆதார் உள்பட அனைத்தும் கேட்டு விடுவாரோ என்ற பயம் வந்தது. நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

இதனால் என்ன செய்யலாம்? என்ன செய்ய முடியும்? என்றேன்.

ஒன்றும் இல்லை. ஒரு தகவல் இது சொன்னேன். நாம் யாரையெல்லாம் சந்திக்கின்றோமோ அவர்கள்தான் நாம்.

நாம் உண்மையில் அடுத்தவருக்கு மட்டுமே வாழ்கிறோம். இதை சொல்லி புரிய வைப்பதற்கு முன்பே என்னை பலவந்தமாக இங்கே கொண்டு வந்து விட்டனர் என்றார்.

அதுவும் நல்லதுதானே என்று சொல்ல அவர் முகம் மாறி விட்டது.

டாக்டரிடம் என்ன விசயமாக வந்து உள்ளீர் என்றார் நீயூயோர்க்கர்.

வந்த விஷயத்தை சொன்னேன்.

நீங்கள் அப்போது உங்கள் எஜமானன் வடிவில் வந்து உள்ளீர்கள்… ஆனால் நீங்கள் வரவில்லை என்பது தர்க்கத்தில் சரியா என்றார்.

ஓரளவு சரியாய் பட்டது. அது சரிதான்.

இப்போது முதல் நீங்கள் என்பது நான் என்று மாறி விட்டீர்கள். ஏனெனில் இத்தனை நபர்களை தாண்டி என்னிடம் நீங்கள் வரக்காரணம் அதுதான். இனி நான் முதலில் டாக்டரை சந்தித்தால் அவர் நான் ஆகி விடலாம். அல்லது நான் அவராகி விடலாம்… என்றார்.

நான் வாயை மூடிக்கொண்டேன்.

இனி பேசினால் நீயூயோர்க்கர் என்னை எந்த முடிவுக்கும் கொண்டு செல்ல முடியும் என்பதால் அவர் என்னை பார்க்கும் போது அவர் எதை சொன்னாலும் நான் அதை அப்படியே மறுப்பு இன்றி அனைத்தையும் ஏற்றுக்கொள்வது போன்ற பாவனையை வைத்துக்கொண்டேன். வேறு இடத்துக்கு இருக்கை மாறி போவதும் நாகரீகமான ஒன்றாய் இல்லை.

விட்டத்து பேன், பல்லி என்று பார்வையை மாற்றி கொண்டேன். ஆனால் அவர் என் காதுமடல் பக்கம் மட்டுமே உற்று பார்ப்பது போன்ற குறுகுறு. குறு குறு.

நீயூயோர்க்கர் சொன்னதில் என்னவோ அர்த்தம் இருப்பது போல் மனம் தனியே யோசிக்க ஆரம்பித்தது. அவரின் ஒவ்வொரு வார்த்தையையும் பிய்த்து ஒட்டி கொண்டது மனம். எனக்கும் பொழுதும் போக வேண்டுமே?

மனதை அதன் போக்கில் விட்டுவிட்டு இடை வருகிறதா என்று ஒரு கண்ணிலும் நீயூயோர்க்கரை ஒரு கண்ணிலும் வைத்துக்கொண்டேன்.

டாக்டர் வந்து அறைக்குள் செல்ல இடை உள்ளே புகுந்தது. பத்து நிமிடங்கள் கழிந்தன.

முதலில் என்னை அழைக்க நான் நீயூயோர்க்கரிடம் சிநேகமாய் அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு உள்ளே சென்றேன்.

ஃபென்தடால் மணம் அறையில் கமழ்ந்து ஒரு கணம் தலை சுற்றி நின்றது. டாக்டர் அவரின் அந்த தெய்வீக புன்னகையை தொடர்ந்து உக்காருங்க… உங்கள் சீஃப் போன் பண்ணிட்டார்… உங்க பேர் கூட சொன்னார் மறந்து போச்சு சாரி… உங்க பேர் என்ன?

“பெயரை விடுங்கள் டாக்டர்… எனக்கொரு டிஃபரெண்ட் ப்ராபளம்” என்றேன்.

_________________________________

(19) அவளுடன் பேசும்போது


(20 ஞாயிறு 2019 காலை 5.47 கு வந்த வாட்ஸப் செய்தி)

நான் எனது மனதளவில் காரணம் இன்றி கொந்தளிக்கிறேன். எனக்கு ஆசைகளும் இறந்த காலங்களும் இல்லை. இதோ இப்போது மனம் எந்த குறிக்கோள் இன்றி இருக்கிறது. இரவு கடுமையாய் இருந்தது. பாலுணர்வின் தேவைகள் எப்போதோ அகன்று போன மனம் எனது. ஆயினும் நான் குமைந்து கிடப்பது எதன் ஒன்றில் என்பது தீர்மானமாக இல்லை.

நான் பழமைகளில் அதன் உரிமைகளில் ஊடுருவ முயன்று இந்த கணம் தோற்று போய் இருக்கிறேன் ஸ்பரி.

இப்போது எனக்கு ஒரு ஆறுதல் மட்டும் தேவைப்படுகிறது. அது வாசிப்பில் மட்டும் கிடைக்காது. ஆகவே நான் உங்களுக்கு எழுதுகிறேன்.

இதில் எந்த ஞானமும் கிடையாது. எனக்கு நானே கொடுத்து கொண்ட மரியாதைகள் இந்த நொடி நிற்கதியை அடைந்து விட்டன. மனப்பிறழ்வை மெல்ல அடைகிறேன்.

காலங்கள் தன் போதையை எனக்குள் நிறுத்தாது புகட்டுகின்றன. நான் ரசித்து ரசித்து கேட்ட பாடல்கள் கொலைநகம் பூண்டு சுருட்டி வளைக்கிறது.

நான் நம்பிக்கையின் மீது சொல்லப்பட்ட எல்லா வார்த்தைகளையும் விடாது உச்சரிக்கிறேன். அவை தூளியில் இருந்து தவறி விழுந்த குழந்தை போல் கதறி முடிகிறது. சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி உங்களை நினைத்து கொள்கிறேன்.

நீங்கள் காட்சியாக பயண வழிகாட்டியாக தெரியும் போதே ஒரு சித்தாந்தத்தை விலங்காக்கி என்னை சிறை செய்ய முயல்கிறீர். உங்களிடம் இருந்து விலகி செல்கிறேன். உங்கள் நிழல் துரத்துகிறது.

தத்துவங்கள், மரபுகள், கொள்கைகள், பின்னிப்பிணைந்த மானுட வாழ்வின் சூழ்ச்சியும் தந்திரங்களும் ஒன்றாய் திரண்டு என்னை விரட்டுகின்றது.

நான் எனக்குள் ஒப்பேற்றி வைத்திருந்த கடவுள்கள் அசையாது இருக்கின்றன. அவைகளின் கைகள் கட்டப்பட்டு கண்கள் மறைக்கப்பட்ட நிலையில் அப்படிப்பட்ட ஒரு மனித குழுவால் போற்றி போற்றி பூஜிக்கப்படும் காட்சி தெரிகிறது.

என்னை சுற்றிலும் காட்சிகள், காட்சிகள், காட்சிகள் மட்டுமே. நன்கு உணர்கிறேன்… நான் ஆழ்ந்த தூக்கம் அல்லது நீண்ட மயக்கத்திலோ இல்லை. உடலின் அசைவுகள் திறம்பட உள்ளன. நான் என் அறையை சுற்றி வர முடிகிறது.

எல்லாப்பக்கங்களிலும் தணிக்க முடியாத ஒரு கொந்தளிப்பில் அவை இருக்கின்றன. தற்கொலை மீதான ஒரு ஆவல் கட்டுமீறி வெளிப்படுகிறது. எனது ரத்தங்களை சந்திக்க கண்கள் பிரியம் கொள்கின்றன. எனது இறுதி மூச்சின் பெரும் பிரிவை பார்க்க இதயம் துள்ளலுடன் தவிப்பதை உணர முடிகிறது.

ஒரு பெண்ணாகிய நான் குமைந்து போகும் அனைத்து விஷயங்களும் இப்போது திரும்ப திரும்ப எனக்கு நடக்கிறது. மெல்லிய இந்த பொடி இரும்பு சங்கலி… இது நாளை எப்படியும் அறுந்து போகக்கூடியதுதான்… என்ற ஒரு ஆவலில் அடிக்கடி தடவி அழகு பார்த்த சங்கிலி… இப்போது என் கழுத்தை இறுக்குவது என்று தெரிந்து கொண்டேன். இதை என் மனதில் இருந்து கபடமாய் தயாரித்து பின்னர் எனக்கே அணிவித்தும் அவர்கள் சென்றனர்.

ஓடுவதற்கு கூட பாதைகள் இல்லை. திசைகள் சுழன்று கொண்டே இருக்கிறது.
மெல்ல ஒரு நிதானம் வேண்டும் என்று சொல்கிறேன். இது முன்பே இந்த உலகம் அனுபவித்த கொடுமைகளுள் ஒன்றுதான் என்றும் சொல்கிறேன்.

துரோகங்கள் பழி தீர்க்கும் ஆவல்கள் கொலைகள் யாவுமே அடங்கிய வாழ்வில் நாம் பிரிந்து இல்லை என்பதை நினைவு செய்கிறேன்.

மனிதர்கள் ஆவேசத்தின் குறும்பு மூட்டைகள்… அவர்கள் கடித்தும் பிராண்டியும் கிள்ளியும் இன்னொரு உயிரை துளைக்க நேர்ந்தால் அதற்கு பாஷையை, அன்பை, நெறிப்படுத்துதலை மட்டுமே கருவியாக கைக்கொள்ள கூடியவர்கள் என்றும் எனக்குள் நான் சொல்லிக்கொள்கிறேன்.

தவிடைபோல் வானத்தில் ஒளி திரும்புகிறது ஸ்பரி… இது அதிகாலையா இன்னும் விடியவில்லையா என்று தெரியவில்லை. நான் இங்கு இருக்கிறேன் ஆனால் எங்கு சென்றேன் என்பதை நினைவு கொள்ள முடியவில்லை. கைகளில் ஒரு நடுக்கம் இருக்கிறது. மெத்தையில் குட்டிகள் கட்டிப்பிடித்தபடி தூங்குகின்றன. அவைகளை பார்த்ததும் கண்ணீர் கட்டின்றி வடிகிறது.

நீங்கள் சீக்கிரம் வருவீர்களா?
நள்ளென் றன்றே யாமஞ் சொல்ல

காற்றைப் பிழியும்
உன் சோப்பின் வாசனை.

துளிர்க்கும் சிரிப்பில்
தேன் தேடும் பட்டாம்பூச்சி.

சேலை சரசரப்பில்
சுவரெங்கும் பாய முனையும்
காந்தர்வ மின்சாரம்.

மெல்லிய முணுமுணுப்பில்
சாயமிழந்த காமக்கண்கள்.

நீ இறங்கிய அந்தியில்
சாலையில் கலங்கிய
பேய் பிடித்த சூரியன்.

இங்கும் கிடக்கிறது
உன் வெட்கத்தின் எதிரொளி.

இந்த இரவில் மீந்துபோன
ஒற்றைப்படுக்கையில்
உன் நினைவும்…

சாம்பலாய் உதிரும்
ஓயாது எரியும் வட்ட
கொசுவர்த்தியும் கூடவே
என் மனமும்…
நதியில் கரைந்த மின்னல்

ஒரு நுரைப்பொழுதில் நீ
ஒளிந்திருந்து பார்த்தாய்.
நுரை வண்ணங்களின்
பூத்து குலுங்கியது
பட்டாம்பூச்சி காலங்கள்.

திரைக்கு அப்பால் சென்று
மறையுமுன் சிரித்த
கொலுசின் விண்மீன்கள்…
கால்படா ஓடைகளில்
துள்ளிடும் மின்னல்கள்.

உன் பிரக்ஞையூடே
கலையும் மேகங்கள்
களைகின்றன மழைத்துளியில்
உன் பருவங்களை.

எட்டிப்பார்க்கும் கோடை நாள்
சொல்லிக்கொள்கிறது
உன் பெயரை பனியென நம்பி.

ஆடைக்குள் பூத்த
அலையாடும் நிலவின் குளிரே
உன் நித்திலங்கள் நிலைக்குமோ
நீரின் கனமறிந்த பின்பும்…

நற்பருவம் வந்து நாதனை தேடும்

புலர்ந்த பொழுதில் புட்களின்
மலர்ந்த முதல் பாடலாய்
எவரவர் வாய் கேட்பினும்
அப்பொருளே மெய்ப்பொருளாய்
இசைக்கும் தினமின்றில்…

யாதுமாகியதொரு
ஆலயத்தின் நடுவில்
சூழல் காற்றின் ஸ்வப்னமாய்
நம் விழிகள் தீற்றி திகைத்தன
ஏற்றிய மணிவொலியின்
நடு நொடி ரீங்காரமாய்.

சலித்த வேண்டுதலில்
இளைத்த பனிச்சடையன்
குனித்த புருவம் சிலிர்க்க
தனித்து நமை
கடைக்கண்ணினானோ?

ஹாரத்தி புஷ்பத்தில்
புகைக்கடவுளாய் என்னுள் நீ.

காற்றும் மணமும்
கலந்து கழுவிய ப்ரஹாரத்தில்
நடை நழுவி நாணத்தில் கமழ

காணுற்று தொலைந்த
நயனங்களை தேடுகிறேன்.

கற்பனைகள் முற்ற
காட்சி தந்த உன்
ஈரத்தடத்தின் குளிர்மை
மனதில் காணப்பெற்றால்…

மனித்த பிறவியும்
வேண்டுவதே இம்மாநிலத்தே.

நட்பென்னும் தீவினிலே

ப்ரிய தோழிக்கு ஒன்று.

பாறைச் சூட்டில்
விழுந்த நீர்துளிகளாய்
நம் தத்துவங்கள்.
திரைப்படம் தவிர
மற்றனைத்தும் எதிர் நீ…

பொருந்திய மரையில்
பொருந்தா வளையமாய்
கருதுகோளில் நழுவி
எதிரெதிர் பாதையில்
விலகும் நம் நெஞ்சில்
நட்போ நிலமென நீளும்.

சாய்ந்துகொண்ட தோள்…
எத்தனைமுறை என்
கண்ணீர் துடைத்தவள் நீ
நாம் வேறுதான்…

தமிழ் நான், நீ மராட்டியம்
பேசவோ ஆங்கிலம்.
பார்ப்போமா தெரியாது.
உணர்கிறேன் நான்…

நள்ளிரவு நேரத்தில்
அர்த்தமற்ற புன்னகையில்
நீ தொழுத இறைவனை
சிந்தும் நொடியளவு
கனவில் காண்கையில்…

எங்கும் வெளியேறாத
உன் கண்ணீரை
கொட்டும் பொழுதெல்லாம்
என்னிடம் கொட்டு.

ரோஜாக்கள்
பூத்துக் குலுங்குகின்றன.
உன் பிரார்த்தனைக்கு.

நாளை மற்றுமொரு நாளே.

அத்துணை கேளிக்கையும்
உண்டு இத்தினம்.
கரை பெருகும் ஆனந்தம்.
உறவுகள் சிலிர்க்கும்.
ஒவ்வொரு புன்னகையும்
ஒவ்வொரு நம்பிக்கை.

யாவரும் நலமென்று
நெகிழ்ந்த உணர்வுகள்.
கொட்டினாலும் தீராத
கொண்டாட்ட குதூகலம்.
திருக்கோயில் சென்று
கண்கள் பணிக்க
பிரார்த்தனை கவசங்கள்.
எனக்கும்.நமக்குமாய்.

இன்று போல்தான் இனி
ஒவ்வொரு நாளும் என்று
மனதின் குரலாய்…

பண்டிகை நாளில்
கையில் நாளிதழலுடன்
வாசலில் அமர்ந்தேன்.

எங்கோ செல்லும் கந்தன்
வந்து நின்றான் வாசலில்.

அவன் தென்னை மரமேறி
உழைப்பாளி.

இன்னிக்கென்ன விசேஷம்?
கேட்டேன்… சொன்னான்…

இன்னிக்கு சனிக்கிழமை.
நாள நாயித்து கிழமை.

நம்பிக்கை என்பது சாகும் உண்மை

பசித்த வயிற்றுடன்
சுற்றிலும் பார்த்தான்
பார்வையில் பட்டன
பற்பல தாவரம்.

ஒன்று ஆல். ஒன்று அரசு
ஒன்று வேம்பு.
அவனுக்கு வேண்டிய
ஒன்றோ…
நாற்றங்காலாய் இன்னமும்
இருந்தது.

இதை எழுதிய
ஞானக்கூத்தன் இன்றில்லை
என்றாலும் கூட

அரிக்கிறது உள்ளங்கால்.
அவர் பார்த்த
நாற்றங்கால் நிலத்தில்
அடுக்குமாடி குடியிருப்பு.

நடையின் போது…

நான்கு தெருக்களை
சுற்றி வந்தால்
ஊரை தெரிந்து விடலாம்.
பெரிய ஊர் அல்ல… எனினும்
அது என் பிம்பங்களை
தாங்கியது தனக்குள்.

அகலமான தெருக்களில்
நான் ஓரமாக செல்வேன்
யாரையேனும்
நினைத்துக்கொண்டும்
அவரிடம் பேசிக்கொண்டும்.

பெரும்பாலும் பேசுவது
சுந்தர ராமசாமிதான்…
அவர் மறைந்துவிட்டார்.
இருப்பது போலவே இருக்கும்.

விஷயங்கள் ஒன்றுமில்லை
எனும்போது மௌனமாய்
காலாற்றி போவோம்.

நாகர்கோவிலில் அவரை
சந்திக்கும்போதெல்லாம்
கேள்விகள் இருந்தாலும்
எதுவும் கேட்க மாட்டேன்.
பூஜ்யமாய் இருப்போம்…

உரையாடல் எதுவுமின்றி
திரும்பி வருகையில்
பயணம் களைகட்டும்.

அன்று
கேட்காத கேள்விக்கெல்லாம்
இன்று கிடைக்கிறது பதில்கள்.

நடக்கும்போது எழுதியது

நீயும் நானும்
பேசிக்கொண்டிருந்தோம்.
அவர்கள் நம்மை சுட்டி
அவனும் அவளும்….
என்றதும் நீ
அவர்களை காட்டி
நம்மைப்பற்றியோ என்றாய்.
அவர்கள் போனதும்
நாமும் போய் விட்டோம்.
குருவிகள் வந்தமர்ந்தன.

*****
ஒருவேளை அப்படியானால்
ஒருவேளை இப்படியானால்
இப்படியாகும்போது
அப்படிச்செய்தால்
அப்படியாகும்போது
இப்படிச்செய்தால்…

நன்கு யோசித்த பின்னரே
நன்கு தூக்கம் வந்தது
ஒரு முடிவும் தெரியாமல்.

*****

லல்லிக்குட்டி
ஒவ்வொரு மழையின் போதும்
வானம் ஏமாறட்டுமென்று
ஒளித்து வைப்பாள் வாளிகளை.

*****
நீங்கள் மகிழ்ச்சியாக
திரைப்படம் பார்க்கின்றீர்.
உன்னதமாக அரட்டையும்
வம்பும் பேசுகின்றீர்.
விழித்ததும் இன்னும்
சோம்பலாக உணர்கின்றீர்.
உங்கள் பொழுதுகள்
அனாதையாய் சாவதை
களங்கமின்றி ரசிக்கின்றீர்.

நீங்கள் திருப்தியாக இருக்கின்றீர்.
உங்களை கவனிக்கும்
நானும் திருப்தியாக உள்ளேன்.

*****

நீரின் நிழலில் உதயமுற்ற கடல்.

Create your website at WordPress.com
Get started