கருப்பு கடல்


                            (🔞)

டச்சு குப்பத்தில் அன்று காலை எப்போதும் போல் இல்லாது கடல் காற்றில் கவிச்சி வாடை ஈரத்தை மினுமினுக்க வைத்தது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கே செல்லும் ரோட்டில் இருந்து நீளமான மண் பாதையில் அன்ன நடை போட்டாலும் அங்கு போகமுடியும்.

இசக்கியின் படகுக்கு பின்னால் கொஞ்ச நஞ்ச பாகத்துடன் அந்த பிணம் கிடந்தது.

இறந்தது உள்ளூர் ஆள் இல்லை என்றதும் வெளியில் இருந்து கொண்டு இரவில் வந்து போட்டிருக்கலாம் என்று பேசிக்கொண்டார்கள்.

போலீஸ் வரும்வரை சுற்றி சுற்றி வரும் நாய்களை விரட்டி கொண்டிருந்தான் சாலமன்.

          🐳🐳🐳🐳🐳

அவன் ஹோட்டல்களுக்கு நாய்கறியும் பூனைக்கறியும் சப்ளை செய்து வருபவன்.
சட்ட விரோதம்தான். ஆனால் அதில்தான் சாலமனுக்கு நல்ல வரும்படி.

அவனை இன்னாசி பார்க்கும் போது கண்களில் நீர் கொட்டுவார்.

“ஏலே மூதி… நாலு பாப்பாக்களை வச்சு நாறத்தொழில் பண்றது பத்தாதுன்னு இப்படி சீவிக்கிரதை போட்டும் இந்த இம்ச படுத்துதியலே நீ வெளங்குவியாலே” என்பார்.

சாலமன் பச்சை கலர் ப்ளஸ் வடிவ டாலரை வாயில் கவ்வியபடி தலை கவிழ்ந்து நிற்பான்.

இன்னாசியிடம் அவனுக்கு மரியாதை உண்டு. அல்லது அப்படி காட்டி கொள்வான்.

போலீஸ் டச்சு குப்பத்துக்குள் மோப்பம் பிடித்து இவனை நெருங்கும் போது இன்னாசிதான் தோள் கொடுப்பார்.

அவர் அதை விரும்பி செய்யாது போயினும் முன்வினை என்று சொல்வார்.

சாலமனின் அப்பா மண்டைக்காடு திங்கள் சந்தையில் பெண்களை பிடித்து மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டில் தொழில் பார்த்து வந்தவர். இசக்கியின் ஒன்று விட்ட அண்ணன்தான் சாலமன் அப்பா.

சாலமன் தாயும் இந்த தொழிலோடு வருமானத்துக்கு அதே தொழிலையும் சேர்த்து பார்த்து வந்தாள். ஒன்று சேர்ந்து
இரவை அவர்கள் பகலாக்கினார்கள்.

தமிழக கேரள எல்லையில் அந்த குடும்பத்தின் இந்த தொழில் அரசியல் பலத்தால் இரு மாநில காவலர்களையும் அண்ட விடாமல் அணுக விடாமல் திணற அடித்தது.

இசக்கிதான் இதற்கெல்லாம் மூளை.

சாலமன் அவரிடம் இந்த தொழில் கற்றபோது வாகாய் அவன் தெருவில் இருந்த பெண்கள் தவிர கூடவே அவன் தங்கையையும் இணைத்து கொண்டான்.

சினிமாவில் வருவது போல் அவனை மாமா என்று எல்லாம் சொல்ல முடியாது. மிராண்டா காலிங் என்ற தொலைபேசி பாஷைக்குள் சென்றால் மட்டுமே அவனை தொடர்பு கொள்ள முடியும்.

நெய்யாட்டின்கரா லாட்ஜில் ஒரு கேரளா எம்.எல்.ஏ வுக்கு தன் தங்கையை அனுப்பி வைத்தான். பின்னர் அவள் ஆடூருக்கு அந்த எம்.எல்.ஏ கூடவே சென்று விட்டதும் சாலமனுக்கு தொழில் கிட்டத்தட்ட படுத்தே விட்டது.

பூதப்பாண்டி கேரளாவில் அடிமாடு அடித்து கொண்டிருந்தான். அவனுக்கு சாலமன் நண்பன்தான். அவன்தான் இரவில் நாய் பூனைகள் வேட்டையாடி அதை கறியாக்கி ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யும் வித்தையை கற்று கொடுத்தான்.

ஒரு நாய் அடித்தாலும் முன்னூறு ரூபாய் கிடைத்து விடும். ரோட்டோர சிக்கன் கடைக்கு பூனையை கொடுத்து விடுவான்.

கடைக்காரர்கள் பக்குவமாய் கோழியுடன் கலந்து போடுவார்கள்.

ஆனாலும் சாலமன் பெண்களை வைத்து தொழில் செய்யவே விரும்பினான்.

“களியக்காவிளை இடுக்கன் தோப்பில் கிராக்கி இருக்குதாவே. சாரிச்சு போனியனா வள்ளிசு ரேட்லே பெண் குட்டி பிடிக்கலாமே. அத்தினியும் கிளி கெணக்கா கிட்டும். ஒன்னுமில்லாதுக்கு ஒரு சோலியாச்சுள்ளே. போய் பார்த்து பேசி யாவரத்தை ஆரம்பியேன். ஒன்னோட பழைய ஆளுங்க அல்லாம் கிளவியா போச்சு. அதுங்களை கஞ்சா விக்க அனுப்பிக்கலாமுள்ள” என்று இசக்கி சொன்னது சாலமனுக்கு புது தெம்பை கொடுத்தது.

சாலமன் களியக்காவிளை போனதும் இடுக்கன் குடிக்கு சென்றான். வழியில் டாஸ்மாக்கில் இரண்டு ஹாஃப் வாங்கி தினத்தந்தி பேப்பருக்குள் சுற்றி மஞ்சள் பை ஒன்றில் வைத்து கொண்டான்.

யாரிடமும் சென்று வழி கேட்காது இசக்கி சொன்ன இடக்குறிகளை மனதால் முகர்ந்து தடம் கண்டு விரைந்தான் சாலமன்.

ஒரு டீக்கடையோடு அந்த ரோடு முடிந்து செம்மண் பாதை அடர்ந்து விரிந்தது. டீக்கடையில் நுழைந்து கஸ்டமர் போல் பேச்சு கொடுக்கவும் பின் விஷயங்களை கறக்கவும் ஆரம்பித்தான் சாலமன்.

பருவொட்டி நாயர் பேருக்குத்தான் டீக்கடை போட்டிருந்தான் என்பதை புரிந்து கொண்டதும் பையில் இருந்த ஒரு பாட்டிலை எடுத்து வெளியில் வைத்து நாயரின் விழிகளை விரிய வைத்தான்.

சாலமன் கேட்காமலே இப்போது எல்லா விஷயங்களும் வந்து விழுந்தன. இசக்கி சொன்னது போலவே காண்ட்ராக்ட்டில் பேசி முடித்தபோது ஆறு பெண்கள் அவனுக்கு கிடைத்திருந்தனர்.

பின் இருவரும் மரங்களை இலைகளை தாண்டி தாண்டி நிழலும் இருளுமாய் விரைந்து பழைய ஓட்டு வீட்டுக்குள் போன போது அவள் இருந்தாள்.

வடிவாய் உயரமாக இருந்தாள். அவள் கையில் ஏதோ ஒரு புத்தகம் இருந்தது. சாலமன் ஆர்வத்தோடு அதை பார்த்தான்.
‘உப்பு நாய்கள்’ என்று மட்டும் தெரிந்தது.

வேய்… படிக்கிர பிள்ளைமாட்டு தெரிதுலே. வம்பாக்கிட போறியலே. நாயரோ… இந்த தொளிலுக்கு ஞான் பழைய ஆளுதானேவே என்றான் சாலமன் நாயரிடம்.

அட…கெழுதை இவோ என்னமோ கத புக் வாசிக்குறா.வெளம்பனம் பண்ணுதியலே. செத்த விரும். வாறேன்…

நாயர் புழையோடும் பகுதிக்கு தட்டியை விலக்கி அவளை இழுத்து சென்றார்.

இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

சாலமன் கையில் அந்த புத்தகத்தை எடுத்து பார்த்தான்.

அட்டையில் உப்பு நாய்கள். லக்ஷ்மி சரவணக்குமார். என்று இருந்தது.

படிக்க விரும்பி நடுவில் ஒரு பக்கத்தை விரித்தான்.

மனதுக்குள் வாசிக்க ஆரம்பித்தான்.

வரிகள் ஓடின. கதை ஒன்றும் புரியவில்லை. இவாஞ்சலின் என்னும் கன்னியாஸ்திரியை சம்பத் விடுதிக்கு அருகில் வைத்து என்னமோ செய்து கொண்டு இருக்கிறான் என்பதை ஓரளவு புரிந்து கொண்டான்.

நிழல் மோதும் போது சாலமன் முகத்துக்கு அருகில் நாயர் சத்தமாய் காற்று பிரித்தான். வசந்தி நீ அண்ணாள் கூட போய்க்கோ என்றான்.

சாலமன் புத்தகத்தை மூடி விட்டு அவளை பார்த்தான். உன் பேர் வசந்தியா என்றான்.
இல்ல என்றாள். யாரும் இங்கே ஊரும் பேரும் சொல்ல மாட்டார்கள்.

அவள் உடுப்புகளை அள்ளி திணித்து கொண்டாள். அவன் கையில் இருந்த புத்தகத்தோடு இன்னும் சில புத்தகங்களை எடுத்து திணித்து கொண்டாள்.

சாலமனுக்கு என்னவோ போல் இருந்தது. தூத்துக்குடி தாண்டி மதுரை தாண்டி அவன் எங்கும் போனது இல்லை. இந்த வேலை செய்யும் தொழிலாளி புத்தகம் படிப்பது வேதனையாக இருந்தது.

நாயர் பக்கம் திரும்பினான். இன்னொரு பாட்டிலை எடுத்து கொடுத்தான்.

நாயர் அவன் நம்பரை வாங்கி கொண்டு காலையில் தக்கலை பஸ் ஸ்டாண்டுக்கு மிச்ச பார்ட்டிகளை அனுப்பி விடுவதாக கூறினான்.

இருவரும் செம்மண் பாதையில் வெயிலில் கிறுகிறுத்து நடந்தனர்.

நம்மட வீட்ல தங்கிகிரியா புள்ளே…

செரி… ஆரூ இருக்காக அவடே.

அம்மை.

அவுக தொழில் பாத்தாவுளா.

பரம்பரை தொழில்….

பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர்.

நீ இப்ப படிக்கிரியா புள்ள. இல்ல ஸ்கோலில் போய் படிச்சிருக்கியா… கொஞ்சம் நெருக்கம் அவர்களுக்குள் வந்து இருந்தது.

கதே படிப்பேன். அப்பேன் அம்மே எல்லாம் மூணாறு டீ எஸ்டேட்ல சோலி பாத்தாக. அங்கேனே பாரிசாதம் னு ஒரு பேரெண்டு. அதுதேன் படிக்க காட்டி சொல்லிச்சு.

சம்பத் சாலமனின் மனதுக்குள் சுற்றி கொண்டு இருந்தான். இந்த புத்தகம் எனக்கு படிக்க தரியாலே?

நீ படிப்பியா?

இல்ல…மாட்டேன். ஆனா இது படிக்க நெல்லா இருந்துச்சு…

வூட்ல வந்து தாறேன்.

கையை சுழற்றி கம்பிக்கு மேல் போட்டு கொண்டான். அவள் கழுத்தை கை உரசியது. அவள் வியர்வையில் இருந்து அணைந்து போன ஊதுபத்தியின் வாசனை வந்தது. பஸ் விரைந்தது.

வீடு வந்த மதியம்.

சாலமன் அம்மா கோழி அடித்து சமைத்து இருந்தாள். இருவரும் அவசரமாக சாப்பிட்டு முடித்து அங்கேயே பக்கத்தில் படுத்து தூங்கினர்.

சற்று நேரம் கழித்து சாலமன் அவள் மீது காலை போட்டதும் சாலமனின் அம்மா சிரித்து கொண்டே வெளியேறினாள்.

🐋🐋🐋🐋🐋

இசக்கியின் வீட்டுக்கு போனபோது அவர் மூங்கிலில் பலூன் சொருகி பீப்பி செய்து கொண்டு இருந்தார்.

கோவிலில் பங்குனி கோடை திருவிழா வரும்போது அதில் பணம் பிரிக்க முடியும் என்று கணக்கிட்டு அவசர அவசரமாய் வேலையில் ஆழ்ந்திருந்தார்.

மோனே, போய்ட்டு சாதிச்சியாலே…

ஆச்சு பெருமை….

காரியத்தில் கண்ணா இருந்துக்க. மின்னாடி மாதிரி இல்ல பொழப்பு…

சரிதான் பெருமை….

இரவு மணக்க ஆரம்பித்தது.

வசந்தியோடு பேச வேண்டும் போல் அவனுக்கு ஆசையாக இருந்தது.

தேவுனு அக்காவிடம் ஒரு சிரட்டையில் ரம் வாங்கி குடித்து விட்டு வசந்திக்கும் ஒரு பாலிதீன் பையில் வாங்கி கொண்டு வீடு நோக்கி நடந்தான்.

🐬🐬🐬🐬🐬

அன்று…

செம்பிரியான் டச்சு குப்பத்துக்கு வந்து விட்டான் என்ற செய்தியை கடல் காற்று வீட்டுக்கு வீடு ஊதிக்கொண்டு இருந்தது.

சாலமன் திகைத்து நின்றான்.

முற்றும் ஒழிந்த பகை அது என்று அவன் நினைத்து இருந்தான். இனி அப்படி அல்ல என்று அவனை கடந்த நிழல்கள் கதறின.

அடியாள்களை சப்ளை செய்வதும் சிங்கப்பூருக்கும் வளைகுடாவுக்கும் குருவிகள் அனுப்புவதும் செம்பிரியான் வேலை.

ஒருமுறை சாலமன் போட்டியாக அதில் தலை கொடுத்த போது வசமாய் சிக்கி கொண்டான். போலீஸ் செம்பிரியானை சேர்த்து கொத்தி கொண்டு போனது.

இப்போது எல்லாம் முடிந்து இப்படி வருவான் என்று நினைக்கவில்லை.

இசக்கி பின் வாசல் வழியாக ஓடி வந்து சாலமன் கையில் பணத்தை திணித்து உடனே ஆரல்வாய்மொழிக்கு ஓடி விட சொன்னதும் சாலமனுக்கு புரிந்து போனது, இனி சிக்கினால் அவன் உயிர் அவனுடையது இல்லை.

பயம் தெறிக்க ஊளையிடும் நாய்கள் சாலையில் மிரள அவன் ஓடினான்.

பஸ் பிடித்து நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டில் இறங்கி ஒரு திட்டில் அமர்ந்தான்.

நள்ளிரவில் மனம் பதைக்க ஒரு யோசனையும் புரியாது நின்றான்.

வசந்தியின் நினைவு வந்தது. வசந்தியின் நினைவு பிடரியில் அறைந்தது.

வயிற்றில் பயமும் காமமும் பின்னிக்கொண்டு சூறாவளியாகி சுற்றி கொண்டே இருந்தது.

ஆனது ஆகட்டும் என்று விடிகாலையில் முதல் பஸ் பிடித்து மண்டைக்காடு போனபோது அடுத்த மினி பஸ் வரும் வரை காத்திருக்க நேர்ந்தது.

வராது என்றார்கள்.

இனி காத்திருக்க ஒன்றும் இல்லை என்று நடக்க ஆரம்பித்தான்.

வசந்தியின் நினைவு அவனை படுத்தி எடுத்தது. ஆற்றாமை பொங்கியது.

மனம் சப்திக்க மறுத்து ஒடுங்கி கிடந்தது. சாலமனுக்கு அன்று முதன் முதலாக ஒன்று புரிய ஆரம்பித்தது.

நிச்சயமாக அந்த புரிதல் முன்பு போல் இல்லாமல் வேறொன்றாய் இருந்தது.

சாலமனுக்கு தன் தங்கையின் நினைவு வந்தது. உன் தங்கை இப்போது ஒரு ரொட்டி போல் இருப்பதாக அவனுக்குள் யாரோ சொன்னார்கள்.

அவன் வேகமாய் நடந்தான்.

🐬🐬🐬🐬🐬

டச்சு குப்பம்.

இசக்கியின் படகுக்கு பின்னால் கொஞ்ச நஞ்ச பாகத்துடன் அந்த பிணம் கிடந்தது.

உள்ளூர் ஆள் இல்லை என்றதும் வெளியில் இருந்து கொண்டு இரவில் வந்து போட்டிருக்கலாம் என்று பேசிக்கொண்டார்கள்.

🐟🐟🐟🐟🐟

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.