நொதுமி 67


நான் யாராக இருக்கிறேன். நான் யாராக இருக்க கூடாது. ஏன் இங்கு இருக்கிறேன். இனி எங்கு செல்ல போகிறேன் என்பதெல்லாம் ஸ்பரி எனக்கு எப்போதும் முக்கியமல்ல.

நான் கடந்து போகும் என்னை கடந்து போகும் ஒரு மனிதன் அளவில்லாத சர்ச்சையை மட்டும் உருவாக்கி விட்டு செல்கிறான்.ள்.

உனக்கு புரிகிறதா?

நான் ஒருவிதமான பொறாமையில் தவிக்கிறேன். இந்த பொறாமை என்னிடம் இன்றல்ல நேற்றல்ல பல யுகங்களாக இருப்பது போன்று உணர்கிறேன்.

நான் கிழித்து வைக்கப்பட்ட தாள் போல் சிடுசிடுவென துடிக்கிறேன்.

எனக்கு ஆசைகள் இல்லை. பின் தேவைகள் இல்லை. என்னை உதறிச்சென்ற நான் விலகியவை என்று ஏராளமானவை இருக்கிறது.

ஆனால் இன்று பொறாமை என்ற அதை பார்த்து விட்டேன். அதுதான் எனக்கு இதுநாள் வரையிலும் பல ஆலோசனைகளை சொல்லியும் பல காட்சிகளை ஒப்பிட்டு காட்டியும் இதுநாள் வரை வந்து இருக்கிறது.

நான் என்னிடம் கொண்டிருக்கும் அக்கறை ஒவ்வொரு விதத்திலும் ஒரு விபத்தாக உணர்கிறேன்.
இப்படி இருக்கும் எனது அக்கறை மிகவும் கவித்துவம் மிக்கது. ஒரு சராசரிக்கும் அப்பால் நீண்டதோர் பார்வை அதற்கு இருக்கிறது.

என்னை யார் இப்போது அழைக்க போகிறார்கள்? எந்த மேடைதான் எனது என்ற கூக்குரல் கேட்கையில் அந்த பொறாமையை முழுதாகவும் நேர்மையாகவும் புரிந்து கொள்ள முடியவில்லை.

நான் சொல்ல விரும்புவது இது அல்ல ஸ்பரி, புரிகிறது.

அது நீண்ட விசாரணை மிக்கது. ஒரு சில செய்யுள்களில் கடவுளை பார்க்க முடியும். ஒருமுறை நாம் சந்திக்கும் பெரிய மனிதர்களை உடனே புரிந்து கொள்ள முடியும் என்பதான பிரமைகளை நான் விட்டு நழுவுகையில்தான் என்னை தகிக்கும் பொறாமையை நான் உணர முடிந்தது.

ஸ்பரி, நீ உன் அருகில் இருப்பது இல்லை. நான் சந்தைகளில் காண கிடைக்க மாட்டேன். ஒரு காட்டை நகர்த்துவது எனது வேலை. நீண்ட ஒளியாண்டுகள் பின் நிலைத்து நிற்கும் சொற்கள்தான் முக்கியம் என்று சொல்லி இருக்கிறாய்.

நான் அதை புரிந்து கொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை. நீயே கூறு, இந்த பொறாமையை விட்டு நான் நானாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒரு துறவியாக வாழ என்னால் முடியாது.

நான் ஒரு அடையாளத்தின் முன்னால் நின்று ஜெபிக்க கற்ற வளையல்களின் ஓசையை பெரிதாக கற்பனை செய்து பார்க்க கூடியவள். எந்த அதிர்ச்சியையும் நான் வீணாக்க விரும்புவதில்லை.

அவை குளத்து பேய்கள் போலவே என்னை ஊக்குவிக்கின்றன.

அப்படியெனில் ஸ்பரி,

இவைகள்தான் பொறாமைக்கு ஒரு காரணமா? அல்லது இவைகளே பொறாமையா? நான் என்னுடைய வீழ்ச்சிகளை மட்டும் நம்பி அதை விழைகிறேனா?

உன்னால் என்னை இப்போது புரிந்து கொள்ள முடிகிறதா என்று அவள் கேட்டாள்.

மொட்டை மாடியில் நின்று பேசி கொண்டிருந்தோம். யார் யாரோ விடும் பட்டங்கள் மட்டும் வானில் ஒன்றையொன்று துரத்திகொண்டு விளையாடியபடி இருந்தன.

துரத்தி துரத்தி வாழும்போது நீ சொல்வதும் சரியாக இருக்கலாம் என்று அவளிடம் சொன்னேன்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.