நொதுமி 66


மன்னவனூர் வி. மு.  கருப்பையா என்ற நண்பனிடம் வாட்ஸாப்பில் யதார்த்தம் என்பது ஒரு சின்னம் போல் நம்மால் நிறுவி மக்களை கொண்டு ஆதரிக்கும்படி செய்ய முடியுமா என்று கேட்டதற்கு இந்த பதிலை அனுப்பினான்.

நிகழ்கின்றன என்ற கலத்துக்குள் கிடைக்கின்ற அத்தனைக்கும் ஏராளமான பெயரற்ற வியூகங்கள் இருக்கிறது. அதை நுட்பத்தாலும் உய்த்தரிய முடியாது. நமக்கு விலகுவது என்பது மட்டுமே ஒரு நீண்ட பயணமாகி தொடர்கிறது.

பயணம் தன் நிகரற்ற அமானுஷ்ய கணிப்பில் இயங்கும். அழகான கோப்பையின் விளிம்பில் நிற்கும் எறும்புக்குள் இருக்கும் அத்தனை கேள்விகளும் நம்மிடம் நிறைந்து இருக்கிறது.

கேட்க தெரிவதற்கு கண்டறிய வேண்டும். ஒரு நூல் வழியே இறங்கி வந்து வெளியேறி விடும் வாழ்க்கைக்கு நிகழ்வது என்பது அனைத்தும் பேராபத்து அல்ல.

நான் என்னை கண்டடைய வேண்டும்.

எனக்கு உலகில் எல்லாவிதமான உரிமைகளும் இருக்கிறது. அவை மறுக்கப்பட்டவை. அவை எனக்கு உரிமம் என்று காண்கிறேன். ஒரு நடைப்பிணம் இன்னொரு அல்லது ஒரு கும்பலான நடை பிணங்களை எப்படி வழி நடத்தக்கூடும்?

நான் கரைகின்ற எந்த நொடியில் நிகழும் நிகழ்வுகளில் இருந்து வெளியேறி என்னை ஆதுரமின்றி பார்க்கிறேனோ அந்த நொடிதான் என் வாழ்க்கை. அந்த வாழ்க்கை ஞானிகளால் உருவகிக்க அல்லது தீர்மானிக்க முடியாது.

புறம் என்பது ஒரு சபதம். அகம் ஒரு போதை. நான் கவனிப்பது எதை அல்லது எப்படி என்ற கேள்விகள் கொண்டு அல்ல. ஒரு சிறிய இலை தன் மீது தவழும் வண்டை மட்டும் கூர்ந்து பார்க்கும் கவனிப்பு.

நான் ஒன்றை கவனிப்பது எனது கண்களால் அல்ல. மனதால் அல்ல.
புலன்கள் முழுக்க தொகுத்து நான் பார்ப்பதில் என்னை முழுக்கவும் பாய்ச்சுக்கிறேன். நீண்ட பாய்ச்சல் என்பது இணையற்ற சாகசம்.

என் அறிவு சமூகம் கொடுத்தது. ஆகவே அது கோணல்களை கொண்டு இருக்கும். என் மனம் சூழல் கொடுத்தது. அது கலப்படம் தவிர வேறொன்றும் இல்லை. என் சிந்தனை காலம் கொடுத்தது. அது உரிக்கப்பட்ட வன்முறை. ஆகவே நான் என் கவனத்தில் இவற்றை குறிப்பெனவும் வழிகாட்டியாகவும்  வைத்து கொள்ள மாட்டேன்.

துளித்துளியாக என்னுள் நான் நிரம்பி எனக்கு வெளியில் நான் வடிகிறேன். உயிர் என்பது ஒரு துளி. ஒரு துளிதான் அருவி. ஒரு அருவிதான் ஒரு கடல்.

கடல் தன் துளிகளை எண்ணி கொண்டிருக்க விரும்பாது. செவ்விய கருத்தால் அலங்கரிக்க முனையாது. அது இயக்கம். எந்த இயக்கமும் வெற்றி தோல்விகள் குறித்து புலம்பாது. ஆகவே என் கவனத்துக்கு நாக்கும் மூக்கும் இல்லை.

நீயாக வந்து என்னை பார்க்கிறாய். என்னிடம் பேசிவிட்டு புறப்படும் நீ நானாக மாற்றமுற்று என்னை கடந்து செல்கிறாய். பின் நீயேதான் யாரோவாகவும் மாறி விடுகிறாய். இதை நீ தேடல் என்று சொன்னால் நான் வாய் விட்டு சிரிக்கிறேன்.

தேடல் என்பது தேடுவது அல்ல. அது கண்டறிவது. கண்டறிவதற்கு ஒன்றும் தெரிந்திருக்க கூடாது.

நீ சலிப்பூட்டும் விஷயங்களில் மட்டும் தொடர்ந்து  இருந்து கொண்டு உன்னை புதுப்பித்தபடி இருப்பதுதான் மரபு.

வெளியேற வேண்டுமெனில் முழுக்க வெளியேறு. அது சாபம் அல்ல. வரமும் அல்ல.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.