நொதுமி 65


அந்த காலண்டரை பின்புறம் சரேலென அப்பூதி திருப்பியதும் அந்த பக்கத்தில் ஒரு பிள்ளையார் படம் இருந்தது.

அந்த படத்தில் விசேஷமாக ஒன்றும் இல்லை எனினும் நவீன கோட்டோவியத்தில் கருப்பு நிறம் கொண்டு பட்டையாக ஒளிர்ந்தது.

காந்தியை நமக்கு தெரியும். காந்தி முக்கியம்தான். ஆனால் காந்தியை விட இந்த பிள்ளையார் வெகுவாக முக்கியம் அல்லவா மக்களுக்கு. ஏன்?… காந்திக்கே இவர் முக்கியம். ஆனால் இவரை நாம் பார்த்ததும் இல்லை. இனி பார்க்க போவதும் இல்லை என்றார் அப்பூதி.

அப்பூதி ஒரு ஆன்மீகவாதி. எனக்கு அது நன்றாக தெரியும். ஆனால் அவரை பெரும்பாலோர் அப்படி ஏற்று கொள்ளவில்லை. அவரை நாம் ரசிக்கலாம். அப்பூதியை கொண்டாட ஒன்றும் இல்லை என ஒதுக்கப்பட்ட ஒரு மனிதர்.

நான் ஆன்மீகம் மூலம் கடவுளை கண்டறிய சேவிக்க சேவகம் புரிய ஒரு நாளும் முனைய மாட்டேன். என்னிடம் பக்தி அன்பு நாட்டம் என்று எதுவுமில்லை.

ஆனால் கடவுள் எப்போதும் இதை நம்மிடம் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் அவரிடம் எனக்கிருக்கும் ஈர்ப்பு.

நான் அப்பூதி என்பது கூட தனக்கு இரண்டாம்பட்சமே என்று எனக்கு சொன்னார்.

அவரிடம் ஆன்மீக தோரணைகள் எதுவும் இல்லை என்றாலும் அவர் அருள்வாக்கு சொல்லக்கூடும் என்று சிலர் பின்தொடர்ந்து வாங்கி கட்டிக்கொண்டு ஓடினர் என்பதும் எனக்கு தெரியும்.

கடவுள் என்பவர் அனுபவங்களில் இருந்து திருடப்பட்டவர். பின்னர் மதங்களும் சமயங்களும் அவரை கொள்ளையடித்தன. இன்னும் பின்னர் கடவுள் தன்னையே வெறுத்து கொள்ளும்படி ஒன்று இருக்குமானால் அதுதான் பக்தி என்று ஒன்றை திரித்து வைத்து அவரை கொண்டாட்டங்களில் சிக்க வைத்தது மட்டுமே என்றார்.

உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று என்னிடம் கேட்டார். நான் மௌனமாக மட்டும் இருந்தேன்.

இருக்கட்டும். மௌனம் என்பதும் கூட இறைவனுக்கு ஆதரவை தெரிவிக்கும் ஒரு விரதம்தான்.

அவரை ஏற்றுக்கொள்ள ஒருவர் தன் வாழ்நாள் முழுக்க தனக்கு மிஞ்சிய எந்த ஒன்றையும் தனக்கு என்று வைத்து கொள்ள கூடாது.

அது பணம் என்பது மட்டும் அல்ல அதிகாரம் அன்பில் ஆரம்பித்து சகலமும் அடங்கும். நம் பிறப்பின் முதல்நாளை நமது நினைவுக்குள் கொண்டு வந்து அதை மட்டுமே பின் ஒவ்வொரு நாளாக மாற்றி வைத்துக்கொண்டு வாழ்ந்து வர வேண்டும் என்றார் அப்பூதி.

கடவுள் இருப்பை உணர்வது குறித்து…. என்று கேட்டேன்.

அது சராசரி மனிதர்களின் சராசரி அனுபவங்கள். நான் அதற்கென்று கடவுளை தேடுவதும் இல்லை. ஒரு
மனிதனின் மீட்சி என்பது அவன் தன்னிடம் தானே கொண்டிருக்கும் வாஞ்சையை பின் பயத்தை கட்டோடு முற்றும் நீக்குவதுதானே தவிர அதையும் அதனோடு உள்ள மற்ற சார்புகளையும் வைத்து ஒரு மாதிரி சமாளித்து கொண்டு வாழ்வது அல்ல என்றார் அப்பூதி.

பேசிக்கொண்டிருக்கும் போதே சிலர் அறைக்குள் வர நான் திரும்பி வீட்டுக்கு வரும்படி ஆகி விட்டது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.