நொதுமி 64


முருகேசனை பார்க்க வேண்டும் என பிரேம் வந்து நின்றபோது நான் அவனுடன் செல்ல வேண்டி வந்தது

ஆற்றின் மறு கரையோரத்தில் அவன் வீடு இருந்தாலும் நகரின் ஒரு சாய்வான தெருவுக்குள் ரைஸ்மில் கடை வைத்திருந்தான்.

முருகேசன் அந்த அரவை இயந்திர ஒலி ஒரு பறவையின் திருமண நிகழ்ச்சிக்கு போய்விட்டு வந்த உணர்வை அடிக்கடி எனக்கு தரும் என்று என்னிடம் கூறுவான்.

ஆனால் இன்று அது ஒரு சாதாரண சந்திப்பு என்றே சொல்ல முடியும்.

பிரேமை கண்டவுடன் கட்டி அணைத்து கொண்டு முருகேசன் குடும்ப நிலை விசாரித்தான். பின் பேச்சு ஒரு தீவிர உரையாடலாக மாறியது.

சக மனிதனை பற்றிய நம்முடைய யூகங்கள் என்பது எப்போதும் நமக்கு பிடித்த அல்லது ரசித்த ஒன்றாகவே இருக்கிறது. ஏனெனில் ஒரு மனிதனை பற்றிய நினைவுகள் மூலமே நாம் நமது யூகங்களை இன்னும் புதிய வார்ப்புகளுடன் துவங்குகிறோம் என்றான் முருகேசன்.

பிரேம் இடையில் குறுக்கிட்டு அப்படி அல்ல முருகேசா இதை இன்னும் ஆழமாக பார்க்க வேண்டும் என்று பேசலானான்.

எப்படி இருந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தனது இன்னொரு போலியை ரசிக்கவே இந்த யூகங்கள் வேண்டி இருக்கிறது.

ஒருவனுக்கு தன் அசலான நினைவுகள் அவனுக்கு எப்போதும் கவனத்தை மட்டுமே உரக்க கூறிக்கொண்டு இருக்கும். அவன் தன் கவனத்தை மட்டுமே கொண்டு எப்படி திரவத்தை பாய்ச்ச முடியும்?

யூகங்கள் ஒரு நிம்மதி. அது நீண்ட சஞ்சலத்துக்கு பின் வரும் சற்று நேர ஆறுதல். ஒரு பழி தீர்க்கும் படலத்துக்கு விடப்படும் சின்ன இடைவேளை.

நரகம் குறித்து தெரியும். நரகம் குறித்து நாம் யோசிப்போமா என்று முருகேசன் கேட்டான்.

மாட்டோம்தான். ஆனால் சொர்க்கம் இருக்கும் வரை நரகம் இருக்கும்.
ஒரு மனிதன் தன்னிடமிருக்கும் போலி மனிதனை பற்றி மிக நன்கு அறிவான். அவன் சகலவிதமான தொகுப்புகளில் இருந்து கூட்டி உருவாக்கப்பட்ட அசல் மனிதனின் ரகசிய பிரதி.

டேய் மனிதா என்று உன்னை யார் முதுகின் பின்னே அழைத்தாலும் நீ திரும்பி பார்க்க மாட்டாய். ஆனால் முருகேசா என அழைத்தால் நீயும் இன்னும் கூட  ஆறு அல்லது மூன்று முருகேசன்களும் திரும்பி நின்று பார்க்க்கூடும். ஆனால் நீ மனிதன் மட்டுமே என்பதை இங்கு நினைவு கூற வேண்டும் என்றான்.

ஆனால்… பிரேம், உனக்கு வரும் கனவுகள் என்பது உன் போலியின் கனவுகள் அல்ல. உன் கனவுக்கு பின்னூட்டம் உனக்கு மட்டுமே தெரியும். உன் மனதில் நிகழும் உரையாடல் உன் போலி கூடவா அல்லது உன் யூகங்கள் மட்டுமா?

என் சிந்தனைகள் என்பது எனக்கு பிடித்த யூகங்களாக ஏன் இருக்க கூடாது? அனுபவம் கல்வி மற்றும் அறிவால் கட்டமைக்கப்பட்ட ஒரு விருந்து நான். எனக்கு நானே விருந்து படைத்து கொள்கிறேன்.
அதை குறிக்கோள் லட்சியம் என்கிறேன். நீயோ உன் வடி கட்டிய பேராவல் அவை என்கிறாய்.

அப்படி அல்ல பிரேம்… நாம் முன் செல்வது என்பது கட்டுக்குள் இருக்கும் ஒரு விஷயம். ஆனால் பின்னடைவை உருவாக்கி கொள்வது இயல்பில் சாராத ஒன்று. இதையே சொல்கிறேன் என முருகேசன் சொன்னான்.

நீ என்ன நினைக்கிறாய் என்று பிரேம் என்னிடம் கேட்டான்.

ஒரு பொழுதுக்குள் இதை நாம் பேசி விட முடியுமா? இப்போது நல்ல சாரல். நாம் வயல்வெளி பக்கம் காலாற நடந்தால் என்ன என்று கேட்டேன்.

அப்படியே செய்வோம். அது இன்னும் உற்சாகமாக இருக்கும் என்று பிரேம் கூற நடக்கலானோம்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.