நொதுமி 68


பின் நவீனத்துவம் குறித்து இன்று பேசலாம் என என்னுடைய நண்பர்கள் முடிவு செய்திருந்தனர்.

இது அடுத்த போலியான வரவு. மேற்கத்திய நாடுகள் தங்கள் மீளாத குழப்பத்தின் புது சந்திப்பை இங்கே ஏன் உருவாக்க வேண்டும் என்று ரபீக் கேட்டான்.

ஒரு படைப்பு மொழியாக இதை நாம் பேசலாமே என்று அன்பு கேட்க அதை ரபீக் ஏற்று கொள்ளவில்லை.

படைப்பு அதன் குரலில் மட்டும் பேசட்டும். வாழ்க்கையை இனி நாம்  தத்துவத்துக்குள் முக்கி எடுத்து பார்க்க வேண்டாம். அதன் தீவிரம் அல்லது சாந்தம் எல்லாம் ஒரு குறுக்கு வழிக்குள் கொண்டு சென்று முடக்க கூடாது என்றான்.

நான் இவற்றை அமைதியாக கேட்டு கொண்டு இருந்தேன்.

நீ வெளியேற வேண்டிய ஒரு நேரம் என்று இருக்குமானால் அதுதான் வாழ்க்கையை தத்துவத்தின் மீது உலர்த்தி பார்ப்பது.

ஒரு செயல் அல்லது ஒரு காரணம் அல்லது ஒரு நிகழ்வு என்று பல பொழுதுகளை ஏன் அதன்மீது அடுக்கி வைத்து கொள்கிறாய்? இங்கே பேசுவது கடந்த காலத்தை பற்றி அல்ல என்றான் ரபீக்.

படைப்பை ஏன் இறந்த காலத்தில் நீ புதைக்கிறாய்? உன் இறந்த காலம் வேறொரு நபருக்கு எதிர்காலம் என்று அன்பு கூறினான்.

காலம் ஒரு பாதை. அதை சின்னம் கொடி நிறம் உணர்வு தேவைகள் என்று வரையறை செய்வதுதான் நம் சிக்கல்கள் கூடி பரிணமிக்க வாய்ப்பு அளிக்கிறோம்.

அன்பு, ஒரு படிப்பறிவற்ற மனிதனுக்கு நீ சொல்ல விரும்புவது என்ன?

ஒன்றும் இல்லை என்பதும். பின் நமக்கு எப்போதுமே ஒன்றுமே இருக்கவில்லை என்பதும்தான்.

இல்லை அன்பு… நீ உடைக்க விரும்பியது அதிகாரத்தை மட்டுமே மனிதத்தை அல்ல. மனிதம் தன் கோட்பாடுகளில் பரிதவிப்பது போதும் என்கிறேன் என்றான் ரபீக்.

நான் தொகுக்க விரும்புவது மனிதம் குறித்து அல்ல. அதில் விசையுற்று நிற்காது இயங்கும் எழுச்சியை.

ஒருவரையொருவர் ஆழ்ந்த பிடிப்புடன் பின்பற்றுவது அன்பின் மீது சாபம் விதிப்பது. பின்பற்றும்போது நம் சுயம் மடிந்து முனைப்பு கூடி விடுகிறது. நம்மை அவமதிக்க ஒருவரை தோளில் சுமப்பானேன் என்றான் அன்பு.

நாம் சார்த்தரில் இருந்து இதை பார்க்க வேண்டும் என கூறினேன்.

இல்லை. நீட்ஷேவை கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அந்த மனிதனை விலக்க முடியாது என்றான் ரபீக்.

நாளை இதை தொடரலாமா என்று கேட்டேன். அடுத்த வாரம் என்று அன்பு சொன்னதை மற்ற நண்பர்களும் ஏற்றுக்கொள்ள வீடு வந்து சேர்ந்தேன்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.