நொதுமி 55


நான் மாடியில் இருந்து பார்க்கும் போது சக்ஸேனா தன் ஜூனியருடன் சாலையில் மெல்ல நடந்து கொண்டு இருந்தார்.

அவர் தன் நூலக அறையில் இருந்து இப்படி வெளியே செல்லும் முன் தன் தொப்பியை அணிந்து கொள்வார். அப்படி என்றால் அவர் வெரோனிகா பூங்காவுக்கு செல்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும்.

நான் இங்கிருந்து இந்த காட்சியை பல நாட்கள் பார்த்து இருக்கிறேன்.
அவர் ஒருவேளை சாலையில் டாப்ளர் மரத்தடியில் என்னை பார்த்தால் ஒரு புன்னகை செய்வார்.

அந்த புன்னகை எனக்கு மீண்டும் மீண்டும் அந்த நாளை நினைவூட்டும்.

அந்த நாள் என்றால் சில வருடம் முன்பு ஒரு கார்த்திகை மாதத்து பனி நிரம்பிய அதிகாலை நேரம்.

நான் என் பணி நிமித்தமாக ஒரு உதவி வேண்டி அவர் நூலகம் சென்று இருந்தேன். அது கோதிக் பாணியில் கட்டப்பட்ட ஒரு நூலகம். உள்ளே பல புத்தகங்கள் ஒரு ஆளுயர க்ளோப், தூசிகள் படியாத உலகம் மற்றும் இந்திய வரைபடம் இருந்தன.

அதன் பின் இன்னொரு வரைபடமும் தலைகீழாக மாட்டி இருந்தது.

அது சாக்சேனியர் காலத்து பிரிட்டன் நிலப்பரப்பை குறிக்கும் வரைபடம். அதில் ஓரிடத்தில் ஒரு கறுப்பு புள்ளி வைக்கப்பட்டு சில அடிக்குறிப்புகள் எழுதப்பட்டும் இருந்தன.

இங்கே உங்கள் ஊர் கருமாரியம்மன் சிலையை நான் பார்த்திருக்கிறேன் என்று அவர் சொன்னார். அதில் நான் ஆச்சர்யம் கொள்ளவில்லை. சில கடற்கொள்ளையர் மூலம் அதுவும் சாத்தியம் உண்டு என்பதை புரிந்து கொண்டேன்.

அவர் கியூபா நாட்டில் வாங்கிய சுருட்டை நெருப்பூட்டி கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.

நான் சில தெலுங்கு இதழ்களில் வந்த கட்டுரைகளை சரியான நபர் மூலம் தனக்கு மொழிபெயர்த்து தர வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
அது எளிதுதான் என்பதால் நானும் ஏற்று கொண்டேன்.

அதற்கு பிரதியாக அவர் நூலகத்தில் இருக்கும் மௌண்ட்பேட்டன் பற்றிய சில ஆவணங்களை படிக்க அனுமதி கோரினேன். அதை படித்து பார்க்க அனுமதி கொடுத்தவர் எந்த பிரதியும் எடுக்க கூடாது என்றும் கூறினார்.

அங்கே சில நாட்கள் இப்படியாக சென்றன. மொழிபெயர்க்க வந்த விட்டல் ராவ் ஒரு தனியார் மியூசியம் ஒன்றில் களஞ்சிய பராமரிப்பு பணியில் இருந்தவன். என் நெடுநாள் நண்பனும் கூட.

அவனுக்கு மொழிபெயர்ப்பு மிக எளிதாக இருந்தது என்றாலும் அது ஒரு குற்ற செயல் பற்றிய அறிக்கை என்பதால் அவனுக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே வந்தது.

ஒருநாள் சக்ஸேனா ஒரு பெண்ணை அழைத்து வந்து இவள் தன் ஜூனியர் என்று அறிமுகம் செய்தார். அந்த பெண் கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவில் பிறந்து கோல்கட்டாவில் பட்டம் பெற்று இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டேன்.

அவள் கற்ற பல்கலைக்கழகத்தில் சக்ஸேனா தம்பி கௌரவ்வும் பணி புரிந்து இருக்கிறார் என்று அவள் சொன்னாள். அவர் தம்பி பற்றி சக்ஸேனா எதுவும் சொல்லவில்லை. நாங்களும் கேட்கவில்லை.

விட்டல் ராவ் ஒருநாள் பதற்றத்துடன் இருந்தான். அவன் அந்த நூலகத்தில் இருந்த டெரகோட்டா குதிரையின் சிலையை நகர்த்த முயன்ற போது அதன் அடியில் இருந்த கீழே சில காகிதங்கள் விழுந்தது என்றும் அதில் தேதி வாரியாக சிலரின் மரண விபரம் குறிக்கப்பட்டு இருந்தது என்றும் அந்தந்த காலத்தில் அந்த வீட்டில் சிலர் இறந்து போய் உள்ளனர் என்றும் சொன்னான்.

இவை எல்லாம் யதேச்சையாக இருக்கும் என்று சொல்லி விட்டேன்.
ஆனால் மறுநாள் தன் பணியில் இருந்து விட்டல்ராவ் விலகி விட்டான்.

இது குறித்து சக்ஸேனா என்னிடம் வருத்தம் தெரிவிக்க நானும் அவரிடம் மன்னிப்பு கோரினேன். அவர் ஒரு பெரும் தொகையை விட்டல் ராவுக்கு அனுப்பி வைத்தார். பின் நானும் அவரும்  நூலகத்துக்கு முன் இருந்த முற்றத்தில் வெங்கல உலோகத்தால் வடிக்கப்பட்ட யூனிகார்ன் சிலைக்கு கீழே ரம் குடித்து கொண்டிருந்தோம்.

ஜூலை ஒன்று என்பது எங்கள் குடும்பத்துக்கு சற்று கடினமான நாள் என்றார். அன்றுதான் என் தம்பியை ஒரு விபத்தில் இழந்தேன். அதுவும் மறக்க கூடியது அல்ல என்றார்.

நான் அதை விவரித்து கேட்க மனம் இல்லை. எனவே அன்றொடு நான் அவரை சந்திக்க செல்லவில்லை.

இதற்கிடையில் விட்டல் ராவ் ஏதோ ஒரு காரணத்தினால் மனம் ஒடிந்து தன்னை மாய்த்து கொண்டான் என்று செய்தி வந்தது. அது போன வருடம் ஜூலை ஒன்று.

எங்கள் தெரு வழியே ஒரு ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது. கொரோனா அபாயம் சற்றே நீங்கிய நேரத்தில் இது என்ன என்று நான் மாடியில் இருந்து பார்க்கும்போது அது பூங்காவுக்குள் சென்றது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.