நொதுமி 56


என் தோழி ஒருவளுடன் இன்று மீண்டும் பேசும் வாய்ப்பு வந்தது.

அவள் தன் இடுப்பு பெரிதாகி கொண்டு வருவதை குறித்து நீண்ட நாள் அங்கலாய்த்து கொண்டாள்.

உன் இடுப்பு இப்போது மெலிந்து இருக்கிறதா என்று கேட்டேன். நான் இன்னும் பயிற்சிகள் செய்கிறேன் என்றவள் தன் அனுபவம் ஒன்றை குறித்து பேச ஆரம்பித்தாள்.

ஒரு சிறிய நடுத்தர ஏற்றுமதி நிறுவனத்தில் பணி புரியும் அவள் ஒரு புள்ளிவிவர ஆய்வுக்காக அதே நிறுவனத்தால் அழைக்கப்பட்டு இருக்கிறாள்.

அவள் அந்த அறைக்குள் சென்ற போது ஆறு நபர்கள் ஆண்கள் இருந்தனராம். அறை மிகவும் பெரிதாக காற்றோட்டம் மிக்க ஒரு அமைதியான அறை என்று அவள் தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்.

நான் அந்த ஆண்களை பார்த்தபோது முத்துமாணிக்கமும் சங்கர்லாலும் இருந்தார்கள். ஆனால் நாங்கள் யாரும் யாருடனும் பேசி கொள்ளவில்லை.

இது ஒரு முயற்சி என்று எழுதப்பட்ட கோப்பு எங்களுக்கு தரப்பட்டது. நாங்கள் அதை பெற்று கொண்டு எங்களது இருக்கைக்கு சென்று அமர்ந்தோம்.

இருக்கைகள் நேர்த்தி இன்றி ஒழுங்கற்று அங்குமிங்குமாக போடப்பட்டு இருந்தன.

அறைச்சுவரில் வெளிச்சம் வழியும் படி ஒளியூட்டப்பட்டு இருந்தது.

யாரும் யார் கூடவும்  பேசி கொள்ள பார்த்துகொள்ள அனுமதி இல்லை.

எங்கள் கோப்புகளை படித்து அதில் உள்ள வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும் என்ற குறிப்பும் இருந்தது.

அறைக்குள் ஒரு பூனையை உலவ விட்டு இருக்க அது அங்குமிங்கும் சுற்றி விட்டு பின் படுக்கவும் விழிக்கவும் அலையவும் செய்தது.

அறை நடுவில் ஒரு பழைய பாய்மரக்கப்பல் பொம்மையை வைத்து அதில் சில கேக்குகளை ஓட்ட வைத்திருந்தது பார்க்க புதுமையாக இருந்தது.

சுவரில் டின்டோ ப்ராஸ் இயக்கிய திரைப்படங்களின் போஸ்டர்களை ஒட்டி இருந்தனர்.

நான் எனது கோப்பை விரித்து படிக்க ஆரம்பித்தேன்.

நூதனமான உரையாடல் போலவே அது இருந்தது. சில கேள்விகள் இன்னும் என் மனதில் இருக்கிறது.

கரடிப்படங்கள் பிடிக்குமா?

சொர்க்கத்தில் வளைகாப்பு நடத்த அனுமதி கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒரு நதி உங்களோடு பேசும்போது அதனிடம் என்ன கேட்பீர்கள்?

ஒப்பிட்டு பார்ப்பதில் நாம் தவற விடும் ஒவ்வொரு பொருளும் ஏன் கண்ணாடி பாத்திரமாக மட்டும் இருக்கிறது?

புல் என்றால் என்ன?

டி என் ஏ என்ற புழுக்கூட்டத்தில் நீங்கள் பயணிக்க நேர்ந்தால் எதை அல்லது யாரை வழிகாட்டியாக கொள்ள விரும்புவீர்கள்?

இந்த அறையில் உங்கள் நண்பர் யாரேனும் உள்ளனரா? அவர் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறியது உண்டா?

கேள்விகளை தவிர்க்க முடியாது அல்லவா? நான் படித்து கொண்டே இருந்தேன். பின் வேறு பக்கத்தில் சில படங்கள் பிரதிகளை எடுத்து இணைத்து இருந்தனர்.

அவை ஓவியங்கள்.

வர்ணக்கலவைகள் கொண்டு அது எந்த அலங்காரமும் இன்றி சில கோடுகள் குறுக்கில் நெடுக்கில் இருந்தன.

தாலமியின் கடற்பயணம் என்ற குறிப்பு அதில் இருந்தது. இவன் யார் என்று கேட்டாலும் எங்கோ படித்த நினைவு.

நான் பதில் எழுத ஆரம்பித்தேன்.

அந்த அறையின் குளிரூட்டி சின்ன அதிர்வும் இன்றி ஓடிகொண்டிருக்க
கேள்விக்கான பதில்கள் எனது மனதில் தெரியும் உருவகத்தை கொண்டுதான் எழுத வேண்டும் என்னும் நிபந்தனை இருந்ததால் நான் ஒவ்வொரு முறையும் ஒரு கற்பனையை பற்றி நினைத்தேன்.

நான் என் கணவனோடு கொண்ட உடலுறவு நினைவுக்கு வந்தது. என் மாமியாரின் தர்மாமீட்டர் கை தவறி விழுந்து உடைந்ததும்  நினைவில் வந்தது.

இப்படியே அப்பாவின் மரணம், அம்மா வீட்டை மறுத்து காசிக்கு கிளம்பி போனது, தொலைந்து போன பர்ஸ், தியேட்டரில் சிகரெட் பிடித்தது, கல்லூரியில் படிக்கும் போது கோபத்துடன் சுய இன்பம் செய்து பார்த்த தினம், ஒரு காட்டு எருமையை பார்த்தது…

இப்படி பல காட்சிகள் ஒவ்வொரு கேள்விக்கும் இதுதான் சரியான பதில் என்பது போல் மனதில் தோன்றி தோன்றி மறைந்தது…
நான் என்ன செய்வேன் ஸ்பரி?

நான் அந்த நேரம் மிகவும் பயந்து கோபம் குழப்பம் எல்லாம் மிகுந்து வர வாய் விட்டு கத்த வேண்டும் போல் எனக்கு இருந்தது.

முத்துமாணிக்கம் எழுந்து நின்று விட்டத்தை பார்த்து இது தூக்கம் பற்றிய ரஷ்ய ஆராய்ச்சியா என்று சத்தமாக கோபமாக கேட்டார்.

பின் தன் இருக்கையில் அவர் அமர்ந்து கொள்ள அவர் ரத்த அழுத்தம் கூடுவதை உணர்ந்தேன் நான்.

நாம் சுடப்படுவோம் அல்லது நம்மை மனித கறியாக மாற்றி  விற்க போகிறார்கள் என்று ஒருவர் முனகினார்.

நேரம் கடந்து கொண்டே போனது.

மனதில் தென்பட்ட எல்லா காட்சிகளையும் நான் பதிலாக எழுதி கொண்டே வந்தேன்.

பின் மைக்கில் ஒரு அறிவிப்பு செய்தனர்.

உங்கள் கோப்பில் இருந்த படங்கள் மட்டும் நீங்கள் கிழித்து விடலாம் என்று சொல்லிவிட்டு என்னை வெளியில் வருமாறு அழைத்தனர்.

நான் படங்களை கிழித்துவிட்டு அறைக்கு வெளியில் வந்தேன்.

ஒரு தொப்பி அணிந்த நெடிய மனிதர் டாலமி பற்றி உங்களுக்கு இருக்கும் அச்சம் என்ன என்று கேட்டார்.

அப்படி குறிப்பாக ஒன்றுமில்லை என்றேன்.

நீங்கள் இன்றோடு பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறீர்கள். உமக்கு எங்கள் நன்றி உரித்தாகுக என்றார்.

நான் அமைதியாக வெளியில் வந்தேன்.

ஸ்பரி…. வெளியில்

அதே ஆகாயம் காற்று ஒளி மிக்க சாலை, வாகன ஓட்டம்…

ஆனால் நெருக்கடி ஆபத்து விபத்து குற்றம் துரோகம் வீரம் எல்லாம் ஏன் இப்படி நமக்கு கசக்கிறது என்று யோசித்தபடி நடந்தேன்.

அந்த தொப்பி அணிந்த நெடிய மனிதன் யார்? அந்த அறை உண்மையில் என் கனவா? என் அம்மா ஏன் என்னை விட்டு போனார்? எனக்கு இப்போது ஏன் உடலுறவில் நாட்டமின்றி போனது? கரடிகளை யார் படம் எடுத்தது? கண்ணாடி பாத்திரங்கள் ஏன் உடைகின்றன? பாய்மரக்கப்பலில் இருக்கும் கேக் யாருக்காக?

ஸ்பரி…

இந்த வாழ்க்கை எவ்வளவு போலியானது என்பதை புரிந்து கொள்ள எவ்வளவு உண்மையாக வாழ வேண்டி இருக்கிறது. ஒரு மனிதனுக்கு அவனிடமே எந்த அதிகாரமும் இல்லை என்பதை புரிந்து கொள்ள எளிது. ஆனால் ஏற்றுக்கொள்ளத்தான் கடினம்.

இப்படி அவள் சொல்லி முடித்தாள்.

இன்று உனக்கு மனம் லேசாக இருக்கிறதா என்று கேட்டேன்.

ஆம்… இந்த நிகழ்வுக்கு மறுநாளே நான் என்னை சமாதானம் செய்து கொண்டு விட்டேன். வேலையை இழந்தது ஒரு கஷ்டமில்லை. ஆனால் அந்த தொப்பி அணிந்த நெட்டை மனிதரை நான் மறக்க முடியவில்லை. இப்போதும் அந்த மனிதர் என்னை சுற்றி வருவது போல் உணர்கிறேன். இது ஏன் ஸ்பரி என்று கேட்டாள்.

எனக்கும் தெரியவில்லை.

ஒருவேளை அவர் உன் இத்தனை நாள் வாழ்க்கையில் நீ சந்தித்த முதல் மனிதனாக இருக்கலாம். அல்லது கடவுளாகவும் இருக்கலாம் என்றேன்.

இனி நானும் அப்படி மட்டுமே நினைக்க போகிறேன். மீண்டும் சந்திப்போம் ஸ்பரி என்று போனை துண்டித்தாள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.