14. இதயம் என்பது சதைதான் என்றால்…


என்னவெல்லாம் நடந்து முடிந்து விட்டது. ரகு கண்களில் கண்ணீர் தத்தளித்தது.

ராயத் ஆறுதல் கூறினான்.

இன்னிக்கு உனக்கு இதுக்கு போனஸ் கூட கிடைக்கும். இப்ப இந்த கறி எல்லா இந்தோனேஷியாவின் தொழிலதிபர் கொடுக்கும் விருந்துக்கு தயார் ஆக போகுது.

எனக்கும் இது ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இப்ப எல்லாம் பழகி போய்டுச்சு. நீ இன்னிக்கு ஒரு நாள் மட்டும்தான் இந்த செக்க்ஷனில் இருக்க போறெ. நாளைக்கு திரும்ப உன் டிபார்மெண்ட்க்கு போய்டுவே. இனிமே நீ கவலைப்படாதே என்று அவனுக்கு ஆறுதல் கூறினான்.

பசு எங்களுக்கு தெய்வம் ராயத்.

எங்களுக்கும்தான். ஆனா பசி மட்டும் நம்ம எல்லோருக்கும் ஒண்ணுதானே.

இல்ல ராயத். இப்படி ஒரு காரியத்தை பணத்துக்கு நான் என் வாழ்க்கையில் செய்வேன்னு நேற்று வரையிலும் கனவில் கூட நினைக்கலை.

விடு… அமைதியா இரு.

ரகு ஒரு கொலையை செஞ்சுட்டு பின் அமைதிக்கு என்ன செய்ய முடியும் என ராயத்திடம் கேட்டான்.

ராயத்தை யாரோ தூரத்தில் கை காட்டி அழைக்க அவன் ஓடினான். என்னோட சீஃப் கூப்பிடறார். வேகமாய் ஓடினான்.

மதியம் மணி ஒன்று இருக்கலாம். இது ரகு ஒரு பிளேட் சாப்பாடும் வெள்ளரி பச்சடியும் சாப்பிடும் நேரம். இன்று அவனுக்கு வயிறு ஒட்டிபோய் இருக்க பசிக்கவில்லை.

மீண்டும் அதே வேகத்தில் ஓடி வந்த ராயத் திரும்ப வேலை வந்துடுச்சு….

அப்ப அந்த கன்னுக்குட்டி?

சுல்தான் பார்த்துப்பார்…

இப்ப எங்கே போகணும்?

ராயத் பதில் சொல்லாது வா வா ஜல்தி ஆவோ என்று வேகமாய் ஓடவும் அவன் பின்னால் ரகுவும் ஓடினான்.

ஒரு பெரிய அறை அது. கதவை திறந்து உள்ளே நுழையும் முன்பே அறையில் வெப்பம் தகித்தது. நீர் நீராவியாக மாறி கொதித்து கொண்டிருந்தது.

ஒரு அலுமினிய இயந்திரம் சுற்றி சுற்றி ஓடி இயங்கி கொண்டிருக்க அதில் நீர் நரகத்தின் வெந்நீராக கொதித்தது.

உடலில் எங்கு அந்த வெந்நீர் லேசாக தெறித்தாலும் எலும்பு வரையிலும் உடனே உருகி விடலாம் என்று ரகுக்கு தோன்றியது.

இங்கே என்ன செய்ய போகிறேன் என்று நினைக்கும்போது எங்கோ சென்ற ராயத் திரும்பி வரும் போது கையில் ஒரு பன்றிக்குட்டி இருந்தது.

தோமி…

இந்தா.. சீக்கிரம் என்றான் ராயத்.

வாய் உலர்ந்த ரகு என்ன என்றான் அவன் கால்கள் நடுங்க.

ஒன்னுமில்ல… இப்ப இதை நீ அந்த வெந்நீரில் தூக்கி போடு. தள்ளி நின்னு போடு. இந்த அயர்ன் பால் ஸ்டிக்கை கையில் வச்சுக்க.

அந்த பன்னி உடனே…

பன்னி இல்ல ராயத் இது தோமி.

இப்ப இது வெறும் பன்னி. பன்னி பொம்மை. சூடு தாங்காமல் வேகமா கத்திட்டே நீந்தி உன்கிட்டதான் வரும். அப்போ அது தலையில் ஓங்கி அடிச்சு பின்னாடி தள்ளி விடு.

கவனமா பண்ணு. அது எப்போ சாவுதோ அப்போ கொழுப்பு தனியா வரும். தோல் நல்லா வெந்து உரியும்வரை நீ இரும்பு ஸ்டிக் வச்சு உள்ளே தண்ணி இருக்கும் பக்கத்தில் குத்தி அனுப்பு. புரியுதா?

ராயத்….

இந்தா பிடி.

தோமியோ ரகுவின் கையில் தன் இரு கால்களால் ஏறி நின்று கழுத்தில் இரு கால்களை வைத்து ஏறி நின்று அவன் முகத்தில் புஸ் புஸ் மூச்சு விட்டது. அந்த மூச்சில் காலையில் ரகு கொடுத்த கேரட் வாசனை அப்படியே இருந்தது.

ராயத்…

என்னப்பா…

இது காது வெள்ளையா இருக்கு…

அதுக்கு?

இது தோமி… எனக்கு தெரியும். இப்ப என் கழுத்தை நக்குது பாரு. நான் இதுக்கு கேரட் கோஸ் இலை எல்லாம் வரும்போதும் போகும்போதும் சாப்பிட கொடுத்து இருக்கேன்.

நான் பின்னாடி பாய்லர் ஹீட் அட்ஜஸ்ட் பண்ண போயிடுவேன். இது எல்லாம் இப்ப பார்க்க கூடாது. இந்தா பாரேன்….

ராயத் தோமிவை வெடுக்கென்று ரகுவின் கையிலிருந்து பறித்து தூக்கி வீசி எறிய தோமி எரிமலையை போல் கொதிக்கும் அந்த நீரின் மையத்தில் பொத்தென்று அநாதையாக விழுந்து அடுத்த கணத்தில் கிறீர்ரென வீறிட்டது.

சீக்கிரம் ஆகட்டும் என்று ராயத் ஒரு இரும்பு கம்பை அவனிடம் கொடுத்து விட்டு பின்புறம் சென்று மறைந்தான்.

தோமி பரக்க பரக்க ரகுவை பார்த்து ஓடி வர ரகு முதல்முறையாக அந்த இரும்பு குச்சியால் பலம் கொண்ட மட்டும் முதுகில் ஓங்கி குத்தினான்.

இரண்டடி ஆழத்தில் பொளக்கென்று மூழ்கி பின் பாதி உரிந்த தோலுடன் சிதைந்த முகத்துடன் அந்த தோமி அரை முனகலோடு ஒரு தாவு தாவ ஆனாலும் தாவ முடியாமல் வெந்நீரில் சுழன்றது. கிறீச்சிட்டது.

ராயத் நீரின் கொதிநிலையை உயர்த்த தோமியின் முழு தோலும் உரிந்து நீர் மேல் மிதந்தது.

இப்போது தோமி வெண்மையாக இருந்தது. சிறிய பற்கள் வெளியே நீட்டின. கால்கள் சுருங்கி இருந்தது. கண்கள் நிலை குத்தி எங்கோ பார்க்க…

ராயத் கத்தினான்.

இன்னும் சாகலை.. மூக்கில் அடி.

இரும்பு பிடியை மாற்றி வைத்து ரகு அதன் மூக்கின் மையத்தை குறி வைத்து அடிக்க தோமி உடல் துள்ள ஒரு முறை ஆடி பின்னர் அடங்கியது.

அவ்ளோதான் முடிஞ்சது…

பாய்லரை அணைத்து விட்டு இறங்கி வந்த ராயத் முடிஞ்சுடுச்சு. இனி அதை அப்படியே மசாலா தடவி கம்புலே குத்தி ராத்திரி ஃபீஸ்ட்க்கு ரெடி ஆக்கும். அது செஃப் வேலை. நாம் போகலாம்.

இருவரும் வெளியே வந்தனர்.

ராயத் ரகுவின் தோளை மீண்டும் பற்றி கொண்டான்.

பயந்துட்டியா…

பயம் இல்ல. ராவத். இது வேற. ஒரு மாதிரி மனதுக்குள் என்னென்னவோ சுக்கு நூறா வெடிச்சு சிதறின மாதிரி இருக்கு. உடம்பு இப்ப இறுகுது.

சரி நீ ரெண்டு நாள் லீவு எடு. நான் சொல்ற இடத்துக்கு போய்ட்டு அப்பறம் ரூமூக்கு வா. சந்தன்கிட்டே நான் சொல்லிடறேன். இந்தா இப்போ இந்த ரெண்டாயிரம் ரூபாயை செலவுக்கு வச்சுக்க…

பணம் இருக்கு ராயத்…

வச்சிக்கப்பா…

சுல்தான் ஏன் இதை செய்யல. அவர் எங்கே போனார்.

இன்னிக்கு வெள்ளிக்கிழமை அவருக்கு தொழுகை. அதுக்கு மேல கேக்காதே. இன்னிக்கு நீ சாப்பிட மாட்டே. நேரே ரூம் போய்ட்டு தூங்கிட்டு நாளைக்கி காலை வெளியில் போய்ட்டு வா. உனக்கும் மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்.

ரகு ராயத்திடமிருந்து பிரிந்து தனியே நடந்தான்.

தோமி என்னை மன்னிக்க மாட்டாயா?

சார்லஸ்…. என்றான் ரகு தன் பல்லை கோபத்தில் நெறித்துக்கொண்டு.

ரகு தன் வாழ்வில் முதன்முறையாக கோபம் என்றால் என்ன என்பதை உணர்ந்தான்.

கோபம் முடியும்போது விழியோரம் ஈரமாக இருந்தது. ஆனால் அவனால் அழுவதற்கு முடியவில்லை.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.