13. கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்


அந்த அறையில் ஒரு பெரிய நடுத்தர வயது ஆள் இருந்தான். அவனோடு இன்னும் இருவர் இருந்தனர். இப்போது கூடவே ரகுவும் அவர்களுடன் நிற்க…

தடித்த ஆள் கையில் ஒரு ரிவால்வர் இருந்தது. அது துல்லியம் குன்றாத பாயிண்ட் 22 கலிபேர் பவர் கன்.

கன்றுக்குட்டியின் இளம்கொம்புகளும் அதன் இரு கண்களுக்கும் இடையே ஒரு மார்க்கர் மூலம் மார்க் செய்யப்பட்டு இருந்தது.

கன்றுக்குட்டி அங்கிங்கு அசையவோ நகரவோ துள்ளவோ எந்த வசதியும் இல்லாத ஒரு குறுகலான இடத்தில் இரண்டு புறங்களிலும் இரும்பு பிளேட் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது.

அந்த மார்க் செய்யப்பட்ட வட்டத்தில் குறி வைத்து சுட வேண்டும். ஒரே ஒரு புல்லட் மட்டும் போதும்.

பறக்கும் பிஸ்டலின் புல்லட் முதலில் மண்டை ஓட்டை துளைக்கும். துளைத்து ஊடுருவி சென்று கன்று குட்டியின் பின் மண்டைக்குள் இருக்கும் மெல்லிய மெடுல்லா ஒப்லன்கடாவை தோட்டா நொடியில் சுக்கலாக சிதறடிக்கும்.

கண் மூடி திறக்கும்முன் கன்றுக்குட்டி நின்ற இடத்தில் நின்ற கோணத்தில் உயிரை விட்டு இருக்கும். அந்த தோட்டா  சூடாக வழியும் கன்றின் குருதியோடு கலந்து ஊறிக்கொண்டிருக்கும்.

தவறினால்…

ஒரு தடித்த ஆள் ரகு கையில் பெரிய இரும்பு சுத்தியல் கொடுத்தார். ரகுவின் வாய் இறுகி போய் இருந்தது. கால்கள் நடுக்கம் கொள்ள ஆரம்பித்தன. கண் முன்னே ஒரு மங்கலான கருப்பு நிறம் வந்து வந்து மூடியது.

ராயத் ரகுக்கு சொல்லி கொடுத்தான்.

பார்த்தியா… இப்ப கன்னுக்குட்டியை அவரு சுடுவார். அதிலே அது உடனே மடங்கிடும். இல்லாட்டி இந்த சுத்தியல் வச்சு சரியா அது மண்டை உச்சியில் நீ ஓங்கி அடிக்கணும். செத்து போய்டும்.

அப்பறம் இந்த வின்ச்’ல டயர் போட்டு நான் கட்டி தூக்குவேன். அப்போ அதோட கழுத்துக்கு கீழே இந்த சின்ன கத்தியால் குத்தினா ரத்தம் வெளியேறி வரும். நீதான் வேகம் இல்லாமே பதமா குத்தி ரத்தம் வரும்போது உருவிடணும். உடனே வெளியில் வந்துட்டு இந்த ஸ்டெப்ஸ் வழியா வின்ச் ல வந்து ஏறிக்க.

ரத்தம் வடிஞ்சு போனதும்… பார்த்தியா இதான் பட்சர் நைஃப்… துண்டு துண்டா வெட்டணும். காலை துண்டு போட்டுட்டு அடுத்து ஸ்கின்னிங்….

அப்படின்னா?

அது தோலை கம்ப்ளீட்டா உரிக்கணும். அவ்வளவுதான். மத்ததை எல்லாம் நம்ம சுல்தான் பண்ணிப்பார்.

அவர் யாரு?

அந்த வளர்ந்த மனிதன்தான்.

இப்ப நீ ரெடியா…

ரகு வாயடைத்து நின்றான்.

தான் எங்கு வந்து சிக்கி இருக்கிறோம் என்பது இப்போது புரிந்தது. அவன் கையில் இருந்த சுத்தியல் அங்கேயே நழுவி விழுந்தது. மடங்கினான் ரகு.

மாட்டேன்…

க்யா… என்ற சுல்தான் பிர் தும் பாஹர் ஜாவோ என்றார்.

ராயத் என்னவோ அவர் காதில் சொல்லி ரகுவிடம் உன்கிட்ட இப்போ அஞ்சு மாச சம்பளப்பணம் ரொக்கமா கையில் இருக்கா என்று கேட்க விழித்தான். இன்னும் நான் முதல் மாசமே வாங்கலை ராயத் என்றான்.

இருந்தா வச்சுட்டு இந்த வேலையை விட்டு இப்பவே போலாம். இங்கே அப்படித்தான் ரூல்ஸ் இருக்கும்…

உஸ்கே திமாக் மேயின் க்யா ஹை… சுல்தான் அவசரப்பட ரகு வேறு வழியின்றி சுத்தியலை தூக்கினான். ரகு ஒன்னும் பயப்படாதே. பொம்மை ன்னு நினைச்சுக்க. சீனாவோட மண் பொம்மை இது. நொறுங்கிடும். அந்த கன்னுக்குட்டி காதை மட்டும் பாத்துட்டு பேசாமே இரு. வேற எதையும் நீ பாக்க கூடாது.

கன்றுக்குட்டி வால் உயர்த்தி சாணியை போட்டது. மூத்திரம் பெய்தது. அதன் கண்கள் அங்கிருக்கும் எல்லோரையும் தவிர்த்துவிட்டு ரகுவை மட்டும் உற்று பார்ப்பது போல் அவனுக்கு தெரிந்தது.

கொம்பே முளைக்காத அதன் தலை ஓரத்தில் இங்குதான் கொம்பு வரும் என்று கணக்கிட்டு அதிலிருந்து ஒரு பச்சை கோடு நீண்டு கண் சுற்றி வந்து மார்க் செய்ததும் அதன் நடுநெற்றியில் திலகம் போல் பச்சை வட்டம் போட்டு வைத்து இருந்தார்கள்.

பச்சை வட்டத்தின் உள்ளே  கன்றின் தோல் வெண்மை நிறத்தில் மச்சம் போல் இருந்தது. சங்கு வடிவத்தில் இருந்தது. அம்மா அதை போன்ற வடிவில் இருந்தால் மகாலக்ஷ்மி என்று முன்னே தொட்டு கண்களில் ஒற்றி பின்னே சென்று பிருஷ்டத்தை தொட்டு வணங்குவாள்.

மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் இடம் என்பாள். ஒருநாள் முப்பத்துமுக்கோடி தேவர்கள் இருக்கும் இடம் என்பாள். பசுவை சுற்றி சுற்றி வந்து வணங்கி அது அம்பாள் என்பாள்.

விஷ்க்….

தொட்டா சரியாய் குறிப்பிடப்பட்ட வட்டத்துக்கு மேல் மூன்று இன்ச் தள்ளி தோட்டா பாய்ந்தது.

கன்றுக்குட்டி தலையை அசைத்து விட்டது. அது தன் நாக்கு நீட்டி நான்கு காலையும் பரப்பி துள்ளியதும் மேல் தகரம் மீது தலை மோதிய வேகத்தில் கண் வழியே ரத்தம் கசிந்தது.

உச்சி தலையில் போடுடா என்று ராயத் கத்த ரகு அந்த இரும்பு சுத்தியலை தூக்கி நடு மண்டையில் பலம் கொண்ட மட்டும் இறக்கினான். உயர்ந்த கை தாழும்போது கிடுகிடுவென நடுங்கி குறி சற்று தவறி கன்றின் மூக்கின் மேல் வசமாக நச்சென்று விழுந்தது.

பயங்கர அலறலை தொடர்ந்து ரத்தம் பீச்சி அடிக்க கோணல் மாணலாய் நெளிந்த கன்று குற்றுயிராய் அந்த கொலை பீடத்தில் தொங்கியது.

சுல்தான் அந்த சுத்தியல் வாங்கி மீண்டும் தலை உச்சியில் இறக்கவும் நாக்கை தள்ளி பற்களை நெறித்து காட்டியபடி  நசுங்கி செத்தது.

ராயத் வின்ச் இயக்கத்தை நிறுத்தி அதன் ரத்தம் வடிவதுவரை காத்திருக்க வேண்டாம் என இறங்கி வந்தான்.

சுல்தான் ரகுவை மீண்டும் முறைத்து பார்த்துவிட்டு தனது கைகளை நீரில் கழுவிவிட்டு வெளியேறி சென்றார். அவர் வெளியேறியதும் ராயத் அவன் தோளில் கையை ஆறுதலாக போட்டான்.

வா. வெளியே போய்ட்டு வருவோம் என ரகுவை அழைத்து பின்னே இருந்த புல்வெளிக்கு கூட்டி போனான்.

ரகுக்கு உயிர் போய் உயிர் வந்தது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.