ஞீஞீஞீ


ஒரு ஓரத்தில் ஒடுங்கி அமர்ந்து இருந்தான் சிவநேசன்.

அது பெரிய வீடுதான். எத்தனையோ அறைகள் அங்குமிங்கும் இருந்தன.

அந்த வீட்டில் இருக்கும் எல்லா பாத்திரங்களும் பர்னிச்சர்களும் அவனுக்கு எல்லா நாளும் ஏதோ ஒருவிதத்தில் அவசியமாகி இருந்தது.

வைத்தது வைத்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு முக்கியம். சிவநேசனுக்கு அது மிக முக்கியம்.

தனியே இருக்கும் அந்த வீட்டில் யாரும் வந்து எதையும் மாற்றி வைக்க போவது இல்லை.

ஆனால், பாத்திரங்கள் வரிசை மாறி, அடுக்கு மாறி, இடம் மாறி, அறை மாறி இருந்தன.

மின்சாரத்துடன் பொருத்தப்பட்ட சாதனங்கள் இப்படி மாறவில்லை. ஆனால் அடிக்கடி அவை புரண்டும் சாய்ந்தும் கவிழ்ந்தும் கிடந்தன.

மாத்து கோவணம் இல்லாதைக்கி கூடையும் மம்பட்டியுமா திரிஞ்ச மக்கு பயலுவலை எல்லாம் எம்மல்லே ஆக்கி, மினிஸ்டாராக்கி இன்னிக்கு நாடும் மயிராட்டம் போச்சு என முணங்கும் அந்த தெருவை தவிர அதை சுற்றி இருக்கும் ஆறு தெருக்களிலும் சிவநேசனுக்கு சொந்த பந்தங்கள் இருந்தன.

ஆயினும், தனியே இருந்தான்.

அவன் வேலைகளை அவனே உருவாக்கி அதை செய்தபடி…

தனிமை அதன் சாரத்தை அவனுக்கும் புகட்டியது.

கொஞ்சம்தான் புகட்டியது.

காதுக்குள் ஞீஞீஞீ என்ற ரீங்காரம் உருவாகி விட்டது.

முதலில் காதை அடைத்துக்கொண்டு அது ஓடும் fan இல் இருந்து வரலாம் என்று நினைத்தான்.

Fan அணைத்த பின்பும் கேட்டது.

Tube light சோக்கில் இருந்து அந்த ஒலி குபுகுபுக்க…

Light அணைத்தான்.

இப்போதும் கேட்டது.

சிவநேசன் தலைக்குள் தொடங்கி காதுக்குள் முடிந்து பின் காதில் துவங்கி தலைக்குள் நிறைவுற்றது.

அடிக்கடி வாயை திறந்து திறந்து மூடினான். வாயால் காற்றை உள்ளே இழுத்து மூக்கின் வழியே வேகமாக வெளியே தள்ளினான்.

அந்த ஒலி நிற்கவில்லை.

அப்போதுதான் பாத்திரங்கள் நகர தொடங்கின.

கால்களோ சிறகுகளோ இல்லாமல் அவை அனைத்தும் பிட்டத்தை தேய்த்து கொண்டே நகர்ந்தன.

சில தனியாகவும்… சில கூட்டமாகவும்…

தனியாக நகரும் பாத்திரங்கள் பெரும்பாலும் தம்பளர் அல்லது கரண்டிகளாக ஆப்பைகளாக அல்லது டேபிள் ஸ்பூன்களாக இருந்தன.

சாம்பார் ரசம் வைக்கும் பாத்திரம் குக்கர் தாவா பான் இலுப்பைச்சட்டி என்று சற்றே கூட்டமாக அலைந்தன.

மண் சட்டிகளில் சமைக்கும் ஜாதியில் பிறந்த அவன், அவனுடைய மூத்த தலைமுறை வெட்கமே இல்லாமல் பணத்தை வட்டிக்கு மேல் வட்டிக்கு விட்டு பிழைத்ததன் நல்விளைவாக எவர்சில்வர் ஜாதிக்கு மாறி இருந்தான்.

என்ன பயன்?

காதுக்குள் ஒரே சப்தம்.

சப்தம் கேட்க தொடங்கியது முதல் மனித பாஷையின் சில சொற்களுக்கு அர்த்தம் அவனுக்கு புரியாமல் போனது.

எழவு எடுத்த இந்த சொற்களின் அர்த்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டே வர துவங்கியது முதல் சிவநேசன் இப்படி ஆகிவிட்டான்.

இப்படி என்றால் தனிமையில் இருப்பது.

அவன் தினமும் தன் வீட்டில் தனக்கு தேவையான பாத்திரங்களை தேடி தேடி கண்டுபிடித்து ஒருவழியாக ஒரு சாதமும், சாம்பார் கூட்டும் வைத்து அதை சாப்பிட்டு முடிப்பான்.

பின், அவைகளை கழுவி சுத்தம் செய்து விட்டு எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அங்கே வைப்பான்.

சிவநேசன் ஹாலுக்கு வந்து தூக்கம் வருவதற்கு ஒரு புத்தகத்தை எடுப்பான். பெரும்பாலும் அது சிகப்பு அட்டை போட்ட புத்தகமாகவே இருக்கும்.

அந்த புத்தகம் நிச்சயம் வெளிநாட்டு கதை அல்லது கட்டுரையின் மொழிபெயர்ப்பு புத்தகமாக இருக்கும்.

அதை தமிழில் மொழிபெயர்த்து இருப்பவர் மெல்ல மெல்ல மூல நூல் ஆசிரியனை “நயமான கம்யூனிஸ்ட்” ஆளாக வாசகனின் புத்தியில் மாற்றி கொண்டே வருவார்.

சிவநேசன், இந்த சில்மிஷங்களை புரிந்துகொண்டு படிக்கும்போதே தூக்கம் வந்து விடும்.

அவன் தூங்கும்போது சமையலறை பாத்திரங்கள் நகர தொடங்கும்.

தட்டுத்தடுமாறி நகர்ந்து கொண்டிருந்த அவைகள் இப்போது சுவரின் மேல் ஊர்ந்து செல்லவும், ஜம்ப் செய்யவும் கற்றுக்கொள்ள தொடங்கி விட்டன.

ஜம்ப் செய்யுங்கால் கீழே ணங்’கென்று ஒலி அதிர விழுந்தபோது சிவநேசன் தூக்கமானது இரவும் பகலும் கெட்டது.

காதில் இப்படி ஞீ கேட்பது எல்லாம் மிக சமீபத்தில் என்று நினைத்தவனுக்கு அது ஏன் கேட்கிறது என்று யோசிக்கவே ஒருநாள் முழுக்கவும் தேவைப்பட்டது.

நான்கு தெருவையும் ஒரு சுற்றுச்சுற்றி சொந்தங்களோடு ஹி ஹி ஹி எல்லாம் போட்டு பேசிவிட்டு வீட்டுக்கு வந்தவன் சிறிது நேரம் சித்தபிரமை பிடித்தவன் போல் இருந்தான். சில மனிதர்களோடு ஒப்புரவு ஒழுக பேசினாலே போதும். நல்ல வெகுளிக்கு இப்படியும் ஆகலாம்.

அப்போது ஒரு புத்தகத்தை பிரித்து சற்று நேரம் படித்தவன் மூடி வைத்துவிட்டு தண்ணீர் மோட்டரை அணைத்து பின் குஷனில் அமர்ந்து அதே புத்தகத்தை பிரித்தான்.

ஆனால் வேறொரு கதை இருந்தது.

முதலில் இருந்து வாசித்தாலும் அது புது கதைதான். அட்டைப்படம் தலைப்பு ஆசிரியர் இப்படி எதுவும் மாறவில்லை.

முதலில் புத்தகத்தை சந்தேகித்தவன் பின் பேய் பிசாசு கடவுள் விதி பில்லி சூனியம் என்றெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் அறிவுக்கு எட்டியவரை சந்தேகப்பட்டுவிட்டு இறுதியில் தமிழனாய் லட்சணமாய் தன்னையே சந்தேகிக்க தொடங்கினான்.

அதற்கு மறுநாள் முதல் ஞீ கேட்டது.

தானொரு குழப்ப மனநிலையை எய்தி கொண்டிருப்பதை உணர்ந்தவன் மிக விரைவில் ஒரு நிபுணரை சந்தித்து தெளிவு பெற வேண்டும் என்று நினைத்து கொண்டான்.

ஆனால் பாத்திரங்கள் பறக்கவும் மிதக்கவும் தொடங்கி விட்டன.

இன்னும் என்ன விசித்திரங்கள் நடக்கலாம் என்னும் பயத்துடன் அவன் அந்த வீட்டில் வாழ்ந்து வந்தான்.

சிவநேசனின் மொபைல் அடிக்கடி அழைப்பு மணியை ஒலிக்க விட்டது. ஆனால், எதிர்முனையில் எவரும் இல்லை. எந்த நபரும் அழைக்கவும் இல்லை.

சில நாட்களுக்கு பின் அந்த போன் நினைத்துக்கொண்டாற்போல் பிளிறவும், கனைக்கவும், உறுமவும், கர்ஜிக்கவும், குரைக்கவும், ஊளையிடவும், கூவவும், கதறவும், அலறவும் தொடங்கியது.

போனை பிய்த்து எறிய முயன்றபோது அது உருகி கை முழுக்க பரவி தார் போல் ஒட்டிக்கொண்டது.

சிவநேசனுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. தனக்கு நடப்பது கனவா என்பதும் புரியவில்லை.

ஒரு பெரிய அண்டாவில் ஏறி அமர்ந்து கொண்டதும் அவனை கூட்டிக்கொண்டு அது வானத்தில் சென்று அப்படியே மறைந்து விட்டது.

இந்த கதையை தரகர் செல்வராஜ் என்னிடம் சொல்லி முடிக்கும்போது அந்த வீட்டு வாசலை அடைந்தோம்.

சிவநேசன் எங்கு போனான், என்ன ஆனான் என்பதை வீட்டை சுற்றி உள்ள ஆறு தெருக்களிலும் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் அங்கே வாழும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் விதம் விதமான கதைகள் இருந்தன.

அவர்கள் அவன் இருந்த வீட்டுக்குள் வரவும், வசிக்கவும் விருப்பங்கள் ஒன்றும் இல்லாமல் இருந்தனர்.

சிவநேசன் நள்ளிரவில் அவன் வீட்டுக்கு மேல் சுற்றி சுற்றி பறப்பதாகவும் ஏகத்துக்கும் கிளப்பி விட்டிருந்தார்கள்.

எனக்கென்ன? ஒரு ஆறு மாதத்துக்கு மட்டும் வாடகைக்கு கிடைத்தால் போதும்.

நான் வெளியில் என் வேலைகளை முடித்துக்கொண்டு இரவுக்கு அப்பால் வந்து ஒரு தூக்கம், எழுந்து ஒரு குளியல் போட்டால் மறுநாள் வெளியில் அதே வேலைதானே என்று மனக்கணக்கு போட்டு குடிபுக சம்மதித்தேன்.

சிவநேசன் மீது மானசீகமாய் ஒரு அன்பும் எனக்கு இருந்தது. அவன் அப்படி ஒன்றும் கொடுங்கோலன் அல்லவே…

வீட்ல எந்த பொருளையும் யூஸ் பண்ணிக்க வேண்டாம். சாப்பாட்டுக்கு மல்லிகை ரெஸ்டாரெண்ட் போய்க்குங்க என்ற கண்டிஷனுடன் வந்து ஒருவாரம் ஆகி விட்டது.

ஞீ எனக்கு கேட்கவில்லை.

பாத்திரங்கள் பறக்கவில்லை.

டீவீ, ஆடியோ சிஸ்டம் கவிழ்ந்து விழவில்லை. அதில் படிந்த தூசிகள் கூட கலையவில்லை.

போன் போனாக மட்டுமே இருந்தது.

யாரோ கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது.

அது ஏன்? எதற்கு? இந்த பிரம்மாண்ட வீடை அலேக்காக அமுக்க வேண்டியும் இருக்கலாம் என்று தோன்றியது.

நாமே அமுக்கி விட்டால் என்ன என்ற நப்பாசை கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ந்து பரவி பேராவலாக மாறியும் விட்டது.

அமைச்சரின் நூற்றுக்கணக்கான பினாமிகளில் நானும் ஒருவன்தான். ஆக, எளிதில் முடியும் என்பதால் அமைச்சுக்கு ஒரு தகவல் அனுப்பி வைத்தேன்.

பத்திர அலுவகத்தில் சென்று விசாரித்து வில்லங்கம் எதுவும் இல்லை என்பதை குறித்து கொடுத்துவிட்டு சகாக்களை இறக்க கேட்டுக்கொண்டேன்.

ஓரிரு நாளில் அவர்கள் வருகிறார்கள். அப்போது நான் இருக்க கூடாது. நாளை காலையில் காலி செய்வதாக தரகர் செல்வராஜுக்கு செய்தி அனுப்பினேன்.

வீட்டை சுற்றி சுற்றி பார்த்து ரசித்தேன். சிவநேசன் தனிமையில் வாழ்ந்து எங்கோ மறைந்தே போனான். மீண்டு வந்தாலும் சமாளிக்க முடியும்.

ஆனால் ஊரில் உலவும் வதந்திகள் இந்த வீட்டை மிக மலிவாய் கிடைக்க செய்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை.

நான் ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்தேன். இருக்கும் பொருட்கள் அனைத்தையும் சிவநேசன் ஜாதி சங்கத்துக்கு பொறுப்பான கல்யாண மண்டபத்தில் கொடுத்து விட்டால் பின் அவர்கள் வாயையும் அடைக்க முடியும்.

கதவுகளை மூடி விட்டு மாடிப்படிக்கு கீழே இருந்த சின்ன அலமாரியை திறந்தேன்.

குளவி கூடு.

பம் மென்று காற்று மிரள சிறகு விரித்து கால்பந்து அளவுக்கு ஒரு குளவி வெளியேறி பறந்ததும் தூக்கி வாரி போட்டது.

வியர்த்தது.

கால் நடுக்கம் வாய் வரை நடுங்கியது.

குரல் பம்மி நீர் கேட்டு நா தவித்தது.

சமாளித்துக்கொண்டு இன்னும் என்ன இருக்கிறது என்று பார்த்தேன்.

சிவப்பு அட்டை போட்ட புத்தகம்.

எடுத்துக்கொண்டு அறை வெளிச்சத்தில் பொழுதுபோக படிக்கலானேன்.

சற்று நேரத்தில் ஞீ சத்தம் எனக்கும் கேட்டது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.