16. ரயில் சிநேகமாய் புயல் அடித்த மேகமாய்.


இவ்வளவு நடந்ததில் நீ செய்த குற்றம் என்பது இதில் என்ன ரகு?

இப்படி அவர் கேட்ட இந்த முதல் கேள்வி ரகுவை திகைக்க வைத்தது. துவக்கம் முதலாக நடந்தவை அனைத்துமே அவன் செய்த குற்றம்தான் என்பதில் அவனுக்கு சந்தேகமும் இல்லை.

அமைதியாக இருந்தான்.

மீண்டும் அவர் அதையே அவனிடம் கேட்க அவனுக்கு குழப்பம் வந்தது.

உங்கள் கேள்வி எனக்கு புரியவில்லை ஸார் என்றான்.

மெல்ல சிரித்தார்.

சரி. புரியும்படி கேட்கிறேன். நேற்றைய தினம் நீ செய்த விலங்கு கொலைகள் ஒரு உணவின் பொருட்டு… அல்லவா? அல்லது அது வெறும் வேட்டை அல்லது களிப்பு என்றொரு கேளிக்கை சார்ந்து நிகழ்ந்ததா?

உணவு. ஆடம்பர உணவு. பசிக்கு அல்ல. ஆனால் பிறர் ருசிக்கு நான் செய்த கொலைகள் அவை. அது பாவம்.

ரகு, பாவம் புண்ணியம், நன்மை தீமை நல்லது கெட்டது இவற்றை விட்டுவிடு. அந்த எண்ணங்களை நீக்கி விட்டு நீ அமைதியாக இந்த உலகத்தை பார்.

பார்த்தால்?

கட்டுக்கடங்காத அதன் சீரான இயக்கம் உண்மையில் எது என்பது தானாக உனக்கும் புரியத்தொடங்கும்.

இந்த இயக்கம் என்பது?

செயல். ஓயாத செயல். கீதையில் நீ கர்மயோகம் படித்தது உண்டா?

“ந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்ய கர்ம க்ருத்— கார்யதே ஹ்யவஸ கர்ம ஸர்வ ப்ரகரிதி ஜைர்குணை” க்கு அர்த்தம் உனக்கு தெரியுமா?

தெரியாது ஸார்.

பிறந்தவர் எவரும் ஒரு கணமேனும் ஒரு செயலாற்றாமல் இருப்பதில்லை. ஏனெனில் மனிதன் இயற்கையான குணங்களால் கட்டப்பட்டுஅனைவருமே செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள் னு அர்த்தம்.

நேற்று நடந்ததும், முன்பு நடந்ததும் இனி நடக்க போவது இவையனைத்தும்  ஒன்றுதான். ஒன்று அனைத்துக்கும் நீ சாட்சியாக இருப்பாய் அல்லது நீயே செயலாக இருப்பாய். ஆக நடந்ததை எல்லாம் நீ இப்போதே மறந்து விடு என்றார்.

ரகுவுக்கு அது கேட்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால் உள் மனதில் ஒரு கோபமும் சோர்வும் உருகி வழிந்து கொண்டிருந்தது.

அதை எப்படி அவருக்கு புரியும்படி சொல்வது அல்லது நடந்து முடிந்ததை எப்படி  தான் இவர் சொல்வதுபோல் புரிந்துகொள்வது என ரகு யோசித்தான்.

உனது கோபமும் புரிகிறது என்றார்.

எனது கோபம் என் மீதே. இந்த உலகில் குறைந்தபட்சம் இந்த நாட்டில் நான் பிறந்திருக்கவே கூடாது என்றான்.

பிறவி என்பது முதல் விபத்து. மரணம் அடுத்த விபத்து. நடுவில் நாம் கடப்பது ஒரு இரவை ஒரு பகலை… சிறிதளவு வெப்பம் பின் சிறிதளவு குளிர்ச்சி. இன்னும் அதே கோபம் உன் மனதில் இருக்கிறதா ரகு?

இருக்கிறது. என் மேல்…

நீ யார்?

அடுத்து ரமணரின் பொன்மொழியை அவர் தனக்கு சொல்லக்கூடும் என ரகு நினைத்தான்.

நீ யார் ரகு என்றார் மீண்டும்.

ஒரு மனிதன்.

மனிதன் எதை சார்ந்து இருக்கிறானோ அதையே விலகியும் இருக்க நிர்பந்தம் செய்யப்படுகிறான்.

அதாவது, அவன் சார்ந்து இருக்கும் சமூகத்தில்தான் அவன் நாசூக்காக விலகியும் இருக்க வேண்டும் என்றார் அவர்.

ஏன் அப்படி விலக வேண்டும்?

ஒருவனது மனமும் அறிவும் வீணாக மமதை கொள்ளாதிருக்க…

என்னிடம் மமதை இல்லை. என்னிடம் இருப்பது வெறும் பசி. பிழைப்புக்கான ஒரு லாபம் இல்லாத தேடல்.

நான் இருட்டும்போதே தூங்கிப்போக ஆசை கொள்கிறேன். அதுவும் சற்று நிம்மதியாகவும் தனியாகவும். எனக்கு அது போதும் ஸார் என்றான்.

எந்த பேராசையும் இல்லாத வாழ்க்கை. அது உனக்கு கிடைத்திருக்கிறதா?

எனக்கு கிடைக்கும் ஸார் என்றான். பின் ஒரு கணம் யோசித்துவிட்டு அது கிடைக்க வேண்டும் ஸார் என்று மாற்றி திருத்தி சொன்னான்.

ஆனால் ரகு, உனக்கு தர மாட்டார்கள்.

யார் தர மாட்டார்கள்?

யாரிடம் கேட்கிறாயோ அவர்கள்தான் உனக்கு அதை தரமாட்டார்கள்.

ஏன்?

அதுதான் வாழ்க்கை.

அதற்கு நான் ஒரு நிஷ்காம்ய கர்ம யோகியை போல் வாழவேண்டுமா?

எப்படி வாழ வேண்டும் எப்படி வாழ கூடாது என்ற ஆன்மீக வரையறையும் சாருவாக தத்துவ நடைமுறையும்  உன்னுடைய எதிர்கால இலக்குகளுக்கு கொஞ்சம் தீர்மானித்து அதுவே கொஞ்ச தூரம் போவதற்கு வழிகாட்ட உதவலாம்.

ஆனால் ரகு, இதுவரை கடந்துபோனதில் இருந்து வரும் ஒன்றை உனக்குள் நீயே யூகிக்க வைத்துவிட்டு அதை மட்டுமே பிடியாக பற்றிக்கொண்டு ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு கடத்தியபடியே வாழ்வதுதான் வாழ்க்கையா?

இல்லையா… ஏன் ஸார்?

ஏனெனில் பறவைகள் காலண்டரில் தேதி கிழிக்காது. பஞ்சாங்கத்தில் தம் கூடுகளை கட்டாது. அவை தங்கும் மரத்திலிருந்து நதிகளை கடல்களை அல்லது காடுகளை தாண்டி எந்தவித குழப்பமும் இல்லாமல் கூட்டமாக அல்லது தனியாக சிந்தனைகள் இல்லாமல் பயணிக்க கூடியவை.

நான் பறவையோ அல்லது விலங்கோ அல்ல. ஒரு மனிதன். என் வரிசையில் எனக்கு முன் நிற்பவன் பின் நிற்பவன் இருவரும் இரண்டு மனிதர்கள். இரண்டு நபர்கள். கை கால் முளைத்து சிரிக்க தெரிந்தவர்கள்.

அவர் இடைமறித்து…

தன்னுடன் சிரிக்கும் மனிதர்களை அதேபோல் அழவும் வைப்பவர்கள். கூட்டம் கூட்டமாக இருந்தாலும் தனியே தனக்கு மட்டும் என்று திட்டங்களோடு சுயநலமாக யோசிப்பவர்கள்.

இதற்கும் ஆம் ஸார் என்றான் ரகு.

அவர் புன்னகைத்தார்.

அவர் தன் பையில் இருந்து பாக்கெட் இனிப்புகளை எடுத்தார்.

அந்த பாக்கெட் அட்டையில் பாலாஜி பெங்கால் ஸ்வீட்ஸ் என்று பச்சையும் நீலமும் கலந்த நிறத்தில் பிரிண்ட் செய்து இருந்தனர். அட்டை இரண்டு ஓரத்திலும் பார்பி பொம்மைகள் படம் இருந்தது. அழகான பார்பி படம் அது.

அவர் கொடுத்த இனிப்பின் பெயர் சொம்சொம். தேங்காய், ஜீனி, குங்குமப்பூ கலந்து செய்த இனிப்பு அது.

ரகுவிடம் அதை அவர் நீட்டியபோது எடுத்ததில் ஒன்று மட்டும் கீழே விழுந்து மண்ணில் உருண்டது.

ஸாரி நான்…

பரவாயில்லை ரகு. இன்னும் ஒன்று எடுத்துக்கொள். அதுவும்  ஏதேனும் ஒரு காரணமாகவே விழுந்து இருக்கும். இனிப்பு மனதுக்கு இதம் என்றார்.

ஆம். எல்லா நிகழ்வுகளும் ஏதோ ஒரு காரணத்தோடுதான் ஸார் என்றான் ரகு.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.