நொதுமி 52


இனி ஆர்வமுடன் சிந்திக்க நான் விரும்ப மாட்டேன்.  ஆர்வங்கள் ஒளி இழந்த குன்றை போலவும் நோய் கொண்ட மரத்தை போலவும் எனக்கு ஆகி வருகிறது என்றாள் அவள்.

கிருஷ்ணவேணி கைகளை ஆட்டி விடை கொடுத்து வண்டியை முடுக்கி சாலையில் மறைந்தாள்.

நான் அவளோடு வீட்டின் உள்ளே நுழையவும் சிடி ப்ளேயரில் மார்த்தா அர்கிரெச் பியானோ இசையை ஒலிக்க விட்டு என் அருகில் அமர்ந்து கொண்டாள்.

பின் தன் இரு முழங்கால்களையும் உயர்த்தி குறுக்கி வைத்து கொண்டாள்.

நீ இசையை கேட்பது போல் தெரியவில்லையே என்றேன்.

அதற்கென்று ஒரு சிரிப்பா ஸ்பரி?

இல்லை என்றேன் புன்னகையுடன்.

நான் இனி சிந்திக்க மாட்டேன்….

அது ஒளி இழந்த குன்று என்றேன்.

ஸ்பரி, நீ கிண்டல் செய்கிறாய். என் வேதனை உனக்கு ஒருபோதும் புரிய வாய்ப்பில்லை.

இல்லை புரிகிறது.

என்ன செய்ய வேண்டும் நான்?

சிந்தனை உன்னிடம் இல்லை என்றால் நீ வெகு தொலைவில் ஏதோ ஒன்றுடன் ஆழ் தொடர்பில் இருக்க வாய்ப்புண்டு. அந்த மனம் சிந்திக்க விரும்பாது. காத்திருக்க மட்டுமே விரும்பும்.

உன் கண்டுபிடிப்பா?

இல்லை. ஆனால் இதை இப்படி சொல்லி கொள்ள நன்றாக இருக்கிறது. நாம் ஏன் அடிக்கடி இப்படி சிந்திக்க வேண்டும்? எதுவெல்லாம் நம்மை கடந்து போகிறதோ அதை எல்லாம் ஏன் ஆர்வத்துடன் பின் தொடர்ந்து நாம் செல்ல வேண்டும்?

நான் ஆசைகளை சிந்தனை என்று சொல்லவில்லை ஸ்பரி.

ஆனால் ஒருவேளை சிந்தனைகள் நம் ஆசையால் துளைக்கப்பட்டு இருக்கவும் மறைமுக வாய்ப்புகள் உண்டே.

இருக்கலாம்.

இருக்கும்போது நாம் ஏன் கடந்து போகும் மனிதனோடு  போரிட்டு கொள்ள வேண்டும்? அவன் போக அனுமதிக்கலாமே.

ஸ்பரி…. கட்டமைக்கப்பட்ட பெரிய கேள்விகள் எனக்கென்று நானாக உருவாக்கி வைத்துள்ளேன். அது கேள்விகள் அல்ல. வாழ்வை தன் இயல்பில் இருந்து ஒரு பிரதியாக பார்த்து புரிந்து கொள்ள மட்டும்…

உன்னால் அது முடியுமா?

முடிவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற திட்டமும் என்னிடம் உண்டு. வகுத்துள்ளேன்.

ஆக நீயே ஒரு முடிவில் நிரம்பி கொண்டு இன்னொரு முடிவால் நிரப்பி விட முயற்சி செய்கிறாய். நீ ஒலியை நிறுத்தி கொள்ள எந்த வாய்ப்பும் இல்லாமல் சோர்ந்து இருக்கிறாய்.

அதனால் என்ன ஸ்பரி?

அதனால்தான் இந்த இசையை நீ கேட்க முடியவில்லை.

நான் அவள் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்தேன்.

நாம் ஒன்றை உண்மையில் இழக்கும்போதுதான் ஒன்றை பெற முடியும். அன்புடன் முழுக்க கடந்து போகும்போதுதான் ஒன்றை பார்த்து ரசிக்க முடியும். ஒன்றை தவிர்க்கும் போதுதான் அறிந்து கொள்ள முடியும். இது ஏதோ விட்டு கொடுத்தல் என்று அர்த்தத்தில் இல்லை. தன்னையே இழத்தல் என்று பொருளில்.

அவள் ஒலிப்பேழையை நிறுத்தி விட்டு ஜன்னல் அருகில் சென்று நின்று கொண்டாள்.

அவள் வெகுநேரம்அப்படி நின்று கொண்டு இருந்தாள். இறுதியில் என்னை பார்த்து ஸ்பரி, இன்று காற்றில் சற்று ஈரப்பதம் அதிகம் என்றாள்.

இன்று காலை முதலே குளிர்ந்த காற்றுதான் வீசுகிறது. இதை நான் நினைவூட்டவே சொன்னேன்.

புன்னகைத்தாள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.