26. அவளுடன் பேசும்போது


என் அறையில் ஒரு பூனைக்குட்டி வந்தது ஸ்பரி. பின் வந்தது போல் அது சென்றும் விட்டது.

அதன் பயணம் கேலிக்குரியதாக இருக்கலாம். அது அர்த்தம் இல்லாத ஒன்றாகவும் இருக்கலாம். இனி மறுமுறை யோசிக்க வேண்டிய அவசியம் இல்லாததாகவும் இருக்கலாம்.

இப்படி இருப்பதினால் மட்டுமே அந்த பூனைக்குட்டியின் வருகை என்னை பாதித்து விட்டது.

காலமும் துயரமும் அசாதாரணமாக இப்படி ஒரு எளிய வாழ்க்கைக்குள் வந்து மறையும் போது மனம்தான் எப்படி தவித்து சுருள்கிறது?

ஸ்பரி…

நினைவிருக்கிறதா?

நாம் ஒருநாள் நடந்து செல்லும்போது வழியில் பார்த்தோமே… ஏறக்குறைய உயிரை விட்டு கொண்டிருந்த அந்த நாய்குட்டி ஒன்று…

அதை கண்ட நொடியில் உங்கள் கைகளை இறுக்கி கொண்டேன். அன்று உங்கள் மணிக்கட்டு வீக்கமே கண்டிருக்கும்.

ஆனால் அது எப்படி மரணத்தை எதிர்கொண்டது ஸ்பரி… அந்த துணிவு எனக்கு வருமா? உங்களுக்கு இருக்கலாம்…
எனக்கு இல்லை. வராது. அதை பழக்கத்தால் உண்டாக்கி கொள்ள எனக்கு தெரியவில்லை.

ஸ்பரி…

பூனைக்குட்டி நல்ல மஞ்சள் நிறம். அதன் கண்கள் பழுப்பு… ரோஸ் நிறத்தில் நாக்கு…

அந்த குட்டி பூனை ஒரு பெரிய ஆண் பூனைக்கு அஞ்சி வந்திருக்க கூடும் என்று நினைக்கிறேன். சில ஆண் பூனைகள் தங்கள் மனதில் இருந்து கடும் காடுகளின் சித்திரத்தை மட்டும் இன்னும் அழிக்கவில்லை.

அந்த குட்டி பூனை ஒரு மதில் மீது அமர்ந்து சாலையில் போவோர் மீது கண் வைக்கிறது. என்னையும் அது
அவ்வப்போது பார்க்கிறது. நான் எவ்விதத்திலும் ஆயுதமற்றவள் என்பது புரிந்தது போல் வாலை சின்ன சின்ன வளையமாக சுருட்டி சுருட்டி நீட்டி கொள்கிறது.

அது மியாவ் என்று என்னவோ எனக்கு உணர்த்துகிறது.

ஸ்பரி…

பிரபஞ்ச ரகசியம் மிக அழகு.

            ________________________

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.