Tag Archives: மாய யதார்த்தம்

பவித்ரா என்னும் செஸ்போர்டு

எனது புத்தகத்தில்
அந்த இசை இருந்தது.

அந்த இசைக்குள்
கடல் மழை பெய்தது.

கடல் மழையில்
நனையும் பவித்ரா
என் புத்தகத்தில்
சொற்களால் அதிர்ந்து
வரிகளாக விரிந்தாள்.

எல்லா வரிகளிலும்
பவித்ரா இடி கொண்டு
துடுப்புகள் இட்டாள்.

ஒரு மீன் குஞ்சின்
இறுதி மூச்சினை
அவள் கண்களில்
பொதித்தேன்.

வானம் நீல நிறத்தில்
நகைத்தது.

நாங்கள் கலந்தோம்.

அவள் பருகிய
வெண்ணிற எனது உயிரின்
காலத்துடிப்பு
அலமாரிக்குள் வைத்த
கடிகார ஒலியாக
கடலின் மனதுக்குள்
கேட்கிறது என்றாள்.

நதியும் கடலுமாய்
பிணைந்த நாங்கள்
இரவை உறிஞ்சி
பகலை வெளியிட்டோம்.

ஒரு கவிதையை
ஒரு கவிதை எழுத
அவள் யோனிக்குள்
பிரபஞ்சத்தின்
அனல் கசிந்தது.

அன்று முதல்…

பருவ காலங்களின்
கண்ணசைவை மீட்டி
அவள் ஸ்வரத்தில்
உருகிய என்னையும்
ஒரு புத்தகமாக்கி
தனியே
வாசிக்கிறாள்.அவள் ஒரு குருவியாக முடிந்தால்…

பின்னர்தான்
அவள் வருந்தினாள்.
அழுதாள்.

விழி துடைத்து
சற்றே வெட்கமுற்று
தன் ஆணவத்தை
மீண்டும் அணிந்தாள்.

விலகி சென்று விடு
என் குரல் எனக்கு
கேட்கவில்லை. நாம்
பிரிவோம் என்றாள்.

ஒரு ஒளி
அவளை கீறியபோது
ஒரு ஒளி காயத்தில்
மருந்திட்டது.
அவள் தன் நினைவை
பொசுக்கியபடிதான்
அறையெங்கும் நீளமாய்
நடந்து தவித்தாள்.

உறக்கம் நொடித்த
அவள் கண்களிலிருந்து
மௌனம் வெளியேற
தன் துக்கத்தை நோக்கி
வசைபாடினாள்.

என்னருகே வந்தாள்.

பிரிவை கொடு.
என்னை சீண்டு.
முள் கொண்டு தாக்கு.
ஒரு பறவையை ஏன்
கிழித்து பார்க்கிறாய் என்றாள்.

என் தோட்டம்
வெறும் செடிகள்
வெறும் மலர்கள்
வெறும் கொடிகள்
வெறும் இலைகள்
மட்டுமே கொண்டவை.

நீதான்
இசையை நிரப்பினாய்.
வாசனை பரப்பினாய்.
நீரில் சுவை கூட்டினாய்.
மண் மணக்க செய்தாய்.

என்
ஆன்மா கரி பிடித்தது.
நீ விலகும்போது
என் இருள் என்னை
சூழும்போதுதான் நான்
உயிர்க்க முடியும் என்றாள்.

அவள் தன் காதலை
தன் கால்களால் நெறித்து
நசுக்கி கொல்ல
விரும்பினாள்.

அந்த காதல்
ஒவ்வொரு நாளின்
உதயத்திலும் உன்னையே
தேடி வரும் என்றேன்.

இன்றோடு நான்
உன்னை வெறுக்கிறேன்
விலகு என்றாள்.

அவள் அன்று முதல்
என்னை
காதலிக்க துவங்கினாள்.

வெளியேறும் திசைகள்

புவியீர்ப்பு விசை குறித்து
ஆழ்ந்து சிந்திக்கும்
கடல் ஆமை மனதாய்
நெகிழும் என் வாழ்வில்

ஒரு நேர்கோடு போட
தவிக்கும் சிறுமியின்
எண்ணங்களில்
சிவப்பு பென்சிலாய்
ஊர்ந்து செல்கிறது
அந்த காதலும்.

அவள் பேசுகையில்
கோள்கள் அதிர்வுறும்
நாதஸ்வரத்தின் மூச்சில்.

அவள் பிரிகையில்
மின்னல் விரிசல்களில்
துவண்டு தளர்கிறது
கார்பன் காதல்.

வெளிச்சத்தில் படிந்து
இரவை உண்ணும்
நகரத்தின்
விளக்கொளியில் நின்று
வகிடெடுக்கும் இரவுக்கு
அவள் வருவதும்
பிரிவதும் தெரிகிறது.

அவ்விரவு அறிந்ததும்
அறியாததும் ஒன்றுதான்.

அவள்
அந்தியின் சாம்பலில்
கடலை தெளித்து
கனவை பொறித்து
உயிரை துடைக்கும்
காய்ச்சல் கொண்ட
அம்பு என்பது.கோப்பர்னிகஸ்

எனது மீசை குறித்து
அவள் கேட்கிறாள்.
அதை ஏன்
முறுக்கி இருக்கிறாய்?

காலத்தின் நரம்பில்
ஒரு வடு விழுந்த மீசை.
மீசைக்குள் அவள்
புகுந்துகொண்டாள்.

அங்கே
எதிர்ப்பட்ட ஒரு கப்பலில்
கோப்பர்னிகஸ் இருந்தான்.
அவளை கண்காணிக்க
தன்னை மறந்து தொடர்ந்து
ஆரம்ப தவறுகளை
செய்து முடித்தான்.

அவள் மீசைக்குள்
அலைந்து திரிந்தாள்.
ஒரு இரவை
தொகுத்தாள். ஒரு
பகலை இழைத்தாள்.

காலத்தின் முகத்தில்
விண்மீன்களை பதித்து
நிலவொளி சாந்தை அள்ளி
பூக்களின் வாசனைக்குள்
புகுத்தினாள்.

அவள் மார்புகளில்
என் மீசை உராய்ந்தது.
கப்பல் தள்ளாடியது.

அலைக்குள் தவறிய
கோப்பர்னிக்கஸ் பின்
மீட்கப்பட்டது யாரால்?
தெரியவில்லை.

மீசையில் வடியும்
அன்னங்கள் அருந்தும்
கனவுலக மது
அவள் மார்புகள் மீது
வடிந்து ஓடின.

அவள் மீசையின்
நுனியில் நின்று
பூமியை வரைந்தாள்.
மறு நுனிக்கு சென்று
என்னை வரைந்தாள்.

ஒருநாள் அங்கிருந்து
வெளியேறி சென்றாள்.

அவளை சங்கப்பாணன்
ஒருவன்
இரவுக்குள் அடைத்து விட
இரவு அவளை
பகலுக்குள்
ஒளித்து வைத்தது.
பகல் அவளை
கடலுக்குள்ளும்
கடல் அவளை
சிப்பிக்குள்ளும்
ஒளித்து வைத்தது.

மழை முதிர்ந்த
ஐப்பசி மாதத்து நாளில்
கடற்கரையோரம்
ஒரு சிப்பி விளைந்தது.

கடற்கரையில்
பொய் மீசைகள்
விற்று கொண்டிருந்த
என்னிடம் வந்து
யாரோ ஒருவள்
நீ உண்மையில் யார்
என்று கேட்டாள்.

கோப்பர்னிகஸ்
எனது பெயர் என்றேன்.

நிறமான இரவுகள்

காற்றுக்குள் சுழலும்
ஒலித்துகள்களில்
காற்றினை சுழற்றும்
ஒளித்திரள்கள்…
சிறு சிறு
பட்டாம்பூச்சிகள்.

மௌனத்தின் விஷமெடுத்து
இரவை திரிக்கும் நான்.

இரவுக்குள் சாய்ந்தாடும்
அவள் நிழலின் நிழற்படம்.

காற்றை குடித்து என்
கனவை புசித்து
நத்தையாய் நகரும் உயிருக்குள்
நின்று தடுமாறும் நினைவில்
சாய்ந்தாடும் நிழற்படத்தின் நிழல்.

ஒலியில் மோதிய
ஒளியின் கண்கள் கண்டு
துணுக்குறும் இரவுக்குள்
விழிப்புறும் அச்சிறு
பட்டாம்பூச்சிகள்…

பட்டாம்பூச்சி சிறகசைப்பில்
ஒலியை சுழற்றும் வளி.

வளிக்குள் சுழலும்
ஒளியின் நிழலில் விரிந்த
அப்பகலில் அவள்…

ஜென் ஜுவாலஜி

ஒரு நவீன
ஜென் பெண் துறவி
கவிதை எழுதுகிறார்.

அவர் முன்

சிறு தட்டொன்றில்
சில பிஸ்கெட் துணுக்குகள்.

அத்துணுக்குக்களை நோக்கி
வரும் செவ்வெறும்புகள்.

துறவியின் முன்னிருக்கும்
காகித தாள்களில்
புகுந்து சிரித்து சிதறும்
காற்றுக்குலைகள்…

காகிதங்கள்
அங்குமிங்குமாய் பரவ

தட்டில் சுழன்று சுழன்று
உண்ணும் எறும்புகள்
சிறு அதிர்ச்சி கொள்கின்றன.

துறவி பின் எழுதுகிறார்.

தட்டில் எறும்புகள்.
தட்டுக்குள் எறும்புகள்.
தட்டை சுற்றிலும்
சில எறும்புகள்.
தட்டை நோக்கி வரும்
எறும்புகளுக்கு
தட்டிலிருக்கும் எறும்புகள்
ரகசியமாய் சொல்வது…

இங்கு மட்டுமே
எறும்புகளை சுற்றிலும்
தட்டுகள் இருக்கின்றன.

சுண்டல் பொட்டலத்தில் ஒரு கவிதை

நீங்கள் ஓடிக்கொண்டிருக்கும்
சாலையில்
நான் நடந்து கொண்டிருக்கும்
அவனுடன்
எள்ளி நகையாடும் மொழியில்
ஓட்டங்கள்
மேல் பற்றியெரியும் வாழ்வை
உபதேசிக்கும்
குருவின் அருள்வாக்கொன்றை
பேசியபடி
மனங்களுள் கலந்து சென்றோம்.

மியாவ்

சுவரிலிருந்து குதித்து
வீட்டுக்குள் விரைந்தோடி
மறைவிடம் தேடித்தேடி
அலுப்புற்று தவித்து

மேசை நாற்காலியில்
கால் வழுக்கி புரண்டு
இங்க் பாட்டிலில் மோதி
புது நிறமுற்று வியந்து

தரையில் தாழ்ந்து
கால் பரத்தி நிமிர்ந்து
தன் நெஞ்செல்லாம் நக்கி
என்னை அசுரனாய்
கூர்ந்து நோக்கியபின்
வாசலில் மறைந்தோடும்
அந்தப்பூனை…

வழி தெரியாது
வாசல் தெரியாது
சுற்றி சுற்றி அலைகிறது
மனதில்…
நானறியா அறையொன்றில்.

பூனையின் மனதில் நானும்
என் மனதில் பூனையுமாய்
ஓடிக்கொண்டே இருக்கிறோம்
பூட்டிய அறைகளுக்குள்.

அறையில் ஒரு பூனை

நிசப்தத்தில் திரியும்
அந்தப்பூனையின் நிழல்
யாரும் அறியாப்பொழுதில்
அறையிலிருந்து
தனித்து வெளியேறியது.

என் மனக்கண்களை
திருடிச்சென்ற அப்பூனை
சுவரற்ற வெளியில்
ததும்பும்  நிழல் மீது
விருப்பமற்ற நேரங்களிலும்
அயர் உறக்கம் கொள்கிறது.

அறை இருளில்
தேடிக்கொண்டிருந்தேன்…

மனதில்
எங்கெங்கோ விழுந்திருந்த
அப்பூனையின் நிழல்களை.

ஆயினும், அப்பூனை
வருவதும் போவதுமான
கள்ளப்பயணங்களில்
எப்போதும் கவனமாக இருக்கிறது.
உதிரும் அதன் நிழல்களை
அவ்வப்போது
என் மனதில் கொட்டிச்செல்ல…

நீலாம்பரியின் நாக்கு

இப்படித்தான் என்பதில்
எந்த நிச்சயமும் இல்லாதபோது
இந்த கவிதையை படிக்கலாம்.

ஒரு நகரம் கிராமத்தை
மின்மினி கொண்டு
அளப்பதை போல.

உங்களை விசை கொண்டு
அழுத்தும் அர்த்தங்களோ
நீங்கள் நியமிக்க வேண்டிய
கவனத்தின் திருகு ஓட்டைகளோ
இதில் இல்லை என்பதால்

நீலத்தில் சபிக்கப்பட்ட உங்கள்
குளிர் கண்ணாடி அணிந்து
முன் வரலாம் படிக்க.

வாசிக்க லகுவானது…
வாசிக்கும்போது
உங்களின் பரமவைரியின்
நீங்காத நினைவும்
கொதித்திருக்கும் இந்நாளும்
சற்று மறக்கக்கூடும்
என்பதற்காக கூட
இன்னும்
வாசிக்கலாம் ஒரு முறை.