Tag Archives: தனிமை

கொஞ்சம் யோசித்தால்

நான் எங்கிருக்கிறேன்?
என்னை தூக்கிச்செல்வது யார்?
எது என்னை அழைக்கிறது?

யாரை தொடர்கிறேன்?
என்னுள் பேசுபவர்கள்
எங்கிருந்து பேசுகிறார்கள்?

என் உறவினர் எங்கே?
நீங்களும் நானும் இனி
யாருக்கு யார் ஆவோம்?
நான் காண்பதில் நீங்கள்
எங்கு உள்ளீர்கள்?

காலத்தை கண்டறிந்த
மடையன் எங்கிருக்கிறான்?
உங்கள் மொழியில்
கலவாது இறவாதிருக்கும்
இரசாயன சேர்க்கை எவ்வளவு?

பிணங்களை இன்னும்
புதைப்பதும் எரிப்பதும் எதற்கு?
இந்த இரவு எப்படி தொங்குகிறது?

இது யார் கவிதை?
நீங்கள் ஏன் வாசிக்கிறீர்கள்?

இவை ஒன்றுக்கும் பதிலற்ற
என்னை
இன்னுமா நம்புகிறீர்…

வெயில் இரவுகள்

பச்சை வெயிலில்
பழுத்து காய்ந்த பகல்
தேடுகிறது நிழலை.

இரவெல்லாம் தேடுகிறது
இரவு…
தொலைந்துபோன
தனது நிழலை.

நொடிதோறும் அதிரும்
அவளின் நினைவில்
என் மனமும்…

நிழல் இல்லாத
வெயில் இரவுகளில்

இழந்த உறக்கமும்
சிந்திய கண்ணீருமாய்

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிலவை
விசாரித்தவண்ணமாய்…

புதியன களைதலும்

நான் நின்ற இவ்விடத்தில்
யாரும் நிற்பர்…


நாம் பேசிய மைதானத்தில்
புதுபுல் முளைக்கும்.


நான் தனித்திருந்த
சிலையின் கீழ் நாளை
எவரும் அமரலாம்.
என் சிந்தனை வரிகள்
வேறோர் கவிதையில்
கண்டு அதிசயமாகலாம்.


இன்றென் புதிதெல்லாம்
நேற்று எவரின் பழையதோ?