Tag Archives: சால் திளைப்பு

நிறமான இரவுகள்

காற்றுக்குள் சுழலும்
ஒலித்துகள்களில்
காற்றினை சுழற்றும்
ஒளித்திரள்கள்…
சிறு சிறு
பட்டாம்பூச்சிகள்.

மௌனத்தின் விஷமெடுத்து
இரவை திரிக்கும் நான்.

இரவுக்குள் சாய்ந்தாடும்
அவள் நிழலின் நிழற்படம்.

காற்றை குடித்து என்
கனவை புசித்து
நத்தையாய் நகரும் உயிருக்குள்
நின்று தடுமாறும் நினைவில்
சாய்ந்தாடும் நிழற்படத்தின் நிழல்.

ஒலியில் மோதிய
ஒளியின் கண்கள் கண்டு
துணுக்குறும் இரவுக்குள்
விழிப்புறும் அச்சிறு
பட்டாம்பூச்சிகள்…

பட்டாம்பூச்சி சிறகசைப்பில்
ஒலியை சுழற்றும் வளி.

வளிக்குள் சுழலும்
ஒளியின் நிழலில் விரிந்த
அப்பகலில் அவள்…

சப்தத்தின் நிழல்

மொழியின் மனதுக்குள்
நின்று நின்று நகர்வதும்
நகர்ந்து பின் நிற்பதுமான
அந்தி இருட்டொன்றில்

முளைத்து முளைத்து மடியும்
வார்த்தைகளின் கூக்குரலில்
புதைந்து அழிகிறது
கவிதையொன்றின் கனவு.

நிழலின் நிழல் விழும்
நீர்த்துளி ஒன்றுக்குள்
சிக்கி தவழாதிருக்கும்
சிறுசூரியனின் பிம்பத்தில்
மொழியின் வாசனை
கரைந்து பனியாய் புகைகிறது.

சப்தத்தின் நிழலில்
அர்த்தங்களின் கனவு.
அக்கனவின் நிழலில்
முளைக்கும் பகல்கள்.

உயிரை பிளக்கும்
மரணத்தின் நிழலில்
ஓய்வின்றி உணவின்றி
ம(ன)ணற்கடலின்
அலைகளை கழுவுகின்ற
காற்றுக்குள் படிந்திருக்கும்
இசையின் நிழலில்தான்
எத்தனை வண்ணங்கள்…

சொல் நகரும் கவிதை

அச்சொல்
தன்னை தொலைக்க
வரிகளில் நிசப்தம்.

வழிந்த கண்ணீரில்
ஒழுகும் இரவொன்றில்
அச்சொல் நனைய
வரிகளில் சப்தம்.

எங்கோ நிகழ்ந்து
முடிந்த மரணத்தின்
சடை பிடித்த பகலில்
அச்சொல்  திகைக்க
வரிகளில் தயக்கம்.

யாருமற்ற நாக்கொன்றில்
துயிலும் அச்சொல்…
கனவின் வர்ணத்தில்
ருசி முதிர்ந்து விழிக்க
வரிகளில் மயக்கம்.

அலையும் காற்றுக்குள்
அலையும் கவிதைக்குள்
அலையும் மனதுக்குள்
அலையும் அச்சொல்லில்
அலைகிறேன் நான்
வரிகளில் நழுவியவாறு.

நீராவி

நீங்கள் புரியவில்லை என்ற
அக்கவிதை இன்று
இந்த இரவில் இப்போது
என்னருகில் இருக்கிறது.

தன் வார்த்தைகளை
அது உதிர்த்தது.
அர்த்தங்களை நெகிழ்த்தி
முற்றத்தில் உலவ விட்டது.

காட்சிகளை காற்றில்
பறக்கத் தூண்டியது
அழகியலை வருடி
நட்சத்திரங்களிடம் அனுப்பியது.

பின் சக கவிதையிடம்
என் மனதை காட்டி
தன்னோடு கிளம்பிய
சொற்களின் வாதைகள்…

எப்படி நீராவியாய்
போனதென்று வியந்து
பேசிக்கொண்டிருந்தது.

நீ இன்னும் பேசவில்லை

காட்சிகளில் நினைவை
உண்ணும் உன் மனதில்
உனது நிழலின் கண்ணீர்.

நீ நிரம்பியது நினைவில்
அதுவோ உன் காதல்.
….அது வெறும்
நடுக்குளத்து முதலை

யூகிக்கும் ஆர்வங்கள்
அலைகளை இழுக்கும் வீடு.

நீ
இனி
வரலாம்
அல்லது…

பனியில் தூங்கும் தேள்
உன் மர்மம்.

சொல்லாத மர்மங்களில்
காதலை உதிர்த்து

உதிர்த்த காதலை
பிடித்தும் வைக்கிறது
காமத்தின் சுளுக்கை
மந்திரிக்கும் யௌவனங்கள்.

பெருகிப்பெருகி
கனன்று அடங்கி புகையும்
ஏதோ ஒரு சொல்
ஒலியற்று மொய்க்கிறதா…

அது நான்
இரவில் பிழிந்த
அமிலத்தின் கசப்பு.

கொட்ட கொட்ட ஓடி
அயர்ந்து நின்ற உன்னிடம்
தொப்பியேந்தி இரவல் கேட்கும்
என் காதலை மிச்சமிருந்தால்.

நள்ளென் றன்றே யாமஞ் சொல்ல

காற்றைப் பிழியும்
உன் சோப்பின் வாசனை.

துளிர்க்கும் சிரிப்பில்
தேன் தேடும் பட்டாம்பூச்சி.

சேலை சரசரப்பில்
சுவரெங்கும் பாய முனையும்
காந்தர்வ மின்சாரம்.

மெல்லிய முணுமுணுப்பில்
சாயமிழந்த காமக்கண்கள்.

நீ இறங்கிய அந்தியில்
சாலையில் கலங்கிய
பேய் பிடித்த சூரியன்.

இங்கும் கிடக்கிறது
உன் வெட்கத்தின் எதிரொளி.

இந்த இரவில் மீந்துபோன
ஒற்றைப்படுக்கையில்
உன் நினைவும்…

சாம்பலாய் உதிரும்
ஓயாது எரியும் வட்ட
கொசுவர்த்தியும் கூடவே
என் மனமும்…
நதியில் கரைந்த மின்னல்

ஒரு நுரைப்பொழுதில் நீ
ஒளிந்திருந்து பார்த்தாய்.
நுரை வண்ணங்களின்
பூத்து குலுங்கியது
பட்டாம்பூச்சி காலங்கள்.

திரைக்கு அப்பால் சென்று
மறையுமுன் சிரித்த
கொலுசின் விண்மீன்கள்…
கால்படா ஓடைகளில்
துள்ளிடும் மின்னல்கள்.

உன் பிரக்ஞையூடே
கலையும் மேகங்கள்
களைகின்றன மழைத்துளியில்
உன் பருவங்களை.

எட்டிப்பார்க்கும் கோடை நாள்
சொல்லிக்கொள்கிறது
உன் பெயரை பனியென நம்பி.

ஆடைக்குள் பூத்த
அலையாடும் நிலவின் குளிரே
உன் நித்திலங்கள் நிலைக்குமோ
நீரின் கனமறிந்த பின்பும்…

மின்னல் எழும் நேரம்

இம்முறையும் தோற்றுப்போனேன்.

அப்படி அல்ல. நன்கு புரிந்து கொண்டு செயல்படுங்கள்…

எப்படி?

கண்களால் என் கண்களை பாருங்கள். சீறுவது போன்றும் வெறிப்பது போன்றும் இல்லாது சிமிட்டல்களை குறைத்து கொண்டு நுட்பமாக ஆழ்ந்த அமைதியுடன் பாருங்கள். ஆனால் அதே நேரம் உற்று பார்க்கக்கூடாது.

ம்…

இப்போது முத்தமிடுங்கள்.

முத்தமிட துவங்கினேன்.

நாவுகள் தங்கள் பயண இணைப்பில் புரிதல் கொண்டு தமக்குள் வளைந்து நாகமென நெளிந்து ஒன்றினுள் ஒன்று வெளியேறி கொண்டிருந்தன.

அதன் பாஷை சைபீரிய பனியாய் உறைந்து இருந்தது. என் கீழ் உதடை அவளின் இரு இதழ்களும் நட்பின் ஆதுரத்துடன் பற்றிப்பற்றி இழுத்தது.

என் கண்கள் மீண்டும் எந்த சிதைவான விளைவையும் உண்டாகாமல் அவள் கண்களை பார்த்து கொண்டிருந்தன.

நான்கு கண்களின் வழியே உயிரின் மீது உயிர் ஒன்று மெய் சிலிர்த்து நழுவுவதை அவள் வடிவமும் தீர்மானமும் இன்றி உள்வாங்குவது போல் தோன்றியது.

இரு உடல்களின் தட்பவெப்பங்களில் சிக்கி கொண்ட சிலந்தி போல் மனம் பாறையாகி உருண்டு மிதந்து உருண்டு…மிதந்து….

                  ❇️❇️❇️❇️❇️

நீண்ட முத்தத்திற்கு பின் அவன் என் நெஞ்சங்களில் புதைய துவங்கினான். அது அவனுக்கு மிகவும் பிடித்த இடம். என் இரண்டு மார்புகள் மீதும் பரிதவித்து அதில் தகித்த கனலில் புதிய நெருப்பாய் தாழ்ந்து தாழ்ந்து தவழ்ந்தான்.

காலங்கள் பூத்து குலுங்கும் போது இந்த  இரண்டு அற்புதங்களும் விளைகின்றன என்று ஒருமுறை என்னிடம் கூறினான்.

எத்தனையோ முறை அவன்  அவைகளை தொட்டுப்பார்க்க வேண்டும் என்று ஆசையோடு கேட்டபோதும் நான் மறுத்து கொண்டே வந்தேன். மேலும் அவை என் கணவருக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமே உரியது என்று கூறினேன்.

புரிந்துகொள்கிறேன். இருப்பினும் உன் இரு மார்புகளும் எனக்குள் எப்போதும் தீவிரமான கலகத்தை உண்டாக்குகிறது.

நள்ளிரவில் அதன் மீது பொங்கும்  என் நினைவுகள் பழைய மங்கிய சாபத்திற்கு புத்துயிர் அளிக்கின்றன என்றான்.

அப்போது எனக்கு பாவமாக இருந்தது.

                 ❇️❇️❇️❇️❇️

அவள் தன் கால்களை எவ்வித ஆவேசம் இல்லாது எந்த நினைவும் இன்றி பிரித்து என்னை ஏந்த துவங்கினாள்.

அவள் காதருகில் சென்று ஹாஸ்மியின் “திற” கதையின் நினைவு மீண்டும் இப்போது வருகிறது என்றேன்.

அவள் என் மீது சுழன்ற கரங்களுடன் என்னை பார்த்து புன்னகைத்தாள்.

உன் முக்கியமான பணி இப்போதுதான் துவங்குகிறது. நீயே உள் செலுத்தி நீயே செல்லவும் வேண்டிய தருணம்.

உன் மழுங்கிய நரம்புகள் மீது மின்னல் உராய்வதை இப்போது காண வேண்டும்.
உன் சுய இன்பத்தின் போது என்னை நினைத்து கொண்டிருந்த அமிலமான பொழுதுகள் போன்றதல்ல இது.

சுய இன்பம் முடியும்போது வெறுமை தட்ட பூமி உன்னை சபிப்பது போல் உணர்வாய். இங்கு அப்படி அல்ல. தடுமாறிக்குழம்பிய கன்று தாயை அடையும் உணர்வை கொள்வாய். இயங்க ஆரம்பி என்றாள்.

அவள் கரங்கள் என் ஆரம்ப சிக்கலை தீர்த்ததும் நான் அவள் மீது படர்ந்தேன். ஒருக்களித்து திரும்பிய அவளின்  கழுத்தில் மீண்டும் முத்தமிட்டேன்.

                       ❇️❇️❇️❇️❇️

அவனுக்கு கழுத்தில் முத்தமிட பிடிக்கும் என்று சொன்னதும் அவனுக்கு அதைத்தர தயாராக இருந்தேன்.

ஹக் மீ என்றேன். அவன் என்னை நசுக்காமல் மெல்ல அணைத்து கொண்டு எனது புறங்கழுத்தில் முத்தமிட்டான். அப்போதும் அவன் நெஞ்சம் என் மார்புகள் மீது உரசாமல் கண்ணியமாய் வெளி நின்றது. அவன் உடலின் மீதிருந்த அந்த வாசனை உணர்வுகளின் கலங்கரை விளக்கம் போல் இருக்க உணர்ந்தேன்.

உடலுறவு மீதான ஆர்வம் ஆசை இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை அவன் உடல் தெரிந்து வைத்திருந்தது. நளினமாக இயங்கினான்

அவன் அணைக்கும் போது நகங்கள் என் மீது படவேயில்லை. இப்போதும் என்னை அப்படித்தான் முத்தமிடுகிறான். காமத்தை அவன் ஒருபோதும் மறந்தது இல்லை.

காமம் மனதிலோ உடலிலோ இல்லை. அது உயிரில் இருந்து இன்னொரு உயிரை ஏற்றி வைக்கிறது. என் கணவன் பாறையை போல் என்னை திருகி எறிவதை மறந்து போக விரும்பினேன்.

                   ❇️❇️❇️❇️❇️

அவள் தன்னை புகையாய் மாற்றி கொண்டாள். அந்த மெல்லிய புகையில் நறுமணம் கமழ்ந்தது. நேரங்கள் உருகி வடிந்தன.

வாழ்க்கையில் சந்தித்த எத்தனையோ அர்த்தமற்ற கூச்சல்கள்  அனைத்தும் இதோ இங்கே முடிந்து நிற்கிறது. அவள் இழுத்து புதைத்துக்கொண்டாள்.

அவளிடம் மெல்ல கேட்டேன்…
“இப்போது உன் கணவனின் நினைவு வருகிறதா?”

                   ❇️❇️❇️❇️❇️

“காலம் முதிரும்போது சில பெண்களின் கணவர்கள் அவர்களின் காமத்துக்கும் கணவர்களாக இருக்க முடியாது போகிறார்கள். காமம் ஒரு மொழி. அது உடலின் மூலம் உயிரின் அரங்கத்தில் கூடிய பிழைகளை  அவசரமின்றி திருத்துகிறது.”

இந்த குறுந்தகவலை அவள் எனக்கு அனுப்பியபோது நான் கதிர் ஒளியில் கட்டுரைகள் எழுதி கொண்டிருந்தேன்.

அந்த கட்டுரைகளின் வாசகி அவள். நீண்ட ஆய்வுகளை அவள் அந்த படைப்புகளில் ஆர்வத்துடன் செய்து கொண்டிருந்தாள்.

உணர்வுகளுக்கு புறம்பான உறவுகள்  மட்டுமே அவளுக்கு காலப்போக்கில் திணிக்கப்பட்டு இருந்தது.

பெரும் பண வசதி கொண்டவள் என்ற போதும் ஏதோ காரணங்களை கூறி கொண்டு ரேஷன் கடைக்கு சென்று கூட்டத்தில் மக்களோடு மக்களாக நின்று விடுவாள். தனிமையை கொல்கிறாள்.

“பசித்து போன அவர்களிடம் இருந்த ஏதோ ஒன்று இவளிடம் இல்லை. அதை என் வீட்டில் இருப்பவர்கள் இருக்க விடுவதில்லை.

என் விருப்பத்திற்குரிய அனுபவங்களும் தேடல்களும் தினமும் நாய்குட்டிகளோடு திண்ணையிலும் ஊஞ்சலிலும் அழிந்து கொண்டே வருகின்றன” என்றாள்.

சந்திக்க வருகிறேன் என்றேன்.

ஒருநாள் வாருங்கள். என் புருஷன் வீட்டில் இல்லாதபோது.

               ❇️❇️❇️❇️❇️

அவன் என்னை வந்து பார்க்கும்போது நகரின் மையமான பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம்.  அது எங்களின் முதல் சந்திப்பு.

பொது வெளி சந்திப்பு மட்டுமே பாதுகாப்பு என்று மனம் கூறியது. நெருக்கமாய் அமர்ந்த போதும் கவனமாய் அவன் என் மேல் படாது அமர்ந்தான்.

அவன் எழுதுவதற்கும் பேசுவதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்பதை முன்னமே தெளிவு செய்திருந்தான். அவன் உரையாடல் என்பது வேடிக்கை பேச்சுக்கள், கிண்டல்கள் என்று தளம் தளமாய் விரைந்து போகும்.

ஸ்பரி… நீங்களா இப்படி பேசுவது என்றேன். உள்ளூர மகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரியில் படிக்கும் போது இப்படி பேசி விளையாடிய நான் இன்று தொலைந்து போய் இப்போது வெறுமையாய் இருக்கிறேன் என்று நினைத்து கொண்டேன்.

அப்போதுதான் கேட்டான்… நாம ஒரு தடவை செய்வோம்டி… எனக்கு ஆசையா இருக்குடி.

                ❇️❇️❇️❇️❇️

அவள் முதலில் பேசும்போது ரமணரையும் பொற்றேகாட் கவிதைகளும் பற்றி என்னிடம் கேட்டு கொண்டிருந்தாள்.

அந்த உரையாடலை அவள் ஏனோ  வலிந்து திணிக்கிறாள். அன்று அது அவள் இயல்புக்கு எதிரான ஒன்று என்பது புரிந்தது.
அவளின் உண்மையான பிரச்சனைகள் பற்றி என்னிடம் உள்ளபடியே பகிர அதிக நாட்கள் எடுத்து கொண்டாள்.

இறுதியில் நம்பிக்கை வந்து ஒருநாள் கூறினாள். இறுதியில் அது வழக்கம் போல் அன்புக்கு ஏங்கும் ஒரு சராசரி பெண்ணின் சராசரி ஏக்கமாகவே இருந்தது.

பெண்கள் இந்த அன்புக்கு ஏங்குவது எல்லாம் உண்மையில் வேறொன்றுக்கு ஏங்குவதில் சென்று முடியும்.
அது நெக்லஸ் வாங்குவதில் ஆரம்பித்து பாத்ரூம் கட்டுவது வரையில் எது வேண்டுமென்றாலும் இருக்கும்.

இவள் நேரடியாக காமத்துக்கு ஏங்கினாள். அவளை புரிந்து கொள்ள முடியாத கணவனிடம் அவள் பெற்றது காதல் என்பது புடைத்த குறியுடன் வெறுமனே உறிஞ்சுவதும் தின்பதுமான ஒன்று. பசி. மிருக பசி. பசி எதையும் செய்ய சொல்லும்

எனக்கு திருமணம் ஆகவில்லை என்றேன். அதற்கும் இதற்கும் ஒன்றும் இல்லை என்றாள். ஏனெனில் எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றாள். குழந்தை கூட இருக்கிறது என்றாள்.

அப்போது நிம்மதியாக அவருடன் இரு என்றேன்.

ஸ்பரி… செக்ஸ்னா உடம்பை கீறி குத்தி கிழித்து உமிழ்ந்து விட்டு போவது இல்லை என்றாள்.

அங்கு என்னை விடவும் என் ஆண்மை அவளை உற்று கவனித்தது.

               ❇️❇️❇️❇️❇️

அவன் சபலமான ஆள் இல்லை என்பது தெரியும். அவனை விடவும் திடமான மனிதர்களையும் தெரியும். அவனிடம் காமம் கொள்வது என்பது ஏன் என்பதை ஆழமாக அவனே யோசிக்க கூறினான்.

இதில் யோசிக்க என்ன இருக்கிறது ஸ்பரி. என் மனதில் ரீங்கரிக்கும் கனவுகள் அனைத்துக்கும் காமம் மட்டுமே அடிப்படை என்றேன். மனதால் உடலை பார்ப்பது… உடலால் மனதை பார்ப்பது… உங்களுக்கு பார்க்க தெரியும் என்றேன்.

அது அவனுக்கு புரியவில்லை.

                 ❇️❇️❇️❇️❇️

அவள் காமம் மட்டுமே அடிப்படை என்று சொன்னதும் மிக எளிதாக அதை ஃப்ராய்டிசம் என்று கூறி கடந்து போக சொன்னேன். ஆனால் அவள் அதை துவக்கத்திலேயே மறுத்தாள்.

காரணம் காமத்தை அவளால் சந்திக்க முடிந்தது. அவளின் முதல் சுய இன்பத்தை பற்றி நினைவிருக்கிறதா என்று கேட்டேன்.

அது பள்ளிப்பருவத்தில் ஒரு மதிய நேரத்தில் வானத்தில் மழைக்குரிய அத்தனை ராசிகளும் தென்பட்டு கொண்டிருந்த நேரத்தில் எனக்குள் அந்த கசிவை உணர்ந்தேன் என்றாள்.

நான் என்னை தூண்டவில்லை. என் உறுப்புகளை தீண்டவில்லை. ஆனால் புணர்ச்சியின் ரசாயனம் அந்த இருண்ட மதியத்தில் தோகையை விரிப்பது போல் நிகழ்ந்து முடிந்தது. நான் மெதுவாக ஈரமாகி கொண்டிருந்தேன் என்றாள்.

அவள் காமம்  தன் ஒரேயொரு  தீற்றலின் மூலம் அரக்கனை சாம்பலாக்கும் என்று அப்போது நான் உறுதியாக நம்பினேன்.

காரணம் காமத்தை அவதானிக்க முடிந்த ஒரு மனிதம் இந்த பூமியை மகிமை செய்கிறது என்பதை நம்புவதால்…

அவளுக்காக அல்ல. எனக்காக அல்ல. ஆனால் நாங்கள் ஒருவரையொருவர் ஆழ்ந்து புணர விரும்பினோம்.

ஒருவரிடமிருந்து ஒருவரை இழந்து தங்களை தாங்களே மீண்டும் பெற்று கொள்ள வேண்டுமெனில் இதுதான் சாத்தியமான ஈடு என்று கூறினாள்.

                      ❇️❇️❇️❇️❇️

அவன் பலமுறை என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தான். ஒருநாளில் என்னோடு மூன்று முறை கூட வேண்டும் என்று கூறினான்.

அது சாத்தியமா என்று கேட்டபோது சாத்தியமாக்கி கொள்வோம் என்றான். சிரிப்பு வந்து விட்டது. பின் உடலுறவுக்கு உரிய நாளை அவனே அவன் இஷ்டம் போல தேர்ந்தெடுக்க ஆரம்பித்தான்.

பெருங்கடலில் பார்த்து வியந்து ப்ரமித்த பெரும் சூறாவளி ஒன்று இறுதியில்  நிலப்பகுதிக்கு வந்ததும் கேவலம் மரத்திலும் சுவரிலும் மோதி மோதி உடைந்து போகும் பரிதாபமான நிலையை போல் அவன் இயைபு மாறி வருவதை கண்டேன். மெல்ல அவன் எழுதுவது நின்று போக ஆரம்பித்தது.

பெண்மைக்கே உரிய விழிப்பை நான் என்னிடம் கொள்ள நேர்ந்ததும் ஸ்பரியிடமிருந்து விலகினேன்.

அது அழுகையுடனான நாட்கள். என்னை கொலை செய்த நேரங்கள். அவனுக்கும் இந்த மோகம் ஸ்தம்பித்து போகும் வரைதான் அந்த வேதனை இருக்கும் என்று எனக்குள் கூறிக்கொண்டேன்.

ஸ்பரி…மன்னித்து விடுங்கள்.

                     ❇️❇️❇️❇️❇️

அவள் போய் விட்டாள்.

எல்லாம் முடிந்து விட்டது. எல்லா இணைப்புகளும் பிளாக் செய்யப்பட்டு கதவுகளை அறைந்து சாத்தி கொண்டு போய்விட்டன.

மோதி உடைக்கலாம். ஆனால் என்னிடம் மிஞ்சி இருக்கும் தார்மீக உணர்வுகள் அதற்கு இடமளிக்கவில்லை.

காலங்கள் கரைந்து புதிய வேலை கிடைத்து  நானும் விசாகப்பட்டினம் சென்று விட்டேன். ஒரிசாவில் இருக்கும் என் தோழி இங்கு மைய நூலகத்தில் பணி புரிகிறாள்.

அவள் மூலம் ஒரு வேலை கிடைத்து இங்கேயே வந்துவிட்டேன். வருடங்கள் போனது. அப்படித்தான் அது போகும்.

                           ❇️❇️❇️❇️


சட்டென்று விழித்து கொண்டபோது மூச்சு வாங்கியது. அப்போது மணி குளிர்ந்த இரவில் மூன்று என்பது தெரிந்தது.

வெறும் கனவுதானா இது?

ஸ்பரி…எங்கு நீங்கள்…?

கனவை ஆழமாய் நினைவுறுத்தி கொள்ள முயன்றேன். அருகில் கணவன் தூங்கி கொண்டிருந்தார்.

என்ன கனவு… ஸ்பரி தாவரமாய் என்னில் முளைத்தெழும் காட்சி அது. தாவரங்கள்
காற்றுக்குள் சிலிர்த்து காற்றை அதிர்வூட்டும் நொடிகளுக்குள் புணர்ந்து மறைந்து விட்டான்.

நெஞ்சு கொதித்து கொண்டிருப்பதும் இடையில் ஆழ்ந்த நோவு பின்னி சுகமாய் மின்னி மறைவதையும் இப்போதும் என்னால் உணர முடிந்தது.

இன்னும் விடியும்போது குளித்ததும் அழிந்து போகும் நினைவுதான் இது என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஸ்பரியின் எண் எனக்கு தெரியும்.

                        ❇️❇️❇️❇️❇️

அவள் என்னை மொபைலில் கூப்பிட்ட போதும் பேசிய போதும் என்னால் சிறிதளவே கோபங்களை வெளிக்காட்ட முடிந்தது. திட்டினேன். கேட்டு கொண்டாள்.

அந்த கோபங்கள் எல்லாம் கரைந்து போன வருடங்கள் மீதுதான் என்பதை புரிந்து கொண்டேன்.

நீங்கள் வரவேண்டிய நேரம் இது ஸ்பரி. என்னால் கனவின் கூச்சலை பொறுக்க முடியவில்லை என்றாள்.

                         ❇️❇️❇️❇️❇️

அவள் தேதிகள் குறித்து கொடுத்தாள். விடுமுறை எடுத்துக்கொண்டு அவளை அதே பார்க்கில் சென்று சந்தித்தபோது அப்படியே இருந்தாள்.

ஃப்ரான்ஸ் நாட்டில் வரையப்பெற்ற சில   எண்ணெய் சாய ஓவியங்களை  (பெண்களை அன்னங்கள் புணரும் காட்சிகள்) பார்த்துவிட்டு நன்கு தூங்கிய பின்தான் எனக்கு அந்த கனவு வந்தது என்றாள்.

அவள் மார்புகள் மொகலாய ஓவியத்தின் சாயலில் இருக்குமா என்று ஒருமுறை நான் கேட்டேன். அந்த நினைவும் வந்தது.

உன்னுடன் தொடர்பில் இருந்த பழைய நாள் நினைவுகள் எனக்கு சுமையை கடும் தோல்வியின் உணர்வை கொடுத்தது. இன்று வரையில் அது என்னை குதறிக்கொண்டே இருக்கிறது என்றேன்.

காமம் அசையாத ஒளி. நீளங்களை தாண்டும் விசை. குளிர் என்ற கொலைவாள் கொண்டு பயணிக்கும் பிசாசின் நிழல்.

இனி என்னிடமிருக்கும் என்னை  நீங்கள் வீழ்த்துங்கள் என்றாள்.

                     ❇️❇️❇️❇️❇️

அவள் கணவன் பணி நிமித்தம் ஊருக்கு சென்றிருக்கும் அந்த நான்கு நாட்களில் நாங்கள் புணர்ந்தோம்.

புணர்ச்சி உடலில் துவங்கி உடலில் அணைந்த போது காமம் ஒவ்வொரு முறையும் தன் தோல்வியை சந்தித்தது.

“உன் யோனி சதுரங்கத்தின் அனைத்து சாமர்த்தியங்களையும் வெளிப்படுத்த தவித்த போது நான் மர்மங்களில் பேச்சற்று உறைந்து நின்று தடுமாறி கொண்டிருந்தேன்” என்றேன்.

ஸ்பரி… என்று நெருங்கி வந்து கன்னத்தில் முத்தமிட்டு என் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

முன்னெப்போதும் இல்லாதவண்ணம் அவள் கண்களின் ரேகைகள் அதிக ஒளியுடன் இருந்தது. அதில் விவரிக்க முடியாத நீர்மமொன்றில் பாவைகள் குதூகலத்துடன் பிறந்த குழந்தையை போல் களிப்புற்று அலைந்தன.

பெருமளவு நேரங்கள் அறைக்குள்  ஆடைகள் அணியாமல் முழு வெற்றுடம்பாகவே நாங்கள் இருந்தோம்.
அசதி மேலிடும்போது தளர்ந்த எனது குறியை பற்றிக்கொண்டு அவள் ஆழ்ந்து உறங்கினாள். கனவுகள் இல்லாது.

                        ❇️❇️❇️❇️❇️

நம் இந்த உறவை இந்த சமூகத்தில் கள்ளக்காதல் என்பார்கள் என்றேன்.

ம்ம்… சொல்லட்டும்.

நீயோ எனக்கு காதலி. நானோ உனக்கு கள்ளக்காதலன். சொல்லிவிட்டு சிரித்தேன். அவளும் சிரித்தாள்.

இருவரும் சற்று மௌனமாக இருந்தோம்.

அப்படி நீங்கள் நினைக்கிறீர்களா ஸ்பரி.?
நாளை நீங்கள் யாராயினும் மணம் செய்ய மாட்டீர்களா? அல்லது இன்று நிகழும் இந்த நம்முடைய உறவு இப்படியே இனியும் தொடரும் என்று நம்புகிறீர்களா?

அவளை நான் ஆழமாக பார்த்தேன்.

ஸ்பரி…. என்னை முத்தமிட்டாள்.

நம் உறவு இந்த ஊடல் இந்த காமம் எல்லாம் இன்றோடு முடிந்து விடும். இனி நாம் என்றும் சந்திக்க முடியாது என்றாள்.

நான், நீங்கள், இந்த உறவு, நமது இந்த உடல்கள், நம்முடைய காமம், இந்த நீங்கா இச்சை… இவற்றையெல்லாம் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்றாள்.

இச்சை என்று எனக்கும் ஒன்றும் இல்லை. அவள் மார்பை ஒரு கையால் அழுத்தி பிடித்து கொண்டேன். இதில் நான் இல்லை. ஆனால் என்னிடம் தீவிரமாக இது இப்போதும் இருக்கிறது.

காலம் காலமாக… என்று சிரித்தாள்.

நானும் அவளோடு சிரித்தேன்.

ஸ்பரி… உங்களுக்கு நினைவிருக்கிறதா “அவளோடு பேசும்போது”…

ம்ம். இருக்கிறது.

ஆஹ்… அந்த நேரத்தில் எத்தனை கேள்விகள், துயரங்கள், வலிகள்…
கனவை மிதித்துக்கொண்டு நடக்க தெரியாமல் சுவரோரம் பற்றியபடி நடந்து நடந்து சிதறி விழுந்த காலங்கள் எனக்கு.

அந்த காலம் போயிற்று. இப்போது உன் குடும்பம் முன்பு போல் இல்லையே.

முன்பு போல்தான். கால்களால் மிதிப்பதை விடுத்து வார்த்தைகளால் மிதிகள் விழுகின்றன.

அதனால்தான் அன்று நான் கண்ட அந்த கனவில் இருந்து இன்று உங்களால் என் உயிரை மீண்டும் மீட்டு கொள்ள முடிந்தது.

அவள் முகத்தை என்னை நோக்கி திருப்பினேன்.

என்னிடமிருந்து இறுதியில் என்ன நீ பெற்றுக்கொண்டாய்?

நீங்கள்?

உண்மையாக சொல்ல வேண்டுமெனில் முன்பிருந்த ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்தில் இருக்கிறேன். அது பயங்களை நம்பும் இடமல்ல. மனதும் பயமும் ஒன்றையொன்று துரத்தி துரத்தி கடித்து காயமாக்கி கொள்ளும் இடமும் அல்ல.

எந்த நியதிகளால் தொன்மங்களால் கடமைகளால் உரிமைகளால் என் காமத்தை தீய்த்து கொண்டிருந்தேனோ அத்தனையின் மீதும் இந்த நான்கு நாட்களும் நான் உமிழ்ந்தேன் என்றேன்.

அதுதான் ஸ்பரி. சமூகம் மீது காறித்துப்பிய உணர்வு. என்னை பெண் என்று சொல்லிக்காட்டிய சமூகம் மீது. என்னை பொத்தலாக்கிய சமூகம் மீது.

நான் வாசிங்மெஷின். நான் மிக்சி. நான் கிரைண்டர். நான் விளக்குமாறு. அல்லது ஒரு கம்ப்யூட்டர்.

இன்று முடிந்த அளவு காறித்துப்பி விட்டேன் ஸ்பரி. இது போதும் எனக்கு…

தோளில் சாய்ந்து கொண்டாள். என் நெஞ்சு சூடான கண்ணீரில் ஈரமானது.

ஸ்பரி….

ம்ம்ம்…

இது பற்றாது எனக்கு. முத்தமிடுங்கள்.

அடுத்த உடல் உறவுக்கு மனம் இழைய… நாங்கள் மீண்டும் துவங்கினோம்.

                       ❇️❇️❇️❇️❇️

தீக்குள் விரலை விட்டாள்

இருக்கலாம் நீ
என்பதற்காகவோ எனவென்றோ
பின் சுற்றும் சக்கரமாய்
காலங்கள் திணறின
அதிகாலையில் உன்
நினைவில் ஊர்ந்த மனம்.

ஆவல்களை இழுக்கும்
புதிரின் திமிராய்
நீ கொடுத்த தனிமை.

வெளிச்சம் நீங்கியது. நீங்க
இருளின் அகத்தில்
குடை சாய்ந்ததோ நான்.

வந்து வந்து பார்த்தாலும்
வாசலில் ஓங்கியடிக்கும்
உன் ஞாபகங்கள்
நனைகின்றன கண்ணீரில்.

உன் திசைகள் அறியாத
மனதின் மூப்பில் நீவும்
மரண ஆசைகள்.

இந்த உயிர் நின்று
தேம்புகிறது திண்ணையில்
கொடியென தரையில் கிடக்கும்
இறந்த நாயின் சங்கிலியாய்.

சுட்டு சுட்டு சுடும் தீ
விரலில் அல்ல. சொல்லில்.

தோழியின் கோபம்

உனக்கு சினம் மூளுமோ?
சினம் எரிக்குமோ
அச்சத்தின் பாடுகளை.

எரித்த அச்சத்தின்
சுவடுகளில் நகருமோ
முத்தமிட்ட மனம்.

எரிமலைகள் கோபத்தை
தம் மூச்சில் ஆற்றும்.

நதிகளின் சலனமும்
கோபமான வியர்வைதான்.

பூக்களின் கோபங்கள்
மரமாகி நிமிருமேனில்…

உன் சினமும்
உரமாகும் உனக்கே அது
அறவழி சினமென்றால்.

அள்ளி முடிந்து நீ
கூச்சலிட்டால் அது
பள்ளிகுழந்தையின்
அழுகைதான்.

ஜான்சி ராணி உண்டு…

ஆனால் எல்லோரும்
ஜான்சிராணி அல்ல.