Tag Archives: குறில் மீட்சி

சாப துகள்கள்

அவனுக்கென்று
ஒரு கவிதையும்
அவளுக்கென்று
ஒரு கவிதையும்
எழுதியாயிற்று இப்போது.

இப்போது எனில் இது
முன் மாலை நேரம்.

இந்த பகலும் கூட
அவனுக்கும் அவளுக்கும்
நிசியோ? புலரியோ?

ஒளிக்குள் கிறங்கி
தவிக்குமிந்தக் கவிதையில்
யாத்ரீகனாய் அலைகிறது
என் மனதுள் இருக்கும்
பிற்பகலின் தனிமை.

அவனுக்கும் அவளுக்கும்
என்ன நேர்ந்திருக்கும்?
கேள்வியெங்கும் நெளிகிறது
இரவின் சாபத்துகள்கள்.

கடைசி குயிலொன்றின் பாட்டு

என்னை

அவர்கள் பார்க்கிறார்கள்.

அவர்களில் சிலர் மட்டும்
முறைத்து பார்க்கிறார்கள்.
அவர்களும் பார்க்கிறார்கள்.
அவர்களுக்குள் அவர்கள்
கொஞ்சநேரம் பார்த்துவிட்டு
பின் கண் துடியாது
மீண்டுமென்னை பார்க்கிறார்கள்.

எனக்கோ

யாரை எதற்கு எப்படி
பார்க்க வேண்டுமென தெரியவில்லை.

என் உடலெங்கும்
ஊர்ந்து அலையும்
அச்சிறு எறும்புகளுக்கு
என்னவென்று சொல்ல நான்?

என்னில் அசைகின்ற
அத்துணை நிழல்களும்
தாவர இலைகளின் நிழலென்று
எண்ணி மறுகும்

இச்சிறு
எறும்புகளுக்கு நான் எத்திசை?
நான் பூமியா?
நான் ஆற்றின் கரையா?
நான் இரவும் பகலுமா?
நான் உணவா (அ) நீரா?

எறும்புகள் என் உடலில்
கலைந்து கலைந்து ஓட
ஓராயிரம் மனங்களில்
நான் பயணிக்கிறேன்
ஏதோ ஒரு மனதிலிருந்து.

ஜென் மெனக்கிடும்போது

எனக்கிருக்கும்
வெட்கம் மானரோஷம் பற்றி
எனக்கே சந்தேகம்தான்.

விலைபோகா இப்பிணத்தை
விலைபெறா ஒன்றாக்கி
விலைபேசிக்கொண்டிருக்கும்
அற்பத்தனத்தில் நானில்லை
என்பதால் மட்டுமே…

நான்

விலகி இருக்க முடிகிறது
என்னிடமிருந்தும்
என்னை தன்போல் கொண்டாடும்
அவனிடமிருந்தும்….

இருப்பினும்,
உயிரோடு இருக்கும்வரை
என் பிணத்தை
நானே சுமக்கிறேன்
என்றளவில் கொஞ்சம்
அமைதியாக இருக்கிறது.

சொல் நகரும் கவிதை

அச்சொல்
தன்னை தொலைக்க
வரிகளில் நிசப்தம்.

வழிந்த கண்ணீரில்
ஒழுகும் இரவொன்றில்
அச்சொல் நனைய
வரிகளில் சப்தம்.

எங்கோ நிகழ்ந்து
முடிந்த மரணத்தின்
சடை பிடித்த பகலில்
அச்சொல்  திகைக்க
வரிகளில் தயக்கம்.

யாருமற்ற நாக்கொன்றில்
துயிலும் அச்சொல்…
கனவின் வர்ணத்தில்
ருசி முதிர்ந்து விழிக்க
வரிகளில் மயக்கம்.

அலையும் காற்றுக்குள்
அலையும் கவிதைக்குள்
அலையும் மனதுக்குள்
அலையும் அச்சொல்லில்
அலைகிறேன் நான்
வரிகளில் நழுவியவாறு.

பழைய நண்பனின் மரணம்

இன்று அவன் என்
நினைவுக்கு வந்தான்.

அவனும் அவனோடு நானும்
இனி எப்பொழுதும்
வெறுமையான சிற்சில
நினைவுகள் மட்டுமே எனக்கு.

அவனை மரணமென்பது
ஈர்த்து கொண்டபின்தான்
எதுவும்
எப்போதும் எங்கும்
சில நினைவுகள் மட்டுமே
என்பது புரிந்தது.

காற்று தன் முகவரியை
தொலைத்து இன்னும்
தேடிக்கொண்டே இருக்கிறது.

நதி இன்னும் தன்
வீட்டை கண்டறியவில்லை.

தலை தொங்கிய ஆகாயமோ நிமிரவேயில்லை.

சப்தத்தில் ஒடுங்கிய
ஓசைக்குள் இருக்கிறது நினைவு.

அவன்…
இப்போதும் அலைகிறான்
என் நினைவிலிருந்து
தெருக்களை கடந்து
சாலைகள் தாண்டி
கடற்கரையில் கால் நனைய…

திக்குமுக்காடும் மரணம்
தத்தளித்து யோசிக்கிறது…
எப்படி கொல்வது ஒருவரை என.

நீல பட்டன் இருக்கும் அலமாரியில்

நீல பட்டன்கள் இருக்கும்
அலமாரியில்
இருக்குமென்றால்…
சற்று தேடி கண்டடைவேன்
அந்த புத்தகத்தை.

கிடைக்குமென்றாலும்
நிச்சயமாய் சொல்லவியலாது…
அதன் ஆவியும்
இன்னும் அதிலிருக்குமென.

ஒரு புத்தகத்தை மேயும்போது
தகிக்காது அதுவும்
மேய்கிறது மனதுக்குள்.

புத்தகத்தை தொட சிலிர்த்தால்
அதன் ஆவியும் சிலிர்ப்பதை
உணர்ந்தது முதல்
யாரோவாய் மாறுகிறோம்.

உலகங்கள் உள்ளிழுகின்றன.
இந்த புத்தகம்தான் தேடியது
இங்கேதான் இருக்கிறது.

அதன் குறிப்புகளில் என்
கால்படாத நகரமில்லை.
போடாத கூச்சல் இல்லை.
என் திமிரின் ஆனந்தத்தை
அறிந்த இடம் இதிலுண்டு.

வாழும் வசித்த இடத்தில்
மரித்த பின்னர்தான் வாழவே
துவங்குகிறோம்…

இதுதான் இறுதியில்
வாசிப்பின் சாத்தியங்கள்.
எனில்…
தேடியதுண்டா உன் ஆவியை?

நீ இன்னும் பேசவில்லை

காட்சிகளில் நினைவை
உண்ணும் உன் மனதில்
உனது நிழலின் கண்ணீர்.

நீ நிரம்பியது நினைவில்
அதுவோ உன் காதல்.
….அது வெறும்
நடுக்குளத்து முதலை

யூகிக்கும் ஆர்வங்கள்
அலைகளை இழுக்கும் வீடு.

நீ
இனி
வரலாம்
அல்லது…

பனியில் தூங்கும் தேள்
உன் மர்மம்.

சொல்லாத மர்மங்களில்
காதலை உதிர்த்து

உதிர்த்த காதலை
பிடித்தும் வைக்கிறது
காமத்தின் சுளுக்கை
மந்திரிக்கும் யௌவனங்கள்.

பெருகிப்பெருகி
கனன்று அடங்கி புகையும்
ஏதோ ஒரு சொல்
ஒலியற்று மொய்க்கிறதா…

அது நான்
இரவில் பிழிந்த
அமிலத்தின் கசப்பு.

கொட்ட கொட்ட ஓடி
அயர்ந்து நின்ற உன்னிடம்
தொப்பியேந்தி இரவல் கேட்கும்
என் காதலை மிச்சமிருந்தால்.

நீ இல்லையென்றால்

மெல்ல நீ நழுவுகிறாய்
என்பதை அறிந்தும்
உன்னுடன் இருக்கிறேன்…
நீ விலகிச்செல்ல
சொல்லப்போகும்
காரணங்களுக்கு…

புல் தரையில்
உடைந்த வாளியாய் நீ.
உன்னுள் திட்டமிடும் பொய்கள்
வரிசையாகிக்கொள்கின்றன.
சாத்தானின் புன்னகையுடன்
அவ்வப்போது வெளிப்படும்
ஏதேதோ கேள்விகளில்
வெறுப்பின் கரகரப்பு.

ஓய்ந்து கிடந்த மொபைலை
மூடி மூடி திறக்கும் உன்
கைகளில் படபடக்கும் மனம்.
வெளியே எட்டி எட்டி பார்க்கும்
உன் பித்துப்பிடித்த விழிகள்.

அனைத்தும் அறிந்தும்
அமைதியாய் இருக்கிறேன்.

நானும் நேற்றே
பேசிவிட்டேன்
வசந்தியிடம்.

நட்பென்னும் தீவினிலே

ப்ரிய தோழிக்கு ஒன்று.

பாறைச் சூட்டில்
விழுந்த நீர்துளிகளாய்
நம் தத்துவங்கள்.
திரைப்படம் தவிர
மற்றனைத்தும் எதிர் நீ…

பொருந்திய மரையில்
பொருந்தா வளையமாய்
கருதுகோளில் நழுவி
எதிரெதிர் பாதையில்
விலகும் நம் நெஞ்சில்
நட்போ நிலமென நீளும்.

சாய்ந்துகொண்ட தோள்…
எத்தனைமுறை என்
கண்ணீர் துடைத்தவள் நீ
நாம் வேறுதான்…

தமிழ் நான், நீ மராட்டியம்
பேசவோ ஆங்கிலம்.
பார்ப்போமா தெரியாது.
உணர்கிறேன் நான்…

நள்ளிரவு நேரத்தில்
அர்த்தமற்ற புன்னகையில்
நீ தொழுத இறைவனை
சிந்தும் நொடியளவு
கனவில் காண்கையில்…

எங்கும் வெளியேறாத
உன் கண்ணீரை
கொட்டும் பொழுதெல்லாம்
என்னிடம் கொட்டு.

ரோஜாக்கள்
பூத்துக் குலுங்குகின்றன.
உன் பிரார்த்தனைக்கு.

தொடுவானம்

இன்று என் கண்ணீர்
நில்லாமல் வழிகிறது.

அது வழிகிறது
கண்கள் இடுங்க
நான் பார்க்கிறேன்..

உன் கவனமெல்லாம்
தித்திக்கும் சொற்கள் கொண்ட
கவிதையிலும் கனவினிலும்…

என்னால் அது முடியாது.
அவை எப்பொழுதும்
உன் முகம் காட்டாது.

உன் குருதி
அழுக்கு நிரம்பியது.
உன் காலம்
போர் சூழ்ந்தது.
உன் வாழ்க்கை
நிச்சயமற்றது.
உன் மரணத்திற்கு
யாழ் மீட்ட முடியாது.

நீ செல்லும் பாதைகளில்
குருடன் எய்த அம்புகள்
வந்துகொண்டே இருக்க…

உன் முற்றுப் பெற்ற
பழைய பாதையில்
நான் கிளிஞ்சல்கள்
சேகரிக்கிறேன்…