Tag Archives: ஆழ்குமைவு

அழிவில் அழியாத அழிவு

ஒரு வேளை நாம் சந்திக்கலாம்.

தெருவில் அந்த வரலாறு
பெயரின்றி எழுத்தின்றி
பழைய பாட்டிலைபோல
கடந்து போவோர் முன்னிலையில்
தாண்டப்படலாம் அறிவின்றி.

நம் மொழிகளில் குறியீடுகள்
ஒளிந்து கொண்டிருக்கும்
விண்மீன்களாக… அப்போதும்
அது அவ்வாறின்றி
எவருக்கும் புரியாதிருக்கும்.

ஒருவேளை
நாம் கரம் பற்றுகையில்
அந்த சங்கேதங்கள் மறுபடியும்
புரியக்கூறாத சூத்திரமாய்
கடப்பவர் நிழலில் சிதையலாம்.

ஒரு தொலைபேசி அழைப்பு
நம்மை கடத்தி வரலாம்
சாலையில் நம் திண்ணையை
அழிக்க முன்னேறும்
கழிக்கப்பட்ட பேருந்தின்
தள்ளாடும் நடமாட்டத்துடன்.

நாம் பிரியலாம்
மன்னிப்பை வழங்கியும் பெற்றும்…

பலியிடப்பட்ட சூரியன்
தன் ஒய்யாரங்களை
இரவிடம் களைந்து விடுவது போல்.

அதன் பிறகு
என்ன வேண்டுமாயினும் நடக்கும்.
அதுதான் வாழ்க்கை.


நீல நாக்கு தேவதை

அவர்கள் என்னை
துவேஷம் கொண்டு ஆழமாக
தேடிக்கொண்டிருந்தபோது
நீ கண்டறிந்தாய்
என்னிடம் உன்னை.

உன் சதி வலையிலும்
கண்களும் இதயமும் சிக்கியிருந்தன.
கொள்கையும் பதற்றமும்
திருகிக் கொண்டிருந்த
முரட்டுப் பகலில் நமது
உரையாடல்கள் துவங்கியது.

விதை போன்ற இரவுகளில்
அவை தொடர்ந்தன.
மரணத்தின் நாக்கு உனது.
அது காலத்தை பிளந்து
உயிரை ஈர்க்கும் வணிகம் செய்யும்.

நிலம் அதிரும் போக்குகளில்
உனது நாளை துவக்குவாய்.
தன்னையே முட்டிக்கொல்லும்
பெரும் விஷத்தின் முத்தம் நீ.
பேசிக்கொண்டிருந்தோம்.

நீலம் பாரித்த கடவுள்
நம்மிடையே தோல்வியுற்று
எங்கோ மறைந்தான்.
அவர்கள் நாளையேனும்
என்னை கண்டறிவர்.

நீ விரும்பியதை பேசு.

சபிக்கப்பட்ட மனதுடன் வாழும்
ஒரு எந்திர நாய் போல்…

இறந்த காலத்தில் ஒரு
மண் விளக்கின் ஒளியாய்
சமைந்து
அவ்வனைத்தும்
நான் கேட்டு கொள்கிறேன்.

பத்தில் ஒரு மூன்று பேர்கள்

என்னை மன்னித்து விடுங்கள்.
நான் சிறு குற்றவாளி.
(சிறைக்கு செல்லும் அளவல்ல)

படிப்பறிவு அற்றவன்.
பொய்களை சொல்வது போல்
அதை நம்புபவனும் கூட.
எளிய திருட்டுகளில் ஈடுபடுவேன்.
ஊர்சுற்றி.
பாடிக்கொண்டே இருப்பவன்.
வேலைகளில் நாட்டமில்லை.

பெண்களின் ரசிகன்.
முடிந்தபோதும் முடியாதபோதும்
மது வேண்டும் எனக்கு.
கூட்டங்களை நோக்கி
விரும்பி செல்வேன்.
திண்ணைகள் என் அரசவை.

எங்கிருந்தோ எப்படியோ
எனக்கு உணவு கிடைக்கிறது.
யாரையும் ஏய்ப்பதில்லை.
ஆக நான் நல்லவனும் கூட.
நான் இந்தியனும் கூட.
நானும் வாக்களிப்பேன்.

வாழ்க ஜனநாயகம்.

பருந்து தனியே பறக்கும்

இன்னும் இருப்பேன் 
எதற்குப்பின்பும்…

உன் உடலிலிருந்து
நழுவி விழுகிறது 
உனது தத்துவம் நடுங்கியபடி.

திசை அறியாத
கும்பலல்ல நான். 
எரிமலை அமிலம்.

துயில் கிழித்து 
அலறவிடும் வன்கனவு. 
எரிக்குமென் பார்வையில் 
உன் கோட்டைச்சாம்பல் 
பரிதவித்து திணறும்.

மமதையில் இளிக்கும் 
உன் உளறல்கள் 
ஒளியில் ஊடுருவும் 
என் காலடியில் வரளும்.

பகல் கனவில் திளைத்து
ஊறிய எச்சிலுடன் 
அலைவதல்ல என் போக்கு.
முட்டும் பூகம்பம்.

கூச்சலிட்டு தத்தும் 
காக்கை கூட்டமல்ல நான்.

தனியே பறக்கும் பருந்து.

ஒரு கவிதை

இன்று எழுத மாட்டேன்.
எழுதவும் ஒன்றுமில்லை.

தென்படும் வானம்
எதையோ மறிக்கிறது.
பூமி கடுங்கோபத்துடன்
மூடியபடி இருக்கிறது.

நான் இன்று இங்கே இல்லை.

அலைபேசி என்னை
நகரங்களில் அலைக்கழிக்கிறது.
அலைபேசிக்குள் நான்
திணிந்து சுற்றி சுழன்றபடி….

என்னை யாரோ
எடுத்துக்கொண்டு பின்
யாரிடமோ விட்டுவிட்டு
செல்கின்றனர். பாராமுகத்துடன்…

நான் நடக்கும் சாலைகள்
எரிந்து கொண்டிருக்கின்றன.
அவர்களும் இவர்களும்
ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.

ஃபைல் சாப்பிட்ட மிச்ச புருஷர்கள்
நேரே சென்று
வீடுகளை தாக்குகின்றனர்.

புன்னகைக்கும் செல்லும் பெண்கள்
வியர்வை நெடியுடன்
பஸ்ஸில் அமர்ந்தும் இறங்கியும்
வீடுகளை தாக்குகின்றனர்.

நான் தொடர்கிறேன்.




இரவில் மிதக்கும் உயிர்

முயற்சித்தாலும்
இந்த நள்ளிரவை கடக்க
என்னால் இயலவில்லை.
மூச்சடக்கிக்கொண்டு
மரணம் உற்றுப்பார்க்கிறது.

சபிக்கப்பட்ட கூச்சலொன்றை
தெருமுனையிலிருந்து
கேட்கும் பொழுதில்தான்
தாகம் எடுக்கிறது.

துயில் தன்னைத்தானே
போற்றி வழிபட்ட
கந்தல் துணியென தொங்குகிறது
அந்நகத்தின் கூர் நுனியில்.

அசையும் உடலிலிருந்து
வெளிக்கிளம்பும் நான்..

மஞ்சள் கனவொன்றிலிருந்து
விழித்து துள்ளி நிற்கும்
கிழட்டு உடும்பொன்றினை
தாண்டத்தெரியாது நிற்கிறேன்.

உடலிலிருந்து உயிர்க்கும்
கனவிலிருந்து துயருக்கும்
ஆழ்ந்த தொடர்பில் இருந்தும்…

பொருந்திச்செல்லாத
கயிற்றொன்றில் ஊறும்
எறும்பென.

பட்டுப்பூச்சிகள்

சந்திக்கலாம் என்றதும்
அது எதற்கென்று கேட்டேன்.
நீயோ வாசிக்கிறாய்.
பின் பேசுகிறோம்.

நேசிப்பதை எதிர்த்தபடி
பின் நேசிக்கிறாய்…
உன்னால் தொடர முடியாத
வீழ்ச்சிக்கு பின்னரே
நம்மை நாம் அறிய நேர்ந்தது.

விரல் தொடாது
கண் படராது கால் படாது
தொலைவில் அமரலாம் என்றாய்.
(என்னே நம்பிக்கை…)

மணல்தரை….
அதிலும் அது
வெய்யில் மூழ்காத இடமென்றாய்.

என்ன பேசவேண்டும்
எதனை பேசலாம்
என்பதற்கு பதில் இல்லை.

நேரம் ஒதுக்கு வருகிறேன்…
வாருங்கள் பார்க்க வேண்டும்…
இதுதவிர உன்னிடம்
எந்த பதிலுமில்லை.

தெரியும் தோழி…

அன்றைய அழுகையில்
சிந்தாத கண்ணீரின்
துளி துளி மிச்சத்தையும்
நாளை
கொட்டிவிடு என்னிடம்.


கருகத் திருவுளமோ?

வாட்ஸாப்பில் நீ
கரைபுரண்டு ஓடுகிறாய்.
நான் கவனிப்பது
உனக்கு எளிதாக தெரியும்.

நாம் ஒருவரையொருவர்
அடைக்க மாட்டோம்.

நியாயங்களினால் நமக்கு
குற்றவுணர்ச்சியும்
நேர்மைகளால் நமக்கு
துக்கங்களும்
நீதிகளில் நாம் துண்டங்களாய்
பிளக்கப்பட்டும்…

தூசி அடர்ந்த பழைய
ஒயின் க்ளாஸ் சித்திரம் போல்
ஆகியிருக்கிறது நம் வாழ்வு.

நாட்கள் அதன்
எலும்புகள் துருத்தியதால்
தள்ளாடியபடி ஒடுங்குகிறது.

தற்கொலை புரிந்த வாத்தை
துக்கத்துடன்
குளம் மிடறு விழுங்கி
பார்ப்பதை போலவே நான்

நீ வரும் கனவின்
வாதையில் சவ்வூடுகிறேன்.

ஏப்ரல் குறுந்தாடியில்
மின்னும் டெய்ஸி பூக்களுக்குள்
நரகங்களை அலங்கரிக்க
உன்னால் எப்படி முடிகிறது
என்பதே….

இந்தக்கோடையில்
நான் பதில் தேடும் வினா.

ஏவாளின் அனல் வெயில்

ஏவாளை சந்தித்தபோது
அவள் ஆப்பிளை
என்னிடமும் கேட்டாள்.

மரவுச்சியில் மோடியும்
கிளைகள் நடுவே ராகுலும்
மரத்தின் கீழ் ஆதாமும்
இருந்ததை பார்த்து
மைதீன் கடைக்கு போனேன்.

கிலோவுக்கு 10 கிராம்
கூட இருந்ததால்
160 ரூபாய் அழுதுவிட்டு
ஏவாளை நாடி வந்தேன்.

அவளோ பசி பொறுக்காது
அனல் வெயில் தாங்காது
பழைய சாதத்தை
வெங்காயத்துடன் சாப்பிட்டு
படுத்துறங்கி போனாள்.

படமெடுத்த பாம்புக்கு
பழத்தை கொடுத்துவிட்டு
(என்ன செய்யும் அது??)
வீட்டுக்கு வந்தேன்.

என்ன உலகமடா இது.


நீ பார்த்த நான்

யாரோ யாருக்கோ
எழுதியது அது.

எனக்கு நானே
கமழக்கமழ
எழுதிய உணர்வு…வாசிக்க.

அர்த்தம் புரிந்தபோது தெரிந்தது
அது எனக்கில்லை என்பது.

நீ எனக்கும்
நான் உனக்கும் எழுதியதில்
நாம் இருந்ததில்லை.
அவனும் அவளும் அவர்களும்
அதில் இருந்தார்கள்.

உனக்கு சொல்லவும் நீ
எனக்கு சொல்லவும்
நமக்கென சிந்தித்து
எழுதிக்கொண்ட வார்த்தைகளில்
அர்த்தம் இருந்தால் அதில்
உண்மை இல்லை.

உண்மை இருந்தால் அதில்
உறவுகள் இல்லை.

பேசாத பொழுதில்
பார்க்காத பொழுதில்
நம்மிடமே இருந்து
நம்மைப்பற்றியே கேட்கும்
நம்முடைய மனதுக்கு

நம்மால் சொல்ல முடிந்ததெல்லாம்
“இப்ப உன் வாய மூடு”.