ஒரு திருப்பத்தில்
அவளை பார்த்தேன்.
பின் அவள்
சாலையானாள்.
சாலையில் வெறிதே
பயணம் நீண்டது.
என்னை அவளின்
நிழலும் _ அவளை
மரணத்தின் நிழலும்
ஊடாடி வந்தது.
அவள் நதியாய்
மாறிக்கொண்டாள்.
கடல் புக மறுத்து
வானம் நோக்கி
பாய்ந்தாள்.
அவள் நகரமாய்
ஜொலித்தாள்.
வனமாய் மின்னி
பாலையாய் கொதித்து
மலையாய் அடர்ந்து
பூவாய் மலர்ந்தாள்.
சாலை
நில்லாது நீண்டது.
வழியெங்கும் அவள்
பேச்சுக்குரல்.
ஒலிக்குள் மிதந்தது
ஆழியின் பெருமூச்சு.
அவளின்
இதயத்தின் துடிப்பு
காதுக்குள் கேட்டது.
பின்னர்
பயணத்தை
நிறுத்தி கொண்டோம்.
அவள் அவளாக
வந்து சேர்ந்தாள்.
அன்றுமுதல்
நாங்கள்
நடக்க நேர்ந்தது
எங்களுக்குள் மட்டுமே.
அவள் என்னை
கடக்க நான்
அவளோடு அவளை
கடக்க…
நீண்டதொரு பயணம்.
அவள்
மூச்சுக்காற்று செய்யும்
தந்திரங்கள் அறிந்த
காலம் பிளந்தது.
அணிவகுக்கும்
மரணத்துக்கு ஊடே
அவள் காதல் கொள்ள
மீண்டும் ஒரு சாலைக்குள்
பாதை நீண்டது.
பயணம் என்பதெல்லாம்
அன்றன்று
தொலைந்து
அன்றன்று
முடிவதுதான் என்றாள்.
யாருக்குமற்றதுதான்
எந்த வாழ்வும் என்றாள்.
இக்கவிதையை எனக்கு
அவள் முகம் பார்த்த
கண்ணாடி சொன்னது.
Tag Archives: அரூபம்
ஒருவனும் ஒருவளும்
அலையும் கடலுக்கு
தெரியாதிருக்கிறது தான்
அலைவது குறித்து.
மௌனப்பூச்சிகள்
என் பெயரில்
உன் பெயரை
ஒட்டிக்கொண்டு பறக்கிறது
கடலலையை விரட்டும்
காற்றை தன் குரலாக்கி.
நீ பேசுவதெல்லாம்
நீயே கேட்கிறாய்
நான் கேட்பதாக நினைக்கும்
நினைவின் கனவிலிருந்து.
நானோ…
நான் எங்கிருக்கிறேன்
என்பதறியாது போனதும்
காற்றுக்குள் தவிக்கும்
கடல் வாசனையின்
காலடித்தடம் தேடி
உன் கனவில் புகுந்து
என் கனவை
தனியே காண்கிறேன்.
என்னிடம் நான் பேச
எதுவுமின்றி போகிறது.
நாம் கடப்பது
கடல் அல்ல காலம்
என சொல்லிச்சொல்லி
கரை எங்கும் புரளும்
துயரமான இக்கடல்.
கடல்மேனியில் ஒட்டாத
மண்ணெல்லாம் திரண்டு
கல்லறையாகி விட்டது
நம் காலத்துக்கு.
பேசலாம்.
எனினும்…
நாம் இனி
எதை பேசினாலும்
யாரை பேசினாலும்
அது நம்மை பற்றியா
என துடிப்பில் அஞ்சும்
மனதை மட்டும்
எந்த கடலில் ஒளிக்க?
நள்ளிரவு மழை
இப்போது மழை.
இந்த
நள்ளிரவில் மழை.
இதை வெறும் தூறல்
என்று கடக்க
மனமின்றி பார்க்கிறேன்.
தெருவில் யாருமில்லை.
ஊர் துயிலில்
லயித்து இருக்கிறது.
எனக்காக என்னிடம்
வானம் பேசுகிறது
என்று நினைக்கிறேன்.
நினைவில்
சாரல் தெளிக்கும் மழை
என்னைப்பார்த்து
புன்னகை செய்கிறது.
மழை
நின்று விடுமுன்
அதன் சப்தத்தில்
கரைந்து நான்
தூங்க கண் மூடுகிறேன்.
மழை ஓசையில்
மண்டிக்கிடக்கும்
என் உயிருக்குள்…
நில்லாது
பெய்து கொண்டிருக்கும்
அவள் நினைவை
யாசகமாய் கேட்கும்
இந்த இரவின் பசிக்கு
அதைத்தவிர வேறு
என்ன நான் தர?
மயான மொழி
ஒரு சொல்
நகரும் பொழுதில்
ஒரு சொல்
திணறும்
ஒரு வரியின்
எதிரெதிர் முனையில்
அவளும் நானும்.
அவள் உள்ளிருக்கும்
என்னை
என் உள்ளிருக்கும்
அவளை
ஒவ்வொரு வரியின்
ஒவ்வொரு சொல்லும்
ஒளித்து வைக்கிறது
என்னிடமிருக்கும் அவளை
அவளிடமிருக்கும் என்னை.
அவள் அவனை
நீங்குகையில்
அது
நான்தான் என்கிறாள்
என்னிடம்.
அச்சொல் நகர்கிறது
மயானம் நோக்கி.
அவன் அவளை
நெருங்குகையில்
அது நீதான் என்கிறான்
அவளிடம்.
அச்சொல் மிளிர்கிறது
வரியில் முத்தாய்ப்பாக.
அவள் சொல்லற்று
மௌனம் கொள்ள
அவன் சொல்லொடு
துயரம் கொள்ள
வரியில் சிக்கி
துண்டாடி நிற்கும்
காதலின் வடுக்களை
வாசிக்கும் நீ இதை
கவிதை என்கிறாய்…
உன்னருகில் இருக்கும்
உன்னவளின் மனதில்
இருக்கும் அவன்
அப்படியா என்கிறான்.
சப்தத்தின் சாரல்
நான் என்னை
நம்புவதற்கு சில சமயம்…
நீண்டதூரம் நடக்கவோ
எனக்குள் ஏதேனும் பாடவோ
மெள்ள சிரிக்கவோ
முன்முடியை ஒதுக்கவோ
செடியொன்று நடவோ…
என்னை நான்
நம்புவதற்கு சில சமயம்…
வான நுனியில் மிதந்து
இசைத்துளியில் சிதறி
பூக்களில் ஈரமாய் துளிர்த்து
கண்ணோரம் மிதக்கும்
காற்றுக்குள் ஒளியென படர்ந்து
மோனலிஸாவின் மூச்சில்
மின்னலை ஊன்றியபடி….
நீண்டதோர் மறதியில்
என்னை ரகசியமாய்
நம்புகிறேன் என்பதால்தான்…
குளிரில் கூடு கட்டி
மீன்களின் கனவில்
பூக்களை விதைத்து
ஆகாயத்தை நெய்கிறேன்.
நம்பிக்கைதான்…
சாளரம் மூடி அதன்
சாளரம் திறக்கும் சாவி.
பூ மிதித்த பூக்கள்
அவ்வளவு ரகசியமாக
இந்த கவிதையை எழுதினேன்.
சாலையில் பள்ளம் நிரப்பும்
ஒருவனைக்கொண்டு
சொற்களை வாங்கி
குவித்து மேடாக்கி
ஒரு விதையை அதனுள்
ஊன்றி வைத்தேன்.
கவிதைகள் எப்போதும்
தண்டவாளத்தில் மட்டுமே
பயணிக்க கூடியவை.
மேலும்…
சரண்யாவும் நானும்
எங்கள் காதலுக்காக
மரணத்தை உருவாக்கிய
அதே தண்டவாளத்தில்தான்
இக்கவிதை
தன் உயிரையும் என் உயிரையும்
கையில் பிடித்துக்கொண்டு
சுற்றி சுற்றி வர வேண்டும்.
மரணத்துக்கு பின்
சரண்யா என்னோடு இல்லை.
அவளுக்கு துயரமான
ஒரு செய்தி இருந்தது.
அவள் மனம் உண்மையில்
காதலித்தது வெங்கையாவை.
வெங்கையா இப்போது
இதே தண்டவாளத்தில்
மூணு சீட்டு ஆடுகிறான்.
சரண்யா போனபிறகு
தனிமைக்கு விருந்தாக
கவிதைகள் எழுதுவேன்.
எழுதும் கவிதைகள்
பயணிக்கின்றன ஆனால்
ஒருபோதும் திரும்பாது.
சரண்யா இப்போது
ஒரு வேடுவன் ஆவியுடன்
ஊர் சுற்றி கொண்டிருப்பதாக
தகவல் வந்துள்ளது.
எல்லா கவிதைக்கும்
ஒரு ரகசியம் உண்டு.
அதை ஒருபோதும்
கவிதைகளில் நாமே
கண்டறிய முடியாது.
ஒரு ஆவியின் கனவில்
வந்த கவிதையை
நாளை நான் எழுதுவேன்.
நான் எனக்கு யார்?
(ஓர் அறிவிப்பு…
இந்த கதை என் சொந்த படைப்பு அல்ல. இலியிச் எழுதியதாக நம்பப்படும் ஒரு நாவலின் நடுவில் இடைச்செருகலாக வந்து இருக்கும் சிறுகதை இது என்று நம்பத்தகுந்த எனது இலக்கிய நண்பர்கள் மூலம் இப்போது தெரிய வருகிறது.
ஒருவேளை பதிப்புரிமை தொந்தரவு எழுப்பப்பட்டால் நான் இந்த கதையை நீக்கி விடுவேன். இந்த கதைக்கு நானே என் மனம் போன போக்கில் ஒரு தலைப்பு வைத்தேன். உங்களுக்கு பிடித்த தலைப்பை நீங்களும் வைத்து கொள்ளலாம்.)
இனி கதை. ==================
இருக்கட்டும்.
அதனாலென்ன?
என்னை இன்று எப்படியேனும் கொல்ல வேண்டும் என்ற ஆத்திரம் உங்களுக்கு. இப்படி நீங்கள் ஒன்றுகூடி குவிந்து நின்று இருப்பதை நான் முன்பு பார்த்ததே இல்லை.
உங்கள் கண்களில் மின்னி சிதறும் அந்த கொடிய குரூரத்தை ஒருநாளும் நீங்கள் கண்ணாடியில் பார்த்திருக்க மாட்டீர்கள்.
உங்கள் முகக்கண்ணாடியில் வழுக்கி விழும் மழைக்காலத்தின் வெயில் பற்றிக்கூட உங்களுக்கு தெரியாது.
சற்று தொலைவில் கோடரியோடு நிற்கும் அந்த பிரெஞ்ச் இளைஞனை பார்க்க பார்க்க ஆத்திரம் வருகிறது. உங்கள் வெறியை அவனுக்குள்ளும் பிரயோஹித்து கோடரியோடு இங்கே நிற்க வைத்திருக்கிறீர்கள்.
அவனோடு நான் கடலோரம் சிறிது நாட்கள் சல்லாபித்து இருக்கிறேன். மோவைக் போதையில் அவன் மூக்கு விடைக்கும் போது என்னை அடைந்து இருப்பான்… அல்லது நான் அவனை…
அவனுக்கு அருகில் இருக்கும் கொம்பலஸ் ஒரு நூல் வியாபாரி. அவன் மனைவி ஜாந்திசோனா வட்டி வியாபாரி. நகவெட்டியை கொண்டு குழந்தையின் சொத்தை பற்களை பிடுங்குவதில் கை தேர்ந்தவள்.
நான் அவளிடம் ஒருநாள் கிழக்கின் திசை எது என்று கேட்டேன். அதற்கு அவள் யோசித்தாள். அன்றிலிருந்து அவளுக்கு பேய் பிடித்தது என்று ஊரார் நம்பினர். நான் என்ன செய்ய?
உங்கள் தேடல் தீவிரமாக இருக்கிறது. கிம்னோ தன் மூக்கால் மோப்பம் கொள்ள ஆரம்பித்து விட்டான். புதர் மண் அவன் கண்களை கோதி விட்டு பறக்கிறது. அவன் பிடரி சிவப்பு நிறம்.
ஐயா…
நான் குற்றம் செய்தது உண்மைதான். அந்த குற்றம் ஒரு வாத்தை உணவுக்கு கொல்வது போல் நிகழ்ந்து முடிந்த ஒன்றுதான்.
என் கனவில் வந்த அந்த திரைப்பட இயக்குனரை கொலை செய்து விட்டேன். அது கனவிலேயே நிகழ்ந்து முடிந்து விட்ட சம்பவம்.
அவன் உங்கள் வாழ்க்கையை திருடி இருக்கிறான். உங்களின் திசையை திருப்பி தன்னை மட்டும் வளமாக்கி கொண்டவன். கொன்றது தவறா?
கனவில் ஒருவனை நான் கொன்றதை ஆதாரத்துடன் நிரூபிக்க தியிப்பினோ மோனசா என்ற டச்சு நாட்டு பெண்ணை நீங்கள் கடத்தி வந்து உங்களோடு வைத்திருப்பதும் அதற்காக தூதரக அதிகாரிகளின் மனைவிமார்களை பலாத்காரம் செய்ததும் எனக்கு தெரியாதா என்ன?
நானும் இப்போது உங்களை பார்த்து கொண்டுதான் இருக்கிறேன். உங்கள் வெறி பிடித்த தேடல் ஒழுங்கற்று சுயம் இழந்து இருக்கும்போது நான் சற்றே ஆசுவாசமாகி கொள்கிறேன்.
உங்கள் சோம்பலை கலைக்கும்படி துயண்டர் திமிங்கலத்தின் பாலை காய்ச்சி பருக கொடுக்கிறான். அவன் ஜெர்மனியில் இருந்து கழுகின் மீது பறந்து வந்தவன் என்று நீங்கள் நம்பிய காலத்தில் அப்படி இல்லை அவன் பொன்னமராவதியில் கல்பனா தியேட்டரில் இண்டெர்வெல் நேரத்தில் முறுக்கு விற்பவன் மட்டுமே என்று சொன்னேன்.
அவன் ஆண்குறி மிகவும் நீளம் மிகவும் தடியாகவும் இருக்கும் என்று வித்யா ஊரெல்லாம் சொன்னபோது உங்கள் ஊர் பெண்கள் அவனை தேடி பிடித்து வெட்டிவேர் எலுமிச்சை நன்னாரி ஊற வைத்த சூடான நீரில் குளுப்பாட்டியதும் அவன் நிறம் வெளுத்து போனான். அவன் நாக்கு சுளுக்கி பாஷை இடறியது. எப்படியோ ஜெர்மன் மொழி அங்கே ஒட்டி கொண்டது. இன்றோ அவன் உங்களில் ஒருவன் ஆகி விட்டான்.
நான் மட்டும் பாவியாகி விட்டேன்.
என்னை மன்னிக்க கூடாதா?
ஒரு கொலைதான் மனிதத்தின் அபத்தமான எதிர்காலத்தை முடித்து வைத்திருக்கிறது என்பதற்காகவும் நீங்கள் எனக்கு கருணை காட்டலாம்.
தோன்ஷிய நாட்டு இளவரசன் பதுப்பிர்நோ என்னிடம் உங்கள் நாட்டு முதலிரவு எப்படி இருக்கும் என்று கேட்டான். நான் விளக்கி சொன்னேன்.
கடும் இருட்டில், ஒரு சிறு அறையில், சிறு கட்டிலில் அல்லது தரையில் ஏராளமான பண்டங்களுடன் மூச்சு முட்டும் வாசனையில் வாடிய பூக்களுடன்….
பதுப்பிர்நோ என்னிடம் கேட்டான்… நீங்கள் என்ன மூட்டைப்பூச்சிகளா?
பிற்காலத்தில் நான் அவன் நாட்டில் இருந்த ஒரு நங்கையை மணமுடித்து கொண்டேன். கியசிக்கினோ அவள் பெயர். எங்களுக்கு முதலிரவு வேறு மாதிரி அந்த நாட்டு வழக்கப்படி நிகழ்ந்தது. அதாவது,
பட்டப்பகலில்… வெட்ட வெளியில்… தங்கத்தால் ஆன மேடையில்…
ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்து கொண்டாடி மகிழ அது நடந்தது.
அந்த தேசத்தின் குதிரைகள் பேசும். ஒருநாள் ஒரு குதிரை இப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்டது. “எனக்கு நான் யார்”?
இந்த கேள்வியோடு நான் கடற்பயணங்கள் மேற்கொண்டேன். என் அன்பிற்குரிய கியசிக்கினோவை
மீத்தாகு வளைகுடாவில் ஒரு கடல் நோயில் பறி கொடுத்தேன். அவள் நீல நிறமான உடலை கடலில் எறிந்தனர்.
எங்கெங்கோ சுற்றினேன். இந்த நாட்டுக்கு வந்தேன். இங்கும் எங்கெங்கோ சுற்றி அலைந்தேன்.
ஒருநாள் நந்தியாதோப்பு குஞ்சுமாலிக் என்னோடு பேசிக்கொண்டு இருந்தான். சைக்கிளில் டீ கேன் வைத்து ஊரெல்லாம் விற்பனை செய்வது அவன் தொழில். சைக்கிளை பிடித்தபடி அவனுக்கு உறுதுணையாக இருப்பவன் ஆசியாபட்டியை சேர்ந்த கிஸ்விலா தான்ட்ரிக்.
நாங்கள் பசியில் பிறக்கிறோம். பசியில் வாழ்ந்து மடிகிறோம். எங்கள் மனதில் சோற்று பருக்கைகள் புதைந்து வெடித்து சிதறும்போது நாங்கள் சாகிறோம். எங்கள் கனவை அந்த இயக்குனன் விற்று விற்று வயிறு வளர்க்கிறான். கடற்பிரபுவே… அவனை நீங்கள் சம்ஹாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
ஆம்…
நான் அந்த வேண்டுகோளுக்கும் அன்புக்கும் ஒரு குவளை சீன தேநீருக்கும் இணங்கி கனவில் வந்த இயக்குநனை கொன்று உங்களை அவனிடமிருந்து விடுவித்தேன்.
நீங்களோ என்னை கொலை செய்ய பகலை வாளாக்கி இரவை ஈட்டியாக்கி இங்கே வந்து நிற்கிறீர்கள்.
உங்கள் வீட்டு வாசலில் பெண்கள் கோலமிடும் பணியை நிறுத்திவிட்டு ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தங்கள் வாசலில் “நான் எனக்கு யார்” என்று எழுதி வருவதுதான் உங்கள் சிக்கலுக்கு கோபத்துக்கு இன்னொரு காரணம் என்றும் எனக்கு தெரியும்.
சரி.
நாம் பரஸ்பரம் பொருதுவோம்.
நிறமான இரவுகள்
காற்றுக்குள் சுழலும்
ஒலித்துகள்களில்
காற்றினை சுழற்றும்
ஒளித்திரள்கள்…
சிறு சிறு
பட்டாம்பூச்சிகள்.
மௌனத்தின் விஷமெடுத்து
இரவை திரிக்கும் நான்.
இரவுக்குள் சாய்ந்தாடும்
அவள் நிழலின் நிழற்படம்.
காற்றை குடித்து என்
கனவை புசித்து
நத்தையாய் நகரும் உயிருக்குள்
நின்று தடுமாறும் நினைவில்
சாய்ந்தாடும் நிழற்படத்தின் நிழல்.
ஒலியில் மோதிய
ஒளியின் கண்கள் கண்டு
துணுக்குறும் இரவுக்குள்
விழிப்புறும் அச்சிறு
பட்டாம்பூச்சிகள்…
பட்டாம்பூச்சி சிறகசைப்பில்
ஒலியை சுழற்றும் வளி.
வளிக்குள் சுழலும்
ஒளியின் நிழலில் விரிந்த
அப்பகலில் அவள்…
ஜென் ஜுவாலஜி
ஒரு நவீன
ஜென் பெண் துறவி
கவிதை எழுதுகிறார்.
அவர் முன்
சிறு தட்டொன்றில்
சில பிஸ்கெட் துணுக்குகள்.
அத்துணுக்குக்களை நோக்கி
வரும் செவ்வெறும்புகள்.
துறவியின் முன்னிருக்கும்
காகித தாள்களில்
புகுந்து சிரித்து சிதறும்
காற்றுக்குலைகள்…
காகிதங்கள்
அங்குமிங்குமாய் பரவ
தட்டில் சுழன்று சுழன்று
உண்ணும் எறும்புகள்
சிறு அதிர்ச்சி கொள்கின்றன.
துறவி பின் எழுதுகிறார்.
தட்டில் எறும்புகள்.
தட்டுக்குள் எறும்புகள்.
தட்டை சுற்றிலும்
சில எறும்புகள்.
தட்டை நோக்கி வரும்
எறும்புகளுக்கு
தட்டிலிருக்கும் எறும்புகள்
ரகசியமாய் சொல்வது…
இங்கு மட்டுமே
எறும்புகளை சுற்றிலும்
தட்டுகள் இருக்கின்றன.
சாப துகள்கள்
அவனுக்கென்று
ஒரு கவிதையும்
அவளுக்கென்று
ஒரு கவிதையும்
எழுதியாயிற்று இப்போது.
இப்போது எனில் இது
முன் மாலை நேரம்.
இந்த பகலும் கூட
அவனுக்கும் அவளுக்கும்
நிசியோ? புலரியோ?
ஒளிக்குள் கிறங்கி
தவிக்குமிந்தக் கவிதையில்
யாத்ரீகனாய் அலைகிறது
என் மனதுள் இருக்கும்
பிற்பகலின் தனிமை.
அவனுக்கும் அவளுக்கும்
என்ன நேர்ந்திருக்கும்?
கேள்வியெங்கும் நெளிகிறது
இரவின் சாபத்துகள்கள்.
You must be logged in to post a comment.