Tag Archives: அகத்தேடல்

ரயில்

ஓரறிவு கொண்டது
ரயில் பூச்சி…

விலாங்கு மீன் நினைத்து
நழுவியோடும் அதன்
பாதையில் வழுக்கி
விழுகிறது பூமியின் நிழல்.

ரயில் பூச்சி
மனிதர் உண்டு
மனிதரை கக்கி
இருள் குடைந்து
நிலவை துரத்துகிறது.

ரயில் பூச்சி
ஒரு முட்டை இட்டது.
அது பொறிந்த போது
விமானம் வந்தது.

ரயில் பூச்சியும்
விமான பறவையும்
ஒன்றையொன்று
பார்த்தபடி செல்கிறது
மனித வண்டுக்களை
சுமந்து கொண்டு…

இத்தனை காட்சிகளும்
கொண்டிருந்த
அந்த குறுக்கு சுவரை
இடித்தபின்புதான்
மூன்று கொலைகள்
விழுந்து முடிந்தன.

பவித்ரா என்னும் செஸ்போர்டு

எனது புத்தகத்தில்
அந்த இசை இருந்தது.

அந்த இசைக்குள்
கடல் மழை பெய்தது.

கடல் மழையில்
நனையும் பவித்ரா
என் புத்தகத்தில்
சொற்களால் அதிர்ந்து
வரிகளாக விரிந்தாள்.

எல்லா வரிகளிலும்
பவித்ரா இடி கொண்டு
துடுப்புகள் இட்டாள்.

ஒரு மீன் குஞ்சின்
இறுதி மூச்சினை
அவள் கண்களில்
பொதித்தேன்.

வானம் நீல நிறத்தில்
நகைத்தது.

நாங்கள் கலந்தோம்.

அவள் பருகிய
வெண்ணிற எனது உயிரின்
காலத்துடிப்பு
அலமாரிக்குள் வைத்த
கடிகார ஒலியாக
கடலின் மனதுக்குள்
கேட்கிறது என்றாள்.

நதியும் கடலுமாய்
பிணைந்த நாங்கள்
இரவை உறிஞ்சி
பகலை வெளியிட்டோம்.

ஒரு கவிதையை
ஒரு கவிதை எழுத
அவள் யோனிக்குள்
பிரபஞ்சத்தின்
அனல் கசிந்தது.

அன்று முதல்…

பருவ காலங்களின்
கண்ணசைவை மீட்டி
அவள் ஸ்வரத்தில்
உருகிய என்னையும்
ஒரு புத்தகமாக்கி
தனியே
வாசிக்கிறாள்.உயிரிகள்

உயிரை மட்டும்
ஒளித்து வைக்கிறேன்.

அவள்
சொல்ல விரும்புவது
எதுவென்றாலும்
அது என் உயிருக்கு
தெரியக்கூடாது.

புகை வழியே
அவளை பார்க்கிறேன்.
பார்க்கையில் அவள்
ஒடிந்த நிலவொளியால்
யாழ் ஒன்றை தீராது
இசைக்கிறாள்.

அவள் முத்தத்தின்
கதுப்பொன்றில்
நீந்தி களிக்கிறது
புத்தனின் தியானம்.

உயிர் ஒளிந்திருக்கும்
மந்திரச்சிமிழை
அவள் கனவில்
விதைத்து வைக்கிறேன்.

கனவு அவளோடு
கலைகிறது புகையாய்.

பூக்களின் மச்சங்கள்
தொகுத்து தன்
உயிருக்குள் கோலமிடும்
அவள் கைகளை
நனைக்கிறது என் உயிர்
கண்ணீர் விடுத்து.

எப்போதும்போல்
இப்போதும் அலைகிறேன்
மிச்ச உயிருக்குள்
அலையடிக்கும் அவள்
நினைவை உலர்த்தியபடி.மயான மொழி

ஒரு சொல்
நகரும் பொழுதில்
ஒரு சொல்
திணறும்
ஒரு வரியின்
எதிரெதிர் முனையில்
அவளும் நானும்.

அவள் உள்ளிருக்கும்
என்னை
என் உள்ளிருக்கும்
அவளை
ஒவ்வொரு வரியின்
ஒவ்வொரு சொல்லும்
ஒளித்து வைக்கிறது

என்னிடமிருக்கும் அவளை
அவளிடமிருக்கும் என்னை.

அவள் அவனை
நீங்குகையில்
அது
நான்தான் என்கிறாள்
என்னிடம்.
அச்சொல் நகர்கிறது
மயானம் நோக்கி.

அவன் அவளை
நெருங்குகையில்
அது நீதான் என்கிறான்
அவளிடம்.
அச்சொல் மிளிர்கிறது
வரியில் முத்தாய்ப்பாக.

அவள் சொல்லற்று
மௌனம் கொள்ள

அவன் சொல்லொடு
துயரம் கொள்ள

வரியில் சிக்கி
துண்டாடி நிற்கும்
காதலின் வடுக்களை

வாசிக்கும் நீ இதை
கவிதை என்கிறாய்…

உன்னருகில் இருக்கும்
உன்னவளின் மனதில்
இருக்கும் அவன்
அப்படியா என்கிறான்.

சப்தத்தின் சாரல்

நான் என்னை
நம்புவதற்கு சில சமயம்…

நீண்டதூரம் நடக்கவோ
எனக்குள் ஏதேனும் பாடவோ
மெள்ள சிரிக்கவோ
முன்முடியை ஒதுக்கவோ
செடியொன்று நடவோ…

என்னை நான்
நம்புவதற்கு சில சமயம்…

வான நுனியில் மிதந்து
இசைத்துளியில் சிதறி
பூக்களில் ஈரமாய் துளிர்த்து
கண்ணோரம் மிதக்கும்
காற்றுக்குள் ஒளியென படர்ந்து
மோனலிஸாவின் மூச்சில்
மின்னலை ஊன்றியபடி….

நீண்டதோர் மறதியில்
என்னை ரகசியமாய்
நம்புகிறேன் என்பதால்தான்…

குளிரில் கூடு கட்டி
மீன்களின் கனவில்
பூக்களை விதைத்து
ஆகாயத்தை நெய்கிறேன்.

நம்பிக்கைதான்…

சாளரம் மூடி அதன்
சாளரம் திறக்கும் சாவி.

103. இலியிச்

கருணையற்ற எதிர்ப்புக்கு மத்தியில் மனிதன் கடவுளை கண்டறிந்து கொண்டான். அவனுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு தானும் கடவுளாக மாற முடியும் என்பதுதான்.

அவன் கடவுளின் முன்பு சுருண்டு தளர்ந்து தன்னை விடுவித்து கொண்டான். பின் அவன் என்பது மாறுதல் கொண்டு நான் என்ற அடுத்த நிலையை அடைந்தது.

நான் என் ஜாதி மதம் இனம் குழு குலக்குறிகள் நாடு மொழி சார்ந்த அனைத்து மமதை அகங்காரத்துடன் முன் எழுந்த போது அதை எதிர்த்தவனிடம் அதே அகங்கார மமதைகள் கொதித்து கிளம்பி வந்தன.

இந்த இரு “நான்கள்”  மட்டுமே கடவுளுக்கும் அப்பாற்பட்டு இருக்கும் பிரச்சனைகளின் வீச்சு.

அனைத்து அளவுகோல்களில் இருந்தும் அவன் தவறிக்கொண்டே இருக்கிறான்.

நான் கொள்ளும் பயணத்தின் திசைகள் எப்போதும் அடுப்பிலோ யோனியிலோ முடிந்து குளிரை வெம்மையை தேர்ந்த அளவில் சம்பாதித்து விடுகின்றன.

உலகம் அளவற்ற நடிப்பால் கரைந்து உருகுகிறது. அது எப்போதும் மனிதர்களை நம்பி இயங்குவதில்லை.

சந்தர்ப்பம் கோடரி போல் நிற்கிறது.

102. இலியிச்

காலங்கள் மிக நீளமாக இருப்பதால் அவை உறுதியான துல்லியத்துடன் இருக்க முடிவதில்லை.

அதன் பெர்பெக்க்ஷனிஸம்
சரிவில் சிதறி ஓடும் பாறைகள் போன்று
எல்லா உருவங்களையும் குலைத்து கொண்டே இருக்கின்றன.

மனம் அங்கிருந்து பிறக்கிறது. மனிதன் அதை தொடர்கிறான். அவன் அவனை கண்டறிவதும் அவனோடு இணங்கி செல்வதிலும் எல்லா சிக்கல்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவற்றில் இருந்து விடுபெறவோ நீங்கவோ முயற்சிக்கும்போது மீண்டும் சமூகத்தை மட்டுமே நம்ப வேண்டி வருகிறது.

நான் என்ன செய்ய வேண்டும் என்று சங்கரன் என்னிடம் கேட்டபோது அவனுக்கு என்ன சொல்ல வேண்டுமென்று தெரியவில்லை.

நீ என்ன செய்து முடித்திருக்கிறாய் என்று கேட்டேன்.

அவன் பிறந்து வளர்ந்து கற்று பணியாற்றுவதை விடவும் புதிதாக ஒன்றையும் சொல்ல தெரியவில்லை.

மனிதன் மனிதனுக்குள் அடங்கி போகும்போது அதில் என்ன புதிதாக இருக்க முடியும்?

நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை சற்று நேரம் நிறுத்தி கொண்டோம்.

வெயில் காலம் அதி தீவிரமாக உணர்ச்சி பெருக்குடன் நம்மை நோக்கி வருகிறது. நாம் வளைந்து இருக்கும் நியாயங்களின் சிக்கல்களுக்கு இடையில் இன்னும் நேர்மையாக வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று சங்கரன் கேட்டு கொண்டான்.

அவன் தீர்க்கமாக நம்புகிறான். அது உடல் அளவில் அவனை நிம்மதியாக இருக்க உதவுகிறது.

நான், அவனைப்போல்தான் நானும் இருக்கிறேனா என்று கேட்டு கொண்டேன். ஒருவேளை அது உண்மை என்றால் பல கோடி மனிதர்களில் எனது செல்வாக்கும் சின்னஞ்சிறிய அளவில் இயங்கி கொண்டிருக்கும்.

இந்த ஒரு நம்பிக்கை மட்டுமே சங்கரனுக்கு போதும். அவன் சார்ந்திருக்கும் கூட்டத்துக்கும் போதும்.

101. இலியிச்

நான் சாலையில் இறங்கி நடக்கும் போதெல்லாம் என்னை ஒரு அந்நிய உணர்வு பற்றி விடுகிறது.

கடைகள். வாகனங்கள்.

சாலையில் செல்லும்போது ஒவ்வொரு பொருளுக்கும் இருக்கும் விலை மதிப்பும் சந்தை மதிப்பும் அதிர்ச்சி தருகிறது.

ஒரு மனிதனுக்கு இத்தனை தேவைகளா இருக்க முடியும்? எந்த ஆசையும் இன்றி மிகுந்த சலிப்போடு அவன் வாங்க வேண்டிய பொருட்களும் அதற்கான நிர்பந்தங்களும் இதே வாழும் சூழல் அவனுக்கு உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன.

இரண்டு சட்டை பழைய செருப்பு வாரத்துக்கு ஒருமுறை தோய்த்த லுங்கியோடு சிரைக்காத முகத்துடன் எத்தனையோ வருடம் நூலகத்தில் இருந்த நாட்கள் நினைவுக்கு இதமான ஒன்று.

இன்று மனித தேவைகள் பெரும் பசியோடு மாறிவிட்டது. விளம்பரம் ஒவ்வொரு மனிதனையும் தூக்கி சென்று விடுகிறது. அவன் அவனுக்கே கொடுமை செய்து கொள்கிறான்.

மனிதன் விலங்குகளுக்கு அரசனாக இருக்கிறான். ஆனால் அவன் எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி -யாருக்காகவோ- அவன் அவனுக்கே அடிமையாக இருக்கிறான்.

வாழ்க்கையில் வெற்றி பெறுகிறோம் என்று மனதளவில் தோற்று கொண்டே இருக்கும் அவன் அணிந்த உடைகள் ஒரே நாளில் நாற துவங்கி விடுகிறது.

ஒவ்வொரு மனிதனும் தனக்காக வேண்டி தன்னையே அதி தீவிரமாக முடுக்கி விடுவதும் இயங்க செய்வதும் இல்லை.

அவன் தலையில் கல்வி என்ற திரியை பற்ற வைத்து விடுகிறார்கள். வெடித்து கொண்டே இருக்கிறான்… பிறருக்காக.

100. இலியிச்

ஆன்மீகமும் நாத்திகமும் எனக்குள் இருந்துதான் எழும்புகின்றன. நான் ஆன்மீகத்தால் என்னை சமூகமாக நிலைநிறுத்தி கொள்ளும்போது நாத்திகத்தால்  என்னை வேரற்று சாய்த்தும் கொள்கிறேன்.

ஆன்மீகம் அதற்குரிய ஒழுங்குகளை வரிசைப்படுத்தி என்னை தயாரிக்கும் போது அதன் பின் விளைவு அரசியலில் நாத்திகம் தளிர் விடுகிறது.

மனிதனுக்கு அப்பாற்பட்ட வெறுமையை நான் என் சுய வெறுமையாக மாற்றி கொள்ள தயங்கும்போது ஆன்மீகம் சர்வ வல்லமையுடன் என் மீது  அடர்ந்து பற்றுகிறது.

இறைவனின் பொறுப்புகள் எல்லாம் எனக்கு இடைப்பட்ட கட்டளைகளாக உரு எடுக்கின்றன.

நாத்திகத்தின் கலகம் சின்ன மனதின் சின்னச்சின்ன பூசல்கள் போல் இருக்க முடியாது பரிணாம தத்துவத்தின் பின்னே செயலூக்கத்துடன் விரையும்போது நான் அரசியல் கூடுகளில் மாட்டி கொள்கிறேன்.

என் நோக்கம் விடுதலை.

விடுதலை மட்டுமே எனும்போது அது நிராகரிக்கும் சகலமும், சக மனிதனிடம் நான் கொண்டிருக்கும் மனிதாபிமான துறவையும், வெளிச்சத்தில் சிறைபட்டு நிற்கும் நிழல்களையும் காட்டி விடுகிறது.

ஆன்மீகம் மௌனமாய் என்னை தொல்லை செய்யும்போது அதையே நாத்திகம் ஆராவாரமிடும் செயலாய்  மாற்றிவிட்டு துருத்தி நிற்கிறது.

மனிதப்பண்ணையில் நான் ஒடுங்கி நிற்கும் காலத்தில் என் பேராசைகள் என்னை உலுக்குகின்றன.

காடுகளை புரட்டி தள்ளும் புயலாய் தளும்பி நிற்கும் மனம் அடுத்த மனிதனை பார்க்கும் கணத்திலேயே எனக்கு அவன் சுயமற்று செய்து கொண்டிருக்கும் எல்லா செயல்களிலும் முகச்சுளிப்பை உண்டு பண்ணுகிறது.

உபாஸனைகள் தொழுகைகள் தோத்திர வழிபாடுகளில் என்னை தன் உணர்வற்று மறக்கும்போதும்…
தீராத துன்பத்தை உண்டாக்கும் சக மனிதனே கடவுளின் ஆதாரமாகவும் ஜீவனாகவும் இருக்கிறான் என்று இறுதியில் புரியும்போது கடவுள் தன் அவலமான முடிவுகளை எண்ணி எண்ணி வருந்துவது தெரிகிறது.

ஆன்மீகம் நாத்திகத்தால் ஜொலிப்பது போலவே நாத்திகம் ஆன்மீகத்தால் மின்னி ஒளிர்கிறது.

மனிதனின் உடலை துளைக்கும் சவுக்கு எப்போதும் சக மனிதனிடமே இருக்கிறது. கடவுள் மட்டும் எல்லா வாதைகளிலும் பொருக்காடி நின்றிருக்கிறார்.

99. இலியிச்

மாலையில் நான் கோபாலை பார்க்க போனேன். மிக தீவிரமான மனநோயில் இருந்து முற்றிலும் விடுபட்டு இப்போது அதற்கு அடுத்தகட்ட சிகிச்சையில் இருக்கிறான். சிசிரோவின் தேடல் சிந்தனையில் அதிகம் பாதிப்பை அவன் அடைந்திருந்தான்.

என்ன செய்கிறாய் என்று உரக்க கேட்டபடி பொய்யான உற்சாகத்துடன் அறைக்குள் நுழைந்தேன்.

தனிமைதான் வேறு என்ன என்றான்.

எது தனிமை என்பது எனக்கு புரியவில்லை. தனியே அமர்ந்து இருப்பதா? செயலாற்றுவதா? தியானம் செய்வதா? வழிபாடுகள் நிகழ்த்துவதா?

அவன் கட்டில் அருகே இருந்த ஜன்னலை பிடித்தபடி சாலையில் வருவோர் போவோரை பார்த்து கொண்டிருந்தான்.

வருவோரும் போவோரும் இவனுக்குள் நிரம்பி இவன் தனிமையை அவர்கள் மறுத்து கொண்டிருந்தனர்.

ஒருவனுக்கு, தனக்குள் இருக்கும் தனிமை என்பது எந்த கூட்டத்திலும் தன் இருப்பை ஒருவனுக்கு உணர்த்தி கொண்டே இருக்கும். உடலுறவில் கூட அதற்கு நிம்மதி இருப்பது இல்லை. அது மரணத்தின் சிசு.

மனதின் பசிக்கு சமூக ஓலங்களை போல் விருந்து வேறொன்றில்லை.
அது இருக்கும் இடத்திலிருந்து கடந்து போகும் வழி தெரியாது உரிய துணை கொண்டு உருமாறி இருக்கவே பிரியம் கொள்கிறது.

அடையாளங்கள் மீது வழிய வழிய அன்பை அபிஷேகிக்கும் மனம் அதை இருப்பென்றும் உறவென்றும் பாதுகாப்பென்றும் தனக்குள் விடாது நினைவுறுத்திக்கொண்டே இருக்கிறது.

அவன் அவனிடம்தான் இருக்கிறான். நான் என்னிடம் மட்டுமே இருக்கிறேன்.

கோபால் ஒரு நியாயத்தின் மீது தன் பரிதவிப்பை உருவாக்குகிறான். அவன் விரும்புவது என்பது அவனுக்கு உரியது அல்ல. மனுக்குலத்துக்கு உரியது. அதனால் மட்டுமே அவன் சங்கடங்கள் பெருகி வளர்கின்றன.

வேறு பலருக்கும் தன் சுயதேவையில் இருக்கும் அதிர்வு கலந்த ஏக்கம் கோபாலுக்கு மட்டும் பொருந்தி போகாது.

அவன் தனிமை என்பது கூடாரத்தில் இறுகி நிற்கும் குமைந்த இருட்டல்ல.

அவ்வளவுதான் எனக்கும் புரிகிறது.