நான் கவிஞனல்ல
அப்படி அழைக்காதீர்.
என் வலிகளைத்தான்
ஒப்பனைக் கண்ணீராய்
தெளிக்கிறேன்.
ஒவ்வொரு இடமாய்
ஒவ்வொரு துளியாய்
பார்த்து பார்த்து.
பூக்களின் மேல் சில
இதயத்தின் மேல் சில.
உங்கள் வலியும்
பொருந்திப்போனால்
போகட்டும் விடுங்கள்.
நாம் நமது விடைகளை
பரஸ்பரம் திணிக்கவேண்டாம்.
எனது வரிகளில்
நீங்கள் தவழவேண்டாம்.
உங்களின் ஒருபிடி
ஒளியை தாருங்கள்…
என் பாதையில்
நான் போய்க்கொள்வேன்.
இனிவரும் ஏகாந்தத்தில்
உங்கள் பாடல் ஒன்றை
ஏந்திச்செல்ல அனுமதியுங்கள்.
காற்றைப்போல் பின்
என்னை கடந்து விடுங்கள்…
மூங்கில் காட்டில்
நினைத்தறியா நேரமும்
தீ பற்றி தீர்க்கும்.