தூக்கம் வராத இந்த நள்ளிரவு ஒரு மணி இருபது நிமிடத்தில் நான் அறிய முடிந்த ஒன்றே ஒன்று….
எனக்கு பைத்தியம் பிடிக்கிறது.
ஒரு மணி என்பதும் தவறலாம். அதற்கு முன்போ பின்போ இருக்கலாம்.
நினைவுகள் முரட்டுத்தனமாக ஒடுங்கியும் பின் தன்னை கிளர்ச்சியூட்டி புரண்டும் தளர்ந்து விரிந்தும் அலைய துவங்கியது.
இறந்த காலத்தில் நான் அனுபவித்த வேதனை மிகுந்த பல வெட்ககரமான நிகழ்வுகள் இப்போதுதான் அவை ஒளிந்து இருந்த பகுதிகளை விட்டு ஆவேசமாய் துளைத்து வெளியேறியதை என்னால் பார்க்க முடிந்தது.
என் அவமானம் மிகுந்த அந்த கடந்த காலங்கள் நிகழ் காலத்தை இரக்கமின்றி விஷக்கொடுக்கால் விடாது கொட்டி கொண்டிருந்தது.
உடல் வியர்த்து தாகம் கூடியது.
குடிக்க நீர் தேவை என்பதை நான் மறந்து கொண்டிருக்கிறேன் என்பதை புரிந்து கொண்ட அதே நொடியில் தொடர்ந்து மறதி வளர்ந்து கொண்டே வந்தது.
காலம் இறுகி உறைந்தது.
என் உறவுகள் கீழே உறங்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களை எழுப்பினால் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
ஒரு இருள் சூழ்ந்து அந்த திரவத்தில் யாரோ என்னை முக்கி வீழ்த்திக்கொண்டு இருப்பதை புலன்கள் அறிவித்தது.
நான் மௌனம் அடைந்தேன்.
நான் என் உருவத்திற்கு எதிரான ஒரு சொல்லை போல் மாற்றமுற்று என்னையே சுற்றி சுழன்று வளைய வருவதை பார்க்க முடிந்தது.
என் பின் பக்கத்தில் இருந்த ஒரு உருவம் காதுக்குள் பலவந்தமாக நுழைந்தது.
அது குரல்.
பின் அந்த குரலின் வேறு வேறு குரல்கள்.
குரல்கள் யாரிடமோ எதையோ விட்டு விட்டு பேச ஆரம்பித்தன.
‘என்னோடுதான் பேசுகிறீர்களா’ என்று ஒருநாள் உயரிய காமத்தில் அவள் கேட்டபோது என் கைகள் அவள் மார்பை திருகிக்கொண்டு இருந்தன.
நாங்கள் அப்போது ஒருவரையொருவர் கொல்லும்படியான ஆழமான நெடுமூச்சு ஒன்றினை எங்கள் மேனியை பொசுக்கும்படி வெளியேற்றினோம்.
இறுக்க மூடிய அந்த அறைக்குள் அவன் விசனமுற்று தனக்கு கீழ்ப்படியாத காற்றுடன் இருந்தான்.
சுவற்றில் திகைத்து கொண்டிருந்த கடிகாரத்தில் ஒவ்வொரு நொடியின் அசைவும் பிழை பொறுக்காத ஆசிரியனை போல் அவனை நோக்கி சினத்துடன் உதிர்ந்தது.
விக்கித்து நின்ற நாட்காட்டியில் செத்த நாட்களின் பெயர்கள் அன்று பிறந்த நாளை வன்மத்துடன் கொறித்து கொண்டிருந்தன.
அறை நிறமின்றி குமைந்து கொண்டிருந்தது. உலறியது. அழுதது.
சமையல் அறையில் ஒவ்வொரு பாத்திரமும் கனத்த மௌனத்தில் முங்கி விளக்கின் மஞ்சள் ஒளியை பிளந்து கொண்டிருந்தன. வெட்டுப்பட்ட ஒளி சுவரில் தங்கி திண்டாடி சுருங்கின.
அவன் வெளிச்சமாக்கி கொண்ட அறையை மறுநொடிப்பொழுதில் இருளாக்கி கொண்டதும் அது கிழட்டு ஆக்டொபஸ் போல் ஊர்ந்து செல்ல துவங்கியது. தள்ளாடும் அதன் கால்களை மரங்களின் வேர் பற்றி இழுத்து இழுத்து தடை செய்தன.
நேர்மையான அசௌகர்யமான எந்த ஒரு எண்ணமும் மனதின் கூச்சலுக்குள் சிக்கி போரிட முயன்று திமிறி தோற்று ஒளிந்தது.
அப்போதும் மனம் பொறுமையற்ற பறவையை போல் சிறகுகள் கொண்டு விசிறி விசிறி அடித்து கொண்டன.
அவன் கட்டிலில் இருந்து இறங்கி தேநீர் அருந்த விரும்பினான். அவன் உடல் எந்த சப்தங்களையும் தாங்கும் திறன் அற்று அவன் நிழலை பற்றி கொண்டே நடந்தது.
மொழி அவன் வசமற்று தடுமாறியது. குழப்பங்களை சீவிக்கொண்டே இன்னொரு மூலையில் இருந்த அடுப்பின் கருப்பு பொத்தானை திருகினான்.
நீலமாய் ஒளிர்ந்த நெருப்பில் காடுகள் உருகும் காட்சியை பார்த்தபோது அதை அணைத்தான்.
மீண்டும் கட்டிலில் அமர்ந்தான்.
கொலையின் பசி அவன் உதிரத்தில் பச்சை நதியாய் பெருகி மிதந்தது.
பசியின் கர்வம் உணர்ந்தான்.
மீண்டும் தேநீர் பருக ஆசை வந்தது.
மலையை பிளப்பது போல் ஓசை…
யாரோ கதவை தட்டினார்கள்.
பிரபஞ்சத்தின் அந்த ஒரே கடைசி மனிதன் கதவை நோக்கி நெருங்கினான்.
You must be logged in to post a comment.