Category Archives: மீள் யதார்த்தம்

கருணை

ஆழிப்பேரலையின் நடுவில்
தடுமாறிய நீர் சுழலுக்குள்
பாதை அறியாது
முங்கியும் மிதந்தும்
மரணத்தில் பிழைக்க
அலையோடு அலையாய்
உருள்கின்ற தருணத்தில்
அவனோடு கூடவே
ஓர் எறும்பும் தத்தளித்தது.

காண கண் சகிக்காது
பொறுக்கவியலாது

ஓர் விரலில் எடுத்து
கடலின் இன்னொரு
பக்கத்தில் விட்டுவிட்டு

தன் முகத்தை மட்டும்
திருப்பிக்கொண்டான்.

அலம்பிய சொற்களின் தாகம்

யாரும் இல்லாத பொழுதில்
திரளுமிந்த கவிதையில்

எல்லா சொற்களும்
விதியின் சாபத்தில்
சிக்கியது போல் துடிக்கிறது.

இதோ உங்கள் கவிதை என
அலறியடித்து வருகின்றன.
நீங்களோ அதைத்தான்
கரி பிடித்த ஆறாய் பார்க்கிறீர்.

உங்களோடு என் துக்கமும்
கட்டில் மீது நெளிகிறது
பாம்பொன்றை கவ்வியபடி…

நீங்கள் புரிந்துகொள்ள
மறுப்பது…
ஒரு பாடலை அல்ல.
இளஞ்சிவப்பு தோல்விகளை..

அது பசியில்
கூழாங்கற்கள் மீது
புரளும் நாய்குட்டியாய்
ரத்தம் வடிய ஓடுகிறது
தன் வாசகனின்
கண்ணி வெடிகளை அகற்ற…

இருந்தும்…

உன் பூட்ஸில் ஒட்டிக்கிடக்கும்
சோற்று பருக்கைகளை
சுரண்டி எறிவதைக்கண்டு…

வழவழத்த நேர்மையை
வழித்துச்சுண்டி போட்டு விட்டு
நகர்கிறது இன்னொரு தடத்தில்.

சொல்லொடு அலையும் சுகம்

ஒரேயொரு சந்திப்பில்
ஒளிர்ந்த ஒற்றைப்பார்வை.

பின் வரும் பகலும்
முன் வந்த இரவும்…

சுட்டும் மனிதரின்றி
சொல்லொடு அலைந்த சுகம்.

ஒரு குறிப்புணர்த்தி
விலகிய நொடிகளில்
திமிர் கொண்ட காலத்தின்
மனதுக்குள் சிக்கியது.

கலைந்த காட்சிகளை
உயிர் கொடுத்து
உயிர் கொடுத்து- பார்க்க
வெறும் கொலையில் முடிகிறது.

சிறு சதையில்
துளி நிணமென்று
ஒன்றிக்கொண்டிருந்த உறவில்

காயமாற்றும் களிம்பென்று
தீயால் தேய்த்து நீ விலக…

பொங்கும் புகையிலும்
நறுமணமாய் நெளிகிறது
உன் காதலும் காமமும்.

நீ

மறக்காத அந்தக்கனவை
உனக்காக நான்
ரத்தத்துளியில் வரைந்த
காலைப்பொழுதில்
நான் என்னுடனே இருந்தேன்.

சிறகுதிர்க்கும் அக்கவிதையை
குருவியின் உயிரைக்கொண்டு
உனக்காக எழுதியபொழுதில்
நான் என்னுடனே இருந்தேன்.

ஆழ்கடலை விழுங்கும்
அந்த ஓவியத்தின் விரகத்தை
பூமியின் சாபத்தைக்கொண்டு
உனக்காக வரைந்த பொழுதில்
நான் என்னுடனே இருந்தேன்.

உன்னோடு நீக்கமற இணைய
என் மரணத்தை வீழ்த்தும்
உன் அன்பிலிருந்து
என்னை தொகுத்த நேரத்தில்
என்னை விட்டு அகன்றாய்.

J. K உடன் ஒரு தேநீர் பொழுதில்

அறிந்ததினின்றும் விடுதலை
என்றவரை சந்தித்தேன்.

விடுதலையில் எதுதான்
அறியப்பட்ட பொருள்…
இழந்ததன் மர்மமே
இருப்பதின் ரகசியமா?

கேள்வியை அழிக்கும்
பதில்கள் கூட கேள்விகளா?

J.K. யோசிக்காமல்
எழுந்து சென்றார்.

முன்னிரவை முகர்ந்த
மெல்லிய மாலையில்
தடையற்ற கவிதைக்கு
காத்திருந்தேன்…

மீண்டும் வந்தவர் கேட்டார்…

எவர்க்குமற்ற
எதற்குமற்ற-இன்னும்
வரத்தயங்கும் உன்
அந்தக்கவிதை
யாரின் விடுதலைக்கு?

விடையளிக்குமுன்…

அவர் தேநீர்
பருகி எழுந்தார்.

இக்கணம் விடுதலை
அருந்திய இந்த தேநீர்க்கே…
சிரித்து எழுந்து சென்றார்.