மலையுச்சி ஒன்றிலிருந்து
நிகழ்தகவாய் புரண்டுவரும்
ஆற்றின் குறுக்கின் ஊடே
சில கபாலங்கள் உருள்கிறது.
சிரிப்பதும் அழுவதுமான
பொத்தலான அதன் வாயுள்
சிகரங்களின் வெட்டு தெரிகிறது.
சூரியஒளி தவிப்பின்றி
நேர்த்தியுடன் சாந்தியுடன்
அதனுள் கோடையென பரவி
நாற்றங்களை தீய்க்கிறது.
தங்கப்பல் பதிந்த சிற்சில
கபாலத்தில் அரசரின் முத்திரை
நிறம் மழுங்கி தெரிகிறது.
ஈட்டியால் குலைந்த ஓடுகளில்
அடிமையின் வீரமும் ஆத்திரமும்
கருமையென வழிகிறது.
இந்தக்கவிதைக்குள்ளிருந்து
உங்களை சந்திக்கும்
அவர்களின் சரித்திர மூக்குகள்
முன் அறிவிப்பின்றி
வெட்டப்பட்டு திருடப்பட்டன.
ஆற்றில் நீந்திக்களிக்கும்
அவளை தன் பிரதேசமாக
உருவகித்து வளைய வருகின்றன.
நீ எழுந்தும் மறைந்தும்
பார்க்கையில் தெரிவது
உள்ளாடையின் மணல்கள்.
Category Archives: மீள் புனைவு
சுக்கிலச்சூழலில் மதயானை
புகை தழுவும் இரவில்
நனையாத துயிலூடே
உடலெங்கும் விரவி
மூண்டெழும் கனல்.
உதிரத்தில் நீர்த்த
உன்மத்த ஆலாபனை.
துணையற்ற கைக்கிளை
நீங்கிய சுழிப்பினில்
உயிர் கவ்வும் வலி.
வெயில் உலர்த்திய பூவில்
கொட்டித் தீர்ந்தன
காம மகரந்தங்கள்.
பொங்கும் நுரையெங்கும்
புடைத்த விழி தளரும்
மரணத்திருவிழா…
எறும்பு அகலும் பாதையில்
கிளர்ந்து பெய்த சரமழை.
விழி உகுக்கும் நீரில்
நொய்ந்த உன் தனிமை.
இரவைப் புணர்ந்த
பெருந்தாவரமாய் நான்.
ராக்காலம்
உறக்கமும் இன்றி
விழிப்பும் இன்றி
கோடைக்காலங்களில்
மட்டும் ஏன் வாய்க்கிறது
குண்டூசி இரவுகள்?
காற்றை விட சப்தத்தை
இறைக்கும் காற்றாடி.
எதையும் நினைக்க விரும்பாது
மாடிக்குள் பொருந்தியிருக்கும்
சதுரத்தில் நடக்கிறேன்.
சதுரம் என்னை
சுற்றி சுற்றி வருகிறது.
பலநேரங்களில்
சிலரை நினைத்தபடி
தனியொரு யாத்ரீகனாய்
இருப்பதும் ஒரு சுகம்.
என்னைப் பயணிக்கும்
நிலவையும் இரவையும்
இக்கணமே எழுதி வைக்கலாம்
என் தனிமைக்கு…
பொம்மைகள் வரும் கனவில்
சிரிக்கும் குழந்தையாய்
அது அப்போதும் என்
காலடியில் சுற்றும்.
உங்கள் ஊரில்
தூக்கம் இருக்கிறதா?
என் ஊரில்
இருட்டு இருக்கிறது…
மாற்றிக்கொள்வோம் வாருங்கள்.
கொஞ்சம் யோசித்தால்
நான் எங்கிருக்கிறேன்?
என்னை தூக்கிச்செல்வது யார்?
எது என்னை அழைக்கிறது?
யாரை தொடர்கிறேன்?
என்னுள் பேசுபவர்கள்
எங்கிருந்து பேசுகிறார்கள்?
என் உறவினர் எங்கே?
நீங்களும் நானும் இனி
யாருக்கு யார் ஆவோம்?
நான் காண்பதில் நீங்கள்
எங்கு உள்ளீர்கள்?
காலத்தை கண்டறிந்த
மடையன் எங்கிருக்கிறான்?
உங்கள் மொழியில்
கலவாது இறவாதிருக்கும்
இரசாயன சேர்க்கை எவ்வளவு?
பிணங்களை இன்னும்
புதைப்பதும் எரிப்பதும் எதற்கு?
இந்த இரவு எப்படி தொங்குகிறது?
இது யார் கவிதை?
நீங்கள் ஏன் வாசிக்கிறீர்கள்?
இவை ஒன்றுக்கும் பதிலற்ற
என்னை
இன்னுமா நம்புகிறீர்…
காதல்- சான்றுடன் விளக்குக
நெகிழ்ந்த இரவென
விழுந்த உன் கூந்தலில்
கமழ்ந்து மணந்த
காற்றின் பயணத்தில்
காதலின் வாசனை.
பருவத்தில் விழுந்த
பஞ்சுப்பூக்களின் இடியாய்
உனது வெயில் குளம்
என் கால் நனைத்தது.
சுவரற்ற வீடுகளில்
தடம் பதித்த உன் பாதங்கள்…
என் இதயத்தில் நடக்கிறாய்.
கனவிலும் அர்ச்சிக்கிறது
உனது குரல்கள்
உணர்வின் மந்திரங்களாக.
அமிழ்தில் வற்றவில்லை
முதிர்ந்து வரும்போது
யாதும் உன் சொற்கள்.
பற்றலாம் கைத்தலம்
நிலவறிந்த ரகசியத்தின்
துருவில்லா தாழ் முறிக்க.
மன்மத மதத்தில்
கண்கள் எய்தன கணைகள்
பார்வைகள் சரியச்சரிய…
இனியும் சந்திக்கட்டும்
கற்பூரக்கண்கள்
காத்திருந்த காதலில்
கவிதை பயிரிட.