இன்று அவன் என்
நினைவுக்கு வந்தான்.
அவனும் அவனோடு நானும்
இனி எப்பொழுதும்
வெறுமையான சிற்சில
நினைவுகள் மட்டுமே எனக்கு.
அவனை மரணமென்பது
ஈர்த்து கொண்டபின்தான்
எதுவும்
எப்போதும் எங்கும்
சில நினைவுகள் மட்டுமே
என்பது புரிந்தது.
காற்று தன் முகவரியை
தொலைத்து இன்னும்
தேடிக்கொண்டே இருக்கிறது.
நதி இன்னும் தன்
வீட்டை கண்டறியவில்லை.
தலை தொங்கிய ஆகாயமோ நிமிரவேயில்லை.
சப்தத்தில் ஒடுங்கிய
ஓசைக்குள் இருக்கிறது நினைவு.
அவன்…
இப்போதும் அலைகிறான்
என் நினைவிலிருந்து
தெருக்களை கடந்து
சாலைகள் தாண்டி
கடற்கரையில் கால் நனைய…
திக்குமுக்காடும் மரணம்
தத்தளித்து யோசிக்கிறது…
எப்படி கொல்வது ஒருவரை என.
நான் உறங்குகிறேன்.
அதை அவர்கள்
பார்க்கிறார்கள்.
மேலும் இரவை துளைத்து
மழை பொழிகிறது.
காற்றின் ஈரத்தில் குளிர்
கூடி வருகிறது.
நான் குளிரில் கலைவதை
அவர்கள் விசனத்துடன்
அங்கலாய்க்கிறார்கள்.
தெரியும் கால்களில் சிதறிய
சிறு பனியை விலக்கி
பின்னர் என்னை
போர்வையில் மூடுகிறார்கள்.
மழை விசிறி பெய்வதை
அவர்கள் உணர்கிறார்கள்.
என் உறக்கத்தின் மீதான
நம்பிக்கை தளர்கிறது.
அவர்கள் இப்போது
மழையை வெறுக்கின்றனர்.
மழை, ஆகாயத்தின் ரம்யம்
என்று பெரோஷி கூறுகிறாள்.
நான் இடப்புறம் திரும்பி
ஒருக்களித்து கொள்கிறேன்.
என்னிடமிருந்து சிற்சில
நட்சத்திரங்கள்
நழுவி தரையில் ஓடுகிறது.
நள்ளிரவு பின்னர்
அதனை பொறுக்கி
அணியும்போது
நிலவு கூச்சம் கொள்ளும்.
பெரோஷி மீண்டும் சொல்கிறாள்.
மழை திசை மாறுகிறது.
இருப்பினும் ஓய்வின்றி
காற்றுக்குள் பயணிக்கிறது.
பெரோஷி நீலவர்ணத்து
மெழுகுவர்த்தியை ஏற்றி
இரவுப்பூச்சிகள் இருக்கிறதா
என பார்த்தறிந்து
திருப்தியுடன் அணைக்கிறாள்.
அவர்கள் கண்கொட்டாது
பார்க்கிறார்கள்.
மூடனின் அலைச்சல் போல்
சாளரம் வழியே சிற்சில
மழைத்துளிகள் தெறிக்கின்றன.
அவர்கள்…
ரீங்கரிக்கும் இரவை
மழையை நதியோசையை
கறுப்புக்காற்றை
கவனிக்கிறார்கன்.
பெரோஷி கிசுகிசுப்பாய்
அவர்களிடம் சொன்னாள்.
அவன் தூங்குகிறான்.
இருப்பினும்…
நம்மோடு இருந்தபடியே
அவன் அவனை பார்க்கிறான்.
அப்போது
நான் பெரோஷியின்
கைகளை பற்றிக்கொள்ள
விரும்புகிறேன்.
ஆயினும்…..?
எனது அறையெல்லாம்
கதவுகள் இருக்கிற போதும்
திறப்பதில்லை யாருக்கும்…
கதவுகள் தம்மையே
பூட்டிக்கொண்டு பின்னர்
வெளியேறிவிடுகிறது
அறையை விடுத்து.
உள்ளே இருப்பதற்கும்
வெளியே திரிவதற்கும்
பெரிய தோற்றப்பிழைகளும்
உண்மைகளும் இல்லை.
எனினும்
எப்போதும் கதவுகள்
மனிதரை நம்புவதில்லை.
அறையோ…
தன் விளக்கொளியை
பிடித்தும் விளையாட்டில்
சொக்கி அலைகிறது.
நானோ
உள்ளே வருவதும்
வெளியில் செல்வதுமாய்…
என் வேலைகள் எனக்கு.
முதலைக்கு பல் துலக்குவது போல்
நாங்கள் வாழ்கிறோம்…
கதவுகள் இடிப்பதில்லை.
விளக்கொளி என்மீது
ஒட்டிக்கொள்வதில்லை.
நானும் அறையை
இடம் மாற்றி இடம் மாற்றி
வைப்பதில்லை.
சுகமாய் போகிறது
என் வாழ்க்கை…
யாரைப்பற்றியது இது
என்று நீ கேட்கையில்
அவளையோ இவளையோ
மட்டுமே சொல்ல முடிகிறது.
வாசித்து முடித்தபின்பு
வந்து சென்ற கனவுகளில்
உன்னை மட்டுமே உணர்கிறாய்.
உன்னுள் குளித்து முடித்த
கவிதை வரிகளிலிருந்து
வாசனையாய்
நான் வெளியேறுகிறேன்.
என்னை
மேய்த்து கொண்டிருக்கும்
என் மனதோ
இப்பொழுதும்
உன்னுடன் மட்டும் பேசுகிறது.
பாதசாரியாய் உங்களை
நான் கடந்து செல்கிறேன்.
என்ன பேசுவீர்களோ..? தெரியாது.
இருப்பினும் கூட
நீ ஒப்புக்கொள்ளவில்லை
என் காதலை…
உன் காதலையும்.
ஆனாலும்…
தன்னந்தனியே வெட்கப்படும்
உன் இப்புதுப்பழக்கத்தில்
உனக்கு ஏன் இத்தனை
ஆச்சர்யங்கள்…?
எழுதிய அசதியில்
உறங்கிப்போனேன்
அக்காகிதத்தின் மீதே…
எவரோ காகிதத்தை
கசக்கி எறிய
சிக்கிக்கொண்டேன் அதனுள்.
கோணல் கோணலாய்
புதிர் விடுத்த புதிராய்
தாளின் பாதைகள்
நீண்டு முடிந்து நீண்டன.
சொற்கள் ஒளிர்ந்து
உயிர் அரும்பி ஓடின.
முன் வரியில் நின்றவை
பின் வரியில் தாவின.
ஒன்றன் அர்த்தம்
வேறொன்றில் செருகின.
பிடித்தும் இழுத்தும்
வரிசைப்படுத்த முயன்றும்
நிற்பது போல் நின்று
கால் வழி புகுந்து
முன் நின்ற வார்த்தையை
கடித்து விரட்டின. ஓடின.
எழுதிய கவிதை
தன்னைப்பிளந்தும்
தனக்குள் பரவியும்
எழுதிக்கொண்டே இருந்தது.
விழித்துப்பார்க்கையில்
கவிதையின் கனவில்…
நான் உறங்கியிருந்தேன்.
நிலவு குளிக்கும்
நதியிலிருந்து
கைப்பிடி நீர்
அள்ளிப்பார்க்கையில்
நிலவு தெரியவில்லை.
கையால் குளிர்ந்தது மனம்.
அவள் காதுகளில்
தோடு இருக்கும் துளையில்
இருக்கிறது இரும்பாய் ஒரு பகல்.
இரவை சிந்திக்கொண்டிருந்த
அந்த கண்களிலிருந்து
ஓடி ஓடி மறைவதெல்லாம்
ஒரு நாளின் சாம்பல்.
அவள் மீது நடைகொள்ளும்
பூமியின் நிழலுக்குள்
ரகசியத்தின் விரசம்
கலைந்து செல்கிறது
குளிரை விரட்டியபடி நதியில்.
அவள் நிர்வாணம் கொண்டு
அலைந்து திரிகிறது
அத்தனை பட்டாம்பூச்சிகளும்
காடொன்றை காலால் கவ்வி.
அவள் சொற்களின் மீது
பவனிக்கும் பூச்சிகள்
உண்டு களிக்கின்றன கனவை
மூட்டையேறி விளையாடி.
அவள் பார்க்கையில்
அந்த பறவை மட்டும்
கண்டும் காணாது
வந்த இரவை கொண்டு
தன் கூடினை அடைக்கிறது.
நீரின் நிழலில் உதயமுற்ற கடல்.