Category Archives: படிமம்

சதுரம்

உங்கள் சதுரம் சற்று பெரியது.
எனது சற்று சிறியது.
நான்கு மூலைகளும்
பரிச்சயம் மிக அதிகம்.

மேற்கூரை சற்றும்
அலங்காரமின்றி
ஒரு ஃபானுடன்
சுண்ணாம்பு பூச்சு கொண்டது.

உங்கள் கூரை ஒரு
பெரிய விளக்கும் கொண்டது.
வாசனை பெயிண்ட் பூச்சு.

நான் சதுரத்தில் உண்டு
உறங்கி வாழ்வது போன்றே
நீங்களும்.
சற்று கூடுதலாக உமக்கு
கடல்காற்று கிடைக்கலாம்.

நம் கதவுகள் பழமையானது
சற்று பலமானது.
சுற்றி சுற்றி வருவதும்
பாதுகாப்பாய் உணர்வதும்
ஒன்றுபோல் நடக்கும்.

அங்கேயே உண்டு உடுத்தி
புணர்ந்து தூங்கி…
பழகிக்கொண்டோம்.
சதுரத்தில் நம்மால்
நிம்மதி அமைதியாக
நிச்சயம் இருக்கிறோம்.

ஒருநாள் நமக்கும்
சதுரத்தில் இருந்து
வெளியேறுதல் சற்று
முன் பின்னாக இருக்கும்.
அதுதான் ஒரே வித்யாசம்.

ஹாருகி முரகாமியின் திவ்ய தேசங்கள்

இசை…

ஒரு வரம்புக்குள்
மீண்டும் தத்தளிக்கிறது.
நுரை பொங்கும்
மகிழ்ச்சியில் திணறுகிறது.

காடு என்ற சொல்லுக்குள்
புதினம் கூர் விழியால்
ஆழ்ந்த நுண் துளையை
தீண்டி கண்டறிகிறது.

பின் அறிவற்றதோர்
ஓட்டமும் துள்ளலும் கொண்டு
முழு பரபரப்பையும் இழக்கிறது.

மெய்யாக… அதை
நான் நேசிக்கிறேன்.

திருவிழாக்காலத்தில் நான்
புதைந்து கொள்ளும்
அறையின் தனிமை இருட்டில்
இசை ஒப்புயர்வற்ற
வானம்பாடியாக சிறகு விரித்து
காட்சியளிக்கிறது.

ஓடையின் திருப்பத்தில்
காட்டு வாத்துக்களுடன்
அந்தியை கழிக்கும்
அந்த ஸ்வரங்களுக்குள்…

யாரும் பார்க்க விரும்பாதவனாய்
ஹாருகி முரகாமி செல்கிறான்.

ஒரு கனவையோ
பதம் பிடிக்காத சொல்லையோ
ஏவுகணை போல்
நிரப்பி கொண்டு அலையும்
எனக்குள்ளிருந்து அவன்
விடைபெறும் நேரத்தில்
நான் இசையை
ரசிக்க விரும்புகிறேன்.

மனதில் காடு
படர்ந்த நாளொன்றில்.
மரித்த நகரம்

மரித்த அந்நகரத்தில்
நான் தொலைந்தபோது
என்னை மறந்திருந்தேன்.

சிதிலமுற்ற கட்டிடங்களில்
உயிரின் வாசனை இருந்தது.

ஓநாய் போன்ற பகல்
நகரத்தை மிதித்து நிற்க

கால்களை நம்பிக்கொண்டு
மனதை தொடர்ந்தேன்.

கட்டிடங்களின் நிழல்கள்
தெருக்களை குளிர்ச்சியூட்டின.

எந்த ஜீவனும் மிஞ்சாது போக
போக்கிரியைப்போல் நகரம்
இடையறாது தன்னைத்தானே
சுற்றிச்சுற்றி வந்தது.

என்னை பின்னொரு நாளில்
விழுங்கவோ குடிக்கவோ
அது முடிவு செய்திருக்கும்.

நகரம்
அப்படித்தான் பார்க்கிறது.
அது ஒரு கோழை.

தாவரங்களற்ற நகரம்
உடையற்று பெண்மையிழந்து
ஒற்றைக்காமத்தில்
கருகிக்கொண்டிருக்கும் நாயாய்…
அதன் மனதுக்குள்
என்னை சுவைப்பதை
வெறுப்புடன் அறிய முடிந்தது.

நான் சப்தமாக பேச
எந்த குரலும் எழவில்லை.

நான் பாதைகளை அறியும்
விருப்பம் துறந்து
அலையலானேன்.

ஜொலித்த இந்நகரத்தை
கொன்றொழித்தது
ஒரே ஒரு தீக்குச்சிதான்…

என்னிடம்- இன்னும்
இரண்டு குச்சிகள் உண்டு.

[கவிஞர் ஆத்மாநாம் நினைவுக்குள்ளிருந்து]பெருங்கனவின் ஓரத்தில்

உதடுகளை துப்பிவிட்டு
சொற்களை மட்டும் அருந்திய
வாய்தனை பின் எடுத்த இடத்தில்
விட்டுவிட்டேன்.

அதாவது
தலையணைக்கு கீழேயே…

வாயும் வார்த்தைகளும்
பஞ்சின் கனவுகள் பற்றி
பேசியது குறித்த ஒன்றும்
தலையணைக்கு தெரியாது.

அது கடவுளின்
முகம் தாங்கும் தலையணை.

இறைவன் தன் வயலினை
இசைக்க துவங்கிய நேரம் இது.

யானைகள் மீது சில
பட்டாம்பூச்சிகளும் சில புற்களும்
இசையை செவிமடுத்தபடி
வால்களை கொண்டு
நிகழ்காலத்தை கலக்கியவண்ணம்
முன்னேறுகின்றன காடு குடித்து.

இறைவனின் வயலின்
இசைத்து இசைத்து
கடலை மூடுகிறது சொற்களால்.

நிழல் மேயும் குருவி

விசையின்றி படிகளில்
இறங்கி செல்கையில்
பூமி திறப்பதைப்போல
ஏறி வரும்போது
வானம் திறப்பதில்லை
என்றாலும் நீ
எனக்குள்
ஏறி இறங்கி கடப்பது
நேரங்களை மட்டுமே.

நான் ஒதுங்கி நிற்கும்போது
சிற்றலையில் நடக்கத்தோற்று
நனைந்த குருவியின் கீச்சொலி…

உனது ஐயங்கள்
வசீகரமாய் உமிழும்
ஒளியொன்றில் படர்ந்து
கிழக்கென முதிர்ந்து
பின் திமிருறும் பேரொளியில்
இல்லை அப்பறவையின் கூச்சல்.

ஒளி பேசாது என்பது போலவே
ஒலியின் இருளுக்குள்
புடைத்து கிடந்த மரணத்திலும்
நிழல் மேயும் குருவிகள்.

நானும் நீயும்
உடலுக்குள் நிழலென
சுற்றி சுற்றி வருகிறோம்.

இதை கனவென்று சொல்ல
கனவு காணவும் வேண்டுமோ?

இரவில் மிதக்கும் உயிர்

முயற்சித்தாலும்
இந்த நள்ளிரவை கடக்க
என்னால் இயலவில்லை.
மூச்சடக்கிக்கொண்டு
மரணம் உற்றுப்பார்க்கிறது.

சபிக்கப்பட்ட கூச்சலொன்றை
தெருமுனையிலிருந்து
கேட்கும் பொழுதில்தான்
தாகம் எடுக்கிறது.

துயில் தன்னைத்தானே
போற்றி வழிபட்ட
கந்தல் துணியென தொங்குகிறது
அந்நகத்தின் கூர் நுனியில்.

அசையும் உடலிலிருந்து
வெளிக்கிளம்பும் நான்..

மஞ்சள் கனவொன்றிலிருந்து
விழித்து துள்ளி நிற்கும்
கிழட்டு உடும்பொன்றினை
தாண்டத்தெரியாது நிற்கிறேன்.

உடலிலிருந்து உயிர்க்கும்
கனவிலிருந்து துயருக்கும்
ஆழ்ந்த தொடர்பில் இருந்தும்…

பொருந்திச்செல்லாத
கயிற்றொன்றில் ஊறும்
எறும்பென.

மரணம் என் கேளிக்கை

மரணத்தின் குரல்
தெளிவற்ற சிந்தனை கொண்டது.

அது அட்டைப்பூச்சியின்
வடிவம் கொண்டு
என் நாட்களில் நுழைந்தது.

குறுக்கும் நெடுக்குமாக
அதன் நில்லாத அலைச்சலில்
நான் தூக்கியெறியப்பட்ட
நாற்காலியில் இருந்தேன்.

மரணம் தாண்டி சென்றது.

என் உதிரத்தை உறிஞ்சிய
நாட்களிலும் கூட அது…

பசியின் சுமை மிகுந்த
பாத்திரத்தில் ஒலியென
இருந்த மரணம்…
ஓர்
அங்கலாய்ப்புடன் நகர்ந்தது.

பூச்சியின் நாக்கு என்
இசையை நறுக்கும்போது

மரணம் தன் செத்த வாலை
புதைத்து கொண்டிருந்தது.

நான் வாழ்கிறேன்.

பசி ஒரு மகத்தான சல்லிப்பயல்

பசித்தது.

உண்ண…
என் காலிலிருந்து துவங்கி…

மென்மையாக இருந்தது.
எலும்புகள் எவ்விதமான
சிக்கலின்றி பொடித்தன.

நரம்புகள் நிதானமாய் 
பிரிந்து குடலுக்குள் சென்றன. 
குருதி மணத்தது.

பின்முதுகை பிச்சை கேட்டு
அரித்துக்கொண்டிருந்த பகல் 
உதிரம் வாங்கி சென்றது.

பசி சற்று அடங்கியதும்
மிச்சமற்று போன இடுப்பின் கீழ்…

ஓய்வெடுத்த அக்கவிதை
மனதை விழுங்கிவிட்டு
தலைக்குள் புகுந்தது.

நீளும் இரவின் மர்மங்களை 
உற்று நோக்கிய ஆவல்கள்

பின்னொரு பசியில் 
உண்ணத் துவங்கின
முகங்களை…