Category Archives: நுண் உவகை

போய்வரும் நாட்கள்

பச்சை மைதானத்தில்
சருகற்ற புல்வெளி மூலைகள்.

நிறமிழந்தும் வலிமை மிக்க
கால்பந்தின் உழைப்பு.

உனக்கு நகுமோ புடிக்குமோ
என்ற போது பாஷையோடு
பாஷையாய் விரிந்த கண்கள்.

கொஞ்சம் கொஞ்சமாய்
ஈரமாகும் உன் வீட்டு
வாசல் தெளிப்புகளில்
மழையாகும் உன் மனம்.

தியானமென்று அமர்ந்து
புன்முறுவலாய் நாம்
போக்கிய நேரங்கள்.

யானையின் கண்களை மட்டும்
யானையாகி ரசித்த
அந்தி நேர கணங்கள்.

இதனிலெல்லாம் மட்டும்
நாமாய் இருந்தோம் நாம்…

எனது பயணங்களில் நீ

எனது அறையில்
நீ ஜன்னல் குருவி.
எனது விழிப்பில் நீ
குறு சோம்பல்.

எனது ஓடையில் நீ
கால்படா மலர்கள்.
எனது ஸ்வாசத்தில்
நீ நறுமணம்.

எனது பார்வையில் நீ
காட்சிகளின் ஒளி.
எனது பயணங்களில் நீ
பேசும் திசைகள்.

எனது தாலாட்டில் நீ
இரவின் தூளி.
எனது மௌனத்தில் நீ
தியானத்தின் செங்கோல்.



உன் காவியங்களில்

உன் பார்வையில் மட்டும்
மிதிபட்ட பூக்களில்
தேனுண்ட தும்பியின் பாடலில்
கள்ளாய் கிடந்தது தமிழ்.

நீ வெட்கத்தின் சின்னமென்று
ஓடையில் படரும்
இரவு சொல்ல…

நீருக்குள் இருந்த நிலவின்
கிள்ளாத பக்கத்தில்
கொட்டியது குளிர்.

உன் தளிர் நடையோடு
கிஸுகிஸுத்த பூமிக்கு
நாணத்தில் புரையோடிய
கணத்தில்தான்
பூத்து உதிர்ந்தது மல்லிகை…

உன் பாதச்சுவடுகளில் தேனாய்
தேங்கிய மழை நீரில்
சிப்பிகள் காத்திருக்கிறது..

உன் சொல் பட்டு
முத்தாய் உதிர.

இன்னொன்றும் கேள்…
பெயராத விண்மீன்கள் தம்முள்
பேசிச்சலியாத
உன் கவிதைகளை
உன் பார்வைகள்
கடைந்ததால் மட்டுமே
கற்கண்டாய் பொங்க..

அதை பகலென்று
சொல்கிறோமாம்.

இனி நீ மட்டும்

உன் பொய்மைகள்
என் கனவில் செதுக்கிய
பொம்மையாய் நீ மட்டும்.

காற்றுக்கு ஆடும் கதவாய்
நீ ஆடும் இம்மனதில்
வந்து வந்து செல்லும்
உன் சைகைகள் மட்டும்.

தேவதையின் கண்களில்
குளிர் இரவை அருந்தும்
பௌர்ணமி நீ மட்டும்.

சாகா வரங்களில்
அமிர்தம் நீ மட்டும்.

வந்து வந்து தொலையும்
நாட்களில் அழியாத
சாட்சிகள் நீ மட்டும்.

பாயும் நதியின் விரியும்
ஆதி தொல் சிரிப்பில்
பசுமை என்று நீ மட்டும்.

என்னில் நான் தளர
எவற்றுக்கும் மருந்தென
உயிரில் கலவும் உயவு
இனி நீ மட்டும்.

எங்கெங்கு நீ சென்றபோதும்

இறுதியில் என்னை நீ
புரிந்துகொண்டபின்…
உங்கள் மனம் அழுக்கு என்றாய்.

மனம் என்பதுதான் அழுக்கு
என்றேன். ஏற்க மறுக்கிறாய்.

பேசுவதை நிறுத்தினாய்.
என் மனதை கைப்பற்றி
கடலில் மூழ்கடித்தாய்.
உன் எதிரிகளை கொண்டு
கொன்று போக்கினாய்.

என் முதல்வரி முதல்
முற்றுப்புள்ளி வரை அழித்தாய்.
இரவையும் பகலையும்
திரித்து எரியவைத்து அதில்
என்னை சாம்பலாக்கினாய்.

நம் உரையாடல்களை
புற்றுக்குள் எறிந்தாய்.
மழைக்கால நினைவுகளை
மீன்களுக்காக சமைத்தாய்.

புகைப்படத்தின் நரம்புகளில்
அமிலத்தை செலுத்தினாய்.
மௌனம் தவறத்தவற பேசிக்கொண்டேயிருந்தாய்…

மௌனத்தின் ஓரமெல்லாம்
மனம் இருந்தது.
அதில் நான் இருக்கிறேன்.

நானொருவன் மட்டிலும்

அந்தப்பாதையில்
அத்தனை தனியாக இருந்தாய்.

அவ்வழியில் வந்த நான்
உனக்கு காண்பித்தேன்…
மலரோடு பேசவும்
மலையில் நீந்தவும்
மழையோடு தேடவும்…

கனவில் மீன்பிடிக்க
அஞ்சித்துவண்ட நீதான்
பார்த்து பிரமிக்கும்படி
நினைவில் வான் வளைத்தாய்.

பின்னொரு நாளில் என்னை
இந்தப்பாதையில் தனியே
விட்டுவிட்டும் சென்றாய்.

அதில்தான் நான் இன்றும்
வழிதவறிய குடிகாரனாய்

எனக்கும் உனக்குமிடையில்

தனக்குத்தானே
பேசிக்கொண்டிருக்கும் மனதை
பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.

சில ஒற்றைப்பார்வைகள்

அதிகாரமிக்க இப்பகலில்
என்ன செய்கிறாயோ?
உனது தொலைபேசி எண்
போதையில் சிவக்கிறது.

நேற்று அப்படி பேசியிருக்க கூடாது
என்பதை மட்டும்தான்
இதுவரை நானும் நினைக்கிறேன்
உன்னைப்போலவே.

மௌனம்…
மௌனமௌனமாய்
நம்மை உடைக்கிறது
பஞ்சில் விழுந்த பறவையாக.

பேசினால் என்ன பேசுவோம்
வெயிலா…எழுதுகிறாயா…?
எப்போதும் நம் மனம் பேசியதை
நாம் பேசியதில்லை. இருந்தும்
இதையாவது வாசிப்பாய்
என நம்பும் தீரம் எனக்குண்டு.

வீடு விழுங்கிய உன்னை
உன்னால் விழுங்க முடிந்த
சில கண்ணாடி கவிதைகளில்
இன்னும் என்னை நீ தேடினால்
அது எனக்கு தெரிந்துவிடும் தோழி…

அணைந்து போயிருந்தாலும்
கொதித்திருக்கும் என் அலைபேசி.
அதை மட்டும் சொல்லி விடும்…

பொய்களில் தோற்றபின்
நாணத்தில் விரிசலுற்று
நகைப்பை நீ கொட்டுவதுபோல்!

போகட்டும்…

இங்கே மேகம் சூழ்ந்தது.
அங்கே?


இப்படிக்கு…ஸ்பரி

என்னைப்பற்றியது இது.

இல்லை என்றதும்…

மறுமுறை வாசித்ததில்
உனக்கும்புரிந்தது…
உன் பற்றியதும் அல்ல.

ஆனால்
ஒரு கனவைகுறித்ததென.

இக்காகிதம் உன் கரத்தில்
ஆகாயமாய் தாழ்ந்தது.

எந்த சொல்லிலும் உனது
பிம்பம் ஒளிரவில்லை.

நம்முள் நமக்கென்று
எதிரொளித்த சரங்கள்
அப்படியே மிளிரவில்லை.

மனதில் தேங்கிய
இரவின் கருப்பு மழையென
உன்னுள் சரிந்தது வாட்டம்.

சட்டென்று வெடித்த
விதிர்த்த அழுகையினூடே
உன்னையே எதிர்த்தபடி
நீ இட்ட ஒரு முத்தத்தில்…

அச்சமுற்று உதிர்ந்த உன்
கூந்தல் பூக்களில் சிந்திய
வெட்கத்தின் வாசனைகளே

வந்த அக்கனவென்று
இன்னொருமுறையும்
எப்படி சொல்வேனடி தோழி?

கண்ணாடிப்பூக்கள்

என்னவென்று இருக்கலாம்
நமக்குள் நாம் என்பதில்…

ஓடையின் துணிச்சலாகவோ
தேடப்படும் விசைப்பொறியாகவோ
நீட்டிக்கொண்டிருக்கும்
கிளைவரை துள்ளி நகர்ந்து
உலகை கொத்தும் கிளியாகவோ…

பார்ப்பவரை காணாது கடக்கும்
மனமொன்றின் திகிலாகவோ
கோபுரத்தில் தூசி தட்டும்
புறாக்களின் சடசடக்களாகவோ
இருக்கலாம் நாம்.

ஒருவேளை இப்படியின்றி

உன்னை எனக்காகவும்
என்னை உனக்காகவும்

யாரோ செய்துகொண்டிருக்கும்
தாழ்வாரத்து துளசி வாசனையாக…

எப்போதும் முடியாது முடியும்
நம் எந்த உரையாடலிலும்
எல்லா முற்றுபுள்ளிகளையும்
திருடிக்கொண்டு போய்விடும்
சமயோசித திருடனாகவும்.

கண்ணாடிப்பூக்களில்
முட்டி முட்டி மோதி
தனக்குள் உலறிப்பாடும் தேனீக்களாகவும்…