மழை பெய்கிறது.
மென் ஸ்வாசத்தில்
கனல் இழைகள் கிளையும்
தருணமிதில் உன்னருகில்.
உயர்ந்த உன் பார்வையில்
ஆவியின் கடும்புனல்
வெளி நிறைக்கும்.
புஜங்களை தழுவிப்பற்றிய
கைவிரல் நடுக்கங்களில்
ஒயில் கொண்ட மர்மங்கள்.
நகைத்த காமத்தின் இரைச்சல்
மழைக்காற்றில் தீ கூட்டும்.
உயிரில் ஊடுருவி நழுவும்
உன் பின்னலின் வாசம்.
உன் நிறமேறிய நரம்புகள் காண
மோகத்தில் பழுத்தது தூறல்.
திடுமென அள்ளிச்சென்றது
சருகாகிய உன் தாபத்தை
சாலையெங்கும் காற்று.
இருள் நனையும் நேரத்தில்
நம்மில் ஒடிந்தது
எதுவென்று
நாம் தேடுகையில்
மௌனமாய் சிரித்தது…
உன் கூச்சத்தில்
தெறிக்கும் பனி.
Category Archives: நுட்ப நுகர்வு
பூக்களின் பிம்பம்
குறுங்கனவு ஒன்றிலிருந்து
துள்ளும் பரவசத்தின் விழிப்பு.
பள்ளத்தாக்கில் எதிரொளிக்கும்
வெளிச்சத்தில் உதிரும் பறவைகள்.
ஓடைக்கப்பால் மிதக்கும்
மலைமுகடின் நிழல்.
காற்றுக்குள் நீந்தும்
துன்பம் மிகுந்த மனம்.
விழும் இசைக்கருவிகளின்
சப்தத்தில் புரளும் சந்தங்கள்.
வானம் தொலைந்து போன
வெளியில் திகைக்கும் புறா.
ஓடிக்கொண்டிருக்கும் சிறுமியின்
கை நாணயத்தின் ஐஸ்க்ரீம்.
பின்னால் பார்க்காத கிழவனின்
சிரிப்பில் தவிக்கும் மரணம்.
கடல்களை குடிக்கும் ஓசையில்
திசை குழம்பும் மின்னல்கள்.
அந்தியின் ஸ்வாசத்தில்
பூக்களின் பிம்பம்.
இப்படித்தான் சொல்வேன்
உன் பெயரை அவர்களிடம்…
இருளில் ஒளிரும் நிழல்
உன் பெயரை
உச்சரிக்க இனி கடினம்தான்.
அவ்வாறில்லை
உன் கவிதைகளின் நிறம்.
மழை நின்ற நள்ளிரவில்
இரை தேடும்
பூனைக்குட்டி போல்
வந்து சேரும் கவிதையில்
நமது மனங்கள் நம்முள்
கூடு விட்டு கூடு பாய்கிறது.
கிரணங்கள் கசியும்
ஒளியின் மேகங்களில்
எதையோ அடுக்கிக்கொண்டிருக்கும்
உன்னை தோள் பற்றி பார்க்க
கோபமாய் சிரிப்பாய்.
புழக்கமான சொற்கள்தான்.
ஆயினும் நீ எழுத
கொலுவின் அழகு வந்துவிடும்.
எழுதி எழுதி நீ
மறந்த ரணங்கள்
ஆறாமல் கிடக்கின்றது
புத்தக வாசனைகளில்.
வீட்டிற்கு உன்னை
அழைத்த அழைப்புகள் யாவும்
வாசலெங்கும் சிந்தியிருக்கிறது
காற்றில் மடத்தனமாய் அலையும்
வேப்பம்பூக்களாய்…
நீயோ போய்விட்டாய்
அகதியின் மனச்சான்றாய்.
ஒரேயொரு வாசகி
இந்தக்கவிதையை
யாரால் அப்படியே
புரிந்துகொள்ள இயலும்?
அதை விடவும் முக்கியம்,
இதை யார் படிக்கிறார்கள்?
உனக்காக மட்டும் எழுதுகிறேன்.
உனக்கு என்றால்
அது நீ அல்லது நீயே மட்டுமா?
உனக்கு எழுதிய பலவும்
எனக்கென்றே தோன்றுகிறது.
இதில் உனக்கென்ன கிடைத்தது?
வாசித்த உன்னிடம்
இதுவரை
எந்த பதிலும் இல்லை.
பதில் தந்த எவருமே
உன்னைபோல்….
வாசிக்கவுமில்லை.
இந்த கவிதை
கிணற்றில் தவறி விழுந்த
நதி போல் மாறிவிட்டது.
அதனால் இனி எதுவும்
செய்ய முடியாது. கூடாது.
இருந்தபோதும் நானே
இருமுறை இதை வாசிக்கிறேன்.
எனக்கு ஒருமுறை
நமக்கு ஒருமுறை.
என் கண்மணி அவளை
ஒரு வார்த்தையும்
பேசாது போய் விட்டாய்.
என்ன செய்கிறாய் நீ?
மனதை மடித்து மடித்து
மனதுக்குள் வைக்கும்
உன் கரங்களில் விழும்
கண்ணீர் சொட்டுக்களில்
கரையும் என் உலகத்தில்
இப்போதும் நீதான்.
என்னிடம் இருக்கும்
உன்னிடத்தில் என்ன கோபம்?
பார்வையில் உறுத்தும்
பாறையிலும் துடிக்கும்
இதயத்தில் உன் பெயரை
விழி கொண்டு செதுக்கிய
உன்னோடு இல்லாத நான்…
இனி இவ்வுலகில் எதன் நிழல்?
என்னோடு பேசு
இல்லாது போயினும் ஏசு.
என இதழோடு தீ மூட்டி
அலையாடிய கடல் நீதானே?
எல்லா உண்மையையும்
இறுதியில் பொய்யாக்கும்
உன்
சிரிப்பை கொஞ்சம் அனுப்பு.
இந்த இரவெல்லாம் நெருப்பு.
நகரம் ஒரு வனத்தின் முத்தம்
நீ நகரம்.
அதில்தான் இருக்கிறது
உனக்குள் பெய்த காடு.
திக்குகள் மொக்கவிழ்க்க
நான் அதனுள் ஒழுங்கற்று
சுழன்று பரவும் மின்மினி.
உன் ஸ்வப்னங்கள்
இரவை ஒடிக்கும் மின்னல்.
நான் ஒலித்த இடியில்
வழித்த முழக்கத்தின் கரு.
கண்களில் குளிர் நிரப்பி
காதலை பூக்க வைத்தாய்.
பருவங்கள் நிறம் சிவக்க
உன் காடு மலர்ந்தது
மகரந்தப்புயலில்…
நான் வேர்களில் ஒதுங்கும்
அருவியின் வியர்வை.
நீ நகங்களில் ஏந்தினாய்
என் பாலையின் தீயை.
உன் ஸ்வாசத்தில் கடைந்த
வாசனை தென்றல்
மழலைச்சூட்டில் எரித்தன
மனதின் சத்தங்களை.
நீ காடு.
நீ உண்ட வானம் நான்.
நம்மைப்பிணைத்தது
காதலில் தளிர்த்த வானவில்.
இப்படியே எப்போதும்
ஒளிரட்டும் சகி…
பையனாகிய வாழ்வு
அச்சிறுவன் அவ்வழியில்
தனியே போகிறான்.
பேசிக்கொண்டும்
துள்ளிக்கொண்டும்
யாருடனோ யாரோவாக…
பார்க்க பார்க்க
சற்று பொறாமையாகவும்…
அவன் பின்னால்
நடக்க துவங்கும்போது
ஒற்றி செல்லும் பாதங்களில்
பூமியின் கண் விழிக்கிறது.
மரத்தை அசைத்து
உதிர்ந்த பூக்களை
மிதிக்கத்தவறி தாண்டுகிறான்.
கால்படாத பூக்கள்.
தனியே கோலிகளை
சப்தம் வர உரசி ரசிக்கிறான்.
வெட்கமின்றி மிட்டாயை கடித்து
தம்பி வாயில் திணிக்கிறான்.
ஒரு நொடியில் அமர்கிறான்
அந்த நொடியின் மீதே
நிமிடங்கள் திணறுகின்றன.
வியப்பு என்னவெனில்…
அவனுக்கு தெரிந்தது கூட
அவளுக்கு தெரியவில்லை.
உதிரும் காட்சிகள்
ஒரு ஓரமாய்
யாரும் அறியாத இடத்தில்
எவரும் காணவியலாத
புதுமையான கோணத்தில்
சிந்தித்து பார்க்கமுடியாத
கேட்பின் நம்பவியலாத
வருவோர் போவோரின்
கவனத்தை ஈர்க்காதவண்ணம்…
தனக்குள்தானே
வியப்புறு முடிவினை
மழுங்கலின்றி தீர்மானித்து…
பகலின் மிச்ச சதைகளை
அரித்து கொண்டிருந்த
அந்த
இரவுக்கு தெரியாதது ஒன்று…
நான் அதை அமைதியாக
பார்த்துக்கொண்டிருந்தது.
அந்த தினத்தில்தான்
முடிவு செய்திருந்தேன்
அவளை மறப்பதற்கு.
அவளும் கூட…
இரவை பகல் வெறுக்குமா?
விடிந்தால் தெரியும்.
தலைக்குள் மழை
கண்களின் முன்னே
வந்து வந்து செல்லும்
யாரோ ஒருவரின்
தலை மறைக்கிறது.
என் கண்களை…
திரையரங்கில்…
தொலைக்காட்சி பார்க்கையில்…
பேருந்தில் ஏறும் அவளை…
காணும் முன்பாகவோ
காணும்பொழுதிலோ
ஏதேனுமொரு தலை
மொக்கென முளைத்து
மறைக்கும்போது…
மனம் இருட்டி
குடைசாய்ந்து
பதறிப்பதறி
முட்டிமோதும்
முப்பது நொடி
சிந்தனையில்
ஆஹா…
இந்த பெண்கள்தான்…
அயல் மகரந்தங்கள்
உனது கவிதையை
நீ உற்றுநோக்கி எழுதுகையில்…
இவ்வண்ணம் நிகழ்ந்ததா நீள?
மெள்ள பறத்தல்…
காது மடல்கள்
மென்சூடு கொள்வது.
தியானத்தின் போதை.
உன்னுள் இளகும் நீ.
உயில் எழுதும் கவனம்.
புணர்வில் சூடிய பெருமூச்சு.
புத்தரின் புன்முறுவல்.
படபடக்கும் வெயில்.
கடுந்தொலைவுக்கும்
அறிந்த பயணவழிகள்.
செவி மலர
குரல் திரளும் துடிப்பு.
கள்வெறி கொண்ட
மூளையின் விரல்களை.
கடலளவு கருணையை.
சொல்லின் சல்லாபத்தை.
அறிந்து இருந்தால்
உன் கவிதையில் பரவி
புத்துயிர்க்கும் மனம்.
இதுவற்று பிதுக்கி
எழுதி தள்ளினாலும்
கவிதைதான்-
இருப்பினும்…
இருக்கலாம் உனக்கு
ரத்தக்கொதிப்பு.