நிசப்தத்தில் திரியும் அந்தப்பூனையின் நிழல் யாரும் அறியாப்பொழுதில் அறையிலிருந்து தனித்து வெளியேறியது.
என் மனக்கண்களை திருடிச்சென்ற அப்பூனை சுவரற்ற வெளியில் ததும்பும் நிழல் மீது விருப்பமற்ற நேரங்களிலும் அயர் உறக்கம் கொள்கிறது.
அறை இருளில் தேடிக்கொண்டிருந்தேன்…
மனதில் எங்கெங்கோ விழுந்திருந்த அப்பூனையின் நிழல்களை.
ஆயினும், அப்பூனை வருவதும் போவதுமான கள்ளப்பயணங்களில் எப்போதும் கவனமாக இருக்கிறது. உதிரும் அதன் நிழல்களை அவ்வப்போது என் மனதில் கொட்டிச்செல்ல…
நீல பட்டன்கள் இருக்கும் அலமாரியில் இருக்குமென்றால்… சற்று தேடி கண்டடைவேன் அந்த புத்தகத்தை. கிடைக்குமென்றாலும் நிச்சயமாய் சொல்லவியலாது… அதன் ஆவியும் இன்னும் அதிலிருக்குமென. ஒரு புத்தகத்தை மேயும்போது தகிக்காது அதுவும் மேய்கிறது மனதுக்குள். புத்தகத்தை தொட சிலிர்த்தால் அதன் ஆவியும் சிலிர்ப்பதை உணர்ந்தது முதல் யாரோவாய் மாறுகிறோம். உலகங்கள் உள்ளிழுகின்றன. இந்த புத்தகம்தான் தேடியது இங்கேதான் இருக்கிறது. அதன் குறிப்புகளில் என் கால்படாத நகரமில்லை. போடாத கூச்சல் இல்லை. என் திமிரின் ஆனந்தத்தை அறிந்த இடம் இதிலுண்டு. வாழும் வசித்த இடத்தில் மரித்த பின்னர்தான் வாழவே துவங்குகிறோம்… இதுதான் இறுதியில் வாசிப்பின் சாத்தியங்கள். எனில்… தேடியதுண்டா உன் ஆவியை?
எதுவும் இனியில்லை என்பதுதான் முடிவில்… சொல்லியவர் சென்றார். பாதையில் மனம் நெருங்க நெருங்க எல்லையின்றி நீளும் கனிவற்ற நிசப்தம். அரவங்களில் மனம் பொறுக்கும் பயங்கள். துருவிடும் நாளில் எவர் மீதும் வரத்தயங்கும் அன்பும் நட்பும். சிரித்தும் அணைத்தும் குதறிய உறவுகள். செல்லும் பாதையில் எனக்கு நானே குரூர வழிகாட்டியாக… இரு கைகளில் என்னுள் என்னை தழுவி இருளுக்குள் போகிறேன். வழிபோக்கன்தான்… எனது கேள்விக்கு நானே பதில் என தெரிகையில் அணையும் இப்பயணம் விளக்கினை ஏற்றிவிட்டு…
அரைமணிக்கூறில் உனக்கு நிச்சயம் மரணம் என்றனர். அவசரமில்லை எனக்கு. முன்பாக ஓரிரு மிடறுகள் பிளாக் டாக் விஸ்கி அருந்தினேன். ஒரு சிகரெட்டில் மெலிதாய் புகை விட்டேன். ஜே.ஜே. சில குறிப்புகளில் கோடிட்ட வரிகளை படிக்க துவங்கினேன். சற்று அலுப்பு மிக_வும் மரணத்தை தரிசிக்க புத்தகத்தை நெஞ்சிலமர்த்தி கண்களை மூடிக்கொண்டேன். நேரமோ நினைவுகளோ ஒன்றொடு ஒன்று கிடக்க ஏனோ விழிக்க தோன்றியது. விழிக்கவும் தெரிந்தது கடந்து போயிருந்த ஆயிரம் வருடங்கள்…
குற்றங்களை பதிவேட்டில் குறிக்கும் அவன்.. பெயர்களில் நம்பிக்கையின்றி செய்திகளுடன் அலைகிறான். பல தொகுப்புகள் கொண்ட அவனது அலமாரியில் செம்பழுப்பு காகிதங்கள் காற்றாடிய பொழுதுகளில் அவ்வப்போது அதிலிருந்து மனிதர்கள் பக்கம் கிழித்து உதிர்வதுண்டு குற்றங்களற்று. கோப்புகளில் அவன் மசி ரணங்கள் மீதூறும் புழுவென நிகழ்வு தொலைத்து அலைகிறது தண்டனைகளுடன். விடுபட்ட மனிதரின் தொங்கும் நாக்குகளில் வார்த்தைகளை விரட்டிக்கொண்டு கிளைக்கு கிளை தாவும் மந்தியின் கையில் அவனின் இன்னொரு பதிவு.
காற்றில் எரிந்து கொண்டிருந்த அந்த நறுமணத்தை மட்டும் மனம் பதுக்கிக்கொண்டது நள் இருளில்… அக்கொடிய இருள் ஓடும் புலம் பெயர்ந்த அறைக்குள் வாசனையின் வெறிபிடித்த நகர்வுகளில் நொறுங்கியிருந்தது திட்டுத்திட்டாய் நிகழ் காலம். ஒன்றோடொன்று உரசி தீப்பிடித்த கணமொன்றில் அவ்வாசனை இழுத்துப்போனது இறந்தக்காலத்தை இதயத்துள். காற்றில் எரிந்த மணம்… அவளுக்கு பிடித்த மணம். அவளோடு போனதும் அதுவே. இது கனவா? விழிக்க விழிக்க அயர்ந்து போகும் மனதின் நழுவலை தாங்கும் குளிர்ந்த கைகளின் ஸ்பரிசம்.
விட்டுப்பிரிகிறாய் நீ என் மனம் என்னிடம் பிறகேதும் பேசாமல் வெட்டிக்கொண்டு மாய்ந்தது. இதயம் துண்டாடிய மூளையில் இருந்து வந்தவண்ணமாய் இருக்கிறது நம் சரித்திர புழுதி… உன் நினைவுகள் காடென கொழுத்து வளர்ந்து புதை சேற்றில் முடிந்தது கனவுகளின் மாய மௌனங்களோடு. நீ சென்ற பாதையில் படிந்த என் பார்வைகளை கழுகுகள் கௌவிப்போயின பிணங்களில் தூவி உண்ண. இந்நாளை தனியே அரித்துக்கொண்டிருக்க… என் மரணம் மயானத்தில் சீழ்க்கை ஒலியுடன் தன்னை குருடாக்கிக் கொண்டது.
அந்த வரியில் எந்த சொற்களும் இல்லை. இறுதியில் வரியற்று அலைந்த அக்கவிதையின் ரகசியங்கள் மூடாத புத்தகமொன்றில் திருடத்துவங்கின மனம் போன போக்கில் தனக்குரிய வரியை. உருவி எறிந்தன சொற்களை வாழ்வு,சிலி, பெருமை கற்பு,வாடை,மயில்… வீசப்பட்ட சொற்கள் நிலையற்று போய்கொண்டேயிருந்தது வரிகளற்ற கவிதையின் காலடி தாண்டி பூமியின் ரேகைகள் தாண்டி. வார்த்தைகளை இழந்ததில் புத்தகம் வெட்கமுற்று தீக்குளித்தது. சாம்பல் புள்ளிகளில் ஃபீனிக்ஸ் முளைத்து பறந்தன. ஆனாலும் இந்த வரியற்ற கவிதை இப்போதும் சொற்களை தேடுகிறது உங்கள் மனதிலிருந்து.
அலைகளை மிதிக்கும் காற்று. மலரில் அவிழ்ந்த மனம். பகல் எனும் வெண்சாத்தான். திறவாத குளிர்பதனியாய் நள்ளிருள் நாவின் உமிழ்நீர். மழையின் அழுகையில் வெறித்துப்போன ஸ்வரங்கள். நிழல் கண்டு வெறுத்து அஞ்சியோடும் நாயை புணரத்துரத்தும் நாய். நெளியாத கதவில் தொங்கி நசுங்கி நசுங்கி அழும் கொலுசு. வேட்டைக்காரனின் நரை தாடியில் ரீங்ங்ங்கும் ஈ. ஊமைப்பேருந்து கொத்தியதில் சப்பையான கர்ப்பிணிகள். நரகங்களை பிடித்துண்ணும் ஆவியின் உள்காய்ச்சல். எல்லாம் எழுதியாயிற்று. உயிரே… உன் மௌனத்தில் சாம்பலாகும் புதர்களில் விண்டு போன என் காதலோ, தாய் கண்டு சிதறிய புள்ளாய். சொல்…எப்படி எழுத?
இந்த இரவை நான் வழிபடுகிறேன். எனது இல்லத்தில் இருக்கும் பனி என் வீதியில் ஊரில் நிரம்பி இருக்கிறது. தெருத்தெருவாய் அலையும் அந்த நாயோடு அலைகிறது காற்றும் இரவும். விதானத்தில் இருந்து சப்தமற்ற சாலையை பார்க்கிறேன். என்னோடு எதிர்வீட்டு வேப்பமரமும்… எல்லா பைத்தியக்காரர்களும் ராக்காலத்தில் உலா செல்வது தெரிகிறது. ஆச்சர்யம்…. யாரும் பேசிக்கொள்ளாது தனியே, ஒழுங்கு தப்பாமல் தாக்கி கொள்ளாமல்… குப்பைக்கிடங்கை உற்று நோக்கி சற்றே கிண்டிப்பார்த்து திருப்தி கொண்டதும் ஏதோ தனக்குள் பேசியபடி… இந்த அகாலத்திற்குள் எத்தனை உடலுறவு முடிந்திருக்கும்… சரி விடுங்கள்… இரவை ஆராதிப்போம். விடியலில் மலங்கழித்து உண்டு உடை அணிந்து சோற்றுக்கு வழி கண்டால் பகலையும் த்யானிக்கலாம். அதுவரை மட்டும் இரவை கொண்டாடலாம். சூழ்ச்சிகள் வயிற்றெரிச்சல் சதி எதுவுமில்லை கூடவே தனிமையும்… உங்களை நீங்களே மதிக்கும் நாளில் இந்த மாதிரி பொழுதுகள் எப்போதும் ஆச்சர்யமூட்டும்.
Posts navigation
நீரின் நிழலில் உதயமுற்ற கடல்.
You must be logged in to post a comment.