Category Archives: சால் திளைப்பு

அறையில் ஒரு பூனை

நிசப்தத்தில் திரியும்
அந்தப்பூனையின் நிழல்
யாரும் அறியாப்பொழுதில்
அறையிலிருந்து
தனித்து வெளியேறியது.

என் மனக்கண்களை
திருடிச்சென்ற அப்பூனை
சுவரற்ற வெளியில்
ததும்பும் நிழல் மீது
விருப்பமற்ற நேரங்களிலும்
அயர் உறக்கம் கொள்கிறது.

அறை இருளில்
தேடிக்கொண்டிருந்தேன்…

மனதில்
எங்கெங்கோ விழுந்திருந்த
அப்பூனையின் நிழல்களை.

ஆயினும், அப்பூனை
வருவதும் போவதுமான
கள்ளப்பயணங்களில்
எப்போதும் கவனமாக இருக்கிறது.
உதிரும் அதன் நிழல்களை
அவ்வப்போது
என் மனதில் கொட்டிச்செல்ல…

நிக்கட்டுமா போகட்டுமா

அங்குமிங்குமாய் சுடர்ந்து
எதிரொளிக்கும் உன்
மூக்குத்தியின் ஒளியை
துரத்தும் மனசுக்கு
நினைப்பு…
நானதன் நாய்குட்டியென்று.

நற்பருவம் வந்து நாதனை தேடும்

புலர்ந்த பொழுதில் புட்களின்
மலர்ந்த முதல் பாடலாய்
எவரவர் வாய் கேட்பினும்
அப்பொருளே மெய்ப்பொருளாய்
இசைக்கும் தினமின்றில்…

யாதுமாகியதொரு
ஆலயத்தின் நடுவில்
சூழல் காற்றின் ஸ்வப்னமாய்
நம் விழிகள் தீற்றி திகைத்தன
ஏற்றிய மணிவொலியின்
நடு நொடி ரீங்காரமாய்.

சலித்த வேண்டுதலில்
இளைத்த பனிச்சடையன்
குனித்த புருவம் சிலிர்க்க
தனித்து நமை
கடைக்கண்ணினானோ?

ஹாரத்தி புஷ்பத்தில்
புகைக்கடவுளாய் என்னுள் நீ.

காற்றும் மணமும்
கலந்து கழுவிய ப்ரஹாரத்தில்
நடை நழுவி நாணத்தில் கமழ

காணுற்று தொலைந்த
நயனங்களை தேடுகிறேன்.

கற்பனைகள் முற்ற
காட்சி தந்த உன்
ஈரத்தடத்தின் குளிர்மை
மனதில் காணப்பெற்றால்…

மனித்த பிறவியும்
வேண்டுவதே இம்மாநிலத்தே.

நகரம் ஒரு வனத்தின் முத்தம்

நீ நகரம்
அதில்தான் இருக்கிறது
உனக்குள் பெய்த காடு.

திக்குகள் மொக்கவிழ்க்க
நான் ஒழுங்கற்று
கண்டும் கவியற்று
சுற்றும் மின்மினி.

உன் ஸ்வப்னங்கள்
இரவில் பரவும் மின்னல்.

நான் ஒலித்த இடியில்
வழித்த முழக்கத்தின் கரு.

கண்களில் குளிர் நிரம்ப
காதலை பூக்க வைத்தாய்.

பருவங்கள் நிறம் சிலிர்க்க
உன் காடு மலர்ந்தது
மகரந்தப்புயலில்…

நான் வேர்களில் தயங்கும்
அருவியின் வியர்வை.
நீ நகங்களில் ஏந்தினாய்
என் பாலையை…

உன் ஸ்வாசத்தில் கடைந்த
வாசனை தென்றல்
எரித்தன மழலைச்சூட்டில்
பாழ் நிலத்தை பிணி அகல.

சாம்பலற்று வீழ்கிறேன்
நான் ஃபீனிக்ஸின்
முதல் கூவலின் ஸ்வரமாய்…

நீ காடு.
நீ உண்ட விண் நான்.
நம்மை பிணைத்தது
காதலில் தளிர்த்த வானவில்.
ஒளிரட்டும் சகியே…

அலம்பிய புத்தகமாய்
நம்மிருவர் வாழ்வும்
தந்தத்துப்பாதையில்
வண்ணங்களாய் பாய்ந்திட…

சாத்தானின் இயற்பியல்

நெடுகக்கிடந்தது பாதை.

உன் தோளுரசி செல்ல
சுட்டுச்சுட்டு விழுந்தன
ஸ்வரங்களின் மத்தாப்பு.

நீ பார்ப்பதெல்லாம்
காட்சிகளின் ருசியை மட்டும்.
நம் விரல்கள்
பனித்து பற்றிக்கிடந்தது
தொடுவானமாய்…

பேசிக்கொண்டு நடந்தாய்.
பீத்தோவன் தவற விட்ட
குறிப்புக்கள் கிடைத்தன.

என் கனவிலும்
காற்று உலர்கிறது…
சாத்தானின் இயற்பியலா இது?

மஞ்சளாய் குளிர்ந்த அந்தியில்
சஞ்சரிக்கும் பக்ஷிகளின்
புல்லரிக்கும் பயணங்களோ
நம் உலவலின் உணர்வுகள்?

பெயரற்று கிடந்த புல்லில்
உதிர்ந்த உன் வார்த்தைகள்
கோலங்களாய் சூழ்ந்தன.

கலவி கேள்வியும் பதிலும்

உன் கேள்வியில்
என் பதில்கள்
விடையற்ற கேள்விகள்.

உன் பதிலில்
என் கேள்விகள்
விடையற்ற பதில்கள்.

உன் கேள்விகளும்
என் பதில்களும்
பதிலின் கேள்விகள்.

என் பதில்களும்
உன் கேள்விகளும்
கேள்வியின் பதில்கள்

கேள்வியின் பதிலில்
கலவிடும் உடல்கள்
உடலின் கலவியில்
பதிலின் கேள்விகள்…


அஞ்சரைக்குள்ள வண்டி

புருஷன் ஆலப்புழா தயாரிப்பில் ராஜிவ் உமா மகேஸ்வரி நடிக்க ஜெயதேவன் இயக்கி 1989 இல் வெளிவந்த அஞ்சரைக்குள்ள வண்டி என்னும் மலையாள படத்தை நான் நேற்றுதான்
யூட்யூபீல் பார்த்தேன்.

                     ⏩⏩⏩⏩⏩⏩

1989 இல் நான் பள்ளி மாணவன். கொஞ்சம் சுதந்திரமான மாணவன். அல்லது சுதந்திரத்தை உருவாக்கி கொண்ட மாணவன். ஆனால் பயம் இருக்கும். அப்பா அம்மா ஆசிரியர் என்று எல்லோரிடமும் ஏதோ ஒரு பயம் இருக்கும்.


அன்றெல்லாம் தேனி என்பது மதுரையில் அடக்கம். பத்தாம் கிளாஸ் பாஸ் செய்துவிட்டு மார்க் ஷீட்டும் ஸ்கூல் டீஸியையும் எடுத்துக்கொண்டு மதுரை எம்பிளாய்மெண்ட் எக்சேஞ்சில் பதிந்தால் உடனே வேலை கிடைக்க ஏதுவாக இருக்கும் என்பதால் நானும் ஆதமும் கிளம்பி சென்றோம்.

அப்போது அங்கு மதுரைக்குள் பேருந்து பெரியார் நிலையத்தில் மட்டும் நிற்கும். ஒரு வளைவை திரும்பும்போது பஸ்ஸில் பயணிக்கும் ஒட்டு மொத்த மக்களும் தலையை வெளியே நீட்டுவார்கள்.

காரணம் ஜெயராஜ் தங்கரீகல் மது தியேட்டர் போஸ்டர்களை பார்க்க மட்டும்.

ரீகல் தியேட்டரில் அன்று காட்டுவாசிகள் பற்றிய ஆங்கில படம் என்று தெரிந்ததும் ஆதம் வந்த வேலையை விட்டுவிட்டு கீழே மளுக்கென்று குதித்து விட்டான்.

நான் நேரே எம்பிளாய்மெண்ட் ஆபிசுக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.

மறுநாள்தான் நான் செய்த முட்டாள்தனம் தெரிந்தது.

நான் நேற்று பார்க்காமல் கோட்டை விட்ட விஷயங்களை ஆதம் சக நண்பர்களோடு சொன்னபோது தலையை குனிந்து கொண்டேன்.

              ⏩⏩⏩⏩⏩

தேனி ஆண்டிபட்டி பெரியகுளம் வத்தலகுண்டு வாடிப்பட்டி சோழவந்தான் ஆகிய ஊர்களில் தலா ஒரு தியேட்டர் இந்த மாதிரி படங்களுக்கு ஊருக்கு வெளியில் நேர்ந்து விட்டிருந்தார்கள்.

பெரும்பாலும் சொந்த ஊரில் படம் பார்க்க அந்தஸ்து வெட்கம் கொள்வோர் பக்கத்து ஊர்களுக்கு நடையை கட்டி விடுவார்கள்.

தேனிக்கு சற்று தள்ளி பி.சி. பட்டியில் கணேஷ் தியேட்டர் இந்த  மாதிரியான கலைச்சேவையில் மிகவும் புகழ் பெற்றது. அது ஊருக்கு இன்னும் வெளியில் தள்ளி அடக்க ஒடுக்கமாக இருந்தது.

தியேட்டரின் பின்புறம் செழிப்பான வயற்காடு. ஒன்று நெல். இல்லையேல் கரும்பு. கண்களுக்கு பசுமையான இடத்தில் மனதுக்கு பசுமையான காட்சி.

                  ⏩⏩⏩⏩⏩

எந்த ஊர் தியேட்டர் என்றாலும் இந்த மாதிரி படங்களுக்கு வருவோரிடம் ஒரு மெல்லிய சைக்கோலஜி படரும்.

எப்படிப்பட்ட சண்டியர் என்றாலும் அங்கே அமைதியின் சொரூபமாக இருப்பார்கள். சக வயது மனிதர்களுடன் மட்டுமே கிசுகிசுவென பேசுவார்கள். யாரும் யாரையும் அவமதிக்க மாட்டார்கள். எந்த சண்டையும் போட மாட்டார்கள். டிக்கெட் வாங்க கவுண்ட்டர் முன் ஒருவர் மீது ஒருவர் இடித்துக்கொண்டு செல்ல மாட்டார்கள். அழகிய நாகரீகம் தவழும்.

அந்த காலத்தில் மீசை வளராத விடலைகளை தியேட்டர்காரர்களே வெளியில் அனுப்பி விடுவார்கள். அன்று எங்கள் நண்பன் கதிரேசன் மீசை வரைந்து வந்து முயற்சி செய்தும் பலன் இல்லை. உயரம் வேறு கம்மி. பேசாமல் போஸ்டர் பார்த்துவிட்டு போவான்.

என் உயரத்தை கருத்தில் கொண்டு உள்ளே விட்டு விடுவார்கள். நானும் செல்வமும் எப்போதும் போல் ஒரு ஓர சீட்டில் அமர்ந்துகொண்டு விடுவோம்.

காலை பதினோரு மணிக்கு யாரோ வந்து கதவுகளை அடைத்துவிட்டு திரையை கும்மிருட்டாக்கும்போது நெஞ்சில் சிவப்பு நிற பஞ்சு மிட்டாய் கரையும்.

                  ⏩⏩⏩⏩⏩

படங்கள் என்பது பெரும்பாலும் மலையாளம் மட்டுமே. அதிரடி சண்டை ஒரு நீண்ட உதட்டு முத்தம் விரும்பினால் ஆங்கில படங்கள் செல்லலாம்.

அப்படித்தான் எங்களுக்கு அஞ்சரைக்குள்ள வண்டி படத்தின் கதை தெரிந்தது. “படம் முழுக்க அதாம்லே” என்று போடி கண்ணன் சொன்னான். அவன் அந்த படத்தை முன்பே மூணாறில் பார்த்ததாக சொன்னான்.

அங்கெனே ரெம்ப குளிரு. நானும் வடக்காச்சியும் கொஞ்சம் பட்டை அடிச்சிட்டு போய் பார்த்தா…. எப்படி இருக்குங்கரே… ஒவ்வொருத்திக்கும் அது.

(…வண்ண வண்ண வார்த்தைகள்…)
அப்பறம்… இண்டெர்வெல் விட்டா எனக்குனா எந்திரிக்கவே முடிலே.

ஏண்டா….

போயிடுச்சு… அம்புட்டும் வந்துருச்சு.

நானும் செல்வமும் எங்களுக்கு பி.சி. பட்டியில் ஒரு போதும் நிகழாத இந்த சம்பவத்தை ஒரு அவமானமாக நினைத்து அதை கிள்ளி எறிய முடிவு செய்தோம்.

                 ⏩⏩⏩⏩

ஒருநாள் நாங்கள் எதிர்பார்த்த அஞ்சரைக்குள்ள வண்டி படம்  தேனியில் திரையிடப்பட்டது.

காலையில் போஸ்டர் பார்த்த உடனேயே வாடகைக்கு சைக்கிள் விடும் சங்கர் கடையில் காசை தேற்றி விட்டோம். ஒரு டிக்கெட் ஒரு ரூபாய் எண்பது பைசா.

கண்ணன் சொன்ன எந்த காட்சியும் அந்த படத்தில் இல்லை. அதைவிட கொடுமை வேறெந்த காட்சியும் படத்தில் இல்லை.

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு மலையாள படத்தை வேலை மெனக்கெட்டு ஒளிந்து நின்று பார்த்து வந்திருந்தோம்.

மறுநாள் கொத்தாக கண்ணன் சட்டையை பற்றியபோது அவன் உதறி தள்ளினான்.
நானும் பார்த்தேன். அவன் போட்ட படம் வேற. போஸ்டர் வேற என்றான்.

அப்போ…?

இது ஒரிஜினல் இல்ல. அந்த படத்தில் இவங்க யாரும் நடிக்கலை.

மொத்தத்தில் யாரோ எங்களை சதி செய்து ஏமாற்றி விட்டார்கள்.

                   ⏩⏩⏩⏩

பிட் என்றும் சீன் என்றும் அப்போதுதான் சில சங்கேத வார்த்தைகள் உருவாகின.

“கீழே காட்டவே மாட்றானுங்க என்ன மயித்துக்கு அங்கே போறே” என்று ரெண்டு பெருசுகள் சத்தமாக டீக்கடை வாசலில் கத்திக்கொண்டிருந்தனர்.

நானும் செல்வமும் ஒருவரை ஒருவர் அர்த்தமாக பார்த்து கொண்டோம்.

நாங்கள் பார்த்தவரையில் மடிப்பு கலையாத வேட்டி மடிப்பு கலையாத புடவை மீது தலையை ஆட்டி கொண்டிருக்கும்.

அப்போது ஒலி பரப்பாகும் பின்னணி இசையில் எங்கள் மனம் சொக்கி தானாகவே ஒரு காட்சியை உருவகித்து கொள்ளும்.

சில நொடிகள் மட்டுமே நீடிக்கும் இந்த காட்சிக்கு அன்று நாங்கள் எங்கள் முழு சொத்தையும் எழுதி தர தயாராக இருந்தோம்.

ஆனால் பெருசு சொன்ன “கீழே” என்பது…

                    ⏩⏩⏩⏩

நானும் செல்வமும் மீண்டும் மீண்டும் தியேட்டர் தியேட்டராக படையெடுத்த போதும் அஞ்சரைக்குள்ள வண்டியை பார்க்க முடியவில்லை.

ஒவ்வொரு முறையும் வெவ்வேறு படங்கள் மட்டுமே. ஒரு முறை அம்பிகா நடித்த குடும்ப படம் போட்டார்கள்.

இண்டெர்வெல் முடிந்து அரக்க பரக்க உள்ளே சென்ற போது ஆங்கில தேவதையை ஒரு அரக்கன் எண்ணி இரண்டு நிமிடம் முத்தமிடவும் சீன் அறுந்து அம்பிகா காளியிடம் ஏதோ வரம் கேட்டு ஆடவும் கூட்டம் கலைந்தது.

படம் துவக்கிய இருபதாவது நிமிடமும் இடைவேளைக்கு பின் உடனடி காட்சியும் மிக முக்கியமான நேரங்கள். ஒன்றில் தவறினால் ஒன்றில் தரிசனம் கிட்டும்.

சில ஆங்கில படத்தில் மேல் தரிசனம் முழுமையாக கிடைத்து கொண்டே இருக்கும். எமரால்டு ஃபாரெஸ்ட் போன்ற நல்ல படங்கள் கூட இப்படி ஒரு காலத்தில் பார்க்கப்பட்டதுதான்.

                  ⏩⏩⏩⏩

காலங்கள் கலைந்து சென்றன. அஞ்சரைக்குள்ள வண்டியின் பெருமையை நடிகர் விவேக் ஒரு படத்தில் சொன்னபோது நான் வேலைக்கு சேரும் வயதாகி விட்டது.

உண்மையில் நானும் செல்வமும் பார்க்காத அந்த படத்தை திண்டுக்கல் சென்று பார்த்து விட்டோம் என்றும், நீ சொன்ன காட்சிகளோடு இன்னும் புதிதாக ஆறு சீன் சேர்த்து பார்த்தோம் என்றும் போடி கண்ணனிடம் அவன் நம்பும் வரை அள்ளி விட்ட பின்தான் எங்களுக்கு மனசு ஆறியது.

அவன் எங்களை உருட்டி உருட்டி பார்த்து சென்ற பின்னர் நான் ஒரு சிகரெட் வாங்கி அவசர அவசரமாக குடித்தேன்.

செல்வம் அப்போதும் சொல்லி கொண்டே இருந்தான். “ஆனா ஒண்ணுடா, நாம எப்படியாச்சும் அந்த படத்தை பார்த்திரணும். எங்கே போட்டாலும் சரிதான். வீரபாண்டி சித்தப்பாகிட்டே வண்டிய வாங்கிட்டு விரட்டி போயிரணும்”.

விட்டால் அன்று அவன் அழுது விடுவான் என்று தோன்றியது. நானும்தான்.

                   ⏩⏩⏩⏩

தேனியில் வெள்ளாமை காலம் முடியும்போது பணம் செழிப்பாக இருக்கும்.

நகை எடுப்பார்கள். ஊரில் புதிதாய் இரண்டு டிவிஎஸ்50 வந்து சேரும். தீவாளிக்கு ட்ரெஸ் எடுத்து விடுவார்கள்.

விளை பொருளுக்கு எந்த கமிஷன் மண்டியும் இல்லை. சொந்த ஊரில் பக்கத்து ஊரில் என்று விளைச்சலை விற்றது போக எஞ்சியதெல்லாம் அக்கம் பக்கம் சொந்தபந்தம் மாமன் மச்சானுக்கு என்று இறைத்து விடுவார்கள்.

ஒவ்வொரு மாரியம்மன் திருவிழாவின் போதும் எத்தனை வெயில் இருந்தாலும் மழை மட்டும் கொட்டாமல் இருக்காது.

                  ⏩⏩⏩⏩

2020இல் நேற்றுதான் அஞ்சரைக்குள்ள வண்டி யூட்யூப் லிங்க் காமாட்சி அனுப்பினான். அதை செல்வத்துக்கு பார்வார்ட் செய்தேன். பின்னர் சாயந்திரம் போன் செய்து பேசி கொண்டிருந்தேன்.

போடி கண்ணன் எங்களிடம் முழுக்க பொய் சொல்லி இருக்கிறான் என்ற ரகசியம் சரியாய் இருபது வருடங்கள் கழித்து தெரிந்து கொண்டோம்.

அந்த காலத்திலே அப்படித்தானே வைத்தி. யாரு படம் பார்த்தாலும் கொஞ்சம் சேர்த்து வச்சு அள்ளி விடத்தானே செய்வாய்ங்க. நாம மட்டும் என்ன…அப்படித்தானே என்றான்.

நாங்கள் நிறைய சேர்த்து சொல்வோம். அதை அன்று கூட்டம் கூட்டமாய் உட்கார்ந்து கேட்பார்கள். மறுநாள் அதே கதையில் இன்னும் சில காட்சிகள் சேரும்.

இப்ப ரொம்ப காலம் மாறிடுச்சு வைத்தி. எல்லா தியேட்டரும் இடிச்சு காம்ப்ளெக்ஸ் ஆயிடுச்சு. பிளாட் போட்டாங்க. இருக்கிற கொஞ்ச நிலத்தில் என்ன விதைச்சாலும் கமிஷன்காரன் அள்ளிட்டு போய்டறான்.
எல்லார் வீட்டிலும் வேலை இல்லாம ரெண்டு என்ஜினீர் இருக்கிறான் என்றான்.

காலம் மாறித்தான் விட்டது.

எம்பிளாய்மெண்ட் கார்டுகள்  டிகிரிகளை குறித்துக்கொண்டு எந்த கடிதமும் அனுப்பாது போய்விட்டன.

கமிஷன் மண்டியில் சொந்தக்காரனுக்கு தெரியாமல் விளைச்சலை துபாய்க்கு ஏற்றி கொண்டிருக்கின்றனர்.

அன்று நாங்கள் கள்ளக்காதல், குழந்தைகள் வன்புணர்வு, ஆணவக்கொலை, கூட்டு பாலுறவு என்றெல்லாம் சிந்தித்தது கூட இல்லை.

இப்போது வீட்டுக்கு வீடு இரண்டு பைக்குகள் இருக்கின்றன. ஆறு மொபைல் போன்கள் இருக்கின்றன.

இந்த இருபது வருடங்களில் கடந்த பத்து வருடமும் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது மழையே இல்லை.

                  ⏩⏩⏩⏩

கண்ணாடிப்பூக்கள்

என்னவென்று இருக்கலாம்
நமக்குள் நாம் என்பதில்…

ஓடையின் துணிச்சலாகவோ
தேடப்படும் விசைப்பொறியாகவோ
நீட்டிக்கொண்டிருக்கும்
கிளைவரை துள்ளி நகர்ந்து
உலகை கொத்தும் கிளியாகவோ…

பார்ப்பவரை… பார்த்தும்
காணாது கடக்கும்
மனமொன்றின் திகிலாகவோ…

கோபுரத்தில் தூசி தட்டும்
புறாக்களின் சடசடக்களாகவோ
இருக்கலாம் நாம்.

ஒருவேளை இப்படியின்றி
போனால்…

உன்னை எனக்காகவும்
என்னை உனக்காகவும்

யாரோ பொழிய வைக்கும்
தாழ்வாரத்து துளசி வாசனையாக…

எப்போதும் முடியாது நீளும்
நம் எந்த உரையாடலிலும்…

எல்லா முற்றுபுள்ளிகளையும்
திருடிக்கொண்டு போய்விடும்
சமயோசித திருடனாகவும்.

கண்ணாடிப்பூக்களில்
முட்டி முட்டி மோதி
தனக்குள் உலறி பாடும் தேனீக்களாகவும்…

அறிவிப்பு

கவிதை…

காற்றுக்குள் அலையும் பகல்.
உயிரில் ஸ்தம்பிக்கும் வாள்.
நகரும் மணல் துகளின் மூச்சு.

ஓசையில் கிடக்கும் மவ்னம்.
நடனத்தின் பேரொளி.
அழகில் படிந்திருக்கும் வாசனை.

ஓடும் குழந்தையின் தடம்.
குருட்டு இரவின் காதுகள்.
பேய் பிடித்த சிற்பம்.

ஓவியம் வரையும் கோலங்கள்.
நடுக்காடொன்றின் சிந்தனை.
மருந்தொன்றின் பைத்திய பார்வை.

இசையின் ரகசிய உடலுறவு.
ஏவாளின் முலைப்பால்.
மனதின் விந்து.

தெய்வத்தின் சொடுக்கு ஒலி.
தந்தையின் நிர்வாணம்.
இடுகாட்டில் சிதறிய காசுகள்.

மலையுச்சி பறவைகள்.
நிலவோடு நகரும் நிலம்.
ஒற்றை தூரலின் சத்தம்.

பொய்யனின் காக்கைப்பார்வை.
சாளரப்பனியில் உறையும் சூரியன்.
இனியேனும் எழுது…

எனக்காக ஒரு கவிதை.

பொம்மை

இத்தனை வரிகளிலும் கூட
ஏதோ ஒரு சொல்லில்தான்
நீயாக இருக்கிறாய் நீயற்று.

கோடையை புடைத்து
வாடையை உலர்த்தும்
ஒரு கடற்கன்னியாக.

மரத்தடியில் தூங்கும்
ஸ்கூல் புத்தகங்களாக.
அர்த்தங்களை அறியாமல்
செதுக்காத புனித மனமாக.

அக்கம்பக்கங்களில்
அலையும் பாப்பாக்களாக.
மரப்பொந்தினுள்
எட்டிப்பார்க்கும் கடவுளாக.

கேள்விகளை தின்ற
பதிலின் முற்றுப்புள்ளியாக.
எடிசனிடம் பேச விரும்பிய
ஒற்றை ஸ்க்ருவாக.

யாரிடமிருந்தோ தவறி வந்த
முத்திரை இல்லாத ஸ்டாம்பாக.

ஒரு சொல்லில்
நீ இருக்கிறாய்….

இங்கு
எல்லா வார்த்தைகளிலும்
ஒரு பொம்மையின் சாவியாய்
என்னை முடுக்கிக்கொண்டு.