நீங்கள் புரியவில்லை என்ற
அக்கவிதை இன்று
இந்த இரவில் இப்போது
என்னருகில் இருக்கிறது.
தன் வார்த்தைகளை
அது உதிர்த்தது.
அர்த்தங்களை நெகிழ்த்தி
முற்றத்தில் உலவ விட்டது.
காட்சிகளை காற்றில்
பறக்கத் தூண்டியது
அழகியலை வருடி
நட்சத்திரங்களிடம் அனுப்பியது.
பின் சக கவிதையிடம்
என் மனதை காட்டி
தன்னோடு கிளம்பிய
சொற்களின் வாதைகள்…
எப்படி நீராவியாய்
போனதென்று வியந்து
பேசிக்கொண்டிருந்தது.
Category Archives: சார் பொருண்மை
தக்காளி பூக்கள்
அங்காடி எங்கும் சுற்றிவர
இந்த தக்காளிகள் போல்
எதுவும் இல்லை.
கூடை நிறைய
சிரிக்கும் குழந்தைகளாக.
சிலவற்றில் வானம் தெரிகிறது.
தவறி விழுந்து ஓடினாலும்
தேர் போல் ஓட்டம்.
செவ்வண்ண கிண்ணத்தில்
விழுந்த நிலவுகளாய்…
தோளுரசி கண்ணடிக்கும்
ஒன்றிற்கொன்று முன்வந்து.
பாகல் முதலையென கொண்டால்
தக்காளி பூக்கள்தான்…
சில காயம்பட்ட
தக்காளிகள் தெருவோரத்தில்
வருவோர் போவோர்
செருப்பைக் கண்டு
அஞ்சித்துடித்தபடி…
இந்திய தெருநாய்களாய்.
சர்க்கஸ்
நீங்கள் இப்பொழுது
வாழ்க்கை என்பதையே
நானும் சர்க்கஸ் என்கிறேன்.
ஏற்க மறுக்கும் நீங்கள்
சர்க்கஸ் கூட ஒருவித
வாழ்க்கை என்றதும்
நான் ஏற்கிறேன்.
மனம் மகிழ்கிறோம்.
சொற்களில் திகிலூட்டி
பதுங்கும் கவிஞனை
செத்த எலியுடன்
விரையும் காகம் போல்
அர்த்தங்கள் அவனை
அழைக்கழிக்கின்றன.
முகப்பருக்கள் தடவ
காம நினைவு ததும்பும்
பள்ளிச்சிறுமியின் தனிமையாய்
அவன் கவிதையில்
உள்ளார்ந்த வெட்கக்கேடுகளில்
நாம் ஜீரணித்த வாழ்வின் ரஸம்
பாய்கிறது என்கின்றீர்…
நான் மீண்டும்
சர்க்கஸ் மட்டுமே
இது என்கிறேன்.
வழக்கம்போல்
புரியாது போகிறது
உங்களுக்கு.
காற்று
பேரமைதியுடன்
மரத்தில் அமர்ந்த காற்று.
சிரிக்கும் காற்றில்
உடைந்த பலூன்கள்.
பட்டங்கள்
தின்ன தின்ன
பசி தீராத காற்று.
நெளியும் கடலில்
நிலையற்ற காற்று.
ஒலியில் மூச்சென்று
மிதந்தோடும் காற்று.
இதுதான் என் முகவரி
அன்றுதான் தொலைந்தேன்
என்றாலும் உறுதியில்லை
ஆனால் தொலைந்தேன்.
இங்கிதமற்ற கனவொன்றில்
முருங்கைமரம் தீ கொள்ள
விழித்த கணம் முதல்
என்னை காணவில்லை.
பார்ப்போரிடம் சொன்னேன்
அங்க அடையாளங்கள்…
இந்தக்கவிதையின்
நினைவுச்சிடுக்குகளில்
இருக்கலாம் நான் நீங்களாக…
கண்டால் சொல்லுங்கள்.
நூல் எழுதுபவன்
கனவு தின்பவன்
ஓசைகளில் கொடுக்கு எடுப்பவன்.
நகரங்களின் மழை
தவறி விழுந்த சிற்றுண்டி
தபேலா இசை… இப்படி
மாறி மாறி தெரிவேன்.
நான் என் கூடாரத்தில்
ஒளிரும் விளக்கை
பார்த்து கொண்டிருக்கிறேன்.
அந்த விட்டில்கள் ஒற்றர்கள்…
உங்கள் ஆன்மாவை
நம்பகமாய் திருடுகிறது.
நீங்கள் தொலைந்தால்
நான் அறிவேன் எளிதாக.
என் கூடாரம்
நீங்கள் வாழும்
பொந்தில் நிதானமாய்
கிழக்கு திசையில் உள்ளது.
கொண்டல்
பெயர் கொண்டு அழைக்கவும்
உருவமற்ற எதுவுமற்ற
அம்மேகம்…
இடம் பெயரும் அச்சம் நிலவ
தயங்கி மெள்ள ஊர்ந்து
உற்றுப்பார்ப்பது போல் பார்த்து
பின் திசையறியாது ததும்பி
காற்றுக்குள் சிக்கி துணையின்றி
பரிதவித்தும் சிதறாது
வானம் அப்பால் விலகிய
தனிமையை உணர்ந்தும்
எங்கோ செல்வதற்கென ஏங்கி
எங்கோ மிதந்து முன்னேறி
யாருமற்றதை உணர்ந்தும்
பயணமுற்றதில் அலைந்தும்
ஒரு கணம் பரிதியில் மயங்கி
அவ்வொளியில் கலங்கி
வளியின் நாக்கில் உறைந்து
வெளியின் கிரணத்தில்
சூடுற்று நெகிழ்ந்து…
கடல் கண்டு பிரமித்து
திடுக்கிட்ட அப்பொழுதில்
பெரும் சூறையில் சிக்கி
முன்னிறு மேகங்களில்
கலந்து…
சூல் முகிழ்த்து
மழையாய் உருகி
பெருகி தரை வழிகையில்
புரிந்ததுதான்…
வாழ்க்கை என்பதும்.
J. K உடன் ஒரு தேநீர் பொழுதில்
அறிந்ததினின்றும் விடுதலை
என்றவரை சந்தித்தேன்.
விடுதலையில் எதுதான்
அறியப்பட்ட பொருள்…
இழந்ததன் மர்மமே
இருப்பதின் ரகசியமா?
கேள்வியை அழிக்கும்
பதில்கள் கூட கேள்விகளா?
J.K. யோசிக்காமல்
எழுந்து சென்றார்.
முன்னிரவை முகர்ந்த
மெல்லிய மாலையில்
தடையற்ற கவிதைக்கு
காத்திருந்தேன்…
மீண்டும் வந்தவர் கேட்டார்…
எவர்க்குமற்ற
எதற்குமற்ற….
இன்னும்
வரத்தயங்கும் உன்
அந்தக்கவிதை
யாரின் விடுதலைக்கு?
விடையளிக்குமுன்…
அவர் தேநீர்
பருகி எழுந்தார்.
இக்கணம் விடுதலை என்பது
அருந்திய இந்த தேநீர்க்கே…
சிரித்து எழுந்து சென்றார்.
கடல் தோப்பு
எங்கள் ஊரில்
ஒரு கடல் இருந்தது.
அந்த கடல் இன்று
காலை முதல் காணவில்லை.
அதுவிருந்த இடமெல்லாம்
சில தெருக்கள், வீடுகள்.
சந்துக்கள் முடிந்தபோது
சில சாலைகள், பாதைகள்.
அல்லும் பகலும்
உப்பின் நெடியில்
கிடந்த ஊர் மக்கள்…
கடல் தொலைந்த கவலையில்
சாலையிலும் பாதையிலும்
நொறுங்கி கிடந்த
மீன்களின் எலும்புகள் பார்த்து
வறிய பகலில் திரிந்தனர்.
கடல் எனக்கு மட்டும்
தேவதையின் கண்ணீர்.
பூவில் முகிழ்த்து நிற்கும்
உதிராத வாசனை.
கூர் நகமற்ற கொடும் பற்களற்ற
ஒரு காட்டின் கிழக்குமுகம்.
வானமும் தரையும்
கண்களால் ஒற்றிக்கொண்ட
பீடபூமியில் அந்த கடல்….
அதிர்ஷ்டமிக்க தோப்பென ததும்பி ரச்மிக்களில் மிதந்து நின்றது.
சஹீனா உற்றுப்பார்க்கிறாள்.
தன் தந்தையின் நிழல்
வெளிச்சமூட்டிய மனதோடு
அதை அவள் பார்க்கும்போது
அவள் தந்தையும்
கடல் பார்க்கிறான்.
அவரவர் கடல்கள்
அவரவர் உறவின் வாசல்.
கடல்
தொலைந்து போகாது.
ஓடித்திரியும் கடல்
ஈரக்கையால் மட்டும்
நடுமுதுகில் தொடுவாய்.
ஆங்கிலப்பட டைட்டில்
விடாமல் வாசிப்பாய்.
எறும்பு வரிசையை
தாண்டித்தான் செல்வாய்.
பஷீரை வாசித்து
கண் துளிர்க்க பார்ப்பாய்.
கேள்விகள் கேட்டு
பதில் வேண்டிய கண்கள்
ஓடும் கேள்வியின் பின்னே.
உனது வளையலோசையில்
சுவர்களும் சிரிக்கும்.
உன் கொலுசொலியின் பின்னே
அலைகின்றன அறைகள்.
ரோஸிக்கு ஊட்டுகையில்
மொட்டுக்கள் மலர்வதாய்
திறந்து மூடுவதான
உனது அதரத்தில்
கொலுவாகும் புன்சிரிப்பு.
இந்நேரம் கடந்திருக்கும்
அந்த ரயில் உன்னுடன்.
என்ன சொல்வதென
தெரியவில்லை
உன்னைத்தேடி தேடி….
மலங்க மலங்க முழிக்கும்
இந்த பூனைக்குட்டிக்கு.
நிசப்த சருகு.
உடைக்க இயலாத
அரும்பாத ஒரு கவிதை.
காலத்தில் நொதித்து
சதா இரவொன்றுடன்
அலையும் அக்கவிதையில்
மெல்ல வீசிக்கொண்டிருக்கும்
காற்றும் அதன் மூச்சும்.
அதன் அர்த்தங்கள்
படியேறியபடி இருக்கிறது.
மனதிலிருந்து தனிமைக்கு.
யாருமற்ற அவனுக்குள்ளும்
ஓடிக்களைத்தன சொற்கள்.
தளும்பிய ஏகாந்தத்தில்
ஆவி பறக்கும் சொற்களில்
அலையும் உனக்கும் கூட
அது முளைக்கிறது
பகலொன்றின் புலி பாய்ச்சலாய்…
கவிதை ஓர் ஓரத்திலிருந்து
நகர்கிறது அதன் மையத்தில்
எங்கும் ஒளியற்ற மவ்னமாய்.
You must be logged in to post a comment.