Category Archives: குற்றநோக்கு

நீ இல்லையென்றால்

மெல்ல நீ நழுவுகிறாய்
என்பதை அறிந்தும்
உன்னுடன் இருக்கிறேன்…
நீ விலகிச்செல்ல
சொல்லப்போகும்
காரணங்களுக்கு…

புல் தரையில்
உடைந்த வாளியாய் நீ.
உன்னுள் திட்டமிடும் பொய்கள்
வரிசையாகிக்கொள்கின்றன.
சாத்தானின் புன்னகையுடன்
அவ்வப்போது வெளிப்படும்
ஏதேதோ கேள்விகளில்
வெறுப்பின் கரகரப்பு.

ஓய்ந்து கிடந்த மொபைலை
மூடி மூடி திறக்கும் உன்
கைகளில் படபடக்கும் மனம்.
வெளியே எட்டி எட்டி பார்க்கும்
உன் பித்துப்பிடித்த விழிகள்.

அனைத்தும் அறிந்தும்
அமைதியாய் இருக்கிறேன்.

நானும் நேற்றே
பேசிவிட்டேன்
வசந்தியிடம்.

நாளை மற்றுமொரு நாளே.

அத்துணை கேளிக்கையும்
உண்டு இத்தினம்.
கரை பெருகும் ஆனந்தம்.
உறவுகள் சிலிர்க்கும்.
ஒவ்வொரு புன்னகையும்
ஒவ்வொரு நம்பிக்கை.

யாவரும் நலமென்று
நெகிழ்ந்த உணர்வுகள்.
கொட்டினாலும் தீராத
கொண்டாட்ட குதூகலம்.
திருக்கோயில் சென்று
கண்கள் பணிக்க
பிரார்த்தனை கவசங்கள்.
எனக்கும்.நமக்குமாய்.

இன்று போல்தான் இனி
ஒவ்வொரு நாளும் என்று
மனதின் குரலாய்…

பண்டிகை நாளில்
கையில் நாளிதழலுடன்
வாசலில் அமர்ந்தேன்.

எங்கோ செல்லும் கந்தன்
வந்து நின்றான் வாசலில்.

அவன் தென்னை மரமேறி
உழைப்பாளி.

இன்னிக்கென்ன விசேஷம்?
கேட்டேன்… சொன்னான்…

இன்னிக்கு சனிக்கிழமை.
நாள நாயித்து கிழமை.

கதை கவிதை எழுதுவது எப்படி?

வானத்தை பார்த்தபோது….
வசந்தத்தின் பூக்கள்…😁😁😁
இரவில் விண்மீன்கள்😀😀😀
ஏ…தெய்வமே?!!!
நீ தோற்று போனாய்???
உன் அழகை என்
படைப்பால் நான் திருடியது….
மூன்று ரூபாய் பேனாவில்😊😊😊
_கவினேசன்

காமாட்சி ஏதோ விளையாட்டாய் இந்த மாதிரி எழுதியிருக்கிறான் என்று தோன்றியது வாட்ஸாப்பில் படித்தபோது.

இல்லை.

அவன் என்னிடம் கூப்பிட்டு பேசிய போது உறைந்து போனேன்.

                  🏕️🏕️🏕️🏕️

நீ எதுல எல்லாம் எழுதறே?

நான் விளக்கமாக சொன்னேன்.

இத்தனை இடங்களில் எழுதுறியா? அப்போ நானும் அதில் எல்லாம் இனிமே எழுத போறேன்…

காமாட்சி, என்னடா சொல்றே?

நானும் இனிமேல் கவிதை கதை எல்லாம் எழுதபோறேன் னு சொல்றேன்.

நீ க்வாலிஃபைடு லா ஃப்ரொபசனல். அதுல நிறைய ஜர்னல் எழுதலாமே.

அங்கையும் எழுதுவேன். இங்கையும் எழுதுவேன். நீ எனக்கு இதில் ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதா?

முடியாது என்று சொல்ல வந்த நான் இப்போது வாயை மூடிக்கொண்டேன்.
நான் அவனை இதைவிட பழி வாங்க வேறு சந்தர்ப்பம் அமையாது.

ஆனால் இவன் கதை கவிதைகளை படித்து தொலைக்க வேண்டுமே என்ற கிலி வேறு கூடவே வந்தது.

எழுதி அசத்துடா காமாட்சி… வெப்சைட் , ஆண்டிராய்டு அப்ளிகேஷன்ஸ் னு நிறைய எழுத ஸ்கோப் இருக்கு.

ரொம்ப பேர் அதில்தான் தமிழை சீராட்டி பாராட்டி வளக்கறாங்க. மண்ணின் மைந்தன் நீ. உன் பங்குக்கு நீயும் இதிலே துள்ளி புகுந்து விளையாடனும்.

அப்போதே ஜிவ்வென்று ஆகி விட்டான்.

நீ என்னமோ படிக்கணும் அப்பறம் சிந்திக்கணும் அப்பறம் எழுத மொழி திரளணும் னு சொல்லுவியே. எனக்கு அதுவெல்லாம் தேவையே இல்லை. அது பாட்டுக்கு பிச்சுக்கிட்டு வருது.

ஸோ, இனி நானும் எழுதப்போறேன் என்று அவன் சொன்னதும் “அதுபாட்டுக்கு வருதுன்னு சொன்னா அது மூத்திரம்டா” என்று சொல்ல நினைத்ததை மறுபடியும் மனதுக்குள் பூட்டி வைத்து கொண்டேன்.

தமிழன்னை என்னை இனி சபிக்க கூடாது என்று மனதார வேண்டி கொண்டு துணையாக களத்தில் இறங்கினேன்.

இனி நானும் அவனும்.

               🏖️🏖️🏖️🏖️🏖️

டேய், எனக்கு ஒரு புனைபெயர் வேணும்.

காமாட்சியே நல்லா இருக்கு… அதில் நீ ஆணா, பொண்ணான்னு தெரியாது.

ஸோ…

லைக்ஸ் நிறைய வரும். என்ன உலறினாலும் அப்படியே லைக்ஸ் வரும்.

அது என்ன லைக்ஸ்?

இப்போ நீ எழுதறதை யார் யார் படிச்சி பார்க்கிறாங்க னு தெரிஞ்சா நல்லா இருக்கும் இல்லையா

ஆமா.

படிக்கறவங்க அதுக்கு கீழேயே பெரிய மயிரு மாதிரி தன்னை நினைச்சுக்கிட்டு மயிரு மாதிரியே கமெண்ட் போடுவாங்க.

இது எல்லா இடத்திலும் உண்டு. விஷயத்துக்கு வா…

சரி… நீ என்ன பண்றே.. இப்ப செம செக்ஸியா ஒண்ணு எழுதி விடு. அதுக்கு என்ன கமெண்ட் வருது னு பாரு.

பெரும்பாலும் பெண் விடுதலை பெண் உரிமை னு சொல்லி ஓட்டிட்டே இரு. ஆரம்பத்தில் அவ்ளோ சீக்கிரம் நெகட்டிவ் கமெண்ட் வராது.

பின்னாடி நீ ஆம்பிளை னு தெரிஞ்சாகூட ஒண்ணும் மோசம் இல்லை. அப்போ மாதவிடாய் பத்தி எழுதி சமாளிக்க முடியும். என்ன சொல்றே?

எனக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்கு. வேற ஐடியா கொடு. இது சரிப்பட்டு வரும்னு தோணலை. இன்னும் உண்மைய சொன்னா எனக்கு வெறும் கெட்ட வார்த்தை மட்டும்தான் தெரியும்.

அது கூட போதும்டா. உதாரணத்துக்கு. இப்போ உனக்கு கீழே தொங்குதே அதை சொல்லும்போது….

வேண்டாம்டா. ப்ளீஸ். வேர்க்குது…

சரி.வேண்டாம். நீயே சொல்லு. என்ன எழுத வரும் உனக்கு?

முதலில் என்னை பத்து பேராவது படிக்கணும். அதுக்கு ஆரம்பி.

என்ன செய்யலாம்?

லாகின் போட்டு அப்ளிகேஷன் உள்ள போய்டு. கொஞ்ச நாள் எதுவும் எழுதாதே. மத்தவங்க எழுதறது முழுக்க நாள் தவறாது விடாம படி.

படிச்சா?

நீ ஒரு வழி ஆயிடுவே. ஐ.. மீன். எப்படி எழுதனும்னு ஒரு பாயிண்ட் கிடைக்கும்.
சும்மா படிக்க கூடாது.

அப்பறம்.?

கமெண்ட் பண்ணனும். அதுவும் வயசுக்கு தக்கன மாதிரி.இப்போ சின்ன வயசு பொண்ணுனா டெடி பொம்மை கார்ட்டூன் சூர்யோதயம் அசின் அஜித் னு dp வச்சு இருக்கும். அங்கே போய் மார்வலஸ் பெண்டாஸ்டிக் செம்ம னு போடு. வேற அதிகமா வேண்டாம்.

இதை படிச்சிட்டுத்தான் போடனுமா?

படிக்காமல் போடலாம். என்ன புரிஞ்சது உங்களுக்கு னு அவங்க கேக்கவே மாட்டாங்க. ஆனா சீக்கிரமே நட்பு பாராட்டி பழகிடுவாங்க. பத்து ஓட்டாவது உனக்கு கன்ஃபார்ம் ஆகிடும்.

சூப்பர்டா. அதுல கல்யாணம் ஆனது ஆகாதது னு கண்டுபிடிக்க முடியுமா?

கண்டுபிடிச்சு.?

காமாட்சி என் கண்களை பார்த்து தலை கவிழ்ந்து கொண்டான்.

இப்போ மிடில் ஏஜ் பீப்பில்ஸ்க்கு போவோமா என்றேன்.

ம்…(என்றான் கடுப்பு)

இங்கே எல்லோரும் உன்னை மாதிரிதான் இருப்பாங்க. தப்பி தவறி என்னை மாதிரி ரெண்டு மூணு பேர் வருவோம். என்னை மாதிரி ஆள் வந்தா?

என்ன செய்யணும்?

ஃபாலோ பண்ண கூடாது.

ஏண்டா?

உன் கற்பனை சொத்தை கொள்ளை அடிக்கறதே என்னை மாதிரி ஆளுங்கதா.

புரியலை.

சொல்றேன். இவங்களுக்கு கல்யாணம் மட்டுமே கவலையா இருக்கும். ஆனா உனக்கு. உன்னை போல் இருக்கும் சிலருக்கு?

கல்யாண கவலை இருக்காது?

அது மட்டுமா? எத்தனை வயித்தெரிச்சல் இருக்கும். அடுத்தவன் பேங்க் பாலன்ஸ், அடுத்தவன் டுர் டுர் பைக், கார், இளமை குன்றாத பொண்டாட்டி… இப்படி நிறைய இருக்குமே?

இருக்குது. நீ சொல்றதும் உண்மைதான்.
அதுனால என்னடா?

அதைத்தான் நீ கவிதையாக்கணும். இது அப்படியே நேரே எழுத கூடாது. சுத்தி வளைச்சு எழுதி அந்த காலத்துல இப்படி இல்லை னு முடிக்கணும்.

அப்போ உனக்குள் ஊறி ஊறி வரும் அந்த சமூக அக்கறையை நினச்சு ரொம்ப பெருமையா லைக்ஸ் போடுவாங்க.

யோக்கியன் மாதிரி நடிக்கணுமா?

இல்லை. நீ ஆபிஸ்ல எப்படி இருக்கியோ, வோட்டு போடறதுக்கு முன்னாடி எப்படி யோசிக்கறையோ அப்படி மட்டும் இருந்தா நடந்துக்கிட்டா போதும். எல்லாருக்கும் ஒரு போலி மரியாதை கொடுத்து அதை அப்படியே வாங்கிக்கணும்.

காமாட்சி விழித்தான்.

அவ்ளோ சிரமம் இல்லைடா. நீ இந்திய குடிமகன் இல்லையா. உன் ரத்தத்தில் இது எப்பவும் கலந்துதான் இருக்கும்.

புரியுது. மிடில் ஏஜ் ஆட்களுக்குக்கும் அருமை, செம போட்டா போதுமா..?

நோ. நோ. இப்போ அவங்க ட்ரெண்ட் செட் பண்றாங்க.
ரொம்ப எழுதற வெள்ளை நிற கிழவிகளை சின்ன பொண்ணுங்க எல்லாம் கிரேட் ஆண்ட்டி லெவலுக்கு கொண்டு வச்சு கொண்டாடிட்டு புது பாலிட்டிக்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. ஸோ அங்கே வேற மாதிரி எழுதணும்.

எப்படி?

தலைப்பை படிக்கணும். உழைப்பே வாழ்க னு இருந்தா “உழைப்பில்லா உயர்வு வருமா மிக நன்றாய் சொல்லி இருக்கிறாய் நட்பே” னு போடணும்.

மரண மானுடம் னு எழுதி இருந்தா… அது தத்துவம். ஸோ, “பட்டினத்தார் பார்வையில் இப்படி கூட இல்லை. அற்புதம்” னு போடணும்.

உள்ளே போய் படிக்க வேண்டாமா?

படிக்கலாம். ஆனா எழுதினவங்க “எந்த வரியை படித்துவிட்டு என்னை பட்டினத்தார் என்று சொல்கிறீர்கள். அவருடன் என்னை ஒப்பிட எப்படி மனம் வந்ததுனு”…..

கேப்பாங்களாடா?

ம்ஹும். கேக்கவே மாட்டாங்க. நன்றி னு சொல்வாங்க. நீ எழுதும்போது தலையில் வச்சு கொண்டாடுவாங்க. அப்படியே கேட்டா இந்த வரில ன்னு சொல்லு. அப்பவும் எழுதின அவர்களுக்கே ஒரு எழவும் புரியாது. சரின்னு சொல்லும்.

இப்படியெல்லாம் நடக்குமா..?

முழுக்க இப்படி இல்லை. பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்.

அப்படின்னா?

புரியலேல. புரியாது. விட்டுடு.

ஆமா… வயசானவங்க எழுதினா என்ன சொல்லணும்…?

சொல்றதா… பொத் துன்னு கால் ல விழுந்தடிச்சு கதறணும்.

என்னடா சொல்றே..?

அவங்களை அம்மா னு சொல்றதை கூட ஒரு தெய்வத்தை பாத்து சொல்ற மாதிரி சொல்லி சிவாஜி மாதிரி உருகணும்.

ஒரு பாராவாது விமரிசனம் எழுதணும். மூணு வார்த்தையாவது அதில் அம்மா அம்மா னு இருக்கணும்.

இது பாவம் அவங்களை ஏத்தி விடற மாதிரி இருக்கே… சும்மா இருந்தா கூட கொஞ்சம் எழுதிட்டு ஓய்வு எடுக்க வேண்டியவங்களை சீண்டி எழுத வைக்கிறது… பாவம் இல்லையா?

பாவம் பார்த்தா ஓட்டு வாங்க முடியுமா?

சரிதான்… கவிதைக்கு என்ன படிக்கே?

யாரை இதுவரை படிச்சிருக்கே?

பொதுவா நான் யாரையும் படிச்சது இல்ல. சிந்துமணி பதில்கள், அவல்புரி ஜோசியம், இன்டர்நெட் ல ராவான செக்ஸ் கதைகள் அப்பறம்…. இந்த சினிமா பாட்டு.

போதுமே…

போதுமா?

ஆமாண்டா. படிச்சிட்டே இருந்தா வயசு ஏறி போய்டும். அப்பறம் இந்த கிறுக்கு பிடிச்ச ரியல் எழுத்தாளன் எவனாச்சும் நம்ம கற்பனையை உடைச்சு தள்ளிட்டா ராத்தூக்கம் வராம போய்டும்.

அவனுங்க வந்தா நாம நம்பின ஒண்ணை ஆதாரத்தோட ஒண்ணும் இல்லாம இடிச்சு காலி பண்ணிட்டு போயிடுவாங்க. நாம தெருவில்தான் சொறிஞ்சுட்டு நிக்கணும்.

ஐயையோ… என்னடா செய்யறது?

பயப்படாதே… அப்படி எவனாச்சும் எழுதினா உன்னுது ஒண்ணும் படிக்க புரியலை னு ஒரே போடா போடு. அவன் ஓடிடுவான்.

எங்கே என்ன புரியலை னு கேட்டா..?

எதுவுமே புரியலை. எப்படி புரிஞ்சுக்கணும் னு எதிர்கேள்வி கேக்கணும்.

கேட்டா..?

அப்ப நாம புத்திசாலி ஆயிருவோம். கேள்வி கேட்டா நாம பெரிய புத்திசாலி.

ஆனா ஒண்ணு…”உங்கள் கவிதையை அணுக இயலவில்லை. இதை என் வாசிப்பு அனுபவ குறைச்சலாக கொள்கிறேன்” அப்படின்னு மலையாள எழுத்தாளர் மாதிரி இங்கே சரணாகதி அடைய கூடாது. இதுவும் முக்கியம்.

இதுக்கும் பப்பு வேகலை னா?

மெதுவா அவன் பேரை வச்சு எழுதற ஸ்டைலை வச்சு அவன் ஜாதிய கண்டுபிடி. சாவடிக்கலாம்.

இல்லாட்டி கிழவி எழுத்தாளர் எவளாச்சும் இருப்பா… அங்கே பிடிக்கலாம்.

ஓ.. கிழவியை பிடிக்கணுமா?

இல்லடா. நைட்ல இந்த கிழவிங்க எல்லாம் புருசனுக்கு இடுக்குல தலைகாணியை சொருகி விட்டுட்டு அப்ளிகேஷன்ல எழுதறேன் பேர்வழி னு குறுஞ்செய்தி விட்டுட்டு இருப்பாளுங்க.

யாக்கோவ் இவனை பாருக்கா’ன்னு ஒரு ஒப்பாரி விட்டா வந்துவாளுங்க நைட்டி புடவையை வரிஞ்சு தூக்கிட்டு… இப்படி பாலிட்டிக்ஸ் பண்ணி எதிராளியை ஒரே ஓட்டா ஓட்டிடலாம்.

அதுக்கும் பயப்படாம அவன் “வாடா ங்கொம்மாள…” னு சொன்னா..?

நாம தலைதெறிக்க ஸ்பாட்டை விட்டு ஓடிடணும். காலம் கெட்டு கிடக்கு. நூல் போடற பையன் கூட ரிவால்வர் விலை என்னன்னு பாத்துட்டு இருக்கான்.

சரி… என்ன எழுத? இப்போ அனுப்பினா மாதிரி எழுதவா…

எழுது… இயற்கை, காக்கா, குருவி, பஞ்சம், முனிசிபாலிட்டி மாமனாரின் இன்பவெறி னு தோணறது பாக்கிறது வாய்க்கு வந்தது கக்கினது எல்லாம் எழுது.

இப்போ முன்னாடி எல்லோருக்கும் நீ அட்வான்ஸ் லைக் போட்டதுனால கடன் பட்டார் நெஞ்சமும் இப்ப லைக்ஸ் போடும்.

அப்போ சீக்கிரம் ஒரு பப்ளிஷர் நான் பாக்க ஆரம்பிச்சிடலாம்…

ஆமா காமாட்சி.. நாலு கிழிப்பு கிழிச்சிட்டா அதுதான் உன் லட்சியம். முதலில் கிண்டில் ல விட்டு ஆழம் பாக்கணும். அங்கே ஒரு ஆளும் உன்னை படிக்க மாட்டான். ஆனா ரிவிட் வரலை ன்னு வச்சுக்க.. நீ அடுத்து புக் போட போயிடலாம்.
இதுதான் உன்னோட, அவனோட தலையெழுத்துனா அதையும் யாரால் மாத்த முடியும்….

ஏண்டா… கவிதையில் ஆரம்பிச்சு அப்படியே நான் வேணும்னா கதை, தொடர்கதை, நாவல், காப்பியம், காவியம்னு…

எழுது ராஜா.. யார் கேக்க முடியும்? எதையாச்சும் படி. பேக்கு மாதிரி யோசி. கேனத்தனமா எழுதிப்பாரு. ரொம்ப பிடிச்சவன்கிட்டே கருத்து கேளு. அவன் சூப்பர் னு தான் சொல்வான். நீ பாட்டுக்கு பப்ளிஷ் பண்ணிடு.

அப்ப உனக்குள் நீ ஒரு பெரிசா புடுங்கிட்ட மாதிரி ஒரு ஃபீல் வரும் பாரு… சான்சே இல்ல காமாட்சி என்றேன் நான்.

வரலாறு பழைய மன்னர்கள் குப்பை போடற இடத்தில் சங்க ஆதாரம் னு கூட எழுது. பேய், பிசாசு கதை கூட எழுதலாம்.

காமாட்சி சற்று யோசித்தான். பின் என்னை பார்த்து…
“ஏண்டா ஒரே கற்பனை கற்பனையா எழுதி தள்ளி… சரி. எனக்கு ஒரு சந்தேகம்டா…
நமக்கு ஒரு பெரிய பிரச்னைனு வந்தா அதை தீர்க்க சரியான ஆக்கபூர்வமான வழி என்ன இருக்குன்னு பாப்போமா? இல்ல கற்பனையா நினைச்சு வாய பொளந்துட்டு இருப்போமா என்று அவன் கேட்ட போது நான் சுதாரித்தேன்.

உனக்கு கூட்டம் கூட்டமா ரசிகர் வாசகர் வேணுமா வேண்டாமா?

வேணும்டா.

அப்போ போய் கோஷம் போடு.

போய் விட்டான்.

ஒரு மாதம் டீவி மொபைல் தொடக்கூடாது என்று என்னை டாக்டர் கண்களை சோதித்து சொல்லி விட்டதால் நானும் அக்கடாவென்று நிம்மதியாக இருந்தேன்.

இரு மாதங்கள் ஓடிய நிலையில் காமாட்சி வீட்டுக்கே வந்து விட்டான்.

எப்படிடா போகுது என்றேன்.

நிறைய பேர் வராங்க. நானும் எல்லோரையும் ஃபாலோ பண்ணினேன்.
இப்போ ஒரு பத்து வரி கவிதை போட்டா கூட மறுநாள் 100 பேர் வரை காட்டுது.
சமூக தளத்தில் தீ மாதிரி பரவும் போல.

நீ உன் சமூக வலைதள லொட்டு லொசுக்குக்கு எல்லாம் எழுதினதை பார்வார்ட் பண்ணி படிக்க சொல்லி அனுப்பினியா?

நான் அப்படி பண்ணினாலும் யாரும் படிக்க மாட்டாங்க. அவங்க புல்லட்டின் மகசின், ஜர்னல் னு தீவிரமான ஆளுங்க.
மாமியாரோட குடுமியை பிடிச்சு ஆட்டும் கதை நான் அனுப்பி வச்சா கேவலமா என்னை பார்ப்பாங்க…

அப்போ தளத்தில் ஏதேனும் சமூக லொ. லொ. க்கள் நிர்வகிக்கும் தோழர்கள் உன்னை கூப்பிட்டு பேசி பகிர்ந்தாங்களா?

இல்லை…

அப்போ பத்தாயிரம் வாசகர்கள் அஞ்சு கோடி லைக்ஸ் இது வெறும் நம்பர் கேம் அல்கொரிதம் னு உனக்கு இப்ப கூட புரியலையா?

லேசா புரியுது.

தொடர்ந்து எழுதி குறைச்சு கூட்டி விமரிசனம் செய்து செய்யாம தளத்துக்கு போய் போகாம ஒரு டேட்டா எடுத்து பாரு.
அப்போ புரியும். இங்கே அப்ளிகேசனில் எழுதரவன் எப்படிபட்ட கிறுக்கன் ன்னு…

இல்லைடா..நான் வந்தது வேற விஷயம்.

என்ன…

எழுதறதை நிறுத்திட்டேன்.

ஏண்டா?

இங்கே கூட்டமா நல்லா இருக்கு. ஆனா ஒரு ஒழுக்கம் தவறின உணர்வு வருது.

எனக்கு நானே ரொம்ப பொய்யா இருக்கற மாதிரி நடிக்கிற மாதிரி ஒரு பயம். யாரோ எங்கேயோ இருந்து என்னை கேவலமா நினச்சு சிரிக்கிற மாதிரி ஒரு அவமானம்.

கூகிள்” ல சில எழுத்தாளர்களை படிச்சு பார்த்தேன். அப்போ என்னை நினச்சு பார்க்கவே அசிங்கமா இருக்குடா.

என் பிரச்சனைகளை அடுத்தவன் கஷ்டமா எழுதி பார்த்தா அது தீர்ந்து போய்டும் இல்ல மனசுக்கு ஆறுதல் னு நினைச்சேன்.

ஆனால் அதில் கவனம் நேர்மை ரெண்டும் இல்லாதப்போ அந்த பிரச்சனைகள் இன்னும் இருக்க இருக்க தீவிரமா மாறிட்டே போற மாதிரி இருக்கு.

யார் வேணும்னாலும் எழுதலாம். தப்பு இல்ல. எப்போ ஆரம்பிக்கணும் எப்போ முடிக்கணும்னு தெரிஞ்சு வச்சுக்கணும்.

பாக்கிறவங்க, போற வர்றவங்களுக்குனு நாம எழுதி பழகிட்டோம்னா அதை விட நெருக்கடி மனசுக்கு உடம்புக்கு எதுவும் இல்லை.

இப்போதான் புரியுது. ஸோ, நான் வழக்கம்போல் ஜர்னல்ஸ் ல எழுத ஆரம்பிச்சிட்டேன். நிம்மதியா இருக்கு.

அப்போ இனிமேல் நீயாவது நான் எழுதினது மட்டும் படி என்றேன்.

ரெண்டு கையையும் உயர்த்தி கும்பிட்டு சிரித்தபோது நானும் சிரித்தேன்.

🏘️🏘️🏘️🏘️🏘️

சகுனம்

சாலையில்
கிழக்கும் மேற்குமாக
நடந்து நடந்து
குழம்பிக்கொண்டு இருந்தேன்.

திரும்பும்போதெல்லாம்
ஏதேனும் ஒரு சகுனப்பிழை.

திரும்பியும் சுழன்றும்
தாவியும் தெறித்தும் கூட
கடக்கமுடியாது நிரம்பியது
கூட்டம்கூட்டமாய் சகுனப்பிழை.

சகுனங்கள் மழையாய் பொழிந்து
திட்டங்களை வேரோடு
மாற்றிக்கொண்டே இருந்தது.

முடிவுகள் பிரிந்து பிரிந்து
புயலில் கால் விரித்த மாடாய்
நிலைகுத்தின பயணத்தில்.

நற்குறிக்கு காத்திருந்தபொழுதில்
கெயவனும் கியவியும் கூடி
வன்மமாய் கொண்ட கலவியின்
மரண ஊளையாய் அதிர்ந்தன…

நீண்டுகொண்டிருந்த
சாலைச்சகுனங்களில்
மனம் நிரப்பிய கேள்விகள்.

கோபங்களில் நீ மார்கழி

உன் எல்லாக்கோபங்களிலும்
இல்லை இக்கோபம்.
சிரித்துக்கொண்டேன்.

ஓரிரு நாட்கள் பேசமாட்டாய்
தெரியும்.
உனக்கு அது
உறைந்துபோன ஓரிரு வருடமோ?

எழுதும்போது மறந்த
கவிதையின் ஓரிரு வரி
கனவில் தெரிந்தது போல…

நாட்களின் முடிவுகளில்
ஒய்வற்ற நாய்குட்டியாய்
உன் வேதனைகளை
தோழியிடம் தமிழில்
சிந்திக்கொண்டிருப்பாய்.

முத்தமிட்ட கணங்கள்
நொடிக்கொருமுறை
நினைவு வர.

என் தொலைபேசியெங்கும்
அழியாத உன் ரேகைகளில்
காய்கின்ற கண்ணீரை
பார்த்தபடி நான்.

கொலை ருசிக்கும் உறவு

கோடிக்கணக்கான கேள்விகளும்
அதேயளவு பதில்களும்
மலர்ந்தும் மறைந்தும்
என்னைக் கடக்கின்ற
இக்கணத்தில் மட்டும்
அந்த நாவல் விரிந்தது.

அதில்தான்…

பட்டுப்பூச்சி அனாதைகள் இல்லை
செடிகளில் முளைக்கும் மரங்கள்
பூனைகளிடம் திருடும் நாய்கள்
கொன்றொழிக்கும் பாடல்கள்
மேடுகள் உறிஞ்சும் நீரலைகள்
இரவின் தீண்டாமை நிலவு
என்பதையெல்லாம் சொன்னது.

பின் என்னை உறிஞ்சி
முனிவரின் கவிதைக்குள்
உரமாய் உதிர்த்தது.

நான் காற்றை உள்ளிழுத்து
மேகமாய் மிதக்கலானேன்.
கேள்விகளும் பதில்களும்
தூரலாய் சிதறிக்கொண்டன.

நாவல் தன்னை அறிய
தீவென மாறிய
உங்கள் வாழ்வை
எழுதிக்கொண்டே இருக்கிறது.

நீங்கள் வாழ்வதற்கு
சிரித்தும் அழுதும்
சமர்வில் புணர்வாய்
தொடரும் உறவு வர்த்தகத்தில்
நாவல் எப்போதும்
பக்கங்களை திருப்புகிறது
இரவும் பகலுமென.

பின் படியெடுக்கிறது…
கோடிக்கணக்கான உங்களின்
கேள்விகளையும்
அதேயளவு பதில்களையும்.

காடுகளின் கூச்சல்

இறுதியில் நாம்
ஒத்திசைவை கொண்டோம்.

என் மதுக்கோப்பையில்
உன் நிழலின் வெப்பம் தெறிக்க
நான் விழுங்கும் ஓசையில்
நமது சாபம் அகன்றது.

நேர்மைகளில் உனக்கிருந்த
பயமும் தவிப்பும்
என் கூடாரத்தை மேய்ந்தது.
சத்தியத்தின் மீதான கேள்விகள்
கணப்பு அடுப்பின் உள்
முயல்களை போட்டு சென்றன.

நியாயங்களில் எப்போதும்
உன் மந்திரவாதமுண்டு.

நாம் கோப்பைகளில்
விரதங்களின் சாம்பலை
நிரப்பி பருகுகிறோம்.
விழிப்புற்ற பறவைகள்
நோய் கொண்டு வீழ்ந்தன.

உலகம் தன்னுள் தானே
கொக்கரித்தது.
பூக்களில் கொட்டிக்கிடந்த
குப்பை மீது நமது
அதிகாரங்கள் எழுதப்பட்டது.
சென்று வா நண்ப.

கொடியில் காயும் ப்ராக்கள்

மாடியில்
கடக்கும் போதெல்லாம்
பட்டுத்தொலையும் கண்களில்
கொடியில் காயும் ப்ராக்கள்.

பிராக்கள்…
நம்பமுடியாத சரித்திர புளுகு
சாத்தான் விண்ட நகத்துண்டு
என்றெல்லாம் சொன்னாலும்
சோர்ந்து பார்க்கும் என் மனம்.

கொடியில் காயும் அதனுடன்
காயக்காய காயும் மனம்
அமிலம் அருந்திய அனலாய்.

நழுவும் சூரியன் எரிப்பது
காயாத ஈரம் மட்டுமல்ல.
நரநரக்கும் விரக்தியில்
கால்கள் தளரும் நடைகளையும்.

மாடியில் ஏறி இறங்கி…
இறங்கி ஏறியும்…
மனதில் தொங்கி காய்கிறது.
யார் சொன்னது?
வேதாளங்கள்
விக்கிரமாதித்தனுக்கு மட்டுமென்று.Password

அவளை சந்திக்கவில்லை
எனினும் என்னவள் ஆவாள்
நான் சந்தித்தபின்…

எனதறையை குடிக்கும்
இரவொன்றின் ஜாமத்தில்
ஒழுக்கங்கெட்ட கனவுகளில்
அவள் முகம் தெரியவில்லை.

தெரிய மனம் ஏங்கினாலும்
வருவதென்னவோ பெயரறியா
வெள்ளைக்காரிகள் மட்டுமே.

அவளை என்றேனும் சந்திக்க…
இந்த உண்மையை
சொல்லி வேண்டும் என்றாலும்

சொல்லக்கூடாது
இணையத்தின் பாஸ்வேர்டு.

ம்…

கடைக்கா போறே
இருடி நானும் வரேன்…

மாரீய்முத்து…

அந்தா… போறான் பாரு…

இன்னுமா டியூசனுக்கு போகலை?

ஓடாதே ஓடாதே வண்டி…

ரேசங்கடல நாளைக்கி என்ன?

சாலை நிறைய
மக்கள் கூட்டமும்
சத்தத்தில் முங்கிய
கூட்டமான மக்களும்…

ஒற்றை வார்த்தை
ஒற்றை வரிகளும்
காற்றோடு சிராய்ந்து
தரையெங்கும் சிதறி
ரோட்டினில் பிடியற்று
திசையற்று குமிழ்வதை
நானும் பார்க்கையில்…

என்னோடும் பார்க்கிறது
சிவப்பு நொண்டி நாய்க்குட்டி.

நகரமுடியாது தவழ முடியாது
கருஞ்சாலை மடியிலிருந்து.

கொலை வளியாய் விரையும்
வாகன பற்களினூடே
ஒளிபற்றி மின்னி மறையும்
அதன் பரிவுப் பார்வையில்
மரணத்தின் சாந்து ஒளிர்கிறது.

நதியினில் விழுந்த
பறவையாய் நான்.

எங்களை சுற்றி சுழல்கிறது
ஒரு மனம்.
இருவருமாகியதும் அதை
ஒன்றுபோலவே உணர்கிறோம்.

மரணத்தின் மனமா அது?