Category Archives: குறில் மீட்சி

நீலாம்பரியின் நாக்கு

இப்படித்தான் என்பதில்
எந்த நிச்சயமும் இல்லாதபோது
இந்த கவிதையை படிக்கலாம்.

ஒரு நகரம் கிராமத்தை
மின்மினி கொண்டு
அளப்பதை போல.

உங்களை விசை கொண்டு
அழுத்தும் அர்த்தங்களோ
நீங்கள் நியமிக்க வேண்டிய
கவனத்தின் திருகு ஓட்டைகளோ
இதில் இல்லை என்பதால்

நீலத்தில் சபிக்கப்பட்ட உங்கள்
குளிர் கண்ணாடி அணிந்து
முன் வரலாம் படிக்க.

வாசிக்க லகுவானது…
வாசிக்கும்போது
உங்களின் பரமவைரியின்
நீங்காத நினைவும்
கொதித்திருக்கும் இந்நாளும்
சற்று மறக்கக்கூடும்
என்பதற்காக கூட
இன்னும்
வாசிக்கலாம் ஒரு முறை.

நதியில் கரைந்த மின்னல்

ஒரு நுரைப்பொழுதில் நீ
ஒளிந்திருந்து பார்த்தாய்.
நுரை வண்ணங்களின்
பூத்து குலுங்கியது
பட்டாம்பூச்சி காலங்கள்.

திரைக்கு அப்பால் சென்று
மறையுமுன் சிரித்த
கொலுசின் விண்மீன்கள்…
கால்படா ஓடைகளில்
துள்ளிடும் மின்னல்கள்.

உன் பிரக்ஞையூடே
கலையும் மேகங்கள்
களைகின்றன மழைத்துளியில்
உன் பருவங்களை.

எட்டிப்பார்க்கும் கோடை நாள்
சொல்லிக்கொள்கிறது
உன் பெயரை பனியென நம்பி.

ஆடைக்குள் பூத்த
அலையாடும் நிலவின் குளிரே
உன் நித்திலங்கள் நிலைக்குமோ
நீரின் கனமறிந்த பின்பும்…

கண்கள் பனித்திடும் கீதம்

அப்பாடல் மீண்டும்
தொலைதூரத்தில் கேட்டது
அதன் சில சாயல்களில்
நம் அந்நியம் இருந்தது.

“பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கிடும் கீதம்”
மழை பொழிவதால்
நாம் நனைகிறோம்.

கருவண்டும் பட்டாம் பூச்சியும்
சூரியன் நிழல் மேய்த்து
இரை மறந்து
அலைந்துகொண்டே இருக்க
மழை பொழிகிறது நமக்கு…

இன்று நல்ல வெய்யில்
என்கிறான் யாரோ இவன்.

“பூவை அள்ளி பூவைக்கையில்
கொடுத்தபின்னும்… அள்ளித்தந்த”

மிக அருகில் கேட்கும்
இப்பாடலிலும் அதே மழை.

சரிந்திருக்கும்
மனதின் நடுவே வண்டுகள்
பாடல்கள் ஊதி பறக்கின்றன.

கொஞ்ச நாட்களாக நாம்
பேசிக்கொள்வதில்லை.

நமக்கான அப்பாடல்கள்
அழுதுகொண்டே இருக்கிறது.

எங்கிருந்தோ கிளம்பி வந்து
காற்றையும் மனதையும்
குடைந்து ஊடுருவி

பூவை அள்ளி பூவை
கையில் கொடுக்க பதறி…


அயல் மகரந்தங்கள்

உன் கவிதையை
நீ எழுதுகையில்…

உன்னுள் இவ்வண்ணம்
நிகழ்ந்ததா நீள?

மெள்ள பறத்தல்…
காது மடல்கள்
மென்சூடு கொள்வது.
தியானத்தின் போதை.

உன்னுள் இளகும் நீ.
உயில் எழுதும் கவனம்.
புணர்வின் பெருமூச்சு.

புத்தரின் புன்முறுவல்.
படபடக்கும் வெயில்.
கடுந்தொலைவுக்கும்
அறிந்த பயணவழிகள்.

செவி மலர
குரல் திரளும் துடிப்பு.

கள்வெறி கொண்ட
மூளையின் விரல்களை.
கடலளவு கருணையை.
சொல்லின் சல்லாபம்.

அறிந்து இருந்தால்…

உன் கவிதையில் பரவி
புத்துயிர்க்கும் புவனம்.

இதுவற்று பிதுக்கி
எழுதி தள்ளினாலும்

கவிதைதான்.

இருப்பினும்…
இருக்கலாம் உனக்கு
ரத்தக்கொதிப்பு.

அன்புடை நெஞ்சம்

ஒன்றை கேட்கவும்
ஒன்றை சொல்லவும்
மீண்டும் கேட்கவும்…

நாம் நமக்குள்
பல நேரங்களில்
பலமுறையேனும்
நினைவுறுத்தியாக
வேண்டியிருக்கிறது…

நாம் தம்பதிகளென்று.

காகிதம்

ஒருவருக்கும் சொல்லாத
சொல்ல ஒன்றுமில்லாத

அவருக்கும் இவருக்குமான
அதற்கும் இதற்குமான

ஏதோ ஒன்றில்
ஏதோ ஒருநாளில்…

ஒரு மிஷினுக்கு அடியிலோ
அதன் பக்கவாட்டிலோ
இன்னொரு மிஷின் போல்
நின்று நிதானித்து

அழுக்கு இல்லாமல்
கண்ணை பறிக்கும்படி

வண்ணமற்று தயாரித்த
வெள்ளி நிறத்தாள் ஒன்று…

வழி தப்பியோ விதி தப்பியோ

பைத்தியமாய் சுழல்கிறது
சிரித்து சிரித்து
காற்றுக்குள் காற்றாய்…

நள்ளிரவுச்சாலையில்.போத்லெரின் குக்கர்

எண்ணங்களில் உலரும்
தீராத சிக்கல்களை
மயானத்தின் அமைதியை

இறுதியில் யாரையும்
அவமானப்படுத்தி விடும்
மரணத்தின் குசும்பினை…

இவ்வறைக்குள் இருந்து
தனியே நான் எழுதினேன்.

அறை…

ஒரு குக்கரில் பூதம்
வெந்து கொண்டிருப்பதைப்போல்
என்னை எழுத வைத்தது.

கால்களை மடக்கி கொண்டும்
அவ்வப்போது நீட்டியும்
தாள்களில் கரைந்து சிலிர்த்த
பெரும் கனவொன்று
கலைந்து போன தருணத்தில்

சில சிதிலங்களுடன்
சில குற்றங்களுடன்
சில தியாகங்களுடன்
ஷார்ல் போத்லெர் என்னை
ஆவி கனிய முத்தமிட்டு
இருட்டில் மறைந்தான்.

பின்புதான்…

உவப்பு மிகுந்த எறும்பொன்று
எச்சில் என்று கருதாமல்
பாத்திரக்காட்டினை சுழல்வது போல்
உலகில் நீக்கமற்று நிறைகிறேன்.

என் சொற்கள் ஓய்வு கருதி
பால் வடிந்து நின்ற மரத்தோடு
பேசிக்கொண்டிருந்தது.

(நவீனக் கவிதையின் தந்தை ஷார்ல் போத்லெர் பாரிஸ்.)

பகல் பெய்த இரவில்

யாரும் தூங்காத
இரவொன்று என்னிடமுண்டு.

கொஞ்சம் விலங்குகள்
கொஞ்சம் பறவைகள்
கொண்டு கலக்கி உருவாக்கிய
அந்த இரவொன்றில்…

பதைத்து எழுப்பிடும் என்
கனவொன்றும் திரிகிறது.

மொழியாத ரகசியத்தின்
சிறகினில் எழுதிய குறிப்பில்
மகிழ்ந்து குறிப்பிட்டுள்ளனர்
அக்கனவை பற்றியும்.

அந்த இரவு…

பகலெங்கும்
சமவெளியில் மிதந்தது
நீரை உடைத்து கடலாக்கி.

ஒளியில் குறிப்பறியும்
அவ்விரவினை நான்…

உண்ணும் மாத்திரைகளாக்கி
தொடர்ந்து அளிக்கிறேன்
விலங்குகளுக்கும்
பறவைகளுக்கும்.

அவள் பிரிய காத்திருந்த
அந்நாளில் மீண்டும் வரலாம்…

அவ்விரவு
காடு விழுங்கும் விலங்கென.

அதனதன் சொல்

இன்னுமொரு எளிய வார்த்தை
அல்லது,
கேளுங்கள்…
ஒரு நுட்பமான சிந்தனையின் வரி

இவற்றில் ஏதேனுமொன்று…

அல்லது…

சங்கத்தில் உதிர்ந்த
ஓரிரெண்டு சொற்கள்…

தன்னுள் தழுவி எழுதியதும்
மின்னும் அந்நொடிக்குள்
முடிந்துவிடுமிந்தக்கவிதை.

தன்னுள் முளைத்து
தன்னுள் பெருகி
தன்னுள் கிளைத்து
விகாசமுற்ற அர்த்தத்துடன்
ஓடித்திரிய வேண்டிய இக்கவிதை

நள்ளிரவில் கண்டறிந்த
முகவரிக்குரியவனின் முகமாய்
ஒளிர வேண்டிய இக்கவிதை

சொத்தைப்பற்கள் போன்ற
சொற்களுடன் தவித்து நிற்கிறது
தன் வயோதிகம் தேடி.


யாருக்காகவும் அழலாம்

ஒவ்வொரு கவிதையாய்
படித்து படித்து
தேடிக்கொண்டே இருந்தேன்
எழுத வேண்டியிருந்த
என் கவிதையை.

ஒவ்வொரு மனிதராய்
வாழ்ந்து வாழ்ந்து
முடித்துக்கொண்டிருந்தது
வாழத் தவறியிருந்த
என் வாழ்க்கை.

ஒவ்வொரு தினமாய்
வந்தும் வராமலும்
என்னை பார்த்துவிட்டு
கடந்து கடந்து போகிறது
என் மரணம்.