Category Archives: குறியீட்டு புறம்

நீங்கள் நாள் என்று சொல்வது வெண்மையும் கருமையும் கொண்டதா?

வாசலில்
அமர்ந்திருந்தேன்.

முதலில் காலை வந்தது.

அரவமற்ற சாலையில்
ஓரிரு காக்கை அணில்
மரக்கிளை நாரைகள்
காக்கையை முறைத்தன.
ஒரு நாயை நான்கு
பெண் நாய்கள் விரட்டின.

ஒவ்வொரு மணித்துளியும்
கேள்வி கேட்பாரற்று விழுந்தன.

ஒரு நோய் கடந்து போனது.
பின்னே துன்பமும் அதன்
பின்னே ஒரு மரணமும்.
பின் கடவுளர் போயினர்.

தொடர்ந்து சில
சிந்தனைவாதிகள் நின்று
வாந்தி எடுத்து விட்டு நகர்ந்தனர்.
(இந்தியாவில் தெருக்கு 5 சிந்தனைவாதி)

மதியத்தை சுமந்து மீண்டும்
அதே காக்காய்கள்… நாரைகள்.
சில சிறுவர்கள் போனில்
ஏதோ பார்த்தபடி போயினர்.
(ஏதோ என்றால்…என்னவாக இருக்கும்?)

வெயில் கவ்விய மேகங்கள்
ஆவலுடன் அலைந்தபோதே
வெட்கப்பட்ட அந்தியும்
சிலிர்ப்பாய் பவனித்தது.

இளம்பெண்கள்
அடிக்கொருமுறை
மார்புகளை பார்த்துக்கொண்டு
பார்ப்பவரை பார்த்துக்கொண்டும்
கோவில்களில் ஏறியிறங்கினர்.

அந்தியை கசக்கிவிட்டு
இருள் பரவ
வீட்டுக்குள் போனேன்.

பாதி காலமாகவும்
பாதி பருவமாகவும்…

தூங்கும்போது எழுதியது

நீ என்
சூன்யங்களை நிரப்பினாய்.
நான் உன்
உலகத்தை திணறடித்தேன்.

*****

பூக்களை
தேடும் பட்டாம்பூச்சிகள்
இலைகளோடு மட்டும்
பேசுவதும் பாடுவதும் இல்லை

*****
எப்பொழுதும் போல
பேச்சு மூச்சற்ற வானம்
அள்ளி அள்ளி தருகிறது.

*****

அக்கனவை வரைவதற்கு
வந்திருந்த ஓவியன்
திரும்பவே இல்லை
அக்கனவுக்குள் இருந்து.

******

கிளையதிர படபடத்த
கொக்கு ஒன்று
மனமதிர நம்பியது
தானொரு மரமென்று.

தானொரு கொக்கென்று
நினைத்த அம்மரம் போலவே…

******

அப்பாவுக்கு
கதர் ஜிப்பாவும்
கருப்பு கூலிங் கிளாஸும்
பாட்டா ஷூவும் வாங்க
காசு சேமித்தபடியே… <அந்த
அனாதை சிறுமி.

*****

கவிதை கவிதை
என அலறும் போதே
செத்து மூழ்கின சொற்கள்
மனதுக்குள்…

*****

துளி நீரில் தெரியும் வானம்

இந்தக்கவிதையிலிருந்து
நீங்கள் எழுந்து வருகிறீர்கள்.
அல்லது…
அழிந்து போகிறீர்கள்.

வினோதங்களை கடந்து
பறந்து போகிறீர்கள்.
அல்லது…
புகை கொன்ற தணலாய்
மறைந்து போகிறீர்கள்.

நீங்கள் யாசிப்பவராய்
நான்கு புறங்களிலும்
கரங்கள் நீட்டி
ஞானத்தை கேட்கின்றீர்.
அல்லது…
உங்கள் மீது சதா ஒழுகும்
மரணத்தை கேட்கின்றீர்.

உங்கள் பாதைகளை
ஈன்றோர் அச்சங்களும்
ஆசிரியனின் கட்டுப்பாடுகளும்
ஞானிகளின் கூச்சலும்
மறைத்தபடி இருக்க…
இந்தக்கவிதையில் உங்கள்
உடலுறவு தொடங்குகிறது.

நீங்கள் விட்டுக்கொடுக்கும்
எதனிலும் தொலைந்து போன
ஏதேனுமொன்றின் துளையில்
சர்வகாலமும் முயங்குகின்றீர்.

விஸ்கி மழை
பொழிகிறது.

இந்தக்கவிதையில்
நீங்கள் பிறக்கின்றீர்
அல்லது….
உங்களையே நீங்கள்
ஈன்றெடுக்கின்றீர்.

உம் மாயைகளை
தன் நெஞ்சில் உறுத்திடும்
காபால மாலையாய்
பூட்டிக்கொண்ட
இக்கவிதை தாண்டவத்தில்

சிக்கி சுழலும் பூமியின் மீது
தெறித்த துண்டுகளில்…

ஓயாது உழலலாம்
உங்களின் கவிதையும்.

தடங்கள்

நகரம்…

அவர்கள்…

சாலையும் சந்தும்
கடந்து நடந்தனர்.
மெள்ள அமைதியாக.

வீடுகள் கருப்பாய்
டிவியில் கிடந்தது.

ஓரிருவர் தாண்டிப்போக
திருப்பங்களில் கூட்டம்
நிரம்பி வியாபாரித்தது.

பின்னர் திரும்பியதும்
அதே அமைதி
வேறு வடிவமாய்.

அவர்களை அவர்கள்
நிழலும் துரத்தவில்லை.
காவலர் உற்றுப்பார்க்க
எளிதாய் கடந்து சென்றனர்.

சப்தமற்ற பாதைகள்
ஒவ்வொன்றாய் முடிந்து
ஒவ்வொன்றாய் தொடங்கின.

கால்கள் சலிப்பறியவில்லை.
இருள் இருண்டது.

இன்னொரு திருப்பத்தில்
ஒரு சைகையில் அவளை
நிறுத்திவிட்டு…

புங்கை மரத்தை ஒட்டிய
ஒரு சரிவான சாலையில்
அவன்
இறங்கிப்போனான்.

காற்று தனியே
வீசிக்கொண்டிருந்தது.

சில மௌனங்களில் சில சொற்கள்

உன் மௌனத்துடன்
காற்றில் பதங்கமுறும்
புன்னகை…

எழுதிய புதினத்தை
ஓயாது மனனம்
செய்யும் மனதில்
மோதி மோதி
ஓடும் அலையென்று.

திட்டங்கள் இன்றி
புன்னகையினூடே
தலை கவிழ்வாயே…

சிரபுஞ்சி சாரலாய்
தெறிக்கச்செய்து
நொடிகளை புரட்டும்
விசைமுள் கூட
நாணத்தில் நழுவுமென
கணிக்க கொண்டாயோ?

நீராவியாய் நான் திரிய
எனக்கென்று இருக்கும்
மந்திரப்புன்முறுவலில்
நீயே நெசவுகிறாய்
காதலின் தோகைகளை.

என் கை பற்றுகையில்
கண் பற்றிய கணத்தில்
உச்சரிக்க உச்சரிக்க
ஈரமற்று உலர்ந்த
சொற்கள் எவ்வொன்றும்
ஸ்வர்க்கத்தில் ஒளிரிட்ட
வளியோடு கலவிய
வெண் இதழ்களாக…

நமதில் எனக்குள்ளிருக்கும்
உன் உரையாடல்கள்.


சதுரப்பூக்கள்

சதுரமான பூக்களையும்
பார்த்திருபோமா என்று
நான் யோசிக்கும்போது…

என்னில் மிஞ்சி வழிந்ததை
உன் கள்ளர்கள்
அபகரித்தனர் எண்ணியது போல.

கண்களை மூடிக்கொண்டேன்.
காட்சிகள் புலப்பட்டன.

ஒவ்வொன்றிலும் இருக்கிறது
உப்பு வெடியும்
தீ சுடரும் திரியும்.

செவ்வகமாக வட்டமாக
அவை சுழற்றின
சுழன்ற உன்னையும்.

பூமி கடைகின்றது
காற்றையும் நெருப்பையும்,
நீ நாட்கள் என்பாயே,

அதில்தான் வெடிகள்
கமறிக்கமறி வெடித்தன
உன் தலை சுக்கலானதும்…

நான் மீண்டும்
சிந்தனைப்பட்டேன் எனில்
அது சதுரப்பூக்கள்
என்பது பற்றியதான…

சகபயணிகள் கவனத்திற்கு

எனது வெக்கங்களை
நீங்கள் தவிர்க்காது
உணரவேண்டும்.

உங்கள் தெருவில்
எதிர்வீட்டுக் குழந்தை நான்.
நீங்கள் என்னையே
பார்த்துக்கொண்டிருப்பது
எனக்குப் புரியாது.

உங்களின் முத்தங்கள்
அன்பு மிக்கது.
பொம்மைகள் கேட்டு கேட்டு
உங்கள் வீட்டுக்குள்
ஓடி ஓடி வருவேன்.

அப்போது என்னை
ஸிம்மாஸனத்தில்
அமர்த்தி விடாதீர்.

கூச்சத்தை அச்சமாக்கி
பொம்மைகள் என்னுடன்
பேசிக்களிப்பதை
நிறுத்திவிடாதீர்.

உணர்ந்து உண்ணும் குளம்

இந்தக்குளம் என்னை
உறிஞ்சி விடலாம் விரைவில்.

கால்களை நனைக்கும் அதன்
ஈரக்குளிர் சாகும் காலடியில்.

குளம் வட்டமாய் இல்லை
ஒரு மாதிரியான வட்டம்.
வட்டம் என்பது
உயிர் குடித்து உயிர் தரும்.
குளம் இப்போது
என்னை குடிக்கிறது.

குளத்தின் மடியில்
என்னென்னவோ இருப்பினும்
இருப்பதில்லை அதே போல்
இன்னொரு குளம்.

கடலின் கொப்பூள்
கழுகின் தொட்டி
நாரைகளின் தொழுவம்
அந்த குளம் இப்போது
என்னை குடிக்கிறது.

தொலைதூர ஆட்டிடையன்
என்னை பார்க்கிறான்
பார்ப்பவன் கண்ணீரில்
பெருகியது இக்குளம்.

ஆட்டிடையன் வைத்துப்போன
மிச்ச அப்பத்துண்டு
மிதக்கும் குளத்தில்
குளமானேன் நானும்…

கண்ணீரின் உப்பில்
இன்னொரு கடலாக
மாறியவண்ணம்.

குகை வெளிச்சங்கள்

The Glass Essay

BY ANNE CARSON…தழுவல்

அவளுக்கு எது இல்லை
என்று பார்த்தோமானால்
எதுவுமில்லை என்பதுடன்
யாருமில்லை என்பதும்
தெரியவருகிறது.

நண்பர்கள் உறவினர்கள்
குழந்தை வருமானம்
வேலை உடலுறவு
என ஒன்றுமில்லாது
அவள் இருந்தாள் அவளோடு.

தன் இயலாமையை
தியாகங்களை இழப்புகளை
தனிமையின் அவஸ்தைகளை
ஒருபோதும் அப்படித்தானென்று
அவள் நினைக்காது போனதும்
அவளின் விடுதலையும்
தன் வழியில் போய் விட்டது.

நேற்று அவள்
தன் ஸோபாவில் அமர்ந்தபடி
மரணமுற்று போனாள்.

அண்டை வீட்டுக்காரனான
அவள் பெயரையும் வயதையும்
மரணத்தின் காரணத்தையும்
என்னிடம் கேட்டார்கள்.

அக்கூட்டத்திற்கும்
அதுபற்றி ஆர்வத்தை
முனைப்பை பதற்றத்தை
ஏக்கங்களை எரிச்சலை
உருவாக்கியிருந்தது
அவளின்
கச்சிதமான மார்பகங்கள்.

அவள் இறந்திருக்கலாம்
என்பதே சற்று
மர்மமான யூகமென்றேன்.

அதிகாரிகள் குறித்துக்கொள்ள
அவர்கள் தங்களுக்குள்
பேசிக்கொண்டு கலைந்தனர்.
நானும் வெளியேறினேன்.

காத்தருளும் மானுடம்

திகைக்கும் உனக்கு சொல்ல
எதுவுமின்றி போனது எனக்கு.

நீ பிறழ்ந்து போன
காலணியிலிருந்து துவங்கி…

உன்னுள் உருளும் வீடு.
ஞாபகங்களை குடையும்
இங்கிதமற்ற உறவினர்.
தொலைந்து போகும்
உன் இருப்பு.

புகுந்து கிடக்கும் ஆன்மீகம்.
தரங்கெட்ட மர்மமாய்
சொல்லப்பட்ட கலவி.
தத்துவத்தில் வீசுகின்ற
களிம்பேறிய நாற்றங்கள்.

நாயினும் சாதுவாக்கிய
மரபின் அமிலங்கள்.
மறுக்கப்பட்ட கனவுகள்
திருகிய ஆசைகளின்
ரத்த வாடைக்காற்று.

இதற்கு பின்னும் உண்டென்று
ஒரு வாழ்வு எனும் கற்பிதம்…

எனது திகைப்பும் இதுதான்.