Category Archives: ஊடாடல் சுவடு

நீ இன்னும் பேசவில்லை

காட்சிகளில் நினைவை
உண்ணும் உன் மனதில்
உனது நிழலின் கண்ணீர்.

நீ நிரம்பியது நினைவில்
அதுவோ உன் காதல்.
….அது வெறும்
நடுக்குளத்து முதலை

யூகிக்கும் ஆர்வங்கள்
அலைகளை இழுக்கும் வீடு.

நீ
இனி
வரலாம்
அல்லது…

பனியில் தூங்கும் தேள்
உன் மர்மம்.

சொல்லாத மர்மங்களில்
காதலை உதிர்த்து

உதிர்த்த காதலை
பிடித்தும் வைக்கிறது
காமத்தின் சுளுக்கை
மந்திரிக்கும் யௌவனங்கள்.

பெருகிப்பெருகி
கனன்று அடங்கி புகையும்
ஏதோ ஒரு சொல்
ஒலியற்று மொய்க்கிறதா…

அது நான்
இரவில் பிழிந்த
அமிலத்தின் கசப்பு.

கொட்ட கொட்ட ஓடி
அயர்ந்து நின்ற உன்னிடம்
தொப்பியேந்தி இரவல் கேட்கும்
என் காதலை மிச்சமிருந்தால்.

நள்ளென் றன்றே யாமஞ் சொல்ல

காற்றைப் பிழியும்
உன் சோப்பின் வாசனை.

துளிர்க்கும் சிரிப்பில்
தேன் தேடும் பட்டாம்பூச்சி.

சேலை சரசரப்பில்
சுவரெங்கும் பாய முனையும்
காந்தர்வ மின்சாரம்.

மெல்லிய முணுமுணுப்பில்
சாயமிழந்த காமக்கண்கள்.

நீ இறங்கிய அந்தியில்
சாலையில் கலங்கிய
பேய் பிடித்த சூரியன்.

இங்கும் கிடக்கிறது
உன் வெட்கத்தின் எதிரொளி.

இந்த இரவில் மீந்துபோன
ஒற்றைப்படுக்கையில்
உன் நினைவும்…

சாம்பலாய் உதிரும்
ஓயாது எரியும் வட்ட
கொசுவர்த்தியும் கூடவே
என் மனமும்…
அவனுக்கு ஒரு கோடியில் அவள்

அவள் இன்று
வெயிலாகி இருந்தாள்.
பெரிய ரொட்டியை
கனவில் இழுக்கும்
எறும்பை போன்று
அவள் தனக்குள் மீண்டும்
கேட்டு கொண்டிருந்தாள்.

அவன் ஏன் இப்படி
வெயிலாக ஆனான்
என் மனதுக்குள்.

அவள் குளிக்கையில்
மழை அவ்வூரை
துவட்டி கொண்டிருந்தது.

குளிர்ந்த அவளுக்குள்
அதுவரை கிட்டியிராத
முத்தங்களின் மென்சூடு
அருவியாகி அவளை
அறுவடை செய்தது.

சூரியனில் ஐஸ் கட்டியை
பிளப்பது மட்டுமே
இனி தன் வேலை
என முடிவெடுத்தாள்.

பின் அவனை தேடும்
மனதை மனதுக்குள்
சபித்து கொண்டாடினாள்.

அவன் வரும்போது
மறைந்து கொண்டாள்.
இந்த மின்சாரத்தை
அவனுக்கு நான்
தரவே மாட்டேனென்று
சொல்லிக்கொண்டாள்.

நாடெங்கும் மழை
பொழிய பொழிய
அவனும் அவளும்
அவர்களுக்குள்
பூத்து குலுங்கினார்கள்.

ஒருவரை ஒருவர்
அறியாது போயினும்…

தீரும் அந்தியில்

இப்படி உரையாட
பிடிக்கவில்லை என
நின்று விடுகிறாய்.

பின் பரவசத்தில்
தத்தளிக்கிறாய். உயிரில்
மெழுகின் சூடு பரவ…

முன் வந்து கேட்கிறாய்
தாபம் என்றால்?

உன் வினாவோடு எங்கோ
என் முத்தம் செல்கிறது.

ஓர் அமைதி நீளும்.

உன் கண்களில் விரகம்
யுத்த கால குளிராக
வந்து சேர்கிறது.

புனைவின் உச்சமாய்
என் கைகள் தீண்ட
ஓடைக்குள் தவறிய
மான்குட்டியாய் உன் மனம்.

ரகசிய உரையாடலில்
காமத்தின் தழும்புகள்
சிவந்து புடைக்கின்றன.

உன்னோடு இருக்க
கிடைக்கும் ஒரு கவிதை
என்கிறேன் அப்போதும்.

துடித்து இறுகும்
உன் இரு மார்புகளும்
அனல் மழையில்
அமிழ்ந்து குளிர்கிறது.


பின்னொரு கணம் நீ
அழியாத கோபத்துடன்
புறக்கணித்து செல்ல…

உன்னை என்னிடம்
தொலைந்து போக
உன்னிடமே நீ
சொல்லி விட்டு…

மழையோடும் மனதில்

வெளிச்சத்தில் தன்னை
உதறியது சிறு மழை.

அறையெங்கும் மூண்டு
மடித்து போர்த்தியது வெப்பம்.

தொலைவில் யாரோ
யாருடனோ பேசுகிறார்கள்.

நினைவை இழக்கும்வரை
குடிக்க நினைத்தேன்.

ஒற்றை குருவியொன்று
ஈரத்தின் தடங்களை என்
மனதெங்கும் போட்டு
க்றீச்சென்று கடந்து போனது.

தென்னை மரம் நனைவது
குறித்து யோசிக்கவில்லை.

இந்த நாளில் எனக்கு
இனி எதுவுமில்லை.

அப்படித்தான் இருக்கும்
அவளுக்கும்…

திட்டு திட்டாய் கவிதைகள்.

விளக்கொளி உன்மேல்
பசையாய் கிடந்தது.

கடலின் இரைச்சல்கள் பற்றிய
உன் குறிப்புகளில்
முத்தம் குறித்த
இசை இல்லை.

ஆதியின் ஆவிகள் குறித்த
கவலையும் கொண்டாய்.
உன் பயணங்களில்
நிறைய மரணமுண்டு என்றும்
ஆறுகள் எதையும்
ப்ரதிபலிக்காது உண்ண விரும்பும்
ஒரு ஓட்டத்தின் குகை
என்றும் எழுதினாய்.

நான் விளக்கை அணைக்க…

நீ இருள் மீது மோதி விழுவதை
உணர்ந்து கொண்டேன்.
ஐஸ்கட்டியின் புகையில்
காலம் நெகிழ்ந்து உன்னை
அப்புறப்படுத்த முனைந்தது.

என் கண்ணீரின்
சூட்டில் இருள் வெந்தது.
விளக்கை பொருத்திய போது

நேற்றைய இரவை நீ
கொலை புரிந்த காட்சி…

சாடியுள் ஓடும் வேங்கை

மனம் தின்னும் மிருகம்
கால்சுற்றி கிடந்தது
நகர விடாமல்…

எவரின் அழைப்பும்
அசைக்கவில்லை அதனை.

அழைத்த மொழிகளை
ஈசல்கள் விழுங்கின…

பகலை கெளவிய இரவு
நகரம் ஊர்ந்தது.
வால் அசைத்த மிருகம்
இருட்டின் கரிப்பை
உறிஞ்சி குடித்தது நீராய்.

திசைகளின் ஓரத்தில்
நெளிந்து நெளிந்து
இழுத்துச் செல்ல
ஓங்கிச் சொல்லும் உன்
கவிதைக்குள் புதைந்தேன்…

திருகும் மரணத்தை
திருகியவண்ணம்…


சகோ என்னும் கொடுக்கு

என் தேவதைகள் என்னை
தங்கள் பேய் கரங்களில் பதுக்கி
அளவளாவிய தருணங்களில்
அக்கவிதைகள் கிடைத்தன.

அது மின்சாரமுற்று
ஒளி பொருந்திய இதழ்களில்
சுடர்ந்து கொண்டிருந்தன.

தங்கள் உப்பரிகையில்
தேவதையின் ஆவிகள்
என் கனவின் ஈரங்களில்
காதலின் பேராவல்களை
திரட்டி உதிர்த்த காலைகளில்
நக்ஷத்திரங்கள் உதிர்கின்றன.

என்னை தேவதைகள்
சூழும் எந்த திருப்பத்திலும்
மஞ்சள் வெயிலில்
சமாதனமுற்ற அன்னமாய்
வெண்ணிற சிறகுகளில்
ராகம் உதிர்த்து கடக்கின்றேன்.

என் காதல்…
வலைவீசும் பிழைப்பல்ல.
கனவில் கடல்வீசும்
சாதுர்யங்கள்.

தாயம் விழ காதல் கூடுமென்றால்
காதலே தாயமாகி
விழும் எனக்கு.

ஆக… என் தேவதைகள்
போதுமென்று இருக்கும்போது
யுயிலெனிவ்…
நீ ஏன் என்னை
தோழ என விளிக்க கூடாது?
சகோ என்பதை தவிர்த்து…


கலைக்க போட்ட கோலம்

அன்று வந்தவன்
இன்னும் அலைகிறேன்
தவற விட்டதை தேடியே
வந்த பாதைகளையும்
தொலைத்துக்கொண்டு.

எவறெவரோ இடறிய
என் மனவெளியில்
உன் நினைவுகள்
நீந்தாத மீன்குஞ்சாய்.

காத்திருந்தும் நீ
காதலற்ற காதலாய்
கனல் பெருக்கி
கனவென்றே போனவள்.

ஈரம் மிளிர்ந்த
இச்சாலையெல்லாம்
நாம் நம்மை
தொலைத்த நினைவுகளே
கமறியபடி…

அப்போது இளையராஜா தீர்மானிக்கிறார்

மழை என்கிறேன்.
இங்கும் மழைதான்
கடலுக்குள் என்கிறாய்.

இருளுக்குள் ஓடி ஓடி
தகிக்கும் மின்னல்.
தூறலுக்குள் ஓடி ஓடி
அலைபாயும் இடியோசை.

நம் அலைபேசிக்குள்
வலை வீசும் மனது.

மனதுக்குள் அலை வீசி
கனவுக்குள் கதை பேசினால்
முட்டி முட்டி சிரிக்கும்
இந்த மழை என்கிறாய்.

எனில்…
இனியாவது தாயேன்
ஓரிரு முத்தங்களேனும்
என்கிறேன் நான்.

அது என்ன அது எப்படி
என்கிறாய் நீயும்.

ஆணோடு சேர்ந்து
மின்சாரம் சிந்தும்
ஸ்வரத்தின் சாரலில்
இதழுக்குள் இதழ் பூக்க…
உனக்கு தெரியாதா?

அலைபேசிக்குள் மௌனம்
நமக்குள்ளே நம்மிடையே
மலை போல் வளர வளர…

கொதிக்கும் பனியிடமிருந்து
இச்’சென்ற ஒலியில்
நாணத்தின் மின்னோட்டம்.

பின்…
இரு உயிரினில் தெரியும்
ஒரு கனவில் கேட்கிறோம்
நாம் அந்தப்பாடலை…

………… நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே
தீக்கூட குளிர்காயுதே …….

🌷🌷🌷🌷🌷

(நீர்வீழ்ச்சி* கண்ணே கலைமானே படத்தின் பாடல் வரிகள்)