Category Archives: உணர்வுப்பிளவு

நட்பென்னும் தீவினிலே

ப்ரிய தோழிக்கு ஒன்று.

பாறைச் சூட்டில்
விழுந்த நீர்துளிகளாய்
நம் தத்துவங்கள்.
திரைப்படம் தவிர
மற்றனைத்தும் எதிர் நீ…

பொருந்திய மரையில்
பொருந்தா வளையமாய்
கருதுகோளில் நழுவி
எதிரெதிர் பாதையில்
விலகும் நம் நெஞ்சில்
நட்போ நிலமென நீளும்.

சாய்ந்துகொண்ட தோள்…
எத்தனைமுறை என்
கண்ணீர் துடைத்தவள் நீ
நாம் வேறுதான்…

தமிழ் நான், நீ மராட்டியம்
பேசவோ ஆங்கிலம்.
பார்ப்போமா தெரியாது.
உணர்கிறேன் நான்…

நள்ளிரவு நேரத்தில்
அர்த்தமற்ற புன்னகையில்
நீ தொழுத இறைவனை
சிந்தும் நொடியளவு
கனவில் காண்கையில்…

எங்கும் வெளியேறாத
உன் கண்ணீரை
கொட்டும் பொழுதெல்லாம்
என்னிடம் கொட்டு.

ரோஜாக்கள்
பூத்துக் குலுங்குகின்றன.
உன் பிரார்த்தனைக்கு.

நகரம்

காடுகள் வழுக்கி
விழுந்த நகரத்தில்
அலைகிறேன் பாம்புகள் தேடி.

மரங்கள் இருந்த நிலத்தில்
தெருக்கள் முளைத்து
இலை உதிராத பாதைகள்.

எதையோ தேடி
சுவர்களை நக்கி விட்டு
ஓடி ஒளியும் நாய்கள்.

இங்கே யானைகள்
அலைந்திருக்கும்
என்ற கனவில்
காடு தொலைத்த
பாம்புகள் தேடுகிறேன்.

நகரம் உன்னை
பிராண்டியபடி இருக்க…
உன் பிள்ளையின்
ஓவியமெல்லாம்
நீ தொலைந்த காடுகளும்
விஷமான உன் சிறுநீரும்.

நகரத்தின் கோரப்பார்வை
உன்னோடு விழுங்குகிறது
உன் பின்னே வருபவனை.

தோழியின் கோபம்

உனக்கு சினம் மூளுமோ?
சினம் எரிக்குமோ
அச்சத்தின் பாடுகளை.

எரித்த அச்சத்தின்
சுவடுகளில் நகருமோ
முத்தமிட்ட மனம்.

எரிமலைகள் கோபத்தை
தம் மூச்சில் ஆற்றும்.

நதிகளின் சலனமும்
கோபமான வியர்வைதான்.

பூக்களின் கோபங்கள்
மரமாகி நிமிருமேனில்…

உன் சினமும்
உரமாகும் உனக்கே அது
அறவழி சினமென்றால்.

அள்ளி முடிந்து நீ
கூச்சலிட்டால் அது
பள்ளிகுழந்தையின்
அழுகைதான்.

ஜான்சி ராணி உண்டு…

ஆனால் எல்லோரும்
ஜான்சிராணி அல்ல.

டும் டும் டும்

ராசி பார்த்து
பொருத்தம் பார்த்து
காலம் பார்த்து
நாள் பார்த்து
நேரம் பார்த்து
மண்டபம் பார்த்து
ஆசிகள் கோர்த்து
கூட்டம் வியர்த்து
திருமணம் நடந்தது
நானிலம் வியந்து போற்றிட…

நேரங்கள் கழிந்தன.

அம்மண்டபம் பின்னே
நாளோ கோளோ
எதுவும் குறிக்காமல்
எச்சில் இலைமேலே
நடந்தது திருமணம்
நாய் ஒன்றுக்கும்
இன்னொரு நாய்க்கும்…

நாட்களோ போயின.
போயின.

நான்கு குட்டிகளுக்கு
தாயானாள் நாய் பைரவி.

மண்டப மாப்பிள்ளையோ
சிசுவரம் வேண்டி

ஆஸ்பத்திரி வராண்டாவில்
கையில் டெஸ்ட் ட்யூபுடன்
லுங்கியை கவ்விக்கொண்டு

நர்ஸை வெறித்தபடி….

சரளா.

மடியில் இருந்தாலும்
தூக்கிக்கொண்டு
அலைவதில் ஒன்றும்
சிரமம் இல்லை என்றாலும்
விட்டுட்டும் வருவாள்
தன் மகளை பூரணி…

மாமாவின் வீட்டில்
அப்பாவின் மடியில்
கணவனின் தோளில்
குழந்தை சரளாவை…

சில நாட்கள் கழித்து
விட்டுட்டு பின்
போய் கூட்டி வருவதென்றால்
அது பள்ளிக்கும்
ட்யூஷனுக்கும்
கல்லூரிக்கும்
பாட்டு க்ளாஸ்க்கும் பின்
புகுந்த வீட்டுக்கும்… கூட.

உள்ளே விட்டுட்டு
விட்டுட்டு வந்தாலும்

சரளா எப்போதும்
வாழ்க்கைக்கு வெளியில்.

குவளைக்கண்ணன்

என் நண்பர்
கவிதை எழுதுவார்.
நன்கு எழுதுவார்.

அவை பிரசுரம் ஆகி
புத்தகமாய் வந்ததால்
நன்றாகத்தான் இருக்கும்
என்று சொன்னார்கள்.
அப்படித்தான் இருந்தது.

அவரிடம் நான் எழுதிய
கவிதை காட்டினேன்.
படித்துவிட்டு
அவர் சொன்னதில்…

ஒன்றைக்கூட நான்
படித்த ஆள் இல்லை என்பதால்
அதன்பின் காட்டுவதில்லை.

அவர் எழுதியதில்
ஒன்றிரண்டு
வார்த்தையை
வகையாய் திருடி
ஒரு முழு கவிதையை
எழுதி காட்ட…
அதற்கு அவர் சொன்னது
புரியவில்லை.
ஒரு நண்பர் சொன்னார்…

அவருடைய படைப்பில்
யாரேனும் ஏதேனும்
திருப்தியின்மை கூறினால்
உடனே அக்கவிதையை
சுக்கலாய் கிழித்து
எறிந்து விடுவாரென…

இன்னொரு நண்பர் இதை
உறுதி செய்ய
மற்றொரு நண்பர்
சத்தியமே செய்தார்.

நான் அன்று முதல்
எழுதி எழுதி
கிழித்து போட்டுவிட்டு
தேடுகிறேன்…

என் கவிதைகளையும்
2015′ இல்
போய் சேர்ந்த அவரையும்…

காகிதம் அருந்திய கனவின் குருதி

நெகிழ்ந்த துயிலின் கரையில்
உருப்புரியா ஒருதுளி கனவின்
நினைவினில் என் மனம்.

காற்றினுள் நிலவிய ஈரமாய்
விழியினில் தேங்கிய நீர்…

நிற்பதறியாது வழிந்து சுட்டது
இதயத்தில் நீ செழித்த நாட்களை.

உன் முகம் தெரிந்ததோ கனவில்?

பிரார்த்தனையின் வாசனையாய்
வாழ்ந்திருந்த காலத்தின்
லஹரி தொடர்ந்துவரினும்…

நீயற்ற என் வீட்டில் இருப்பதோ
நாகசீறலின் வலியூட்டும் அச்சங்களே.

சாலைமர நிழல்களும் இசையும்
வாய்த்த புத்தகங்களின் சகபகிர்வில்
திருமணத்தில் ஒருவரான நம்மை…

அன்றொரு அறையில் சிலரின்
காகிதமும் குச்சிப்பேனாவும்
ரத்தென்று சொல்லிவிட்டன.

உயிரின் மீது உலைகள்
தாவி நின்று கொதிக்கின்றது.

அசையாது கிடக்கின்றேன்
வெண்ணிற பருத்திப்படுக்கையில்.

கொலையுறும் மழலை போல்
விபரமற்று துடிக்கும் மனதுக்கு
தெரியவேயில்லை…

கண்ட கனவில் உன் முகமும்
உன் உடையும் உன் சூடும்…

எழமுடியாது தவிக்கும்
சுடப்பட்ட குதிரையென
துணை நீங்கிய மனம்
தனித்துத்துடிக்கிறது விரிப்பினில்.

நகங்களில் சிக்கிக்கொண்டு
வீறிட்டு அழும் அந்த கனவை
என் செய்ய என் தோழியே?

கனவின் இருள் (அ) இருளின் கனவு

கனவின் கடைசி புள்ளியில்
உன் முகம்.
அப்போதும் நீ
வெறுப்பாய் பார்த்தாய்.
கலைந்து எழுந்தேன்.

இன்னும் கொஞ்சம் நீடித்தால்
சமாதானம் வந்திருக்கலாம்.
விழிப்பு தட்டி எழுந்து
அது அதிகாலையாக
இருக்க ஆசைப்பட்டேன்.
இல்லை ஒரு மணிதான்.

தூக்கம் போயிற்று.
நீ தூங்குவாய்.
உனக்கு கனவுகள் வராது.

வந்தாலும் பிரித்தறியாது
உன் வெள்ளை மனம்.
நம் பிள்ளைகள் இப்போது
உன் மீது கால் போட்டு
அயரும் வேளையும் கூட.

தலையணை சுத்தமாய்
சற்று உயரம் வேண்டும்
படுக்கை களையக்கூடாது
இதில் உன் கவனம் அதிகம்.

இனி நீ வரவே மாட்டாய்
என்பதை பாசு அன்று
எனக்கு உறுதி செய்தான்.

அன்று முதல் இப்படித்தான்
ராக்காலங்கள் சீழ் பிடித்தது.
இந்த கவிதையை
யோசித்துதான் எழுதினேன்.

நேரம் கழியட்டுமென்று
2 மணியும் ஆயிற்று.
இனி உறங்கலாம் நான்.

கைவசமுண்டு
சொல்லொண்ணா களைப்பும்
உன் பழைய புடவையும்.

நான் அவள் வாட்ஸாப்

திஸ் இஸ் மாய் வாட்ஸாப் நம்பர் பேபி என்று மிலா குல்கர்னி கொஞ்சலாய் என்னிடம் சொன்னபோது…
எனக்கும் அது ஒரு நிலாக்காலம்.

தொழில் முறை சார்ந்து தொலைபேசியில் முகம் காணும் தேவைகள் அற்று தொழிலோடு நட்பும் பாராட்டி தகவல்கள் பகிர்ந்த காலம். பேசி களித்த காலம்.

அவள் சொன்ன வாட்ஸாப் ஆப் என்பது முதலில் என்னவென்றே எனக்கு தெரியாது.

கம்ப்யூட்டரில் ஜிமெயில் ஓரத்தில் தக்குனூண்டு ஸ்க்ரீனில் சாட் செய்யும் பொன்னான நாட்கள் அவை.

அந்த சாட்டில் போட்டோ வீடியோ என்று ஒலியும் ஒளியும் அனுப்பவோ ,கேட்கவோ முடியாது. ஆனால், ஆகையால் வாயுள்ள பிள்ளை பிழைத்து கொண்டிருந்தார்கள்.

என் நண்பன் காமாட்சியிடம் இந்த வாட்ஸாப் பற்றி கேட்டதும் துல்லியமாக சொல்ல ஆரம்பித்தான். ஆரம்பிக்கும் முன் இப்ப அது எதுக்கு உனக்கு என்று மறக்காது கேட்டான்.

குல்கர்னி பற்றி சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு நானும் அவ உன் தங்கை மாதிரிடா என்பதை நாசூக்காக பவ்யமாக சுருக்கென்று அவன் மனதில் குத்தும்படி சொன்னேன் அவன் புகை அரும்பும் சின்ன காதுக்குள்.

உனக்கு இங்கே இருக்கிற வடமதுரைக்கு போக வழி தெரியாது உனக்கு இவள் எப்படிடா பழக்கம் என்று ஆரம்பித்து பிராண்ட ஆரம்பித்தான்.

ஒரு நாள் மாலையில் எல்லாவற்றையும் அவனிடம் உடைத்து சொல்லி விட்டு எப்படியும் எனக்கு அவளை கல்யாணம் பண்ணிட்டா போதும் என்று முடித்தேன்.

அப்ப ஒரு ஸ்மார்ட் போன் வாங்கிறுவோம் என்று அவன் கூறியதும் வயிற்றில் லேசாய் புளி கரைத்தது.

விண்டோஸில் புலியாகவும் லினக்ஸில் கழுதைப்புலியாகவும் வலம் வந்த எனக்கு அண்டிராய்டு என்ற சொல்லே புதிது.

கூடவே அப்ளிகேஷன், ப்ளேஸ்டோர் என்றெல்லாம் சொல்ல… இரு முதலில் போன் எவ்ளோ என்றதும் அது ஆவும் 12000 ரூவா வரைக்கும் அப்படியே நெட் போட்டோம்னு வச்சுக்க எல்லாத்தையும் இழுத்து போட்டு பாத்துடலாம் என்றான்.
இழுத்துப்போட்டு என்று சொல்லும்போதே அவனுக்கு எச்சில் தெறித்தது.

இரவில் தூங்கும்போது எனக்கு இது ஏதோ வினையில் முடியக்கூடும் என்ற பயம் மிரட்டி கொண்டே இருந்தது.

குல்கர்னியின் அந்த தேன் குரல் காதில் கேட்டுக்கொண்டே இருக்க முடிவில் போன் வாங்க முடிவெடுத்து விட்டேன்.

நான் ஒரு கல்லூரியில் லேப் அசிஸ்டெண்ட். கல்லூரியில் வேலையே பார்க்காது இருந்தாலும் சம்பளம் வந்துவிடும். மூக்கால் அழுதுகொண்டே ஏழாயிரம் ரூபாயை அந்த சைனா போனுக்கு தாரை வார்த்தேன்.

அதில் என்னவெல்லாமோ டவுன்லோட் செய்து இறுதியில் வாட்சப் அப்ளிகேசனை ஐகான் மூலம் முன் திரையில் கொண்டு வந்து நிறுத்தினான்.

சூப்பர்டா மாப்பிளே.. இனி அசத்தல்தான். இப்ப நீ அவளுக்கு ஒரு ஹாய் சொல்லு… என்ன போன் னு கேட்டா ஆப்பிள் னு சொல்லு என்றான்.

ஆப்பிள் னா?

அது ஒரு ஸ்மார்ட் போன். அது வாங்கற காசுக்கு உன் தாத்தா மூணு சென்ட் நிலம் வாங்கிடும்… பொத்திட்டு நான் சொல்ற மாதிரி அவளுக்கு மெசேஜ் அனுப்பு.

குல்கர்னி….

அவளோடு பேசிக் போனில் பேசியது உண்டு. ஹிந்தி தாய் மொழி. எப்படியும் அவள் அரைகுறை ஆங்கிலத்தில் பேசி விடுவாள். இரவில் பாட்டு பாடுவாள்.

ஹிந்திப்பெண்கள் அனைவரும் பாடி விடுகிறார்கள். இனிய குரல். எனக்கோ இளையராஜாவை விட்டால் வேறு ஒன்றும் தெரியாது. எங்கள் ஊர் டீக்கடை, தியேட்டர் எங்கும் தமிழ்ப்பாட்டுதான்.

குர்பானி, மேரே நாம் ஜோக்கர், ஷான்,டிஸ்கோ டான்ஸர் இப்படிப்பட்ட வெகு சில படங்கள் மட்டுமே நான் பார்த்தது உண்டு. தியேட்டரில் மூன்று மணி நேரத்தில் இரண்டு தடவை மூச்சா வந்து விடும். அதுவும் ரிலீஸ் ஆகி பெரியகுளம் வருவதற்குள் பாவம் ரீல் பெட்டிக்கு மூச்சு திணறி விடும்.

இந்த ஷாருக்கான், சல்மான்கான் வந்ததும் கொஞ்சம் பரவாயில்லை.

அவள் ஒருநாள் இரவு ஏதோ ஒரு பாட்டை பாடிக்கொண்டிருக்கும் போது சற்றும் அர்த்தம் புரியாமல் போனை காதில் வைத்து எரிச்சலை அடக்கிகொண்டு கேட்டேன்.

அவள் பாடி முடித்ததும் ஹௌ இஸ் ஸ்ரீ? என்றாள்.

வாவ்…சூப்பர்ப்…

(இந்த வார்த்தையை காமாட்சி சொல்லி கொடுத்து இருந்தான். அப்பப்ப இதை சொல்லிட்டே இரு. பிக்கப் பண்ணும் போது இதுவெல்லாம் முக்கியம். மார்வலஸ், பெண்டாஸ்டிக் கூட நடுவில் போட்டுக்கோ)

தேங்யூ டார்லிங்…

டார்லிங்… டார்லிங்… இந்த வார்த்தையை அவள் சொல்லிக்கேட்க என்ன நான் இன்னும் என்ன வேண்டுமானலும் செய்யலாம்.

உங்களுக்கு பிடிச்ச பாட்டு சொல்லு ஸ்ரீ.
பாடறேன் என்று (இங்கிலிஷ்) கேட்டதும்
வாய் உளறி பால்ய நினைவில் மெஹபூபா மெஹபூபா தெரியுமா என்று கேட்டதும்தான் நாக்கை கடித்து கொண்டேன்.

அவளும் ஓ…நைஸ் சாங் என்று என்னவோ ஒரு மெஹபூபா பாடினாள்.
வாழ்க ஹிந்தி பாடல்கள்.

வாட்ஸாப்.

எண்கள். தகவல்கள். படங்கள்.குரல்கள்.
ஒழுங்காய் தலை கத்தரித்து டை அடித்து விட்டு சில பல போட்டோக்கள் அனுப்பினேன். பரிமாறி கொண்டோம்.

ஒருநாள் அவளிடம் என் காதலையும் சொல்லி நாங்கள் திருமணம் வரை சென்றோம்.

பின்னர் பெண்களுக்கே உரிய சில பிகுவை அவள் செய்து முடித்து கொண்டதும் முடிவில் ஏற்று கொண்டாள். நாளொரு வண்ணம் பொழுதொரு போனுமாய் ரியல் தம்பதி போலவே வாழ ஆரம்பித்தோம்.

அவள் அனுப்பிய செல்ஃபி படங்களில் நான் மெய் சிலிர்த்து காமாட்சிக்கும் அனுப்பினேன். பொறாமையில் வெந்து சாகட்டும் என்ற எண்ணத்துடனே…

உன் அண்ணி எப்படிடா? அந்த முகத்தை பாரு. அப்படியே சின்ட்ரெல்லா மாதிரி.

நீ சின்ட்ரெல்லாவை நேரில் பார்த்து இருக்கியா?

இல்லை…

இருக்கட்டும். அவளும் நீயும் இங்கிலிஷ் அரைகுறை… எப்படிடா மிச்ச காலத்தை ஓட்டுவே.. பே பே னு எப்படி பேசவே?

இந்த இடத்தில் என் விஞ்ஞான மூளையை பயன்படுத்தி சில ட்ரிக்ஸ் கண்டுபிடித்து இருந்தேன். அவளிடமும் அது பற்றி பேசி இருந்தேன். அதுவெல்லாம் நண்பனிடம் சொன்னபோது அசந்து விட்டான்.

6 மாசம் போதும்டா… அப்பறம் எந்த மொழியும் பேச முடியும்.

குல்கர்னி போனில் வந்த போதெல்லாம் பேபி, டியர்,டார்லிங், ஸ்வீட்ஹார்ட்,மேரே ஜான்… இன்னும் என்னென்னவோ சொல்லி என்னை அழைப்பாள்.

கடைசிவரை என் பெயர் என்பது அவள் வாயில் வரவேயில்லை. ஒருமுறை மிகவும் துன்புறுத்தி அவளை சொல்ல வைக்கும்போது அவள் சொன்னது… சரி அது வேண்டாம் இப்போது.

அவள் தன் உணவு, உடை, கலாச்சாரம் என்று பலவும் பேசுவாள். நானும் என் பங்குக்கு நெட்டில் கிடைக்கும் சகல ஜாதி விஷயங்களையும் போர்வேர்ட் செய்து விடுவேன். தமிழன் லேசான ஆள் இல்ல.

வாட்ஸாப்பில் பேசும் பாவனைகள் என்பது மிகவும் முக்கியம்.

நாம் டிவியில் வடிவேலு ஜோக்கை பார்த்து ஸோன்பப்டி சாப்பிட்டு கொண்டு இருந்தாலும்… வாட்ஸாப்பில் எதிர்முனை நபர் அழுது புலம்பி மூக்கு சிந்தினால் நாமும் சிந்த வேண்டும். முடிந்தால் பலமாய் சிந்த வேண்டும். இன்னும் முடிந்தால் இதற்கிடையில் சில கார்டுகள் அனுப்ப வேண்டும். அதுவும் வேலை வெட்டி இல்லாத பலர் விதம் விதமாக வரைந்து வைத்து உள்ளனர். நெட்டில் கிடைக்கும் அதை அள்ளி விட வேண்டும்.

இந்த எமோஜி என்னும் பொம்மை போட தெரிந்தால் போதும். அதுக்கு மார்க்கெட்டிங் லெவல் வேறு. பெண்களை ஆண்களும் ஆண்களை பெண்களும் இப்படி சென்டிமென்டில் தாக்கி வறுத்து எடுக்க யூட்டுப்பில் பல ரகத்தில் யோசனை சொல்பவரும் உண்டு.

பலவீனமான நேரத்தில் நேக்காய் நழுவி ஓடவும் வேண்டும். அதற்கும் பல உத்தேசமான பொய்கள் இருக்கிறது.

நாங்கள் தம்பதியை போல் பேசும்போது அவளிடம் நச்சரிக்கஆரம்பித்தேன்.
எப்போ புனே வரட்டும் என்று கேட்க ஆரம்பித்ததும் அவள் கிட்டத்தட்ட ஒரு ஏழு மாதம் கால அவகாசம் கேட்டாள்.

அதற்கென்ன… அதுவரை நாம் இப்படி பேசுவோம் என்று சொல்லிவிட்டு நான் பேசிக்கொண்டு இருந்தேன். இருந்தாள்.

நான் அப்போதே சுதாரித்து இருக்க வேண்டும். விதி. விட்டு விட்டேன்.

கதை முடிந்தது.

இந்த கதையும்தான்.

வழக்கம்போல் என் அண்ணன் தெய்வம். மறுக்க முடியவில்லை என்று ஒரு சேட் பையனுடன் நடந்த நிச்சயதார்த்த போட்டோவை அதே வாட்ஸாப்பில் எனக்கு அனுப்பி இருந்தாள்.

வாழ்க வளமுடன்.

எங்கிருந்தாலும் வாழ்க. குயிலை பிடிச்சு கூண்டில் அடைச்சு… பாடி முடித்தேன். எத்தனை பேருக்கு பாடி இருக்கிறேன். பழகின ஒன்றுதானே இதுவெல்லாம்.

கல்யாணம் ஆகி அவளும் என்னை மறக்காமல் ப்ளாக் செய்து விட்டு போய்விட்டாள். இரண்டு வருடம் ஓடி விட்டது.

நேற்று நான் என் போனை ரீசெட் செய்து பின் வாட்ஸப் அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் புதுப்பித்தபோது ஆஹா… மிலா குல்கர்னி. கள்ளி… அவளும் செய்திருப்பாள் போலும்.

அவள் முகம் மட்டுமே பார்த்த எனக்கு அதிர்ச்சி. கொஞ்சம் உப்பி. மேடுகள் திசை மாறி. கையில் ஒரு குழந்தையுடன்.

என் நண்பனுக்கு அந்த படத்தை அனுப்பி கேட்டேன். எப்படிடா இவ இப்படி மாறிட்டா?
நான் இன்னும் அப்படியேதானே இருக்கேன். இவ முகம் கூட கொஞ்சம் கருப்பா அடையாளமே மாறி இருக்கா? எனக்கு அனுப்பின அந்த பழைய போட்டோவில் இப்படி இருக்க மாட்டாளே?

விடுடா. அப்போ அவ தன் போட்டோவை கொஞ்சம் மாத்தி அனுப்பி வச்சு இருப்பா.
அதுக்கும் இப்ப நிறைய அப்ளிகேஷன் இருக்கு. அது வச்சு மாத்தி இருக்கலாம்.

டேய் காமாட்சி….

சொல்றா…

தப்பிச்டேண்டா நான்.             🎃🎃🎃🎃🎃

ஒரு பூச்சியின் கதை

இந்நகரத்தில் நீ எங்கோ
இருக்கிறாய் என தெரியும்.

அது சந்து சாலை முக்கு என
பிரிந்து நீள்கிறது.

வசியங்களின் உரை பழகி
கற்பை தொலைப்பது போல்
இங்குதான் நீயும்
ஒளிந்து ஒளிந்து
கவிதைகள் எழுதுகிறாய்…

நகரம் உனக்கென்று
வடுவாய் பதிந்த வாழ்வையும்
கிறுக்கு பிடித்த கனவுகளையும்
ஒதுக்கி தந்து உள்ளது.

நீ அதனுள் இருந்து
ஒழுக்கத்தின் மொத்த ஆபாசமாய்
வாழ்ந்து வருவது குறித்து
உனக்கே தெரியும்.

போதித்த நம்பிக்கைகள்
உன்னை கைவிட்ட பின்னும்
நீ அதை விடவில்லை
என்பதும் தெரியும்.

உன் வரிகளை நான்
படிக்கும்போது
நீ
எட்டுக்கால் பூச்சியாக
மாறியிருப்பாய்
என்றே தோன்றுகிறது.

நகரத்தின்
எல்லா சுரங்கங்களிலும்
கவனித்து கடக்கின்றேன்.

சொற்களில் இருந்து
ரத்தம் குடித்த பூச்சியின்
சிறிய கூடு எங்கே எனத்தேடி…