கைவிரல் கோர்த்து
கண் வழி நோக்கி
என்னதென்று கேட்கிறாய்
கொண்ட காதல் குறித்து.
இன்னதென்று காட்டிட
உணர்வுகட்கு ஏதடி
காட்சி ஊடகங்கள்?
என்றேனும் உனக்கும்
உள்ளுள் தென்படலாம்
பெயரறியா படத்தின்
இறுதி ரீல் ஒன்றில்…
பகலில் ஏனோ எரியும்
மெழுகுவர்த்தி காண.
தவறி விழும் எனது
பழைய கண்ணாடியை
நீ தாவிப்பற்றுகையில்…
ஈரம் காயாத தரையில்
என் கால்தடம் மீது
பிறர் காலணிகள்
காண நேர்கையில்.
என் எச்சில் படர்ந்த
தெர்மோமீட்டரை
அலம்பி துடைக்கவும்
நீர் வழியும் விழிகளில்.
நானற்ற இரவொன்றில்
எனது தலையணையில்.
Category Archives: உணர்ச்சி உலாவல்
நடையின் போது…
நான்கு தெருக்களை
சுற்றி வந்தால்
ஊரை தெரிந்து விடலாம்.
பெரிய ஊர் அல்ல… எனினும்
அது என் பிம்பங்களை
தாங்கியது தனக்குள்.
அகலமான தெருக்களில்
நான் ஓரமாக செல்வேன்
யாரையேனும்
நினைத்துக்கொண்டும்
அவரிடம் பேசிக்கொண்டும்.
பெரும்பாலும் பேசுவது
சுந்தர ராமசாமிதான்…
அவர் மறைந்துவிட்டார்.
இருப்பது போலவே இருக்கும்.
விஷயங்கள் ஒன்றுமில்லை
எனும்போது மௌனமாய்
காலாற்றி போவோம்.
நாகர்கோவிலில் அவரை
சந்திக்கும்போதெல்லாம்
கேள்விகள் இருந்தாலும்
எதுவும் கேட்க மாட்டேன்.
பூஜ்யமாய் இருப்போம்…
உரையாடல் எதுவுமின்றி
திரும்பி வருகையில்
பயணம் களைகட்டும்.
அன்று
கேட்காத கேள்விக்கெல்லாம்
இன்று கிடைக்கிறது பதில்கள்.
நடக்கும்போது எழுதியது
நீயும் நானும்
பேசிக்கொண்டிருந்தோம்.
அவர்கள் நம்மை சுட்டி
அவனும் அவளும்….
என்றதும் நீ
அவர்களை காட்டி
நம்மைப்பற்றியோ என்றாய்.
அவர்கள் போனதும்
நாமும் போய் விட்டோம்.
குருவிகள் வந்தமர்ந்தன.
*****
ஒருவேளை அப்படியானால்
ஒருவேளை இப்படியானால்
இப்படியாகும்போது
அப்படிச்செய்தால்
அப்படியாகும்போது
இப்படிச்செய்தால்…
நன்கு யோசித்த பின்னரே
நன்கு தூக்கம் வந்தது
ஒரு முடிவும் தெரியாமல்.
*****
லல்லிக்குட்டி
ஒவ்வொரு மழையின் போதும்
வானம் ஏமாறட்டுமென்று
ஒளித்து வைப்பாள் வாளிகளை.
*****
நீங்கள் மகிழ்ச்சியாக
திரைப்படம் பார்க்கின்றீர்.
உன்னதமாக அரட்டையும்
வம்பும் பேசுகின்றீர்.
விழித்ததும் இன்னும்
சோம்பலாக உணர்கின்றீர்.
உங்கள் பொழுதுகள்
அனாதையாய் சாவதை
களங்கமின்றி ரசிக்கின்றீர்.
நீங்கள் திருப்தியாக இருக்கின்றீர்.
உங்களை கவனிக்கும்
நானும் திருப்தியாக உள்ளேன்.
*****
குளிக்கும்போது எழுதியது
உன்னைப்பார்த்து
பேச வேண்டும்
என்று தோன்றியது.
வந்தேன்.
பேசினோம்.
கிளம்பினேன்.
போகும் வழியில்
புரிந்துகொண்டேன்
தவறுகள் இப்படித்தான்
துவங்கும் என்பதை.
*****
ரொம்ப நாளாய்
மனதில் அரிக்கிறது
ஏதாவது ரொம்பப்புதிதாய்
படிக்கவேண்டும் என்று.
ஆனால் எதுவென்றுதான்…
*****
கடலெல்லாம் பருகி விட்டேன்
சொல்லிக்கொண்டிருந்தது
தொட்டிக்குள் மீன்குஞ்சு.
****
இதைச் செய்வோம்
அதைச் செய்வோமென்று
நம்பி நம்பி வாங்கிய
கல்விப்பட்டங்களை
அரித்து தின்றது
இட ஒதுக்கீடு.
****
சோதனை
இந்த கடவுள்
இப்பொழுதெல்லாம்
என்னை விட்டு
அகல்வதேயில்லை.
அச்சத்தில் நடுங்கி
கைகளை பற்றியவாறே
மனம் பதறித்துடித்து
பின்தொடர்ந்து வருகிறான்.
உணவும் நீரும் வழங்கினாலும்
பறிகொடுத்த உணர்வை
அவன் விடுவதேயில்லை.
திண்ணையில் தெருவில்
மொட்டைமாடியில் சந்துக்களில்
நான் இருக்கும்போதெல்லாம்
பின்நிழலாய் தொடர்கிறான்.
கோவில் பக்கம் போனால்
அஞ்சி நடுங்குகிறான்.
தூக்கத்தில் உளறி
என்னையும் எழுப்புகிறான்.
வான் பார்ப்பதை தவிர்த்து
குனிந்த தலையுடன் அழுகிறான்.
அவன் விருப்பப்படி
எது வேண்டுமோ
அதை செய்ய
என்னால் முடியும்.
அவனோ சற்றும்
இரக்கமின்றி…
ஒரு மனிதனை
காட்டு என்கிறான்.
எங்கே சென்று நான் தேட..?
சாயங்கால மழைகள்
இருந்தும் இல்லையென்று
ஜன்னல் கம்பி பிடித்து
மொழியறியா ரோஸிக்குட்டி
சாலையில் கலையும்
வாகன ஒளிகளில் அலைகிறாள்.
அம்மாவின் புன்சிரிப்பு
முதுகெங்கும் மேய்ந்தாலும்
அப்பாவின் கனமே மனதெங்கும்.
அப்பா இன்னும் வரவில்லை
வரும்போது வந்துவிடுகிறது
சாயங்கால மழைகள்…
இன்றும் கிடைக்குமோ
பூந்திப்பொட்டலங்கள்?
கற்பனைப்படகுகள்
முட்டி மோதி விழுகின்றன
தூரலில் முளைத்திடும்
காற்று முட்டைகளில்…
அம்மா அள்ளிக்கொண்டு
போகிறாள் கூடத்திற்கு.
வாடைக்காற்று
ஆகாமல் போகிறது
ரோஸிக்கும் பூந்திக்கும்…
காதல்…. அதாகப்பட்டது,
நெகிழ்ந்த இரவென
விழுந்த உன் கூந்தலில்
ஒரு கணம் கமழ்ந்து
மணந்த மலரின் வாசனை.
உனது வெயில் குளம்
என் கால் நனைத்தது
அடர் பருவத்தில் இடி விழ.
சுவரற்ற வீடுகளில்
தடம் பதித்த உன் பாதம்
இதயத்தில் நீ நடக்கிறாய்.
கனவிலும் கேட்கிறது
உன் குரல்கள் மந்திரங்களாக.
அமிழ்தில் வற்றவில்லை
முதிர்ந்து வரும்போது
யாதும் உன் சொற்கள்.
பற்றலாம் கைத்தலம்
நிலவறிந்த ரகசியத்தின்
துருவில்லா தாழ் முறிக்க.
மன்மத மதத்தில்
கண்கள் எய்தன கணைகள்
பார்வைகள் சார்ந்தன.
இனி சந்திக்கட்டும்
கற்பூரக்கண்கள்
காத்திருந்த காதலில்
கவிதை பயிரிட.
கனவை குதறிய சொற்கள்
குதித்து வந்த அக்கனவில்
நீ எழுந்ததை மட்டும்
அது பாராமல் கலைந்ததும்
தென்பட்டது ஒன்றுதான்.
காதரகின் கதுப்பு முடிகளில்
காற்று நெய்த வளையங்கள்.
பேசுதல் அற்று கிடந்தோம்
உயிரோடு உயிராக.
இரவின் சிறகுகள்
கனவோடு கிளர்ந்து
பனியை தைத்தவண்ணம்.
இது இன்னொரு கனவா?
உன் கனவில் நானா?
என் கனவில் நீயா?
ஓடி ஓடி சுழன்றது ஒன்றுதான்.
வார்த்தைகள் சிந்திப்போட்ட
முடிந்த கவிதையின்
முற்றுப்புள்ளியின் சோகம்.
உன் இமையால் பெருக்கு.
போகட்டும் இக்கவிதை
தோளில் சாய்ந்து கொள்ளடி.
முதல் நாள் காதல்
மீண்டும் வரட்டுமென்று
வெளியில் துள்ளும் மனம்
கன்றுக்குட்டியாய்…
கலைத்த பின் உடைக்கவும்
sparisanart.wordpress.com
கடக்கவேண்டும்
புகைச்சலாக இருக்கிறது
மனமும்
மனமற்ற மனித சீலமும்.
அறுந்த பின் விட்டுப்போன
எதற்கோ யாருக்காகவோ
என்னையறியாது…
எனக்கென்றே நம்பி
தேடி ஓடி செல்கையில்
எப்போதும் இடறியது
ஒன்றை இன்னொன்று…
கிடைத்த எதுவும்
மனத்துளைக்கு மருந்தல்ல…
இந்த வாழ்வினில்
இப்படித்தான் நான்
மெல்ல மரணித்தேன்.
இருப்பினும் இன்னும்
அவர்கள் நம்புகின்றனர்…
என்னுள் ரகசியமென்று
எதுவோ இருப்பதாக.
You must be logged in to post a comment.