Category Archives: ஆழ்குமைவு

பழைய நண்பனின் மரணம்

இன்று அவன் என்
நினைவுக்கு வந்தான்.

அவனும் அவனோடு நானும்
இனி எப்பொழுதும்
வெறுமையான சிற்சில
நினைவுகள் மட்டுமே எனக்கு.

அவனை மரணமென்பது
ஈர்த்து கொண்டபின்தான்
எதுவும்
எப்போதும் எங்கும்
சில நினைவுகள் மட்டுமே
என்பது புரிந்தது.

காற்று தன் முகவரியை
தொலைத்து இன்னும்
தேடிக்கொண்டே இருக்கிறது.

நதி இன்னும் தன்
வீட்டை கண்டறியவில்லை.

தலை தொங்கிய ஆகாயமோ நிமிரவேயில்லை.

சப்தத்தில் ஒடுங்கிய
ஓசைக்குள் இருக்கிறது நினைவு.

அவன்…
இப்போதும் அலைகிறான்
என் நினைவிலிருந்து
தெருக்களை கடந்து
சாலைகள் தாண்டி
கடற்கரையில் கால் நனைய…

திக்குமுக்காடும் மரணம்
தத்தளித்து யோசிக்கிறது…
எப்படி கொல்வது ஒருவரை என.

நீதிபதி சிந்திய மைத்துளி

பட்டப்பகலில்
எழுதிய கவிதை
பட்டப்பகலில் மரித்தது.

மரித்த அக்கவிதையை
ஊர்க்குருவிகள்
பட்டப்பகலில் உண்டன.

கவிதை உண்ட
குருவிகள் பறந்தன
பட்டப்பகலில்…
பறந்த குருவிகள்
முட்டையிட்டன
பட்டப்பகலில்…

பொறிந்தன முட்டைகள்
பட்டப்பகலில்…

பகல் குஞ்சுகள்
பறந்தன வெளியில்
பட்டப்பகலில்…

அதனை
பட்டப்பகலில் பார்த்தவன்
எழுதினான் கவிதையொன்று
பட்டப்பகலில்…

பட்டப்பகலில்
எழுதிய கவிதை
பட்டப்பகலில் மரித்தது.

நம்பிக்கை என்பது சாகும் உண்மை

பசித்த வயிற்றுடன்
சுற்றிலும் பார்த்தான்
பார்வையில் பட்டன
பற்பல தாவரம்.

ஒன்று ஆல். ஒன்று அரசு
ஒன்று வேம்பு.
அவனுக்கு வேண்டிய
ஒன்றோ…
நாற்றங்காலாய் இன்னமும்
இருந்தது.

இதை எழுதிய
ஞானக்கூத்தன் இன்றில்லை
என்றாலும் கூட

அரிக்கிறது உள்ளங்கால்.
அவர் பார்த்த
நாற்றங்கால் நிலத்தில்
அடுக்குமாடி குடியிருப்பு.

தீளா மற்றும் கெய்க்கா

மாடியில் இருந்து காண
அக்கூடு நன்கு தெரியும்
நாரையின் கூடு
அம்மா அப்பா
மூன்று குஞ்சுகள்.

கண் விழிக்கா அவை இடும்
இரைச்சல் சொல்லி மாளாது.
பசிக்கும் பாசத்திற்கும்
கனன்று சுழலும் கூச்சலில்
அப்பா நாரை
தவ்வி தவ்வி மகிழும்.

அம்மா நாரை கொணரும்
மீன்களுக்கு போட்டி.
ஊட்டியது போக எஞ்சியது
சாலையில் தெறிக்கும் சிலர்
தலையிலும் சிதறும்.

வளர வளர கிளைகளின்
ஓரங்களில் நுனிகளில் நின்று
உலகை அவதானிக்கும்.
சின்னஞ்சிறு
கருஞ்சிறகு கோதி
படபடத்து பார்க்கும்.

ஒருபோதும் அதனை மரம்
ஏளனம் செய்வதில்லை.
மெல்ல மெல்ல வளர்ந்து
ஒருநாள் தாயுடனும்
ஜிவ்வென்று காற்றில்
பறந்து கலந்தது.பறந்தது.

அம்மா அப்பா
முதல் குஞ்சு (தீளா)
மூன்றாம் குஞ்சு (கெய்க்கா)
சிறகடித்து பறந்தே போயின.

இரண்டாம் குஞ்சா…
அதற்கு பெயர்
வைக்கும் முன்பே கீழே
தவறி விழுந்த அதை
அவன் கொண்டு
போய் விட்டான்.
அவன் பசிக்கு…
ஒரு வேளை பசிக்கு.

கைதி எண் 0000000

எனக்கு ஜாதி உண்டு
மதம் உண்டு.
இனம் நாடு கொடி உண்டு
பகை தேசம், பகைவர் உண்டு.
எனக்கு பெயர் உண்டு.
பலவிதத்தில் நீளமாய்
இலக்கங்கள் கூட உண்டு.
இதில் ஒன்றும் நானே
ஸ்வீகரித்ததல்ல.

சொன்னார்கள்.
சூட்டினார்கள்.
வழங்கினார்கள்.
பின் அனுப்பி வைத்தனர்.

எனது நிர்வாணம் அழகானது.
அதை மறைத்தார்கள்.

எனது காமம் நேர்மையானது
அதை சபித்தார்கள்.

எனது சிந்தனை கூரானது.
அதை மழுக்கினார்கள்.

எந்த பிழைப்புமற்ற என்னிடம்
வரிகள் பிடுங்கப்பட்டன
மானின் அடிவயிற்றில்
சிகை பிடுங்குவது போல.

வருடங்கள் செல்லச்செல்ல
சான்றிதழ் தந்தனர்
எல்லாக்கல்விக்கும்.
எல்லா அடிமைதனத்திற்கும்…

அடுக்கி வைத்தும்
துடைத்து வைத்தும்
காத்திருக்கிறேன்…

மரண சான்றிதழ் பெற.

தீக்குள் விரலை விட்டாள்

இருக்கலாம் நீ
என்பதற்காகவோ எனவென்றோ
பின் சுற்றும் சக்கரமாய்
காலங்கள் திணறின
அதிகாலையில் உன்
நினைவில் ஊர்ந்த மனம்.

ஆவல்களை இழுக்கும்
புதிரின் திமிராய்
நீ கொடுத்த தனிமை.

வெளிச்சம் நீங்கியது. நீங்க
இருளின் அகத்தில்
குடை சாய்ந்ததோ நான்.

வந்து வந்து பார்த்தாலும்
வாசலில் ஓங்கியடிக்கும்
உன் ஞாபகங்கள்
நனைகின்றன கண்ணீரில்.

உன் திசைகள் அறியாத
மனதின் மூப்பில் நீவும்
மரண ஆசைகள்.

இந்த உயிர் நின்று
தேம்புகிறது திண்ணையில்
கொடியென தரையில் கிடக்கும்
இறந்த நாயின் சங்கிலியாய்.

சுட்டு சுட்டு சுடும் தீ
விரலில் அல்ல. சொல்லில்.

தகரம்

எனது அறையின்
மேற்கூரை தகரம்
நல்ல நீளமானது.

தகரம் நளனைப்போல்
அஞ்சாது பரப்பி படுத்து
வானம் நோக்கி கிடக்கும்.

மார்ச் மாதத்து வெயில்
பச்சையாய் அதை எரிக்கும்.
அறையின் சூட்டில்
பழங்கள் கனிதலற்று வெம்பும்.

நவம்பர் பின்பனியில்
திகைப்பூட்டும் குளிரில்
சூனியக்காரியின்
நகம் உடைக்கும்.

மழைக்காலத்தில் நர்த்திக்கும்
தூரல்களில் இசைந்த மனம்
அன்றையக் காதலிக்கு
கவிதை செய்யும் அன்னமாய்…

எல்லாக்காலத்திலும் கூரையில்
பூனை தடதடவென்று
ஓடிக்கொண்டேயிருக்கும்.

பகலில் அதன் நிழலையும்
இரவில் அதன் வாசனையையும்
இனங்கண்டு துரத்தியபடி…

பருவத்தில் சபிக்கப்பட்ட
என் கனவுகளை போன்று…

பிசாசின் தனிமை

இறுதியில் அப்பிசாசு
தனிமை கொண்டது.

கடல்நுரையில் பூத்த
கனவுக்குள் முடிந்தது
பிசாசின் தேடல்கள்.

ஒரு சொல்லில்
உயிர் கொண்டு எழுந்து
மறு சொல்லில்
உயிர் மடியும் முன்னர்
அலைகிறது பிசாசு.

கடல் பள்ளங்களில்
உயிர் சிந்தியபடி
அவளுக்கென நிற்கிறது
ஏதேதோ சிந்தித்து…

இரவை பிளக்கும்
அவள் சொற்களை
கத்தரித்து நடுகிறது
பகலின் கன்னத்தில்.

அவள் மழையில்
நனைந்து
கடலோடு கலந்து
மிதக்கலாம் மேகமாய்
மலை முகடினில்
கண்ணீர் பெருகியோட.

பிசாசு கவிதைகளை
பாட்டிலில் அடைத்து
கடலுக்குள் எறிகிறது
இன்றாவது அவள்
இதை படிக்கட்டுமென.

சைக்கிள் பையனும் ஒரு காதலும்

அன்று பூங்காவில்
அமர்ந்து பேசியது
உதிரம் குடித்த
விஷபுற்கள் மீது போலும்.

நமது பிரிவு என்பது
அங்கு தொடங்கியது.

வழக்கமான காரணங்களே…
அம்மா,அப்பா..
மணமுடிக்கா அக்கா…

நீ பேசப்பேச
மனமோ மூடக்குளவியாய்
சுற்றி அலைந்தது
காதல் நினைவுகளில்…

ஓய்வின்றி உரைத்தாய்
பிரிதலின் நியாயத்தில்
புரிதலை உருவாக்க…

உன் வாக்கியங்கள்
எங்குமே முற்றுப்பெறவில்லை
முட்டி மோதியும்
குழம்பி தெறித்தும்
விழுந்து எழுந்து
உடைந்து உடைந்து
நொறுங்கி கொண்டிருந்தது.

அப்பூங்காவில் தனியே
சைக்கிள் பழகும் சிறுவனோடு.

உன் எந்தப்பார்வைக்கும்
அர்த்தம் தெரியாத எனக்கு
இனி என்ன என கேட்கும்
இந்தப்பார்வையை
புரிந்து கொண்டேன்.

சைக்கிள் பையன் போக
நீயும் எழுந்து செல்கிறாய்.

உன் பின்னே வருகிறது
என் காதல்
வழி தவறிய கோழிக்குஞ்சாய்…

சுவருக்குள் ஒரு வாழ்க்கை

வலி
மௌனமாய் இருக்கிறது.
கடலின் அடர்த்தியோடு
படர்ந்து நிலவுகிறது.

சுகங்களை அழித்து
பாறையாய் கனக்கிறது.
வலியின் உள்ளே ஒரு
தீவை உணர்கிறேன்.

தீவில் எங்கும்
நிற்காத எரிச்சல் மிகுந்த
அலைகள்
கரையை அரிக்கிறது.

வலி மரணத்தின் கண்கள்.
அதன் நோக்குதலில்
காற்று சாம்பலாகிறது.

மூச்சினை ஒடிக்கும்
கரங்களில் நான்
முழுமையாக இருக்கிறேன்.

என்னை நெகிழ்த்தி
சாபங்களில் திணிக்கிறது.
என் உலகத்தில்
சூறாவளியாய் பயணிக்கிறது.
வலி ஏதோ சொல்கிறது.

அதன் முள் நாக்குகள்
என் பெயரை
உன் தடத்தில் நிறுத்துகிறது.

நீ கடந்து போகிறாய்.