Category Archives: அரூபம்

அறையில் ஒரு பூனை

நிசப்தத்தில் திரியும்
அந்தப்பூனையின் நிழல்
யாரும் அறியாப்பொழுதில்
அறையிலிருந்து
தனித்து வெளியேறியது.

என் மனக்கண்களை
திருடிச்சென்ற அப்பூனை
சுவரற்ற வெளியில்
ததும்பும் நிழல் மீது
விருப்பமற்ற நேரங்களிலும்
அயர் உறக்கம் கொள்கிறது.

அறை இருளில்
தேடிக்கொண்டிருந்தேன்…

மனதில்
எங்கெங்கோ விழுந்திருந்த
அப்பூனையின் நிழல்களை.

ஆயினும், அப்பூனை
வருவதும் போவதுமான
கள்ளப்பயணங்களில்
எப்போதும் கவனமாக இருக்கிறது.
உதிரும் அதன் நிழல்களை
அவ்வப்போது
என் மனதில் கொட்டிச்செல்ல…

தூக்கமா_ கவனம்.

எழுதிய அசதியில்
உறங்கிப்போனேன்
தாளின் மீதே…

அதை
எவரோ கசக்கி எறிய
சிக்கிக்கொண்டேன்.

கோணல் கோணலாய்
புதிர் விடுத்த புதிராய்
தாளின் பாதைகள்
நீண்டு முடிந்து நீண்டன.

சொற்கள் ஒளிர்ந்து
உயிர் கிளம்பி ஓடின.
முன் வரியில் நின்றவை
பின் வரியில் தாவின.

ஒன்றன் அர்த்தம்
வேறொன்றில் செருகின.
பிடித்தும் இழுத்தும்
வரிசைப்படுத்த முயன்றும்
நிற்பது போல் நின்று
கால் வழி புகுந்து
முன் நின்ற சொற்களை
கடித்து விரட்டின.

எழுதிய கவிதை
தன்னைப்பிளந்தும்

தனக்குள் பரவியும்
எழுதிக்கொண்டே இருந்தது.

விழித்து பார்க்கையில்…

கவிதையின் கனவில்
நான் உறங்கியிருந்தேன்.

சர்ப்பம்

தப்பிப்பிழைத்த
இரவொன்று
இன்று வந்தது பணிபுரிய.

எனதறையில் உறங்கும்முன்
புஸ்ஸென்ற சீறல் ஒலி
கேட்டு முடிய
திக்’கொன்று
துயிலைக்கொன்றது.

புலன் அறிந்தது
சர்ப்பம்தான் அதுவென்று.
உறுதி செய்தபின்
நகர மறுத்த
கால்களின் கீழே
நெளிந்தது தரை…

மேற்கூரை ஆயிரம்
ஜவ்வரிசி விழிகளை
திறந்து மூடியது.
விளக்கொளிகள்
நீலமாய் ஒளிர்ந்தது.
அறையும் வளைந்து நெளிய
கொதித்த காற்றில்
எலிகள் செத்து விழுந்தன.

எனது பேனா அந்தரத்தில்
மகுடியாய் இசைக்க..

நான் தோலுரிக்கலானேன்.

தலைப்பை கவிதையில் தேடவும்

மனம் சலித்தது.
துயரம் கொண்டேன்.
யாதொரு பலனுமின்றி
நாட்கள் கழிகின்றன.

ஒவ்வொரு நாளும்
பாத்திரங்களை உடைக்கிறாய்.
புதிய பாத்திரங்கள்
செய்யவோ வாங்கவோ
எனக்கு கடினமாகிறது.

மீசை வளர்ந்த போது
உனக்கு பிடிக்கவில்லை
பாத்திரம் உடைத்தாய்.

கடல் அருகே வீடு
பார்த்தபோதும் நீ
பாத்திரம் உடைத்தாய்.

அசைவம் பிடிக்காது என்பதும்
சாப்பிட தெரியாது என்பதும்
வேறு வேறானவை என்றேன்.
மறுபடி உடைந்தது.

நாற்காலி சிலசமயம்
என்னிடம் பேசுவதுண்டு.

அப்பா அதில்தான்
அபானவாயு கழிக்கையில்
உயிர் பிரிந்தது.

நான் அதனோடு
பேசப்பேச உடைத்தாய்.
இனி பாத்திரம்
எதுவும் என்னிடமில்லை.

வாயற்ற உன் கோபங்கள்
என் மென்மையில்
கூர்தீட்டி உன்னை
ஏவி விடுகின்றன எட்டாத
என் பாதாளத்தில் இருக்கும்
உள்ளெங்கும் இருள் குடித்த
அண்டாவின் விலா ஓடிக்க…

நீயும் ஒடுகிறாய் உன்
மனதினை மீறியும் என்
சமிக்ஞைகள் எதிர்த்தும்…
இருள் உன்னை விழுங்கும்.

அப்போதும் நீ
வெளியேறும் பாதை என்பது

துக்கத்தில் ஓய்ந்த இந்த
நாற்காலி தன்னை மறந்து
தும்மும்போது மட்டுமே.

(Poetry can be dangerous, especially beautiful poetry, because it gives the illusion of having had the experience without actually going through it. ― Rumi)

அலையும் தெருக்கள்

தெரு தன் கண்களை
விரித்து விழுங்கியது.
வருவோர் போவோரை.

முதுகை தின்பதில்
அத்தனை இன்பம் அதற்கு.

போகும்வரை பார்த்திருந்து
அசைபோடும் வலியை
முதுகு சொல்ல சிரிப்பேன்.

தெரு நின்றும் நடந்தும்
உண்ணும் சாகபட்ஷிணி.

சில தெருக்கள்
தான் குருடென்று நம்பி
மலைத்துக்கிடக்கும் அனாதையாய்

அங்கெல்லாம் அரவமற்று ஓர்
கவிதை வாசல்தோறும் ஏறி
திண்ணைகளில் விளையாடி…

ஒவ்வொரு மர நிழலிலும்
தொலைந்த நினைப்பிலிருந்து

ஒவ்வொரு வரியாய்
வாசித்து..

வந்து வந்து
போகுமிந்த கவிதை.

கவிதை சொல்லி

நீங்கள் ஒரு கவிதையை
வாசிக்கின்றீர்கள்.
சொற்களாக தெரிகிறது.
அர்த்தம் கேட்கின்றீர்கள்.

நான் விழிக்கிறேன்
நீங்கள் எங்கு
வாசித்து முடித்தீர்களோ
அங்குதான் என்னையே
நான் மறந்திருந்தேன்.

எழுதியவன் தன்
ஆவியில் துளைத்த
சொற்களை திறந்தவன்.
நானோ ஒலிபெருக்கி.

அர்த்தங்கள் தம்மை
இழக்கையில் மட்டுமே
அது கவிதையாகிறது
என்ற குறிப்புடன் மட்டுமே
உங்கள் பின்னால் நான்
ஓடி வருகிறேன்…

நீங்கள் இன்றும்
சொற்களோடு மட்டுமே
என்னை வரவேற்கின்றீர்.

காற்றை வெட்டிப்பிளக்க
என்ன செய்வது நான்?

ஒளியில் சில தூசிகள்

உங்கள் கலவரத்தை
கண்டு அச்சமுறுகிறேன்.
நீங்களே உங்களை
வழிபடும் விரதத்தை
கண் மூடாது பார்க்கிறேன்.

உங்கள் இறந்தகாலத்தில்
எப்போதும் புதைந்தவண்ணம்
தொழப்படும் உம் ஆசையின்
துடிப்பில் சரிகிறேன்.

சின்னஞ்சிறு நம்பிக்கைகள்
உங்கள் முகத்தை திறக்கிறது.
சின்னஞ்சிறிய துரோகங்கள்
இதயத்தில் புளிப்பூட்டி மூடுகிறது.

கனவை அறிவு விரிக்கிறது.
ஆவலை நினைவு விரிக்கிறது.
உங்கள் பாதாளங்களில்
நிலையற்று அலையும் தெய்வங்கள்
தங்களையே சபித்து கொண்டன.

ஒவ்வொரு நாளுக்காகவும்
உங்கள் முகத்தில் நீங்களே
அறைந்துகொள்ளும்
இறுதிக்காட்சியில்…

உலர்ந்து போன தத்துவங்கள்
மரணிக்கும் ஓசையில்…

உற்சாகமான உங்களின்
அடுத்த துதி கேட்கிறது.

ஆவியிடம் பேசுவது எப்படி?

அந்த ஆவியை அழைக்க
இந்த இரவு போதுமானது.

கேட்க வேண்டிய கேள்விகள்
ஒய்ஜாபோர்டு மெழுகுவர்த்தி
எல்லாம் சேர்த்தாயிற்று.

பாட்டனார் வஞ்சகம் சூது
போர் குணம் அற்றவர்
அவரையே அழைப்போமென்று
முடிவும் செய்தேன்.

அவரின் பழைய ஓவியமும்
பக்கத்தில் இருந்தது.

படையலாக சில
ரொட்டித்துண்டுகள் இருந்தன.

நீரிழிவில் அவஸ்தைப்பட்டவர்
என்பதால்…
நாட்டு சக்கரை.

மந்திர உச்சாடனம்
அதிகமில்லை என்றாலும்
தாத்தா உக்கிரமாகிவிட்டால்?
என்ற பயம் வர..

கந்த சஷ்டி புத்தகமும்
கையில் வைத்துக்கொண்டேன்.

நிறைய கேள்விகள் இருந்தன…

தேர்தல்.
காலாண்டு பரிட்சை.
அம்மாவின் தொலைந்த
கால் கொலூசு.
அப்பாவின் சிகரெட் பழக்கம்.
தங்கை மார்க் வாங்கும் அதிசயம்…

மிக முக்கியமாக
கேட்க வேண்டியது
எதிர்வீட்டு புவனாவை
காதலிக்க வைக்க ஒரு உபாயம்…

குப்பியில் அடைந்த
மாங்கொட்டையாய்
பனித்த ஒரே இருளுக்குள்
இவை நடந்தேயாக வேண்டும்…

எல்லோரும் தூங்கி தொலைய
காத்திருக்கும் பொழுதில்
எங்கேயோ சில பாடல்கள்…

புவனா இருந்தாள்.
புவனா மலர்ந்தாள்
புவனா பறந்தாள்.

கனவு.

சட்டென்று தெரிந்த
மீசைப்பாட்டனாரின்
உக்கிர உருவம் காண…

வெளுத்துக்கிடந்த நகரம்.

ஆயிரம் எறும்புகள்
ரொட்டியிலும் சக்கரையிலும்.

இன்று கணக்கு பரிட்சை.

அதிர வருவதோர் நோய்

ஒரு சில சமயங்களில்

அல்லது

ஒரு வருடத்தில்
ஏதேனுமொரு நாளிலாவது

முற்றிலும் அல்ல.
ஆயினும்…
தடுமாற்றம் இல்லாது போயினும்
ஓரிரு அர்த்தத்தில் சிக்கிய

என்றோ எப்பொழுதோ
யாரோ எழுதிய கவிதையின்
வட்டமான சின்ன முகம்
நிலவாய் உதித்து விடுகிறது
அத்தனை அல்லல் நடுவிலும்.

குற்றுயிரோடு அலையும்போது
பிடுங்கி நட்டு வைத்த செடியாய்
அதுவும் ஒன்றை சொல்கிறது.

அது சூட்சுமமல்ல.

எனினும்…
மனதிலிருந்து தள்ளிப்போடுகிறது
வாழ்க்கையை எனக்காக.
முடிந்த மட்டிலும்…

குளிர்ந்த ஆகாயத்தின் ஊடாக
ஒளிந்து தவழும் மின்னல்களில்
வருவதும் போவதுமான
அந்த கவிதைக்காக
தொட்டிலாய் கிடக்கும் நான்…

உறைந்திருக்கும் மனதில்
பிரமிடைபோல்
விழித்திருக்கிறேன் கனவுக்குள்.


காற்றில் உதிர்ந்த காற்று

காற்றில் நிறங்களை
இணங்கச்செய்திடும்
மந்திரவாதமொன்றினை
அறிந்ததற்கு பின்
நான் தனியே காடேகினேன்.

என் விரல்களிலிருந்து
விடுத்த வர்ணங்களை
சுமந்து கிளர்ச்சியுற்று
வாசனையாய் மிதந்தது காற்று.

வனப்பூச்சிகள் பசியுற்று
காற்றுக்குள் இரை தேடி
பறந்து திரிந்தன_ காற்றை
தோளில் தூக்கியபடி.

புற்றுப்பாம்புகள் காற்றில்
நெளிந்து நகர்கையில்
வண்ணமுற்று குழப்பின
பருந்தின் கால் நகங்களை.

முதிர்ந்த மிருகங்கள்
அலைச்சலுற்ற வேட்டைகளினூடே
நிறக்காற்றினையோர்
விலங்கென நம்பி
கடித்தன காற்றின் பயணத்தை.

கொத்து மழையொன்றில்
வர்ணமிழந்த காற்று
ஊதல் ஒலி கொண்டு
விரட்டின விலங்குகளை
பதுங்குகுழியதிர துரத்தி…

காற்று நிறமற்று போனதும்
மந்திரவாதம் நீங்கியது
என்னிடமிருந்தும்.