Category Archives: அகத்தேடல்

நகுலன் எனும் அவர்

நகுலனை தெரியுமா?
பெரும் எழுத்தாளர்…
அவரை கேள்விப்பட்ட
வயதில் அவர் இல்லை.

திருவனந்தபுரம்.
பேராசிரியர்.
கவிதை,கட்டுரை
நாவல்….
இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல் 
போகிறோம்
வாசித்து இருப்பீர்கள்…
அவர்தான்…. என்னால்
பார்க்க முடியாது போயிற்று.

நகுலன் என்றால்
நீல.பத்மநாபன்
அ.மாதவன் கூட தோன்றும்
என் நினைவுக்கு.

சுந்தர ராமசாமி…
அவரை மட்டும் பார்த்து
பழகி பேசி….
நான் நாகர்கோயில்
சென்றால் அவரை
பார்க்காமல் வரமாட்டேன்.

நான் நாகர்கோவில்
செல்வதே அவரை
பார்க்க மட்டும்தான்.
நகுலன் பற்றி
அவர்தான் சொன்னார்…

வீட்டுக்கு வந்து
நகுலன் வாங்கி படித்தேன்.
ஏன் படிக்க வேண்டும்
அவர் என்ன சொல்லிவிட்டார்?
ஒன்றும் புரியவில்லை
ஏன் புரியவில்லை?

நகுலனுக்கு புரிந்த
நகுலனை நான்
நகுலனாக பார்க்க
நகுலனாகி படிக்கலாம்.

படித்த உங்களுக்கு
நகுலனை பற்றி தெரியுமா?

சிடுக்கு

தனிமையில் அமர்ந்து
பிரார்த்தித்து…

இறைவனை நினைத்து
சற்று த்யானித்து
பொறுமை வளர்த்து

விரல் விட்டு கூட்டும்
எண்ணிக்கையில்
கவனம் கோர்த்து…

ஒவ்வொரு பெயராக
சொல்லிக்கொண்டே வர

காலவரிசையில் எப்படியோ
தப்பி விடுகிறது
ஏதோ ஒரு
காதலியின் பெயர்.

எனது நாற்காலியில் சாத்தான்

இறைவன் எனக்கு
கிழக்கிலும் மேற்கிலும்
இருக்கும் பொழுதில்…

சாத்தான் எனக்கு
தெற்கிலும் வடக்கிலும்
இருக்க வேண்டும்.

எனினும்…

அவன் என் புறங்களை
விடுத்து அகங்களில்
இருப்பதாய் ஒரு
நம்பிக்கையுண்டு.

வேறென்ன சொல்வேன்?

மனிதர்கள் என்னை
கீழ்ப்பார்வையில் நோக்கும்போது.
பறவைகள் நம்பாதபோது.

ஒரு அழைப்பில் என்னிடம்
தாவரங்கள் வராதபோது.
விலங்குகள் என்னை
மதிக்காதபோது.

எப்படி நம்புவேன்
நான்
கடவுளின் பிள்ளையென?

கனவின் டைரிக்குறிப்புகள்

உயிரிலிருந்து மரணம் வரை
அனாவசியமான நீளத்துடன்
தொங்கிக்கொண்டிருக்கும்
இந்த உடலிலிருந்து…

வியப்புற்று கவலை கொள்ளும்
ஒரு மனிதனின் கனவு,
உறுதியாக எனக்கு…

நான் என்பதன்றி
வேறில்லை.

கலவரமிக்க ஒலிகள்
வழி தவறி சுழன்று திரியும்
மனக்கதுப்புக்களில்
நிழலும் ஓசையும் படியாத
சிந்தனையிலிருந்து (இது விந்தை!)
அந்த அணுகுண்டு
கபடமாய் வெளியேறியது.

உலகை அறிவியல்
பண்பாடற்று உலுக்குகிறது.
அதன் மூச்சு உஷ்ணத்தில்
கருகிய யோனியிலிருந்து
ஜாதிப்பூக்கள் மலர்கின்றன.

பிறக்காத இசையொன்றின்
குறிப்புகள் கொண்ட புத்தகத்தில்..

இருளின் மையத்தில் இருந்து
நிலைத்த விசுவாசத்துடன்
ரைனர் மரியாவின்
கவிதை வரிகள் சிலிர்க்கின்றன.

எனது தெருவை ஊரை
மொழியால் காலத்தால் நினைவால்
அளந்து கவனித்து கற்று
உணரமுடிந்ததை வேடமற்று
பகிர ஆவல் கொள்கிறேன்.

மிகுந்த சோர்வுடன்
பலமற்று நான் இருந்தாலும்
கொலைகாரனின் மனம்
என்னுடையது. பதற அறியாதது.

அதனுள் வசிக்கும் அலறல்கள்
கூக்குரல்கள் கெஞ்சல்கள்
இப்படி ஓவ்வொன்றும்…
வசியமூட்டும் தற்கொலை மொழிகள்.

நீலநிறம் ஒளித்து
கரும்பச்சை பூசி முனகி செல்லும்
ஓடைக்குள் ஒரு பூச்சி போல்
மரணம் ஒளிந்திருக்கிறது.

கைகள் பரபரக்க தட்டி
காலம் அதிர கடும் ஓசை எழுப்பி
பூச்சியை கவனமாக்குகிறேன்.

அது நெளிந்து வளர்கிறது.

இருளை பரவசம் உண்பது போல்
அறிவை மனம் தீய்ப்பது போல்
மரணம் ஓடை குழிகளில்
அமர்ந்தும் நின்றும் தகிக்கிறது.
உள்ளே உலாவும் போது

உண்ண உணவு
உடுக்க உடை
இருக்க வீடு
எல்லாம் தகுதியாய்
மிகுதியாய் இருக்கிறது.

இருந்தாலும்
பயமாய் இருக்கிறது.

ஸோப் பூக்கள்

சஹீனா
நிலையற்று ஆர்ப்பரிக்கும்போது
அவளின் கடவுளும்
சிரிக்கிறான் அவளுக்காக.

சிறு ஊது குழலில் இருந்து
காற்று முட்டைகள் கொண்டு
ஸோப் பூக்கள்
பரவச்செய்யும் சஹினாவின்
கால்களில் பாய்ந்திருந்தது
செப்டெம்பர் முட்கள்.

வானவில்லின் நிறங்கள்
கொதித்து உலவும்
ஸோப் பூக்களில்
சஹீனா…

தன் ஆழ்ந்த மூச்சை கலப்பது
இருமும் கடவுளுக்கு
இதம் பொதிந்த வேதனைதான்…

ஸோப் பூக்கள்
வழுக்கிக்கொண்டு உலவும்
ப்ரபஞ்சத்தின் கனவில்
உடைந்த காற்றுக்குள்ளும்
சிக்கித்தவிக்கும் சூரியஒளி.

சஹீனா புன்னகை கொண்டு
நீல நாக்கு முளைத்த
ஸோப் பூ ஒன்றினை…

இருண்ட மாசு படிந்த
குற்றங்கள் நெருக்கி
அமர்ந்து கொண்டிருக்கும்
தாழ்வாரமெங்கிலும்
அனுப்பி வைக்கிறாள்.

கண் கூச ரசிக்கிறான்
சிரித்து சிரித்து
அந்த கிழட்டு கடவுள்
அவளுக்காக…

தன் பாதத்தில் வழியும்
குருதியை துடைத்தபடி.


வாழ்க்கை

பார்க்கும்போதே
படபடத்து சரிந்து
உயிர் விட்ட ஒருவனுக்கு
அப்போதும் சொல்ல முடியாது
போனது ஒன்றுதான்.

ஆசை ஆசையாய்
யாருக்கென்று உழைத்தாலும்
எந்தப்பெயர் கிடைத்தாலும்
கல்லில் பொதிக்க முடியாது
காகிதத்தில் வடிக்க முடியாது…

வழித்தெறிந்த ஒன்றாய்
மட்டும்தான் இருக்கிறது

எந்த பிழைப்பும்…

இரண்டும் ஒன்றும் இரண்டு

நம் எதிரில்
துடைக்கப்படாத நாற்காலியில்
யாருமில்லை என்றபோதிலும்
உன் எதிரிலும்
என் எதிரிலும்
தனிமை இருந்தது.

நாற்காலியாக.
நாற்காலியில்.

எவரேனும் வந்து அமர்ந்தால்
நம்மை
அவரும்
அவரை
நீயும் நானும்
பார்க்கலாம்.

நம்மை அவர்
அவனும்
அவளுமாய்
பார்க்க முடியாது போயினும்…

நாம் மட்டும்,

நானும் நீயுமாய்
அவரிடம் சொல்லவோ பேசவோ
நம் பற்றி
எதுவுமில்லை என்பதால்
நீ எழுந்து போனதும்
நான் எழுந்து போகிறேன்.

மூன்று நாற்காலிகளிலும்
இப்போது தனிமை.
தனிமையை
வயிறார சாப்பிடும்
தனிமையின் பசி.முடியுமா எனக்காக

தூங்கும் முன்பு
ஒரு கவிதையாவது எழுதுங்கள்.
உங்களிடம்தான் கேட்கிறேன்.
எனக்காக எழுதுங்கள்.

இனி உன்னால் எழுதமுடியாது
என்ற அவளின் சாபம்
இப்போது என் வார்த்தைகளை
பறித்துக்கொண்டு விட்டது.

இதோ மொபைல் நோட்பேடில்
மூக்கு உரச அமர்ந்தும்
சாபத்தால் சொற்கள் வரவில்லை.

எதிர்பாரா தருணத்தில்
(இது அப்படித்தான் நடக்கும்.)
அவள் முத்தத்தை
கொத்திக்கொண்டு வந்தேன்.

வேறொன்றும் தோன்றாது
புளியமரத்தின் நிழல் உலுக்கி
அமர்ந்தும் விட்டேன்.

இது… ஏதோவென்று என்னை
கடக்க முயலும் உங்களுக்கு
இப்போதும்
ஒரு கவிதை கூட எழுத
தோன்றவில்லையா?

கடல் கீறிய நாட்கள்

கடல் என்னை விழுங்கவும்
நான் கடலை விழுங்கவும்
காத்திருந்த ஓர்
வேட்டைப்பொழுதில்
எங்களிடையே நீ நின்றாய்.

நீ அவள் என நான் புரிந்தேன்.

எங்கள் மத்தியில் நிலவு
ஒரு குறுமதி கொண்ட
நடுவனாய் நின்றிருந்தது.

இரவு ஒழுகிய
உன் கண்களில் இருந்து
பறித்த ரோஜாவை தந்தாய்.
பகல் தகித்த உன்
மார்புகளில் இருந்து
காடுகள் உதிர்ந்து சலம்பின.

உன் புன்னகையால்
என் காயங்களை ஆற்றினாய்.

ரணம் கொண்ட கடல்
என் மீது தெளித்த துளிகளை
உன் முத்தங்கள்
தழும்பின்றி போக்கின.

கடல் விழுங்க தவித்த என்னை
உன் இரு கரங்களில்
அணைத்து கூட்டி சென்றாய்.

அலையோசை இருள் நிரடும்
உளியின் கண்களாகி
நம் பயணத்தில் கலந்தது.
மீளா பயணமென்று நினைத்தேன்.

ஒரு பொழுதில்…
மணல் குறுகுறுத்த தரையில்
சில பச்சைக்கனவுகளுடன்
யார் போலவோ மிச்சமாய்
என்னருகில் இருந்தது….

நீ தந்த ரோஜாவும்
நானும்.