Category Archives: கவிதைகள்

நிழலால் நகரும் பூனை

களைத்த
அதிகாரியை போன்று
எனது அறைக்குள்
வரும் அப்பூனை
மோப்பமுற்று தேடுகிறது
அதன் நிழல்களை.

காணாது கலக்கமுற்று
வெளியேறும்
பூனையின் நிழல்களை

நினைவுகளாக்கி
சுமக்குமென் மனதுக்குள்

அந்த பூனையை – அது
இல்லாத பொழுதுகளிலும்
நான் பார்க்கிறேன்.

அந்த
மனப்பூனை
என்னை பார்க்கும்போது
அதன் மனதுக்குள்

அறை விளக்கொளியில்
சிமிண்ட் சதுரத்தில்
கோணலாய் நெளியும்
எனது நிழலோடு
விளையாடி திரியலாம்.

அந்தப்பூனையின்
மனதில்தான்…
அறையென்று
எதுவிருக்கும்?
நானென்று
யாரிருப்பர்?

அடர் இரவுகளில்
எங்கள் கண்கள்
சந்திக்கும் போதெல்லாம்
பூனை பயத்திலும்
நான் பிரியத்திலும்…

நிழலின் வெப்பம்
தாளாது சுருள்கிறோம்
அவரவர் மனதில்.

பறவையின் வானம்

அவள் எனக்காக
காத்திருக்கிறாள்.

நான் அவளுக்காக
காத்திருக்கிறேன்.

இருவரும் இப்படி
காத்திருக்கும்போது

காலத்தின் உள்ளே
பருவத்தின் உள்ளே
வாழ்வின் உள்ளே
ஒருவருக்காக ஒருவர்
ஒளிந்திருப்பது போல்
பாவனை செய்கிறோம்.

எனக்கென்று அவளும்
அவளுக்கென்று நானும்
ஏதேதோ செய்கிறோம்

அப்போதுதான் நாங்கள்

கேட்டிராத இசையில்
ஸ்வரமாய் அதிர்ந்து
பார்த்திராத ஓவியத்தில்
நிறங்களாய் கலந்து
எழுதாத கவிதையில்
பொருளாய் உதிர்ந்து

எங்கள் மனதுக்குள்
காட்சியாக விரிகிறோம்.

அவள்
நானாகிய பின்பு
நான்
அவளாகிய பின்பு
ஒருவரையொருவர்
விலக நேர்ந்தது.

எங்கள் பிரிவு
எங்களை  மீண்டும்
தனிமைக்குள்
அழைத்து செல்கிறது.

ஒரு பறவை வானத்துடன்
பேசுவது போல்
அவள்
காதலைப்பற்றி தனக்குள்
கற்பிக்க துவங்குகிறாள்.

ரயில்

ஓரறிவு கொண்டது
ரயில் பூச்சி…

விலாங்கு மீன் நினைத்து
நழுவியோடும் அதன்
பாதையில் வழுக்கி
விழுகிறது பூமியின் நிழல்.

ரயில் பூச்சி
மனிதர் உண்டு
மனிதரை கக்கி
இருள் குடைந்து
நிலவை துரத்துகிறது.

ரயில் பூச்சி
ஒரு முட்டை இட்டது.
அது பொறிந்த போது
விமானம் வந்தது.

ரயில் பூச்சியும்
விமான பறவையும்
ஒன்றையொன்று
பார்த்தபடி செல்கிறது
மனித வண்டுக்களை
சுமந்து கொண்டு…

இத்தனை காட்சிகளும்
கொண்டிருந்த
அந்த குறுக்கு சுவரை
இடித்தபின்புதான்
மூன்று கொலைகள்
விழுந்து முடிந்தன.

அவள் துக்கித்ததால்

இந்த உலகம் என்னை
வாழ
அனுமதித்தபோது
ஓரிருவர் மட்டும்
அனுமதிக்கவில்லை.

ஓரிருவரால் மட்டும்
தடைபடும் இவ்வாழ்வில்
அவளொருத்தியும்.

அவளுக்கு அவளே
சங்கேத மொழியில்
கூறிக்கொள்வதை நம்பி

என் வாழ்க்கையில்
நிழல் காயும் என்னை
மாயக்கண்களுடன்
படம் பிடிக்கிறாள்.

சப்தத்தின் வால் பிடித்து
பயணித்து
கனவுக்குள் கூடு பாயும்
அவள்தான் என்னை
இவன் இரவின்
மந்திரவாதியோவென
முகம் கண்டு
அஞ்சுகிறாள்.

அவள்
நிலம் தூவி அழைக்கும்
வெளி ஒன்றில்
குரலிடும் பட்சியாய்
கானகம் பருகி
மழை பெயர்த்து செல்ல

ஓரிருவரில் ஒருவளின்
குற்றமுறுகிய ஆன்மாவில்
தேவனின் அப்பம்
காய்ந்து கிடக்கிறது.

அவ்வுலகம் என்னை
வாழ பணிக்கையில்
அவள் தருவென
முளைத்து சுடர்உரு கொண்டு
ஒளி சத்தில் மீள்கிறாள்.

பனித்த அவள்
கண்களில் நான்
மதுவாய் வெளியேற
காலம் புகைத்து
குடிக்கிறது எம்மை.

பவித்ரா என்னும் செஸ்போர்டு

எனது புத்தகத்தில்
அந்த இசை இருந்தது.

அந்த இசைக்குள்
கடல் மழை பெய்தது.

கடல் மழையில்
நனையும் பவித்ரா
என் புத்தகத்தில்
சொற்களால் அதிர்ந்து
வரிகளாக விரிந்தாள்.

எல்லா வரிகளிலும்
பவித்ரா இடி கொண்டு
துடுப்புகள் இட்டாள்.

ஒரு மீன் குஞ்சின்
இறுதி மூச்சினை
அவள் கண்களில்
பொதித்தேன்.

வானம் நீல நிறத்தில்
நகைத்தது.

நாங்கள் கலந்தோம்.

அவள் பருகிய
வெண்ணிற எனது உயிரின்
காலத்துடிப்பு
அலமாரிக்குள் வைத்த
கடிகார ஒலியாக
கடலின் மனதுக்குள்
கேட்கிறது என்றாள்.

நதியும் கடலுமாய்
பிணைந்த நாங்கள்
இரவை உறிஞ்சி
பகலை வெளியிட்டோம்.

ஒரு கவிதையை
ஒரு கவிதை எழுத
அவள் யோனிக்குள்
பிரபஞ்சத்தின்
அனல் கசிந்தது.

அன்று முதல்…

பருவ காலங்களின்
கண்ணசைவை மீட்டி
அவள் ஸ்வரத்தில்
உருகிய என்னையும்
ஒரு புத்தகமாக்கி
தனியே
வாசிக்கிறாள்.அவள் ஒரு குருவியாக முடிந்தால்…

பின்னர்தான்
அவள் வருந்தினாள்.
அழுதாள்.

விழி துடைத்து
சற்றே வெட்கமுற்று
தன் ஆணவத்தை
மீண்டும் அணிந்தாள்.

விலகி சென்று விடு
என் குரல் எனக்கு
கேட்கவில்லை. நாம்
பிரிவோம் என்றாள்.

ஒரு ஒளி
அவளை கீறியபோது
ஒரு ஒளி காயத்தில்
மருந்திட்டது.
அவள் தன் நினைவை
பொசுக்கியபடிதான்
அறையெங்கும் நீளமாய்
நடந்து தவித்தாள்.

உறக்கம் நொடித்த
அவள் கண்களிலிருந்து
மௌனம் வெளியேற
தன் துக்கத்தை நோக்கி
வசைபாடினாள்.

என்னருகே வந்தாள்.

பிரிவை கொடு.
என்னை சீண்டு.
முள் கொண்டு தாக்கு.
ஒரு பறவையை ஏன்
கிழித்து பார்க்கிறாய் என்றாள்.

என் தோட்டம்
வெறும் செடிகள்
வெறும் மலர்கள்
வெறும் கொடிகள்
வெறும் இலைகள்
மட்டுமே கொண்டவை.

நீதான்
இசையை நிரப்பினாய்.
வாசனை பரப்பினாய்.
நீரில் சுவை கூட்டினாய்.
மண் மணக்க செய்தாய்.

என்
ஆன்மா கரி பிடித்தது.
நீ விலகும்போது
என் இருள் என்னை
சூழும்போதுதான் நான்
உயிர்க்க முடியும் என்றாள்.

அவள் தன் காதலை
தன் கால்களால் நெறித்து
நசுக்கி கொல்ல
விரும்பினாள்.

அந்த காதல்
ஒவ்வொரு நாளின்
உதயத்திலும் உன்னையே
தேடி வரும் என்றேன்.

இன்றோடு நான்
உன்னை வெறுக்கிறேன்
விலகு என்றாள்.

அவள் அன்று முதல்
என்னை
காதலிக்க துவங்கினாள்.

கோப்பை

என் முன்னே
ஒரு கோப்பை.

கோப்பைக்குள் காஃபி.

சர்வ ரகசியமும் அறிந்த
நீதான் அதனில்
ஆவியாக வெளியேறுகிறாய்.

அந்த நீராவியின்
கொடுங்கோன்மையை
அறிந்த நான்
சருகு போல் துடிக்க

எங்களை
தன்னுள் பிரதிபலிக்கும்
அக்கண்ணாடியில் நீ
மின்னி நகைக்கிறாய்.

நான் காஃபியுள்
ஒரு வாய்ப்பை
முழுக்க தவறவிட்ட
கோழையை போல்
நீந்தி செல்கிறேன்.

குவளை தள்ளாடி
சில துளிகள் தெறிக்க
தரையெங்கும் முளைத்தது
காஃபி செடிகள்.

ஒரு தாவரம் போல்
உன் யோனி அழைக்க
உன் யோனியின் வெயில்
எனக்கு கார்காலம்
என்கிறேன்.

கண்ணாடி வழியே
நீராவி பெருகுகிறது.
அது ஓடையை போல்
தவழ்கையில்
உன்
நிழல் சிவக்கிறது.

கோப்பை மிச்சமின்றி
என்னை பருகுகிறது.

வெளியேறும் திசைகள்

புவியீர்ப்பு விசை குறித்து
ஆழ்ந்து சிந்திக்கும்
கடல் ஆமை மனதாய்
நெகிழும் என் வாழ்வில்

ஒரு நேர்கோடு போட
தவிக்கும் சிறுமியின்
எண்ணங்களில்
சிவப்பு பென்சிலாய்
ஊர்ந்து செல்கிறது
அந்த காதலும்.

அவள் பேசுகையில்
கோள்கள் அதிர்வுறும்
நாதஸ்வரத்தின் மூச்சில்.

அவள் பிரிகையில்
மின்னல் விரிசல்களில்
துவண்டு தளர்கிறது
கார்பன் காதல்.

வெளிச்சத்தில் படிந்து
இரவை உண்ணும்
நகரத்தின்
விளக்கொளியில் நின்று
வகிடெடுக்கும் இரவுக்கு
அவள் வருவதும்
பிரிவதும் தெரிகிறது.

அவ்விரவு அறிந்ததும்
அறியாததும் ஒன்றுதான்.

அவள்
அந்தியின் சாம்பலில்
கடலை தெளித்து
கனவை பொறித்து
உயிரை துடைக்கும்
காய்ச்சல் கொண்ட
அம்பு என்பது.உயிரிகள்

உயிரை மட்டும்
ஒளித்து வைக்கிறேன்.

அவள்
சொல்ல விரும்புவது
எதுவென்றாலும்
அது என் உயிருக்கு
தெரியக்கூடாது.

புகை வழியே
அவளை பார்க்கிறேன்.
பார்க்கையில் அவள்
ஒடிந்த நிலவொளியால்
யாழ் ஒன்றை தீராது
இசைக்கிறாள்.

அவள் முத்தத்தின்
கதுப்பொன்றில்
நீந்தி களிக்கிறது
புத்தனின் தியானம்.

உயிர் ஒளிந்திருக்கும்
மந்திரச்சிமிழை
அவள் கனவில்
விதைத்து வைக்கிறேன்.

கனவு அவளோடு
கலைகிறது புகையாய்.

பூக்களின் மச்சங்கள்
தொகுத்து தன்
உயிருக்குள் கோலமிடும்
அவள் கைகளை
நனைக்கிறது என் உயிர்
கண்ணீர் விடுத்து.

எப்போதும்போல்
இப்போதும் அலைகிறேன்
மிச்ச உயிருக்குள்
அலையடிக்கும் அவள்
நினைவை உலர்த்தியபடி.கண்ணாடியின் குரல்

ஒரு திருப்பத்தில்
அவளை பார்த்தேன்.
பின் அவள்
சாலையானாள்.

சாலையில் வெறிதே
பயணம் நீண்டது.
என்னை அவளின்
நிழலும் _ அவளை
மரணத்தின் நிழலும்
ஊடாடி வந்தது.

அவள் நதியாய்
மாறிக்கொண்டாள்.
கடல் புக மறுத்து
வானம் நோக்கி
பாய்ந்தாள்.

அவள் நகரமாய்
ஜொலித்தாள்.
வனமாய் மின்னி
பாலையாய் கொதித்து
மலையாய் அடர்ந்து
பூவாய் மலர்ந்தாள்.

சாலை
நில்லாது நீண்டது.
வழியெங்கும் அவள்
பேச்சுக்குரல்.
ஒலிக்குள் மிதந்தது
ஆழியின் பெருமூச்சு.

அவளின்
இதயத்தின் துடிப்பு
காதுக்குள் கேட்டது.
பின்னர்
பயணத்தை
நிறுத்தி கொண்டோம்.

அவள் அவளாக
வந்து சேர்ந்தாள்.
அன்றுமுதல்
நாங்கள்
நடக்க நேர்ந்தது
எங்களுக்குள் மட்டுமே.

அவள் என்னை
கடக்க நான்
அவளோடு அவளை
கடக்க…

நீண்டதொரு பயணம்.

அவள்
மூச்சுக்காற்று செய்யும்
தந்திரங்கள் அறிந்த
காலம் பிளந்தது.

அணிவகுக்கும்
மரணத்துக்கு ஊடே
அவள் காதல் கொள்ள
மீண்டும் ஒரு சாலைக்குள்
பாதை நீண்டது.

பயணம் என்பதெல்லாம்
அன்றன்று
தொலைந்து
அன்றன்று
முடிவதுதான் என்றாள்.

யாருக்குமற்றதுதான்
எந்த வாழ்வும் என்றாள்.

இக்கவிதையை எனக்கு
அவள் முகம் பார்த்த
கண்ணாடி சொன்னது.