Category Archives: கதைகள்

99. இலியிச்

மாலையில் நான் கோபாலை பார்க்க போனேன். மிக தீவிரமான மனநோயில் இருந்து முற்றிலும் விடுபட்டு இப்போது அதற்கு அடுத்தகட்ட சிகிச்சையில் இருக்கிறான். சிசிரோவின் தேடல் சிந்தனையில் அதிகம் பாதிப்பை அவன் அடைந்திருந்தான்.

என்ன செய்கிறாய் என்று உரக்க கேட்டபடி பொய்யான உற்சாகத்துடன் அறைக்குள் நுழைந்தேன்.

தனிமைதான் வேறு என்ன என்றான்.

எது தனிமை என்பது எனக்கு புரியவில்லை. தனியே அமர்ந்து இருப்பதா? செயலாற்றுவதா? தியானம் செய்வதா? வழிபாடுகள் நிகழ்த்துவதா?

அவன் கட்டில் அருகே இருந்த ஜன்னலை பிடித்தபடி சாலையில் வருவோர் போவோரை பார்த்து கொண்டிருந்தான்.

வருவோரும் போவோரும் இவனுக்குள் நிரம்பி இவன் தனிமையை அவர்கள் மறுத்து கொண்டிருந்தனர்.

ஒருவனுக்கு, தனக்குள் இருக்கும் தனிமை என்பது எந்த கூட்டத்திலும் தன் இருப்பை ஒருவனுக்கு உணர்த்தி கொண்டே இருக்கும். உடலுறவில் கூட அதற்கு நிம்மதி இருப்பது இல்லை. அது மரணத்தின் சிசு.

மனதின் பசிக்கு சமூக ஓலங்களை போல் விருந்து வேறொன்றில்லை.
அது இருக்கும் இடத்திலிருந்து கடந்து போகும் வழி தெரியாது உரிய துணை கொண்டு உருமாறி இருக்கவே பிரியம் கொள்கிறது.

அடையாளங்கள் மீது வழிய வழிய அன்பை அபிஷேகிக்கும் மனம் அதை இருப்பென்றும் உறவென்றும் பாதுகாப்பென்றும் தனக்குள் விடாது நினைவுறுத்திக்கொண்டே இருக்கிறது.

அவன் அவனிடம்தான் இருக்கிறான். நான் என்னிடம் மட்டுமே இருக்கிறேன்.

கோபால் ஒரு நியாயத்தின் மீது தன் பரிதவிப்பை உருவாக்குகிறான். அவன் விரும்புவது என்பது அவனுக்கு உரியது அல்ல. மனுக்குலத்துக்கு உரியது. அதனால் மட்டுமே அவன் சங்கடங்கள் பெருகி வளர்கின்றன.

வேறு பலருக்கும் தன் சுயதேவையில் இருக்கும் அதிர்வு கலந்த ஏக்கம் கோபாலுக்கு மட்டும் பொருந்தி போகாது.

அவன் தனிமை என்பது கூடாரத்தில் இறுகி நிற்கும் குமைந்த இருட்டல்ல.

அவ்வளவுதான் எனக்கும் புரிகிறது.

98. இலியிச்

சந்திரசேகர் வந்தபோது வீட்டின் பின்புறம் தோய்த்து கொண்டிருந்தேன்.

உண்மைக்கும் உண்மை போன்றவற்றுக்கும் இடையில் மட்டுமே சத்தியம் என்ற சொல் மட்டுமே பற்பல கற்பனை வாதைகளை உண்டாக்கி விடுகிறது என்றான்.

இந்த வாதைகளை நான் உணர்ந்தவனே. இறைவனின் பரிவுக்கும் இறைவனின் திருவிளையாடல்களுக்கும் இடையில் சங்கோஜமின்றி இந்த சொல் நிற்கும்.

ஏசுவின் இறுதி நேர வாதையில் இந்த சத்தியம் தன்னில் துவண்டு நிற்கும். கல்வாரியில் ஒளி வீசிய அந்த தத்துவம் ஜீஸஸ் பரவிய நாடுகளின் போர் தந்திரத்தில் குலைவு அடைந்ததையும் நினைக்காது இருக்க முடியாது.

கடவுளுக்கு உரிய அறத்தை முன்னிறுத்தி கடவுளையே துன்புறுத்திய வரலாறுகள் எத்தனை முறை அழிக்கப்பட்டு திருத்தப்பட்டு அலங்கரித்தாலும் மனிதன் எப்போதும்
துக்கத்தின் முன்பாக நசிந்துதான் போகிறான்.

அவனால் மட்டுமே அவனுக்குரிய ஆறுதலை பெற்றுக்கொள்ள இதமான கற்பனைகளை ஆஹுதியாக்கி கொடுத்துக்கொள்ள முடியும்.

காலம் எதையும் திருத்துவதில்லை. மனம் திருந்தி கொள்கிறது. இந்த அவகாசத்தில் உடைந்த மனம் என்பது உடைந்ததுதான்.

சந்திரசேகர் தாந்தேயிசத்தில் ஈடுபாடு கொண்டவன். அவனில் சிதறும் ஒளிகளுக்கு இப்போது எந்த மதிப்பும் இல்லாது போய் விட்டது.
அவன் தனக்குரிய அதே உலகத்தின் பாழடைந்த மூலைக்குள் இன்னும் விட்டுப்போன ரகசியங்கள் இருக்கிறதா என்பதை தேடி கொண்டிருக்கிறான் என தெரியும்.

அங்கு மட்டுமல்ல எங்கும் எதுவும் இல்லை. ஒளித்து வைக்கப்பட்ட ஒன்றின் விலைமதிப்பு என்பது மனங்களில் நிலவும் மதிப்பு மட்டுமே.

விலங்குகளோ பிணங்களுடன் தீவிரமாக அல்லது மும்முரமாக போராடுவதில்லை.

நான் தோய்த்து கொண்டிருக்கிறேன்.

97. இலியிச்

வேதமுத்து எழுதிய கடிதத்தை நாசரேத் சவரியாருக்கும் பூந்தோட்டம் சுலைமானுக்கும் அனுப்பி வைத்தேன். அதில் சவேரியார் எனக்கு பதில் கடிதம் போட்டதில் சில பகுதிகள் மட்டும் இங்கு…

மனிதனின் அறிவு என்பது அவனை பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது. அவனை ஏங்க வைக்கிறது. செய்திகளின் ஊடாக அவனை வெறும் தகவல்களை போல் மாற்றி வைத்து அவமதிக்கிறது.

கல்வி ஒரு சூழ்ச்சியான ஏற்பாடு. அறிவியல் வணிகம் தவிர்த்த வேறு பார்வைகள் அதற்கு இல்லை. கல்வியால் புலர்ந்த சமூகம் ஒரு ஒட்டுண்ணி வாழ்க்கையை தவிர வேறொன்றையும் கண்டறிய முடியாது தவிக்கிறது.

கல்வியை கொண்டு கல்வியால் போராடும் போட்டிகளில் மனிதனின் முனைப்பு ஒரு இரக்கமற்ற மிருகத்தை போல் இருப்பதை மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது.

யாரோ எங்கோ செய்யும் சொற்ப சமூக சேவைகள் இன்று வியந்து பார்க்கும் நிலையை அடைந்து விட்டன. தனது
அறிவில் சொறி பிடித்த மனிதன் இவற்றையெல்லாம் கடமைகளாக பிறருக்கு பயிற்றுவிக்கிறான். உண்மையில் பணம் என்பதே அறிவின் வித்து.

கௌரவங்கள், பெருமைகள், புகழ் இந்த அனைத்தும் மனிதர்கள் மனிதர்களுக்கு கொடுத்து கொண்டிருக்கும் காரியம்.
இயற்கை தங்களை பாராட்டி கொண்டிருக்காது வாழ்ந்து அழிவதில் மட்டுமே பூரணம் கொள்கின்றன.

மனிதனின் பசி அறிவால் விலையாக மாற்றப்பட்டு விட்டன.

நாம் குழப்பத்திற்கும் அச்சத்திற்கும் இடையில் மர்மமான ஒரு வாழ்க்கையை வாழ்வதை அறிவு நாகரீகம் என்று அறிவுறுத்தி கொண்டே இருக்கிறது.

உண்மையில் வெட்கம் மானம் எதுவுமற்றவர்கள் நாம்தான். இல்லையெனில் ஆடைகள் என்பது இத்தனை அலங்காரமாகவும் விலைகளோடும் இருப்பதை அங்கீகரிக்க முடியுமா?

வேதமுத்துவுக்கு என் ஆசிகள்.

96. இலியிச்

வேதமுத்து எனக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் இருந்து எடுத்த சில வரிகளே இவைகள்…

நன்மை குறித்து பேசுவதும் சிந்திப்பதும் உண்மையில் தீமையை அறியவும் அதை பரப்பவும் செயலாக்கவுமே.

திட்டமிட்ட கொலைகள் மூலமாகவே இயற்கையை முழு அளவில் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒழுக்கம் வாழ்க்கையில் அன்றாடம் நிலவும் கற்பனையான பாதுகாப்பு. அனைத்து நிலைகளிலும் பாலியல் மட்டுமே மிக முக்கியமான இடத்தை பெற்று கொண்டிருப்பது மட்டுமில்லாது அதை இயக்கி கொண்டும் இருக்கிறது.

ஒரு துறவிதான் அல்லது துறவியால் மட்டுமே கடவுளை மிக எளிதில் அவமதிக்க முடிகிறது. விலங்குகள் என்பது கற்பனையில் கூட துறவறம் மேற்கொள்வது இல்லை.

மனிதன் தன்னுள் சிறுகச்சிறுக கற்பனைகளை வளர்த்து கொண்டே போவதால் மட்டுமே அவன் தன்னை சின்னாபின்னம் செய்து கொள்ள முடிகிறது. இந்த கற்பனைகள் அனைத்தும் அவன் சார்ந்த சமூகம் மீது அவன் காண விரும்பும் நல்லுறவின் அடையாளங்களில் ஒன்று.

மனிதனுக்கு உரிய தத்துவம் என்று எதுவும் இல்லை. அவன் இரவு பகல் போலவே ஒரு பருவம் மட்டுமே. அவன் அவனை தவிர வேறு யாரையும் நம்ப முடியாமல் இருக்கும்போது எந்த முன் அறிவிப்பும் எச்சரிக்கையும் இன்றி தன்னையே உணர்ந்து அடைகிறான்.

ஒருவனின் சிறிய பொருள் வீழ்ச்சி அவமானங்கள் இழப்புகள் மறுக்கப்பட்ட வாய்ப்புகள் தாக்குதல்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்று அல்ல. அவன் அதற்காக ஏங்கி துடிக்க ஆரம்பிக்கும் நேரமே அவனுள் ஜனநாயம் என்ற கட்டமைப்பு வலுவாக உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை
காட்டுகிறது. அதற்கு அவன் ஒருபோதும் வெட்கம் கொள்வது இல்லை.

மனிதன் பயிற்றுவிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள ஆரம்பிக்கும்போது மதத்தை எதிர்க்கிறான். அவன் உண்மையான சுதந்திரத்தை வரவேற்க அப்போதுதான் தகுதி கொள்ளவும் துவங்குகிறான்.

காலங்கள் மீது எந்த அக்கறையும் இன்றி அதை உதாசீனம் செய்யும் ஒரு நண்பனை போல் எனக்கு பிரியம் மிக்கவர் எவரும் இல்லை என்பேன்.

ஒரு எழுத்தாளன் என்பவன் தான் யூகித்த கண்டறிந்த அனைத்து முட்டாள்தனங்களையும் குற்றங்களையும் சாதுர்யமாக பரப்பி விடுகிறான். அவன் அதை பிறர் பின்தொடரும்போது மிகுந்த நிம்மதியும் ஆசுவாசத்தையும் கொள்கிறான். குப்பையில் காளான் பூக்கும்போது அவன் உருவாக்கும் நிம்மதியை யாராலும் சீர்குலைக்க முடியாது.

அரவமற்ற முட்டுச்சந்தில் சீர்குலைந்து நின்றிருக்கும் ஒரு சிந்தனாவாதியின் கற்பனையில் இருந்து மட்டுமே அரசியல் சிந்தனைகள் மலர்கின்றன.

அவன் எதிரி கடவுளாக இருக்கிறான். கடவுள் நிந்தனை கடவுள் பெயரால் நிந்தனை என்பது பச்சிளம் குழந்தையின் அரற்றல். அதை கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம்.

மேம்போக்கான சிற்சில உதிரி சிந்தனாவாதிகளும் குழப்பமான தத்துவங்களை உதிர்த்து கொண்டிருப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே ரஷ்யாவால் இந்தியாவை அலம்பி விட முடியும் என்று கூறுகிறார்கள்.

ஒரு சிறுவன் ஹிம்ஸையின்றி சுவரின் மீது மூத்திரமடித்து நனைத்து கொண்டிருப்பதை நாம் புரட்சி என்றால் பெரியாரும் ஸ்டாலினும் சதாம் ஹுசேனும் புரட்சியாளர்கள்தான்.

95. இலியிச்

எந்த தீர்மானமும் இல்லாமல் அலைந்த அலைச்சலை நான் முடித்து கொண்டு வீட்டுக்கு வரும்போது நடுநிசி.

தரையில் ஆங்காங்கே புத்தகங்கள் சிதறி கிடந்தன. சில காசுகளும் ரூபாய் தாள்களும் கிடந்தன. இவற்றை நேர் செய்துவிட்டு செல்லவும் நேரமின்றி மனமின்றிதான் வெளியேறினேன்.

சௌந்தரபாண்டியன் தன் ஒரு குயர் நோட்டோடு வந்த மதியத்துக்கு பின்தான் இத்தனை அலங்கோலமும் நிகழ்ந்தது.

அவனுக்கு எப்படி புரியவைப்பது என்பது எனக்கு தெரியவில்லை. என் மீதான அன்பின் மிகுதியில் அவன் எழுதி வைத்தது எல்லாம் சட்டென்று நீட்டி விடுகிறான்.

இதை படியேன் என்பது கூட தாங்கி கொள்ள முடியும் என்னால்…

கண் பார்ப்பதை மூளை உதாசீனம் செய்து விடும். இங்கிதமான நடிப்பு கூடும். எழுதியதற்கு ஒரு பதில் கருத்து உடனே வேண்டும் என்னும்போதுதான் சிக்கல் உருவாகிறது. நட்பு முறிகிறது.

அவன் உடம்பெங்கும் கனவுகள் தீப்பொறியாக சிலிர்த்து வெடிக்கிறது.
கண்களும் மனதும் அரை மயக்கத்தில் இருக்கின்றன. காதலும் ஊடலுமே சமூகம் என்னும் அவன் மனமோ கடவுளை நிராகரிப்பது என்பதை பற்றி நினைக்கவே அஞ்சுகிறது.

இந்த உலகை ஆட்டிப்படைக்கும் உயர்ந்த எதிர் சிந்தனை கொண்ட ஒருவனுக்கு மனம் மட்டும் விலங்கால் பிணைக்கப்பட்டு இருக்கிறது.

ஏசுவின் வருகைக்கு முன்பான தத்துவ அறிஞர்கள் பற்றிய சிறுகுறிப்பு புத்தகம் ஒன்றை வாசிக்க கொடுத்தேன்.

அவனோ எதிர்வீட்டு மாசிலாமணியின் முலைகளை நினைத்துக்கொண்டே தனது வாழ்க்கையை கரைத்து கொண்டிருந்தான். அவள் வீட்டுக்கு வரும் கந்துவட்டிக்காரன் சமூக எதிரியாகவும் பூக்காரி சமூக விளிம்பு நிலை உழைப்பாளியாகவும் கேபிள் டீவிக்காரன் கலைகளின் தெய்வமாகவும் உருவகித்து மாசிலாமணியின் அகம் புறமாய் உருகி எழுதிய கதைகளும் கவிதைகளும்….

சௌந்தரம்… இதை படிக்க எனக்கு தெம்பும் தைரியமும் இல்லை என்பதை பலமுறை சொல்லியும் அவன் அதை நம்ப மறுத்து புன்சிரிப்பில் உறைந்து நிற்கிறான்.

தத்துவம் அவன் மற்றும் அவன் சார்ந்த அந்த கூட்டத்தின் மனக்கோணல்களை எப்போதும் பாதித்தது இல்லை.

அது தன்னையே பாதித்து தன்னுள் சிதைந்து தன்னுள் ஆஹ்ருதி பெருக்கி ஜீவனாய் சுடர் விடும் குளிர்ந்த நெருப்பும் சுடும் பனியுமான தேடல்.

அவன் கொடுத்த நோட்டை வாங்கி விட்டத்தில் விட்டெறிந்த போது அத்தனை நிம்மதியாக உணர முடிந்தது. தலையை குனிந்து வெளியேறினான்.

நான் வீட்டை விடுத்து கால் போன போக்கில் சென்று வந்த பேருந்தில்
ஏறிக்கொண்டேன்.

அலைந்து திரிந்து வந்தபோது மனம் நிம்மதியாக இருந்தது. சௌந்திரம் இனி வர மாட்டான் என்பதே நிம்மதியாக இருந்தது.

லூக்ரிடிஸ் எழுதிய புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்டு அந்த நள்ளிரவை பகலாக்கி கொள்ள ஆரம்பித்தேன்.

94. இலியிச்

நம்பிக்கையுடன் இருக்கும் ஒருவன்  முயன்றால் ஒருவேளை எதையும் பெற முடியும். ஆனால் அவன் அதையே ஒருநாளும் அடைய முடியாது. பெறுதல் என்பது அடைதல் அல்ல.

சபரி இப்படி சொல்லிவிட்டுத்தான் சென்னைக்கு சென்றான். அவன் குடும்பம் அவன் மக்கள் அவன் தொழில் என்று ஆனதும் அவனுக்கென்று ஒரு கனத்த வளையம் தயாராக இருந்தது.

அவனை சந்திக்க சென்னை சென்று இருந்தேன். இருவரும் மாம்பலம் ரயில் நிலையத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தோம். பின்  பெரிய அமைதிக்கு இடையில் நேரம் கழிந்தது.

முற்றாக ஒன்றும் பேசவில்லை. சந்திக்கும் உள்ளூர்க்காரனோடு எந்த பேச்சும் இன்றி அமர்ந்திருப்பதும் ஒரு விதத்தில் பேச்சுதான் என்றான் சபரி.

கிரேக்க புராணங்களை விரும்பி வாசிக்கும் அவன் மனதளவில் ஒரு கிரேக்க மனிதனாகவே வாழ விரும்பினான். எப்படியாவது க்ரீஸ்க்கு ஒருமுறையேனும் சென்று வர ஆர்வம் கொண்டு இருந்தான்.

என் புராதன மனதில் இந்த நவீன உலகம் பொருந்த முடியாமல் ஒரு துணையற்று வாடி இருக்கிறது என்று கூறினான்.

சபரி கண் காணாத கனவொன்றில் தன்னை முழுக்க இழக்க விரும்புவதுதான் என் சிக்கல். மரணத்தை அவன் வரவேற்கும் அத்தனை நியாயமான காரணங்களுக்கும் முழு எதிர் காரணங்களை எனக்கு தர முடியும்.

அவன் மரபான புரட்சியின் மீது ஆர்வம் கொண்டவன். அது பருவ மாற்றத்தில் சிதையும் சில கொடிகளை போலவேதான் மாற்றம் கொள்ளும் என்று நான் கருதுகிறேன்.

நான் கேள்விகளின் மீதிருக்கும் என் காதலை ஒருபோதும் விசுவாசிக்க மாட்டேன். கேள்விகள் என்பது பல நேரங்களில் உண்மையின் தந்திரமான பக்கமாக இருக்கிறது. இயற்கையின் பெரிய அவமானத்தில் ஒன்றுதான் இந்த கேள்விகள் என்று சொல்லி சபரி பெருமூச்சை விட்டான்.

நான் சற்று நேரம் கழித்து என் அறைக்கு வந்தேன்.

உலகம் சட்டத்தையும் நெறிகளையும் மனதோடு பிணைத்திருக்க மறுத்து சில பாதைகளை கட்டமைக்கின்றன.

சபரி தவறி விழுந்த காட்டாறு போல் எனக்குள் ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

93. இலியிச்

தன்னை எப்போதும் எதனூடும் ஒப்பிட்டு கொண்டிருக்கும் மனிதன் தன்னை சுயமாய் அளவிடும்போது மட்டுமே தான் தத்துவத்தில் மட்டுமே முளைத்து உயிர் விடக்கூடியவன் என்று நினைத்து கொள்கிறான். இதைத்தான் நான் கண்டுபிடித்தேன் என்று அருணாசலம் மாங்காடு போகும் வழியில் கூறினான்.

நடப்பயணமாகவே நாங்கள் அங்கு சென்று கொண்டிருந்தோம்.

விளக்க முடியுமா என்று கேட்டேன்.

விஞ்ஞானிகள் கூடி இருக்கும் அரங்கத்தில் பொன்னாங்கனுக்கு என்ன பதவி… என்று கேட்டான்.

பொன்னாங்கன் உள்ளூரில் ஸ்வாமி தேரில் ஊர்வலம் வரும்போது தீவட்டி பிடித்து கொண்டு மௌனமாக வருவான்.

அர்ச்சகர் சூடத்துக்கு ஒளி ஊட்டுவது அவன் வேலை. அவன் வாழ்நாள் முழுக்க அதில்தான் கழிந்தது. அப்படி ஒரு வாழ்வை அவனுக்கு இதுதான் உன் வாழ்க்கை என்று தீர்மானித்தது யாரின் குற்றம் என்று அருணாச்சலத்திடம் ஒருநாள் நான் கேட்டிருந்தேன்.

மெய்மையின் தத்துவங்கள் சில நியதிகள் கொண்டு இயங்கும்போது நீயும் தீவட்டி ஏந்த வரலாம் என்றான்.

மனிதன் தன்னை அறிவதற்கு எந்த அவசியமும் இல்லை. அவன் சில முகங்களை சில தகவல்களை சில விபத்துக்களை சில உணர்ச்சி பெருக்கிடும் சம்பவங்களை கேட்டு குறிப்பெடுத்து அவன் வாழ்க்கைக்குள் தேவையான பயங்களையும் எச்சரிக்கைகளையும் குறிப்புகளாக வரைந்து வைத்து கொள்கிறான்.

தடித்த கற்கள் சிற்பங்களைப்போல் தோன்றுவது அவனை ஒருபோதும் துன்புறுத்துவதில்லை. நீ என் மூலமாகவும் நான் உன் மூலமாகவும் அந்த கற்பனைகளை தாண்டி உடைத்துக்கொண்டு வெளியேற விரும்புகிறோம்.

தத்துவம் ஒழுக்கங்களை மட்டும் போதித்து தண்டனைகள் வழங்குவது என்றால் ஒரு பிரபலமில்லாத நீதிபதி அதை செய்யவோ முடக்கவோ முடியுமே என்றேன்.

கவனித்து பார்த்தால் இவற்றின் முழு பின்னணி அதிகாரத்தில் மட்டும்தான் ஊன்றி நிற்கிறது என்றான்.

ஒருவன் நம் மீது காட்டும் அதிகாரத்தில் நம் பங்கும் இருக்கிறது. நம் தேவைக்கு உரியதை பெறும் அளவுக்கு நம் மீது அதிகாரம் பாய்ச்சப்படுவதை அனுமதிக்கிறோம்.
இவை அனைத்தும் முன் பின்னாக எந்த சிந்தனையின் வடிவத்திற்குள்ளும் நாம் பொருந்தி போகவில்லை என்பதையே காட்டுகிறது.

முடிவாக….

அருணாசலம் என்னை பார்த்தான்.

குடும்பம், சுற்றம், அரசியல், சமூகம், கழகம், சங்கம், ஃபெடரேஷன் எல்லாமும் சகதியில் சிக்கி இருக்கிறது.

சகதியில் நடந்து கொண்டே இருப்பதில் பழகிவிட்டால் அதுவும் சுகம்தான் என்றேன்.

நாங்கள் ஒருவர் கையை ஒருவர் இறுக்கி பற்றி கொண்டோம். எதிரில் பெரிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது.

92. இலியிச்

இருளை இன்னும் இருட்டாக்க மட்டுமே முடிந்திருக்கிறது. ஒளியின் மீது வெளிச்சத்தை பாய்ச்சி என்ன ஆக போகிறது?

உலகநாதன் கடையில் மிக வாசனையாக ஊதுபத்திகள் கிடைக்கின்றன. பெருமாள் கோவிலை ஒட்டிய சந்தில் அவனின் சின்னஞ்சிறு கடை இருக்கிறது. மண் விளக்கு அகல் விளக்கு இலுப்பை எண்ணெய் பூஜை எண்ணெய் என்ற சகலமும் கிடைக்கும்.

அவன் அப்பா அதே கடையில் இருந்து வாழ்ந்து முடித்து விட்டு போனார். அவர் காலத்தில் அந்த கடைக்கு பழைய பிராமண மாமிகள் அவ்வப்போது வந்து திரிநூல் மட்டுமே வாங்குவார்கள்.
சுப்பையா ரொம்ப பாவம் என்றுதான் சொல்வார்கள்.

சுப்பையாவின் இந்த பெருமாள் கைங்கர்யம் அவரளவில்நேர்மையாக இருந்தபோதும் வியாபாரத்தில் மட்டும் வளமற்று செல்வமற்று இருந்தது.

ஆயினும் ஆபத்துக்கு பாவமில்லை என்பதால் கல்லாவுக்கு கீழ் ஊரின் இளசுகளுக்கு வேண்டி ரகசிய விற்பனைக்காக லாஹிரி வஸ்துக்கள் இருந்தன.

காட்டாமேட்டு ஆட்கள் மூலம் சரக்கை வாங்கி கைமாற்றி தன் லௌகீக வாழ்க்கையை அவர் ஒருவாறு சமாளித்து கொண்டிருந்தார்

சொந்தமாய் ஒரு வீடும் லாட்டில் ஒரு பெண்ணையும் சேர்த்து கொள்ள போதுமான தொகை அவருக்கு வந்து சேர்ந்தது. எப்படியோ சுப்பையாவை பெருமாள் கைவிடவில்லை.

80’களின் இறுதியில் நாளிதழ்களில் ஜோதிடகணிப்பு வலுத்து மக்கள் கூட்டம் கோவில்களில் பெருக்கெடுக்க ஆரம்பித்தபோது உலகநாதனுக்கு வருமானம் கொட்டியது.

தந்தையின் நறுக்கு திறமை அவனுக்கு இல்லை என்றபோதும் பட்டை அடித்து பூணுல் கழுத்தில் தெரிய கல்லாவில் பெருமாளே கதி என்று கிடப்பான்.

வாய் பெருமாளின் ஸ்தோத்திரங்களை பிழைபட முனகி கொண்டே இருக்கும்.
மேல்தெரு செம்பகவல்லி ஒரு மார்பை காட்டிக்கொண்டு அடிக்கடி அங்கே வருவதற்கு சனியோ ராகுவோ உதவிக்கொண்டே இருந்தார்கள்.

பெரியாரை தெரியுமா என்று அவனிடம் ஒருநாள் கேட்டேன். இந்த ஐயருங்க கொட்டத்தை அவருதான் ஒடுக்கினாரு. இல்லாட்டி தளப்பிரட்டு பசங்க நம்மளை அமுக்கியிருப்பானுங்க என்றான்.

பூணுல் ஏன் அணிகிறாய் என்று கேட்டபோது என்ர நயினா சொல்லி இருக்காரு கழட்ட கூடாதுன்னு… கோவில் கோபுரம் பார்த்து கன்னத்தில் இட்டு கொண்டான்.

செம்பகவல்லி அப்போது அங்கே வரவும் நான் எழுந்து சென்றேன்.

நான் எனக்கு யார்?

(ஓர் அறிவிப்பு…

இந்த கதை என் சொந்த படைப்பு அல்ல. இலியிச் எழுதியதாக நம்பப்படும் ஒரு நாவலின் நடுவில் இடைச்செருகலாக வந்து இருக்கும் சிறுகதை இது என்று நம்பத்தகுந்த எனது இலக்கிய நண்பர்கள் மூலம் இப்போது தெரிய வருகிறது.
ஒருவேளை பதிப்புரிமை தொந்தரவு எழுப்பப்பட்டால் நான் இந்த கதையை நீக்கி விடுவேன். இந்த கதைக்கு நானே என் மனம் போன போக்கில் ஒரு தலைப்பு வைத்தேன். உங்களுக்கு பிடித்த தலைப்பை நீங்களும் வைத்து கொள்ளலாம்.)

இனி கதை. ==================

இருக்கட்டும்.

அதனாலென்ன?

என்னை இன்று எப்படியேனும் கொல்ல வேண்டும் என்ற ஆத்திரம் உங்களுக்கு. இப்படி நீங்கள் ஒன்றுகூடி குவிந்து நின்று இருப்பதை நான் முன்பு பார்த்ததே இல்லை.

உங்கள் கண்களில் மின்னி சிதறும் அந்த கொடிய குரூரத்தை ஒருநாளும் நீங்கள் கண்ணாடியில் பார்த்திருக்க மாட்டீர்கள்.

உங்கள் முகக்கண்ணாடியில் வழுக்கி விழும் மழைக்காலத்தின் வெயில் பற்றிக்கூட உங்களுக்கு தெரியாது.

சற்று தொலைவில் கோடரியோடு நிற்கும் அந்த பிரெஞ்ச் இளைஞனை பார்க்க பார்க்க ஆத்திரம் வருகிறது. உங்கள் வெறியை அவனுக்குள்ளும் பிரயோஹித்து கோடரியோடு இங்கே நிற்க வைத்திருக்கிறீர்கள்.

அவனோடு நான் கடலோரம் சிறிது நாட்கள் சல்லாபித்து இருக்கிறேன். மோவைக் போதையில் அவன் மூக்கு விடைக்கும் போது என்னை அடைந்து இருப்பான்… அல்லது நான் அவனை…

அவனுக்கு அருகில் இருக்கும் கொம்பலஸ் ஒரு நூல் வியாபாரி. அவன் மனைவி ஜாந்திசோனா வட்டி வியாபாரி. நகவெட்டியை கொண்டு குழந்தையின் சொத்தை பற்களை பிடுங்குவதில் கை தேர்ந்தவள்.

நான் அவளிடம் ஒருநாள் கிழக்கின் திசை எது என்று கேட்டேன். அதற்கு அவள் யோசித்தாள். அன்றிலிருந்து அவளுக்கு பேய் பிடித்தது என்று ஊரார் நம்பினர். நான் என்ன செய்ய?

உங்கள் தேடல் தீவிரமாக இருக்கிறது. கிம்னோ தன் மூக்கால் மோப்பம் கொள்ள ஆரம்பித்து விட்டான். புதர் மண் அவன் கண்களை கோதி விட்டு பறக்கிறது. அவன் பிடரி சிவப்பு நிறம்.

ஐயா…

நான் குற்றம் செய்தது உண்மைதான். அந்த குற்றம் ஒரு வாத்தை உணவுக்கு கொல்வது போல் நிகழ்ந்து முடிந்த ஒன்றுதான்.

என் கனவில் வந்த அந்த திரைப்பட இயக்குனரை கொலை செய்து விட்டேன். அது கனவிலேயே நிகழ்ந்து முடிந்து விட்ட சம்பவம்.

அவன் உங்கள் வாழ்க்கையை திருடி இருக்கிறான். உங்களின் திசையை திருப்பி தன்னை மட்டும் வளமாக்கி கொண்டவன். கொன்றது தவறா?

கனவில் ஒருவனை நான் கொன்றதை ஆதாரத்துடன் நிரூபிக்க தியிப்பினோ மோனசா என்ற டச்சு நாட்டு பெண்ணை நீங்கள் கடத்தி வந்து உங்களோடு வைத்திருப்பதும் அதற்காக தூதரக அதிகாரிகளின் மனைவிமார்களை பலாத்காரம் செய்ததும் எனக்கு தெரியாதா என்ன?

நானும் இப்போது உங்களை பார்த்து கொண்டுதான் இருக்கிறேன். உங்கள் வெறி பிடித்த தேடல் ஒழுங்கற்று சுயம் இழந்து இருக்கும்போது நான் சற்றே ஆசுவாசமாகி கொள்கிறேன்.

உங்கள் சோம்பலை கலைக்கும்படி துயண்டர் திமிங்கலத்தின் பாலை காய்ச்சி பருக கொடுக்கிறான். அவன் ஜெர்மனியில் இருந்து கழுகின் மீது பறந்து வந்தவன் என்று நீங்கள் நம்பிய காலத்தில் அப்படி இல்லை அவன் பொன்னமராவதியில் கல்பனா தியேட்டரில் இண்டெர்வெல் நேரத்தில் முறுக்கு விற்பவன் மட்டுமே என்று சொன்னேன்.

அவன் ஆண்குறி மிகவும் நீளம் மிகவும் தடியாகவும் இருக்கும் என்று வித்யா ஊரெல்லாம் சொன்னபோது உங்கள் ஊர் பெண்கள் அவனை தேடி பிடித்து வெட்டிவேர் எலுமிச்சை நன்னாரி ஊற வைத்த சூடான நீரில் குளுப்பாட்டியதும் அவன் நிறம் வெளுத்து போனான். அவன் நாக்கு சுளுக்கி பாஷை இடறியது. எப்படியோ ஜெர்மன் மொழி அங்கே ஒட்டி கொண்டது. இன்றோ அவன் உங்களில் ஒருவன் ஆகி விட்டான்.
நான் மட்டும் பாவியாகி விட்டேன்.

என்னை மன்னிக்க கூடாதா?

ஒரு கொலைதான் மனிதத்தின் அபத்தமான எதிர்காலத்தை முடித்து வைத்திருக்கிறது என்பதற்காகவும் நீங்கள் எனக்கு கருணை காட்டலாம்.

தோன்ஷிய நாட்டு இளவரசன் பதுப்பிர்நோ என்னிடம் உங்கள் நாட்டு முதலிரவு எப்படி இருக்கும் என்று கேட்டான். நான் விளக்கி சொன்னேன்.

கடும் இருட்டில், ஒரு சிறு அறையில், சிறு கட்டிலில் அல்லது தரையில் ஏராளமான பண்டங்களுடன் மூச்சு முட்டும் வாசனையில் வாடிய பூக்களுடன்….

பதுப்பிர்நோ என்னிடம் கேட்டான்… நீங்கள் என்ன மூட்டைப்பூச்சிகளா?

பிற்காலத்தில் நான் அவன் நாட்டில் இருந்த ஒரு நங்கையை மணமுடித்து கொண்டேன். கியசிக்கினோ அவள் பெயர். எங்களுக்கு முதலிரவு வேறு மாதிரி அந்த நாட்டு வழக்கப்படி நிகழ்ந்தது. அதாவது,

பட்டப்பகலில்… வெட்ட வெளியில்… தங்கத்தால் ஆன மேடையில்…

ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்து கொண்டாடி மகிழ அது நடந்தது.

அந்த தேசத்தின் குதிரைகள் பேசும். ஒருநாள் ஒரு குதிரை இப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்டது. “எனக்கு நான் யார்”?

இந்த கேள்வியோடு நான் கடற்பயணங்கள் மேற்கொண்டேன். என் அன்பிற்குரிய கியசிக்கினோவை
மீத்தாகு வளைகுடாவில் ஒரு கடல் நோயில் பறி கொடுத்தேன். அவள் நீல நிறமான உடலை கடலில் எறிந்தனர்.

எங்கெங்கோ சுற்றினேன். இந்த நாட்டுக்கு வந்தேன். இங்கும் எங்கெங்கோ சுற்றி அலைந்தேன்.

ஒருநாள் நந்தியாதோப்பு குஞ்சுமாலிக் என்னோடு பேசிக்கொண்டு இருந்தான். சைக்கிளில் டீ கேன் வைத்து ஊரெல்லாம் விற்பனை செய்வது அவன் தொழில். சைக்கிளை பிடித்தபடி அவனுக்கு உறுதுணையாக இருப்பவன் ஆசியாபட்டியை சேர்ந்த கிஸ்விலா தான்ட்ரிக்.

நாங்கள் பசியில் பிறக்கிறோம். பசியில் வாழ்ந்து மடிகிறோம். எங்கள் மனதில் சோற்று பருக்கைகள் புதைந்து வெடித்து சிதறும்போது நாங்கள் சாகிறோம். எங்கள் கனவை அந்த இயக்குனன் விற்று விற்று வயிறு வளர்க்கிறான். கடற்பிரபுவே… அவனை நீங்கள் சம்ஹாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

ஆம்…

நான் அந்த வேண்டுகோளுக்கும் அன்புக்கும் ஒரு குவளை சீன தேநீருக்கும் இணங்கி கனவில் வந்த இயக்குநனை கொன்று உங்களை அவனிடமிருந்து விடுவித்தேன்.

நீங்களோ என்னை கொலை செய்ய பகலை வாளாக்கி இரவை ஈட்டியாக்கி இங்கே வந்து நிற்கிறீர்கள்.

உங்கள் வீட்டு வாசலில் பெண்கள் கோலமிடும் பணியை நிறுத்திவிட்டு ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தங்கள் வாசலில் “நான் எனக்கு யார்” என்று எழுதி வருவதுதான் உங்கள் சிக்கலுக்கு கோபத்துக்கு இன்னொரு காரணம் என்றும் எனக்கு தெரியும்.

சரி.

நாம் பரஸ்பரம் பொருதுவோம்.

91. இலியிச்

மாடசாமியின் இரண்டு கழுதைகள் நோயுற்று இருந்தபோது பார்க்க போய் இருந்தேன். அவை பிதற்றல்களோடு கனைத்து செருமி கொண்டிருந்தன.

அதற்கென்று பிரத்யேக வைத்தியர் ஊரில் யாருமில்லை என்றாலும் மருத்துவமனைக்கு கூட்டி போவதற்கு ஆட்களை தயார் செய்திருந்தான்.

கழுதைகள் ஆட்களுக்கு சிரமம் தராது தள்ளுவண்டியில் ஏற்றப்பட்டன. நான் அதன் தலையை பற்றி கொண்டபோது ஆசுவாசமாய் பார்த்து பிதற்றின.

மாடசாமிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் பிழைப்பில் கழுதைகள் மிக முக்கியமானது. அவன் மனிதர்களோடு கொண்டிருக்கும் உறவில் இருந்து அற்புதமான பிளவை இந்த கழுதைகள் தனக்கு தந்திருப்பதாக உணர்ந்தான்.

விலங்குகள் ஒருமுறை மட்டுமே இறக்கிறது. ஒருமுறை மட்டும் இறப்பதால் அவை உண்மையான மரணத்தை உண்மையாக அனுபவிக்கிறது. மனிதனின் உல்லாச வாழ்க்கைக்கு இந்த மரணசுகம் ஒரு தூசிக்கும் சமம் இல்லை என்றான்.

மனிதன் அறிவை சுவாசிப்பவன். அவன் அறிவதன் தத்துவம்.
ஒரு பெரிய முகமூடி மீது எந்த பசியும் உருவாகாதபோது அவனை விலங்கொடு ஒப்பிடுவது சாத்தியம் இல்லை என்றேன்.

மாடசாமி, தந்திரங்களை வாழ்க்கை என்பாயா என்று கேட்டான்.

தந்திரங்கள் எப்போதும் மனிதனை பதனப்படுத்திய மிருகமாகவே வைத்திருக்கின்றன. நான் முழு வாழ்க்கையை ஒரு வரலாறாக பார்க்க மாட்டேன். அதில் அழிக்கப்பட்ட ரகசியம் மறைக்கப்பட்ட மர்மம் இவைகளின் பின்னால் எப்போதுமிருக்கும் தத்தளிக்கும் மனிதாபிமானத்தை பார்க்க விழைகிறேன் என்று அவனுக்கு சொன்னேன்.

மனிதாபிமானம் அப்படியொன்றும்  கூச்செறியும் உணர்வல்ல. மேலும்  போர்க்களத்தில் அது துவண்டு விழுந்து கிடக்கும் என்றான்.

நாம் இதுபற்றி நிறைய பேச முடியும் ஆனால் இந்த இரவு என் நினைவுகள் என் கழுதைகளுக்கு உரியது என்று கூறிய மாடசாமியிடம் விடைபெற்றேன்.