Category Archives: முதல் தொகுப்பு

ரயில்வே ஸ்டேஷன்

கொஞ்சமாய் இடுப்பு தணிந்து ஒரே தாவாய் தாவி திட்டை பிடித்துக்கொண்டு லாவகமாக திரும்பி இரும்பு கம்பியை பற்றியபடி லகுவாக பிட்டத்தை சிமெண்ட் பிளாக்கில் அழுத்தி வைத்து இப்போது தான் நன்றாக அமர்ந்து கொண்டோம் என்பதை உறுதியாக முடிவெடுத்த  அந்த மனதுக்கு அடுத்த ஆதரவாக ஒரு சிகரெட்டை பற்ற வைக்கும்போதே மூன்றடி நீளம் உள்ள அந்த சிறிய பாம்பு ஒரு கரும்பச்சை நூல் உயிர் கொண்டது போல விலுக்கென்று படபடத்து புதருக்குள் மறைந்ததை பார்த்து கொண்டே புகையை விட்டான் செந்தில்.

அது காலாவதியான ஒரு பழைய ரயில்வே ஸ்டேஷன். இன்னும் மேற்கூரை இரும்பு கிராதிகளும், மஞ்சள் பிளாட்ஃபார்மும் அப்படியே இருந்தன.

அங்கே எல்லோரும் எதற்கெதற்க்கோ வருவார்கள். போவார்கள். ரயில் வந்த காலத்தில் பயணிகள் மட்டும் வந்தார்கள். இப்போது பயணிகள் தவிர மற்றவர்கள்.

செந்தில் அடிக்கடி தனியாக வருவான். அந்த இடத்தில் அமர்ந்து தனியாக ஒருவன் சிகரெட் குடித்தால் அது செந்திலாக மட்டுமே இருக்கும்.

அவனுக்கு இப்போது சீ என்று இருந்தது.

அவன் மனம் மட்டும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

அம்மா அப்பா தங்கை இந்த உறவுகளை அவன் இப்போது தூக்கி எறிந்து விட்டு வந்திருக்கிறான். அவர்கள் அந்த அழகான பாம்பை விட மோசம்தான்.

உறவுகள் என்பது என்ன அவைதான் இனி எதற்கு என்பதே சமீபமாய் அவன் அவனுக்குள் கேட்டு கொண்டே இருக்கிறான்.

தன்னை சுற்றி எப்போதும் எதுவோ பேசி கொண்டே இருப்பவர்கள்  எப்போதும் சமைப்பவர்கள் யாராயினும் அது உறவா?

செந்தில் சலித்து அதில் இருந்து வெளியேறும் தருணம் பார்த்து இருந்த போது இன்று அது கிடைத்தது.

சாப்பிடும்போது கொஞ்சமாய் கீழே தங்கை சோற்றை சிந்தி விட்டாள். அவளை லேஸாய் ஒரு தட்டு தலையில் தட்டியதும் குடும்பத்தில் ஆவேசம் பேய் பிடித்து ஆட்டியது.

போன மாதத்தில் இருந்து ஆரம்பித்து அந்த பெர்பெக்க்ஷனிஸ்டை காய்ச்சி எடுத்து விட்டது.

அங்கேயே மனதை உதறிவிட்டு செருப்பை போட்டுக்கொண்டு வெளியில் வந்து…இதோ இங்கே…

அவனுக்கு குடும்பம் தன் திமிர் மறைத்த ஒரு நிறுவனமாகவே தெரிந்தது. அவரவர்க்கு உரிய பீடத்தில் கொஞ்சமும் தளுக்கு குறையாத அதிகாரத்துடன் இருந்தது.

இவர்கள் அனைவரும் யார் இவர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கேள்விகள் அவனை துளைத்தன.

ஒருநாள் அப்பா அவன் “காதுபட கெஸ்ட் வரார். சோத்தை போடு கற்பகம்” என்றார்.
அவன் தங்கை சாந்தியிடம் ‘என் அண்ணன் ஒரு எருமமாடு’ என்கிறாள்.

செந்தில் இவற்றுக்கு பதில் கூறும் இடத்திலும் கேள்வி கேட்கும் இடத்திலும் ஒருபோதும் இருந்தது இல்லை. தங்கள் அவலத்தை கையால் ஆகாததனத்தை வேறு எப்படி அவர்களால் தீர்க்க முடியும்.

அவர்கள் வெறும் அவர்கள் மட்டுமே.

செந்தில் சிகரெட்டை விசிறிவிட்டு எதிர் சாலையில் வருவோர் போவோரை பார்த்து கொண்டிருந்தான். கண்ணபிரான் மாமா வயலுக்கு போய் விட்டு சைக்கிளை ஓங்கி மிதித்து கொண்டு போனார். பார்த்தால் நிச்சயம் கை அசைத்து இருப்பார்.

செந்திலுக்கு தன்னை தானே இந்த கணம் அனாதையாக்கி கொண்டது பெரும் சுமையை தள்ளி விட்டது போல் இருந்தது.

இனி யாரும் வேண்டாம் என்ற கெக்களி ஓசையை மனம் பாடிக்கொண்டே இருந்தது.

இருந்த வரையில்தான் யார் அவனுக்கு என்ன செய்தார்கள் என்பதை விடவும் செய்த அனைத்து விஷயத்திலும்  அவர்கள் எங்கே என்னவாக இருந்தார்கள் என்பதுதான் எல்லா வேதனைகளின் முழு உச்சம்.

ஓரிரு மனிதர்களோடு இருந்திருக்கிறோம் அவர்களின் நகல் இந்த உலகம் முழுக்க இருக்கிறார்கள் என்றே நினைத்தான்.

அம்மாவை நினைக்கும்போதுதான் அவனுக்கு இன்னும் குமட்டி கொண்டு வந்தது. செந்திலின் எம்ஃபில் கைட் அழகுமூர்த்தி பலமுறை அவனுக்கு சொன்னார். இதே யூனிவர்சிட்டியில் ஒரு தற்காலிக வேலை இருக்கிறது முதலில் சேர்ந்து கொள் பின் பார்த்து கொள்ளலாம் என்றார். அம்மாவை அம்மாவால் பார்த்து கொள்ள முடியும் என்றார்.

வீட்டோடு போனால் வயலை பார்த்தும் குடும்பத்தை பார்த்தும் உதவியாக இருக்க முடியும் என்று அவன் நினைத்தபோது அவனை அன்று இப்படி சனி நினைக்க வைத்திருக்கும் என்று தெரியாது போனது.

வீடு அவனை எப்போதும் விரும்பவில்லை என்பதை காலம் கடந்து புரிந்து கொண்டான். என்ன செய்ய முடியும்?

செந்தில் இன்னொரு சிகரெட் எடுத்த போது மாரிமுத்து வந்து அமர்ந்தான்.

இருவரும் ஒன்றும் பேசி கொள்ளவில்லை. ஒரே வயது. ஒரே வாழ்க்கை. என்ன பேச வேண்டும்?

செந்தில் இப்போது கொஞ்சம் தெளிவாய் இருப்பது போல் உணர்ந்தான். காலடியில் எதுவோ நழுவி விட்டது போலவும் எது தொலைந்து போக வேண்டுமென்று விரும்பினானோ அது சத்தமின்றி எங்கோ சென்று மறைந்து விட்டதை போலவும் இருப்பதாக நினைத்தான்.

ஒருவருக்கொருவர் வாழ்வது உண்மையில் பரஸ்பர கேளிக்கையாக மட்டுமே செந்திலுக்கு பட்டது.

மனிதன் அவசரகுடுக்கை. நன்றாக யோசித்து முட்டாளை போல் முடிவு செய்வதில் அவனை மிஞ்ச யாரும் இல்லை.

போலி மரியாதைகளில் மித மிஞ்சிய போதையோடு வாழ்வதற்கு அவனால் மட்டும் சாத்தியம் என்றெல்லாம் நினைத்து கொண்டே புகைத்தான்.

‘வீட்டுக்கு போலாமா செந்திலு. அப்படி இப்படித்தான் இருக்கும். என்ன செய்யறது. பொழுது சாயுது. போவோமே’.

செந்தில் அந்த சிகரெட் அணைத்த போது அதே பாம்புக்குட்டி இன்னொரு பாம்புக்குட்டியோடு வரப்பின் கரையேற முயற்சி செய்தது. ஒன்றின் மீது ஒன்று வழுக்கி விழுந்து அவசரமாய் ஊர்ந்தது.

இப்போது இருள் சரியும் வேளையில் அதன் பொதுவான பயங்கள் மறைந்து பசியின் அவஸ்தை மட்டுமே இருந்தது.

ஒரே முடிவுதான் அவைகளுக்கு இருந்தன. ஒன்று உணவை பெறுவது அல்லது உணவாய் மடிவது. இரண்டுமே அந்த குட்டிகளுக்கு ஒன்றுதான் என்பது அந்த நண்பர்களுக்கு தெரியும்.

பாம்புகள் நேர்மையானவை.

போலாமா செந்திலு…காலுக்கு கீழேயும் பாம்பு வர்ற நேரம்…

செந்தில் கேட்டான்…ஏண்டா இவங்க இப்படி ஆயிட்டாங்க?