Category Archives: இலியிச்

93. இலியிச்

தன்னை எப்போதும் எதனூடும் ஒப்பிட்டு கொண்டிருக்கும் மனிதன் தன்னை சுயமாய் அளவிடும்போது மட்டுமே தான் தத்துவத்தில் மட்டுமே முளைத்து உயிர் விடக்கூடியவன் என்று நினைத்து கொள்கிறான். இதைத்தான் நான் கண்டுபிடித்தேன் என்று அருணாசலம் மாங்காடு போகும் வழியில் கூறினான்.

நடப்பயணமாகவே நாங்கள் அங்கு சென்று கொண்டிருந்தோம்.

விளக்க முடியுமா என்று கேட்டேன்.

விஞ்ஞானிகள் கூடி இருக்கும் அரங்கத்தில் பொன்னாங்கனுக்கு என்ன பதவி… என்று கேட்டான்.

பொன்னாங்கன் உள்ளூரில் ஸ்வாமி தேரில் ஊர்வலம் வரும்போது தீவட்டி பிடித்து கொண்டு மௌனமாக வருவான்.

அர்ச்சகர் சூடத்துக்கு ஒளி ஊட்டுவது அவன் வேலை. அவன் வாழ்நாள் முழுக்க அதில்தான் கழிந்தது. அப்படி ஒரு வாழ்வை அவனுக்கு இதுதான் உன் வாழ்க்கை என்று தீர்மானித்தது யாரின் குற்றம் என்று அருணாச்சலத்திடம் ஒருநாள் நான் கேட்டிருந்தேன்.

மெய்மையின் தத்துவங்கள் சில நியதிகள் கொண்டு இயங்கும்போது நீயும் தீவட்டி ஏந்த வரலாம் என்றான்.

மனிதன் தன்னை அறிவதற்கு எந்த அவசியமும் இல்லை. அவன் சில முகங்களை சில தகவல்களை சில விபத்துக்களை சில உணர்ச்சி பெருக்கிடும் சம்பவங்களை கேட்டு குறிப்பெடுத்து அவன் வாழ்க்கைக்குள் தேவையான பயங்களையும் எச்சரிக்கைகளையும் குறிப்புகளாக வரைந்து வைத்து கொள்கிறான்.

தடித்த கற்கள் சிற்பங்களைப்போல் தோன்றுவது அவனை ஒருபோதும் துன்புறுத்துவதில்லை. நீ என் மூலமாகவும் நான் உன் மூலமாகவும் அந்த கற்பனைகளை தாண்டி உடைத்துக்கொண்டு வெளியேற விரும்புகிறோம்.

தத்துவம் ஒழுக்கங்களை மட்டும் போதித்து தண்டனைகள் வழங்குவது என்றால் ஒரு பிரபலமில்லாத நீதிபதி அதை செய்யவோ முடக்கவோ முடியுமே என்றேன்.

கவனித்து பார்த்தால் இவற்றின் முழு பின்னணி அதிகாரத்தில் மட்டும்தான் ஊன்றி நிற்கிறது என்றான்.

ஒருவன் நம் மீது காட்டும் அதிகாரத்தில் நம் பங்கும் இருக்கிறது. நம் தேவைக்கு உரியதை பெறும் அளவுக்கு நம் மீது அதிகாரம் பாய்ச்சப்படுவதை அனுமதிக்கிறோம்.
இவை அனைத்தும் முன் பின்னாக எந்த சிந்தனையின் வடிவத்திற்குள்ளும் நாம் பொருந்தி போகவில்லை என்பதையே காட்டுகிறது.

முடிவாக….

அருணாசலம் என்னை பார்த்தான்.

குடும்பம், சுற்றம், அரசியல், சமூகம், கழகம், சங்கம், ஃபெடரேஷன் எல்லாமும் சகதியில் சிக்கி இருக்கிறது.

சகதியில் நடந்து கொண்டே இருப்பதில் பழகிவிட்டால் அதுவும் சுகம்தான் என்றேன்.

நாங்கள் ஒருவர் கையை ஒருவர் இறுக்கி பற்றி கொண்டோம். எதிரில் பெரிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது.

92. இலியிச்

இருளை இன்னும் இருட்டாக்க மட்டுமே முடிந்திருக்கிறது. ஒளியின் மீது வெளிச்சத்தை பாய்ச்சி என்ன ஆக போகிறது?

உலகநாதன் கடையில் மிக வாசனையாக ஊதுபத்திகள் கிடைக்கின்றன. பெருமாள் கோவிலை ஒட்டிய சந்தில் அவனின் சின்னஞ்சிறு கடை இருக்கிறது. மண் விளக்கு அகல் விளக்கு இலுப்பை எண்ணெய் பூஜை எண்ணெய் என்ற சகலமும் கிடைக்கும்.

அவன் அப்பா அதே கடையில் இருந்து வாழ்ந்து முடித்து விட்டு போனார். அவர் காலத்தில் அந்த கடைக்கு பழைய பிராமண மாமிகள் அவ்வப்போது வந்து திரிநூல் மட்டுமே வாங்குவார்கள்.
சுப்பையா ரொம்ப பாவம் என்றுதான் சொல்வார்கள்.

சுப்பையாவின் இந்த பெருமாள் கைங்கர்யம் அவரளவில்நேர்மையாக இருந்தபோதும் வியாபாரத்தில் மட்டும் வளமற்று செல்வமற்று இருந்தது.

ஆயினும் ஆபத்துக்கு பாவமில்லை என்பதால் கல்லாவுக்கு கீழ் ஊரின் இளசுகளுக்கு வேண்டி ரகசிய விற்பனைக்காக லாஹிரி வஸ்துக்கள் இருந்தன.

காட்டாமேட்டு ஆட்கள் மூலம் சரக்கை வாங்கி கைமாற்றி தன் லௌகீக வாழ்க்கையை அவர் ஒருவாறு சமாளித்து கொண்டிருந்தார்

சொந்தமாய் ஒரு வீடும் லாட்டில் ஒரு பெண்ணையும் சேர்த்து கொள்ள போதுமான தொகை அவருக்கு வந்து சேர்ந்தது. எப்படியோ சுப்பையாவை பெருமாள் கைவிடவில்லை.

80’களின் இறுதியில் நாளிதழ்களில் ஜோதிடகணிப்பு வலுத்து மக்கள் கூட்டம் கோவில்களில் பெருக்கெடுக்க ஆரம்பித்தபோது உலகநாதனுக்கு வருமானம் கொட்டியது.

தந்தையின் நறுக்கு திறமை அவனுக்கு இல்லை என்றபோதும் பட்டை அடித்து பூணுல் கழுத்தில் தெரிய கல்லாவில் பெருமாளே கதி என்று கிடப்பான்.

வாய் பெருமாளின் ஸ்தோத்திரங்களை பிழைபட முனகி கொண்டே இருக்கும்.
மேல்தெரு செம்பகவல்லி ஒரு மார்பை காட்டிக்கொண்டு அடிக்கடி அங்கே வருவதற்கு சனியோ ராகுவோ உதவிக்கொண்டே இருந்தார்கள்.

பெரியாரை தெரியுமா என்று அவனிடம் ஒருநாள் கேட்டேன். இந்த ஐயருங்க கொட்டத்தை அவருதான் ஒடுக்கினாரு. இல்லாட்டி தளப்பிரட்டு பசங்க நம்மளை அமுக்கியிருப்பானுங்க என்றான்.

பூணுல் ஏன் அணிகிறாய் என்று கேட்டபோது என்ர நயினா சொல்லி இருக்காரு கழட்ட கூடாதுன்னு… கோவில் கோபுரம் பார்த்து கன்னத்தில் இட்டு கொண்டான்.

செம்பகவல்லி அப்போது அங்கே வரவும் நான் எழுந்து சென்றேன்.

91. இலியிச்

மாடசாமியின் இரண்டு கழுதைகள் நோயுற்று இருந்தபோது பார்க்க போய் இருந்தேன். அவை பிதற்றல்களோடு கனைத்து செருமி கொண்டிருந்தன.

அதற்கென்று பிரத்யேக வைத்தியர் ஊரில் யாருமில்லை என்றாலும் மருத்துவமனைக்கு கூட்டி போவதற்கு ஆட்களை தயார் செய்திருந்தான்.

கழுதைகள் ஆட்களுக்கு சிரமம் தராது தள்ளுவண்டியில் ஏற்றப்பட்டன. நான் அதன் தலையை பற்றி கொண்டபோது ஆசுவாசமாய் பார்த்து பிதற்றின.

மாடசாமிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் பிழைப்பில் கழுதைகள் மிக முக்கியமானது. அவன் மனிதர்களோடு கொண்டிருக்கும் உறவில் இருந்து அற்புதமான பிளவை இந்த கழுதைகள் தனக்கு தந்திருப்பதாக உணர்ந்தான்.

விலங்குகள் ஒருமுறை மட்டுமே இறக்கிறது. ஒருமுறை மட்டும் இறப்பதால் அவை உண்மையான மரணத்தை உண்மையாக அனுபவிக்கிறது. மனிதனின் உல்லாச வாழ்க்கைக்கு இந்த மரணசுகம் ஒரு தூசிக்கும் சமம் இல்லை என்றான்.

மனிதன் அறிவை சுவாசிப்பவன். அவன் அறிவதன் தத்துவம்.
ஒரு பெரிய முகமூடி மீது எந்த பசியும் உருவாகாதபோது அவனை விலங்கொடு ஒப்பிடுவது சாத்தியம் இல்லை என்றேன்.

மாடசாமி, தந்திரங்களை வாழ்க்கை என்பாயா என்று கேட்டான்.

தந்திரங்கள் எப்போதும் மனிதனை பதனப்படுத்திய மிருகமாகவே வைத்திருக்கின்றன. நான் முழு வாழ்க்கையை ஒரு வரலாறாக பார்க்க மாட்டேன். அதில் அழிக்கப்பட்ட ரகசியம் மறைக்கப்பட்ட மர்மம் இவைகளின் பின்னால் எப்போதுமிருக்கும் தத்தளிக்கும் மனிதாபிமானத்தை பார்க்க விழைகிறேன் என்று அவனுக்கு சொன்னேன்.

மனிதாபிமானம் அப்படியொன்றும்  கூச்செறியும் உணர்வல்ல. மேலும்  போர்க்களத்தில் அது துவண்டு விழுந்து கிடக்கும் என்றான்.

நாம் இதுபற்றி நிறைய பேச முடியும் ஆனால் இந்த இரவு என் நினைவுகள் என் கழுதைகளுக்கு உரியது என்று கூறிய மாடசாமியிடம் விடைபெற்றேன்.

90. இலியிச்

ஹிந்தி ஸ்கூல் வாசலில் கவிதாவை பார்த்தேன். ஒற்றை விரலை காட்டி சற்று நேரம் நிற்கும்படி சொன்னாள். நானும் காத்திருந்தேன்.

வேகமாய் டுடோரியல் கதவை மூடிவிட்டு என்னுடன் நடக்க ஆரம்பித்தாள். அதுவரை அவளிடம் இருந்த புன்னகை மாறி கோபம் மட்டும் இருந்தது.

நீங்க கெட்ட வார்த்தை பேசுவீர்களா? என்றாள்.

அவள் கேட்டிருக்க கூடும் அல்லது எழுதியதில் ஏதேனும் படித்திருக்கலாம்.

எனக்கோ ஒரு நான்கு வரி பேசினால் அதில் மூன்று வார்தைகளாவது அப்படி இருக்கும். என் கவலை ஒன்றுதான். சொல்லும் கெட்ட வார்த்தை சரியான வரியில் சரியான கோணத்தில் சரியான விகிதத்தில் சரியான தொனியில் சரியான பார்வையில் வந்து விழ வேண்டும். இதற்கு ஒத்திகை பார்க்கவும் தயார் என்றேன் நான் ஒருமுறை தவானிடம்.

கவிதா சிடுசிடுத்தாள். அத்தனையும் பெண்களின் உறுப்புகள் பற்றிய கொச்சை பார்வை. அதிகாரத்திமிரின் ஆணவம். இதை உணர்ந்தது உண்டா?

ஆண்களுக்கு இணையாக பெண்கள் கூட வண்ணமாக பேசுகிறார்கள். அது எண்ணிக்கையில் பார்க்க சொற்பமே என்றாலும் நிறைய அளவில்தான் பேசுகிறார்கள்.

சொல்லும் வார்த்தைகளுக்கு தீவிர சக்தி உண்டானால் உலகம் அழிந்து இருக்கும். ஒரு வாயத்தையின் முன்பாக கவிழ்ந்து உடையும் குறுகிய மனம் பெண்களுக்கு இருந்தால் அது வார்த்தைகளின் குற்றம் அல்ல.

ஒரு ஆண் பெண் வாயில் இருந்து வரும் கெட்ட வார்த்தைகளில் லயித்து நின்றால் அது மனநோயின் அடையாளம். ஒரு பெண் அதை கேட்டு துன்புறுவது அவள் காப்பாற்றி கொண்ட அடிமைக்குணத்தின் முழு அடையாளம்.

சர்வ சுதந்திரம் என்பதில் எந்த விழிப்புணர்ச்சியும் இல்லாதபோது அல்லது அதை தவற விடும் பொழுது மனம் ஆபத்துகளை விரும்பி ஏற்கிறது.
உயிர் போகும் அபாயத்திலும் கூட அது விபத்துகளை விரும்பி ஏற்கிறது.

அப்படித்தான் இந்த வார்த்தைகளும். அது ஒன்றை நிறைவேற்றி கொள்ள தூண்டுகிறதே தவிர ஒன்றை உணர்த்த அல்ல. அந்த நிறைவேற்றம் என்பது காமம் சார்ந்து இருக்க வேண்டியது அல்ல ஆதி அறிவு சார்ந்த தேடலை நோக்கியதாகவும் இருக்கலாம்.

இதை சொல்ல விரும்பினாலும் கவிதா எப்போதோ போய் போட்டிருந்தாள்.

வாழ்க்கையில் யார் முன் எப்போது எங்கே போகக்கூடாதோ அங்கே நான் நிரந்தரமாய் தங்கி இருக்கும் உணர்வு எனக்கு வந்தது.

89. இலியிச்

மூர்த்தி மாடிக்கு வந்து என் படுக்கை அருகே நின்றுகொண்டான். அது காலை எட்டு மணி.

விலங்குகளால் முடியாதது மனிதன் தன் இரு கால்களால் நிமிர்ந்து நிற்க முடிகிறது என்றான்.

ஆயினும் அவன் மனம் மட்டும் பஞ்சடைத்து போய் இருப்பதை என்ன செய்ய முடியும்? முறுக்கி நிற்கும் வில் போல் இருக்கத்தவறிய பின் அவன் எத்தனை உயரமாக நின்றாலும் என்ன ஆக முடியும் என்று கேட்டேன்.

நீ நூற்றாண்டுகளை அவமானப்படுத்த ஆவல் கொண்டவன். சரித்திரத்தில் உலோகங்களின் சத்தம் கேட்டு கொண்டே இருக்கும். போர் வீரர்களால் கூடுகளுக்குள் நுழைய முடியாதது  என்பது ஒன்றும் அவமானம் அல்ல.

இப்படி கூறிவிட்டு என் தலைக்கு அருகில் இருக்கும் காம்யூவின் புரட்சியாளன் புத்தகத்தை எடுத்து புரட்ட ஆரம்பித்தான்.

சற்று நேரம் அமைதியாக கழிந்தது.

இப்படி ஒவ்வொன்றையும் அழித்து கொண்டே போவதில் கேள்விகளோடு மட்டும் போராடுவதில் என்ன சாதிக்க முடியும்? நீ கால்களை வானத்தில் வைத்து கொண்டிருக்கிறாய். உவமைகள் மீதும் உருவகங்கள் மீதும் ஆத்திரங்களை கொட்டி தீர்க்கிறாய். கவிதைகளின் எதிரி நீ என்பதில் சந்தேகமில்லை என்றான்.

உன்னை மறந்து நீ சிரித்த நாளை நினைவில் கொண்டு வர முடிகிறதா என்று அவனிடம் கேட்டேன்.

மிருகங்கள் உயிர் அச்சம் கொண்டு வாழும்போது என் தற்காப்பு சற்று கூடுதலாகவே இருக்கும். இருக்க வேண்டும். மனிதனின் சாத்தியங்கள் அசாதரணங்களை நோக்கி பயணம் செய்வது என்றான்.

வாழ்க்கையை வயதால் பிரித்து ஆள்வது சித்தாந்தங்களுக்கு உவப்பான விஷயமா தேர்வுகளா நடைமுறை மீதான அவசியமா? இவை அனைத்துமெனில் நீ உன்னை மட்டும் பிறரை சார்ந்திருக்க தூண்டுவது அபத்தம் அல்லவா என்றேன்.

நன்கு விடிந்து விட்டது. பணி புரியும் நேரம். நீ என்ன செய்ய போகிறாய் என்று கேட்டான் மூர்த்தி.

மீண்டும் தூங்க போகிறேன் என்று சொன்னதோடு நிற்காமல் நான் இழுத்து போர்த்தி தூங்க ஆரம்பித்தேன்.

88. இலியிச்

பக்திக்கதைகளிலும் அவைபோக நீதிக்கதைகளிலும் மனம் பறி கொடுத்திருந்த மங்கையற்கரசியை வாலாந்தூரில் சந்திக்க நேர்ந்தது.

அம்மன் கோவிலில் கற்பூரநாயகியே என்று நீ பாடிக்கொண்டிருக்கும்போது என் காதலிகளுடன் ஆன்லைனில் கொஞ்சி கொண்டிருப்பவன் நான் என்றேன்.

ஒரு பெண் மட்டுமா என்றாள்.

இல்லை. சில பெண்களுடன்…மேலும் சில சமயம் விடிய விடிய… என்றேன்.

நீங்கள் அவநம்பிக்கையின் உச்சத்தை நெருங்கி விட்டதால் இந்த நிலை என்று கூறிய பின் சற்று நேரம் அவள் மௌனம் கொண்டாள்.

பின் எழுபதுகளில் உச்சத்தில் இருந்த ஒரு நாடக நடிகையை குறிப்பிட்டு அவள் அன்றைக்கு எல்லாம் பிராந்திய மொழி பட இயக்குனர் தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதிகளின் தீராத காமத்தின் அடையாள சின்னம். இப்போது ஒரு மதத்தில் இணைந்து தன்னை புனிதப்படுத்தி கொண்டிருக்கிறாள். அதை நான் அவளின் ஆன்மாவின் விடுதலையாக நம்புகிறேன்.
நீங்களோ சாஸ்திர விரோதம் பூண்டவர் உங்களின் இந்த நிலையற்ற போக்கு விதியின் பாற்பட்டது. மாற்றம் வரும் என்றாள்.

என் விரோதங்கள் துதியின் மீது கடவுள் மீதோ அல்ல. நீங்கள் துதிப்பது எல்லாம் உங்களையே போற்றி போற்றி துதிப்பது மட்டுமே என்று சொன்னேன்.

மேலும் அந்த பாவனைகள் மெதுவாய் தன்னிலை இழக்கும் சாதனம் தவிர உண்மையின் நிழலை கூட அணுகுவது இல்லை.

இதுவும் பெரியாரிசம் என்று சிரித்த மங்கையர்க்கரசி துளி விபூதியை என் நெற்றியில் கீறி விட்டு சிரித்தாள்.

பெரியார் நினைத்திருந்தால் அவர் கடவுள் மறுப்பு கொள்கையை அதி அற்புதமான செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருக்க முடியும். அதை விடுத்து சேட்டைகள் மட்டுமே செய்தார்.

இன்று அது ஜாதி சண்டியர்களை மட்டுமே உண்டாக்கி வைத்திருக்கிறது. அவர் தொண்டர்கள் கால சக்கரத்தில் நசுங்கி விட்டனர். அல்லது மேல்பூச்சு கம்யூனிஸ்ட்கள் இடுப்பில் அமர்ந்து கொண்டனர்.

நீங்கள் தவிர்க்க விரும்பும் தத்துவம் என்னவோ அது எனக்கு தெரியவில்லை. ஆனால் நீதிக்கதைகளை வாசித்து அதை பரப்பும்போது நிம்மதி கிடைக்கிறது இதை உண்மையாக செய்கிறேன் என்ற அவளை பார்த்து கொண்டிருந்தேன்.

கல்வியின் பெயரால் இன்று இருக்கும் அதிகாரத்தை பேராசையை பதவி அடுக்குகளை நோக்கி நீதிக்கதைகள் வைக்கும் விமரிசனம் என்ன என்பதை ஒருமுறை ஆய்வு செய்து பார்க்க நீ விரும்ப வேண்டும்.

மேலும் உன் குழந்தைகள் பள்ளியில் கற்று கொள்வதில் இருந்து என்ன விழுமியங்களை நோக்கி செல்கிறார்கள் என்பதை ஒருநாள் நீ ஆன்மீகத்தோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டேன்.

அவளிடம் விடைபெறுமுன் அவளே கூறினாள். காமமும் வெறும்  மாயை நினைவில் இருக்கட்டும்.

வாழ்க்கை நித்தியமானதா என்று கேட்டு அவளை துன்புறுத்த விரும்பவில்லை.

மதுரைக்கு வந்து சேர்ந்தேன்.

87. இலியிச்

தன்னுடைய எண்ணத்தில் ஆசையில் கொப்புளிக்கும் சமூகசேவை குறித்த சிந்தனைகள் ஒருபோதும் தன் காரியத்தில் லட்சியத்தில் இல்லாதபடி பார்த்து கொள்வதில் அற்புதமேரி கவனத்தோடு இருப்பாள்.

அவள் உருகி உருகி தனக்குரிய கும்பலை கூட்டமாக மாற்றும் கலை அறிந்தவள். அவள் கண்ணீர் மற்றும் அவளை போன்றவர்களின் கண்ணீரையும் சேர்த்து ஒன்றாக உருக்கி தேசத்தையே அதில் தளும்ப வைப்பதில் காரியக்காரி.

துக்கம் விரசமான பார்வையின் இன்னொரு பக்கம். காமத்தின் வாதையில் கண்ணீர் வருவது போன்றுதான் இந்த ஏற்பாடும் உடலால் ஆனது.

அறிவின்மையின் மாற்று வடிவமே கள நிலவரத்தின் உண்மையை பொறுக்க முடியாது அழுகையில் வெடிப்பது அல்லது அப்படி அழுவதாக நடிப்பது.

உனக்கு நீயே உறுதியற்ற குரலில் சொல்லி கொள்வது அனைவரின் நலனே என் நலன் என்ற வாக்கியம்…
இதை நீ புரிந்து கொள்ள முடிகிறதா என்று அவளிடம் வெளிச்சி நீரோடை அருகே இருக்கும்போது கேட்டேன்.

அவள் மொழி சாதாரணமாகவே இருந்தது. அவளின் நீண்ட நிறுத்தம் இல்லாத பேச்சில் என்னால் அவளை எளிதில் கணிக்க முடிந்தது.

அவளுக்கு தேவை அவளையொத்த சிற்சில பெண்கள் மட்டுமே. அவளும் அவள் தோழிகளும் கர்த்தரிடம் விசுவாசித்து அழுது புலம்பும்போது அந்த இணையற்ற பிரார்த்தனையில் சாம்பலாகும் பாவங்களை விடாது சொல்லிக்கொண்டே இருந்தாள்.

அவை பெரும்பாலும் குடும்பத்தோடு ஓரிரு வரிகளில் பேசி சரி செய்து கொள்ள முடிந்த கற்பனை பிரச்சனைகள் மட்டுமே.

மேரியை தோளில் தட்டி உனக்கு ஆறுதலென்று என்னிடம் எதுவும் இல்லையம்மா… உன் கூட்டத்துக்கும்…
என்று அனுப்பி வைத்தேன்.

மழுங்கி போகும் அறிவை விடாது காப்பாற்றிக்கொள்ளும் உத்திகள் மற்றும் அதன் சிந்தனைகளை தகிக்க வைத்து வேண்டிய அளவுக்கு உயிர்ப்பு அடைய செய்வதற்கு தேவையான புத்தகங்களும் அதன் ஆசிரியர்களும் நிரம்பி இருக்கும் உலகம் இது.

அவர்கள் எழுதப்பட்ட விதியை அழித்து புதிய விதியை எழுதுகிறார்கள். வார்த்தைகளில் ஹார்மோன்களின் ரசம் பீறிட்டு கிளம்பி எந்த மூளையையும் சூடேற்றுகிறது.

எவரால் தன் துயரத்துக்கு எளிய நேர்மையான வழிகளை கண்டடைய முடியவில்லையோ அவர்களே பெருமளவில் சமூக சேவை எண்ணங்களில் திளைக்கின்றனர். வெறும் திளைப்பு மட்டும்தான். காரியத்தில் தன் கூட்டத்தோடு பின்வாங்கி ஒளிந்து கொள்வார்கள்.

இவர்களை சமூக அந்தஸ்து கொடுத்து அதன் காரணிகளாக வைத்து ஆராய்ந்து பார்ப்பதில் எந்த முடிவுக்கும் வர முடியாது.

ஆனால் வாழ்வின் மீது அசைக்க முடியாதபடி சுற்றி பிணைந்திருக்கும் அபத்தம் என்ற ஒன்றின் வாழும் உதாரணங்கள் அற்புதமேரியும் அவள் சார்ந்த குழுவும்…

அபத்தம் என்பதை ஒரு சொல்லொடு மட்டும் நிறுத்தி விட்டு போக முடியாது அது தத்துவங்களின் நீர்மம் என்றான் பைசூர்.

85. இலியிச்

எதைப்படிக்க துவங்கினாலும் அதை முன்பே படித்த உணர்வு வந்து விடுகிறது. செய்யும் காரியங்களில் மட்டும் அந்த உணர்வு இல்லை.

காரியங்கள் என்பது படிப்பின் மீதான அழுத்தம் கொண்டவை. திட்டமிட்ட கோட்பாடுகளில் சாயும் மனதுக்கு வாசிப்பு நிலை கொள்ள முடியாது நீங்கி விடுகிறது.

செயல்கள் இறுதியில் எப்படியோ கைகளை அழுக்காக்கி விடுகின்றன. அழுக்கை வெறுக்க தெரிந்த மனம் கொண்டவர்கள் என்னுடன் சகஜமாக பழகுபவர்கள். உழைப்பில் சேரும் அழுக்கை இங்கே குறிபிப்பிடவில்லை.

கரங்களுக்கு இடையிலான அழுக்கு இதயத்தில் ஏறி நின்று கனமின்றி மறைந்து பெருகியபடி இருக்கிறது. அது யாரையும் உறுத்தும் பொருள் அல்ல. கண்கள் மூளை என அது உறுத்துவதும் இல்லை.

சந்தனபாண்டியன் ஸ்டோரில் இருக்கும்போது பாண்டிமீனாவின் கைகளில் புளியின் மொழுக்கு பார்த்திருக்கிறேன். அவள் சிரிப்பில் புளி நெடி கமழும். புளிக்கும் அவளுக்கும் பந்தம் உறவு எல்லாம் இருக்கும். காகித பைகளில் வட்டம் வட்டமாய் தட்டி அளவு நிறுத்து  உள்ளே திணித்துக்கொண்டே இருப்பாள்.

வாசனை என்பது ஒருவிதத்தில் நம்மை தொடர்ந்து கொண்டே வரும் சாத்தானின் வால் நிழல். சாத்தான் பழக்கத்தின் சவுக்கடி.

இந்த சவுக்கடி மனிதன் மீது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் விழுந்து கொண்டே இருக்கிறது. அவன் தனது நிம்மதியான மரணத்துக்கு தன்னையே நாள்தோறும் கொலை செய்து கொள்கிறான்.

வீட்டில் இருக்க பிடிக்காமல் தெருவில் இறங்கி நடந்தேன். மழை அதற்காக மட்டும் பெய்து கொள்வதுபோல் நினைத்து தூறிக் கொண்டது. இப்போது குடைக்காக வருந்தும் நெஞ்சத்தை எப்படி மனிதன் என்பேன்.

சாலையில் கடமையற்ற ஒருவன் நடப்பது பார்க்கவே எத்தனை அழகு.

83. இலியிச்

உறங்கி எழுந்த பின்னரான விழிப்பு என்பது வேலை செய்யவோ அல்லது சிந்திக்கவோ அல்ல. அது ஒருவிதத்தில் கொடுமையானது என்று அக்கிரஹார வாசுவிடம் சொன்னேன்.

அவன் தாத்தா சுதந்திரப்போரில் ஈடுபட்டு அந்தமான் சிறை சென்றவர். இன்றைக்கு நினைத்து பார்த்தால் அதுதான் என் குடும்பத்தின் தலையாய அவமான நிகழ்வு என்றான்.

விடுதலை என்பது சட்ட விதிகள் மற்றும் ஜனநாயகத்தின் கோணல் முகம்.

மனம் பொதுவெளியில் சிக்கி அல்லலுறும் போது அதற்கென்றே காத்திருந்ததுபோல்  வந்து ஒட்டிக்கொண்டு விடும் இந்த விடுதலையும் அடிமைத்தனமும்  தமக்குள் ஒப்பில்லாத வகையில் சரசம் செய்து கொள்பவை.

ஆமோதிக்கப்பட்ட பின் நிகழ்ந்து முடிந்த கற்பழிப்புதான் தாம்பத்யம் என்று ஆகிறது. கற்பு என்பது சிந்தனையின் நமைச்சல். பெண்ணும் ஆணும் இந்த பொய்மையில் தன்னையே மெய் மறந்து போற்றி கொள்வது அந்த நமைச்சலுக்கு தேவையான சுகமான அரிப்பு.

விடுதலை என்பது சிந்தனையின் நரம்பு. அது பிறக்கும் மிக பலருக்கு இருப்பதே இல்லை என்றான் வாசு.

நாங்கள் அப்போது வீதிகளை கடந்து வரப்புக்கு அப்பால் ஒரு மலையடிவாரம் வரையில் சென்று இருந்தோம். அங்கே பழுதடைந்த குளிர் இருந்தது.

பிரிட்டோவின் நீட்ஷேவை அவனோடு விவாதிக்க விரும்பினேன்.

எங்களை சில பெண்கள் கடந்து போனார்கள். ஒவ்வொருவளையும் மனம் சில கணங்கள் வருடி தழுவி நீங்கியது. அவள்களின் களுக் ஓசைகள் சாய்ந்த அந்தியில் சோர்ந்து மறைந்தது.

நினைவில் போதை ஏற்றி கொள்வது என்பது இதுதான். போதையில் மனம் சொக்கி அலையும் தருணமெல்லாம் நான் விழிப்பை நோக்கி செல்வதற்கு ஆயத்தமாகி விடுவேன். யோனி ஒரு குறியீடு. புராதன வரலாற்று மோசடிகளை அற்புதமாக நிகழ்த்திய சதை.

நினைவில் களிப்பூட்டும் போதையை யோனி மட்டுமா தருகிறது. சிந்தனை, புகழ், இங்கிதமான நைச்சியமான சொற்கள், அங்கீகாரம் தேடி அலையும் மனம்… இவையும் தருகிறது.

நான் இறுதியில் எங்கிருந்து ஒளிரும் விடுதலையை காணவும் அடையவும் முடியும்?

ஆன்மீகத்தை நெருங்க முடியவில்லை. எந்த மதத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கும் சூழ்ச்சி.

மனிதனை சார்ந்து இருப்பதில் இருக்கும் அவலம் குறுகுறுப்பு இவை எல்லாம் பெரும் அவதி. கடமைகளை மட்டும் செய்து கொண்டே இருப்பதில் இருக்கும் அலுப்பு. உழைப்பு என்பது திட்டமிடப்பட்ட ஒரு கபடம்.

இப்போது நிர்வாகம் அது தொழில் சார்ந்தோ அல்லது குடும்பத்திலோ எங்கே வேண்டுமானாலும் அன்பு பரிவு இரக்கம் என்பதான உணர்ச்சிகளின் வழியே மனிதர் மனிதர்களுக்குள் கீறிக்கொள்ளும் உணர்ச்சிகளின் அபத்தமான கூச்சல் மட்டுமே.

பிறந்த முதல் கணத்தில் இவை எதுவும் எனக்கு இருந்ததாக நினைவில் இல்லையே. பின் எப்படி யாரிடமிருந்து வந்து என்னிடம் ஒட்டிய சீழ்…

82. இலியிச்

இது ஒரு நூலகம். புல்லின் கிளர்ந்த பச்சை விரிப்புகள் தாண்டி உள்ளே நுழையும் போது நிம்மதி படர்கிறது.

ஜராதுஷ்டிரன் என்ன சொன்னான்? அவன் என்ன சொல்லி இருக்க கூடாது என்பது எனக்கு தெரியும். நீட்ஷே அதை ஒளிவின்றி எழுதி இருக்கிறான்.

ஆனால் நான் ஒளிந்து ஒளிந்து வாசித்தவன். வகுப்பறைகள் அப்படி.

தான் ஒளிந்து கொள்வது தன்னை மறைத்து கொள்வது  இதுவெல்லாம் ஆற்றல் நிரம்பிய விஷப்பூச்சியின் குணம். செயல். அதனதன் அறம்.

நான் பூக்காத சிறகுகளுடன் இருக்கும் ஒரு பூச்சி.நெளிந்து வளையத்தெரியாத பூச்சி.

என் தெளிந்த ஞானத்தை முதலில் தாய்ப்பால் நாசமாக்கிற்று. மொழி சிதைத்தது. கல்வி கொன்றது. நீண்ட உறவுகள் அழித்தன.

என் தந்தையின் மரணச்செய்தி கடும் துக்கத்தை உண்டாக்கியது. அந்த துயரத்தின் எல்லையில் ஒரு சுதந்திர உணர்வும் அரும்பி இருந்தது எனக்கு முதலில் வியப்பூட்டியது.

பின், ஒவ்வொருவரின் மரணத்துக்கு பின்பும் ஏதோ ஒரு சுதந்திர உணர்வும் நிம்மதியும் எனக்குள் நிரம்பியது.
காலம்தான் அவர்களை என்னிடமிருந்து துண்டித்து ஒவ்வொரு வாசலாக திறந்து விட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

ஆனால் இவை அத்தனைக்கும் ஒரு காரணமிருக்கிறது என்று நூலகத்தில் பிரிட்டோ என்னிடம் சொன்னான்.

என்ன அது?

இயக்கம்.

தெரியாத ஒன்றிலிருந்து மட்டுமே நாம் சாஸ்வதமாக முழுமையை புரிந்து கொள்கிறோம். அது நாம் என்பது  எப்போதும் ஒன்றுமே இல்லை என்னும் உண்மையை என்றான்.

பிரிட்டோ நீட்ஷேவை நம்பி படித்து ஆராய்ந்து பின் அவனை கை விட்டவன். துரதிர்ஷ்டம் தயவின்றி தனது கொலைகளை என் நித்தியத்தில் புதைக்கிறது என்று கூறுகிறான்.

நான் விசனங்களை தொலைக்க விரும்புகிறேன். கடவுளின் பெயரால் அல்ல. கடவுளுக்கு குற்றஉணர்ச்சி கிடையாது.

அது எப்போதும் மனிதம் என்ற ஆரோக்கியமான விதைகளை கொண்டிருக்கும் பட்ட மரம்.
மதத்தின் சாம்பலை விரும்பி அணியும் பரிசுத்தமான தொழுகை.

நான் என்னும் தொடரில் எனக்காகவே மட்டும் எது மிஞ்சி இருக்கிறதோ அதை உணர்ந்து தீவிரமாக அழிப்பது மட்டும்தான் விசனத்தின் சாவாக இருக்க முடியும்.

உங்களுக்கு புரிகிறதா என்று தேஷ்முக் ஒருமுறை கேட்டார். அவர் தானொரு அகோரியாகும் முயற்சியில் அப்போது இருந்தார். இது உபநிஷத் கருத்தா என்று கேட்ட நேரம் மிக மிக நல்ல நேரம்.

எனக்கு ஒரு குழல் நிறைய கஞ்சா அவரிடமிருந்து கிடைத்தது.