Category Archives: இரைச்சல்

86. இலியிச்

எதனொன்றால் நாம் ஒரு பாதிப்பை அடைகிறோமோ அப்போதுதான் வெட்கமோ துக்கமோ நம்மை பாதிக்க துவங்குகிறது.

உண்மையில் இவைகளில் குரூரமே நிரம்பி இருக்கிறது என்று குரங்கணி அன்புசெல்வம் என்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது.

இன்றைய தினம் இப்படித்தான் எனக்கு இருந்தது. அதன் துவக்கமும் சமமற்ற மதியமும் வேதனையை மட்டுமே நினைவுறுத்தி கொண்டிருந்தது.

ஒருவளைக்கூட காதலிக்க அனுமதியாத நெஞ்சத்துடன் எப்படி வாழ்கிறேன் என்பதை கருணை மிக்க சொற்கள் கொண்டு சொல்லவே எனக்கு தெரியவில்லை.

ஒரு பெண் என்னை கலக்கும்போது நான் என்னுள் முழுக்க நிரம்புவதற்கு வாய்ப்புகள் அதிகமென்று குணசீலன் சொல்கிறான். என்னால் அதை கேட்க மட்டுமே முடிந்தது. நம்ப அல்ல.

முதலில் உணர்வுகள் அன்பை உருவாக்கும். அதுவே பின்னர் அதிகாரத்தில் வடிக்கப்பட்டு வன்முறையாக மாறிவிடும் என்று சொன்னேன்.

ஆதரமிருக்கிறதா என்றான்.

வரலாறும் அதன் போர்களும் மட்டுமே ஆதாரம் என்றேன்.

இன்று போர் இல்லை.

வர்த்தகமிருக்கிறதே, அது போதாதா என்றேன்.

தாய் கிடைப்பாளா என்று கேட்க தாய்ப்பால் கிடைக்கும். பிறந்த குழந்தைக்கு தாயை விட தாய்ப்பால் முக்கியம், அந்த பாலை யார் கொடுப்பினும் அந்த சிசு அருந்தும்.

குணசீலன் தெற்கே செல்வதாகவும் மீண்டும் சந்திக்கலாம் என்றும் சென்று விட்டான்.

மாலை நேரம் நோயாளியாக மாறி ஒரு உணர்வற்ற அமைதியை களைப்போடு அனுபவித்து கொண்டிருந்தது.

84. இலியிச்

காரணங்களுக்கு இடையில் கருத்துக்களுக்கு மதிப்பளித்து தன்வயம் இழந்து ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களை நான் சந்திக்க நேர்ந்தது ஒரு மாலை நேரத்தில்.

அவர்களில் ஒருவராவது, நீ  எங்களை போலவே மகிழ்ச்சியானவனா அதே சமயம் நேர்மையானவனா என்று கேட்டால் தலை குனிவேன். அந்தர சுத்தியுடன் இந்த கேள்விகளுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது.

மனிதர்களை சுதந்திரமாக்கி அவர் மனதை மட்டும் அடிமையாக்கி கொண்ட அதே கட்டமைப்புகளை அவனே சமூகம் என்ற பெயரில் தீவிரமாக உருவாக்கி அதற்காக திடமுடன் உழைத்து கொண்டிருப்பவன்.

நானோ எனது குணங்களின் மீது அவநம்பிக்கை கொண்ட மனிதன்.

அது என்னை சுத்திகரிப்பது போன்ற பாவனையுடன் அதிகாரமாக நடந்து கொள்கிறது. என் மீது நம்பிக்கைகள் வைத்து பெருமையான விஷயங்களை அவர்களும் பின் அவர்களோடு இருப்பவர்களும் வைக்கிறார்கள். எனக்கோ மூச்சு திணறுகிறது.

வெளியில் ஒடுகிறேன். கால்களை அச்சம் இயக்குகிறது. சீரழிக்கும் வாழ்க்கையில் மிஞ்சி இருக்கும் ஒற்றை அவநம்பிக்கை மட்டுமே எனக்கு போதுமானது.

அதை கொண்டே கோபமூட்டி கொள்ள எனக்கு இயலும். இரவில் நரகவாசியாக பகலில் சமயங்களை போற்றுபவனாக வாழ்வதில் இருக்கும் வலி எனக்கு தாங்க முடியவில்லை.

பிரிட்டோ வீட்டுக்கு போனபோது அவன் மொட்டை மாடியில் தனியே நின்று பட்டம் விட்டு கொண்டிருந்தான். அப்போது நான் போனது அவனுக்கு எரிச்சலை தந்திருக்கும்.

காற்று உணர்வுப்பூர்வமாக அவனுக்கு தேவையான ஒத்திசைப்பை கொடுத்து கொண்டிருந்தது. நான் ஒரு திட்டின் மீது படுத்து கொண்டேன்.

யாரோ நம்மை பார்க்கிறார்கள் என்ற எண்ணம் வரும்போது எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?

நீ பஸ் ஸ்டாண்ட் அல்லது சந்தைக்கு போய் நடுவழியில் ஒரு சேரில் அமர்ந்து படி. அதுதான் நீ விரும்பும் சுதந்திரம். நீ வருந்துவது போல் நீ பார்க்கும் சந்திக்கும் எல்லோரும் உண்மையில் மனிதர்களே அல்ல. மனிதர்கள் என்பவர்கள் உண்மையில் அளவில் சொற்பமானவர்கள் மட்டுமே.

பிரிட்டோதான் இப்படி சொன்னான்.

38. இலியிச்

அன்பார்ந்த கணேசனுக்கு

இலியிச்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நான் இட ஒதுக்கீடு முறையை எதிர்க்கிறேன். என் நண்பன் பஞ்சாட்சரம் முற்பட்ட வகுப்பினன். அவன் ஆதரிக்கிறான். இந்த முரண்பாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று எழுதிய உனது கடிதம் வந்தபோது நான் ஒரு மலையக கிராமத்தில் இருந்தேன். ஆகையால் அதை நேற்றுதான் பார்க்க முடிந்தது.

நீ வாழ்ந்து வந்த சேரிகள் இனி உன் பிள்ளைக்கு இல்லை என்ற தளத்தை சௌகரியமாக அடைந்தபின் நீயும் அதில் இருந்து மனதளவில் இயல்பாக வெளியேறி விட்டாய்.

பஞ்சாட்சரம் சேரி வாழ் பிரஜை அல்ல. அவரது கற்பனையில் இன்னும் சேரிகளும், அது சார்ந்த தொய்வுகளும் அப்படியே பிரமையாக இருக்கலாம்.

இட ஒதுக்கீடு யாருக்கும் எந்த  சமூக மதிப்பையும் அருளும் வரம் அல்ல. அரசு ஒருவரை தாழ்த்தப்பட்டவர் என்று சட்டமாக சொன்னதை வேறு வழியின்றி இந்நாள் வரையிலும் சமூகம் ஏற்று கடைபிடித்து வந்ததுதான் இந்த மொத்த அவலம். பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை என்ற இனத்தின் குரல்தான்  குஷன் நாற்காலியில் அமர்ந்த பின் தாழ்த்தப்பட்டவர் என்னும் புதுப்பதத்தை கொடுத்தது.

முரட்டு செல்வமும் வறட்டு சிலபஸ் கல்வியும் ஆங்கிலமும் ஒரு மனிதனை உயர்குடியாக மாற்றிவிடும் என்னும் சிந்தனை கீழ்த்தரமான அரசியல் பார்வை. பம்மாத்து நாடகம்.

ஆயினும் கேட்டார்க்கு கேட்ட வரம் அருளும் அரசியல்வாதிகள் இதை மட்டுமே சொல்லி வந்ததன் சீர்கேடும் இதுதான் என்பதன் சாட்சிதான் இன்னும் அழியாது இருக்கும் சேரிகள். குப்பங்கள்.

இங்கு இட ஒதுக்கீடு வளர்ந்து வந்ததன் பின்னணி வயிற்றெரிச்சல் மட்டுமே. அந்த எரிச்சலை அவரவர்க்கு பிடித்த விதத்தில் பிடித்து வைத்து கொள்கின்றனர்.

சிலுவைப்போர்கள், தியானமென் சதுக்கத்து படுகொலைகள், ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ சூழ்ச்சிகள் இவற்றுடன் மண்டல் கமிஷனை சேர்த்து வைத்து பார்த்தாலும் அது தவறில்லை.

இதை சிந்தனையாக்கி பின் லட்சியமாக்கி பின் தத்துவமாக்கி பின் கொள்கையாக்கி அதனாலேயே பிளவுகளை உருவாக்கி பதவியில் குளிர்காய்ந்து காலம் சென்றதும் மெரினா சுடுகாட்டில் படுத்துக்கொண்ட அறிவுஜீவிகள் மிகப்பலர் இந்தியாவின் வர்த்தக “ஜென்டில்மேன்”களுடன் கொஞ்சி குலாவிக்கொண்டு இருந்ததையும் மறக்க முடியாது. தவிர்க்கவும் முடியாது.

இந்து மதத்தில் அவர்கள் கட்டிய கூடுகள் எண்ணற்றவை. அதில் பிறந்த ஒவ்வொரு குஞ்சும் யாரையேனும் வாழ வைக்கவே தன் இன்னுயிரை ஈந்து கொண்டிருக்கும்.

உண்மையில் அதுதான் நடக்கிறதா என்பதை அந்த குஞ்சுகளின் சொத்துக்களும் வெளிநாட்டு பயணங்களும் பதவிகளும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

ஒரு காலத்தில் எல்லா தெருக்களுமே சேரிதான். அனைத்து ஜாதியிலும் அதன் உட்குழுக்களிலும் அதன்குடும்பங்களிலும் தீண்டாமை இருக்கவே செய்தது.

பஞ்சாட்சரத்தின் பாட்டியை பஞ்சாட்சரம் குளிக்காது தொட்டாலும் தீட்டு. அதை அவர்கள் மடி என்பார்கள். ஆச்சாரம் என்பார்கள். தீண்டாமை எனலாமா?

நாங்குநேரி கனகலிங்கம் பூணூல் அணிந்தாலும் கமுதி கமலஹாசன் பூணூல் அவிழ்த்தாலும் அவர்களின் ஜாதியை அவர்களிடமிருந்து பிரிக்காமல் பறிக்காமல் நோகாமல் காப்பாற்றுவது மட்டுமே நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசின் ரகசிய கடமை. அதை நன்கு நிறைவேற்றி வரும்  நாட்டில் நாம் இன்னும் இருப்பதன் சாட்சிதான் ஆணவக்கொலைகள்.

ஒரு இந்திய குடிமகன் தன் ஜாதி மதம் சார்ந்த அனைத்து பண்பாட்டு கலாச்சாரம், சம்பிரதாயங்களை முற்றிலும் முற்றாக கைவிட்டு விடுவதே ஜாதியை அழிக்கும் மருந்து.

ஒவ்வொரு வீட்டு பெண்களும் தங்கள் மரபு வழி உறவு மற்றும் சடங்கு சம்பிரதாயங்களை தலை முழுகி விட்டாலே போதும்… 30 வருடத்தில் கோவில்கள் படுத்து விடும். ஜாதி அழிந்து விடும்.

மாறாக சவுண்ட் ஸ்பீக்கர் பொதுகூட்டமும்
ஜாதிச்சங்க மாமாக்களின் வாத, எதிர்வாதம், அவர்களின் மஞ்சள் கட்டுரைகளும் வெறும் பொழுது போக்குகள் மட்டுமே. வழக்கம்போல
இதிலும் பாவம் கடவுளர்கள்தான். அவர்கள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது.

கணேசன் தாழ்த்தப்பட்டவர்தான். எனினும் இன்று வெற்றி பெற்ற சமூக குறியீடு. பஞ்சாட்சரம் முற்பட்ட வகுப்பினர்தான். அது வெற்றி பெற்ற வர்த்தக குறியீடு.

இந்த இரண்டுக்கும் நடுவில்  திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட சமூகங்கள் அனைத்தும் வெற்றி பெற்ற அரசியல் குறியீடு.

அம்பேத்கர் ஞானத்தின் உச்சமான சமூக நீதி என்பதன் உண்மையான அரசியல் பண்பாட்டு அர்த்தமே மனுநீதியை நவீன மனுநீதி தர்மமாக மாற்றுவதுதான். அது திறம்பட நிகழ்ந்திருக்கிறது.

இந்த நிகழ்வு அழிவே  இல்லாமல்  ஆயிரம் வருடங்களேனும் இருக்கும்.

வாழ்த்துக்களுடன்
இலியிச்.


26. இலியிச்

தாமஸ் ஒரு முக்கிய நிகழ்வை அப்போது என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

இலியிச்சும் தாமஸும் ஒருமுறை காக்கிநாடா அருகில் உள்ள கபிலேஸ்வரபுரம் சென்று இருந்தனராம்.

அங்குள்ள ஒரு சிறிய தீவுக்கு செல்ல முடிவு செய்திருந்தனர். அதற்கு முந்தைய நாள் தங்கியிருந்த உணவகத்தில் அது நடந்தது என்றார்.

இலியிச் தன் சட்டையை கழற்றி கோட் ஸ்டாண்டில் மாட்டும்போது ஒரு சின்னஞ்சிறிய பல்லியை ஒரு பெரிய கரப்பான் துரத்தியது.

நெடுநேரம் போக்கு காட்டி ஓடிக்கொண்டிருந்தது அந்த பல்லி. பின் கரப்பும் தன் சிறகை விரித்து முன்னிலும் ஆக்ரோஷமாக அதை துரத்த பல்லியும் தன்னால் முடிந்த அளவு அந்த சுவரின் ஓரங்களை கண்டறிந்து பதுங்கும் ஆவலுடன் வால் சுழற்றி ஓடியது.
கரப்பு அதிவேகமாக நெருங்கி வர பல்லி சட்டென்று தன் பொடி வாலை உதிர்த்து சுவற்றில் இருந்து தாவி கட்டிலில் விழுந்து பின் சரிந்து கண நேரத்தில் மறைந்தும் போனது.

ஃப்ரொபஸர்…அந்த பல்லியை என்னால் நேசிக்க முடிகிறது. இப்போது ஓர் அன்பு உணர்வை என் மனம் உள்ளிழுக்கும் வேதனையை அனுபவிக்கிறேன். தரையில் எது விழுந்தாலும் அதை தூசி மறைப்பது போல்தான் இந்த அன்பும் அறிவின் முன் கோரமாய் தெரிகிறது.

இந்த பல்லியை நேசிக்கும் என்னால் அதை எடுத்து பேணி வளர்க்க தெரியாத ஒரு மந்தமான அறிவே எனக்கும் இருக்கிறது.

இந்த அறிவும் இந்த அன்பும் எனக்கு யாரால் ஊட்டப்பட்டதோ அவர்களின் வேதனையையும் சேர்த்தே எனக்கு ஊட்டி இருக்கின்றனர்.

இப்படி ஒவ்வொரு நாளும் என்னை கொலை புரியும் உணர்ச்சிகளுக்கு மத்தியில் நான் யார் என்பதை எப்போதும் உணர போராடுகிறேன் என்றான்.

இலியிச் இது சம்பவம். காட்சி. பார்ப்பதும் கேட்பதும் போதனைகள் அல்ல. உணர்வுக்கு மிஞ்சிய கல்வி வேறில்லை என்று அவனிடம் சொன்னேன்.

இல்லை ஃப்ரொபஸர். இதுதான் வாழ்க்கை என்றான். சில நொடிகளில் ஒரு பசி அனைத்தையும் குழப்பி விட்டது.
ஒரு கர்வமோ, அகங்காரமோ வேட்டையை தூண்டி விட்டது. ஒன்றின் துரத்தல் இன்னொன்றின் வேட்கை எல்லாமும்  சேர்ந்து சர்வ குழப்பத்தில் முடிந்தன.

ஃப்ரொபஸர்..நான் பல்லியோ அல்லது கரப்போ அல்ல.  கொஞ்சம் சிந்திக்க தெரிந்தவன்.

சிந்தனைகள் என்னை விரட்டி விரட்டி விளையாடுகிறது.கௌவியபடி அலைகிறது. நான் யாராலோ யாருக்காகவோ சித்தரிக்கப்பட்ட பூச்சி. இதை அன்பு கொண்டு மெழுக வேண்டும் என்னும் சித்தாந்தத்தில் கொண்டு விடப்பட்ட ஜந்து. நான் ஓடுவது போலவே என்னை நானே விரட்டவும் செய்கிறேன்.

என்னைப்போலவே நீங்களும், அவர்களும் இருக்கிறீர்கள்.
நான் ஏன் இன்னமும் அவர்களை போலவே இருக்க வேண்டும் என்பதுதான் என் பிரச்சனை என்றான்.

இதை எழுதலாமே என்று கேட்டேன்.

“வழிகாட்டிகளின் ஜம்பம் இப்போதும் என்னிடமில்லை” என்று அவன் சொன்னதும் என்னால் மீண்டும் பேச முடியவில்லை.

ஃப்ரொபஸர்…என் மீது எனக்கு ஒரு போதும் குழப்பங்கள் சந்தேகங்கள்  வருவதில்லை.

என் கேள்விகள் எப்போதும் சாத்தியமில்லாத பருவத்தில் வருவதும், வெறும் ஆட்களுக்கு இடையில் பகிர்ந்து கொள்வதும் மட்டுமே அதன் துரதிர்ஷ்டம்.

இதை சொல்லிவிட்டு தாமஸ் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து கொண்டார்.

இலியிச் ஒரே ஒரு பக்கத்தில் எழுதப்பட்ட காப்பியமோ புராணமோ கிடையாது. அவன் முடிந்த மட்டிலும் வாழ்வின் மோசடிகளை கிழித்து கொண்டிருந்தான் என்றார்.

16. இலியிச்

இலியிச் எழுத்தாளர்களை சென்று பார்ப்பதும் அவர்கள் வந்து இவனை பார்ப்பதும் அத்தி பூத்தது போல்தான் என்று என்னிடம் முத்துக்குமரன் ஏற்கனவே சொல்லி இருக்கிறான்.

“ஒரு எழுத்தாளனின் காதலி தனது கொண்டையில் நட்சத்திரமும் அவன் வைப்பாட்டியின் கைகளில் பஞ்சாங்கமும் இருந்தால் நான் ஒன்றும் ஆச்சரியப்பட மாட்டேன். அப்படி ஒருவன் எழுதுவதை விட சிரைக்க போகலாம் என்றும் சொல்ல மாட்டேன். ஏனெனில் பார்பர்கள் நினைத்தாலும் இந்திய அரசியலை மாற்றி விட முடியும்” என்று இலியிச் சொன்னபோது நாங்கள் இருவரும் மூணாறில் சுரேந்திரன் நினைவு இலக்கியக்கூட்டம் நடந்த மைதானத்தில் இருந்தோம்.

எழுத்தில் கக்கி திரைப்படத்தில் வாந்தி எடுக்கின்றனர். ஒரே வசனத்தை பல வாய்கள் பேசுகிறது. பல கைகள் எழுதுகிறது. மொத்தத்தில் குப்பையை மட்டுமே அள்ளி கொண்டு இருக்கிறோம். இவர்களிடம் தப்பி பிழைத்து வாழ்வதே அதிசயம்தான் என்றெல்லாம் பேசினான்.

இலியிச் நீ தீவிர அவநம்பிக்கை கொண்டவன் என்பதால் இத்துடன் நான் பேசுவதை நிறுத்தி கொள்கிறேன் என்றேன்.

நம்பிக்கை ஒரு அவலம். நம்ப தூண்டுவது அவமானம். கொழுத்த மனித திமிர் இதை லட்சியமாக்கி பரப்பி வைத்திருக்கிறது. ஒருவனை நம்ப தயாராகும் மனம் மூன்று வினாடிகளில் ஏழு பேரையாவது சந்தேகம் கொள்கிறது. மனித மனதை பேனாவும், காட்சியும்  ஆட்டிப்படைப்பது மட்டுமே நிஹிலிஸம்.

இப்படி இலியிச் சொன்னபோது என்னால் எதுவும் பேச முடியவில்லை. நான் ஏன் இவனோடு மூணாறு பயணித்தேன் என்பதே அப்போது கேள்வியாக இருந்தது.

அவனுக்கு யாரும் வேண்டாம் என்பதில் பிரச்சனை இல்லை. எது வேண்டாம் என்பதில்தான் பிரச்சனை. அவன் இதை யார் ஏன் பூமி என்றும் நிலாவென்றும் சொன்னார்கள்…? அதையே நானும் ஏன் சொல்ல வேண்டும்? என்றும் கேட்கிறான். நான் இதை எப்படி தீர்க்க முடியும்? என்ன பதில் சொல்ல முடியும்?

இறுதியில் என்னவாயிற்று?

எங்களை அந்த ஊர் நாட்டு சாராயம் மட்டுமே அமைதியாக்கியது என்றதும் இருவரும் சிரித்தோம்.

இலியிச் கனவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதன். அவன் மூளை இயந்திரங்களை வெறுத்தது. பறவைகள் ஏன் தனக்கென்று கக்கூஸையும் ஆஸ்பத்ரியையும் கட்டிக்கொள்ளவில்லை என்று கேட்கும் போது ஸ்கூல் குழந்தைகள் சிரிக்கும். இலியிச்க்கு அது குற்றம் அல்ல. குழந்தையை பெற்றவர்களும் கூடவே சிரிப்பதுதான் முழு வேதனையை தருகிறது என்பான்.