Category Archives: முதல் தொகுப்பு

நான் அவள் வாட்ஸாப்

திஸ் இஸ் மாய் வாட்ஸாப் நம்பர் பேபி என்று மிலா குல்கர்னி கொஞ்சலாய் என்னிடம் சொன்னபோது…
எனக்கும் அது ஒரு நிலாக்காலம்.

தொழில் முறை சார்ந்து தொலைபேசியில் முகம் காணும் தேவைகள் அற்று தொழிலோடு நட்பும் பாராட்டி தகவல்கள் பகிர்ந்த காலம். பேசி களித்த காலம்.

அவள் சொன்ன வாட்ஸாப் ஆப் என்பது முதலில் என்னவென்றே எனக்கு தெரியாது.

கம்ப்யூட்டரில் ஜிமெயில் ஓரத்தில் தக்குனூண்டு ஸ்க்ரீனில் சாட் செய்யும் பொன்னான நாட்கள் அவை.

அந்த சாட்டில் போட்டோ வீடியோ என்று ஒலியும் ஒளியும் அனுப்பவோ ,கேட்கவோ முடியாது. ஆனால், ஆகையால் வாயுள்ள பிள்ளை பிழைத்து கொண்டிருந்தார்கள்.

என் நண்பன் காமாட்சியிடம் இந்த வாட்ஸாப் பற்றி கேட்டதும் துல்லியமாக சொல்ல ஆரம்பித்தான். ஆரம்பிக்கும் முன் இப்ப அது எதுக்கு உனக்கு என்று மறக்காது கேட்டான்.

குல்கர்னி பற்றி சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு நானும் அவ உன் தங்கை மாதிரிடா என்பதை நாசூக்காக பவ்யமாக சுருக்கென்று அவன் மனதில் குத்தும்படி சொன்னேன் அவன் புகை அரும்பும் சின்ன காதுக்குள்.

உனக்கு இங்கே இருக்கிற வடமதுரைக்கு போக வழி தெரியாது உனக்கு இவள் எப்படிடா பழக்கம் என்று ஆரம்பித்து பிராண்ட ஆரம்பித்தான்.

ஒரு நாள் மாலையில் எல்லாவற்றையும் அவனிடம் உடைத்து சொல்லி விட்டு எப்படியும் எனக்கு அவளை கல்யாணம் பண்ணிட்டா போதும் என்று முடித்தேன்.

அப்ப ஒரு ஸ்மார்ட் போன் வாங்கிறுவோம் என்று அவன் கூறியதும் வயிற்றில் லேசாய் புளி கரைத்தது.

விண்டோஸில் புலியாகவும் லினக்ஸில் கழுதைப்புலியாகவும் வலம் வந்த எனக்கு அண்டிராய்டு என்ற சொல்லே புதிது.

கூடவே அப்ளிகேஷன், ப்ளேஸ்டோர் என்றெல்லாம் சொல்ல… இரு முதலில் போன் எவ்ளோ என்றதும் அது ஆவும் 12000 ரூவா வரைக்கும் அப்படியே நெட் போட்டோம்னு வச்சுக்க எல்லாத்தையும் இழுத்து போட்டு பாத்துடலாம் என்றான்.
இழுத்துப்போட்டு என்று சொல்லும்போதே அவனுக்கு எச்சில் தெறித்தது.

இரவில் தூங்கும்போது எனக்கு இது ஏதோ வினையில் முடியக்கூடும் என்ற பயம் மிரட்டி கொண்டே இருந்தது.

குல்கர்னியின் அந்த தேன் குரல் காதில் கேட்டுக்கொண்டே இருக்க முடிவில் போன் வாங்க முடிவெடுத்து விட்டேன்.

நான் ஒரு கல்லூரியில் லேப் அசிஸ்டெண்ட். கல்லூரியில் வேலையே பார்க்காது இருந்தாலும் சம்பளம் வந்துவிடும். மூக்கால் அழுதுகொண்டே ஏழாயிரம் ரூபாயை அந்த சைனா போனுக்கு தாரை வார்த்தேன்.

அதில் என்னவெல்லாமோ டவுன்லோட் செய்து இறுதியில் வாட்சப் அப்ளிகேசனை ஐகான் மூலம் முன் திரையில் கொண்டு வந்து நிறுத்தினான்.

சூப்பர்டா மாப்பிளே.. இனி அசத்தல்தான். இப்ப நீ அவளுக்கு ஒரு ஹாய் சொல்லு… என்ன போன் னு கேட்டா ஆப்பிள் னு சொல்லு என்றான்.

ஆப்பிள் னா?

அது ஒரு ஸ்மார்ட் போன். அது வாங்கற காசுக்கு உன் தாத்தா மூணு சென்ட் நிலம் வாங்கிடும்… பொத்திட்டு நான் சொல்ற மாதிரி அவளுக்கு மெசேஜ் அனுப்பு.

குல்கர்னி….

அவளோடு பேசிக் போனில் பேசியது உண்டு. ஹிந்தி தாய் மொழி. எப்படியும் அவள் அரைகுறை ஆங்கிலத்தில் பேசி விடுவாள். இரவில் பாட்டு பாடுவாள்.

ஹிந்திப்பெண்கள் அனைவரும் பாடி விடுகிறார்கள். இனிய குரல். எனக்கோ இளையராஜாவை விட்டால் வேறு ஒன்றும் தெரியாது. எங்கள் ஊர் டீக்கடை, தியேட்டர் எங்கும் தமிழ்ப்பாட்டுதான்.

குர்பானி, மேரே நாம் ஜோக்கர், ஷான்,டிஸ்கோ டான்ஸர் இப்படிப்பட்ட வெகு சில படங்கள் மட்டுமே நான் பார்த்தது உண்டு. தியேட்டரில் மூன்று மணி நேரத்தில் இரண்டு தடவை மூச்சா வந்து விடும். அதுவும் ரிலீஸ் ஆகி பெரியகுளம் வருவதற்குள் பாவம் ரீல் பெட்டிக்கு மூச்சு திணறி விடும்.

இந்த ஷாருக்கான், சல்மான்கான் வந்ததும் கொஞ்சம் பரவாயில்லை.

அவள் ஒருநாள் இரவு ஏதோ ஒரு பாட்டை பாடிக்கொண்டிருக்கும் போது சற்றும் அர்த்தம் புரியாமல் போனை காதில் வைத்து எரிச்சலை அடக்கிகொண்டு கேட்டேன்.

அவள் பாடி முடித்ததும் ஹௌ இஸ் ஸ்ரீ? என்றாள்.

வாவ்…சூப்பர்ப்…

(இந்த வார்த்தையை காமாட்சி சொல்லி கொடுத்து இருந்தான். அப்பப்ப இதை சொல்லிட்டே இரு. பிக்கப் பண்ணும் போது இதுவெல்லாம் முக்கியம். மார்வலஸ், பெண்டாஸ்டிக் கூட நடுவில் போட்டுக்கோ)

தேங்யூ டார்லிங்…

டார்லிங்… டார்லிங்… இந்த வார்த்தையை அவள் சொல்லிக்கேட்க என்ன நான் இன்னும் என்ன வேண்டுமானலும் செய்யலாம்.

உங்களுக்கு பிடிச்ச பாட்டு சொல்லு ஸ்ரீ.
பாடறேன் என்று (இங்கிலிஷ்) கேட்டதும்
வாய் உளறி பால்ய நினைவில் மெஹபூபா மெஹபூபா தெரியுமா என்று கேட்டதும்தான் நாக்கை கடித்து கொண்டேன்.

அவளும் ஓ…நைஸ் சாங் என்று என்னவோ ஒரு மெஹபூபா பாடினாள்.
வாழ்க ஹிந்தி பாடல்கள்.

வாட்ஸாப்.

எண்கள். தகவல்கள். படங்கள்.குரல்கள்.
ஒழுங்காய் தலை கத்தரித்து டை அடித்து விட்டு சில பல போட்டோக்கள் அனுப்பினேன். பரிமாறி கொண்டோம்.

ஒருநாள் அவளிடம் என் காதலையும் சொல்லி நாங்கள் திருமணம் வரை சென்றோம்.

பின்னர் பெண்களுக்கே உரிய சில பிகுவை அவள் செய்து முடித்து கொண்டதும் முடிவில் ஏற்று கொண்டாள். நாளொரு வண்ணம் பொழுதொரு போனுமாய் ரியல் தம்பதி போலவே வாழ ஆரம்பித்தோம்.

அவள் அனுப்பிய செல்ஃபி படங்களில் நான் மெய் சிலிர்த்து காமாட்சிக்கும் அனுப்பினேன். பொறாமையில் வெந்து சாகட்டும் என்ற எண்ணத்துடனே…

உன் அண்ணி எப்படிடா? அந்த முகத்தை பாரு. அப்படியே சின்ட்ரெல்லா மாதிரி.

நீ சின்ட்ரெல்லாவை நேரில் பார்த்து இருக்கியா?

இல்லை…

இருக்கட்டும். அவளும் நீயும் இங்கிலிஷ் அரைகுறை… எப்படிடா மிச்ச காலத்தை ஓட்டுவே.. பே பே னு எப்படி பேசவே?

இந்த இடத்தில் என் விஞ்ஞான மூளையை பயன்படுத்தி சில ட்ரிக்ஸ் கண்டுபிடித்து இருந்தேன். அவளிடமும் அது பற்றி பேசி இருந்தேன். அதுவெல்லாம் நண்பனிடம் சொன்னபோது அசந்து விட்டான்.

6 மாசம் போதும்டா… அப்பறம் எந்த மொழியும் பேச முடியும்.

குல்கர்னி போனில் வந்த போதெல்லாம் பேபி, டியர்,டார்லிங், ஸ்வீட்ஹார்ட்,மேரே ஜான்… இன்னும் என்னென்னவோ சொல்லி என்னை அழைப்பாள்.

கடைசிவரை என் பெயர் என்பது அவள் வாயில் வரவேயில்லை. ஒருமுறை மிகவும் துன்புறுத்தி அவளை சொல்ல வைக்கும்போது அவள் சொன்னது… சரி அது வேண்டாம் இப்போது.

அவள் தன் உணவு, உடை, கலாச்சாரம் என்று பலவும் பேசுவாள். நானும் என் பங்குக்கு நெட்டில் கிடைக்கும் சகல ஜாதி விஷயங்களையும் போர்வேர்ட் செய்து விடுவேன். தமிழன் லேசான ஆள் இல்ல.

வாட்ஸாப்பில் பேசும் பாவனைகள் என்பது மிகவும் முக்கியம்.

நாம் டிவியில் வடிவேலு ஜோக்கை பார்த்து ஸோன்பப்டி சாப்பிட்டு கொண்டு இருந்தாலும்… வாட்ஸாப்பில் எதிர்முனை நபர் அழுது புலம்பி மூக்கு சிந்தினால் நாமும் சிந்த வேண்டும். முடிந்தால் பலமாய் சிந்த வேண்டும். இன்னும் முடிந்தால் இதற்கிடையில் சில கார்டுகள் அனுப்ப வேண்டும். அதுவும் வேலை வெட்டி இல்லாத பலர் விதம் விதமாக வரைந்து வைத்து உள்ளனர். நெட்டில் கிடைக்கும் அதை அள்ளி விட வேண்டும்.

இந்த எமோஜி என்னும் பொம்மை போட தெரிந்தால் போதும். அதுக்கு மார்க்கெட்டிங் லெவல் வேறு. பெண்களை ஆண்களும் ஆண்களை பெண்களும் இப்படி சென்டிமென்டில் தாக்கி வறுத்து எடுக்க யூட்டுப்பில் பல ரகத்தில் யோசனை சொல்பவரும் உண்டு.

பலவீனமான நேரத்தில் நேக்காய் நழுவி ஓடவும் வேண்டும். அதற்கும் பல உத்தேசமான பொய்கள் இருக்கிறது.

நாங்கள் தம்பதியை போல் பேசும்போது அவளிடம் நச்சரிக்கஆரம்பித்தேன்.
எப்போ புனே வரட்டும் என்று கேட்க ஆரம்பித்ததும் அவள் கிட்டத்தட்ட ஒரு ஏழு மாதம் கால அவகாசம் கேட்டாள்.

அதற்கென்ன… அதுவரை நாம் இப்படி பேசுவோம் என்று சொல்லிவிட்டு நான் பேசிக்கொண்டு இருந்தேன். இருந்தாள்.

நான் அப்போதே சுதாரித்து இருக்க வேண்டும். விதி. விட்டு விட்டேன்.

கதை முடிந்தது.

இந்த கதையும்தான்.

வழக்கம்போல் என் அண்ணன் தெய்வம். மறுக்க முடியவில்லை என்று ஒரு சேட் பையனுடன் நடந்த நிச்சயதார்த்த போட்டோவை அதே வாட்ஸாப்பில் எனக்கு அனுப்பி இருந்தாள்.

வாழ்க வளமுடன்.

எங்கிருந்தாலும் வாழ்க. குயிலை பிடிச்சு கூண்டில் அடைச்சு… பாடி முடித்தேன். எத்தனை பேருக்கு பாடி இருக்கிறேன். பழகின ஒன்றுதானே இதுவெல்லாம்.

கல்யாணம் ஆகி அவளும் என்னை மறக்காமல் ப்ளாக் செய்து விட்டு போய்விட்டாள். இரண்டு வருடம் ஓடி விட்டது.

நேற்று நான் என் போனை ரீசெட் செய்து பின் வாட்ஸப் அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் புதுப்பித்தபோது ஆஹா… மிலா குல்கர்னி. கள்ளி… அவளும் செய்திருப்பாள் போலும்.

அவள் முகம் மட்டுமே பார்த்த எனக்கு அதிர்ச்சி. கொஞ்சம் உப்பி. மேடுகள் திசை மாறி. கையில் ஒரு குழந்தையுடன்.

என் நண்பனுக்கு அந்த படத்தை அனுப்பி கேட்டேன். எப்படிடா இவ இப்படி மாறிட்டா?
நான் இன்னும் அப்படியேதானே இருக்கேன். இவ முகம் கூட கொஞ்சம் கருப்பா அடையாளமே மாறி இருக்கா? எனக்கு அனுப்பின அந்த பழைய போட்டோவில் இப்படி இருக்க மாட்டாளே?

விடுடா. அப்போ அவ தன் போட்டோவை கொஞ்சம் மாத்தி அனுப்பி வச்சு இருப்பா.
அதுக்கும் இப்ப நிறைய அப்ளிகேஷன் இருக்கு. அது வச்சு மாத்தி இருக்கலாம்.

டேய் காமாட்சி….

சொல்றா…

தப்பிச்டேண்டா நான்.             🎃🎃🎃🎃🎃

ஒரு சொட்டு நரகம்

கடவுள் தன் புரிதல்களில் இருந்து விலகி தடுமாறிக்கொண்டிருந்தார்.

நான் அந்த நாவலை அப்போதுதான் வாசிக்க துவங்கினேன்.

ஒரு மூர்க்கமான சாபம் பெற்றிருந்த கரிய சிற்பத்தை இன்னும் ஆவேசமாக கடவுள் உருக்குலைக்கும் போது அதை இருள் என்று தலைப்பிட்டு அந்த நாவல் தன்னுள் புதிய அத்யாயமாக எழுதிக்கொண்டது.

நாவலின் பக்கங்களை காற்று சலிக்கும் போது என்னால் அதில் இருந்த ஒன்றிரெண்டு வார்த்தைகளை படிக்க முடிந்தது.

“விடிவதற்கு முன் இன்னும் இருளாக இருக்கும்”.

ஜாக் லண்டன் தன் எரிந்த பண்ணை வீட்டிலிருந்து சமாதானங்களுக்கும் பிடிவாதங்களுக்கும் பெயர் பெற்றிருந்த அந்த குதிரையுடன் வெளியேறினார்.

இருள் நாவலின் நான்கு முனைகளிலும் ஒரு சதியின் ஆவேசத்துடன் பரவியது.

கடவுளுக்கு ஆசுவாசம் தேவைப்பட்டதால் தன் தோல் பையில் இருந்து குடுவையை எடுத்து சிறிதளவு நீர் பருகினார்.

கடவுள் முன்பாக பகல் தனது தலையை வாரிக்கொண்டு நின்றது.

அதற்கு இன்றேனும் அந்த சரிவில் தாயை தொலைத்து விட்டு தேடி கொண்டிருக்கும் அந்த மான் குட்டியோடு சற்று பேசிவிட வேண்டும் என்ற ஆர்வம்.

நான் நாவலின் புதிய பாகத்தில் சில வரிகளை வாசிக்க ஆரம்பித்தேன்.

கடவுளின் தேவி அதிக விசனத்துடன் ஒரு எரிமலை மீது நின்று கொண்டிருந்தாள்.
அவள் கால்கள் ஆகாயத்தை சலிப்புடன் எட்டி உதைந்தது.

நிலவின் சின்ன விரிசலில் இருந்து கொட்டிய மணற்துகள்கள் நாவலின் மீது காளான்கள் போல் சிந்தின.

நான் நாவலை வாசிக்கும் முன் அச்சமுற்று கலைந்து போன சில வரிகளை கடவுள் முழுக்க சேகரித்து சாக்கு பைக்குள் திணித்து கொண்டார்.

புத்தகம் அழத்துவங்கியது. அதன் அழுகை மரங்களுக்குள் ஊடுருவி வண்டுகளை எழுப்பின. வண்டுகள் இருளுக்குள் பூத ஒலி எழுப்பியபடி பறந்து அச்சுறுத்தி கொண்டன.

நரகத்தின் உள்ளே விரலை திணித்து வாரி எடுத்த ஒரு சொட்டை தன் உள்ளங்கையில் விட்டு கடவுள் காட்டினார்.

நாவல் அப்போது தனக்குள் தன்னை ஒடுக்கி கொண்டு நின்றது.

கடவுள் ஒரு சிவந்த நட்சத்திரத்தின் மீது தன் முதுகை சாய்த்து கொண்டு அன்று வரையிலான மனிதனின் துரோகத்தை வாய் விட்டு எண்ண துவங்கினார்.

இதுதான் சமயமென்று டிமிட்ரி தன் அக்கார்டியனை கழுதையின் மேல் வைத்து விட்டு தன் மைக்குடுவைக்குள் சிறிதளவு மேகத்தை திருடி வைத்து கொண்டான்.

தேவி கடவுளுக்கு இடப்புறத்தில் நின்று கொண்டு காற்றுக்குள் கொக்கரிக்கும் இருளை இரு கை நீட்டி கொஞ்சலாய் அழைத்தாள்.

நாவல் வாசிக்க வாசிக்க இளைத்து கொண்டே வந்தது. அது காய்ச்சலுற்ற கிருமியை போல் ஸ்வாசிக்க திணறியது.

ஆனால், விடாது வாசிக்க இன்னும் ஓரிரு பக்கத்தில் ஒவ்வொரு அவசியத்திலும் இருக்கும் கொடூரமான நிதானத்தின் முகம் தெரிந்து விடும்.

எனது அவசரம் கடவுளுக்கு புரிந்திருந்த போதிலும் பகல் வரும் முன்பே அன்றைய மனித துரோகங்களை அவர் எண்ணியும் முடிக்க வேண்டும். கடமை அது.

மிருகங்கள் பழி வாங்க தெரியாத மூடம் என்பதால் அதை மெள்ள கால்விரல் கொண்டு எண்ணினார்.

தேவி தன் பின்புறத்தில் இருந்து பூமி நோக்கி படல் விரிக்கும் அன்றைய பகலின் இளம் சூட்டில் அவள் கொங்கைகள் மீது வெப்பத்தின் ரசம் படிவதை உணர்ந்து கொண்டாள்.

இன்னும் அதிகமாய் கைகள் விரிக்க இருள் தன்னை சுருட்டி கொள்ள ஆரம்பித்தது. அன்னையின் மடிக்குள் அது தாவி தாவி குதித்தது.

நான் தடுமாற்றத்துடன் நாவலின் கடைசி பக்கத்தை அடைந்தேன்.

புத்தகம் நனைந்த கழுகு கடலை வலம் வருவது போல் இருளின் நகங்களில் சிக்கிக்கொண்டு கருமியாக ஒளித்து வைத்த சொற்களை ஒவ்வொன்றாக எனக்கு காட்டியது.

கடவுள் அப்போது அன்றைய கணக்கை முடித்துவிட்டு நேரே நின்றபோது டிமிட்ரி அக்கார்டியனை இசைக்க ஆரம்பித்தான்.

அந்த இசைக்கு தன் தொப்பியை விலக்கி ஜாக் லண்டன் நன்றி தெரிவித்தார்.

பகல் பூமியின் ஓரத்தில் தவழ்ந்து வந்தபோது அந்த மான் குட்டி தாயுடன் நின்று கொண்டிருந்தது.

நாவல் இப்படி முடிந்தது.

நரகம் வெறும் ஒரு சொட்டுதான்.

கடந்து போகும்.
முகம்

அவர் இன்று மாலை வருவதாக மெசேஜ் அனுப்பி இருந்தார். அவர் வருவதை என் சித்தப்பா உறுதி செய்திருந்தார். சித்தப்பாதான் இந்த ஏற்பாடை முன்னின்று தீவிரமாக்கி வைத்தார்.

நகை விற்ற பணத்தில் கொஞ்சம் முதலீடு செய்ய வேண்டும். வருபவர் முதலீட்டு ஆலோசகர். வரட்டும். சித்தப்பா இந்த மாதிரி விஷயங்களில் கில்லாடி. முதலீட்டு துறையில் ஆர்வம் அதிகம். அனுபவமும்.

சாயந்திரம் அவர் வரலாண்டே…நாலு தபா பேசிட்டேன். நான் நிலக்கோட்டை வரைக்கும் போறேன். நீ அவர் காட்டற எடத்துல கையெழுத்து போட்டுடு. மீதி வேலையை அவர் முடிச்சுக்குவார். எல்லாத்துக்கும் செராக்ஸ் எடுத்து வச்சுக்க. புரியுதா?

சித்தப்பா வெற்றிலையை குதப்பியவாறு திண்ணையில் நழுவிக்கிடந்த செருப்புகளை கவனமாய் போட்டுக்கொண்டு வெளியேறினார்.


சித்தப்பா செல்வது நிலக்கோட்டை அல்ல. அது பக்கத்தில் ஒரு கிராமம். அதில் இருந்து சற்று எகிறி குதித்தால் இன்னொரு கிராமம். அந்த கிராமத்தின் பெயருக்கு முன்னால் கூட G என்ற இனிசியல் கூட இருக்கும்.

அங்கு ஏன் போகிறார் என்று அவரிடம் கேக்க மாட்டேன். சித்தியிடம் அதை விவரமாக கேட்டால் விக்கி விக்கி அழுவாள். என் அப்பா இந்த மாதிரி விஷயங்களை சித்தன் போக்காய் பார்ப்பார். நான் சிவன் போக்காய்.

சாயந்திரம் ஒரு மத்திய ஊரின் மத்திய வயதுள்ள மனிதன் மத்திய சிந்தனைகளுடன் என்ன செய்வானோ அதை செய்து கொண்டிருந்தேன்.

விட்டேத்தியாய் வாசல் படியில் அமர்ந்து இருந்தேன். எதிரில் இருந்த ரேஷன் கடைக்காரர்களும் தராசுக்கு முன்னால் விட்டேத்தியாய் இருந்தார்கள். வணிக கடைகள் நிறைந்த பகுதி. பெண்கள் ஆண்கள் வருவதும் போவதுமான சாலை.

பார்த்து கொண்டிருக்கும்போதே ஒரு ஹெல்மெட் நபர் பைக்கில் இருந்து இறங்கினார். சற்று தொப்பையான தேகம். முழுக்கை சட்டை ஒளிரியது.
காலையில் போட்டிருந்த செட்வெட் கடும்
அலைச்சலுக்கு பின் வியர்வையோடு வேதிவினையாகி பழைய மோர் வாடை ஹெல்மெட்டிடம் இருந்து வந்தது.

ஹெல்மெட்டின் வாய் பகுதியில் இருந்த சின்ன பிளவில் இருந்து என் பெயர் சொன்னதும் கை கூப்பி வீட்டுக்குள் அழைத்தேன்.

கை குலுக்கும் பழக்கம் அப்போதே என்னிடம் இல்லை. வலுக்கட்டாயமாக சிலர் அப்படி செய்யும்போது எரிச்சல் மூளும். ஹெல்மெட் செய்யவில்லை.

முன் ரேழியில் ஒரு கட்டிலில் அமர சொன்னேன். ஆசுவாசமாய் அவர் ஹெல்மெட் கழற்றியதும் சற்று அல்ல முழுக்க அதிர்ந்தேன்.

அவர் முகம் அப்படியே என் முகம் போல் இருந்தது. அதே முகம். அதே மீசை வெட்டு.
அதே மூன்று நாள் தாடி. அதே. அதே.

என் வாய் சற்று பிளந்து இருந்தது. என்னை விட சற்று தாட்டியான உடல். ஆனால் முகம் மட்டும் அப்படியே அசல்.

தன்னிடம் இருந்த பிஸ்னெஸ் பேக்கில் இருந்து நிறைய காகிதமும் புத்தகமும் வெளியே எடுத்தார்.

நான் அவர் பற்றி அறிய ஆவல் கொண்டேன். அறிந்தும் ஆக வேண்டும்.

சார்… உங்க பேரு…

காதில் விழாதது போல் சிரித்தான். தம்பியின் தோற்றம் அல்ல அவர் ஆகவே சிரித்தார்.

உங்கள் சித்தப்பா சொல்லியிருப்பார் அல்லவா…

ஆம்… அசடு வழிந்து முடித்தேன்.

சித்தப்பா இவரின் இந்த முகத்தை பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஏன் சொல்லவில்லை. இருந்தும் அவர் ஏன் நிலக்கோட்டை அவசரமாக போக வேண்டும்?
இப்படி ஒரு முகம் அவருக்கு வியப்பை மலைப்பை கொடுக்கவில்லையா அல்லது வேறு எதுவும் இருக்க கூடுமா?

வண்ண வண்ண காகிதங்கள் சர சர வென உருவி கூடவே வழுக்கும் புத்தகங்கள் சேர்த்து கையில் கொடுத்தார்.

இப்போ மியூட்சுவல் பண்ட் ஷேர்ல கொஞ்சம் போடுவோம். அப்பறம் எல்ளை சி. கொஞ்சம் ரெக்கரிங் எப்ஃடி டெபாசிட்ல போட்டுடலாம்.

நாமினி மிசஸ் பேர்ல போட்டுடுவோம். குழந்தைங்க பேர் கூட சேர்த்துருவோம்

சரிங்க சார்…

சைன் பண்ணுணங்க…அவங்க கிட்டையும் சைன் வாங்கித்தாங்க. பிள்ளைகள் மைனர் ஏஜ்ஜா…

எப்படி இந்த முகம் என்னை போலவே இருக்கிறது? அல்லது அந்த முகம் போல் நான் இருக்கிறேன். இதை நேரடியாக கேட்பது அத்தனை நாகரீகமான விஷயமும் அல்ல. எதைக்கேட்டாலும் சித்தப்பா என்று சொல்வதை பார்த்தால் கொஞ்சம் சந்தேகம் வந்தது.

மடக்கி கேட்க வேண்டும்.

மெதுவாக அவரிடம் கேட்டேன். ஏன் சார்…என் சித்தப்பாவை ரொம்ப நாளா தெரியுமா உங்களுக்கு? எத்தனை வக்கிரம் எனக்கு.

நோ. இப்போ ரீசெண்ட் ஆ பார்த்தேன். கார்வி ஆபிஸில்… அப்போ உங்க அட்ரஸ் கொடுத்தார். அப்படியே அங்கே ஒரு சைன் பண்ணிடுங்க.

தன் காரியத்தில் கண்ணாக இருந்தார். எல்லா ஒப்பமும் போட்டபின் அத்தாட்சிகள் பெற்றுக்கொண்டு பிசினஸ் பேக்கில் வண்ணகாகிதங்கள் சரசரவென வந்த வேகத்தில் உள்ளே புகுந்தன.

ஒரு காஃபி சாப்பிடுங்க…

இல்ல சார் இன்னும் ரெண்டு கிளைன்ட் பாக்கணும். அடுத்த தடவை…அப்போது ஒரு புன்னகை. அதுவும் என்னை போல்.

எழுந்தபோது நான் உடைந்து போனேன்.
என் முகத்தில் யாரோ ஒருவர். என் மனைவி கூட இது பற்றி ஒன்றும் கேட்காது தலை குனிந்து உள்ளே போய் விட்டாள்.

ஒருவேளை உலகத்தில் இருக்கும் அந்த ஏழு பேரில் ஒருவரா? இதை முகத்தில் அறைந்தாற் போன்றும் கேட்க முடியாதே…

இன்னும் பத்து நாளில் டிமேட் அக்கோண்ட்
ஓபன் ஆகிடும். அப்போ கால் பண்ணுங்க.
இன்வெஸ்ட் பண்ணிடலாம். நான் கிளம்பறேன் சார். ஹெல்மெட் பூட்டிக்கொண்டார்.

இனி தாமதம் செய்வதற்கு இல்லை.
அவரோடு படி இறங்கியபடி மெள்ள கேட்டேன்.

ஏன் சார்…நம்ம ரெண்டு பேர் முகமும் கிட்டத்தட்ட ஒரே அச்சா அப்படியே இருக்கு நீங்கள் கவனித்தீர்களா? அல்லது நான் கேட்பது தவறென்றால் மன்னியுங்கள்.

ஹெல்மெட்டின் உள்ளே உதடுகள் மெல்ல அசைந்தது. என்னவோ சொன்னார்.
ஹாரன் ஒலிகளில் தெளிவு இல்லை.
பைக்கை முடுக்க நான் ஒதுங்கினேன்.

அடுத்த முறை கேட்டே ஆக வேண்டும்.
செல்வதை பார்த்துக்கொண்டே இருந்தேன். என்ன ஒரு விந்தை இது.

வேகமெடுத்த அந்த பைக் இப்போது தெரு முனையில் திரும்பும்போது வெகு வேகமாய் திரும்பிய லாரியின் கீழே கூழாய் மாறியது.தி எக்ஸார்சிஸ்ட்

அப்பா நீங்க ஒரு பேய்க்கதை எழுதுங்க.

மாயம் மந்திரம் இல்லாம எழுதணும்.

சொல்லிவிட்டு பதினோரு மணிக்கு தூங்குகிறேன் என்று சென்று விட்டாள் என் மகள்.


பேய் படங்கள் எப்போதுமே நான் ஆர்வத்துடன் பார்ப்பேன். பள்ளியில் படிக்கும் காலத்தில் நிறைய ஆங்கில படங்கள் வரும். அப்போது தரை டிக்கெட் எண்பது பைசா. முறுக்கு ரெண்டு நாலணா.


பார்த்து விட்டு மறுநாள் படத்தை பற்றி நண்பர்களிடம் பேசும்போது விறுவிறுப்பை ஏற்றிக்கொண்டே இருப்பேன். அப்போதுதான் அடுத்த காட்சி போக என்னோடு கூட்டு சேர்வார்கள். நாற்பது பைசாவில் சமோசாவுடன் என் காரியம் மீண்டும் சுபமாய்  முடியும்.


ஆங்கில பேய்கள் ஈவு இரக்கம் இல்லாத ஒன்று. ஆக அது பயமுறுத்தும் முன்பே அந்த பயத்தை வடிகட்ட அம்மணி யாரேனும் பாத்ரூமில் குளித்து கொண்டிருந்தால் உடை மாற்றினால் அந்த காட்சி கூடுதல் போனஸ். அதற்கென்றே ஒரு கூட்டம் வரும்.


இப்படித்தான் நான் பார்த்த ரோஸ்மேரி என்னும் படத்தில்…


                          **********


மணி இப்போதே 12.30 ஆகி விட்டது. தூக்கம் வேறு வருகிறது. பேய் அலையும் நேரம் அல்லவா? மாடி மற்றும் தனிஅறை இரவு இப்படி எல்லாமே பேய்களுக்கு ஜாலியான அட்மாஸ்பியர். 

நான் எழுத யோசித்து யோசித்து ஒன்றும் கிடைக்கவில்லை. சிலர் இந்த சப்ஜெக்ட்டில் எப்படி இஷ்டத்துக்கு எழுதி தள்ளுகின்றனர் என்ற யோசனை வேறு.


எனக்கும் சற்று வயதாகி விட்டதால்…


பேய் பற்றிய பயம் போயே போய்விட்டது. இந்த காலத்தில் வரும் படமெல்லாம் பாராநார்மல் என்று மனோதத்துவம் விஞ்ஞானம் உம்மாச்சி எல்லாம் கலந்து கட்டி உருமி அடித்து கிலி காட்டுகின்றனர்.

அம்மணிகள் கழுத்தில் இருந்து பாதம் வரை கவுன் போட்டுக்கொண்டு கல்யாண மெத்தை பெட்டில் அமர்ந்தபடியே தலைவிரி கோலத்தில் பல் காட்டி பயமுறுத்த பார்க்கிறார்கள். நினைக்க நினைக்க எரிச்சல்தான் வந்தது.


அந்த காலத்தில் ஈவில்டெட் கூட…


ஒரு நிமிடம் பொறுங்கள்.  இப்போது  சின்னதாய் நினைவுக்கு வருகிறது.


ஆம்…அவள்…குல்கர்னி…இல்லை இல்லை குல்கர்னி 2010களில்…இது நடந்தது 90களில்…


அப்போது கல்லூரியில் வேலை பார்த்து வந்தேன். நூலகம். எஸ்.ஆர். ரங்கநாதன் அந்த நூலகம் வர மாட்டார் என்ற தைரியத்தில் எனக்கு அங்கே வேலை போட்டு சம்பளம் என்ற பெயரில் நித்தியபடியும் போட்டு கொடுத்தார்கள். முதலாளிகள் நம்பிக்கையை நான் காப்பாற்றி கொடுப்பவன். ஒன்பது மணிக்கு திறந்து வைத்து கொண்டால் போதும். ராசுக்குட்டி பாக்யராஜ் மாதிரி அந்த நூலகம் களை கட்டும்.


பேராசிரியர்கள் என்பவர்கள் வகுப்பை ஒப்பேற்றிவிட்டு என்னோடு ஐக்கியமாகி விடுவார்கள். எங்கள் கும்பலில் திருஷ்டி விழும். அத்தனை அந்யோந்நியம்.


ஒரு அகடமிக் இயரில் அவள் வந்தாள்.

சட்டென்று பெயர் நினைவில் வரவில்லை.

எப்படி வரும்? ஒன்றா..இரண்டா…?


காட்சிகள் கண்ணில் விரிகிறது. அன்று போலவே இன்றும் மிதக்கும் உணர்வு.

இந்த என்டார்ஃபின் அப்படியே வேலை செய்கிறது இன்னும் கூட.


சாதாரணமாக மட்டுமே அவளுடன் பேசுவேன். அவள் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன். அப்போது அந்த கோர்ஸ் சக்கை போடு போட்டது. ஸோ… மிகுந்த மரியாதைக்கு உரிய ஆசிரியர்கள் அவர்கள்.


சாதாரண தோழமையாக பரிமளித்த அந்த உறவு நாளடைவில்…டேய் உன் ஆளு வர்றா என்று சக நண்பர்கள் என் காதருகில் அழுத்தமாய் சொல்லும்போது கிர்…வந்தது. மீசை துடித்தது.


அப்போதுதான் ஒரு பேய் படம் வந்து இருந்தது. அது பற்றி எல்லோரும் பேசிக்கொண்டே இருந்தனர்.


நீங்க அந்த மூவீ பாத்தாச்சா ஸ்ரீ? என்றாள் அவள். 


இன்னும் இல்லை…நீ…நீங்க?


சும்மா நீ வா போ னே பேசுங்க. போர்மாலிட்டி வேணாம்.


ஓ…நைஸ்…


பாத்தாச்சா நீங்க?


இல்லை. ஆனா நீ எக்ஸார்சிஸ்ட் படம் பார்த்து இருக்கியா?


நோ ஸ்ரீ.


கம்ப்ளீட்டா எலெக்ட்ரோமாக்னடிக் டெக் யூஸ் பண்ணி எடுத்து இருப்பாங்க என்றேன் என்னமோ நான் என்ஜினீயர் மாதிரி.


அப்படியா? அவள் ஆச்சர்யத்தில் பூத்தாள்.

என்னமோ இவளே அந்த தியரியை கண்டுபிடித்து ராயல்டி வாங்கிய மாதிரி.


ஒரு லோக்கல் ஆதர் புத்தகத்தை வைத்து படிக்க வரும் வருங்கால தூண்களை கொன்று குவிக்கும் கலையில் மன்னி. இதையெல்லாம் அவளிடம் இப்போது சொல்வதற்கு நான் என்ன லூசா?


1972 ல வந்த படம். வில்லியம் டைரக்டர்.

கிராபிக்ஸ் ஒன்னும் கிடையாது. இந்த தியரி படம் முழுக்க பேசும்.


அவள் இடைமறித்து அந்த அறிவியலில் என்னவோ கேட்டு தொலைக்க எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது யூட்யூப் எல்லாம் அத்தனை பரிச்சியமும் இல்லை.


சட்டென்று பேச்சை மாற்ற வாலி கவிதை பிடிக்குமா என்றேன்.


கிரேட் பொயட்.


அட…நம்ம டிராக்…


வைரமுத்து என் பக்கத்து ஊர்தான்.


பார்த்து இருக்கீங்களா?


பேசியே இருக்கேன். (பொய்)


அது பற்றி சொல்லுங்க ஸ்ரீ ப்ளீஸ்…


எத்தனை பொய் அள்ளி விட்டாலும் அலுங்காமல் குலுங்காமல் கேட்டு கொண்டே இருப்பாள். இது போதாதா எனக்கு…


செமஸ்டர் லீவ் வந்தால் பேராசிரிய பெரு மக்களுக்கு இருப்பு கொள்ளாது. 

நானோ நான்-டீச்சிங். ஓர வஞ்சகத்துடன் ஞாயிற்று கிழமையை ஒட்டிய லீவ் கிடைக்கும். டீச்சிங் என்றால் வாரி வழங்குவர். என் சாபங்களை பெற்றுக்கொண்டு பேராசிரிய நண்பர்கள் சொந்த ஊருக்கு பஸ் ஏறினர்.


அவள் புதிதாக சேர்ந்ததால் அவளுக்கும் லீவில் ஆப்பு வைக்கப்பட்டது. இதை

அவள் சோகம் தெறிக்க என்னிடம் சொல்லும்போது அப்போதைய என் முகத்தை நீங்கள் கற்பனை செய்ய வேண்டும்.


உள்ளே மிருகம். வெளியே தெய்வம்.


அந்த விடுமுறை நாட்களில் யாரும் இல்லாத கடையில் டீ ஆற்றும் வேலைதான் எனக்கு. 


கல்லூரிக்கு செல்லும் கையோடு கணையாழி, காலச்சுவடு, புதிய எழுத்து இன்னும் சில புத்தகங்கள் எடுத்து கொண்டு போய் விடுவேன்.


வர வர நீ மின்னிட்டு இருக்கடா என்ற ஒரேயொரு பொறாமை கொண்ட நண்பன் கூடவே இருந்தான். அவன் ஏன் ஊருக்கு போகவில்லை என்று நீங்கள் கேட்டால் இப்போ அது ரொம்ப முக்கியமா என்ற பதிலையும் நீங்களே சொல்லி கொள்ளுங்கள்.


அவள் காலையில் நூலகத்துக்கு வந்துவிடுவாள். கொஞ்ச நேரம் பேப்பர் பார்த்து விட்டு பின் என்னிடமிருக்கும்  புத்தகங்களை வாங்கி கொண்டு படிக்க ஆரம்பிப்பாள்.


எப்படி ஸ்ரீ இதுவெல்லாம் படிக்கறீங்க?

எனக்கு இதில் ஒன்னும் புரியவில்லை என்றாள். இப்போது புரிகிறதா நான் ஏன் புரியாத கவிதை எழுதுகிறேன் என்று…


அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்தேன். அதை கேட்டு கேட்டு ஆச்சர்யம் கொள்ளும் அவள் முகம் பற்றி சொல்ல வேண்டும். வேண்டாம் சொன்னால் சுமி கமெண்ட் பாக்ஸில் ஜொள்ளை குறை என்று எழுதி நாக்கை துருத்துவார்.


பேசிக்கொண்டே இருந்தோம். நொடிகள், மணிகள்,நாட்கள் அருமை அருமை என்று உண்மையாகவே சொல்லும்படி கழிந்தன.


அவள் கால்களில் மஞ்சள் மின்னும். 


நீ எப்பவும் மஞ்சள் தேச்சுப்பியா..


ம்.


என்ன சோப் யூஸ் பண்ணுவே?


பியர்ஸ். நீங்க ஸ்ரீ?


லைஃப்பாய். பரம்பரை பரம்பரையாக அதுதான் எங்கள் வீட்டில். ஆனால்

அதை நான் சொல்வேனா…அப்போது பார்த்து விலை உயர்ந்த சோப்பின் பெயர் நினைவுக்கு வரவில்லை. வாய்க்கு வந்ததை சொல்ல நினைத்து லக்ஸ் என்றேன். என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.


எனக்கு இந்த காஸ்மெடீஸ் அறிவு சுத்தமாய் கிடையாது. பாண்ட்ஸ் பவுடர் விட்டால் உலகில் வேறு ஒன்றும் இல்லை என்று நினைத்த காலம். 

அப்படி வளர்ந்து அப்படியே என்னையும் வளர்த்த குடும்பத்தில் வந்த என்னால் எவ்வளவுதான் போராட முடியும்?


ஏன் கூடாதா? கெத்தாய் கேட்டேன்.


இல்ல ஸ்ரீ. கேட்டேன் என்றாள்.


இனி சுதாரித்து கொள்ள வேண்டும்.


அவளை கவிதைக்குள் இழுத்து கொண்டு போனேன். உலக கவிஞர் பட்டியல் எப்போதும் என்னிடம் இருக்கும். 


பேசிக்கொண்டே இருந்தபோது ஒரு நாள் கேட்டேன்.


காதல் பற்றி என்ன நினைக்கிறே?


அவள் ஒரு வினாடி என்னை பார்த்து மிக மெதுவாய் தலை கவிழ்ந்தாள்.

நீங்கள் கற்பனை கூட செய்யமுடியாது வாசகர். அக்கணம் நான் தனித்தனி ஸெல்லாய் உதிர்ந்து கொண்டிருந்தேன்.


அவளிடம் ஒரு நடுக்கம் விரவியது. அவள் விரலால் எதுவோ வரையவும் சட்டென்று புன்னகைக்கவும் செய்தாள். ஒரு ஆழ்ந்த பெருமூச்சை அவள் இழுத்து விட்டதும்….

அடேங்கப்பா…நிரம்பி விட்டேன்.


நாங்கள் எழுந்து கேன்டீன் சென்றோம்.

வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் சிப்பி

இருக்குது பாடல் கேட்டது. ஆனால் கைகள் உரசவில்லை. தனியே தள்ளியே நடந்து வந்தாள்.கள்ளி.


ஸ்ரீ, நான் நாளைக்கு ஊருக்கு போய்ட்டு வெகேஷன் முடிச்சிட்டு வரேன்.


உனக்கு லீவ் கிடைச்சிடுச்சா…


ம். ஆபிஸில் சொன்னாங்க.


ஒரு வாரமா லீவ் உனக்கு?


ம். எஸ் ஸ்ரீ.


உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.


பண்ணுங்க.


நீ எப்படி?


நானும் மிஸ் பண்ணுவேன்.


போய் விட்டாள்.


நான் மேசையை துடைத்து கொண்டு தந்தி படித்து காலத்தை ஓட்டினேன்.


                       ************

ஒரு சுபயோக சுப தினத்தில் நாங்கள்

எல்லோரும் விடுமுறை முடிந்து போக ஒன்றாக கூடினோம்.அந்த விடுமுறை வழக்கம் போல் ஒரு பிரயோஜனமும் இல்லாது வெட்டி பொழுதாக கழித்து விட்டு மீண்டும் கூடினோம். 


ஆனால் அவள் மட்டும் வரவில்லை. நான் அவளை தேடிக்கொண்டே இருந்தேன்.


எங்கடா உன் ஆளு என்று கேட்டவர்க்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தபோதும் கொஞ்சம் பெருமையாய் சிறப்பாக என்னால் அப்போது உணர முடிந்தது.


ஆனால் அவள் பின்னும் வரவில்லை. நாட்கள் முதலில் தடுமாறினாலும் பின் அது தொடர்ந்து சென்றது. வேறு கல்லூரிக்கு கூட அவள் போக முடியும். ஆனால் லீவ் என்ற ஒன்றே தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.


                         ************


இந்த கதையில் க்ளைமாக்ஸ் என்று ஒன்றும் கிடையாது.


அவளுக்கு ஆக வேண்டியது ஆகி இருக்கும். ஏதேனும் பங்களாகாரன் சிங்கப்பூர்வாசி கார்க்காரன்  அப்படியே அள்ளிக்கொண்டு போய் இருப்பான். பியர்ஸ் சோப்பு வாங்கும் செலவு மிச்சம். மஞ்சள்பொடி விலையும் எகிறி விட்டது.


அவள் அப்பன் வந்து அவளுடைய சான்றிதழ்களை வாங்கி கொண்டு போய் விட்டான். 


அந்த நாளில் என் நண்பர்கள் சரக்கடிக்க நான் ஒரு காரணம் ஆனேன். டேய்..விடுடா  நெப்போலியனை வச்சு நைட் பஞ்சாயத்து பண்ணிக்கிடலாம். சரக்கு உள்ளே போனா வசந்தி வாந்தியா வந்துடவா… எல்லாம் மறந்து போய்டும்.


அழுகையே வராத என்னை அன்று இரவெல்லாம் குமுறி குமுறி அழ வைத்து பார்த்தனர். அவர்களோடு பழுத்த குடியாய் கிடந்தபோது சங்கரன் என்னிடம் சில விவரங்கள் கேட்டான்.


உங்களுக்குள் நல்லா அப்படி சூப்பரா ஓடிட்டு இருந்துச்சு. என்னதாண்டா ஆச்சு. நீ அவகிட்டே சொன்னியா இல்லையா…


என்ன சொல்லணும் சங்கரா?


ஐ லவ் யூ னு சொன்னியா?


காதல் பத்தி என்ன நினைக்கிறே னு கேட்டேன்


அப்பறம்…


அவ வெக்கப்பட்டாடா…


அப்பறம்…


டீ குடிக்க போனோம்.


அப்பறம்…


சிப்பி இருக்குது முத்துமிருக்குது பாட்டு டீக்கடையில் கேட்டுச்சு


அப்பறம்…


அவ்ளோதாண்டா…


இந்த உன்னதமான காதலை புரிஞ்சுக்க தெரியாத அவ பொம்பளையே இல்ல.

உனக்கு தேவையே இல்லை.

நீ பேசாம இரு. கவலை விடு.என்றான்.


நண்பர்கள் எல்லாம் முடிந்து எழுந்தனர். நடக்க முடியாது நிற்க முடியாது ஆடிக்கொண்டிருந்த என் சட்டை மற்றும் பேண்ட்டில் வெளி உள் பாக்கெட்டுகளில்  பையில் தாராளமாய் கை விட்டு மூவாயிரம் ரூபாயை அள்ளி எடுத்து பில் கட்டிவிட்டு பரம திருப்தியோடு வந்த 

காமாட்சி என் காதருகில் சொன்னான்.


“டேய்…சிவில் ல ஒரு சூப்பர் பிகர் வந்துருக்கு. கரெக்ட் பண்ணினா இந்த ஆவணியில் அவளை உனக்கு பேசி முடிச்சிடலாம்.”


                      ************ சிகப்பி

இப்ப விடிகாலே நாலு மணி இருக்கும். அட அஞ்சு மணி கூட ஆகி இருக்கலாம்.

வெள்ளையன் கீச் கீச்னு பசியில் அழுத சத்தம் கேட்டதே… கனகா புது தட்டில ஆவினு பால் வச்சு வெள்ளையனுக்கு இப்போது ஊற்றுவாள்.

அவளோட மடி மீதும் மார் மீதும் அவன் தாவித்தாவி விளையாடும் அழகு என்ன? ஊரார் அதை கண்டு கண்டு மெச்சி களிப்பதென்ன… அவன் என்னை மாதிரி இருக்க மாட்டான். ஒடம்பெல்லாம் ஒரே ரோமம்… வெள்ளையா…பஞ்சு பஞ்சா இருக்கும்.

அப்ப ரெண்டுமணி இருக்கும்னு நெனைக்கேன்.

விலுக்கென்று அடிவயிற்றில் வலி சுருண்டபோது தூக்கி வாரி விழிச்சுக்கிட்டேன். ஊசி வலி நெஞ்சுக்கும் வவுத்துக்கும் மத்திலே பொணங்கனமா நின்னு கெடந்திச்சு. முன்ன பின்ன இந்த வலி வந்தது இல்லை.

நேற்று என்ன சாப்டோம்னு நினைச்சு பார்த்தேன். தெரியவில்லை.
வழக்கம்போல் கவருமெண்ட்டு சாக்கடைக்குள் இறங்கித்தான் வவுறு முட்ட சாப்ட்ட நினைப்பு.

அங்கதான் அறுத்த எல்லா மிச்சமும் கொட்டுவார்கள். அதில் வாய் வைக்க விவரமா இருக்கோணும். என்ன ஏதுன்னு பிரிச்சு பாத்து திங்கோணும்.

போன வருஷம் காடையன் இப்படி இல்லாதைக்கி வெவரெங்கெட்டு  விசத்தை தின்னு செத்தே போனான்.

போகப்போக விவரம் பழகி நானும்  ஆட்டு எலும்பை கவ்விக்கிட்டு வேக வேகமாக நொறுக்கிட்டே ரோட்டுல ஓடற வண்டில மாட்டிக்கிறாமே லாவகமா ஓடி இன்னொரு சாக்கடைக்குள் புகுந்து அம்புட்டும் முழுங்கிறுவேன்.

ஆனா இந்த நோவு நேத்து வரைக்கும் வந்தது இல்லை.

                     

சிவப்பினு கருப்பையா என் நெற்றியை நோக்கி சொல்லி சொல்லி கூப்பிட்டு விழி விரிய பொங்கி பொங்கி சிரித்தான்.

மொதமொதலா அவன் பாலாங்காடு குப்பை மேட்டில் இருந்துதான் என்னை அவங்க வீட்டுக்கு தூக்கினு வந்தான்.

என் அம்மாவுக்கு எந்த அப்பா மூலம் பிறந்தேன் என்று தெரியாது. ஆனால் உடல் முழுக்க சிகப்பும் அடிவயிற்றில் சங்கு வெளுப்பும் இருந்துச்சி. அம்மா என்னை நக்கி கொடுக்கும்போதெல்லாம் நீ ரொம்ப அதிர்ஸ்டகாரிடினு சொல்ற மாதிரியே இருக்கும்.

உடன்பிறந்தான் எல்லாம் பால் குடித்துவிட்டு எங்கெங்கோ வழி தவறி போகப்போக அம்மாவுக்கு அதில் பெரிய கவலையெல்லாம் இல்லை. பிழைத்து கொள்வார்கள் என்று நினைத்தாள்.
என்னை விடவே மாட்டாள். எங்கே சென்று எதை திம்பாளோ, வையறு முட்ட பால் கொடுப்பாள்.

அன்றைக்கு அப்படி போகும்போதுதான்
கிரிஷ்ணசாமி காரு அவ்ளோ வேகத்தில் வந்து விட்டது.

பாவம்… அந்த தொரைக்கு என்ன அவசரமோ தெரிலை. அம்மை தலையை தவிர மொத்த உடம்பும் சள சளன்னு ரோட்லே தண்ணியா ஓடிட்டிருந்துச்சு. அங்கினே ஒரே கூச்சலு குழப்பம்…

என் காதுக்குள்ளே பிய்ங் பிய்ங்னு சத்தம் கேட்டு காது முழுக்க கூச்சமா இருந்திச்சி. ஆனா ஒடம்பு மட்டும் விடாம நடுங்கிட்டே இருந்துச்சு.

கிட்டேக்கபோய் பாக்கிலாம்னா ஒரே கூட்டம்.அம்மையோட ஒடம்பு இல்லியே தவிர தலை அப்டியே முலுசா இருந்துச்சு.

நல்லா கண்ணு விரிச்சி சின்ன ரோஸ் நாக்கு வெளிய அப்பவும் லேஸ் லேஸா நீட்டி நீட்டி உள்ள போச்சு. அம்மை என்னை பாக்குற மாதிரியே இருந்துச்சுன்னா பாருங்க.

கூட்டம் போனபிறவு மெல்ல போனேன். வெயில் காலை பொசுகிச்சு. அம்மே அம்மேன்னு கிட்டக்க போனேன். பால் காம்பு ஒண்ணுமே இல்ல. ஒரே தண்ணி..
ரொம்ப சிவப்பு தண்ணி…கட்டி கட்டியா என்னென்னமோ சுத்தி கெடந்துச்சு. என் நாவால அம்மை தலைய நக்கி விட்டேன்.
அவ எந்திரிக்கவே இல்ல…

பரிதாபம். பரிதாபம் னு ஆரோ சொல்லிட்டே இருக்கரச்ச என்னை ஆரோ வெடுக்குன்னு தூக்கினங்க. கருப்பையா.

கருப்பையா பரிமேலழகர் இஸ்கூலில் ரெண்டாப்பு. அவன் அப்பா ஒரு தச்சு ஆசாரிக்கிட்ட கூலி. அப்படியே என்னை ஒருக்களிச்சு தலையில் சாச்சி அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டான்.

பொறவு, அம்மையை நான் பாக்கிலை.

நைனா…இந்தா பாரு நாக்குட்டி…பேரு சிகப்பி அப்பிடின்னான். நல்ல செவப்பு கலரு. அதான் சிகப்பி.

நான் என் அம்மையை போல என் குட்டி வாலை விடு விடுன்னு ஆட்டினேன். அல்லாருக்கும் என்னை பிடிச்சி போச்சு.
ஒரு செரட்டைலே கொஞ்சூண்டு தேத்தண்ணி விட்டாக.

அது என்னமோ மாறி இருந்தாலும் அம்மா பால் மாறி இல்ல. கொஞ்சம் வாசனையா இருந்திச்சி. மொத மொதல நான் நக்கி நக்கி குடிச்சேன். யப்பா, அம்மே நெஞ்சுல ஒரு கதகதப்பு இருக்குமே அது இருந்துச்சு.
பின்னாடித்தான் தெரிஞ்சுச்சு அதுப்பெரு
சூடு ன்னு…

ரெண்டு நாள்தான் இருந்தேன். அப்போ பால் என்ன பிசுகோத்து என்ன. அல்லாம் குடுத்தாக.

ரெண்டு நாள் கழிச்சு கருப்பையாவோட நைனா என்கூட தா…பா..ப்ச்..ப்ச் னு கூட்டு கூட்டு வேடிக்கை காட்னாரு. அப்படியே தூக்கி என்னை மடிலே போட்டு கொஞ்சிட்டு பின்னாடி சாஞ்சுக்கிட்டே மார்லே போட்டுக்கிட்டாரு.
என் வாய்க்குள்ள விரல் விட்டு கடிடியோவ் கடிடியோவ் னு சொல்லி என் காதை மெல்லமா நிமிண்டினாரு.

அவ்ளோதான்.

என் காதுக்குள்ளிருந்து வெள்ளையா ரெண்டு புழு வந்திச்சி. பாத்து பதறி சே…புழுத்த களுதே னு சுவராண்டே விசிறிட்டாரு. என்ன நெனச்சாருன்னு தெரிலே. ஒரு சேரட்டைலே ரெம்ப பால் விட்டு குடிக்க வச்சிப்போட்டு என்னை தூக்கிக்கினார். அப்ப நான் ரெண்டு ஏப்பம் வேற விட்டேன்.

அவரு திரும்பவும் பாலங்காடு குப்பை மேட்ல என்னை விட்டுட்டு போயிட்டாரு.

என் அம்மை நெனப்பு நெஞ்சுக்குழிலே கெடந்து அடிச்சிக்குது. அம்மே னு கருப்பையா னு கத்தி கத்தி பாத்தேன்.
தொண்டைதான் வத்திப்போச்சு.

அப்புறம் அந்த கனகா அக்கா ஒரு ஓட்டை பீங்கான் தட்டுலே கொஞ்சூண்டு பால் விட்டிச்சு. அவுங்க வீட்டுல ஒரு பொஸு பொஸு நாய்க்குட்டி இருக்கும். அவனை நான் வெள்ளையன் னு சொல்வேன். அந்த அக்கா சீசர் னு சொல்லும்.

அது பிதுக்கிறி பிசுகொத்து அல்லாம் துன்னும். நெதைக்கும் குளிக்கும். அது மூத்திரம் பீ போக வந்தாக்கூடியும் நான் இருக்கிற எடத்தாண்டே வந்து இருந்துட்டு போகும். அப்பெல்லாம் அது மேல ரெம்ப வாசமா இருக்கும். களுத்திலே டை எல்லாம் கட்டி இருக்கும்.

நானும் வெயிலு மலே குலிரு ன்னு வளந்து நின்னிட்டேன். எந்தாயி கருவாச்சி என்கூடயே இருக்கிரதா நெனச்சி வளந்துட்டேன்.

ஐயோ…அம்மே.. இப்ப இந்த பாழாப்போன வலி உசுரே சுருட்டி சுருட்டி எடுக்குதே.

மூத்திரம் போறே இடத்துல ஒரே அரிப்பா இருந்திச்சி. ரோட்டு லைட்டு வெளிச்சத்தில் பாத்தா பொட்டு பொட்டா ரத்தமா கெடக்கு. என்ன இதுன்னு புரியவே இல்ல… என்னமோ வடியிர மாறி இருக்கு. அப்படியே நிக்கிற மாதிரி இருக்கு. விலாகிட்டே கொருக்கு கொருக்குன்னு சொறிஞ்சேன். நல்லா நின்னுக்கிட்டு படப்படான்னு சிலும்பினேன்.

அம்புட்டுத்தேன்.

பொத்துன்னு சரிஞ்சிட்டேன்.

வவுத்துக்குள்ளே இன்னா போச்சு இன்னா இருக்குன்னு தெரிலே. லெக்கு பாத்து கால எடுத்து  வெக்க முடிலே. தலைக்குள்ளே ரொயிங் னு ஒரே குடைச்சல். வால் கிட்டே சொட்டு சொட்டா ரெத்தம் விளுது. மறுக்கா மண்டை சுத்துது. இன்னா செய்வேன் நான்.

பொச்சை தேச்சுட்டே எந்திரிச்சி நிக்க பாக்கேன்… முடிலே. வெசத்துலே வாய வச்சிட்டேனா னு தெரிலே.

கண்ணு ஒளுகுது. பீளைய  நகத்துல வழிச்சிப்போட்டு நக்கிட்டு வாலை தரைல போட்டு சடசடன்னு அடிக்கிறேன். எட்டி பாக்க ஈக்குஞ்சு நாதியில்லே.

அம்மே னு கதறணும் போல தவிக்குது மனசு. வாய் வரலியே. என்னமோ வழியுது வாய் வழியா. புகை வாடை வயித்துல இருந்து வருது. ஆத்தி… எலி மருந்தை வச்சிட்டானுவ போல இருக்கே னு திக் திக்குன்னு இருக்கு.

வாய் காயுது. நெஞ்சு எரியுது. மெல்ல நவந்து சாக்கடைக்குள்ளாறே போய் விளுந்திட்டா கொஞ்சம் தண்ணிய நக்கி தொண்டையை நனைச்சிப்பிடலாம்னு நினைச்சா காலு நகரலையே ராசா…

என்ன பண்ண போறேன்?

தரை வேற வெளுக்க ஆரம்பிக்கி. எல்லா
நாய்க்கும் ஒரு கருப்பு நாள் இருக்கும் னு அம்மையை அடிச்சிபோட்ட கார்காரரு அன்னிக்கு சொல்லிட்டு இருந்தாரு. எனக்கும் அது வந்திரிச்சி போல இருக்கே.

இந்தா வெயிலு முட்டிக்கிட்டு இருக்கு. நாக்குலே நாலு சொட்டு தண்ணி விலுந்திட்டா ஒரு குலை குலைச்சிட்டு நின்னுக்கிட முடியும்னு தோணுது.

எப்படி கேப்பேன்? ஆருக்கு புரியும்?

பேங் பேங் னு சத்தம் கேக்கி. இஸ்கூல் பஸ்ஸு வந்திரிச்சி. நான் இப்ப நிக்கிறாப்புலே மாதிரித்தான் இருக்குன்னு நெனெக்கேன். ஆனா செவத்த வாழுதான் டொப்புடொப்னு தரேலெ தட்டிட்டு இருக்கு.

ஒம்போது மணிக்கி முனிசிபாலிடி குப்பை வண்டி வந்திரும். ஏத்தி விற்றலாமும்ன்னு கறிக்கடை பாய் சத்தமா சொல்றது  எங்காதுலே கேக்குது.

யையா…இம்புட்டு தண்ணிய எம் மூஞ்சிலே சேந்தி விடுங்க ஓடிர்றேன் னு சொல்லிட்டு இருக்கற மாதிரி தோணுது.
சின்ன ஊளை கூட விட முடிலே.

பொறவு பேசாம இருந்துக்கிட்டேன். தொண்டை குழி விக்கி விக்கி எடுக்குது.
நாக்கு ரப்பராட்டம் மேலே ஒட்டிக்கிச்சு. வவுத்துக்குள்ளே வலி நின்னு கட கடன்னு பொறுமிட்டு இருக்கு. பீ வெளியே பிச்சிட்டு போற மாதிரி இருக்கு. வால் முழுக்க ரெத்தம் உறைஞ்சு கிடக்கு.

அம்மே, நான் சடங்காயிட்டேன்னு சொல்லணும் போல இருக்கு. எப்படி ஆருக்கிட்ட சொல்ல.. வண்டித்தெரு ராமர் வீட்டு சிப்பிப்பாறையான் எம்பின்னாடி நின்னு மோந்து மோந்து பாக்கான். வாலை தூக்கி ஒரு தட்டு தட்டினேன்.

ஆரோ உஸு உஸு னு அவனை விரட்டிப்புட்டாக. என்ன செய்யலாம் னு ரோசனை பண்ணிட்டே கெடந்தேன்.

மேலே கொஞ்சம் காகிதமும் வெக்கபிரியும் ஆரோ போட்டாக. புரிஞ்சு போச்சு. முனிசிபாலிடி குப்பை வண்டி வந்துட்டு இருக்கு.

வந்திரிச்சி.

கனகா அக்கா ராசேந்திரனை கூப்பிட்டு கையிலே ருவாய் நோட்டும் ரெண்டு கிலிச துணியும் கொடுத்தாக.

அக்கா அக்கான்னு கூப்பிட்டேன்.

ஆனா, ராசேந்திரன் என்னை சுளுவா தூக்கி ஒரு விஸ்பெர் மூட்டை கிட்டே வச்சிட்டாரு.

நான் உசிரோடத்தானே இருக்கேன்.
உங்களுக்காச்சியும் எங்கொரலு கேக்கா?